எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 06, 2013

நாடெங்குமே செழிக்க! நன்மையெல்லாம் சிறக்க, நடந்தாய் வாழி காவிரி!

ஆடிப் பெருக்கன்னிக்கே இன்னும் கீழே போய்ப் படம் எடுத்திருக்கணும் போல! :)) அந்தப் படிகளையும் தாண்டித் தண்ணீர் வந்துட்டதாலே அம்மா மண்டபத்தை ஞாயிற்றுக்கிழமையிலே இருந்து மூடிட்டாங்க.  அதை ஒட்டிய கரைகளையும் காவல் துறை பாதுகாப்பில் வைச்சிருக்காங்க.  இன்னிக்கு ஆடி அமாவாசைக்குத் திறப்பாங்கன்னா ம்ஹ்ஹும், நோ, நோ சொல்லிட்டாங்க.  எல்லாரும் தெருவிலே உட்கார்ந்து பித்ருக்கடன்களைச் செய்தனர். அதைப் படம் எடுக்கக் கூடாதுனு கீழேயே போகலை. :)))))  ஆனால் இன்னிக்குக் காலம்பர மொட்டை மாடியிலே இருந்து சில படங்கள் எடுத்தேன்.  கொள்ளிடமும் நிரம்பி இருக்கு.  கொள்ளிடக் கரைக்கும் போகணும்.  அங்கேயானும் கொஞ்சம் கிட்ட இருந்து எடுக்க முடியுதானு பார்க்கலாம்.  இப்போ இன்னிக்கு எடுத்த படங்கள் கீழே பகிர்ந்துக்கறேன்.

1. கீழே காணும் படம் கொஞ்சம் தென்மேற்குப் பகுதியில் எடுத்தது. அக்கரையில் தெரிவது சிந்தாமணிப் பகுதி.


வெகு காலமாகப் பிறந்த வீட்டிலேயே இருந்த பெண் தன் கணவனைக் காணத் துடிப்புடனும், ஆவலுடனும் வருவது போல் வருகிறாள் காவிரி.  வர வழியெங்கும் அவளுக்குப் பல்வேறு விதமான அலங்காரங்கள். ஆபரணங்கள், மலர் மாலைகளைச் சூட்டுகின்றனர்.  மலர் தூவி வரவேற்பு.  கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகளாகக் காணாத தன் புகுந்த வீட்டின் நிலைமை எப்படி இருக்குனு பார்க்க வேண்டி கொஞ்சம் இடம் கிடைச்சால் போதும்னு உள்ளே நுழைகிறாள் காவிரி. 

இது கொஞ்சம் தெற்கே.  கொஞ்சம் தள்ளி வந்தால் உ.பி.கோவில் வரும்.  ஆனால் காவிரி மறைக்கும். ஆகவே உ.பி.யும் தெரியணும், காவிரியும் தெரியணும்னா கீழே போய்க் காவிரிக்கரையிலோ அல்லது பாலத்திலோ போய்த் தான் எடுக்கணும்.  நேரம் கிடைக்கையில் எடுக்கிறேன். 


காவிரிக்குத் தான் வழியில் எத்தனை கரங்கள் முளைக்கின்றன.  அவள் ஆசை அடங்கவில்லை.  தான் இல்லை எனினும் தன் நெஞ்சத்து ஈரம் கொஞ்சமானும் மிச்சம் இருந்ததால் இங்கே இன்னும் பசுமை குடி கொண்டிருப்பதைப் பார்த்துப் பார்த்து சந்தோஷம் தாங்கவில்லை அவளுக்கு.  எல்லாக் கரங்களையும் நீட்ட வேண்டும் போல இருக்கு.  ஆனால் நடுவில் கல்லணை குறுக்கிட்டது.  அந்தத் தடையை ஞாயிறன்று நீக்கிவிட்டார்கள்.  கல்லணையிலிருந்தும் தன் அனைத்துக்கரங்களையும் நீட்டிக் கொண்டு சமுத்திர ராஜனைக் காணும் ஆவலோடு ஓடுகிறாள் காவிரி.

