எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 11, 2015

பயணங்கள் முடிவதில்லை! 1



வங்கக் கடல்.  ராமேஸ்வரம்.  அங்கே போனப்போ எடுத்த சில படங்களில் ஒன்று.

ஏதோ கல்யாணம் முடிஞ்சாப்போல் ஒரு நினைப்பு.  வீட்டில் வெறுமை சுட்டெரிக்கிறது.  பையர் வேலை செய்யும்போது அமரும் இடத்தில் இன்னமும் அவர் அமர்ந்திருக்கிறாப்போல் ஓர் தோற்றம்.  அங்குமிங்கும் போய்க் கொண்டும், வந்து கொண்டும் எப்போதும் ஏதாவது கேட்டுக் கொண்டும் இருந்த மருமகளின் குரல் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பொதுவாகவே யாரேனும் வந்துட்டுப் போனால் கொஞ்ச நேரம் மனம் பரிதவிக்கும்.

அப்பு வந்துட்டுப் போனப்போவும் இப்படித் தான் தவிப்பாக இருந்தது.  வீடு முழுவதும் தலையணையைக் கப்பலாக நினைத்துக் கொண்டு அது சுற்றி வந்ததும், என்னையும் ஏற்றிச் செல்கிறேன் என்று கூறியதும் தலையணையைப் பார்க்கும்போதெல்லாம் நினைவில் வரும்.  இப்போதும் இந்த நினைவுகள் மாறக் கொஞ்ச நாட்கள் ஆகும்.

தேவிப் பட்டினம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி,  திருப்புல்லாணி, சேதுக்கரை சென்று பின்னர் மதுரை வந்தோம்.  மதுரையில் நான்கு வாசல்களிலும் தேங்கி இருந்த கூட்டத்தைப் பார்த்தால் மீனாக்ஷி தரிசனம் கிட்டாது போல் இருந்தது.  அதுவும் பாதுகாப்பு சோதனைகள் மிக அதிகம்.  பாதுகாப்பு சோதனைக்காகவே மக்கள் கூட்டம் மதியம் இரண்டு மணியில் இருந்தே நிற்கத் தொடங்கி விட்டனர். நான்கு மணிக்குத் தான் சோதனை ஆரம்பம்.  அதுவரை நிற்கமுடியாது என்பதால் நாங்கள் இருவரும் வண்டிக்குத் திரும்பி விட்டோம்.

வடக்கு ஆவணி மூலவீதியில் பழைய மார்க்கெட் இருந்த இடம் தான் இப்போது வண்டிகள் நிறுத்தும் இடம்.  ஆகவே வடக்குச் சித்திரை வீதியில் இருந்து நடந்தே மேலச் சித்திரை வீதி போனோம்.  வடக்குச் சித்திரை வீதி, மேலச் சித்திரை வீதி முனையில் இருந்த கோபு ஐயங்கார் கடையில் பஜ்ஜி, வெள்ளை அப்பம், காஃபி சாப்பிட்டோம்.  பையருக்கும், மருமகளுக்கும் பார்சல் வாங்கிக் கொண்டோம். அப்படியே மேல கோபுர வாசலுக்குப் போய் நாகப்பட்டினம் அல்வா விற்கும் அம்பி கடையில் ஜிலேபி கேட்டால் தாமதம் ஆகும் என்றார்கள்.  அல்வா வாங்கிக் கொண்டோம்.  பழைய சுவை இல்லை தான். பின்னர் காரில் வந்து உட்கார்ந்தோம்.  ஐந்தரைக்குள்ளாகப் பையரும், மருமகளும் தரிசனம் முடிந்து வந்துவிட்டார்கள்.  அதன் பின்னர் நேரே வீடு வந்தாச்சு.

இது முதலில் சென்ற இரு நாட்கள் பயணம்.  அதன் பின்னர் புது வருஷத்திற்கு முதல் நாள் பயணம் கிளம்பி புது வருஷத்தன்று மாலை பயணம் முடித்துத் திரும்பினோம்.  அது குறித்துப் பின்னர்!

13 comments:

  1. பயணம் இனிமையானது.... ஆதலினால் பயணம் செய்வீர்!

    பயணம் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், எழுதணும்னு நினைக்கிறேன். பார்க்கலாம். :)

      Delete
  2. வணக்கம்
    பயணம் அருமையாக உள்ளது... அழகிய படம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நினைவுகள் மாறாது... ஏங்க வைக்கும்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், டிடி. சரியாகச் சொன்னீர்கள்.

      Delete
  4. பயணங்கள் முடிவதில்லை போல! சுவாரஸ்யமான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ், நன்றி.

      Delete
  5. பயணம் இனிமையாக இருக்கும் குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது.

    நினைவுகள் மாறக் கொஞ்ச நாட்கள் ஆகும்.//

    வந்து வந்து போகும் கடல் அலை போல் நினைவுகள் மனதில் மோதி கொண்டு தான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கோமதி. கொஞ்ச நாட்கள் ஆகத் தான் ஆகும்.

      Delete
  6. நான் சென்ற மாதம் மதுரை சென்றிருந்தபோது மீனாக்ஷி அம்மன் கோவில் சென்று நொந்து போனேன். அன்று பிரதோஷம் வேறு. மீனாட்சியைத் தரிசிக்க மட்டும் இரண்டு மணி நேரம் ஆனது. சொக்கநாதரை அவர் பிரகாரத்துக்குச் சென்று வெளியிலிருந்தே "ஹாய்" சொல்லி விட்டு வந்து விட்டோம். திருப்பதி செல்லக் கூட இந்தக் காரணங்களாலேயே எனக்கு அலுப்பாக இருக்கும்.

    யாராவது வந்து விட்டு ஊர் சென்று விட்டால் வீட்டில் சூழும் வெறுமையின் அலுப்பை நாங்களும் உணர்ந்திருக்கிறோம். என் மாமியார் அதை 'வெளியாக இருக்கு' என்பார்!

    ஆ! கோபு ஐயங்க்கார்க் கடை...நான் மறந்தே போனேனே...!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், புத்தகக் கண்காட்சியில் மும்முரம் போல! ஆளையே பார்க்க முடியலையே! :))) திருப்பதிக்கு நாங்களும் போய் எட்டு வருடங்கள் ஆகின்றன. மீனாக்ஷியை ஒரு நாள் காலை கிளம்பிப் போய்ப் பார்த்து என்னம்மா கண்ணு, இப்படிப் பண்ணறேனு கேட்டுட்டு வந்துடலாம். ஒண்ணும் பிரச்னை இல்லை. :))))

      Delete
    2. அடுத்த முறை மதுரை போனால் கோபு ஐயங்கார் கடைக்குக் கட்டாயமாய்ப் போங்க. காலை போனால் இட்லி, தோசை, பொங்கல், வடை கிடைக்கும். மதியம் இரண்டு மணியிலிருந்து பஜ்ஜி, வெள்ளையப்பம், தவலை வடை, போண்டா போன்றவை. ஒவ்வொரு கிழமைக்கும் அட்டவணை மாறும். நாங்க போன அன்னிக்கு பஜ்ஜி, வெள்ளை அப்பம். காரச் சட்னி, கோபு ஐயங்கார் கடை ஸ்பெஷல்! :) பழைய ருசி இல்லை தான். :)

      Delete