நேத்திக்கு சாயந்திரம்மா தொலைக்காட்சியை அரை மனசாப் பார்த்துட்டு இருந்தப்போ, சன் தொலைக்காட்சியில் அரண்மனைப் படம் போடறாங்கனு தெரிஞ்சது. ஆஹா, பேய், பிசாசுப் படம்னு சொன்னாங்களேனு இதைப் பார்த்துடுவோம்னு ரங்க்ஸ் கிட்டே சொன்னேன். அவரும் இந்தப் படம் இன்னமும் பார்க்கலைங்கறதாலே சரினு ஒத்துண்டார். ஆரம்பத்திலே சாமியார் யாரோ வந்து பேசறதைச் சரியாப் பார்க்க முடியலை. ஆனால் அதுக்கப்புறமாத் தான் பேரே போட்டாங்க. சாமியார் மஹாசிவராத்திரியைப் பத்தியும் அன்னிக்கு வர கிரஹணம் பத்தியும் அந்த கிரஹணத்தின் பாதிப்புக்கள் குறித்தும் பேசினார்னு நினைக்கிறேன்.
கதையின் மூலக்கருவே இதான். மஹாசிவராத்திரியன்று வர கிரஹணத்தின் போது பேய், பிசாசு, ஆவிகள் உம்மாச்சியை விட சக்தி வாய்ந்ததாக இருக்குமாம். ஆகவே துர் தேவதைகளிடமிருந்து மக்களைக் காப்பாத்த நினைக்கும் சாமியார், அந்த ஊரின் வழியாகப் போகையில் மீண்டும் தான் இங்கே வர இருக்கும்னு சொல்லுகிறார். அப்போதே கொஞ்சம் ஆர்வம் ஏற்படுகிறது. என்றாலும் படம் அப்படி ஒண்ணும் சொல்லிக்கிறாப்போல் இல்லை. ஆனால் முழுப்படமும் நான் பார்த்தேன் என்பது தான் இங்கே முக்கியமான சஸ்பென்ஸ். எப்போவும் பாதிப்படம் பார்ப்பேன். அல்லது பாதியிலிருந்து பார்ப்பேன். அல்லது முடிவு இதுதான் என ஊகம் செய்து கொண்டு எழுந்து போயிடுவேன். :)
பேயாக நடிக்கும் நடிகை (யாருங்க அது?) நல்லாவே மிரட்ட நினைச்சிருக்கார். இயக்குநர் சுந்தர் சி. குஷ்பூவின் கணவர் என்பதால் சந்தானம் அவரிடமே போய்க் குஷ்பூ இட்லி வேணுமானு கேட்கிறதெல்லாம் ஒரு காமெடினு நினைச்சுச் சிரிக்கச் சொல்றாங்க. எனக்கு எரிச்சலே வந்தது. சந்தானம் காமெடி அப்படி ஒண்ணும் ரசிக்கும்படியா இல்லைனாலும் பேய் கிட்டே அடி வாங்கறச்சே கொஞ்சம் பரவாயில்லை ரகம். கதை அதே பழிவாங்கும் கதை தான். எல்லாத்திலும் ஹீரோவாக நடிக்கும் நடிகர் ஆன்டி ஹீரோவாக வந்து பழிவாங்குவார் என்றால் இதில் ஒரு பெண் தன்னை உயிரோடு புதைத்ததற்கு, தன்னைக் கொல்ல முயற்சித்தவர்களை ஒவ்வொருத்தராகப் பழி வாங்குகிறாள். இங்கே பேயாக நடிக்கும் பெண் தான் கதாநாயகி என நினைக்கிறேன். அவர் கணவனாக நடிப்பவரும் எனக்குத் தெரிஞ்ச நடிகர்களில் யாரும் இல்லை. புதுசா இருக்கு. பேய்ப் பெண்ணின் அண்ணனாக சுந்தர் சி. வருகிறார்.
அதுக்காகத் தான் யாரைக் காதலிச்சோமோ அவன் மனைவியோட உடம்பிலேயே பேய் புகுந்து கொள்கிறது. இங்கே தான் கொஞ்சம் நெருடல். இந்தப் படத்தில் சுந்தர் சி. மனோபாலா, சித்ரா லக்ஷ்மணன், சந்தானம், மேஜர் பிள்ளை கௌதம் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் யார் என்று தெரியவில்லை. சந்தானபாரதியும் அவ்வப்போது வந்து தலை காட்டுகிறார். அப்போது நடக்கும் கல்யாண நிச்சயதார்த்தம் யாரோடதுனு ஒண்ணும் புரியலை! அந்த நிச்சயதார்த்தத்தில் நடனம் ஆடும்போது திடீர்னு பேயாக நடிக்கும் கதாநாயகியின் கணவன் வெளியூர் போயிருந்தவன் அங்கே வருகிறான். எப்படி?