இது முற்றிலும் மேற்கே.  இன்னும் தள்ளிப்பார்த்தால் வடமேற்கிலிருந்து காவிரி வளைந்து, நெளிந்து, ஒசிந்து, ஒல்கி வருவது  பல நாட்கள் கழிந்த பின்னர் முதன் முதல் கணவனைக் காண வரும் பெண்ணின் நாணத்தை நினைவூட்டும்.  வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி என்ற தன் பெயர் இங்கே தமிழ்நாட்டில் பொய்த்துப் பழங்கதையாய்ப்போனதை நினைத்து வெட்கத்திலும் அப்படி வருகிறாள் என எடுத்துக்கொள்ளலாம்.  இங்கே அப்படித் தான் எடுத்துக்க வேண்டி இருக்கு.

இதுவும் மேற்குப் பக்கம் தான்.


பார்த்தாள் காவிரி.  இந்த மனிதர்களின் பிடியில் அகப்பட்டுக் கொண்டு கங்கை, யமுனை மட்டுமல்ல, நானும் இப்படிச் சிரிப்பாய்ச் சிரிக்கிறேனே எனக் கோபம் வந்துவிட்டது.  அதான் இந்த வருஷம் விட்டேனா பார், என்னையா தடுக்கிறாய்? எனக் காளியின் ஆவேசத்தோடு சீறிப் பாய்கிறாள்.  அவள் சீற்றம் கொண்டாலும் அதன் மூலம் அனைவரையும் வாழத்தானே வைக்கிறாள்!  தன்னைக் கட்டுப்படுத்திய மனிதரிடம் தான் அவள் சீற்றமெல்லாம். 


19 comments:

  1. வளநாடாக்கும் தாயே நீ வழிய வாழிய பல்லாண்டு!!!
    மிக நன்றி கீதா. சிரமம் எடுத்து அத்தனை திசைகளிலும் காவேரியை வளைத்துப் பிடித்துவிட்டீர்கள்.இவ்வளவு தண்ணீரும் நாட்டை வளப்படத்தட்டும்.
    கடலில் கலப்பதற்கு முன் வேறு ஊர்களுக்கும் செல்வாள் இல்லையா. கொள்ளிடத்துத் தண்ணீர் விவசாயத்துக்கு வராது என்கிறார்களே.

    ReplyDelete

  2. நீர் நிறைந்த ஆற்றைக் காண்பதே சுகம். அதுவும் நுங்கும் நுரையுமாகப் பாய்ந்தோடி வரும் காவிரியைக் காணக் கண்கோடி வேண்டும். கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.....!

    ReplyDelete
  3. கல்லணையிலிருந்தும் தன் அனைத்துக்கரங்களையும் நீட்டிக் கொண்டு சமுத்திர ராஜனைக் காணும் ஆவலோடு ஓடுகிறாள் காவிரி.



    "நாடெங்குமே செழிக்க! நன்மையெல்லாம் சிறக்க,
    நடந்தாய் வாழி காவிரி!

    வாழி கா விரி!!!!

    ReplyDelete
  4. அவள் சீற்றம் கொண்டாலும் அதன் மூலம் அனைவரையும் வாழத்தானே வைக்கிறாள்! //
    நீங்கள் சொல்வது போல் அனைவரையும் வாழ வைக்கட்டும்.

    காவிரி வந்து விட்டாள் என்று கேட்கும் போதும், பார்க்கும் போதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    நாடு செழித்து நன்மை எல்லாம் பெருகட்டும்.

    ReplyDelete
  5. அழகான படங்கள் .... பார்க்கவே கண்ணுக்குக் குளிர்ச்சியாக உள்ளன.

    இதுபோலப் பார்த்து எவ்ளோ நாளாச்சு!

    பாராட்டுக்கள்.

    வெள்ள அபாயம் ஏதும் அதிகம் இல்லாமல் நாடு செழித்து நன்மை எல்லாம் பெருகட்டும்.

    ReplyDelete
  6. காவிரில் இப்படி தண்ணீர் பார்த்து எவ்வளவு வருடங்கள் ஆச்சு......

    நேற்று பெரியம்மாவுடன் பேசும்போது திருப்பராய்த்துறை [அகண்ட காவிரி] கால்வாயுடன் சேர்ந்து ஓடுகிறது எனச் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது......

    மண் குளிரட்டும்.....

    ReplyDelete
  7. இருகரைதொட்டு ஓடும் காவிரியைப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. எல்லா திசைகளிலும் படம் எடுத்திருப்பதற்கு நன்றிகள். காவிரி என்றால் சிறுவயதில் திருவையாறு தியாகப்ரம்மம் ஒருமுறை சென்றபோது ஆறு நிறைந்த தண்ணீரைப் பார்த்த நினைவே இன்னும் மனதில். அது இப்போது மறுபடி பிரத்தியட்சமாய்த் தெரிகிறது.

