எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 13, 2014

உறவுகள் தொடர்கதை---3

இங்கே கடைசியாக எழுதியது

கூட்டுக் குடும்பத்தில் மூத்த மருமகள் தான் முக்கியமானவளாகக் கருதப்படுவாள்.  அவளைச் சுற்றியே அனைத்தும் இயங்கும். அவள் குடும்பத்தின் அனைத்து அங்கத்தினர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.  தன் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவளாகவும் இருக்க வேண்டும்.  தனக்குக் கீழுள்ள ஓரகத்திகளைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கத் தெரிந்தவளாக இருக்க வேண்டும்.  இது அந்தப் பெண்ணின் சாமர்த்தியத்திலேயே இருக்கிறது.

பல குடும்பங்களிலும் மூத்த மருமகள் அதிகாரத்தைக் கையில் எடுத்தவளாக இருப்பதோடு அனைவரையும் சாட்டையால் அடிப்பது போல் பேசுவதையும் பார்க்கலாம்.  இன்னும் சில குடும்பங்களில் வாயில்லாப் பூச்சியாக அனைத்து வேலைகளையும் தன்னந்தனியாக அவள் மட்டுமே செய்யும்படி இருக்கும்.  மற்ற மருமகள்கள் நெளிவு கண்டு விலகி விடுவார்கள். அல்லது சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டு வேலைகளைப் பங்கிட்டுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் யாராக இருந்தாலும் குடும்பத்தின் நலனை மட்டுமே நினைக்கவேண்டும்.  சண்டையோ, பூசலோ அவர்களுக்குள்ளாகவே இருத்தல் நலம்.

மாறாக இப்போது தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடரில் வரும் மூத்த மருமகள் அவள், அவள் கணவன், பெண் குழந்தை மற்றும் தங்கை குடும்பத்தை மட்டுமே தன் குடும்பமாக நினைத்துக் கொண்டு மாமனார், மாமியார், மைத்துனர்கள், அவர்கள்  மனைவிமார்கள் ஆகியோரைக் குடும்பத்திலிருந்து மட்டுமில்லாமல் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதையே சகிக்க மு டியாதவளாக இருக்கிறாள்.  ஒரே நாத்தனார் கல்லூரியில் படிப்பவளை எவ்வகையிலேனும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி அவள் எதிர்காலத்தைச் சிதைக்க எண்ணுகிறாள்.

இத்தனைக்கும் இவள் படிக்காதவள் அல்ல.  நன்கு படித்து ஒரு ஐந்து நக்ஷத்திர ஓட்டலின் ஜெனரல் மானேஜர் என்னும் உயர் பதவியில் இருக்கிறாளாம்.  வேலைக்குச் சென்று ஓட்டலின் தரத்தையும் நிர்வாகத்தையும் முன்னேற்றுவதைத் தவிர மற்ற அனைத்தையும் செய்கிறாள். இவள் தன் தங்கையோடு கலந்து பேசுவதும்,சதித் திட்டம் தீட்டுவதும் வீட்டுக்குள்ளேயே நடந்தாலும் அதை மற்றவர்கள் கவனிப்பதில்லையாம். அவ்வளவு ஏமாளிகளாக மற்றவர்களைக் காட்டுவதோடு இவள் செய்யும் தீமையான செயல்கள் அனைத்தும் உடனடியாக வெற்றி அடைந்தும் விடுகிறது.  போதாக்குறைக்கு ஓர் அரசியல்வாதியோடு சேர்ந்து இப்போது சதி செய்கிறாள்.  இவள் செய்வதெல்லாம் உடனே நடப்பதாகக் காட்டுகின்றனர். ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் செய்கிறாள் எனக் காட்டுகின்றனர். அழைப்பு எங்கிருந்து வந்தது, அங்கே யார் பேசியது எனக் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், எந்த எண்ணிலிருந்து வந்தது என்பதைக் கண்டு பிடித்து அதையாவது சரி பார்க்கலாமே.  வரும்   உத்தியோகஸ்தர்களும் இந்த அழைப்பை ஏற்று வருகின்றனராம். கையும் களவுமாக லஞ்சம் வாங்குவதைப் பிடிக்கின்றனராம்.  இதை ஏன், எப்படி என யாரும் தர்க்கரீதியாகச் சிந்தித்தும் பார்ப்பதில்லை.

