எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 03, 2017

சில, பல, எண்ணங்களுடன் ஒரு ரசமான அனுபவம்!

நாட்டுக் கத்திரிக்காய் க்கான பட முடிவு

நேற்றைய விலை நிலவரம்

நாட்டுக் கத்திரிக்காய் கிலோ 40 ரூ

நாட்டுத் தக்காளி கிலோ            40 ரூ

முட்டைக்கோஸ்          கிலோ      60 ரூ

இஞ்சி                    100 கிராம்             7 ரூ

கொத்துமல்லிக் கட்டு                     5 ரூ

வெல்லம் பாகு கிலோ                   56 ரூ

சர்க்கரை கிலோ                              43 ரூயிலிருந்து 45 வரை கடைக்குக் கடை மாறுபடுகிறது.

மற்றக் காய்களில் வெண்டைக்காய் கிலோ 40 ரூக்கும் பீர்க்கங்காய் கிலோ 45ரூக்கும் விற்கிறது. இது இன்றைய விலை!

சமையல் எரிவாயு சிலிண்டர் சுமார் 41 ரூ வரை குறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். தினசரியிலும் வந்துள்ளது. ஏற்கெனவே முகநூலில் திரு கௌதமனும் பதிந்திருந்தார்.

இப்போ ஆடி மாதம் என்பதால் எங்கெங்கு பார்த்தாலும் தள்ளுபடி சீசன். நம்மைத் தள்ளி விட்டுடும் போல இருக்கு. ஒரு வருஷம் ஆடி மாதத்தின் போதும், தீபாவளியின் போதும் சாரதாஸ் துணிக்கடையில் மக்கள் வரிசையில் நின்று வருவதற்காக இரண்டு மூன்று வரிசைகளில் கம்பி கட்டித் தெருவில் வரும் வரை போட்டிருப்பதைப் பார்த்து அசந்து போனோம். இவ்வளவு கூட்டமா கடைக்குப் போகும் என நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே அதிலே நின்று மக்கள் வரிசையில் துணிகள் எடுக்கக் கடைக்குச் செல்வதைப் பார்த்தப்போ ஆச்சரியமா இருந்தது. நாட்டில் எல்லோரும் ஏழை என்பதை மனம் ஏற்க மறுத்தது. அவ்வளவு கூட்டம்! தள்ளு முள்ளு இல்லாமல் இருக்கவே இந்த ஏற்பாடு என்றும் அறிந்தேன்.

ஆடி வெள்ளி, மற்றும் வரலக்ஷ்மி நோன்பு நாட்களில் எல்லோரும் வீட்டுக்குப் பெண்களை அழைத்து வெற்றிலை, பாக்கோடு ரவிக்கைத் துணி வைத்துக் கொடுப்பார்கள். சாஸ்திரம், சம்பிரதாயம் இரண்டுமே துணியைத் தான் தரச் சொல்கிறது. ஆனால் அதிலும் சிலர் சுமாரான துணியைக் கொடுப்பதால் பெரும்பாலோர் அதைப் போட்டுக் கொள்வதில்லை. அது இங்கே சுத்தி, அங்கே சுத்திக் கடைசியில் கொடுத்தவருக்கே போய்ச் சேர்ந்து விடும் என நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. என்னைப் பொறுத்தவரை சுமாரான துணியாக இருந்தாலும் அதை நல்ல ப்ளவுஸ் தைக்கும்போது லைனிங்காக வைக்கப் பயன்படுத்திக் கொண்டு விடுவேன். 80 சென்டி மீட்டர் ரவிக்கைத் துணி வந்தால் மட்டுமே அதை வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் கேட்டுக் கொண்டு கொடுப்பேன்.

சென்ற வாரம் ஒரு புது மாதிரியான ரசம் வைத்தேன், அது நன்றாக இருந்தது. அதை முகநூலில் பகிர்ந்திருந்தேன், பலருக்கும் அதன் சமையல் குறிப்பை நான் சொல்லலைனு வருத்தம்! எங்கள் ப்ளாகில் "திங்க"ற கிழமைக்குப் போடலாமோனு நினைச்சேன். அப்புறமா அதை இங்கேயே பகிரலாம்னு நினைச்சேன். ஹிஹிஹி, எழுத வேறே விஷயம் இருக்கு. 2,3 பதிவுகள் எழுதியும் வைச்சிருக்கேன். ட்ராஃப்ட் மோடில் இருக்கு. ஆனால் உடனே வெளியிட யோசனை. அதனால் இன்னிக்கு இந்த மொக்கை!

