எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 31, 2015

"சும்மா" வில் சும்மாப் போட்டாங்க!

விரதங்கள், பூஜைகள், வழிபாடுகள் குறித்து
தேனம்மை லக்ஷ்மணன் ஒவ்வொரு வாரம் ஒரு பெண் பதிவரிடம் கேள்விகள் கேட்டு பதில்கள் வாங்கி அவரின் பதிவில் சனிக்கிழமையன்று வெளியிட்டு வருகிறார். அந்தப் பதிவர்களின் சிறப்புக்கள் எல்லாம் அளப்பரியவை.  என்னிடம் எதைக் கண்டாரோ தெரியலை! :) அது போல என்னையும் கடந்த 2,3 மாதங்களாகக் கேட்டு வந்தார். நாங்கள் ஆகஸ்டிலிருந்து தொடர் ஓட்டத்தில் இருந்ததால் எனக்கு நேரம் இல்லை.  மேலும் மேற்சொன்ன பதிவர்களைப் போல் என்னிடம் எந்தச் சிறப்பான தகுதியும் இல்லை.  கடைசியில் எனக்குத் தெரிந்த விஷயத்தையே அவர் கேட்டிருந்தாரோ, பிழைத்தேன்.  போன சனியன்று அது அவரின் பதிவில் வெளியிடப் பட்டிருந்தது.  சுட்டி மேலே!  படித்தவர்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும்.  படிக்காதவர்களுக்காக இங்கே பகிர்கிறேன்.

பொதுவாகவே மனித வாழ்க்கையில் நிற்க நேரமில்லாமல் ஓட வேண்டி இருக்கிறது. அதிலும் சாமானியர்களுக்கு  ஏதேனும் பற்றுக் கோல் ஒன்று வேண்டும்.  பல்வேறு மனித சுபாவங்களுக்கு ஏற்பவே கடவுளரும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். என்ன செய்யறதுனு தெரியாமத் திகைத்துத் தடுமாறும் கணங்களில் அவரவர் மனோபாவத்துக்கு ஏற்பப் பிள்ளையாரையோ, அம்பிகையையோ, முருகனையோ, சிவனையோ, திருமாலையோ, அல்லது நாட்டார் தெய்வங்களையோ சரண் அடைகின்றனர். அப்போது நமக்கு வாய்விட்டு நம் குறையை மட்டும் சொன்னால் போதுமானதாக இல்லை.

கடவுளரை வாழ்த்திப் பாடவும் முயல்கிறோம்.  அப்படி வாழ்த்திப் பாடும் பாடல்கள் தமிழிலும் உள்ளன.  வடமொழியிலும் விஷ்ணு சஹஸ்ரநாமம், சிவ சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், லக்ஷ்மி சஹஸ்ரநாமம் எனப் பல உள்ளன. எல்லாவற்றிற்கும் பொதுவான பலன்தான் என்றாலும் அதிகம் சொல்லப்படுவது விஷ்ணு சஹஸ்ரநாமமும், லலிதா சஹஸ்ரநாமமும் தான்.  இதுக்குத் தனிப்படக் காரணம்னு எதுவும் இருக்கானு தெரியாட்டியும் என்னைப் பொறுத்தவரை விஷ்ணு காக்கும் கடவுள் என்பதாலும், அம்பிகை எளிதில் அணுகக் கூடியவள் என்பதாலுமே இவர்களின் சஹஸ்ரநாமங்கள் விரைவில் பரவி இருக்கலாம்.

அதோடு அம்பிகையும், விஷ்ணுவும் ஒரே சக்தியின் மாறுபட்ட வடிவங்களாகவும் சொல்கிறோம். அதைத் தான் பாமர ஜனங்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அண்ணன், தங்கை எனச் சொல்லப்படுகிறது.  நம்மைப் போல் எல்லாம் பரம்பொருளுக்குப் பிறப்போ, இறப்போ இல்லை.  உடல் உறவெல்லாம் இல்லை.  ஒரு சில புராணங்களில் வந்திருந்தாலும் அவை எல்லாம் எளிமைப்படுத்தி எளிமையான மக்களுக்கும் புரிவதற்காகவே அன்றி வேறு காரணம் இல்லை.

எல்லோராலும் தத்துவ ரீதியான விளக்கங்களைப் புரிந்து கொள்ள இயலாது.  ஆகவே தான் விரதங்கள், பூஜைகள், வழிபாடுகள் என ஏற்படுத்தி இருக்கின்றனர்.


விரதம் என்பது உடலையும், மனதையும் தூய்மைப் படுத்தவென்றே ஏற்படுத்தப்பட்டது. தற்போது மருத்துவர்கள் குறைவாக உண்ணச் சொல்லுகின்றனர்.  இதை அந்தக் காலங்களிலேயே நம் சநாதன தர்மம் வற்புறுத்தி உள்ளது.  அதோடு மாதத்தில் குறைந்தது இரு நாட்கள் விரதம் இருக்கவும் சொல்லும்.  வெறும் உணவு உண்ணாமல் மட்டும் இருப்பது விரதம் என்று ஆகாது. அலையும் மனதை அடக்கி ஈசன் பால் திருப்பி விரத நாள் அன்று முழுவதும் இறைவனையே ஒருமுகமாக நினைத்திருக்க வேண்டும். நம் போன்ற பாமரமக்களுக்கு அப்படி நினைப்பது கடினம் என்பதால் தான் அன்று ஈசன் நாமாவைச் சொல்லும்படியும், கோயில்களுக்குச் செல்லும்படியும், பூஜை, வழிபாடு என்றும் ஏற்படுத்தி இருக்கின்றனர்.

பொதுவாக வெறும் நீர் அருந்தி விரதம் இருப்பது மேன்மையான ஒன்றாக இருந்தாலும் தவிர்க்க முடியாதவர்கள் பால், பழம் எடுத்துக் கொள்ளலாம்.  வடமொழியில் ஃபல் என்றால் பழம்.  ஃபல் ஆஹார் என்பதே ஃபலாஹார் என்று ஆகித் தமிழில் பலகாரமாகி நான் விரதத்தன்று இட்லி, தோசை, அடை, சேவை என்று வெளுத்துக் கட்டுகிறோம். பழங்களை மட்டுமே உணவாகக் கொள்வதே ஃபலாஹார் எனப்படும் பலகாரம் ஆகும். விரதம் இருப்பதால் உடலின் வளர்சிதைமாற்றங்கள் ஒழுங்காக நடைபெறுகின்றன. இவை புதுப்பிக்கப்படுகின்றன.  நம் வயிற்றுக்கும் ஓய்வு கொடுப்பதால் புத்துணர்வு பெற்று உடல் இயக்கம், ரத்த ஓட்டம் ஆகியவை சீராக இருக்கும். கடும்நோயால் அவதிப் படுபவர்களும், வயதானவர்களையும் தவிர அனைவரும் விரதம் இருக்கலாம்.  ஒரு சிலர் விரதம் அன்று உணவு உண்ணாமல் காஃபி, டீ, ஹார்லிக்ஸ் என்று குடித்துக் கொண்டு இருப்பது தான் நல்லது என்னும் எண்ணத்திலும் இருக்கின்றனர். அதுவும் தவறு.  விரதத்தன்று காலை எழுந்து குளித்துக் கடவுளின் நினைவிலேயே இருந்து கொண்டு கடவுள் நாமத்தைச் சொல்லிக் கொண்டு பால், பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

முதல்நாள் விரதம் முடிந்து விட்டது என மறுநாள் வெளுத்துக் கட்டவும் கூடாது.  மறுநாளும் காலையில் குளித்துவிட்டு இறை வழிபாடு செய்து  வெறும் வயிற்றில் துளசி தீர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் ரொம்ப சோர்வாக உணர்ந்தால் காஃபி அல்லது தேநீர் அருந்தி விட்டு இறை வழிபாடு செய்து துளசி தீர்த்தம் அருந்திய பின்னரே மற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.  அன்றும், வெங்காயம், பூண்டு, மசாலாப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.  விரதம் இருந்ததால் வயிற்றில் ஏற்பட்டிருக்கும் சூடு தணியும் வண்ணம் குளிர்ச்சி தரும் பொருட்களை உண்ணலாம்.  வெந்தயம் கலந்த தோசை, இட்லி, சேவை அல்லது சூடான பருப்பு சாதம், சுண்டை வத்தல் குழம்பு, நெல்லிப் பச்சடி போன்"றவை பலன் தரும். இனி ஒவ்வொரு கிழமைக்கும் உரிய விரத பலன்களைப் பார்ப்போம்.

ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் சூரியனின் அருள் கிட்டுமென்றும் நீடித்த நோயில் இருந்து காக்கப்படுவோம் என்றும் கூறப்படுகிறது.

திங்கட்கிழமை விரதம் சிவனுக்கு உகந்தது.  சோமவார விரதம் மஹாராஷ்ட்ராவில் சிறு குழந்தைகள் கூட இருப்பார்கள்.  அரிசி, கோதுமை தானியங்கள் சேர்க்காமல் ஜவ்வரிசியில் உப்புமா செய்து ஒரே வேளை சாப்பிடுவார்கள். பல ஹோட்டல்களிலும் அன்று அதுதான் கிடைக்கும்.  சிவனை வழிபடுவதன் மூலம் கணவனுக்கு தேக ஆரோக்கியமும் அவன் அன்பும் கிட்டும் என்று ஐதீகம்.

செவ்வாய்க் கிழமை முருகனுக்கு உகந்த நாள்.  அன்று விரதம் இருப்பது கணவன், மனைவி ஒற்றுமை ஓங்கும் என்று சொல்லப்படுகிறது. அதோடு முருகனுக்கு இருக்கும் விரதம் உப்பில்லாமல் இருப்பார்கள். அப்படி இருந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் நீங்கும். செவ்வாய் கிரஹத்தின் பாதிப்பு இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும்.

புதன் கிழமை விரதம் இருப்பதால் மஹாவிஷ்ணுவின் அருளைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நோய்கள் தீரும் என்பதோடு செல்வ வளத்துடனும் இருப்பார்கள்.

வியாழக்கிழமை குரு கிரஹத்துக்கும், தக்ஷிணாமூர்த்திக்கும் உகந்த நாள். படிப்பு, குழந்தை பாக்கியம் போன்றவற்றுக்கு உகந்தது.

வெள்ளிக்கிழமை அம்பிகைக்கு உகந்த நாள்.  அம்பிகையை ராகு வழிபட்ட ராகு காலத்தில் துர்கையை வழிபடுவது திருமணம் ஆகாத பெண்களுக்குத் திருமண பாக்கியம் ஏற்படும் என்பதோடு நினைத்த காரியமும் கை கூடும். திருமணம் ஆனவர்களுக்குக் கணவனின் நீண்ட ஆயுளுக்காக விரதம் இருக்கலாம்..

சனிக்கிழமை மறுபடியும் பெருமாளுக்கு உகந்தது.  அனுமனுக்கும் உகந்தது. சனி கிரஹத்தின் பாதிப்பு இருப்பவர்கள் பெருமாளையும், அனுமனையும் பிரார்த்தித்து விரதம் இருந்தால் பாதிப்பு குறையும். எடுத்த காரியம் வெற்றியடையும். செல்வம் பெருகும்.

பொதுவாக் விரதம் இருக்கும் முறையையும் அதன் பலன்களையும் மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன்.  குறிப்பிட்ட சில முக்கிய விரதங்கள் குறித்துச் சொல்வதெனில் மிகவும் பெரிதாக ஆகிவிடும். 

Friday, January 30, 2015

பயணங்கள் முடிவதில்லை! 7

பயணங்கள் முடிவதில்லை

கடைசியா நாம கோதண்டராமர் கோவிலுக்குப் போனோம். அங்கிருந்து ராமேஸ்வரம் வந்தடைந்தோம்.  திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் வரும் வழியிலேயே பாம்பன் பாலம் தாண்டியதும், நகருக்குள் நுழைய சுற்றுலாப் பயணிகளின் வண்டிக்கு ஒரு வண்டிக்கு நூறு ரூபாய் வசூலிக்கின்றனர். ஆகவே இப்போது ராமேஸ்வரம் நகருக்குள் நேரே வந்து வண்டிகள் நிறுத்துமிடம் போய்ச் சேர்ந்தோம்.  வண்டியிலேயே வைக்க வேண்டியவற்றை வைத்துவிட்டு 2,3 ஹோட்டல்களில் அறை இருக்கிறதா என்று கேட்டோம்.  எல்லாம் வழிகிறது.  சத்திரங்களில் கூட இடம் இல்லை என்றும் ஒரு அறை கிடைத்தால் பெரிய விஷயம் எனவும் தகவல் கிடைத்தது.  அதை அத்தோடு விட்டு விட்டு ஓட்டுநரை வண்டியோடு சாமான்கள் இருப்பதால் அங்கேயே பார்த்துக்கொள்ளும்படி இருக்கச் சொல்லிவிட்டு நாங்கள் நால்வரும் அக்னி தீர்த்தம் நோக்கிக் கிளம்பினோம்.


வண்டி நிறுத்துமிடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் அக்னி தீர்த்தம் இருக்கிறது.  என்றாலும் அப்போது இருந்த அசதியில் நடக்க முடியாது என்பதால் ஒரு ஆட்டோக்காரரிடம் கேட்டதற்கு 25 ரூபாய் வாங்கிக் கொண்டு அக்னி தீர்த்தத்திற்கு ஒரு ஃபர்லாங் முன்னால் இறக்கி விட்டார். நானும் நம்ம ரங்க்ஸும் ஏற்கெனவே 2,3 முறை குளியல் போட்டு விட்டதாலும் அப்போது மணி மூன்று ஆகிவிட்டதாலும் குளிக்க வேண்டாம் என முடிவெடுத்துவிட்டோம்.  பையரும், மருமகளும் மட்டும் குளிக்கச் சென்றனர்.  அவர்களுக்கு உள்ளே உள்ள தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து வைக்க நல்லதொரு வழிகாட்டி தேவைப்பட்டது.  அங்கிருந்த காவல்துறையின் உதவியை நாடினோம்.  அவர் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழிகாட்டியை அழைத்து எங்களுக்கு உதவச் சொன்னார்.

முன்னெல்லாம் எங்கள் குடும்ப புரோகிதர் மணிகிண்டி சாஸ்திரிகள் என்பவர் அங்கேயே கிழக்கு கோபுரத்திற்கருகே இருந்தார்.  அவர் சிருங்கேரி மடத்தின் முத்ராதிகாரியாகவும் இருந்ததால் மடத்திலேயே தங்கவும் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார்.  முதல்முறை சென்றபோது அவர் மனைவி இருந்ததால் அவர் வீட்டிலேயே தங்க, மற்றும் சாப்பாடு போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். அவருடைய சீடர்களே தீர்த்த கட்ட ஸ்நானங்களுக்கும் வந்து உதவினார்கள்.  அதன் பின்னரும் அவர் மூலமே தநுஷ்கோடி சென்றோம்.  அப்போது அவர் மனைவி உயிருடன் இல்லை என்பதால் மைத்துனர் வீட்டில் சாப்பாடு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.  அப்போதே அவருக்கு வயதாகி விட்டது.  இப்போது அவர் இல்லாததோடு அவர் வீடு இருந்த இடத்தில் வேறு ஏதோ அரசு அலுவலகம் வந்திருப்பதையும் பார்த்தேன்.

எனவே கிடைத்த வழிகாட்டியை வைத்துக் கொண்டு பையரும், மருமகளும் அக்னி தீர்த்தத்தில் குளித்துவிட்டு வந்தனர். பின்னர் எங்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றார் வழிகாட்டி. கோயிலிலும் நாங்கள் குளிக்கப்போவதில்லை என்று சொல்லிவிட்டதால் எங்களைப் பிள்ளையார் சந்நிதிக்கு அருகே அமர்த்திவிட்டுச் செல்வதாய்க் கூறினார். அதற்குள்ளாக நாங்கள் பாதுகாப்பு சோதனையை முடித்துக் கொண்டு வந்தோம்.  கடுமையான சோதனை. சாவிக் கொத்து சப்தம் போட்டுக் காட்டிக் கொடுக்க, வீட்டுச் சாவி என்று எடுத்துக் காட்டினேன்.  நல்லவேளையாக அலைபேசி, காமிரா எல்லாம் வைத்துவிட்டு வந்திருந்தோம். பின்னர் நாங்கள் உள்ளே சென்று விநாயகர் சந்நிதிக்கு அருகிலிருந்த ஒரு மேடையில் அமர்ந்திருக்கப் பையரும், மருமகளும் எல்லாத் தீர்த்தங்களிலும் நீராடி விட்டு வந்தனர்.

