எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 14, 2013

ஓடிப் போய் வாழலாம் வா! புதுகையின் கருத்தும் என் பதிலும்!

//சமீபத்துல ஒரு கதை படிச்சேன். “ஓடிப்போயிடலாம்!!!” இதுதான் தலைப்பு.
(நீங்களும் படிச்சிருக்கலாம்). அந்த கதையின் கருத்து இதுதான். வயதான தன் மனைவி இரவு பகல் பார்க்காம உழைச்சுகிட்டே இருப்பதை தாங்க முடியாத வயதான கணவர் அந்த வீட்டை விட்டு ஓடினால் தன் மனைவிக்கு ஓய்வு கிடைக்கும் என நினைக்கிறார்.//

இந்தக் கதையை நானும் படிச்சிருக்கேன்.  ஒரு பக்கக் கதை. உதவிக்கு யாரும் இல்லாமல் தனியாகக் கஷ்டப்படும் வயதான மாமியார் பத்தின கதை.  தனியே போனால் மட்டும் வேலை செய்ய வேண்டாமானு ஒருத்தர் கேட்டிருந்தாங்க.  தனியே போனால் வேலையின் சுமை குறையும்.  அவங்க இருவருக்கு மட்டும் செய்தால் போதும்னு ஆகும்.  இது பிள்ளை வீடோ, பெண் வீடோ நினைவில் இல்லை.  ஆனால் யார் வீடாக இருந்தாலும் அம்மா என்றால் குழந்தைகள் செய்யட்டுமேனு தான் விடறாங்க.  இது பொதுவான ஒன்று.  வெகு சிலர் தான் அம்மாவுக்கும் வயசு ஆச்சு, ஓய்வு வேண்டும்னு நினைக்கிறாங்க.  கதையை மறுபடி படிச்சால் தான் யார் மேல் தப்புனு புரியும்.

ஆனால் பொதுவாக மாமியார்கள் பிள்ளைக்குக் கல்யாணம் ஆனதும், "என் பிள்ளைக்கு அது பிடிக்கும்; இது பிடிக்காது. நீ இன்னிக்கு வந்தவ தானே!  அவனோட விருப்பு, வெறுப்பு உனக்கு என்ன தெரியும்!" அப்படினு சொல்லித் தானே செய்யறாங்க.  தன் கணவனுக்குத் தான் செய்யணும்னு நினைக்கும் பெண்கள் மட்டும் இதிலே போராடி தங்கள் உரிமையை நிலைநாட்டிக்கறாங்க.  ஆனால் அவர்களிலேயே வேலைக்குச் செல்லும் பெண்கள் என்றால் "நல்லதாப் போச்சு! வேலைச் சுமை குறைஞ்சது!" னு இருப்பாங்க.  வெகு சிலரே வேலைக்குப் போனாலும் கணவன் மேலும் கருத்துடன் இருக்க முடிகிறது.

இன்னும் சில மாமியார்கள் மருமகளைத் தனியே செய்யவிட்டுட்டுத் திண்டாடவும் வைப்பாங்க. ஆனால் சமையல் செய்து முடிக்கும்வரை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு சரியா சாப்பாட்டு நேரத்திலே மருமகளை அப்புறப்படுத்திவிட்டுத் தானே தன் பிள்ளைக்குப் பிடிவாதமாகப் பரிமாறி விடும் மாமியார்களும் உண்டு. மாமியாரைச் சமையலறைக்கே வரவிடாமல் தானே முழுப் பொறுப்பு எடுத்துக் கொண்டு சாப்பாடை மாமியாருக்கு மட்டும் தனியாக எடுத்துக் கொடுக்கும் மருமகள்களும் உண்டு.

