எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 21, 2014

திருப்பாவைக்கோலங்கள்! தாமதமாக!:)

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்



முதல்நாள் நோன்பு ஆரம்பிக்கையில் அழகாக தீபக் கோலம் போட்டு ஆரம்பிக்கலாம்.  ஆண்டாளின் காலத்தில் முழுநிலா வீசும் நாளில் ஆரம்பித்தித்திருக்கிறது.  காலம் செல்லச் செல்லப் பருவங்கள் மாறுபட மாறுபட இதுவும் மாறி இருக்கிறது.

மதிநிறைந்த நன்னாளில் நீராடித் தூய்மையுடன் நந்தகோபன் குமாரன் ஆன அந்தப் பரந்தாமனை, சூரியனைப் போன்ற ஒளி ஒருந்திய முகத்துடையானைப் போற்றிப் பாடினால் அவன் நமக்கு அந்த வைகுண்டப் பதவியையே கொடுத்துவிடுவான் என்கிறாள் ஆண்டாள்.


பாடல் 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


இறைவனை அர்ச்சிக்கப் பூக்கள் தேவை.  ஆகவே இன்று பூஜைக்கு உகந்த மலர்க்கோலம் போடலாம்.

நோன்பு எப்படி இருக்கவேண்டும் என்னும் விதிமுறைகளை இங்கே ஆண்டாள் சொல்கிறாள்.  எந்நேரமும் ஈஸ்வர தியானமாக அந்தப் பாற்கடலுக்குள் யோகநித்திரை செய்து கொண்டிருக்கும் பரந்தாமனின் திருவடிகளை அடையவேண்டுமெனில் தினந்தோறும் நீராடித் தூய்மையாக இருந்தால் மட்டும் போதாது.  மையிட்டுக் கொள்ளாமல் பூக்களைச் சூடாமல், செய்யக்கூடாதவற்றைச் செய்யாமல், தீய சொற்களைச் சொல்லாமல், தீய செயல்களைச் செய்யாமல் ஞானியர்க்கும், மற்றும் இல்லாதவர்க்கும் அவரவருக்கு வேண்டியவற்றை தானம் செய்தும் இவ்வுலகம் உய்யுமாறு மட்டுமின்றி நம்மால் மற்றவரும் மனம் உகந்து மகிழ்ச்சியுடன் இருக்குமாறும் மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.


பாடல் 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

இன்றைய தினம் பசுக்களுக்கும், மற்ற கால்நடைச் செல்வங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக காமதேனுக் கோலம் போடலாம். அல்லது மீன் கோலம் போடலாம்.  



வாமனனாக வந்து அவதரித்த மாயவன், திரிவிக்கிரமனாக மூவுலகையும் தன் பாதங்களால் அளந்தவன் பெயரைச் சொல்லிப் போற்றிப் பாடினோம் ஆனால், கீழ்க்கண்ட நன்மைகள் விளையும் என்கிறாள் ஆண்டாள். மாதம் மும்மாரி பொழிவதோடு காலத்தே பெய்யும் மழையால் செந்நெல் செழித்து வளர்வதோடு மீன்களும் நீர் நிறைந்த வயலுக்குள்ளே புகுந்துவிளையாடும். பசுக்கள் பாலைப் பொழியும்.  பொறிவண்டு எனப்படும் புள்ளி போட்ட வண்டுகள் குவளை மலர்களில் வந்து தேனை உண்டு மயங்கிக் கிடக்கும். இப்படி அனைவருக்கும் ஏற்றத்தைக் கொடுக்கும் நாமம் நாராயணா என்னும் நாமம்.  முதல் பாடலில் கிருஷ்ணாவதாரத்தைக் குறித்துச் சொன்ன ஆண்டாள் இங்கே உத்தமன் என்னும் பெயரால் வாமன அவதாரத்தையும், திரிவிக்கிரம அவதாரத்தையும் குறிப்பிடுகிறாள். அத்தகைய உத்தமனின் பாதம் பட மஹாபலி எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்!


டிஸ்கி: கோலங்கள் படம் கூகிளார் தயவு. திடீர்னு மார்கழிப் பதிவிட வேண்டுமென மனதில்தோன்றவே இந்தப் பதிவு. எழுதி வைத்துக் கொள்ளாமல் அப்படியே நேரடியாகத் தட்டச்சினேன். கோலம் மட்டும் தேட வேண்டி இருந்தது.  நாளை அடுத்த மூன்றுக்குப் பின்னர் அன்றன்றைய பாவைப்பாடலுடன் தொடரலாம்.

15 comments:

  1. நாராயணனை நினைக்க ஒரு மாதம். முப்பது நாட்களுக்கும் கோலங்கள் நல்ல முயற்சி கீதாமா.கயலுகள...வுக்கு மீன் கோலம் நல்ல பொருத்தம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. முதன் முதலாக இந்தப் பதிவுக்கு வருகை தந்து பொங்கல் எடுத்துக் கொண்டதற்கு நன்றி :)

      Delete
  2. ஆண்டாள் விதிமுறைகள் சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, ஆமாம் விரதம்னா சில விதிமுறைகள் வேணும் இல்லையா! இவை எளிமையானவை.

      Delete
  3. மார்கழிப் பதிவு அருமை படங்கள் எல்லாம் அழகு.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜராஜேஸ்வரி, திடீர்னு தோன்றிய எண்ணம். அதில் விளைந்த பதிவு. பாராட்டுக்கு நன்றி.

      Delete
  4. பாடல்களை ரசித்தேன். மனதுக்கு இதமாக இருந்தது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க டாக்டர் ஜம்புலிங்கம், வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  5. ம்..... தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. திருப்பாவை குறித்த கருத்து ஏதும் இல்லையா ஶ்ரீராம்?

      Delete
  6. திருப்பாவை பாசுரங்களுக்கு எளிமையான விளக்கங்களுடன், கோலங்களும் நன்றாக இருக்கின்றன. பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரஞ்சனி, வரிஞ்சு வரிஞ்சு நிறைய எழுதியாச்சு. சுருக்கமா நம்மால் சொல்ல முடியுமானு ஒரு சோதனை முயற்சி! :))))

      Delete
  7. கோலங்கள் மிகவும் ரசித்தேன். அதற்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கங்களும் அருமை கீதா மேடம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜலக்ஷ்மி, மின் தமிழின் பழைய இழைகளில் தேடிப் பாருங்கள். உதயன் நான் கொடுத்த விளக்கத்திற்கு ஏற்பக் கோலங்கள் வரைந்திருப்பார். இன்றைய பதிவில் உதயனின் கோலம் தான் வந்திருக்கிறது. :))))

      Delete
  8. கோலங்கள் எல்லாம் சிறப்பு , பாடல் விளக்கங்கள் அருமை/

    ReplyDelete