எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 28, 2017

நெ.த.வுக்குப் போட்டி!

முதல்லே "திங்க"ற கிழமைக்கு ஶ்ரீராமுக்கு அனுப்பறதாத் தான் இருந்தேன். அதான் முகநூலில் கூடப் பகிரவில்லை. அப்புறம் யோசிச்சா! நான் போட்டால் அங்கே போணி ஆவறதில்லை! இங்கே கொஞ்சமானும் ஆகும்! அதோடு நெ.த. சும்மா ஜுஜுபி இட்லி மி.பொடி போட்டிருக்கார்! அதோட போட்டி போடணுமானு யோசனை தான்! ஆனாலும் பரவாயில்லைனு போடறேன்.

தினம் தினம் சமையல் செய்வது வர வரக் கொஞ்சம் இல்லை நிறையவே அலுப்புத் தருகிறது! குழந்தைங்க இருந்தப்போ அவங்க விருப்பத்திற்கேற்பச் சமைப்பேன். இப்போ ரங்க்ஸ் திரும்பிப் பார்த்தால் முருங்கைக்காய்க் குழம்பு, அரைக்கீரை, சிறுகீரை, இல்லைனா முளைக்கீரைனு சொல்லிடறார். பார்த்தேன். இன்னிக்குக் கொஞ்சம் வித்தியாசமாச் சமைக்கலாம்னு யோசனை. அதற்கேற்றாற்போல் ரங்க்ஸும் இன்னிக்கு காய்கறிச் சந்தையிலிருந்து பிரண்டை வாங்கி வந்திருந்தார். பிரண்டைத் துவையல், கண்டந்திப்பிலி ரசம், டாங்கர் பச்சடி, முட்டைக்கோஸ் கறி என மெனு தீர்மானிக்கப்பட்டு ஏகமனதாக ஒப்புதலையும் பெற்றது!


பிரண்டையை நன்கு அலம்பிக் கணுக்களை நீக்கிவிட்டுத்துண்டங்களாக நறுக்கி வைத்திருக்கிறேன். சாறு கையில் படாமல் நறுக்கணும்! நறுக்குபவர்களின் சாமர்த்தியம்! :)
 மிளகாய் வற்றல், பெருங்காயம் எண்ணெயில் வறுத்துக்கொண்டு அதிலேயே புளியையும் சேர்த்து வைத்திருக்கேன். பக்கத்தில் சின்னத் தட்டில் தாளிதம் கடுகு, உளுத்தம்பருப்பு. துவையல் அரைச்சு முடிக்கையில் தாளிதத்தைச் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்ற வேண்டும்.

நறுக்கிய பிரண்டையை மி.வத்தல், கடுகு, உபருப்பு வறுத்த அதே சட்டியில் இன்னும் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு நிறம் மாறிச் சுருங்கும்வரை நன்கு வதக்க வேண்டும். பின்னர் மி.வத்தல், புளி, உப்பு, பெருங்காயம் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வதக்கி ஆற வைத்த பிரண்டையைப் போட்டு அரைக்க வேண்டும். பிரண்டை நன்கு அரைபட்ட பின்னர் தாளிதம் செய்து வைத்திருக்கும் கடுகு, உபருப்புப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுக்க வேண்டும். பிரண்டைத் துவையல் தயார். பிரண்டையை எவ்வளவு நன்றாக வதக்குகிறோமோ அவ்வளவுக்கு நல்லது. இல்லை எனில் தொண்டை எல்லாம் அரிக்க ஆரம்பிக்கும்! :)


அரைத்த துவையல் சாப்பிடத் தயார் நிலையில்!

அடுத்துக் கண்டந்திப்பிலி ரசம்! ஒரு சின்ன எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொண்டு ஈயச் செம்பில் ஊற்றவும். உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம், கருகப்பிலை சேர்த்துக் கொதிக்க விடவும்.

ஒரு வாணலியில் மி.வத்தல் 1 அல்லது 2, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் ஜீரகம், ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு, பெருங்காயம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். அந்த எண்ணெயிலேயே கண்டந்திப்பிலியையும், அரிசித் திப்பிலியையும் போட்டு வறுத்து எடுக்கவும்.

ரசத்துக்கு என  வறுத்து வைத்த சாமான்கள்



கண்டந்திப்பிலி குச்சி போல் இருப்பது! அரிசித் திப்பிலி சின்னதாகக் கறுப்பாக இருப்பது.



ரசம் கொதிக்கையில் எடுத்த படம்


டாங்கர் பச்சடி! வறுத்து அரைத்த உளுத்தமாவு கைவசம் எப்போவுமே இருக்கும். அதில் இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு உப்புச் சேர்த்து ஒரு கிண்ணம் கெட்டி மோரில் கரைக்கவும். ஜீரகம் பச்சையாகவே கையால் கசக்கிச் சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், கருகப்பிலை தாளித்து டாங்கரில் கொட்டவும். கொத்துமல்லியும் பிடித்தால் சேர்க்கலாம்.  துவையல் சாதம், வத்தல் குழம்பு போன்றவற்றுக்கு இது நல்ல துணை!

Sunday, August 27, 2017

"நாசா" புகைப்படங்கள்!



2011 ஆம் ஆண்டில் அம்பேரிக்கா சென்றபோது "நாசா" வுக்குச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தோம். அப்போது எடுக்கப் பட்டப் புகைப்படங்களில் சில!















நிறைய இருக்கு! ஆனால் கொஞ்சம் தான் போட்டிருக்கேன்.  ஶ்ரீராம் ஞாயிற்றுக் கிழமைன்னா படம் காட்டறாரே! அதுனால நாமளும் காட்டுவோமேனு!  சில வருடங்கள் முன்னால் எங்கள் ப்ளாகோட போட்டிக்குனு போட்டுட்டு இருப்பேன்! )

Friday, August 25, 2017

பிள்ளையாரப்பா! நீ தான் துணை!