இது எதுவுமே இல்லாமல் மருமகள் வந்ததுமே மாமியார் மருமகளுக்குத் தங்கள் வீட்டுப் பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்து, இப்படிச் சமைக்கணும், இம்மாதிரிக் காய்களை இங்கே நறுக்கணும். மாமனாருக்கு இது பிடிக்கும், உன் கணவனுக்கு இது பிடிக்கும்னு சொல்லி மருமகளைச் சமைக்க வைத்து அல்லது தான் சமைக்கையில் கூட உதவி செய்யச் சொல்லிப் பழக்கப் படுத்துவதே சிறந்த முறை.  இம்முறையில் மாமியார், மருமகள் அந்நியோந்நியமும் அதிகப்படும். மருமகளுக்கும் மாமியாரிடம் சகஜமாக எதையும் கேட்டுச் செய்யும் வழக்கம் ஏற்படும். அனைவருக்கும் பரிமாறிவிட்டு மாமியாரும், மருமகளும் சேர்ந்து சாப்பிடலாம்.  அல்லது அனைவருமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம்.  என்றாவது ஒரு நாள் தன் பிள்ளைக்கு மாமியார் தான் உணவளிக்க வேண்டும்;  அவனுக்குப் பிடித்த உணவைத் தான் தயாரித்து அளிக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு மருமகள் இடம் கொடுத்து அன்று விலகி நிற்பதே சிறப்பு.  ஆனால் மாமியார் இதைத் தினம் தினம் எதிர்பார்க்கக் கூடாது.  எப்போப் பிள்ளைக்குக் கல்யாணம் ஆகி மனைவி வந்துவிட்டாளோ அப்போ மனைவியை விட்டே அனைத்தையும் செய்து தரச் சொல்வதே நல்லது.

இது சரியா??!!!! தவறா??!!!!

//1.ரிட்டயர்மெண்ட் இல்லாத ஒரு வேலை குடும்ப வேலை. அதிலயும் அடுப்படி வேலைக்கு ஓய்வே இருக்காது. தனியா போனாலும் அங்கயும் அந்தம்மா சமைக்கத்தானே போறாங்க??? மத்த வேலைகளும் குறையாதே????//

நிச்சயமாக் குறையாது.  இது அவரவர் மனோபாவம் மற்றும் பொருளாதாரத்தைப் பொறுத்தது.  தனிக்குடித்தனம் நடத்தும் அளவுக்கு வசதி உள்ளவர்கள் எனில் உதவிக்கு ஆளை வைத்துக்கொள்ளலாம்.  அல்லது வெளியில் மெஸ்ஸில் கிடைக்கும் சாம்பார், ரசம் போன்றவை வாங்கி வீட்டில் சாதம் மட்டும் வைத்துக் கொண்டு சாப்பிடலாம்.  எல்லாத்தையும் விட நல்ல தரமான, பாதுகாப்பான அதே சமயம் உண்மையிலேயே சேவை மனப்பான்மை இருக்கும் முதியோர் இல்லத்தில் இருவரும் சேர்ந்து விடுவது இன்னும் நல்லது.

2. பெத்த பிள்ளைங்களுக்கு ஆரம்ப முதலே சமைச்சு, நோய்வந்தா பார்த்து எல்லாம் செஞ்சது இதே பெற்றோர் தானே??? அதுவே மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் ஆனதும் செய்யும்போது மட்டும் எப்படி தப்பாகும்?? எக்ஸ்ட்ரா கேரக்டரா மருமகள்..... அப்புறம் பேரக்குழந்தைகள் வந்திட்டதால செய்யக்கூடாதா??

உடம்பில் தெம்பிருந்தால் கட்டாயம் செய்யத் தான் வேண்டும்.  அதுவும் பேரக் குழந்தைகளைப் பார்த்துக்க மாட்டேன்னு சொல்லும் பாட்டி, தாத்தா தனி ரகம்.  இப்படிப் பட்டவங்களை நானும் பார்த்திருக்கேன்.  சின்ன வயசிலே பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள மனசும் உடலும் தெம்பு கொடுக்கும். வயசானதும் அது குறைஞ்சு தானே போகும்.  என்றாலும் குழந்தைகளை வீட்டில் இருந்த வண்ணம் பார்த்துக்கொள்ளும் பாட்டிகள் உண்டு.  தாத்தாக்களும் பேரக் குழந்தைகளைப்பள்ளிக்கு அனுப்பி வைத்துத் திரும்பக் கூட்டி வந்துனு செய்வாங்க.  அதையும் பார்த்திருக்கேன்.  இப்போவும் எத்தனையோ பெற்றோர்கள் பெண் வயிற்று, பிள்ளை வயிற்றுப் பேரக் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். மறுக்கிறவர்களும் உண்டு தான்.  எங்க வீட்டிலேயே இரண்டு வகையும் உண்டு. :))) இதுவும் அவரவர் மனோபாவத்தைப் பொறுத்ததே.  கஷ்டம்னு நினைச்சோம்னால் எல்லாம் கஷ்டமே.  சுகம்னு நினைச்சால் எல்லாம் சுகமே. பெண்ணோ, பிள்ளையோ குழந்தைகளைப் பார்த்துக்க ஆள் இல்லைனு பெற்றோர் கிட்டே ஒப்படைச்சால் கட்டாயமாப் பார்த்துக்கணும். அதுவும் நம்ம பேரக் குழந்தைகள் தானேனு எண்ணம் கட்டாயம் இருக்கணும்.  மாமியார் மருமகளிடம் உன் குழந்தைகளை என்னால் பார்த்துக்க முடியாதுனு சொல்வது ரொம்பத் தப்பு. மருமகள் மட்டும் தனியாகவா குழந்தை பெற்றுக் கொண்டாள்.  நம்ம பையரின் குழந்தை தானே!  அந்த எண்ணம் இருக்கணும் இல்லையா!