உடை மாற்ற ஆங்காங்கே அறைகள் இருக்கின்றன.  கோயிலுக்குச் சுற்றிலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும் அறைகள் உள்ளன.  எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் தான்.  ஆனால் அங்கே நடக்கும் அட்டூழியம்!  நல்லவேளையாக எங்களுக்கு இப்படி அனுபவம் ஏற்பட வில்லை.  நாங்கள் குளித்த 2,3 முறைகளிலும் கோயிலுக்கு அருகேயே சிருங்கேரி மடம் இருந்ததால் அங்கே சென்று உடை மாற்றிக் கொண்டு துணிகளையும் காயப் போட்டு விட்டோம்.  இப்போது அறை கிடைக்காததால் பையர் அங்கே உடை மாற்றும் அறைக்குச் சென்று உடை மாறப் போனபோது பலரும் அங்கேயே சிறுநீர் கழிப்பதைப் பார்த்திருக்கிறார். அதே போல் பெண்கள் உடைமாற்றும் அறையிலும் நடப்பதை மருமகளும் பார்த்துவிட்டு உடையே மாற்றாமல் ஈரத்தோடு வெளியே வந்துவிட்டார்.  பையர் விடாமல் சத்தம் போட்டுவிட்டு வந்துவிட்டார். ஆனாலும் யாரும் கேட்கவில்லை என்றார்.

கோயில் என்பது புனிதமான இடம். பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் தெய்வங்களின் புனிதத்தில் உள்ள ஈர்ப்பு சக்தியின் தாக்கம் நமக்குக் கிடைக்க வேண்டியே நாம் அங்கெல்லாம் செல்கிறோம்.  ஆனால் நாம்  நம் சுற்றுப்புறத்தை மட்டும் அசிங்கம் செய்யவில்லை.  கோயில்களையும் நம்மால் முடிந்த அளவு பாழாக்குகிறோம்.  சில நாட்கள் முன்னர் முகநூலிலும், குழுமத்திலும் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் பிரதோஷம் முடிந்த அன்று /அல்லது ஏதோ விழா அன்று கொடுத்த பிரசாதத்தை உண்டவர்கள் அனைவரும் குப்பைகளை அங்கேயே மலை போல் குவித்திருந்ததைப் படம் எடுத்துப் போட்டுக் காட்டி இருந்தனர்!


நாம் தமிழர்கள் எனப் பெருமை கொள்கிறோம்.  பாண்டியர், சேரர், சோழர் கலைகளை வளர்த்தனர், கோயில்களைக் கட்டி நிர்வாகம் செய்தனர். என்றெல்லாம் படிக்கிறோம்.  சென்றும் பார்க்கிறோம்.  ராஜராஜ சோழனுக்கு விழா எடுக்கவும், ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கவும் ஆர்வம் காட்டுகிறோம்.  ஆனால் அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துப் பணத்தைச் செலவு செய்து கட்டிய கோயில்களை நாம் எவ்வளவு அழகாய்ப் பராமரிக்கிறோம்!  இதற்காகவா நம் அரசர்கள் அனைவரும் இத்தனை பாடுபட்டுப் பல சிற்பிகளையும் சம்பளம் கொடுத்து அவர்கள் உயிர், உடைமையைப் பாதுகாத்துக் கஷ்டப்பட்டுக் கோயில்களைக் கட்டி சிற்ப வேலைகளைச் செய்து வைத்தனர்.  காலத்துக்கும் நிற்கக் கூடிய கோயில்கள் வருங்கால சந்ததிகளால் இப்படிக் கேவலப்படுத்தப்படும் எனில் அவர்கள் இம்மாதிரிக் கோயில்களைக் கட்டியே இருக்கமாட்டார்கள்.



இது அலைபேசியையும், காமிராவையும் கொடுக்கும் முன்னர் அவசரமாக எடுத்த படம்.  அதுக்கப்புறமா எடுக்க முடியலை.  அங்கேயே இருந்த காவல்துறையினர் தடுத்துவிட்டனர். 

Tuesday, January 27, 2015

"அரண்மனை" யைச் சுற்றிப் பார்த்தேன்!




நேத்திக்கு சாயந்திரம்மா தொலைக்காட்சியை அரை மனசாப் பார்த்துட்டு இருந்தப்போ, சன் தொலைக்காட்சியில் அரண்மனைப் படம் போடறாங்கனு தெரிஞ்சது.  ஆஹா, பேய், பிசாசுப் படம்னு சொன்னாங்களேனு இதைப் பார்த்துடுவோம்னு ரங்க்ஸ் கிட்டே சொன்னேன்.  அவரும் இந்தப் படம் இன்னமும் பார்க்கலைங்கறதாலே சரினு ஒத்துண்டார். ஆரம்பத்திலே சாமியார் யாரோ வந்து பேசறதைச் சரியாப் பார்க்க முடியலை.  ஆனால் அதுக்கப்புறமாத் தான் பேரே போட்டாங்க.  சாமியார் மஹாசிவராத்திரியைப் பத்தியும் அன்னிக்கு வர கிரஹணம் பத்தியும் அந்த கிரஹணத்தின் பாதிப்புக்கள் குறித்தும் பேசினார்னு நினைக்கிறேன்.


கதையின் மூலக்கருவே இதான்.  மஹாசிவராத்திரியன்று வர கிரஹணத்தின் போது பேய், பிசாசு, ஆவிகள் உம்மாச்சியை விட சக்தி வாய்ந்ததாக இருக்குமாம்.  ஆகவே துர் தேவதைகளிடமிருந்து மக்களைக் காப்பாத்த நினைக்கும் சாமியார், அந்த ஊரின் வழியாகப் போகையில் மீண்டும் தான் இங்கே வர இருக்கும்னு சொல்லுகிறார்.  அப்போதே கொஞ்சம் ஆர்வம் ஏற்படுகிறது.  என்றாலும் படம் அப்படி ஒண்ணும் சொல்லிக்கிறாப்போல் இல்லை.  ஆனால் முழுப்படமும் நான் பார்த்தேன் என்பது தான் இங்கே முக்கியமான சஸ்பென்ஸ்.  எப்போவும் பாதிப்படம் பார்ப்பேன். அல்லது பாதியிலிருந்து பார்ப்பேன்.  அல்லது முடிவு இதுதான் என ஊகம் செய்து கொண்டு எழுந்து போயிடுவேன். :)


பேயாக நடிக்கும் நடிகை (யாருங்க அது?) நல்லாவே மிரட்ட நினைச்சிருக்கார்.  இயக்குநர் சுந்தர் சி. குஷ்பூவின் கணவர் என்பதால் சந்தானம் அவரிடமே போய்க் குஷ்பூ இட்லி வேணுமானு கேட்கிறதெல்லாம் ஒரு காமெடினு நினைச்சுச் சிரிக்கச் சொல்றாங்க.  எனக்கு எரிச்சலே வந்தது.  சந்தானம் காமெடி அப்படி ஒண்ணும் ரசிக்கும்படியா இல்லைனாலும் பேய் கிட்டே அடி வாங்கறச்சே கொஞ்சம் பரவாயில்லை ரகம்.  கதை அதே பழிவாங்கும் கதை தான்.  எல்லாத்திலும் ஹீரோவாக நடிக்கும் நடிகர் ஆன்டி ஹீரோவாக வந்து பழிவாங்குவார் என்றால் இதில் ஒரு பெண் தன்னை உயிரோடு புதைத்ததற்கு, தன்னைக் கொல்ல முயற்சித்தவர்களை ஒவ்வொருத்தராகப் பழி வாங்குகிறாள்.  இங்கே பேயாக நடிக்கும் பெண் தான் கதாநாயகி என நினைக்கிறேன்.  அவர் கணவனாக நடிப்பவரும் எனக்குத் தெரிஞ்ச நடிகர்களில் யாரும் இல்லை.  புதுசா இருக்கு.  பேய்ப் பெண்ணின் அண்ணனாக சுந்தர் சி. வருகிறார்.

