பாடல் 16
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்
கொடியைக் குறித்துச் சொல்லி இருப்பதால் கொடிக்கோலமோ அல்லது தோரணக் கோலமோ போடலாம். மண்டபம், மாவிலைக் கொத்து என்றும் போடலாம்.
கண்ணன் வரச் சொன்னதாகவும், அவன் கைகளால் பறையை வாங்கிக் கொள்ள வந்திருப்பதாகவும், அவன் நாமத்தையே தாங்கள் அனைவரும் பாடி அவனைத் துயிலில் இருந்து எழுப்பப் போவதாகவும் வாயில் காப்போனிடம் ஆண்டாள் சொல்கிறாள். இங்கே பறை என்பது கொட்டுக் கொட்டும் பறையை மட்டும் குறிக்கவில்லை என்றே எண்ணுகிறேன். துயிலில் இருந்து கண்ணனை எழுப்புவது என்பதும் மறைபொருளாக யோக நித்திரையில் மூழ்கி இருக்கும் பெருமானின் திருநாமத்தைச் சொல்லி உருகி உருகிப் பாடி அவனோடு ஒன்றாய் ஐக்கியம் ஆவதற்கான ஏற்பாடுகள் செய்வதைக் குறிக்கும்.
கண்ணனின் இருப்பிடமோ வைகுந்தம். அங்கே அவனைக் காணச் செல்லும் முன்னர் வாயில் காப்போரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும். வாயில் காப்போர் இங்கு மறைமுகமாக ஆசானைக் குறிக்கிறது என எண்ணுகிறேன். நம் மனக்கதவைத் திறக்கும் முகமாக ஆசான் துணை செய்யப் பறையாகிய ஞான கீதத்தைக் கண்ணன் கொடுப்பான் என்கிறாள் ஆண்டாள். குருமுகமாக இருண்டிருக்கும் மனக்கதவைத் திறந்து கண்ணனைக் கண்டு பிடித்தால் அவன் நமக்கு வேண்டிய ஞானத்தைத் தருவான். ஆகவே மறுக்காமல் உதவி செய்யுமாறு வாயில்காப்போனாகிய குருவிடம் வேண்டுகிறாள் ஆண்டாள்
பாடல் 17
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.
பொங்கல் பானை கோலம் போடலாம். ஏனெனில் இங்கே தண்ணீரும், சோறும் கொடுத்து அறம் செய்யும் நந்தகோபன் என அழைப்பதிலிருந்து அன்னதானத்தின் முக்கியத்துவம் புரியவருகிறது. அந்தக் காலத்திலேயே நந்தகோபன் அனைவரும் திருப்தி என்னும் அளவுக்கு உணவளித்து தர்மம் செய்திருக்கிறான். அவன் மனைவியான யசோதையைக் குல விளக்கு என அழைக்கிறாள். குத்துவிளக்குக் கோலமும் போடலாம்.
ஓங்கி உலகளந்த உத்தமன் என்று வாமன அவதாரத்தைப் பாடிய ஆண்டாள் மீண்டும் இங்கு வாமனனாய் வந்து திரிவிக்கிரமனாய் மாறி உலகளந்த பெருமானைக் குறித்துப் பாடி இருக்கிறாள். மஹாபலி தான் நல்லாட்சி புரிவதால் கர்வம் கொண்டு மூவுலகையும் அடக்கி ஆள முற்படவே அவனை கர்வபங்கம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.பக்தி இருந்தால் மட்டும் போதாது. கர்வம் கொள்ளக் கூடாது. இங்கே கண்ணனின் மூத்தவன் ஆன பலதேவனையும் அழைத்துக் கண்ணனோடு நீயும் எழுந்திரு என்கிறாள்.