எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 09, 2017

யார், யாரை மன்னிப்பது?

ராமாயணத்தைக் கற்பனை எனச் சொல்பவர்களும் சரி, அதை உண்மை எனச் சொல்பவர்களும் சரி ஒரு விஷயத்தில் ஒத்த கருத்துடனேயே இருக்கின்றனர். அது தான் சீதை தீக்குளித்தது பற்றியது! உண்மையில் ராமாயணத்தை ஒப்புக் கொள்பவர்கள் அதைச் சீதை செய்த பெரிய தியாகமாக ஏற்றுக் கொண்டு விட ஒப்புக் கொள்ளாதவர்கள் தான் அநேகமாக ராமனைக் குற்றம் சொல்கின்றனர். அதிலும் பலரும் ராமன் தான் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதாக நினைக்கின்றனர். ராமன் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை. வால்மீகியை நன்கு படித்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.


வால்மீகி ஆசிரமத்தில் ராமர் சந்நிதி!

ஆனால் அதை இங்கே சுட்டினாலும் சிலருக்குப் பிடிக்கவில்லை. மூலத்தில் இப்படி இருக்குனு சமஸ்கிருதத்தைக் காட்டுவதில் பெருமை, சந்தோஷம் கொள்கிறேன், அதனால் சொல்கிறேன் என நினைக்கின்றனர்! வால்மீகியை ஒட்டியே எழுதிய கம்பரும் சரி, துளசிதாசரும் சரி ராமனை ஓர் அவதாரமாகக் கடவுளாகக் காட்டி இருக்கின்றனர், வால்மீகி ஒருத்தர் தான் ராமனை மனிதனாகக் காட்டி இருக்கின்றார். ஆகவே சாதாரண மனிதன் செய்யும் செயலைத் தான் ராமன் இங்கே செய்கிறான். அப்படி இல்லாமல் ராமன் சீதையை அப்படியே ஏற்றுக் கொண்டிருந்தால் ராமாயணக் கதையின் போக்கு என்னவாகும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நாமே சொல்வோம். பதினான்கு மாதங்களுக்கும் மேல் இன்னொருவனுடைய வீட்டில் இருந்த சீதையை ராமன் சிறிதும் வெட்கமின்றி ஏற்றுக் கொண்டிருக்கிறானே! இவன் மனைவி மேல் கொண்ட அழியாக் காமத்தால் அல்லவோ (கவனிக்கவும், காதல் அல்ல, காமம்) இப்படி நடந்து கொண்டான் என்போம். ஆக நாம் என்னமோ ராமன் என்ன செய்திருந்தாலும் ஒத்துக்கப் போறதில்லை. குற்றம் தான் சொல்வோம்.  ஆனால் சீதையோ எனில் ராமனைப் புரிந்து கொண்டாள்.

மேலும் சீதைக்கு ராமன் மனது தெரியாமலோ,ராமனுக்கு சீதையின் மனம் தெரியாமலோ, அல்லது அவள் கற்பிற் சிறந்தவள் எனத் தெரியாமலோ இல்லை. எனினும், உலகத்தார் கண் முன்னால் சீதை தன் கற்பை நிரூபிக்கவேண்டும் எனவே ராமன் விரும்பி இருக்கின்றான். சீதையும் தன் கணவனின் மனக் குறிப்பை அறிந்து அதை நிறைவேற்றத் துணிந்திருக்கிறாள். இதையே சீதை நெருப்பிலிருந்து மாசுபடாமல் வெளியே வந்தபோது ராமரும் தன்னிலை விளக்கமாயும் அளிக்கின்றார். எனினும் ஒரு மானுடனாகவே வாழ்ந்த ராமர் இந்த இடத்திலும் மானுடனாகவே, சாதாரண மனிதன் எவ்வாறு தன் மனைவியிடம் கோபத்துடனும், அதிகாரத்துடனும், கடுமையாகவும் நடப்பானோ அவ்வாறே நடந்து, தான் மனிதனாய் இருப்பதில் இருந்து சற்றும் மாறவில்லை என நிரூபித்திருக்கின்றார் என்றும் கொள்ளலாம்.

ஆகவே தான் தன் மேல் உள்ள நம்பிக்கையாலேயே சீதை தன் கணவன் தன்னை இவ்வாறு பேசும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொண்டாள் என்றே சொல்லவேண்டும். அக்னி கூடத் தீண்ட அஞ்சும் அளவுக்கு சீதை பரிசுத்தமானவளே என்பதை ராமர் புரிந்து வைத்திருந்ததாலேயே சீதை அக்னிப்ரவேசம் செய்யத் தயார் ஆனபோது மறுக்கவில்லை, தடுக்கவில்லை. தன் மனைவி பரிசுத்தமானவளே என்பது தன் மனதுக்கு மட்டும் தெரிந்து தான் மனைவியைச் சேர்த்துக் கொண்டால், உலகிலுள்ளோர் பெண்ணாசையால் பீடிக்கப் பட்ட ராமன் பிறர் வீட்டில் மாதக் கணக்கில் இருந்தவளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டுவிட்டானே எனப் பேசக் கூடாது என்ற எண்ணம் மட்டும் காரணம் இல்லை. தன் மனைவி தனக்கு வேண்டும், ஆனால் அதே சமயம் அவளைப் பிறர் குற்றம் காணாத வகையிலும் இருத்தல் நல்லது. என்று யோசித்தே ராமர் இந்த முடிவுக்கு வந்தார் எனவும் கூறலாம்.