அதுக்காகத் தான் யாரைக் காதலிச்சோமோ அவன் மனைவியோட உடம்பிலேயே பேய் புகுந்து கொள்கிறது. இங்கே தான் கொஞ்சம் நெருடல்.  இந்தப் படத்தில் சுந்தர் சி. மனோபாலா, சித்ரா லக்ஷ்மணன், சந்தானம், மேஜர் பிள்ளை கௌதம் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் யார் என்று தெரியவில்லை.  சந்தானபாரதியும் அவ்வப்போது வந்து தலை காட்டுகிறார்.  அப்போது நடக்கும் கல்யாண நிச்சயதார்த்தம் யாரோடதுனு ஒண்ணும் புரியலை! அந்த நிச்சயதார்த்தத்தில் நடனம் ஆடும்போது திடீர்னு பேயாக நடிக்கும் கதாநாயகியின் கணவன் வெளியூர் போயிருந்தவன் அங்கே வருகிறான். எப்படி?


கதாநாயகன் பேயின் கணவன் என்றால் அவனும், அவன் மனைவியும் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கவே இல்லை என்பது அந்தப் பெண்ணாலேயே சொல்லப்படுகிறது.  ஆனால் அவள் கர்ப்பம் என்றும் அதைச் சோதனை செய்ய மருத்துவப் பரிசோதனை செய்திருப்பதாயும் சொல்கிறார்கள்.  இந்த இடத்தில் எனக்குச் சரியாகப் புரியவில்லை;  அல்லது இதைக் குறித்து விளக்கம் வந்த காட்சியை நான் பார்க்கவில்லை.  சமையலறையில் இருந்தப்போ வந்திருக்குமோ என்னமோ! ஆனாலும் பொதுவான கருத்து கதையைக் கோர்வையாகத் தொகுத்துக் கொண்டு செல்லவில்லை.  பல இடங்களில் விறுவிறுனு நாம் தான் சொல்லிக்க வேண்டி இருக்கு!  படத்தில் ஒரே சொதப்பல்!

கிரஹணத்தின் போது கணவன், மனைவி ஒன்று சேர்ந்தால் பின்னர் அவர்களை எவராலும் பிரிக்க முடியாது எனத் தெரிந்திருந்து வைத்திருக்கும் பேய்ப் பெண் தன் காதலனின் மனைவி உடலில் இருந்து தான் வெளியேறாமல் இருக்கும் வழிகளை எல்லாம் முயல  தன் தங்கையைக் காப்பாற்றி ஆகவேண்டும் என்பதால் அதை எதிர்த்து சுந்தர் சி. செய்யும் மாற்று ஏற்பாடுகள் எல்லாமும் உடை பட்டுப் போகின்றன.  கடைசியில் கதாநாயகியாக நடிக்கும் பெண் கதைப்படி  கர்ப்பம் என்று தெரிந்ததும்  அவள் கணவனின் முன்னாள் காதலிப் பேய் அவள் உடம்பில் இருந்து வெளியேறுகிறதாம்.

எல்லாமே கிராஃபிக்ஸ் என்று புரிவதாலோ என்னமோ பின்னணி இசையினால் கூடத் திகில் என்பதே ஏற்படவில்லை.  திகில் படம் என்றால் திக், திக் என்று இருக்க வேண்டாமோ!  ம்ஹூம், குழந்தைகள் பார்க்கும் விட்டலாச்சார்யா படம் போல இருந்தது.  எப்படியோ பொறுமையாக நானும்  ஒரு படத்தை முழுசாப் பார்த்துட்டேன் என்பதே திகிலூட்டும் அம்சம் இதில்! :P :P :P

Monday, January 26, 2015

தாயின் மணிக்கொடி பாரீர்!





வந்தேமாதரம்!

ஜெய்ஹிந்த்!

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.  கூகிளார் அமர்க்களமாக் கொண்டாடிட்டு இருக்கார்.   பார்த்தீங்களா எல்லோரும்?

Sunday, January 25, 2015

"எங்கள்" சந்திப்பு!

பத்து நாட்கள் முன்னரே கௌதமன் திருச்சி வரப்போவதாயும் பார்க்கவேண்டிய இடங்கள் குறித்தும் கேட்க, நம்ம வீட்டை அந்த லிஸ்ட்லே சேர்க்க வேண்டும் எனச்  சொல்லி இருந்தேன்.  அதுக்கப்புறமாத் தான் ஶ்ரீராமும் வரப் போவது தெரிந்தது.  கடைசியில் பார்த்தால் (ஆரம்பத்திலிருந்தே அவங்க திட்டம் அதான்) எங்கள் "ஆ"சிரி"யர் குழு மொத்தமும் வரப் போவதாய்ச் சொன்னாங்க.


சாப்பிட என்ன கொடுத்து பயமுறுத்தலாம்னு நானும், ரங்க்ஸும் திட்டம் போட்டால் ஶ்ரீராம், ஒரு கல்யாணத்துக்கு வரப் போவதாயும், கல்யாணச் சாப்பாடை விடப் போறதில்லைனு சங்கல்பம் செய்திருக்கிறதாயும் சொல்லிட்டார்.  நானும் என் பங்குக்கு நாங்க தஞ்சாவூரில் ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு மோர் சாதம் சாப்பிட்ட கதையை எல்லாம் சொல்லி பயமுறுத்திப் பார்த்தேன்.  ஶ்ரீராம் முன்.ஜா. மு.அண்ணாவாக என் தம்பியை எல்லாம் எடுத்து வைக்கச் சொல்லிட்டேன்னு சொல்லி நழுவிட்டார்.

சே, சரியான பரிசோதனை எலிகள் போச்சேனு வருத்தத்தில் இருந்தேன்.  நேத்துப் பூராக் கைவலி வேறே அதை ஜாஸ்தியாக்கி விட்டது. இன்னிக்குக் காலங்கார்த்தாலே வேலை செய்கையில் அலைபேசி அழைப்பு.  ஶ்ரீராம் முஹூர்த்தம் முடிஞ்சதும் வரதாச் சொன்னார்.  அவருடன் கூட எங்கள் ஆசிரியர் குழுவும் வரதாகவும் சொன்னார்.  காலை ஆகாரம் முடிச்சுட்டுக் கீரை நறுக்கிட்டுக் கல்சட்டியில் முள்ளங்கி சாம்பாருக்கு வேகப் போட்டிருந்தேன். அழைப்பு மணி ஒலித்தது.

கௌதமன், திருமதி கௌதமன், கௌதமனின் அண்ணாவும், எங்கள் ஆசிரியர்களில் ஒருவருமான கேஜி, ஶ்ரீராம், கௌதமன் மனைவியின் அண்ணா ஆகியோர் வந்தனர்.  இன்னொருவர் இங்கே வரதை விட ரங்கனைப் பார்ப்பது மேல்னு அங்கே போயிட்டாராம்.  வெங்கட் தற்சமயம் ஶ்ரீரங்கத்தில் இருப்பதால் அவரும் அவரின் மனைவியும்  வர முடியுமானு கேட்டதில் பயணத்தில் இருப்பதாகச் சொன்னார்.  கடைசியில் ஆசிரியர் குழு மொத்தமும் வர முடியலையாம்.  கேஜிஜேக்குச் சொந்த வேலை.  இன்னொருத்தருக்கும் வேலை ஏதோ, ஆகையால் வரலை.  வந்தது, எங்கள் ஆசிரியர் குழுவின் மூன்று ஆசிரியர்கள்.  காசு சோபனா வெளிநாட்டு வாசியாம்.