கடைசி மைத்துனர் கத்திக்குத்து பட்டு உயிருக்குப் போராடும் நிலைமையிலும் அவள் மாமனாரின் பூர்வீக சொத்தான அந்த வீடு தன் கைக்கு வரவேண்டும் என்பதற்காக அனைவரையும் ஏமாற்றிக் கையெழுத்து வாங்குகிறாளாம். அதற்காகக் கடன் பத்திரங்களோடு  பின்னால் அவள் சேர்க்கும் அவள் பெயருக்கான பத்திரக் காகிதங்களில் மாறுதல் இருப்பதைக் கூட உணராத மூடங்களாக அனைவரும் கையெழுத்திடுகின்றனர், எல்லோரும் படித்தவர்கள் என்றே காட்டுகிறார்கள்.  ஒரே ஒரு மைத்துனனைத் தவிர.  அவனும் என்னமோ அண்ணி பெயர் வருதேனு மட்டும் சொல்கிறானே தவிர முழுதும் படித்துப் பார்க்கவில்லை.  அவ்வளவு மூடமா, படிக்கத் தெரியாத முட்டாளா?  உயிருக்குப் போராடும் மைத்துனன் இறக்க வேண்டும் என்பதற்காகப் பணம் வரும் வழியை யெல்லாம் தடை செய்கிறாள்.


இதை எல்லாம் பார்த்தால் இவ்வளவு துர் நோக்கம் கொண்ட பெண்கள் இருக்கிறார்களா உண்மையில் என்றே தோன்றுகிறது.  இதை எந்தப் பெண்கள் அமைப்பும் எதிர்த்ததாகத் தெரியவில்லை.  அவர்களுக்கு இது தான் உண்மையான பெண் சுதந்திரம் எனத் தோன்றி இருக்கலாம்.  இதைப் படிக்கும் சாமானியப் பெண் ஒருத்திக்கு என்ன தோன்றும்?  இப்படி எல்லாம் இருந்தால் தான் சுக வாழ்க்கை எனத் தோன்றுமா இல்லையா?  இதே தொடரில் இன்னொரு பெண் அவள் ஒரு மாமியார், தன் மருமகளையும், பிள்ளையையும் சேர்ந்து வாழவிடக் கூடாதெனச் சதி செய்கிறாள்.  அதற்காக அவளே விஷம் கூடக் குடிக்கிறாளாம்.  கதைப்படி அவள் பிழைத்து விட்டாலும் இதைப் பார்க்கும் பெண்கள் நாமும் இப்படிச் செய்து பார்த்தால் என்னும் எண்ணத்தில் ஆழ்ந்தால்?

ஒரு காலத்தில் குடும்பத்தின் தலைவி, கிரஹ லக்ஷ்மி என்றெல்லாம் பாராட்டிப் பேசப்பட்டு மதிப்புடனும், கௌரவத்துடனும் வாழ்ந்த பெண்கள் இன்று சுதந்திரம், பெண்ணுரிமை, ஆணாதிக்கம் என்றெல்லாம் பேசிக் கொண்டு எவ்வளவு கீழ்த்தரமான சதி வேலைகள் செய்பவர்களாக இழிவான பாத்திரங்களில் நடிக்கும் அளவுக்கு இறங்கி இருக்கிறார்கள்.  முன்னெல்லாம் வில்லி என்பதற்குத் தனியான கதாபாத்திரம்,  இருப்பார்கள். ஆனால் இப்போதோ குடும்பத்தின் முக்கிய அங்கத்தினரே வில்லி பாத்திரத்தையும் ஏற்றுவிடுகிறார்கள்.

இப்படி இருக்கையில் குடும்பம் சிதையாமல் எப்படி இருக்க முடியும்? கூட்டுக் குடும்பம் என்றால் சிக்கல் என்றே நினைப்பார்கள் இந்தக் காலப் பெண்கள்.  ஏற்கெனவே திருமணத்தில் பல்வேறு நிபந்தனைகள் போடும் இக்காலப் பெண்கள் இதை எல்லாம் பார்த்தால் இப்படி நடந்து கொள்வது தான் சரி என்று கூட நினைக்கலாம். பெண்களை ஆஹா, ஓஹோ என்று உன்னதமாகக் காட்டாவிட்டால் கூடப் பரவாயில்லை.  இப்படித் தன் குடும்பத்தையே தானே பாழடித்துச் சிதைக்க நினைக்கும் பெண்ணைக் குறித்து என்ன சொல்லுவது?  மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பினால் நம் மீதே தான் விழும்.  இது கூட அறியாதவர்களாக அன்றோ இருக்கின்றனர்!   தன் கணவனின் பெற்றோர்களும், அவன் உடன் பிறந்தவர்களும் நாசமாய்ப் போன பின்பு அந்தப் பெண் நடத்தும் குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்குமா? கணவனுடன் சந்தோஷத்தை அனுபவிக்க முடியுமா?  அவளுக்குக் கல்மனதாக இருந்தாலும் அவள் கணவனுக்கு மனதில் வருத்தம் இருக்காதா?

