எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 14, 2015

பயணங்கள் முடிவதில்லை! 2

சென்ற வருடமே ராமேஸ்வரம் போயிருக்க வேண்டியது.  ஆனால் பையருக்கும் மருமகளுக்கும் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் போக முடியவில்லை.  அதுக்கப்புறமாத் தனியாகப் போக முடியவில்லை.  இந்த வருடம் எப்படியும் போயிடலாம்னு முடிவு செய்திருந்தோம்.   பையர் வரும் தேதியை வைத்து முன் கூட்டியே ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதெல்லாம் இயலாத ஒன்று.  ஆகவே வந்ததும் முடிவு செய்து கொள்ளலாம் என்று இருந்தோம்.  அவர்கள் வந்ததும் கிளம்பத் தேதி முடிவு செய்தனர்.

அன்று டிசம்பர் 27 சனிக்கிழமை. சனிக்கிழமை காலை கிளம்பி முதலில் தேவிப் பட்டினம் முடித்துக் கொண்டு பின்னர் ராமேஸ்வரம் போய் அங்கே தனுஷ்கோடியைப் பார்த்துவிட்டுப் பின்னர் மாலை ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் என்று திட்டம்.  ராமேஸ்வரத்தில் தங்கும் இடத்திற்கு புதன்கிழமையிலிருந்து முயன்று பார்த்தும் கிடைக்கவில்லை.  ராமநாதபுரத்திலும் கிடைக்கவில்லை.  ஆகையால் கிளம்பிச் செல்வது என்றும் நேரில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

வார இறுதிநாட்களில் கிளம்புவதற்கு எனக்கு சம்மதம் இல்லை என்றாலும் கூட்டம் இருக்கும் என நான் சொல்வதை அனைவரும் ஏற்கவில்லை.  சமாளிக்கலாம் என்று சொல்லி விட்டார்கள். சனியன்று காலை ஐந்தரைக்குக் கிளம்ப வேண்டும்.  ஐந்து மணிக்கு வண்டி ஓட்டுநருக்குத் தொலைபேசினால் இதோ வரேன் என்று சொன்னார்.  ஆனால் ஐந்தேமுக்காலுக்குத் தான் வந்தார்.  கேட்டால் எங்களால் ஐந்தரைக்குக் கிளம்ப முடியாது என நினைத்தாராம்.  நாங்கதான் ஐந்தரைனு சொன்னால் நாலரைக்கே தயாராகிடுவோம்னு அவருக்குத் தெரியலை.

வழியில் காரைக்குடியில் ஒரு ஓட்டலில் காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டோம்.  தனுஷ்கோடி போகலாமா வேண்டாமா என ஒரு வாத, விவாதம் நடந்து பின்னர் பெரும்பான்மை போக முடிவு செய்ததால் ரங்க்ஸின் தீவிர எதிர்ப்பையும் மீறி தனுஷ்கோடி போக முடிவு செய்யப்பட்டது.  காலை பத்தரை மணிக்கெல்லாம் தேவிப் பட்டினம் வந்து விட்டது.  தேவிப் பட்டினத்தில் நவபாஷாணம் என அழைக்கப்படும் நவகிரஹப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு நேரே சென்றோம்.  அங்குள்ள கோயிலுக்குச் சென்றால் நேரம் ஆகிவிடும் என்பதால் செல்லவில்லை.  நாங்கள் இருவரும் ஏற்கெனவே பார்த்திருக்கோம்.  அங்கே ஒரு பகல் தங்கி இருந்தோம்.

அப்போது அதாவது சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இவ்வளவு கூட்டமோ, ஆர்ப்பாட்டங்களோ இல்லை.  கடலில் ஒன்பது கற்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்.  கடல் அலைகள் சின்னச் சின்னதாக அவ்வப்போது வந்து போகும்.  சுற்றிலும் தடுப்புகள் ஏதும் இல்லை.  நாம் பாட்டுக்குச் சென்று கடலில் இறங்கிக் கொஞ்ச தூரம் போய் நவபாஷாணங்களையும் அருகே சென்று பார்த்துவிட்டுத் திரும்ப வரலாம்.  அப்போது கரையில் இருந்து கொஞ்சம் தூரம் இருந்தது.

அதன் பின்னர் இரண்டாம் முறை பார்த்தபோது சின்னத் தடுப்பு மட்டும் இருந்தது.  கடல் உள் வாங்கி உள் வாங்கி நவ பாஷாணங்கள் கரைக்கு அருகே வந்திருந்தன.  கொஞ்சம் பிரபலம் ஆகத் தொடங்கிய நேரம் அது.  மக்கள் ஆங்காங்கே தங்கள் கிரஹ தோஷம் நீங்க வேண்டி விட்டுச் சென்ற துணிகள் கடலில் மிதந்து கொண்டிருந்தன.  இருந்தாலும் நவகிரஹக் கற்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்தைச் சுற்றி வர முடிந்தது.  அதன் பின்னர் வருடங்கள் ஓடிப் பதினைந்து வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டன.