எல்லார் வீட்டிலேயும் பிள்ளையார் வந்திருப்பார். நம்ம வீட்டிலேயும் வந்தார்! ஆனால் வழக்கமான ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல். நோ கொழுக்கட்டை, நோ வடை, நோ அதிரசம்! பாவம்! எல்லா வீடுகளிலேயும் சாப்பிடறாரா! அதான் நம்ம வீட்டிலே வேணாம்னு வைச்சாச்சு! இந்த வருஷம் பண்டிகை இல்லை தான். ஆனால் அதுக்காகப் பிள்ளையாரை வராதேனு சொல்ல முடியுமா? ஆகவே சும்மாப் பழங்கள், தேங்காய், வெற்றிலை, பாக்கு வைத்துப்  பிள்ளையாரை அழைத்தாச்சு! அதோட இன்னிக்கு எங்க ஆவணி அவிட்டம் வேறே! (சாம வேதம்) ஆவணி அவிட்டம் என்பதால் கொஞ்சம் போல் பாயசமும் வைச்சாச்சு. பாயசம், சாதம், பருப்புப் பிள்ளையாருக்கும் கொடுத்தாச்சு! 




பிள்ளையார் இன்னிக்கு நல்லாக் குளிச்சுட்டு ஜம்ம்னு வேஷ்டி கட்டிண்டு, அருகம்புல், மல்லிகை மாலை போட்டுக் கொண்டு இருக்கார்! நேத்திக்கு அதிசயமா உதிரி மல்லிகைப்பூ கிலோ 200 ரூபாய் தான் விற்றது. ஆகவே 100 கிராம் உதிரி மல்லி வாங்கி வீட்டிலேயே பூத் தொடுத்தாச்சு! பிள்ளையாருக்கும் போட்டாச்சு!  ஆவணி அவிட்டம் என்பதால் வழக்கமாகப் போடும் ஆவணி அவிட்ட மீள் பதிவும் கீழே! யஜுர் வேதக் காரர்களின் ஆவணி அவிட்டம் செப்டெம்பர் ஆறாம் தேதி! அப்போப் பார்த்து மஹாலயமும் ஆரம்பம்! என்ன செய்யப் போறாங்கனு தெரியலை! :) 

ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன??
ஆவணி அவிட்டம்:

இது ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப் பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆவணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.

உபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோம். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள்.

அடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப் படும் அன்றே ஆரம்பித்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.

இதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.  அதர்வண வேதிகளுக்கு மறுபடியும் உபநயனம் செய்து கொண்டால் தான் வேதம் கற்கும் தகுதியே வரும் என்று சொல்லுகின்றனர். ஏற்கெனவே உபநயனம் முடிந்து வேதம் கற்க ஆரம்பித்தவர்களானாலும் அவர்கள் அதர்வண வேதம் கற்க வேண்டுமெனில் மீண்டும் உபநயனம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இன்று ஸாமவேதிகளின் உபாகர்மா. இதைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி:தெய்வத்தின் குரல்!

Thursday, August 24, 2017

கோபியர்கள் கொஞ்சும் ரமணா, கோபாலகிருஷ்ணா!

கில்லர்ஜி  திரு கில்லர்ஜியின் இந்தப் பதிவின் ஓர் பின்னூட்டத்தில் அவர் ஆற்றில் குளிக்கும் பெண்களின் உடையை எடுத்து மறைத்து விளையாடும் கண்ணனை இன்னமும் குழந்தையாகவே நினைப்பீர்களா என பகவான் ஜீக்குச் சொன்ன பதிலில் குறிப்பிட்டிருந்தார். அங்கேயே இதற்கு பதில் கொடுத்தால் பெரிதாக ஆகிடும் என்றும் சொல்லி இருந்தேன். 

இது முன்னர் ஒருத்தர் கேட்டதுக்காக 2008 ஆம் ஆண்டில் போட்ட பதிவு. 
இங்கே மறுபடி பகிர்ந்திருக்கேன். பிள்ளையார் பற்றியும் கில்லர்ஜி சொல்லி இருக்கார். அதுக்கு ஏற்கெனவே தில்லையகத்து/கீதாவின் பதிவில் சொல்லி இருந்தாலும் மீண்டும் ஓர் முறை பிள்ளையார் பற்றியும் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி எழுதிடலாம்னு எண்ணம். பார்ப்போம். இப்போது நான் முன்னர் எழுதியதின் மீள் பதிவு கீழே! ஏற்கிறவர்கள் ஏற்கலாம். மறுக்கிறவர்கள் மறுக்கலாம். அவரவர் விருப்பம்!

கண்ணனைச் சுற்றிக் கோபியர்கள் இருப்பதும், கண்ணன் அவர்களோடு புல்லாங்குழல் இசைத்தவண்ணம் சுற்றி வந்து விளையாடுவதுமான கோலத்தைக் கண்டு, வியக்காதவர் யாரும் இல்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு எண்ணம், சிலருக்கு என்ன இந்தக் கண்ணன் எப்போப் பார்த்தாலும் புல்லாங்குழல் ஊதிக் கொண்டிருந்தால் அவன் வீட்டில் அடுப்பு எப்படி ஊதமுடியும்னு! இன்னும் சிலருக்கு இப்படி ஊர் சுற்றியாக இருக்கானேனு! குழந்தைகளுக்கோ கண்ணன் படிக்கவே மாட்டான் போலிருக்கே, அவங்க அப்பா, அம்மா திட்ட மாட்டாங்களானு தோணுது! சில வயதானவர்களோ, எப்போப் பார்த்தாலும் பொண்ணுங்க புடை சூழ இருக்கானே, நல்ல அதிர்ஷ்டம் தான்னு நினைக்கிறாங்க. இளைஞர்களோ எனில், ஆஹா, நாம் எத்தனையோ முயற்சிகள் செய்யறோம், இந்தப் பொண்ணுங்களைக் கடலை போடணும்னு, ஆனால் இந்தக் கண்ணன் புல்லாங்குழல் எடுத்து ஊதினால் அவன் பின்னாடியே போகுதுங்களே என்ன விஷயம்னு யோசிக்கிறாங்க. இப்படி ஒவ்வொருவர் கண்ணன் கோபியர்களோடு இருப்பதைப் பற்றி யோசிச்சிட்டு இருக்காங்க இல்லையா?