கௌதமன் உள்ளே நுழையும்போதே கொஞ்சம் பயத்துடன் காணப்பட்டார்.  என்னவோ, ஏதோனு நினைச்சால், "அந்த அரிசிமா உப்புமா, நானாக எழுதலை.  இதோ இவங்க சொல்லித் தான் எழுதினேனாக்கும்!" அப்படினு மனைவி பக்கம் கையைக் காட்டிவிட்டு அதுக்கு அப்புறம் வாயே திறக்காமல் மௌனமாகி விட்டார்.  அவருக்கு நேர் எதிரிடையாக கௌதமன் மனைவி, பொரிந்து தள்ளினார்.  உப்புமா நான் சொல்லலையாக்கும்.  என் மாமியார் சொல்லிக் கொடுத்ததை அவருக்குச் சொன்னேன். என்று கௌதமன் மனைவி சொல்ல கௌதமனுக்கு மேலும் வாயைத் திறக்க பயம்.  பேசாமலே இருந்தவர் அப்புறமாக் காஃபிக்குத் தான் வாயைத் திறந்தார். :P :P


ஶ்ரீராம் அவரோட  பாஸ் இல்லாமல் வந்ததாலோ என்னமோ ரொம்பவே சோகமாக உட்கார்ந்திருந்தார்.  இல்லைனா சமையலுக்கு அவர் துணை இல்லாமல் பாஸ் தனியாச் சமைக்கணுமேனு கவலைப் பட்டாரோ என்னமோ, தெரியலை! அல்லது கல்யாணத்தில் காலை டிஃபன் பந்தியில் ஸ்வீட் அவருக்கு மட்டும் கொடுக்கலையோ?  தெரியலை. கௌதமனின் மைத்துனரும், அவர் அண்ணாவும் திறந்த வாயை மூடவில்லை.  கௌதமனின் அண்ணா கேஜி அவர்கள் பகிர்ந்து கொண்ட பல விஷயங்களும் சுவாரசியமாக இருந்தன.  என்னனு கேட்டுடாதீங்க! கௌதமனின் மைத்துனர் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி மாணவர் என்பதால் என் அப்பாவைத் தெரியுமானு கேட்டேன்.  ம்ஹூம், அந்தப்பள்ளியிலேயே பிரபலமான அப்பாவுடைய குழுவையே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. இத்தனைக்கும் மாணவர்கள் அப்பாவுக்குச் சூட்டிய செல்லப் பெயரைக் கூடச் சொல்லிப் பார்த்தேன். புரிஞ்சுக்கவே இல்லை.  மற்ற மதுரை பற்றிய மலரும் நினைவுகளில் இருவரும் மூழ்கினோம்.

கௌதமனின் அண்ணா அரவங்காட்டில் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள நாங்களும் எங்கள் பங்குக்கு அறுத்துத் தள்ளினோம். பின்னர் வீடு, மாடி எல்லாவற்றையும் பார்த்துவிட்டு மேலும் சில பதிவர்களைச் சந்திக்க வேண்டிக் கிளம்பிச் சென்றனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சிரிப்பும் கொண்டாட்டமுமாக இனிமையாகக் கழிந்தது. மறக்க முடியாக் காலை! எங்க இரண்டு பேருக்குமே இந்தச் சந்திப்பு  ஏதோ ரொம்ப நாள் கழித்துச் சந்தித்த உறவினர் சந்திப்பாக இருந்ததோடு அல்லாமல் புதுசாப் பார்க்கிறாப்போல் எல்லாம் தோணவே இல்லை. 

Saturday, January 24, 2015

படம் இங்கே! பதிவு அங்கே!














மஞ்சள் ஊறுகாய்ப் படம் மேலே.  பதிவு மஞ்சளில் ஒரு ஊறுகாய் இங்கே. ஊறுகாய்ப்  படத்தையும் அங்கேயே போடலாம்னு தான் இருந்தேன்.  ஆனால் அங்கே பதிவு போடுவது ரொம்பப் பேருக்குத் தெரியறதில்லை.  பலரும்  இங்கே மட்டுமே வராங்க.  அநியாயமா இல்லையோ?   நம்மளை மாதிரி ச.க.வ. க்கு ஒரே ஒரு பதிவா இருக்கும்? போகட்டும்.  படம் எடுக்கறச்சே இதிலே மாங்காய் இஞ்சியையும் வாங்கி நறுக்கி வதக்கிச் சேர்த்துட்டேன். ஊறுகாய் ஊறிச் சாப்பிடவும் ஆரம்பிச்சாச்சு.  ஆலு பராத்தா, மூலி பராத்தா, தேப்லா, மற்றும் மசாலா பூரி போன்றவற்றோடு நல்ல துணையாக இருக்கும்.

மிளகாய்த் தூளும், பச்சை மிளகாயும் அவரவர் காரத்துக்கு ஏற்பக் கூட்டியோ, குறைத்தோ போட்டுக் கொள்ளுங்கள். மாங்காய் இஞ்சியில் தொக்குப் பண்ணலாம்.  அது பற்றி பண்ணிட்டுப் படத்தோடு விரைவில். 

Friday, January 23, 2015

பயணங்கள் முடிவதில்லை! 6

ராமேஸ்வரம் வரும் வழியில் தான் கோதண்டராமர் கோயில் இருக்கு.  அங்கே தான் விபீஷணனுக்கு   பட்டாபிஷேஹம் ஆயிற்றாம்.


கோயிலைப் படம் எடுக்கத் தடை போட்டுட்டாங்க.  இதை எடுக்கையிலேயே கூட்ட நெரிசலும் தாங்கலை.  எடுக்கவும் விடலை. படிகள் நிறைய உள்ள கோயில். மக்கள் ஏறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் இருந்தனர்.  ஒரு சிலர் படம் எடுக்கையில் ஆக்ஷேபம் வேறு செய்தனர். அதோடு மேலே காமிராவைக் கொண்டு போகக் கூடாது என்று சொல்லி விட்டார்கள்.  அதே போல் ராமேஸ்வரம் கோயிலிலும் காமிரா, அலைபேசி ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.  அல்லது நாம் அங்குள்ள லாக்கரில் டெபாசிட் செய்ய வேண்டும். ரிஷபன் எப்படியோ கோபுரத்தையும் வீதியையும் படம் எடுத்திருக்கார்.  அதுக்கே எங்களை அனுமதிக்கலை.

[Image1]

இதான் கோயிலுக்கு ஏறும் இடம்.  முதல்லே படிகளைப் பார்த்துட்டு ரங்க்ஸ் கிட்டே நான் வரலை, நீங்க போங்கனு சொல்லிட்டேன்.  அப்புறமாப் பார்த்தாப் படமும் எடுக்க விடலை.  எல்லாம் நம் நேரம்! :( கூட்டமும் நெரியுது.  மேலேயே ஏறிடுவோம்னு ஏறிட்டேன். வார இறுதி என்பதோடு விடுமுறை, விழாக்காலம் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் உச்சத்தில் இருந்தன.  கருவறையில் கோதண்டத்துடன் காட்சி தரும் ஶ்ரீராமர், அருகில் சீதை, லக்ஷ்மணரோடு, அதிசயமாக விபீஷணனும் உடன் இருக்கக் காட்சி தருகிறார்.  கொஞ்சம் கிட்டே போய்ப் பார்த்தால் தான் விபீஷணாழ்வார் இருப்பதைப் பார்க்க முடியும்.

மன்னார் வளைகுடாவுக்கும் , வங்காள விரிகுடாவுக்கும் இடையிலுள்ள சின்னத் தீவில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் தான் விபீஷண சரணாகதிக்குப் பின்னர் ஶ்ரீராமர் விபீஷணனுக்குப் பட்டம் சூட்டியதாகச் சொல்கின்றனர்.  வைகானஸ ஆகமத்தின்படி இந்தக் கோயில் நடைபெறுவதாகச் சொல்கின்றனர். வருடா வருடம் விபீஷணப் பட்டாபிஷேஹம் ஆனி மாதம்  வளர்பிறை நவமி திதியில் நடைபெறுவதாகவும் சொல்கின்றனர்.  இந்தத் தலத்தில் அதிசயமாக கருடாழ் வாரும், ஶ்ரீராமாநுஜரும் முன் மண்டபத்தில் காணப்படுகின்றனர்.  ஊரை விட்டு ஒதுக்கமாக ஒரு தீவில் இருப்பதால் மாலை ஆறுமணிக்கேக் கோயில் நடை சார்த்தப்படுகிறது.  காலையிலும் திறக்க ஏழுமணிக்கு மேல் ஆகும் என்றனர். இந்தத் தலத்தையே கோதண்டம் என்னும் பெயரிலும் அழைக்கின்றனர். 

கோயில் முகப்புப் படம் கொடுத்தவர் கூகிளார்.  நாங்கள் யாருமே( பையர் உட்பட) படம் எடுக்கவில்லை. :(  ராமேஸ்வரம் படங்களும் இல்லை. அங்கேயும் காமிரா, அலைபேசி எல்லாவற்றையும் வண்டி நிறுத்தும் இடத்திலேயே கார் ஓட்டுநரிடம் ஒப்படைக்க வேண்டி இருந்தது.  கைப்பையை மட்டும் திறந்து காட்டிவிட்டு எடுத்துச் சென்றோம்.  அதிலும் வீட்டுச் சாவிக்குக் கொஞ்சம் சந்தேகப்பட்டார்கள். 

Thursday, January 22, 2015

ஏமாறச் சொன்னதும் யாரோ?