இப்போது அங்கே கட்டிடமே வந்திருக்கிறது.  ஒரு சில நவகிரஹக் கற்களே காண முடிகின்றன.  கடல் நீரைத் தேக்கி வைத்துச் சுற்றிலும் பெரிய அளவில் தடுப்புக் கட்டி இருப்பதால்  சாக்கடை நீர் போல் காட்சி அளிப்பதோடு உள்ளே செல்வதும் கொஞ்சம் இல்லை;  ரொம்பவே கடினமாக இருக்கிறது.  அப்படியும் சிலர் உள்ளே சென்றனர். அங்கே நவகிரஹ தோஷம் போக்குவதாகக் கூறிக் கொண்டு ஒரு புரோகிதர் வேறு காணப்பட்டார்.  முதல் இருமுறைகளில் எவரும் இருந்ததில்லை.  இப்போது எல்லாமும் வியாபாரம் ஆகிவிட்டதே! ஆகவே சூடு பிடித்திருந்தது. :(

16 comments:

  1. உள் வாங்குவது ஒரு நாள் பாய்வதற்கு...!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், ஆமாம், டிடி, அப்படித் தான் இருக்கும்.

      Delete
  2. எங்கும், எதிலும் வியாபாரம்.......

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதிலும் பக்தி என்னும் வியாபாரம் ரொம்பவே சூடு பிடித்திருக்கிறது வெங்கட்.

      Delete
  3. தேவிப்பட்டினத்தில் கடலுக்குச் சென்று தர்ப்பைகள் எடுத்துவரச் சொல்லவில்லையா. நாங்களும் பிரயாணம் செய்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் எதுவும் முன்னாலும் சொல்லலை. இப்போவும் சொல்லலை ஐயா.

      Delete
  4. நான் ராமேஸ்வரமே பார்த்ததில்லை!!

    ஹிஹிஹி.... தனுஷ்கோடியும்!


    ReplyDelete
    Replies
    1. நான் மூன்றாம் முறையோ, நான்காம் முறையோ போகிறேன். ஒவ்வொரு முறையும் நேரப் பற்றாக்குறையினால் கந்தமாதன பர்வதமும், ராமர் பாதமும் பார்க்க முடிவதில்லை. இம்முறையும்! :(

      Delete
  5. பத்து வருடம் முன்பு சென்றிருந்தேன்! அப்போது பரவாயில்லை! இப்போது இப்படியாகிவிட்டதா? வருத்தம்தான்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ரொம்ப மோசமா இருக்கு சுரேஷ். அடுத்த பதிவில் படங்கள் வரும், பாருங்கள்.

      Delete
  6. மூணு வருஷம் முன்னாடி போனேன்!.. தடுப்பிலிருந்து, நவபாஷாணங்கள் இருக்குமிடத்திற்கு 'தொபுக்கடீர்' என்று (என் உயரத்திற்கு) குதிக்க வேண்டியிருந்தது!..முன் யோசனை இல்லாமல் குதித்து வைத்தேன்!.. முழங்காலுக்கும் சற்று மேலாக இருந்த நீரில் சுற்றி வந்தோம்... பரிகாரம் செய்து வைப்பதாக சொல்லிக் கொண்டு, ஒருவர் மந்திரங்கள் சொன்னார். நிறைய தப்பு.. இருந்தாலும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.. முடிந்ததும் திரும்ப மேலே வரும் போது, 'உன்பாடு என்பாடு' என்றாகி விட்டது!. ஏறவே முடியலை.. மேலிருந்து என் கணவரும் மாமியாரும், என்னைப் பிடித்துத் தூக்கி விடுவதற்குள் ஒருவழி ஆனார்கள்!.. இப்ப இன்னும் மாறியிருக்கிறது போல!..

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளையா நாங்க குதிக்கல்லாம் இல்லை. மேலேயே சுற்றி வந்து கடல் பக்கமாக் கீழிறங்கிக் கால் அலம்பித் தண்ணீர் தெளித்துக் கொண்டோம். சாக்கடையில் இறங்கவில்லை. :(

      Delete
  7. பல வருடங்களுக்கு முன்பு போனோம். இறங்கி சுற்றி வந்தோம். அப்போது எல்லாம் இப்படி துணிகளை போடும் வழக்கம் இல்லை. குதிரை வண்டியில் போய் கந்தமாதன பர்வதமும், ராமர் பாதமும் பார்த்து வந்தோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. இப்போது ஒரே துணிகள் மயம். இன்னமும் கந்தமாதன பர்வதம், ராமர் பாதம் பார்க்க முடியலை! :(

      Delete
  8. நாங்கள் இங்கெல்லாம் போகவில்லை, நல்லகாலம். சேதுக்கரையில் ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிட்டோம். இனிமேல் போகவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரஞ்சனி, சேதுவுக்கும் போனோம். ஆமாம், அனைவருக்கும் தெரியணும் என்பதற்காகவே சில விஷயங்களை விவரிக்க நேரிடுகிறது. :) புரிதலுக்கு நன்றி.

      Delete