பொதுவாக அனைவருக்குமே புரியாத ஒரு விஷயம், கண்ணன் என்ன இப்படி ஒரு பெண்பித்தனாய் இருக்கின்றான் என்பதே! பெண்களைச் சுற்றி அலையறானே இவனையும் ஒரு கடவுள் என்றோ, கீதையை உபதேசித்தவன் என்றோ சொல்லவா முடியும்??? கடவுள் என்று சொல்லப் படும் கண்ணனே இப்படி இருந்தால் சாமானிய மனிதனான நாம் இருக்கக் கூடாதா? என்றும் பலர் எண்ணம். ஆதிசங்கரர் ஒருமுறை சிஷ்யர்களோடு சென்று கொண்டிருக்கையில் அவருக்குத் தாகம் ஏற்பட, அப்போது அங்கே வந்த ஒரு தொழுநோயாளியான பிச்சைக்காரனின் மண்பாண்டத்தில் இருந்த நீரை வாங்கிக் குடித்தாராம், தாகம் தீரவேண்டும் என. சிஷ்யர்கள் முகம் சுளிக்க, சங்கரர் அந்த மாற்றத்தைக் கவனித்தும் ஒன்றும் சொல்லவில்லையாம். சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் தாகம் எடுக்கின்றது என்று சொன்ன சங்கரர், அங்கே ஒரு கொல்லன் தன் உலையில் இரும்புக் குழம்பைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு, அதை வாங்கிக் குடித்தாராம். அப்போது தான் சீடர்களுக்குப் புரிந்ததாம், அவர் உண்மையான ஞானி என்றும், எந்தவிதமான ஆசாபாசங்களும், வலி, வேதனைகளும், உணர்வுகளும் அவரை அண்டாது என்று. அத்தகையதொரு நிகழ்வே மேற்கண்ட கோபியர்களோடு கண்ணன் ஆடும் நிகழ்வும். கண்ணன் ஒவ்வொரு கோபியரோடும் ஆடுகின்றான், பாடுகின்றான், விளையாடுகின்றான். சாப்பிடுகின்றான். சண்டை போடுகின்றான்.

"தீராத விளையாட்டுப் பிள்ளை!"யாக இருக்கின்றான் கண்ணன். பெண்களுக்குத் தீராத தொல்லையாகவும் இருக்கின்றான். ஒரே மனிதன் ஒவ்வொரு பெண்ணோடும் எப்படி ஆட முடியும், பாடமுடியும்???? ஏனெனில் கண்ணன் ஒவ்வொரு மனிதருள்ளும் உறைகின்றான். இந்த உலகத்தில் நாயகன் ஒருவனே. அவன் தான் கண்ணன், மற்றவர் அனைவருமே ஆண்,பெண் அடங்கலாய் அனைவருமே நாயகியர் தான். கண்ணன் ஒருவனே நாயகன். ஆகவே அந்தக் கண்ணன் அனைத்து நாயகியரான கோபியர்களுடன், ஆடாமல், பாடாமல், விளையாடாமல்,சாப்பிடாமல், தூங்காமல் இருப்பது எவ்வாறு?? இதை நாயன்மார்களும் சொல்லி இருக்கின்றனர். "

"முன்னம் அவனுடைய திருநாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்"

என்று நாயகி பாவத்தில் எழுதி இருக்கின்றனர். இப்படி நாயகி, நாயகன் பாவத்திலேயே ஆழ்வார்களும் பாசுரங்கள் பாடி இருக்கின்றனர். ஆண்டாளின் அனைத்துப் பாசுரங்களுமே பெரியாழ்வார் தன்னைப் பெண்ணாகப் பாவித்துக் கொண்டு எழுதியதே என்று திரு ராஜாஜி கூறுவது உண்டு. அப்படி ஜெயதேவர் தம்மை நினைத்துக் கொண்டு அவரால்  எழுதப் பட்டதே அஷ்டபதி என்னும் மகா காவியம். இதில் கண்ணனின் ராசலீலை வர்ணிக்கப் பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலானவர்களால் இதன் உட்கருத்து புரிந்து கொள்ளப் படாமல் தவறாகவே புரிந்து கொள்ளப் பட்டிருக்கின்றது. ஏதோ கண்ணன் கோபியரோடு குளிக்கப் போனான், போன இடத்தில் ஆடிப் பாடினான். அவன் ஒரு ஸ்திரீலோலன் என்றே புரிதல் பெருமளவில் இருக்கின்றது. கண்ணனின் இந்த ராசலீலையின் உட்கருத்தை அநேகர் புரிந்து கொள்ளாமலேயே இதை ஒரு அருவருப்பான விஷயமாகவும், பெருமாளே இப்படி என்றால் அவன் பக்தர்கள் எப்படி இருப்பார்களோ என்று சந்தேகமாகவும் பேச இடமளிக்கின்றது.  

ராசக்ரீடை க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி தேனம்மை லக்ஷ்மணன் கூகிளார் வாயிலாக

"கண்ணனைச் சுற்றிய கோபியர்கள்: கோபியர்களின் ஆடை அவிழ்ந்து கிடக்கின்றது. அத்தனை கோபியர்களும், நதியில் நீராடி, மூழ்கித் திளைத்து சுகானுபவம் பெற இறங்குகின்றனர். நதியில் மூழ்க,மூழ்க அந்த நீரின் இனிய அனுபவத்தில் மூழ்கிப் போகின்றனர். கரையில் இருக்கும் ஆடைகளின் நினைவோ, ஏன், கண்ணன் நினைவோ கூட இல்லை அவர்களுக்கு! பார்த்தான் கண்ணன், தன் குழலெடுத்து ஊதுகின்றான். கோபியர் திரும்பிப் பார்க்கின்றனர். உடனே சட்டென அவர்கள் ஆடைகளை எடுத்துக் கொண்ட கண்ணன் மரத்தில் ஏறி மறைகின்றான். கோபியர் பதறுகின்றனர். ஆஹா, ஆடை இல்லாமல் எப்படி வெளியே வருவது??? கண்ணா,மணிவண்ணா, கோவிந்தா, கோபாலா, ஆடைகளைக் கொடுத்துவிடு, ஸ்ரீதரா, ருஷிகேசா, தாமோதரா, கேசவா, ஆடைகளைக் கொடுப்பாய்! நந்தகோபன் மகனே! இது என்ன விளையாட்டு?? கொடுத்துடுப்பா! கொடுத்துடு! ம்ஹும், கண்ணனா கொடுப்பான்? மறுக்கின்றான். பின்னே என்ன செய்வது?? என்னிடம் வாருங்கள்! வந்து கேளுங்கள் கொடுக்கப் படும் என்று உணர்த்துகின்றான் கோவிந்தன். கோபியர்களுக்குப் புரிகின்றது.
ராசக்ரீடை க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