கீழே உள்ளது வெங்கடேஷ் பட் (சமையல் கலைஞர்) கொடுத்த குறிப்பு. செய்தும் காட்டினார்.

உடுப்பி ரசம்

தே.எண்ணெய்
மங்களூர் மிளகாய் 100 கி
தனியா 75 கி
வெந்தயம் 25 கிராம்
ஜீரகம் 25 கிராம்
கருகப்பிலை ஒரு கைப்பிடி

கடுகு, ஜீரகம், பமி தாளித்துக் கருகப்பிலை சேர்க்கவும். தக்காளியை வெட்டிச் சேர்க்கவும். மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும். புளிக்கரைசலைச் சேர்க்கவும்.வெல்லம் போடவும்.பருப்புத் தண்ணீரில் விளாவவும். பண்ணி வைத்திருக்கும் ரசப்பொடியில் தேவையானதைப் பருப்புத் தண்ணீரில் கலந்து வைக்கவும்.கொதிக்கும் ரசத்தில் கலக்கவும். பெருங்காயம் சேர்க்கவும். கொத்துமல்லி சேர்க்கவும்.

ஆனால் இதிலே ரசத்துக்குத் தாளித்துக் கொண்டு தக்காளியையும் வதக்கிச் சேர்த்துப் புளிக்கரைசல் சேர்ப்பதோ, வெல்லம் போடுவதோ எனக்கு ஒத்துவராத ஒரு விஷயம்! ஹிஹிஹி!  அதோடு மங்களூர் மிளகாய்க்கு நான் எங்கே போக? ஆகவே இதைக் கொஞ்சம் மாற்றி என் வசதிப்படி செய்தேன். ரசம் நன்றாகவே வந்தது. கீழே அதன் குறிப்பு. நான் செய்த முறை.

ஒரு வித்தியாசமான ரசம்:

தேவையான பொருட்கள். புளி ஒரு  நடுத்தர நெல்லிக்காய் அளவு எடுத்துக் கொண்டு ஊற வைத்துப் புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஒன்றரைக் கிண்ணம் இருக்கலாம்.

தக்காளி சுமாராக ஒன்று

பச்சை மிளகாய் தேவையானால் சிறிதாக ஒன்று

உப்பு தேவையான அளவு

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

பெருங்காயம், கருகப்பிலை

இரண்டு டீஸ்பூன் துவரம்பருப்பை மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். தனியாக வைக்கவும்.

வறுத்துப் பொடிக்க

மி.வத்தல் 2

தனியா(கொத்துமல்லி விதை) ஒரு டேபிள் ஸ்பூன்

கால் டீஸ்பூன் மிளகு

ஒரு டீஸ்பூன் ஜீரகம்

ஒரு டீஸ்பூன் வெந்தயம்

இவற்றை வறுத்துப் பொடிக்கவும்

தாளிக்க

நெய் இரண்டு  டீஸ்பூன்

கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் ஜீரகம்


புளிக்கரைசலை ஓர் ஈயக்கிண்ணம் அல்லது நீங்கள் வழக்கமாக ரசம் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றி அதில் பொடியாக்கிய துவரம்பருப்புப் பொடியையும் போட்டு அதோடு மஞ்சள் பொடி, பெருங்காயம், கருகப்பிலை, உப்புச் சேர்த்து நன்கு புளி வாசனை போகக் கொதிக்க வைக்கவும்.  நன்கு கொதித்ததும் வறுத்துப் பொடித்த பொடியைப் போட்டு தேவையான அளவுக்கு நீர் விட்டு ரசத்தை விளாவவும். மேலே நுரைத்து வந்ததும் ஓர் இரும்புக்கரண்டி அல்லது தாளிக்கும் பாத்திரத்தில் நெய்யை ஊற்றிக் கடுகு, மி.வத்தல், ஜீரகம் சேர்த்துக் கடைசியில் கருகப்பிலை போட்டு ரசத்தில் கொட்டவும். சூடான சாதத்தோடு சாப்பிடச் சுவையான ரசம் தயார்!