சமீப காலமாக ஏமாற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதோ எனத் தோன்றுகிறது.  சில சமயங்களில் இந்த விஷயத்தில் சென்னை பரவாயில்லை என்னும்படியாக இங்கே திருச்சியில், ஶ்ரீரங்கத்தில் ஏமாற்றுகின்றனர்.  அதிலும் முக்கியமாக இங்கே இருக்கும் எலக்ட்ரீஷியன்கள் அதிகச் சம்பளம் மட்டும் வாங்குவதில்லை. சாமான்கள் வாங்குவதிலும் ஏமாற்றுகின்றனர்.   இங்கே வந்த புதிதில் ஏ.சி. மெகானிக் ஏ.சியை மாட்டுவதற்குக் கிட்டத்தட்ட 3,000 ரூபாய் வாங்கினார். அதுதான் போச்சுன்னா படங்கள் மாட்ட ஆணி அடித்துத் தரச் சொன்னால் அதுக்கு எலக்ட்ரீஷியன் ஒரு ஆணி அடிச்சதுக்கு நூறு ரூபாய் வீதம் கேட்டார். மயக்கமே வந்து விட்டது.

அதன் பின்னர் சொந்தக்காரங்க மூலமா வேறொரு எலக்ட்ரீஷியனைப் பிடிச்சு சில, பல வேலைகளுக்குக் கூப்பிட்டால் சம்பளம் ரொம்பக் குறைவாக இருந்தது.  ஆனால் கீசரில் தில்லுமுல்லு செய்திருக்கிறார். அதை தற்செயலாக வீட்டுக்கு வந்த வேறொரு எலக்ட்ரீஷியன் கண்டு பிடித்தார்.  அதோடு இல்லாமல் சில பொருட்களை (வேண்டாதவைகள் தாம்)வித்துத் தரேன்னு சொன்ன அந்த 2 ஆவது எலக்ட்ரீஷியன் அதை விற்றபின்னர் பணத்தைத் தரவே இல்லை.  ஆரம்பத்தில் தொலைபேசி அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்தவர் பின்னால் அழைப்பை ஏற்கவே இல்லை.  ஒண்ணு சிம் கார்டை மாத்தி இருக்கணும்.  இல்லைனா அலைபேசி எண்ணையோ, அல்லது அலைபேசியையோ மாத்தி இருக்கணும். சொந்தக்காரங்க மூலமா அந்த எலக்ட்ரீஷியன் வீட்டுக்கே போயும் பார்த்தாச்சு.  ம்ஹூம்! :(

3 ஆவது எலக்ட்ரீஷியன், முந்தின எலக்ட்ரீஷியன் ஏமாத்தினதைக் கண்டு பிடிச்சதாலே நியாயமா இருப்பார்னு நினைச்சால் அவரும்  ஏமாத்திட்டார். சரி, அதான் போச்சுன்னா, மளிகைப் பொருட்கள் வாங்கற கடையிலே ஹார்ப்பிக் வாங்குகையில் ஒரு தரம் எதுக்கோ இலவசமாக் கொடுத்த ஹார்ப்பிக் பாட்டிலைக் கொடுத்து அதுக்குப் பணம் வாங்கி இருக்கார்.  கடையிலே போய்க் கேட்டால் நான் கொடுக்கலை அப்படி, நீங்க எங்கே வாங்கினீங்களோனு சொல்லிட்டார்.  பில்லைக் காட்டி எங்க கிட்டே வேறே ஹார்ப்பிக் இல்லைனு சொல்லியும் ஒத்துக்கலை.  அப்புறமா அந்தக் கடையை விட்டாச்சு.  வேறொரு கடையில் வாங்கினால் அவங்க 1,500/-க்குக் குறையாமல் சாமான்கள் வாங்கினால் தான் வீட்டுக்கு எடுத்து வந்து தருவோம்னு சொல்லிட்டாங்க.

சரினு வேறொரு கடையிலே சாமான் வாங்க ஆரம்பிச்சோம்.  இந்த மாத லிஸ்ட்லே  அவர் கிட்டே எம்.டி.ஆர். சேமியா போட்டிருந்தேன்.  இரண்டு கால் கிலோ சேமியா பாக்கெட்டைக் கொடுத்திருந்தார்.  சரி பரவாயில்லைனு வாங்கிட்டுப் பார்த்தால் அதுக்கு எம்.டி.ஆர். சாம்பார்ப் பொடி ஐம்பது கிராம் இலவசம்னு போட்டிருந்தது கொடுக்கவே இல்லை.  கடையிலே போய்க் கேட்டால் அதெல்லாம் இலவசம் இல்லை. விலைக்குத் தான். ஐம்பது கிராம் சாம்பார்ப் பொடி பாக்கெட்டை 25 ரூ கொடுத்து வாங்கிக்குங்கனு சொல்லிட்டாங்க. சேமியா பாக்கெட்டில் கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறதைக் காட்டிக் கேட்டும் ஒத்துக்கலை.  சாம்பார்ப் பொடிக்கு சேமியா இலவசம்னு சொல்றாங்க.  அப்புறமா சேமியாவுக்கு ஏன் விலை போட்டிருக்கீங்கனு கேட்டதுக்கு பதில் இல்லை.  வேணும்னா வாங்கு, இல்லைனா போ! இதான் பதில்!

என்னோட மண்டையைக் குடையும் கேள்வி!  எங்களுக்கு மட்டுமா இப்படி? எல்லோருக்குமா?  அப்போ எல்லோரும் வாயை மூடிக் கொண்டு நடக்கிறது நடக்கட்டும்னு இருக்காங்களா????????????????? நாங்க தான் சண்டைக்காரங்களோ????????????????????????? அல்லது நான் தான் உண்மையை உள்ளபடி ஒத்துக்கிறேனோ? :))))))  இல்லாட்டி நம்ம இலவசம் பண்ணற வேலையா?

இலவசம் வாங்க! :)

Tuesday, January 20, 2015

பயணங்கள் முடிவதில்லை! 5

முதல் முதல் தனுஷ்கோடிபோகையிலே அந்த வண்டி மணல், நீர், சாலை எல்லாத்துக்கும் பழகினதாலே மணலில் போகறச்சேயோ, தண்ணீரில் போகும்போதோ ஒண்ணும் கஷ்டமா இல்லை.  ஆனால் இதுவோ! ஆட்டம்னா ஆட்டம் ஒரே ஆட்டம்.  வண்டி தான் ஆடுதுன்னா உள்ளே நாமும் மேலும் கீழும் பக்கவாட்டிலும் குதிக்க வேண்டி இருக்கே! அதோட இல்லாமல் திடீர்னு ஒரு பக்கமாச் சாய்ந்துட்டு ஒரே சக்கரத்தில் வண்டி ஓடுது! ஆங்காங்கே இருந்த சேற்று மணலில்(புதை மணல்?) வண்டிச் சக்கரம் புதைந்து போய்விடுமோனு பயம். மிஞ்சி மிஞ்சிப் போனால் அரைமணிப் பயணம்.  ஆறு மணிப் பயணமாகத் தெரிந்தது.  வழியில் இரண்டு வண்டிகள் மணலில் புதைந்து சக்கரத்தை எடுக்கப் போராடிக் கொண்டிருக்க எங்கள் ஓட்டுநர் எங்க கைலை யாத்திரைக்கு வண்டி ஓட்டியவருக்குத் தம்பி போல! உடனே எங்கள் வண்டியை நிறுத்திட்டு அங்கே போய் உதவிவிட்டே வந்தார். இம்மாதிரி நான்கு, ஐந்து பேருக்கு உதவி செய்தார்.


ரொம்பக் கஷ்டத்தோடு தான் அங்கே போய்ச் சேர்ந்தோம்.  அங்கே தான் போன பதிவில் பார்த்த கோயில்களைப் பார்த்தேன்.  போதாததுக்குக் கடைகள் வேறே.  குடி தண்ணீர் , டீ, காஃபி, ஒரு சில குறிப்பிட்ட நொறுக்ஸ் என விற்பனைக் கடைகள். நசநசவென்று கூட்டம்! :(  டிரைவர் எல்லோரையும் இறங்கிப் போய்ப் பார்த்துவிட்டு அரை மணி நேரத்துக்குள் திரும்பி வரும்படி சொன்னார்.  அதுக்கு மேல் அங்கே பார்க்கவும் எதுவும் இல்லை.  அங்கே எதையும் வாங்கிச் சாப்பிடவும் மனம் இல்லை.  சுகாதாரமான நீராக இருக்குமா என்ற சந்தேகம்! ஒரு கோடியில் புதைந்த தண்டவாளங்கள், பழைய சர்ச், போஸ்ட் ஆஃபீஸ், ரயில்வே ஸ்டேஷனுக்குத் தண்ணீர் நிரப்பும் பெரிய தொட்டி போன்றவை தான் புயலின் மிச்சங்கள்.  ஆகவே நான் பார்க்கப் போகவில்லை.