பிறக்கும்போது சர்வ ஞானத்துடனும் பிறக்கின்றோம். ஆனால் வளர, வளர, இவ்வுலக இன்பங்களில் மனம் தோயத் தோய இறைவனை மறக்கின்றோம். இறைவனால் படைக்கப் பட்டவர்கள் என்பதே மறக்கின்றது. ஆனால் இல்வாழ்வின் துன்பங்கள் ஆடையில்லாத மனிதர்களைப் போல நம்மை மனம் பதற வைக்கின்றது. இறைவனைத் தேட வைக்கின்றது. எனினும், நாம் அப்போதும், நம் தேவைக்குத் தான் இறைவனைத் தேடுகின்றோம், அவன் துணையை நாடுகின்றோம், அவனிடம் நம்முடைய வேண்டுகோளை விடுவிக்கின்றோம். எனினும் இறைவன் பொறுமையுடனேயே இருக்கின்றான். நமக்குப் புரியும் எனக் காத்திருக்கின்றான். நமக்கும் புரிகின்றது ஒருநாள், ஆஹா, அவனிடம் நாம் பரிபூரண சரணாகதி அடையவேண்டாமா? அப்போது தானே அவன் அருள் பூரணமாய்க் கிட்டும் என்று உணருகின்றோம். உடனேயே நம்,மகிழ்ச்சி, ஏக்கம், காமம், கோபம், தாபம், பாசம், ஆசை, உணர்வுகள் என்று நம்முடைய அனைத்து உணர்வுகளையும், இறைவனிடம் அர்ப்பணித்துப் பரிபூரணச் சரணாகதி அடைகின்றோம். நம்முடைய "நான்" என்னும் அகத்தை மறக்கவேண்டும். இறைவனே அகமும், புறமும் என உணரவேண்டும். அகத்தினுள்ளே இருப்பதும் அவனே என உணரவேண்டும், இதைத் தான் ராசக்ரீடை என்னும் அழகிய காட்சி உணர்த்துகின்றது. சற்று விளக்கமாய்ப் பார்ப்போமா??

இங்கே கோபியர்களாய் இருப்பவர்கள் அனைவரும் இவ்வுலக மக்களாகிய நாமே தான். பிறக்கும்போது ஞானத்துடனேயே பிரம்மமாய்த் தான் பிறக்கின்றோம். ஆனால் நாளாவட்டத்தில், சம்சாகர சாகரம் என்னும் நதியில் மூழ்கி, கடலில் மூழ்கி, நம்மை நாமே மட்டுமில்லாமல், இந்த உலகையும், நம்மையும் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதையே மறக்கின்றோம். நாம் கழட்டிய ஞானம் தான் இங்கே கரையில் இருக்கும் ஆடைகள். இறைவன் நாம் ஞானத்தைத் துறந்து அஞ்ஞானமாகிய சாகரத்தில் மூழ்கிக் கிடப்பதை அறிந்து நம்மைக் கூப்பிடுகின்றான். எனினும் இந்த உலக மயக்கத்தில் மூழ்கி இருக்கும் நமக்கு அது காதில் விழுவதில்லை. அதனால் ஞானமாகிய ஆடையை இறைவனே திரும்ப எடுத்துக் கொண்டு விடுகின்றான். நமக்குத் துன்பம் வரும்போது தாங்கும் சக்தி குறைவது அதனாலேயே. அப்போதுதான் இறைவனைப் பூரணமாய் நினைக்க ஆரம்பிக்கின்றோம். அவனிடம் பிரார்த்திக்கின்றோம். எனக்கு விடிவு இல்லையா? என் கஷ்டங்களுக்கு முடிவு இல்லையா எனக் கேட்கின்றோம்.

கண்ணன் சொல்கின்றான்:"வா, என்னிடம் வந்துவிடு! என்னிடம் சரணாகதி அடைந்துவிடு! உன்னை நான் காக்கின்றேன்." என்று சொல்கின்றான். ஞானமாகிய ஆடையைக் காட்டுகின்றான். என்னிடம் வா, தருகின்றேன் என்று ஆசை காட்டுகின்றான். இறைவனைச் சரணடைந்தால் ஞானமும், அதைத் தொடர்ந்த மோட்சமும் கிட்டும் என உணர்த்துகின்றான்.
கீதையிலே கண்ணன் சொல்கின்றான்:

"அநந்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே!
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்!"

என்று, எந்த மக்கள் கண்ணனையே சிந்திக்கின்றார்களோ அவர்களின் யோக க்ஷேமத்தையே தான் தாங்குவதாய்க் கூறுகின்றான் கண்ணன். கண்ணனையே நினைத்து, கண்ணனுக்கே மனத்தை அர்ப்பணம் செய்து, கண்ணனுக்கே பக்தி செலுத்தி, கண்ணனுக்கே வழிபாடுகள் செய்து, கண்ணனைத் தவிர வேறொருவரைத் தொழாமல், கண்ணனையே அடையவேண்டும் என்று எண்ணுவதே இந்த ராசக்ரீடையின் உட்பொருள்.

Wednesday, August 23, 2017

சென்னைக்குப் பிறந்த நாளாம்! :)

சென்னை க்கான பட முடிவு

சென்னைக்கு 378 ஆவது பிறந்த நாள் எனவும் ஒரு மாதம் முழுவதும் விழா கொண்டாடப் படப் போவதாகவும் பார்த்தேன். அதோடு நேற்றுச் சென்னை தினம் என்று முகநூலில் மற்றும் பதிவுகளில் சென்னைக் காதலர்கள் பதிவிட்டிருந்தார்கள். என்னைப் பொறுத்தவரை சென்னை அவ்வளவாகப் பிடிக்காத/மனம் ஒன்றாத ஓர் ஊர்! 62-63 ஆம் வருடங்களில் என் அண்ணா, தம்பி பூணூலுக்காகத் திருப்பதி போயிட்டுத் திரும்புகையில் சென்னையில் சில நாட்கள் தங்கியது தான் என்னோட முதல் சென்னை விஜயம். ஆனால் மனதைக் கவரவே இல்லை. இவ்வளவு தானா இந்த ஊர் என்னும் எண்ணமே தோன்றியது!  மாமதுரையில் எங்கே போவது என்றாலும் நடந்தே போயிடலாம் என்பதோடு நேரமும் ஆகாது! இது என்ன ஊர் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் போக இத்தனை நேரம் ஆகுதே! இது அறுபதுகளிலேயே எனக்குள் தோன்றியது.