ரசம் படம் கூகிளில் தேடினதில் சரியாக் கிடைக்கலை. நான் வைக்கும்போது படம் எடுத்துத்தான் போடணும். :) ஈயச் செம்பில் வைப்பேன். கூகிளில் தேடினால் பீங்கான், எவர்சில்வர், காப்பர் பாட்டம் பாத்திரங்களே வருது! ரசமெல்லாம் ஈயச் செம்பில் தான் வாசனை! ருசி! 

31 comments:

  1. ஆடுப் பெருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் எல்கே.

      Delete
  2. உண்மைதான் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள் என்று பரவலாக பேச்சு இருக்கிறது ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்ததைவிட இப்பொழுது எல்லா பெண்மணிகளுமே... கழுத்தில் வடம் போன்ற சைசில் சங்கிலி போட்டு இருக்கின்றார்கள் நல்லா இருக்கட்டும்.

    இருப்பினும் மக்கள் கஷ்டப்படவில்லை எனில் சந்தோஷமே...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வீட்டு வேலை செய்பவர்கள் கட்டும் புடைவை போல் பணம் படைத்தவர்களிடமும் இருக்கிறது. இவர்களில் யார் பணக்காரர்? கடன் வாங்கி இவ்வளவுவிலை உயர்ந்த புடைவையை வீட்டு வேலை செய்பவர்கள் கட்டுகிறார்களா? எனில் கடனை எப்படி அடைப்பார்கள்? எல்லாமும் கேள்விக் குறியே. கடைகளில் பார்த்தால் சாமானிய மக்களே சற்றும் அஞ்சாமல் பொருட்களையும், துணிமணிகளையும் வாங்கிக் குவிக்கின்றனர்.

      Delete
  3. வித்தியாசமான ரசத்தை செய்து பார்க்க வேண்டும்... நன்றி அம்மா...

    ReplyDelete
    Replies
    1. ரசத்தைக் கவனிச்சதுக்கு நன்றி டிடி. :)

      Delete
    2. ரசத்தைக் கவனிச்சதுக்கு நன்றி டிடி.

      Delete
  4. என் கண்ணிலும் மிகக் குறைந்த அளவே ஏழைகள் (அடையாறில் குறவர்கள் சிலரைப் பார்ப்பேன். அவர்களைத் தவிர வேறு ஏழைகளே கண்ணில் படவில்லை, தாம்பரம் வரை) படுகின்றனர். மற்றவரெல்லாம் நல்லி சில்க்ஸ், சென்னை சில்க்ஸ், ரங்கனாதன் தெருவில் உள்ள எல்லாக் கடைகளிலும் தஞ்சம் புகுந்துவிட்டனர். நல்லதுதானே.

    சில வருடங்களுக்கு முன்பு சிலர் என்னிடம் சொன்னது. அரசு கொடுக்கும் 20 கிலோ இலவச அரிசியை, இந்த கையேந்தி பவன் கடைகள் வாங்கி, அதில்தான் இட்லி, தோசைக்கு அரைக்கின்றனர். அதனால்தான் 2-3 ரூபாய்க்கு அவர்கள் இட்லி கொடுக்கின்றனர். வீடுகளில் இந்த இலவச அரிசியை உபயோகப்படுத்துவதில்லை என்று.

    என்ன ரசமோ. கொத்துமல்லி வாசனை இல்லாத ரசம்னா, அது வேப்பம்பூ, மிளகு ஜீரகம், எலுமி ரசம் போன்றவைதான். அதிலும் வேப்பம்பூ ஜீரக ரசம் தவிர மற்றவற்றில் ரெண்டு கொத்தமல்லி இருந்தாலும் தவறில்லை. நீங்கள் போட்டுள்ளதையே நான் மாற்றிச் செய்து உங்களுக்கு முன்னால் 'தி' பதிவுக்கு அனுப்பவேண்டும் :))

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும், டிடிக்கும் பதில் கொடுத்திருந்தேன். க்ளிக் செய்தால் இணைய இணைப்பு அவுட்! அனைத்தும் டெலீட் ஆகி விட்டது! :(