    ReplyDelete
  8. வாங்க வல்லி, கொள்ளிடம் உபரி நீரைச் சேமிக்கும் இடம். இப்போக் கொள்ளிடமும் நேற்றிலிருந்து நிரம்பி வருகிறது. அங்கே இன்னும் போகவில்லை. நேற்று ஆனமட்டும் அம்மாமண்டபத்தின் மேல்படியிலாவது நின்னு படம் எடுக்க முயற்சி செய்தோம். மூன்றடுக்குப் பாதுகாப்புப் போட்டிருந்தாங்க. முதல் அடுக்கு தெருவிலிருந்து நுழையும் இடம். அங்கேயே திருப்பி அனுப்பிடறாங்க! அதையும் மீறிப் போனால் இரண்டாவது வாசலில் கடுமையான எச்சரிக்கை.

    ReplyDelete
  9. ஃபைபர் படகுகள், தீயணைப்பு வண்டிகள், போலீஸ் வண்டிகள்னு எல்லாம் தயார் நிலையில் இருக்கின்றனர். இப்படி இருக்கிறச்சே தொட்டியத்தில் யாரோ இரண்டு பேரை ஆற்று வேகம் இழுத்துக்கொண்டு போய்க் காப்பாற்ற முடியலைனு சொன்னாங்க. மிக முயற்சி செய்தாங்களாம். :(

    ReplyDelete
  10. வாங்க ஜிஎம்பி சார், ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்திருப்பதால் கிடைச்சிருக்கு. நன்றி.

    ReplyDelete
  11. வாங்க ராஜராஜேஸ்வரி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  12. வாங்க கோமதி அரசு, ஞாயிறன்று கல்லணை திறந்தப்புறம் மாயவரம்,மன்னார்குடிக்கெல்லாம் காவிரி போய்ச் சேர்ந்து பூம்புகாரையும் அடைந்துவிட்டாள். இனி அவளைத் தடுக்க யார்!

    ReplyDelete
  13. வாங்க வைகோ சார், வெள்ள அபாயம் வரும் முன்னரே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் அனைவரையும் பாராட்ட வேண்டும். பொதுமக்களும் அதைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

    ReplyDelete
  14. வாங்க வெங்கட், இன்னும் அகண்ட காவிரியைப் பார்க்க ஆசை தான். பார்க்கலாம்.:))))

    ReplyDelete
  15. வாங்க ஶ்ரீராம், நான் காவிரியை, திருச்சி காவிரியாகத் தான் அதிகம் பார்த்திருக்கேன். கல்யாணம் ஆகிப் போனப்புறமாத்தான் அரசலாறு, வெட்டாறு என அதன் உபநதிகளாகவும் பார்க்க ஆரம்பிச்சேன். முதன்முதல் அரசலாற்றைப் பார்க்கையில் பொன்னியின் செல்வன் நினைவுக்கு வந்து ஒரே பரபரப்பு, துடிதுடிப்பு. வந்தியத் தேவன் சென்ற வழியிலே எல்லாம் போறோம் என்ற சந்தோஷம்.

    ReplyDelete
  16. சென்ற முறை பெரியம்மா வீட்டுக்கு போகும் வழியெல்லாம் வறண்டு கிடந்தது...தற்போது எங்கும் வெள்ளமாக இருக்கும்...மகிழ்ச்சி..

    காவிரி பாலத்திலேயே இருகரையும் வெள்ளைவெளேரென்று அழகாக இருக்கும்..

    ReplyDelete
  17. வாங்க கோவை2தில்லி, இன்னும் பாலத்திலே இருந்து பார்க்கலை. ஒருநாள் போகணும். :)))

    ReplyDelete
  18. காவேரி நிறைந்து ஓடுவது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.

    காவேரி நீர் வாழவைக்கட்டும்.

    ReplyDelete
  19. நிறைந்து ஓடும் காவிரியைப் பார்க்க பார்க்க மனதில் ஆனந்தம். ஆடிப் பெருக்கன்றாவது ஸ்ரீரங்கம் போகவேண்டுமென்று நினைத்தேன். உடனே வேறு ஊருக்கு பிரயாணப் பட வேண்டியிருந்ததால் முடியவில்லை.
    புகைப்படங்கள் போட்டு என் ஆற்றாமையை சற்றுத் தணித்ததற்கு நன்றி கீதா!

    ReplyDelete