பெரியப்பா திருவல்லிக்கேணியில் இருந்தார்! மற்ற உறவினர்கள் மாம்பலம். சித்தி அப்போக் கல்யாணம் ஆகி வரலை! அதோடு நாங்க ஊருக்குப் போவதற்கு ரயில் ஏற வேண்டிய இடம் எழும்பூர். அங்கிருந்து பஸ் பிடிச்சுத் தான் திருவல்லிக்கேணி வரணும். மாம்பலம் போகணும்! ஹிஹிஹி, மதுரையின் தெருக்களுக்குள்ளேயே சுத்திட்டு இந்த பிரம்மாண்டம் ஓரளவு சலிப்பை உண்டாக்கியது. ஆனால் அப்போத் தெரியாது இதே ஊரில் தான் வந்து வாழ்க்கை நடத்தப் போறோம்னு! ஆனாலும் அப்போதைய சென்னையில் பழைய கட்டிடங்கள் பார்க்க அழகாகவே இருந்தன. முக்கியமாய் ஸ்பென்சர்! இப்போது இருக்கும் ஸ்பென்சரைப் பார்க்கையில் பழைய ஸ்பென்சர் கட்டிடம் அழிந்ததை நினைத்து வருத்தமாக இருக்கிறது.

அதோடு இல்லாமல் அப்போல்லாம் மெட்ராஸ் என்றாலே எல்லாமும் அடங்கியது என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். உதாரணமாக எழும்பூர், சைதாப்பேட்டை, தி.நகர் போன்றவை எல்லாமும் சென்னை என்னும் நினைப்பு! மாம்பலத்தில் என் அம்மாவின் சித்தி வீட்டில் தங்கினப்போ அவங்க ஒரு நாள் என்னை "வா, மெட்ராஸ் போய் பர்மா பஜார், ஹைகோர்ட், பீச் எல்லாம் போகலாம்" னு கூப்பிட்டாங்க!  நான் ஹிஹிஹி! மெட்ராஸில் தானே இருக்கோம்னு நினைச்சேன். அப்புறமாத் தான் புரிஞ்சது! சென்ட்ரலை ஒட்டி உள்ள பழைய நகரம் தான் ஒரிஜினல் சென்னைனு! அங்கே எல்லாம் சுத்தறது அப்போல்லாம் ரொம்பப் பிடித்தமான ஒன்று.

கல்யாணம் ஆகி வந்தப்போ ஒவ்வொரு சனிக்கிழமையும் ரங்க்ஸுக்கு அரை நாள் அலுவலகம். எனக்கு இரண்டாம் சனிக்கிழமை மட்டும் லீவு! ஆனாலும் சனிக்கிழமை மாலை கொஞ்சம் சீக்கிரமாவே தண்டையார்ப்பேட்டை அலுவலகத்திலிருந்து கிளம்பி சென்ட்ரல் வந்துடுவேன். அவரும் வந்து ஹிகின்பாதம்ஸ் அருகே காத்திருப்பார்.  இரண்டு பேருமாய்க் கந்தசாமி கோயில் (சென்னை மொழியில் கன்ட்சாமிகோயிலு) போய்ப் பார்த்துட்டு அங்கே பெருமாள் செட்டி கடையில் பெருங்காயம் வாங்கிக் கொண்டு பொடிநடையாக ஹைகோர்ட் வரை நடப்போம். என் எஸ்சி போஸ் ரோடில் அப்போது ஒரு பெரிய காதி பவன் இருந்தது. ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம் பக்கத்திலேனு நினைக்கிறேன். அங்கே சுக்குமல்லிக் காஃபியும் (எத்தனை தரம் எழுதுவே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) (ஹிஹிஹி, ம.சா. கூவுது! அப்போப்போ கூவும்! கண்டுக்கப்படாது) கொண்டைக்கடலைச் சுண்டலும் காரசாரமாகச் சாப்பிடுவோம். எங்கள் குடித்தனத்துக்குத் தேவையான பொருட்கள் ஜாடி, கண்ணாடி பாட்டில்கள், சூட்கேஸ், குடை, மழைக்கோட் போன்றவை அங்கே இப்ரஹிம் ராவுத்தர் கடையில் அல்லது மற்றக் கடைகளில் வாங்குவோம்.

பின்னர் பசி எடுக்கவே யாரோ ஒருத்தர் சொன்னதன் பேரில் ஆர்மெனியன் தெருவில் உள்ள பாலிமர் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றோம். சாப்பாடுன்னா சாப்பாடு, இத்தனை வருடங்கள் ஆகியும் மறக்கவே முடியாத சாப்பாடு! அதுக்கப்புறம் அந்தப்பக்கம் நிறையத் தரம் போயும் அந்த ஹோட்டலுக்குப் போக முடியலை! என்னோட முதல் கல்யாண நாளன்று நாங்க சென்ட்ரல் பக்கத்தில் இருக்கும் பிக்னிக் ஓட்டலில் சாப்பிட்டோம். அப்போப் பழைய மாதிரிக் கட்டிடம் என்பதோடு ரூஃப் கார்டன் ரெஸ்டாரன்டும் இருந்தது. அங்கே தான் சாப்பிட்டோம். பட்டாணி புலவு இரண்டு ப்ளேட் தெரியாத்தனமாச் சொல்லிட்டு (இப்போல்லாம் நக்ஷத்திர ஓட்டலில் நாம் ஆர்டர் செய்யும்போதே சொல்றாங்க, இவ்வளவு வேண்டாம், இது போதும்னு! அப்போச் சொல்லலை!) சாப்பிட முடியாமத் திணறினோம்.

அதுக்கப்புறமா என்னோட அலுவலகத்தில் ஒரு மீட்டிங்கின் போது எனக்காக தங்கசாலைத் தெரு ஹரிஓம் பவனிலிருந்து மில்க் அல்வா வாங்கிக் கொடுத்தாங்க. அதைச் சாப்பிட்டு விட்டு மறுபடியும் வேணும்னு அதைச் சாப்பிடவே நாங்க இரண்டு பேரும் எங்க பொண்ணு என் வயித்திலே இருக்கும்போது அம்பத்தூரில் இருந்து தங்கசாலைத் தெரு வந்து அந்த ஓட்டலைத் தேடிக் கண்டு பிடிச்சுச் சாப்பிட்டோம். இப்போ அந்த ஓட்டல் இருக்கா, இல்லையானு தெரியலை! அதுக்கப்புறமா ராஜஸ்தான், ஆந்திராவில் செகந்திராபாத்(பழைய ஆந்திரா) எல்லாம் போயிட்டு மறுபடி சென்னைக்கு அம்பத்தூருக்கே வந்ததும் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் எவ்வளவு கஷ்டங்கள் உண்டோ அத்தனையும் அனுபவிச்சதும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய சரித்திர சம்பவங்கள்.  ஆனால் சென்னை மேல் எனக்கிருந்த பிடிப்பு முற்றிலும் விட்டுத் தான் போனது! என்றாலும் மறுபடி பத்தாண்டுகள் ராஜஸ்தான், குஜராத் வாசத்திற்குப் பிறகு சென்னைக்குத் தான் வர வேண்டி இருந்தது.