3. அந்த காலத்துல பெரியவங்க உசுரு இருக்கறவரைக்கும் ஓடியாடி வேலை செஞ்சா நல்லதுன்னு சொல்லி சுறுசுறுன்னு இல்லாட்டியும் கைய கால மடிக்க நீட்டி வேலை பாத்தாங்க. இப்ப மட்டும் முதுமை ஏன் அதிகமா கொண்டாடப் படுது?

இப்போ முதுமை கொண்டாடப்படுதோ இல்லையோ வியாதிகள் அதிகமாக் கொண்டாடப் படுது.  உடல் உழைப்பு நிறைந்த அந்தக் காலத்திலே முதியோர் தனியாகவே இருந்திருக்கின்றனர்.  இப்போவும் எண்பது, தொண்ணூறு வயசுக்காரங்களோட தெம்பும், மனோபலமும், உடல் பலமும் அறுபதுகளிலும், நாற்பதுகளிலும் ஏன் இருபதுகளிலும் கூடக் கிடையாது.  முன்னேயும் பிள்ளையால் ஒதுக்கி வைக்கப் பட்ட பெற்றோர், பெண்ணால் ஒதுக்கி வைக்கப்பட்ட மாமியார், மாமனார்கள் இருக்கத் தான் செய்தனர்.  ஆனால் வெளியே வரவில்லை.  இப்போ மீடியா, அரசு எல்லாம் முதியோருக்கு எனத் தனிப்பட சலுகைகள் கொடுத்து முதியோரை அடையாளப்படுத்துவதால் முதுமை கொண்டாடப் படுகிறதோ!  அதிலேயும் தினசரிகளில் தினம் தினம் பிள்ளையால், பெண்களால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் பற்றிய செய்திகள்னு அதிகம் வருது.  முதியவர்கள்னா அவங்களுக்கு இப்போதைய காலத்தோடு நாகரிகத்தோடு அநுசரித்துப் போகத் தெரியாது.  பழைய விஷயங்களைத் தான் பேசுவாங்க;  அறுவை போடுவாங்கனு நினைக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் உண்டு.