கதாநாயகன் பேயின் கணவன் என்றால் அவனும், அவன் மனைவியும் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கவே இல்லை என்பது அந்தப் பெண்ணாலேயே சொல்லப்படுகிறது. ஆனால் அவள் கர்ப்பம் என்றும் அதைச் சோதனை செய்ய மருத்துவப் பரிசோதனை செய்திருப்பதாயும் சொல்கிறார்கள். இந்த இடத்தில் எனக்குச் சரியாகப் புரியவில்லை; அல்லது இதைக் குறித்து விளக்கம் வந்த காட்சியை நான் பார்க்கவில்லை. சமையலறையில் இருந்தப்போ வந்திருக்குமோ என்னமோ! ஆனாலும் பொதுவான கருத்து கதையைக் கோர்வையாகத் தொகுத்துக் கொண்டு செல்லவில்லை. பல இடங்களில் விறுவிறுனு நாம் தான் சொல்லிக்க வேண்டி இருக்கு! படத்தில் ஒரே சொதப்பல்!
கிரஹணத்தின் போது கணவன், மனைவி ஒன்று சேர்ந்தால் பின்னர் அவர்களை எவராலும் பிரிக்க முடியாது எனத் தெரிந்திருந்து வைத்திருக்கும் பேய்ப் பெண் தன் காதலனின் மனைவி உடலில் இருந்து தான் வெளியேறாமல் இருக்கும் வழிகளை எல்லாம் முயல தன் தங்கையைக் காப்பாற்றி ஆகவேண்டும் என்பதால் அதை எதிர்த்து சுந்தர் சி. செய்யும் மாற்று ஏற்பாடுகள் எல்லாமும் உடை பட்டுப் போகின்றன. கடைசியில் கதாநாயகியாக நடிக்கும் பெண் கதைப்படி கர்ப்பம் என்று தெரிந்ததும் அவள் கணவனின் முன்னாள் காதலிப் பேய் அவள் உடம்பில் இருந்து வெளியேறுகிறதாம்.
எல்லாமே கிராஃபிக்ஸ் என்று புரிவதாலோ என்னமோ பின்னணி இசையினால் கூடத் திகில் என்பதே ஏற்படவில்லை. திகில் படம் என்றால் திக், திக் என்று இருக்க வேண்டாமோ! ம்ஹூம், குழந்தைகள் பார்க்கும் விட்டலாச்சார்யா படம் போல இருந்தது. எப்படியோ பொறுமையாக நானும் ஒரு படத்தை முழுசாப் பார்த்துட்டேன் என்பதே திகிலூட்டும் அம்சம் இதில்! :P :P :P
எல்லாஞ்சரி //மஹாசிவராத்திரியன்று வர கிரஹணத்தின் போது// அப்படி வர முடியுமா? :P:P:P:P:P
ReplyDeleteவா.தி. திரைப்படக் கதையில் எல்லாம் லாஜிக் பார்க்கலாமா? அது எல்லாம் இங்கே எங்களுக்குள்ளே ஒரு வாத, விவாதம் நடத்தினோம். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா என்னதான் இருக்குனு பார்த்த படம். தமிழில் புதுப்படங்களே பார்க்கும்படியாக இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று! :( சிவராத்திரி அமாவாசையன்னிக்கு வந்த கிரஹணம்னு நாமே மனசைச் சமாதானம் செய்துக்கணும். ஆனால் கதைப்படி சிவராத்திரியன்று தான் கிளைமாக்ஸே! :)))))
Deleteபேயாக வருவது ஹன்ஸிகா. இன்னும் சில சொதப்பல்களும் நான் பார்த்தபோது கண்ணில் பட்டன. படம் பயங்கர போர்.
ReplyDeleteஇப்போ 'டார்லிங்' னு ஒரு பேய்ப்படமாம்... பென் ட்ரைவில் வந்திருக்கு. பயம் வருதான்னு பார்க்கணும்.