இதற்கு ஹிந்தி தொடர்கள் பரவாயில்லை.  அங்கே இன்னமும் கூட்டுக்குடும்பத்தின் சுகம், உன்னதம், அதன் நலன்கள் பற்றியே சொல்கின்றனர்.  அதனால் தானோ என்னமோ இன்னமும் வட மாநிலங்களில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 

13 comments:

  1. டி வி சீரியல்களில் வரும் வில்லி பெண்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது! இப்படியெல்லாம் செய் என்று பெண்களுக்கு கற்றுக்கொடுப்பதே சீரியல்கள்தானோ என்று எண்ண வைக்கிறது! நல்ல வேளை என் மனைவி டீவி சீரியல்கள் பார்ப்பது இல்லை! நல்ல அலசல்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ், உங்க மனைவிக்குப் பாராட்டுகள். நம்ம வீட்டிலே அந்த நேரம் தான் சாப்பாடு நேரம் என்பதால் கட்டாயமாய் உட்கார்ந்திருக்கணும். இல்லைனாலும் அவ்வளவு சீக்கிரம் படுக்கவும் முடியாது.:) காதில் வசனங்கள் விழுந்தே தீரும். ஆனாலும் ஒரு பக்கம் இதைப் பார்ப்பதினால் தானே பெண்களை எவ்வளவு கேவலப்படுத்தறாங்கனும் புரியுது. :(

      Delete
  2. சமுதாய சீரழிவிற்கான காரணத்தை மிகவும் ஆழமாக விவாதித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க டாக்டர் ஜம்புலிங்கம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. ஒன்று அதிகபடியாக அப்பாவி பெண்ணாய் காட்டுவது, அல்லது கொடுமையான வில்லியாக காட்டுவது .
    இதை தவிர அறிவுபூர்வமாய் சிந்திக்க விடுவது இல்லை பெண்களை.தமிழ் நாடகத்தில்
    நீங்கள் சொல்வது போல் இந்தி நாடகம் கடவுள் பக்தி,, குடும்ப உறவுகள் , மன உணர்வுகள இப்படி எல்லாவற்றையும் சொல்கிறது..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பெண்களை எவ்வளவு கேவலப்படுத்தலாமோ அவ்வளவு கேவலப் படுத்துகிறார்கள். பணத்துக்காக இதில் நடிக்கும் நடிகைகளை நினைத்தால் இன்னமும் கோபம் வருகிறது.

      Delete
  4. இரண்டாவது பாராவின் வர்ணனை பல தமிழ் சிநிமாக்களுக்குக் கருவாகி இருக்கிறது!

    சீரியல்களை உறவுகள் தொடரில் கொண்டு வருவதை நான் ஆதரிக்கவில்லை. சீரியல்கள் உறவின் எதிரிகள். கலாசாரத்தின் எதிரிகள்.


    ReplyDelete
    Replies
    1. இரண்டாவது பத்தி உண்மையைத் தான் சொல்கிறது ஶ்ரீராம். :))) அதோடு நெடுந்தொடர்களை உறவுகள் பதிவில் கொண்டு வரத் தான் வேண்டும். ஏனெனில் இன்று உறவுகள் சீரழிந்து வருவதற்கு முக்கியக் காரணமே இம்மாதிரியான நெடுந்தொடர்களே. கணவனின் ரத்த உறவுகளைச் சீரழிக்க நினைக்கும் பெண்ணைக் கதையின் முக்கிய பாத்திரமாக்கி இருக்கையில் இதைப் பார்க்கும் மற்றப் பெண்களில் மன வலிமை படைத்தவர்களைத் தவிர மற்றவர்க்கு இது ஒரு முன்னுதாரணமாகப் போய்விடாதா? அதிலும் தன்னோடு ஒரே குடும்பத்தில் வாழ வந்த பெண்களை வாழ விடாமல் துன்புறுத்துவதும், மகளைப் போல் நடத்த வேண்டிய நாத்தனாரைப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்த நினைத்து அதற்கெனத் திட்டம் தீட்டுவதும், இத்தகைய நெடுந்தொடர்களில் பெண்ணின் கதாபாத்திரங்களை மென்மையாகவும், இனிமையாகவும் படைக்காத கதாசிரியரும், ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண்ணே இழைக்கும் இத்தகைய கொடுமைகளைக் கண்டிக்காத பெண்ணுரிமை அமைப்புகளும். நினைக்கவே எரிச்சல் அதிகம் ஆகிறது.

      Delete
  5. சிலருக்கு சொன்னாலே புரிந்து விடும்... பலருக்கு பட்டால் தான்............

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, பட்டாலும் புத்தி வராதவர்கள் பலர் உண்டு. :(

      Delete
  6. சீரியல்களுக்கும் எனக்கும் வெகுதூரம்.....

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, வெங்கட், ஆமாம், ரொம்ப தூரம் தான். எல்லாம் ரிமோட் கையில் இருக்கு! :)

      Delete
    2. பார்க்காதவரை நல்லதே! :)

      Delete