ஆகவே முதுமையையும், முதியோரையும் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என முதுமை கொண்டாடப் படலாம்.  நம் நாட்டில் கூட்டுக்குடும்பக் காலகட்டத்தில் இதுக்கெல்லாம் தேவை இருக்கவே இல்லை.  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்துப்போய்க் கொண்டிருந்தார்கள்.  ஆனால் இப்போதெல்லாம் ஒரு இளம் கணவன், மனைவி தங்கள் பெற்றோரைக் கூட வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தினாலே கூட்டுக் குடும்பம் என்றாகி விட்டது.  அதுவும் இருவரும் வேலைக்குச் சென்றால் தான் வைச்சுக்கறாங்க.  இல்லைனா பெரும்பாலும் தனிக்குடித்தனம் தான்.  என்னைக் கேட்டால் வட மாநிலங்களில் செய்யறாப்போல் செய்யலாம்.  பெற்றோரும், பிள்ளைகளும் அவரவர் மனைவியோடு ஒரே வீட்டிலே வாழ்க்கை நடத்துவாங்க.  ஆனால் அவரவர் சமையலறை தனித்தனி.  பொதுவாக ஒரு கூடம் (ஹால்) இருக்கும்.  சாப்பாட்டை அங்கே கொண்டு வந்து எல்லாரும் சேர்ந்தும் சாப்பிடலாம்.  அல்லது அவரவர் பகுதியிலும் இருந்து கொண்டு சாப்பிடலாம்.  நடுவே ஹால் என்றால் நாலு பக்கமும் அறைகள் இருக்கும்.  அதிலேயே சமையல், சாப்பாடு, படுக்கை அறை எல்லாமும் அடங்கும்.  ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டும், பேசிக் கொண்டும் தான் இருந்தாக வேண்டும்.  பெற்றோருக்கு என்றாவது முடியலை என்றாலோ, அல்லது பெற்றோர் சமைத்துச் சாப்பிட வில்லை என்றாலோ ஒரு மாதம் ஒரு பிள்ளை வீட்டில் என்ற கணக்கில் சாப்பிடுவார்கள்.  இது எழுதப் படாத ஒரு பொது விதி.  அதிகமாக உத்தரப் ப்ரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் இப்படிப் பார்க்கலாம்.  பொதுவான தொழில் எனில் அவரவர் குடும்ப உறுப்பினரின் எண்ணிக்கை அடிப்படையில் செலவுக்கான பணத்தைக் குடும்பத் தலைவர் கொடுப்பார்.  மீதிப் பணம் சேமிக்கப்பட்டுக் குழந்தைகள் படிப்பு, வெளியூர் செல்லுதல், சுற்றுலா செல்லுதல்னு, கல்யாணங்கள், மகப்பேறுனு செலவு செய்வாங்க. இம்முறை மிகச் சிறந்ததுனு என்னோட கருத்து.


4. தான் வேலைல இருந்தப்ப மனைவி குடும்ப பாரத்தை சுமந்தது தெரியாம இருந்த ஆண்கள் ரிட்டயர்ட் ஆனதுக்கப்புறம் மட்டும் ஏதோ தன் மனைவியை கண்ணும் கருத்துமா கவனிச்சுக்கறது மாதிரி இருப்பது சரியா??

பெண்ணுக்குக் குடும்பம் தான் உலகம் என்றால் ஆணுக்கு உலகமே குடும்பம். :)) ஆகவே வேலையிலே இருந்தப்போ அவங்க வேலை, அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள், சிரமங்கள், போட்டிகள் என அதிலேயே அவர்கள் முழு கவனமும் போயிடும்.  வீட்டுக்கு வந்தால் அப்பாடானு இருக்கும்.  அந்தச் சமயம் அவங்களுக்குப் பொழுது போக்கு அம்சங்கள் தான் தேவைப்படும்.  ஆனால் இன்றைய கால கட்டத்தில் பெண்களும் வேலைக்குப் போகின்றனர்.  மேலும் நாற்பது ஆண்டுகள் முன்னர் வரை இருந்த தலைமுறையில் பெண் வேலைக்குனு போகாட்டியும் வீட்டின் மற்ற நிர்வாகங்கள் அவள் கையில் தான் இருந்து வந்தது.  ஆகவே இதுவும் ஆண் தலையிடாமல் இருந்ததுக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.  என்றாலும் நிறைய ஆண்கள் வேலைக்குப் போனாலும் மனைவிக்குக் கூடமாட காய் நறுக்கிக் கொடுத்து, துவைத்த துணிகளைக் காயப்போட்டு, பாத்திரங்கள் கழுவுகையில் உதவினு செய்வதை அன்றும் இன்றும் என்றும் பார்க்கலாம்.  குழந்தைகள் படிப்பில் கூடத் தலையிடாத ஆண்களை இன்றும் பார்க்க முடியும்.  அதெல்லாம் அம்மாக்கள் தான் கவனிக்கணும்னு சொல்வாங்க. அதுவும் தப்பு.  குழந்தைகள் படிப்பிலும் அப்பாக்கள் கவனம் இருக்கணும்.  இருந்தே ஆகணும். தன் மகனையும் தன்னைப் போல் விட்டேற்றியாக வர விடக் கூடாது.  குடும்பமே மனைவி, கணவன் இருவரும் சேர்ந்து ஓட்டும் ஒரு இரட்டை மாட்டு வண்டி தானே. மனைவி மட்டும் பாரத்தைச் சுமந்தால் போதுமா?