      குறவர்கள் பலரும் இப்போது படித்து முன்னேறி விட்டார்கள். அம்பத்தூரில் நிறையக் குறவர்கள் பூ, பழம், காய்கறி வியாபாரம் செய்வதைக் காண முடியும். எல்லாத் துணிக்கடைகளிலும், பாத்திரக் கடைகளிலும் கூட்டம் தாங்கவில்லை. எனக்குத் தெரிந்து சற்றும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் சாமானிய மக்களே வாங்கிக் குவிக்கிறார்கள். வீட்டு வேலை செய்யும் பெண்ணும் கூட தன் யஜமானி அம்மாள் கட்டும் தரத்தில் புடைவை வாங்கிக் கட்டிக் கொள்கிறார். கடனுக்கு வாங்கி இருந்தால் அதை அடைப்பது எப்படி? ஒரே குழப்பம்! நானெல்லாம் கடனில் எதையும் வாங்குவதற்கு விரும்பியதே இல்லை. ஆனாலும் தீபாவளி சமயம் முன்னெல்லாம் கோ ஆப்டெக்ஸ் ஃபார்ம் வாங்கித் துணிகள் வாங்கி இருக்கோம். அப்படி இருந்தும் என் மாமியார், பெண், பையருக்கெல்லாம் கோ ஆப்டெக்ஸில் வாங்குவது சரியாக வராது.

      Delete
    2. இம்முறை பிரிச்சுக் கொடுக்கிறேன் பதிலை! இலவச அரசி கேரளாவுக்குக் கடத்தப்படுவதாகவே எல்லோரும் சொல்கிறார்கள். எங்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை மட்டும் உண்டு! ரசத்துக்குக் கொத்துமல்லி தேவைனாலும் எல்லா ரசத்துக்கும் தேவை இல்லை. பருப்பு ரசம், கொட்டு ரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம்(பருப்பு நீர் விளாவிய கல்யாண ரசம்), மைசூர் ரசம், பொரிச்ச ரசம், வெறும் தக்காளி ரசம் போன்றவற்றிற்குக் கட்டாயம் கொத்துமல்லி தேவை!

      ஜீரக ரசம், மிளகு ரசம்(பருப்பு நீர் விடாமல்) ஜீரகம், மிளகு வறுத்து அரைத்த ரசம், பூண்டு ரசம், கண்டந்திப்பிலி ரசம், போன்றவற்றிற்குக் கருகப்பிலை மட்டும் போதும். (இன்னும் இரண்டு ரசங்கள் விட்டுப் போய் விட்டன! அதுக்குள்ளே மறந்துட்டேன்! அரணை புத்தி!)

      Delete
    3. அப்புறமா நெ.த. தாராளமா நீங்களே எங்கள் ப்ளாக் "திங்க"ற கிழமைக்கு எழுதுங்க! போணி ஆகும். நானெல்லாம் எழுதினால் போணியே ஆகாது! :)

      Delete
    4. கண்டந்திப்பிலி - எங்கே கிடைக்கும்?

      Delete
    5. கொட்டு ரசம் பத்தி எழுதியிருக்கீங்கனு நினைக்கிறேன்.. பார்க்கணும்

      Delete
    6. குறவர் முன்னேற்றம் நெகிழ வைக்கிறது.

      Delete
    7. உங்க அனுபவம் எங்ககிட்ட எப்படி எதிர்பார்க்கலாம்? நான் நீங்க எழுதப்போறதுக்காக வெயிட்டிங்.

      Delete
    8. நெ.த. நான் என்னோட அனுபவத்தைத் தானே அதிகம் எழுதறேன். உங்களிடம் எங்கே எதிர்பார்க்கிறேன். நான் சொல்றது "திங்க"ற கிழமைக்கு நீங்க எழுதற சமையல் குறிப்புக்கு வாசகர் வட்டம் பெரிசுனு! :)

      Delete
  5. அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  6. கீதாக்கா இது கிட்டத்தட்ட மைசூர் ரசம் பங்களூர் ரசம் என்று 25 வருடங்களுக்கு முன் மங்கையர் மலரிலோ இல்லை வேறு எதிலோ வந்த குறிப்புகள் போல இரண்டும் கலந்தது போல இருக்கு என் நோட் புக்கில் எழுதி வைத்திருக்கிறேன் அப்போதையதை..மை கசிந்து பேப்பர் கிழியும் நிலையில் இருக்கு.

    பட் சொன்ன குறிப்பில் மிளகு இல்லை இல்லையா? மிளகு இல்லாமல் ரசமா? உங்கள் குறிப்பையும் குறித்துக் கொண்டேன்....பட்டின் குறிப்பையும் குறித்துக் கொண்டேன். நான் பார்த்த வரையில் பங்களூர், மைசூர், மங்களூர் ரசம் என்று சொல்லப்படுவதில் எல்லாம் வெந்தயம் சேர்க்கிறார்கள்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தில்லையகத்து/கீதா, வெங்கடேஷ் பட்டின் சமையல் குறிப்பில் மங்களூர் ரசம்னு தான் சொன்னார். இல்லை, இல்லை உடுப்பி ரசம்னு நினைவு. நான் என்னோட சமையல் குறிப்பில் மிளகு சேர்த்தேன்.