:))))
வாங்க ஶ்ரீராம், படம் முழுக்கவே சொதப்பல் தான். நெஞ்சம் மறப்பதில்லை படத்தைப் பல வருடங்கள் கழித்து முதல்முறையாகப் பார்க்கையிலும், அந்த நாள் படத்தையும் முதல்முறையாகத் தொலைக்காட்சியில் பார்த்தபோதும், நடு இரவில் படத்தை ஒரு முறை திரைப்பட அரங்கில் பார்த்த போதும் ஏற்பட்ட திகில் இன்னமும் மனதில் இருக்கின்றது. இதெல்லாம் ஜுஜுபி! :)
Deleteவேஸ்ட்...
ReplyDeleteஹிஹிஹி, டிடி, பார்த்தால் தானே தெரியுது! :)
Deleteஉங்களுக்கு எவ்வளவு பொறுமை! :) நான் படம் இருக்கிறது என்று தெரிந்தும் பார்க்கவில்லை!
ReplyDeleteஇப்படி எப்போவானும் பார்ப்பேன். :) அநேகமா மத்தியானம் வசந்த் தொலைக்காட்சியில் பழைய படங்கள் நல்லதாப் போட்டால் அதைப் பார்க்கும் வழக்கம் உண்டு. ஹிந்தியில் நல்ல படம் ஜி தொலைக்காட்சியிலோ, சோனியிலோ வந்தால் பார்ப்பேன். மத்தியானம் பார்த்தால் நாலு மணிக்குள் முடியறதானு தெரிஞ்சு வைச்சுப்பேன். அதுக்கப்புறமான்னா உட்கார நேரம் இருக்காது. :)
Deleteஅரண்மனைன்னு பேரு. அதுல பேய் உலாவுகிறதா. பொறுமையாகப் பார்த்த உங்களுக்குக் கோடி நமஸ்காரம்.
ReplyDeleteவாங்க வல்லி, பேயானாலும் அது உலாவறதுக்கு இடம் தாராளமா வேண்டாமா? ஆனாலும் இந்தப் பேய் அரண்மனை ஜன்னல்கள், கண்ணாடிகளிலே ஜாஸ்தி குடி இருந்தது. சில சமயம் சுவத்திலேருந்து கையை மட்டும் நீட்டி தாயம் விளையாடும். :)
Deleteசிறு கதைகளுக்கு விமரிசனம் எழுதி இப்போது அது கை வந்தகலையாகிவிட்டது. இப்போதெல்லாம் எனக்கும் திரைப்படம் பார்க்கும் பொறுமை இல்லை. சன் தொலைக்காட்சியில் வரும் ஓரிரு தொடர்கள் நனறாக இருக்கிறது உ-ம் தாமரை , சந்திரலேகா. இது என் கணிப்பு அவ்வளவே.
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார். இதற்கு முன்னாலும் நான் ஏற்கெனவே பலமுறை திரைப்பட விமரிசனம் எழுதியுள்ளேன். :)))) திரைப்படம் பார்க்கும்படி இருந்தால் பார்க்கலாம். நீங்க சொல்லும் தொடர்கள் ஏதும் எனக்குத் தெரியாது. மாலை வரும் ஒன்றிரண்டு தொடர்கள் தான்! :)))))
Deleteஆயிரம் ஜென்மங்கள் படத்தை அப்படியே உல்டா பண்ணிருக்கறத ஏன் ஆருமே கண்டுக்கல!:))!.. அங்கிட்டு, லதா, விஜயகுமார் ஜோடி, இங்க ஆன்ட்ரியா, வினய் ஜோடி, அங்கிட்டு பத்மப்ரியா விஜயகுமாரோட முன்னாள் காதலி கம் பேய், இங்கிட்டு அது ஹன்ஸிகா.. அங்கிட்டு லதாவோட அண்ணனா ரஜினிகாந்த்.. இங்கிட்டு சுந்தர் சி.. கொஞ்சம் கதைய தட்டிக் கொட்டீட்டு இருக்காங்க அம்புட்டுதேன்.. அங்கியும் அமாவாசை, இங்கியும் ஆவ்வ்வ்வ்! (கொட் ஆவி(?!) வருதேய்).
ReplyDeleteவாங்க பார்வதி, நீங்க சொன்னாச் சரியாத் தான் இருக்கும். இந்தப் படத்தைப் பத்தி என் தங்கச்சியும் முகநூலில் சொல்லி இருக்கா! இப்படி ஒரு படம் வந்ததுனே நீங்க ரெண்டு பேரும் சொல்லித் தான் தெரிஞ்சுகிட்டேன். :)))))
Delete