5. நீ ஒரு வேலை? நானொரு வேலைன்னு வயதான தன் மனைவிக்கு தன்னால் முடிஞ்ச உதவியை செஞ்சா அந்த மனைவிக்கும் ஓய்வு கிடைக்கும்,
வேலைகளை நேரத்தோட முடிக்கவும் முடியும். இதைப்பத்தி ஏன் யாரும் யோசிக்க மாட்டாங்க. (ஆபிஸ்ல ரிட்டயர்மெண்ட் உண்டு, வீட்டு வேலைக்கு ரிட்டர்மெண்ட் இல்லைன்னு புரிஞ்சிக்காத ஆட்கள் இன்னமும் இருக்காங்க)

மனைவியும் கேட்கணும். அதுவும் அதிகாரமா இல்லாம, அன்பாக் கேட்கணும்.  என்னால முடியலைங்கறதை கூச்சப்படாம ஒத்துக்கணும்.  ஒரு சிலர் முடியலைனு சொன்னால் வயசாயிடுச்சுனு நினைப்பாங்கனு சொல்ல மாட்டாங்க.  அப்படி இருக்கக் கூடாது. புழுவைக் கொட்டக் கொட்ட எப்படி குளவியாகுதோ அது போல் சொல்லிச் சொல்லிக் கேட்டுக் கேட்டுக் கணவனுக்குப் புரிய வைக்கணும்.  அல்லது கொஞ்சம் ஐஸ் வைச்சாவது செய்ய வைக்கணும்.  பழகிட்டா அவங்களே கேட்டுச் செய்வாங்க. வீட்டு வேலைக்கு என்னிக்கும் ஓய்வு என்பதே இல்லை.  ஒரு சிலரை எடுத்துக்குங்க.  மற்றவங்க சமைச்சால் பிடிக்காது.  ஆயிரம் குத்தம், கொனஷ்டை சொல்வாங்க.   பாத்திரம் கழுவ ஆள் வைச்சாலும் அவங்க கழுவிக் கொடுப்பதும்  பிடிக்காது.  ஆகவே அதுவும் அவங்களே செய்வாங்க . இது அவங்களாக ஏற்படுத்திக் கொள்வது தானே.  வெளிநாடுகளில் எல்லாம் வேலைக்கு ஆள் வைச்சுக் கட்டுப்படி ஆகாது.  அங்கே உள்ளவங்க தானே தான் செய்துக்கறாங்க.  அது மாதிரினு நினைச்சுப்பேன். ஆகக்கூடி அப்போ கூடுதல் வேலை தானே! ஆக அந்தப் பொறுப்பை நாம் ஒத்துக்கணும், உணரணும்.  நம்ம வீட்டுக்கு, நம்ம பிள்ளைக்கு, நம்ம பெண்ணுக்கு, நம்ம பேரக் குழந்தைங்களுக்குச் செய்யறோம்! வேறே யாருக்குச் செய்யறோம்னு நினைச்சால் விஷயம் ஒண்ணுமே இல்லை.  முடியலைனா எனக்கு இன்னிக்கு முடியலை, நீங்க தான் பார்த்துக்கணும்னு தெளிவாச் சொல்லிடணும்.

ஆனால் ஒரு விஷயம் என் அனுபவத்தில். வேலைக்கு ஆட்களை வைச்சுட்டு அவங்க செய்யும்போது செலவு கூடத் தான் ஆகும்.  இதுவே நாம் செய்தால் செலவு குறைச்சல்.  நமக்கு ஒரு விம் பார் ஒரு மாசம் வரும்னால் வேலைக்கு ஆள் வைச்சால் ஒரு வாரம் தான் வரும்.  அதே போல் துணி துவைக்கும் டிடர்ஜென்டும்.  வேலைக்கு ஆள் வைத்துத் துவைத்தால் ஒரு கிலோ ஒரு மாசத்துக்குப் போதாது.  நாம் செய்தால் ஒரு மாசத்துக்கும் மேலேயே வரும். பாத்திரங்களும் சுத்தமாக இருக்கும்.  துணியும் சுத்தமாக இருக்கும்.  பக்கத்திலேயே நின்று கண்காணிக்கவும் வேண்டாம். என்ன சொல்றீங்க?????????