சென்னை க்கான பட முடிவு

மனம் ஒட்டாமலேயே சென்னை வாசம்! இப்போவும் சென்னை வந்தால் ஓர் மன இறுக்கத்தோடு தான் இருக்க வேண்டி இருக்கு! ஏதோ பதைப்பு! ஏதோ தொலைச்சுட்ட மாதிரி ஒரு எண்ணம்! தவிப்பாக இருக்கும். இது எனக்கு மட்டும் தான் இப்படினு நினைச்சால் இன்னும் சிலரும் இருக்காங்க! சென்னைக் காதலர்களுக்கு இனிய சென்னை தின/சென்னை மாத விழாக்கால வாழ்த்துகள்.


படங்களுக்கு நன்றி கூகிளார்

Tuesday, August 22, 2017

மறுபடியும் படம் காட்டறேனே!



டெக்சாஸ் மாநிலம் சான் அன்டானியோ நகருக்குச் சுற்றுலா சென்றிருந்த போது அங்கே பார்த்த காவெர்ன் கேவ்ஸ் எனப்படும் சுண்ணாம்புப் பாறைகளால் ஆன கிட்டத்தட்ட 200 அடி ஆழத்திலுள்ள குகைப் பாதையில் இன்னமும் பச்சை இருப்பதைக் காணலாம். ஏற்கெனவே போட்டிருக்கேன்.




குகைக்குள் கீழிறங்கும் வழி!



இந்தக்குறுகலான வழியிலும் போக வேண்டும். நாம் எல்லோரும் வந்துட்டோமானு சோதிக்க உள்ளே உள்ள மைக்கில் வழிகாட்டி குரல் கொடுப்பார்.




குகைப்பாதை! முழுக்க முழுக்க குகைப் பாதையிலேயே செல்ல வேண்டும். டெனிசி மாநிலத்திலும் மெம்பிஸுக்கு அருகே இதே போன்ற ஓர் குகைப்பாதையில் சென்று தான் ரூபி ஃபால்ஸ் என்னும் பிரபலமான சுரங்கத்தில் இருக்கும் ஓர் அருவியைப் பார்த்தோம். அப்போல்லாம் காமிரா இல்லை!



சான் அன்டானியோ நகரில் நாங்கள் தங்கி இருந்த ஓட்டல் இருந்த தெரு. ஒரு பார்வை! இம்மாதிரி இரண்டு, மூன்று குதிரை வண்டிகள் இருக்கின்றன. விரும்பினால் அதில் நகரைச் சுற்றி வரலாம். நமக்குப் புதுசு இல்லை என்பதால் நாங்க போகலை!



Sunday, August 20, 2017

புலிகளைப் பார்த்து சூடு வைத்துக் கொண்ட பூனை!



2011 ஆம் ஆண்டு அம்பேரிக்கா போயிருந்தப்போ சுற்றிப் பார்த்த இடங்களில் இந்தப் பறவைகள் சரணாலயமும் ஒன்று.  கீழே காண்பது சான் அன்டானியோ என்னும் இடத்தில் உள்ள ரிவர் வாக் சென்று தங்கி இருந்தப்போ அங்கே இருந்த "ஸீ வேர்ல்ட்" என்னும் பிரம்மாண்டமான பூங்காவின் ஒரு சிறு காட்சி! நிறையப் படங்கள் இருந்தாலும் தேர்ந்தெடுத்தே போட்டிருக்கேன். இவற்றை முன்னாடியே பார்த்திருக்கலாம்.




"ஸீ வேர்ல்ட்"நுழைவாயில் கீழே! அப்போது கிறிஸ்துமஸ் காலம் என்பதால் எங்கும் வண்ணமயமான அலங்காரங்கள்!




அங்கு காணப்பட்ட வித விதமான கிறிஸ்துமஸ் மரங்கள்!




இது ஒரு தீம் பார்க் மாதிரி! பல்வேறு விதமான விளையாட்டுக்களும் உண்டு! நாங்க குறிப்பிட்ட சிலவற்றுக்கு மட்டுமே போனோம். இவை எல்லாம் காமிராவில் எடுத்தவை. காமிராவை வெளியே எடுத்து சார்ஜ் செய்து வைச்சுக்கணும்! மொபைலில் பல சமயங்களிலும் சரியா வரதில்லை. எல்லாம் நொ.கு.ச.சா. ஆகி விடுகிறது.

Saturday, August 19, 2017

காவிரி புஷ்கரம் என்றால் என்ன?

காவிரி புஷ்கரம் பற்றிப் பலருக்கும் பல சந்தேகங்கள். தம்பி வாசுதேவன் இதோ இங்கே போட்டிருக்கார்.
காவிரி புஷ்கரம்

இது புண்ணிய நதி தீர்த்தங்களில் ஒவ்வொரு நதி தீரத்திலும் ஒவ்வொரு மாதம் கொண்டாடப் படும். இதற்குப் பலரும் பல கதைகள், புராணங்களை மேற்கோள் காட்டுகின்றார்கள். முக்கியமாய்ச் சொல்வது என்னவென்றால்:-

ராஜஸ்தானின் அஜ்மேர் நகருக்கு அருகே புஷ்கர் என்னும் ஊர் ஒன்று இருக்கிறது. இந்தியாவிலேயே பிரம்மாவுக்குக் கோயில் அதுவும் தனிக் கோயில் அமைத்து வழிபடுவது அங்கே மட்டும் தான். தமிழ்நாட்டில் ஒரு சில கோயில்களில் பிரம்மாவுக்கும் வழிபாடு இருந்தாலும் பெரும்பாலும் கோஷ்டத்திலேயே பிரம்மா காணப்படுவார். ஆனால் இந்தப் புஷ்கரத்தில் மூலஸ்தானத்திலேயே பிரம்மா தான்.  இந்தப் புஷ்கர் நகரில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பெரிய திருவிழா நடைபெறும்.   இந்தப் புஷ்கர் நகரில் பிரம்மாண்டமான ஓர் ஏரி உண்டு. இதை சர்வ தீர்த்தங்களுக்கும் ராஜாவான புஷ்கரர் என அழைப்பார்கள். இந்தப் புஷ்கரர் பிரம்மாவின் கமண்டலத்தில் இருந்தாராம். உலகில் உள்ள மூன்றரைக் கோடி தீர்த்தங்களுக்கும் இவரே அதிபதி எனப்படுவார்.