      Delete
  7. அக்கா உங்கள் செய் முறையில் தக்காளி குறிப்பில் சொல்லிவிட்டுச் செய்முறையில் தக்காளி போடச் சொல்லலையே!!ஹிஹிஹிஹி..

    நானும் து பருப்பை பொடியாக்கிச் செய்வதுண்டு...இதே முறையில்.....ஆனால் அளவு எல்லாம் கண்ணளவு ஆதலாம் இப்போது உங்கள் அளவைக் குறித்துக் கொண்டேன். செய்து பார்த்துடணும். நானும் ரசத்திற்கு தக்காளி வதக்கி எல்லாம் சேர்ப்பது இல்லை...

    மங்களூரி, மைசூர், பங்களூர் ரசம் என்று சொல்லபப்டுவதில் எல்லாம் வெல்லம் சிறிது சேர்க்கச் சொல்லுகிறார்கள். கல்யாணங்களிலும் கூடச் சேர்ப்பதாகக் கேட்டதுண்டு..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தக்காளியைச் சேர்க்கணும்னு எழுதி இருந்தேன். அது வெளியிடும்போது இணையம் படுத்திய படுத்தலில் கொஞ்சம் டெலீட் ஆகி இருக்கு! அதிலே போயிடுச்சுனு நினைக்கிறேன். நாம தான் திரும்பப் பார்த்துத் தப்பைச் சரி செய்யும் வழக்கமே இல்லாதவங்களாச்சா! கவனிக்கவே இல்லை! :)

      Delete
  8. குறிப்பு அருமை. வீட்டில் மகளிடம் சொல்கிறேன். அவளுக்குப் புதிது புதிதாகச் செய்யப் பிடிக்கும் நன்றி கீதாமா.

    ReplyDelete
    Replies
    1. செய்து சுவைத்துப் பாருங்க வல்லி.

      Delete
  9. மங்களூர் மிளகாய் என்றால் எப்படி இருக்கும் - பட்னு சொன்னாரா பட்?
    உங்கள் முறையில் செய்து பார்க்கிறேன். என் மகன் சாப்பிடும் இந்திய உணவு ரசம் மற்றும் இட்லி. ரசத்தில் இட்லியை மூழ்கவிட்டு சாப்பிடும் ஒரே ஆசாமி இவனாக இருக்கலாம்.

    ReplyDelete
  10. காய்கறி விலைகள் நித்தமும் மாறுகின்றன. தக்காளி 100, 120 என்று ஏறி, இப்போதுதான் 55 ரூபாய்க்கு இறங்கி இருக்கிறது.இந்தமுறை எரிவாயு 15 நாட்களில் அகாரணமாய் தீர்ந்து, அதைக் கேள்வி கேட்கப்போய் லைன்மேனுடன் சண்டை. அப்போ 574 ரூபாய் + 50 ரூபாய் லஞ்சம். அதுவும் 15 நாட்களுக்கு ஒருமுறை.. இப்போ இறங்கியிருக்காம்.

    எங்கள் ப்ளாக்குக்கு வேறு ரெஸிப்பி புது.....சாக அனுப்புங்கள்.

    ரசத்தில் வெல்லமா! அய்யே....

    ரசம் ரசம்!

    ReplyDelete
    Replies
    1. என் மாமியார் வீட்டில் எல்லாத்துக்கும் வெல்லம் சேர்ப்பார்கள். ஹிஹிஹி, நான் சேர்க்கமாட்டேன். ஆகவே இங்கே வெங்கடேஷ் பட் சொல்வது எனக்குப் புதுசு இல்லை. :)

      Delete
  11. இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த விலைகள் மலிவாகத் தோன்றுகிறதே?

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

      ஆனா இன்றைக்கும் அனேகமா இந்த விலைதான் அப்பாதுரை சார்....

      Delete
    2. Then the prices are stagnated. Right? :))))))

      Delete
  12. கர்நாடகா சமையலில் பெரும்பாலும் வெல்லம் சேர்க்கிறார்கள் எங்கோ தொடங்கி எங்கோ முடிந்ததோ

    ReplyDelete