போல்ட் எழுத்துக்களில் புதுகையில் கேள்விகள்.  என் பதில்கள் சாதாரணமான எழுத்தில். :))))

21 comments:

  1. மருமகள்களிடமும் மாமியார்களிடமும் தனித்தனியாக எடுக்க வேண்டிய பேட்டி!

    ReplyDelete
  2. பின்னூட்டமே பதிவாக சூப்பர்.

    கருத்துக்கள் அருமை.

    பதிவிட்டமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. பின்னூட்டமே பதிவாக சூப்பர்.

    கருத்துக்கள் அருமை.

    பதிவிட்டமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. நம்ம வீட்டுக்கு, நம்ம பிள்ளைக்கு, நம்ம பெண்ணுக்கு, நம்ம பேரக் குழந்தைங்களுக்குச் செய்யறோம்! வேறே யாருக்குச் செய்யறோம்னு நினைச்சால் விஷயம் ஒண்ணுமே இல்லை. முடியலைனா எனக்கு இன்னிக்கு முடியலை, நீங்க தான் பார்த்துக்கணும்னு தெளிவாச் சொல்லிடணும்.//

    உண்மைதான் நீங்கள் சொல்வது.

    ReplyDelete
  5. மருமகள் வந்ததுமே மாமியார் மருமகளுக்குத் தங்கள் வீட்டுப் பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்து, இப்படிச் சமைக்கணும், இம்மாதிரிக் காய்களை இங்கே நறுக்கணும். மாமனாருக்கு இது பிடிக்கும், உன் கணவனுக்கு இது பிடிக்கும்னு சொல்லி மருமகளைச் சமைக்க வைத்து அல்லது தான் சமைக்கையில் கூட உதவி செய்யச் சொல்லிப் பழக்கப் படுத்துவதே சிறந்த முறை. இம்முறையில் மாமியார், மருமகள் அந்நியோந்நியமும் அதிகப்படும். மருமகளுக்கும் மாமியாரிடம் சகஜமாக எதையும் கேட்டுச் செய்யும் வழக்கம் ஏற்படும். அனைவருக்கும் பரிமாறிவிட்டு மாமியாரும், மருமகளும் சேர்ந்து சாப்பிடலாம்.//

    என் மாமியார் இப்படித்தான் சொல்லி தந்தார்கள் இன்றளவும் கடைபிடிக்கும் வழக்கம், விடுமுறைக்கு, விருந்து, விழா என்று போனால் அனைவருக்கும் பரிமாறிவிட்டு நாங்கள் சேர்ந்து சாப்பிடுகிறோம். மாமியார் இவ்வளவு வயதிற்கும் எங்களுடன் சேர்ந்து உதவி செய்கிறார்கள். நீ சூடாய் சாப்பிடுவாய் நான் தோசை சுட்டு தருகிறேன், என்று எனக்கு தோசை செய்து தருவார்கள். நான் அவர்கள் சாப்பிடும் போது சுட்டு தருவேன்.
    மாமியாரிடம் கற்றுக் கொள்ள எனக்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது இவ்வளவு வயதிலும் விட்டுக் கொடுத்தல், சகிப்புதன்மையுடன் இருக்கிறார்கள். நம் சமையலை பாராட்டுவது, அவர்கள் செய்யும் போது நம்மிடம் கற்றுக் கொள்வது போல் இவ்வளவு காரம் போடலாமா? இவ்வளவு உப்பு போடலாமா என்று நம்மிடம் அப்பிராயம் கேட்டு நம்மை கலந்து கொள்ள சொல்வார்கள்.

    வட மாநிலங்கள் போல் செட்டி நாட்டிலும் வீடு ஒன்றாக இருந்தாலும் தனி தனியாக சமையல் செய்து சாப்பிடுவார்கள், நாள் , கிழமை, கல்யாணங்களில் குடும்பத்தினர் இணைந்து செய்வார்கள்.

    ReplyDelete
  6. கேள்விகள்..... பதில்கள்......

    நடத்துங்க!