அப்போது பிரஹஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பிரம்மாவிடம் தனக்கு சர்வக்ஞத்துவமும், கிரஹங்களின் அதிபதியாக இருக்கவேண்டும் எனவும் அனைவராலும் தான் துதிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அதோடு பிரம்மாவின் கமண்டலத்தில் இருந்த புஷ்கரரைத் தம்மிடம் தருமாறும் கேட்டுக் கொண்டார். ஆனால் புஷ்கரரோ பிரஹஸ்பதியிடம் போக மறுத்தார். ஆனால் பிரம்மா, தான் வரம் அளித்து விட்டதால் அதிலிருந்து தம்மால் மீற முடியாது என்பதால் பிரஹஸ்பதியிடம் குறிப்பிட்ட காலம் அவர் இருந்தே தீர வேண்டும் என்றார். அதன் படி குரு பகவான் ஒவ்வொரு மாதமும் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ அதன் முதல் பனிரண்டு நாட்கள், கடைசி பனிரண்டு நாட்கள், இடைப்பட்ட நாட்கள் மத்தியான காலங்களில் புஷ்கரர் பிருஹஸ்பதியிடம் இருக்கிறார். குரு பகவான் ஒவ்வொரு ராசியில் பிரவேசிக்கும்போதும் அவருக்கு ஒவ்வொரு நதியிடம் சம்பந்தம் உண்டாவதாக ஐதீகம்.

அதன்படி மேஷ ராசிக்கு குரு செல்லும்போது கங்கா புஷ்கரம், ஹரித்வார், காசி, ரிஷிகேஷ் ஆகிய ஊர்களிலும் மற்றும் கங்கைக்கரையோரம் உள்ள புண்ணிய ஸ்தலங்களிலும் நடைபெறும். ரிஷப ராசியில் குரு பிரவேசிக்கையில் நர்மதா புஷ்கரம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதா நதி தீரங்களில் குறிப்பாக ஓங்காரேஸ்வரர் குடியிருக்கும் ஓங்காரேஸ்வரத் தலத்தில் சிறப்பாக நடைபெறும். மிதுன ராசிக்கு சரஸ்வதி புஷ்கரம். இது  குருக்ஷேத்திரம், கேசவ பிரயாகை, குஜராத் சோம்நாத், அலஹாபாத் திரிவேணி சங்கமம், ஆந்திரா காளேஸ்வரம், மத்திய பிரதேசம் பேடாகட் என்னும் இடத்திலும் நடைபெறும்.

குரு பகவான் கடக ராசியில் நுழையும்போது யமுனா நதி தீரங்களான யமுனோத்ரி, ஹரித்வார், ப்ருந்தாவன், மத்ரா, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களிலும், குரு பகவான் சிம்ம ராசியைக் கடக்கும்போது கோதாவரி நதி தீரங்களான நாசிக் அருகே உள்ள திரியம்பகம், ஆந்திராவில் உள்ள கோதாவரி நதி தீரங்கள் ஆகிய இடங்களில் கோதாவரி புஷ்கரம் நடைபெறும். குரு பகவான் கன்னி ராசியில் நுழைகையில் கிருஷ்ணா நதி தீரங்களில்  துளசி, காசரி, போகவதி, கும்பி, சாவித்ரி ஆகிய ஐந்து நதிகள் கூடும் பஞ்ச நதி க்ஷேத்திரங்களில் உள்ள பிரயாக் சங்கமம், ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் கிருஷ்ணா புஷ்கரம் நடைபெறும். குரு பகவான் துலா ராசிக்குள் நுழைகையில் காவிரி புஷ்கரம் காவிரி நதி தீரங்களில் முக்கியமாய்த் தலைக்காவிரி, ஶ்ரீரங்கப்பட்டினம், ஶ்ரீரங்கம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் சிறப்பாக நடைபெறும்.

குரு பகவான் விருச்சிக ராசியில் நுழைகையில் பண்டர்பூர் அருகிலுள்ள பீமா நதியில் பீம புஷ்கரம் எனவும், அதுவே தாமிரபரணி நதிக்கரையில் தாமிரபரணி புஷ்கரம் எனவும் கொண்டாடப் படுகிறது. இது தாமிரபரணி நதிக்கரை ஸ்தலங்கள் ஆன, பாபநாசம், பாண தீர்த்தம், திருநெல்வேலி அருகிலுள்ள சிந்துபூந்துறை ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெறும். குரு பகவான் தநுர் ராசியில் நுழைகையில் பிரம்மாபுத்திரா நதி தீரங்களில் நடைபெறும் அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திரா நதிக்கரையோர ஸ்தலங்களில் சிறப்பாக நடைபெறும்.  குரு பகவான் மகர ராசியில் நுழைகையில் துங்கபத்ரா நதி தீரங்களான  சிருங்கேரி, மந்திராலயம் ஆகிய ஊர்களிலும், குரு பகவான் கும்ப ராசியில் பிரவேசிக்கையில்  சிந்து நதி தீரங்களான ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் ஆகிய இடங்களில் சிந்து புஷ்கரமாக நடைபெறும். குரு பகவான் மீன ராசியில் பிரவேசிக்கையில் ப்ராணஹிதா புஷ்கரம் என்னும் பெயரில் தெலங்கானாவில் உள்ள அடிலாபாத்தில் காலேஸ்வரம் உள்ளிட்ட பனிரண்டு நதி தீரங்களில் கொண்டாடப்படும்

இவ்வருடம் காவிரி புஷ்கரம் சுமார் 144 ஆண்டுகளுக்குப்பின்னர் வரும் சிறப்பான புஷ்கரம் ஆகும். இது செப்டெம்பர் 12-9-17 இல் இருந்து 24-9-17 வரை காவிரி நதி தீரங்களில் நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளும் பெண்கள் வடிவில் இந்தக் காவிரி நதியில் வந்து நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதிகம். இது ஒவ்வொரு வருடமும் துலா மாசம் எனப்படும் ஐப்பசி மாதம் நடைபெறும். ஒவ்வொரு வருடமும் துலா மாதம் எனப்படு ஐப்பசி மாதத்தில் காவிரி நதியில் நீராடுவதைப் புனிதமாகக் கருதுவார்கள். இந்த வருடம் புஷ்கரமும் சேர்ந்து கொண்டதால் இது மிகுந்த  முக்கியத்துவம் பெறுகிறது.