மேலும் முதல் நாள் இரவு முழுதும் தூங்காததாலும் ஶ்ரீரங்கத்திலிருந்து காரில் வரும்போதும் தூங்காமல் காவல் காத்து வந்ததாலும் எனக்கு அலுப்பு மேலிட்டது.  பொதுவாகவே எனக்குப் பயணங்களில் நல்ல தூக்கம் இருக்காது.  அதுவும் காரில் சென்றால் கட்டாயமாய்த் தூங்க மாட்டேன்.  ஓட்டுநருக்குக் காவல் போல நான் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டே வருவேன்.  ஆகவே பையரையும் மருமகளையும் போய்ப் பார்க்கச் சொல்லிவிட்டு நாங்கள் வண்டியிலேயே தங்கினோம். சில நிமிடங்களில் மருமகளும் அங்கே பார்க்கும்படி எதுவும் இல்லைனு வந்துவிட, நாங்கள் மூவர் மட்டும் வண்டியில் அமர்ந்திருந்தோம்.

பையர் சர்ச் பக்கமாய்ப் போய்ப் படமெல்லாம் எடுத்து வந்தார். அவரை அனுப்பச் சொல்றேன் அந்தப் படங்களை மட்டும்.  மற்றவை நான் எடுத்தவை கீழே.







வில்லைப் போல் வளைந்திருப்பதால் தனுஷ்கோடி என்னும் பெயர் பெற்ற தனுஷ்கோடி கடலின்  மூன்றுவிதக் கோணங்கள்.  இங்கேயும் பித்ருக்களுக்குக் கர்மா செய்வார்கள்.  நாங்கள் முதல்முறை காசியாத்திரை பூர்த்தி அடைய வேண்டி சென்றபோது இங்கே தான் செய்தோம்.  இப்போதும் ஒரு சிலர் செய்து கொண்டிருந்தனர். 


மாதிரிக்கு ஒரு கடை.  இம்மாதிரிக் கடைகள் கடற்கரை ஓரங்களில் சர்வ சகஜமாகக் காணக் கிடைக்கும். மற்ற தின்பண்டக் கடைகளை எல்லாம் படம் எடுக்கவில்லை


நாங்கள் வண்டியில் உட்கார்ந்திருந்தபோதே ஒவ்வொருத்தராக வரத் தொடங்கினார்கள்.  அப்போதே மணி பகல் ஒன்றரைக்கு மேல் ஆகிவிட்டது.  சர்க்கரையை உடம்பில் வைத்திருக்கும் நம்ம ரங்க்ஸுக்குப் பசி.  நல்லவேளையாக பிஸ்கட், பழம் கொண்டு போயிருந்தோம். என்றாலும் அவை எல்லாம் யானைப் பசிக்குச் சோளப் பொரி போல்!  எப்போடா ராமேஸ்வரம் போவோம்!  அறை எடுத்துக் கொண்டு சாப்பிடப் போவோம்னு காத்திருந்தார்.  அநேகமாக அனைவரும் வந்துவிட்டனர்.  அப்போது ஓர் இளம் ஜோடி வண்டி வரை வந்துவிட்டு என்னமோ மறந்ததை எடுக்கப் போகிறவர்கள் போல மீண்டும் கடற்கரைக்குப் போனார்கள்.  சரி, வந்துவிடுவார்கள் என நினைத்தால் மணி இரண்டும் ஆகிவிட்டது.  அவர்கள் வரவே இல்லை.  கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போல் ஆகியும் அவர்கள் வரவில்லை என்றதும் அனைவருக்கும் கொஞ்சம் கிலியுடன் கூடிய கவலையும் கோபமும் வந்தது.  வண்டியின் ஓட்டுநர் அவர்களைத் தேடிக் கொண்டு சென்றார். 

அவர் போயும் அரை மணி நேரம் ஆகவே அனைவரும் தவித்துக் கொண்டிருந்தோம்.  எல்லோருக்கும் பசி.  சிறு குழந்தைகளும் நாலைந்து குழந்தைகள்.  அழத் தொடங்கிவிட்டன.  கடைசியில் ஏதோ புதரில் அமர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் ரசித்துக் கொண்டிருந்தார்களாம். அவர்கள் இருவரையும் ஓட்டுநர் அழைத்து வந்ததும் அனைவரும் அவர்கள் மேல் பாய்ந்தார்கள்.  ஆனால் இருவரும் எவரையும் லக்ஷியம் செய்யவில்லை. வண்டியில் அமர்ந்து விட்டதைத் தொடர்ந்தனர்.  வண்டியும் கிளம்பியது.  வந்த போது இருந்ததை விட இப்போது கொஞ்சம் பரவாயில்லை போல் இருந்தது.  அல்லது எங்களுக்கு ஆட்டம் பழகிவிட்டது.  இருபதே நிமிடங்களில் வந்துவிட்டோம்.  வந்து இறங்கி எங்கள் காரைக் கண்டுபிடித்து ராமேஸ்வரம் நோக்கி விரைந்தோம்.  




 .  





Sunday, January 18, 2015

பயணங்கள் முடிவதில்லை! 4


புதிதாக வந்திருக்கும் ஶ்ரீராமர் கோயில்


தனுஷ்கோடியில் புதிதாகக் கடந்த பத்து வருடங்களில் ஏற்படுத்தி இருக்கும் ஶ்ரீராமர் கோயில்.  நாங்கள் முதல்முறை போனபோது அங்கே ஒன்றும் இல்லை.  ஒரே மௌனம் தான் ஆட்சி செய்து கொண்டிருந்தது.  கடல் கூட அப்போது ஓசையிடப் பயந்தாற்போல் மெல்லவே அலைகளைக் கரைக்குத் தள்ளிக் கொண்டிருந்தது.  ஏற்கெனவே பயங்கரமான அலைகள் வீசி தனுஷ்கோடிக்குள் நுழைந்ததில் சமுத்திர ராஜன் இப்போது அங்கே ஒன்றும் இல்லை என்று தெரிந்து கொண்டதால் கொஞ்சம் கொஞ்சமாய் உள்வாங்க ஆரம்பித்திருந்தான்.

என்றாலும் 1964 புயலுக்குப் பின்னர் எப்போது கடல் உள் வாங்கும், எப்போது உள்ளே நுழையும் எனச் சொல்ல முடியாமல் இருந்தது. அங்கே போகவே சில காலங்கள் தடை இருந்தது.  புயலுக்குப் பின்னர் வாழத் தகுதியற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டும் தைரியமாக ஒரு சில மீனவக் குடும்பங்கள் மட்டும் அங்கே தங்கி இருந்தன.  அது வரையிலும் "குட்டி சிங்கப்பூர்" என அழைக்கப்பட்ட இடம் இன்று வெறுமையாக இருந்தது.  ஊரே மூழ்கி விட்டது.  99 ஆம் வருடம் நாங்கள் போனபோது கூடக் காலையிலேயே சென்று விட்டுப் பகல் 12 மணிக்குள் திரும்பி விட வேண்டும் என்று நிபந்தனைகள் எல்லாம் இருந்தன.  அப்போது சென்றது ராணுவ ட்ரக் போன்றதொரு வண்டியில். ஆனால் அது தண்ணீரிலும் ஓடும், மணலிலும் ஓடும், சாலையிலும் ஓடும். பல இடங்களில் நீரில் செல்ல வேண்டி இருந்தது. ஏறுவதும் இறங்குவதும் கஷ்டம் வேறே.  நாங்கள் ஒரு பதினைந்து பேர் மட்டும் புரோகிதர்கள் இருவரோடு, புரோகிதரே ஏற்பாடு செய்த வண்டியில் பயணம் செய்தோம். ஆனால் பதினாறு வருடங்களில் எல்லாம் மாறி விட்டது.