    ReplyDelete
  7. காலைலே முதல்லே எழுந்திருச்சு காபி போட்டு வூட்டுக்காரி எழுந்திருக்கறப்போ சூடா காபி தருவது, பிறகு, 10 மணிக்கு
    பிரட் வாணலி லே வாட்டி, அதை டீ போட்டு அதையும் ஹால் லே டேபில் லே கொண்டு வெச்சு, விஜய் டி.வி. போட்டு, அம்மாவை பூஜை முடிச்சுட்டான்களா அப்படின்னு பார்த்து, பிறகு கூப்பிட்டு உட்கார வைக்கிறது.
    மத்தியிலே, காய் கறி, நறுக்கி, குக்கர்லே அரிசி, பருப்பு கலைஞ்சு வச்சு, சத்தம் 5 வந்த உடனே இறக்கி வைக்கணும். போரியல், சாம்பார் பண்ணும்போது மட்டும் அம்மா வந்து எத்தனை உப்பு, சாம்பார் போடி, புளி போடுவாங்க.
    நடுவிலே காலிங் பெல் அடிச்சா நாம போய் கதவ துறக்கணும்.
    1 மணிக்கு லஞ்ச் போடணும். அப்பறம் அவங்க தூங்கி 5 மணிக்கு எழூம் பொழுது டீ போட்டு வைக்கணும்.
    6 மணிக்கு வாக்கிங் போய்ட்டு வந்தப்புறம், ராஜ் டி.வி. நியூஸ் போட்டு வைக்கணும்.
    9 மணிக்கு டின்னர் தரணும்.
    11 மணிக்கு ஆபிஸ் சீரியல் முடிஞ்சப்பறம் அவங்க வந்து இன்னிக்க எல்லாம் முடிஞ்சாச்சா, வாசல் கதவு தாப்பா போட்டாச்சா அப்படின்னு கேட்பாக.
    இந்த வேலைகள் மட்டும் தான் ரிடையர் செய்யறது அப்படின்னு ஒரு வைராக்கியம். பாவம் அவுக 50 வருசமா உழைச்சு ஓடா போயிட்டாக.
    மகன் மகள்களும் கூட இல்ல. யார்தான் செய்வாக ?
    நானும் உடம்புலே இருக்கவரைக்கும் செய்யறது. அப்படின்னு நினைப்பு.

    நாளைக்கு விடியல் லே உடம்பு சரியில்லே அப்படின்னா என்ன நடக்கும். ? நாளைப்பாடு நாளைக்கு. அதை,
    நாராயணன் கவனிச்சுப்பார்.
    Take alprax and have a good sleep.
    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  8. நல்ல கருத்துக்கள்.

    ReplyDelete
  9. சிந்திக்கத்தூண்டும் நல்லதொரு அலசல்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  10. எனக்கு மருமகள் வந்தவுடன் நீங்கள் சொல்வதுபோல அவளுக்கு எல்லாம் கற்றுக் கொடுத்து செய்யச் சொன்னேன். பிள்ளையின் சந்தோஷம் முக்கியம் என்று நினைத்துக்கொள்ள வேண்டும். என் மகள் தவறு செய்தால் நான் பொறுத்துக் கொள்வதுபோல மருமகள் செய்தாலும் கோவப்படாமல் பொறுத்துக் கொண்டு நிதானமாக சொல்லிக் கொடுத்தால் முதுமையை நினைத்துக் கவலைப் பட வேண்டாம்.

    ReplyDelete
  11. வாங்க ஶ்ரீராம், நிச்சயமா, ஒவ்வொருத்தர் பார்வையும் மாறுபட்டுத் தான் இருக்கும். ஆனால் நான் இன்னமும் மருமகளாகவும், மாமியாராகவும் செயல்படுவதால் என் கோணத்தில் இருந்து எழுதி இருக்கேன். எல்லாருக்கும் சரியா இருக்குமா தெரியலை. :))))

    ReplyDelete
  12. புதுகை, கருத்துக்களைப் பிரிச்சு அலசித் துவைத்துக் காயப் போடுவீங்கனு நினைச்சால்..... ஏமாத்திட்டீங்களே! :)))

    ReplyDelete
  13. வாங்க கோமதி அரசு, ஆமாம், நம்ம குழந்தைகளுக்குத் தான் செய்யறோம்னு நினைச்சால் போதும். பெரும்பாலான மாமியார்கள் மருமகளையும், அவள் குழந்தைகளையும் தனியாக்கறாங்க. அதே பிள்ளைக்கு வரச்சே செய்வாங்க. மருமகளையோ குழந்தைகளையோ லட்சியமே செய்ய மாட்டாங்க. அது தப்பு இல்லையா?