காவிரியில் இன்னும் நீர் வரத்து இருக்கலாம் என எதிர்பார்க்கிறேன். வரத்து அதிகம் ஆனால் படங்கள் எடுக்கணும். இப்போதைக்கு இது மட்டும்.

Tuesday, August 15, 2017

எல்லோருக்கும் சுதந்திர தின, ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்!

முதல்லே ஜன்மாஷ்டமி வாழ்த்துகள். நேத்திக்கு ஜன்மாஷ்டமி பெரும்பாலானவர்களால் கொண்டாடப் பட்டது. வைணவர்களுக்கு அடுத்த மாதம் வருகிறது. இங்கே ஶ்ரீரங்கம் கோயிலிலும் அடுத்த மாதம் தான்! இந்த வருஷம் நம்ம வீட்டில் பண்டிகை இல்லை! அதனால் கிருஷ்ணன் பிறப்பைக் கொண்டாடாமல் இருக்க முடியுமோ? பக்ஷணம் தான் பண்ணக் கூடாது! கோலம் போட்டுக் கிருஷ்ணன் பாதங்களைப் பதிக்க முடியாது! எனக்கு இதான் ரொம்பவே வருத்தம். கிருஷ்ணன் பாதங்கள் சின்னச் சின்னப் பாதங்கள் போடுவதில் சின்ன வயசிலிருந்தே ரொம்ப ஆசை!

நம்ம ராமர், படங்களில் ஒரே பிரதிபலிப்பு அதிகம். விளக்கை அணைச்சுட்டு எடுத்தாலும் சரியா வரலை! கொஞ்சம் புகை மூட்டம் போலத் தெரியுது! தெளிவா இல்லை! :( காமிராவை எடுத்துச் சரி பண்ணி வைச்சுக்கணும். அலைபேசியில் எனக்குச் சரியா வரலை! (யாருங்க அங்கே, காமிராவில் என்ன வாழ்ந்ததுனு கேட்டு ஸ்கையை வாங்கறது?) 

மேலாவணி மூல வீதி வீட்டில்,மதுரையில் இருந்தப்போ அந்த நீளமான வீடு முழுக்க என் கைவண்ணத்தில் தான் கோலம் மிளிரும். கிருஷ்ணர் பாதங்களும் நான் போடுபவை தான். அந்த வீட்டில் நாலு குடித்தனம் இருந்தது. எல்லோருமே என்னுடைய கோலத்தை அங்கீகரிச்சிருக்காங்க. ம்ம்ம்ம். இந்த வருஷம் போட முடியலை! :( ஆனால் குழந்தை பிறப்பைக் கொண்டாட வேண்டாமோ! எப்படியும் தினம் தினம் காலையிலும் மாலையிலும் பால் நிவேதனம் செய்யறேன். மத்தியானம் சாதம்! ஆகவே நிவேதனம் செய்யறதை யாரும் தப்புனு சொல்ல முடியாதே!



மல்லிகைப்பூக்களால் கிருஷ்ணர் முகம் மறைந்துள்ளது.

உடனடியாகத் தீர்மானம் போடப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முந்தாநாளே ரங்க்ஸ் பூக்கடைக்குப் போய்த் துளசி, உதிரி மல்லிகைப் பூ, கதம்பம் போன்றவற்றோடு பழங்களும் வாங்கி வந்துட்டார். பூவைத் தொடுத்து வைச்சுட்டேன். நேற்று மாலை விளக்கேற்றினதும் அப்போத் தான் வாங்கிய பால், காலை உறை ஊற்றி வைத்திருந்த தயிர், வெண்ணெய், அவல், வெல்லம், பழங்கள் எல்லாவற்றையும் கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்தேன். எல்லா வீட்டிலேயும் முறுக்கும், தட்டையும் சீடையும் சாப்பிட்டக் கிருஷ்ணருக்குக் கொஞ்சமானும் ஜீரணம் ஆகவேண்டாமோ! குழந்தை ஆச்சே! அதனால் எளிமையான நிவேதனம்! அவலைக் கூட மஹாராஷ்டிர முறைப்படித் தயிரில் போட்டு வைக்கலாமானு யோசிச்சேன். ரங்க்ஸுக்குப் பிடிக்கணும். அதோடு காலை வடிச்ச சாதம் வேறே மிச்சம் இருந்தது. அவலைத் தயிரில் போட்டால் சாதம் செலவாகாது. மறுநாள் பழைய சாதம் சாப்பிட முடியாது! ஆகவே அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.


கீழ்த்தட்டில் உள்ள விக்ரஹங்கள்!  நடுவில் பெருமாள், ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக! குடும்பப் பரம்பரை விக்ரஹங்கள். இந்த விக்ரஹங்கள் பத்தித் தான் நம்ம தம்பி மோகனின் "அங்கிங்கெனாதபடி" கதையில் குறிப்பிட்டேன். மேலே பார்க்கும் கிருஷ்ணரும் இவங்களோடு சேர்ந்தவரே!


 நான் செய்த நிவேதனம், பால், தயிர், வெண்ணெய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, அவல், வெல்லம்.

தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டிச் செய்யவில்லை. வழக்கமான ஸ்லோகங்கள் தான்! எப்படியோ கிருஷ்ணர் எங்க வீட்டுக்கும் நேத்து வந்துட்டாரே!


தேசியக் கொடி க்கான பட முடிவு

தேசியக் கொடி! படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக தினமலர்!

இந்த எழுபதாவது சுதந்திர தினத்தில் நாடு முன்னேற அரசோடு சேர்ந்து நாமும் ஒத்துழைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். எல்லாத் துறைகளிலும் நாடு தன்னிறைவு பெற்று முன்னேறப் பிரார்த்திப்போம்.

வந்தேமாதரம்!

ஜெய்ஹிந்த்!