ராமர் இருந்தால் அனுமன் இல்லாமலா? ஜெய் பஜ்ரங்பலி!



அனுமன் சிவாம்சம் ஆச்சே!  சிவனும் இருக்க வேண்டாமா?



  மிதக்கும் கற்களைப் பார்வைக்காக வைத்திருக்கின்றனர்!


இப்போது எங்கே பார்த்தாலும் கடைகள், கடைகள்!  நாங்கள் ராமேஸ்வரத்துக்குள் நுழைந்து தனுஷ்கோடிக்குச் செல்ல வேண்டி பயணிகளை அழைத்துச் செல்லும் இடம் வந்தால் அங்கே அடுத்தடுத்து மாக்சி கேப் எனப்படும் சிற்றுந்துகள்.  வரிசையாகச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற வண்ணமும், பார்த்தவர்களைத் திரும்பக் கொண்டு வந்து விட்ட வண்ணமும் இருந்தன.  இப்போது இது அங்கிருக்கும் உள்ளூர்க்காரர்களுக்கு நல்லதொரு வியாபாரமாக ஆகி இருக்கிறது.  இதன் மூலம் ஒரு நாளுக்கு ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கலாம். கூட்டம் வேறே தாங்க வில்லை.  99 ஆம் வருடம் போனபோது நாங்கள் பதினைந்து பேரைத் தவிர வேறே அங்கே ஈ, காக்காய் இல்லை.

ஆனால் இப்போதோ  போகவே இவ்வளவு கூட்டம்!  எதிர்பார்க்கவே இல்லை! நாங்க காரில் வந்து இறங்கியதும் எங்க வண்டி ஓட்டுநர் இங்கேருந்து அந்த வண்டியில் தான் போகணும்னு சொல்லி எங்களை அனுப்பி வைச்சார்.  அப்போது தான் திரும்பி வந்த ஒரு வண்டியில் ஏறப் போனோம்.  ஆனால் அந்த ஓட்டுநர் தடுத்து நிறுத்தி நாங்க நாலு பேர் மட்டும்னா ஒருத்தருக்கு ஐநூறு ரூபாய் ஆகும் என்றும் மத்தவங்க வரும் வரை காத்திருக்குமாறும் சொன்னார்.  அப்படியே இன்னும் பத்துப் பேர் வந்தனர்.  இப்போது மொத்தப் பணம் பங்கு பிரிக்கப்பட்டு ஒருவருக்கு நூற்றைம்பது ரூபாய் கேட்டார்.  கொஞ்ச நேரம் பேரம் பேசிப் பார்த்தோம்.  நூற்றைம்பதுக்குக் குறைய மாட்டேன்னு சொல்லிட்டார். சரினு ஏறிக் கொண்டோம்.  வண்டி கிளம்பியது. 

Friday, January 16, 2015

அண்ணன்களும், தம்பிகளும் வந்து சீ(று)ருங்கப்பா!



படத்துக்கு நன்றி கூகிளார்.

அண்ணன்மார்களே, தம்பிமார்களே,  எல்லோருக்காகவும் காக்காய்ப்பிடி, கனுப்பிடி வைச்சாச்சு.  வஸ்த்ரகலா கொடுப்பவங்க வஸ்த்ரகலாவும், பரம்பரா கொடுக்கப் போறவங்க பரம்பராவும், சாமுத்ரிகா கொடுக்கப் போறவங்க சாமுத்ரிகாவும், இல்லை, பிரைடல் செவன் தான் கொடுப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிறவங்க அதுவும், ரெயின்போ கலர்ஸ்னு சொன்னால் அதுவும் எதுவானாலும் ஓகேப்பா.  நேத்திக்கு நிறையப் பேர் வந்து பொங்கல் சாப்பிட்டிருப்பதும் தெரிஞ்சது.  இப்படி எல்லாம் மொக்கைப் பதிவு போட்டால் தான் மக்கள் வருவாங்க போல!  :P






  



கனுப்பிடி வைக்க மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையில் கூறும் வாழ்த்துச் சொல்லைப் பற்றி ஒரு சிலருக்குச் சரியான புரிதல் இல்லை எனத் தெரிய வந்தது. அதற்காகவே இந்தப் பதிவு. சின்ன வயசில் கனுவுக்கு மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையிலே என் பாட்டி, பெரியம்மாக்கள் எல்லாம், மஞ்சளைக் கீறிக்கொண்டே, 

சின்ன ஆம்படையானுக்கு வாக்கப் பட்டுப்
பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துச்
சீரோடும், சிறப்போடும், காக்காய்க் கூட்டம் போல்
ஒற்றுமையாச் சேர்ந்து வாழணும்னு " 

சொல்லித் தான் மஞ்சளைக் கீறி விடுவாங்க. சின்ன வயசில் அர்த்தம் புரியாமல் இருக்கையில் இதைக் கேட்டுச் சிரித்த நாங்கள் அர்த்தம் புரிய ஆரம்பிக்கையில் குழப்பமும், கோபமுமே வந்தது. ஒரு சமயம் என் அப்பாவின் சித்தி அடிக்கடி எங்க வீட்டில் வந்து தங்குவார். ஒரு கனுவின்போது அவர் மஞ்சள் கீறியபோது இப்படிச் சொல்லவே, நான் துடுக்குத் தனமாய், " ஏன் சித்தி, சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டுப் பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துனு சொல்றயே? இப்படிச் சொல்லாதே. ரொம்பக் கஷ்டமாவும் வெட்கமாவும் இருக்கு. என் சிநேகிதிகள் எல்லாரும் கேலி செய்யறாங்க." என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம்:"போடி அசடு! அந்தக் காலங்களில் பெண்ணிற்கு ஏதேனும் ஆபத்து வந்துடும்; நம்ம பழக்கத்தை விட்டுட்டு மாறிடுவானு சில வீடுகளில் படிக்க வைக்க யோசிப்பாங்க; சில வீடுகளில் அதனால் அவசரம் அவ்சரமாக் கிடைச்ச மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்துடுவாங்க. பெண்ணிற்கு ஐந்து, ஆறு வயசுக்கெல்லாம் கல்யாணம் ஆகும். பிள்ளைக்கு 20, 22 கூட இருக்கும். வெகு சிலருக்கே அவங்க வயசுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைப்பான். அப்போதெல்லாம் பெண்களை வயசு வித்தியாசம் பார்க்காமல் குலம்,கோத்திரம் மட்டும் பார்த்து இரண்டாவது, மூன்றாவதுனு கொடுப்பதும் உண்டு. அதிர்ஷ்டம் இருந்தால் அந்தப் பெண்களின் வாழ்க்கை நன்றாக அமையும்; இல்லை எனில் பால்யவிதவையாகி விடுவாள். அதனால் தான் அவள் வயசுக்கேற்ற கணவனாகச் சிறு பிள்ளையாகக் கிடைக்க வேண்டும், என்றும் அவனோடு நன்றாக வாழவேண்டும் என்பதற்கு வாழ்த்துவதே,

"சின்னாம்படையானுக்கு வாழ்க்கைப் பட்டு" என்ற சொற்றொடர் என்றும், அவ்வளவு சின்ன வயசில் கல்யாணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது தகுந்த பிராயம் வரவேண்டும் இருவருக்குமே என்பதால், அந்தப் பையனுக்கும் தக்க பருவம் இருக்க வேண்டும் என்றே அவனைப் பெரியாம்படையான் என்று சொல்வது. அவன் வளர்ந்து உரிய பருவம் வந்ததும் இருவருக்கும் குழந்தை பிறக்கும் தகுதி கிடைக்கும் அல்லவா? அதன் காரணமாகவே சின்ன வயசிலேயே கல்யாணம் செய்து கொண்டாலும் தக்க பருவத்தில் உரிய நேரத்தில் குழந்தை பிறக்கவேண்டியுமே, "பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து" என்று வாழ்த்துவது இது என எடுத்துச் சொன்னார்கள்.

தற்காலங்களுக்குப் பொருந்தாது என்றாலும் பெரியவர்கள் சொன்னதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்து என்பது இல்லை எனப் புரிந்து கொண்டேன். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.

டிஸ்கி: கூடவே கனுவைப் பத்தியும் அதில் மஞ்சள் கீறும்போது சொல்லும் ஒரு வாக்கியம் குறித்தும் ஒரு சின்ன விளக்கம்.  மீள் பதிவு. :)