    பிள்ளை சந்தோஷமாக இருக்கத் தான் கல்யாணம் செய்யறோம். பிள்ளை சந்தோஷமாக வாழ்வதாலேயே குழந்தைகளும் பிறந்திருக்கின்றன. இது என் பிள்ளையின் வாரிசு, நம் குடும்ப வாரிசு என்னும் எண்ணம் வரணுமே! அதே மாமியார் தன் பெண்ணின் வயிற்றுப் பேரக்குழந்தைகளைச் சீராட்டுவாங்க. அதையும் பார்க்கலாம். :(

    ReplyDelete
  14. என் மருமகள் நான் சமைச்சாலும் கூடவே வந்து இருந்து கவனித்துக் கொண்டு சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வாள். அதே சமயம் எங்க பிள்ளை கிட்டத்தட்டப் பதினைந்து வருடங்களுக்கு மேல் எங்களுடன் இல்லாததால் அவர் ருசி மாறி இருக்கும் என்பதால் நான் "பையருக்குப்பிடிக்குமா?" என்பதை என் மருமகளைக் கேட்டுக் கொள்வேன். இதிலே தப்பில்லை என்பது என் கருத்து.

    ReplyDelete
  15. வெங்கட், ஒண்ணுமே சொல்லலையே உலகத்திலே! :)))

    ReplyDelete
  16. ஹாஹா சூரி சார், சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர், இங்கே நேர்மாறாக நடக்கும். என்னிக்காவது முடியலைனாக் கூட டிகாக்‌ஷன் போட்டுவிட்டுப் பாலை அடுப்பில் வைச்சுட்டு எழுப்பிடுவார். நான் எழுந்து வந்து தான் காஃபி கலக்கணும். தானே கலந்துண்டால் சரியா வராதுனு சொல்லிடுவார். என்ன ஒரே ஒரு மாற்றம் என்றால் நான் எட்டரையிலிருந்து ஒன்பதுக்குள் படுக்கப் போயிடுவேன். :))))

    11 மணி வரை எல்லாம் முழிச்சுண்டு இருப்பதில்லை. :))))))

    ReplyDelete
  17. வாங்க மாதேவி நன்றி.

    ReplyDelete
  18. வைகோ சார், கருத்தே சொல்லலை பாருங்க. :)))

    ReplyDelete
  19. ரஞ்சனி, சேம் ப்ளட்! :))))) எல்லாரும் மனிதர்களே, அனைவருக்குமே தப்பு நடக்கும் என்பதைப் புரிஞ்சுண்டாலே போதும். :))))

    ReplyDelete
  20. என்னதான் நீங்க சூப்ப்ப்ப்பர் அப்படின்னு சொன்னாலும் எல்லாருக்கும்
    ஹெட் லிபி அப்படின்னு ஒன்னு இருக்கு.

    அதுப்பிரகாரம், எத்தனை தான் ஹை
    பொசிஷன் போனாலும் ஆபீசிலே
    நான் தான் மாடு மாதிரி உழைச்சுண்டு
    இருப்பேன். மத்தவன் எல்லாம் ஈ ஒட்டிண்டு ஜாலியா அரட்டை அடிச்சுண்டு இருப்பான். ஏதோ லோகமே என் தலைமேலே தான் ஓடறமாதிரி நினைச்சுண்டு நானும் வேலை பாத்துண்டு இருந்தேன்.

    ரிடையர் ஆனப்புறம், ஆத்துக்காரி நானும் ரிடையர் ஆயாச்சு என்று சொல்லிவிட்டாள்.

    வீட்டுக்கு சமையலுக்கு ஆள் போட்டா சுத்தம், ஆசாரம் பிரச்னைகள். மனசு எடம் கொடுக்காது.

    ஜாதக விசேஷம் எல்லாமே. ரிஷப லகனத்திலே ஒத்தன் புறந்துவிட்டா மாடு மாதிரி உழைக்கணும். அப்படியும் நல்ல பேரு கிடைக்குமா அப்படிங்கறது சந்தேகம்.

    ஆத்துக்காரிக்கு ஒன்பதுலே குரு . சுக ஜீவனம் அஷூர்டு.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  21. உங்க பார்வையில் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கீங்க. இதை துவைச்சு காயப்போட என்ன இருக்கு. :))

    ReplyDelete