இதிலே பலருக்கும் சீதையைப் பிரிந்து ராமனும் தனியாகத் தானே இருந்தான்! அவனை ஏன் சீதை தீக்குளிக்கச் சொல்லவில்லை என்பது ஒரு கேள்வி! ஆரம்பத்திலிருந்தே ராமன் சீதையைத் தீக்குளிக்குமாறு சொல்லவே இல்லை. அதோடு சீதை மட்டுமே ராவணன் மாளிகையில் தனியாக இருந்தாள். ஆனால் ராமனோ! தன் தம்பி லக்ஷ்மணனோடு சீதையைத் தேடி அலைந்தான். வழியில்ஜடாயு, வானரங்கள் ஆகியோரைப் பார்க்கிறான். வானரங்கள் கூட இருக்கின்றரே????? அதை மறந்து விட்டீர்களா? தன் தவக்கோலத்தைக் கலைத்துக் கொண்டானா என்ன? இல்லையே! அதே தவ வாழ்க்கைதானே!

ராமனோ, அசோகவனத்தில் சீதையோ, தப்பாய் நடந்ததாய் எங்கானும், யாரானும் ஒரு பேச்சுப் பேசி இருக்காங்களா என்ன? ஆகவே சீதை ராமரை சந்தேகிக்கவேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இருவருக்குமே நன்றாகத் தெரியும், உலகத்தார் கண்களுக்கு உண்மை நிரூபிக்கப் பட வேண்டும் என.. சீதை தான் அந்நியர் வீட்டில் இருந்தாளே ஒழிய, ராமன் எந்த நாட்டிலும்  நகருக்குள் எந்த இடத்திலும் நுழையவே இல்லை. தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதி 14 வருடம் வனவாசம்.அந்தப் பதினான்கு வருடம் முடியும் முன்னர் அவன் எந்த நகருக்குள்ளும் நுழைந்து தன் பிரதிக்ஞையை உடைக்க விரும்பவில்லை. தனியாக இருந்தபோதும், தன் தவங்களைக் கைவிடவில்லை என்று ராமனே, சீதையிடம் சொல்கின்றானே, இந்தச் சந்திப்பின் போது.


ராமன் செய்தது சரினு யாருமே சொன்னதில்லையே! உண்மை தான்! ஏனெனில் ஒரு சாதாரண மனிதன் போல, அற்ப எண்ணம் கொண்டவனாக நடந்து கொண்டான் என்றே சொல்லி இருக்கிறேன், வால்மீகியும் அப்படியே தான் சொல்லி இருக்கின்றார். அதை மறுக்க வேண்டுமென்றால், நான் கம்பராமாயணம் மட்டுமே எழுதி, ராமனை ஒரு அவதார புருஷன் என்று சொல்லி இருக்க வேண்டும் இல்லையா?? அப்படி எங்கே சொன்னேன்??இன்றைய மனிதன் எப்படித் தன் மனைவியிடம் கோபம் வரும்போது நடப்பானோ அப்படித் தான் இதிகாச ராமனும் நடந்து கொண்டான். அதை யாரும், எங்கேயும், எப்போதும் மறுத்துப் பேசியதில்லை. அதனால் ராமன் புகழ் மங்காது. தன் தவறை உணர்ந்து வருந்தும்போதுதான் ஒருவர் புகழ் ஓங்கும். அந்த விதத்தில் சீதையைப் பிரிந்து வருந்தும்போதுதான், ராமன் புகழே ஓங்கியது என்று சொல்லலாமோ???

ஆனால் ஒரு விஷயம் இங்கே முக்கியமாச் சொல்லியே ஆகணும். சீதை தான் கருவுற்றதுமே மீண்டும் காட்டில் சென்று வாழ ஆசைப்படுகிறாள். கர்ப்பிணிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவது ஒரு கட்டாயமாக இருக்கிறது அல்லவா? ஆகவே தன் விருப்பத்தைத் தன் அருமைக் கணவனிடமும் தெரிவித்துக் கொண்டு தான் இருந்தாள். ஆனால் அவள் காட்டிற்குச் செல்ல அவள் விருப்பம் மட்டும் இல்லாமல் இம்மாதிரியான பழி ஏற்கும் சூழ்நிலை ஒன்றும் உருவாகி விட்டது. ஆகவே ராமன் அவளைக் காட்டுக்கு அனுப்பியே ஆகவேண்டும் என்று முடிவு செய்கிறான். இந்த முடிவு அவனாக ஓர் அரசனாக எடுத்த முடிவு! குடிமக்களின் சந்தேகத்தைப் போக்க வேண்டியது ஓர் அரசனின் கடமை! நல்லாட்சி கொடுக்கிறான் என்னும் நம்பிக்கை மக்கள் மனதில் பதிய வேண்டும். அதற்குத் தான் தன் குடும்பத்தைத் தியாகம் செய்தே தீர வேண்டும்.

ஆகவே மனைவியை மட்டுமின்றி அவள் வயிற்றில் வளர்ந்து வந்த குழந்தைகளையும் சேர்த்தே ராமன் தியாகம் செய்கிறான். ஆனால் அதற்குப் பின்னர் எந்தப் பெண்ணையும் ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. காட்டில் சீதை ராமனைப் பிரிந்து எவ்வளவு தவித்தாளோ அதற்குச் சற்றும் குறையாமல் அரண்மனை வாழ்வில் ராமனும் தவித்துக் கொண்டிருந்தான்.  அதோடு இல்லாமல் உத்தர காண்டமே பிற்சேர்க்கை எனக் கூறப்படுகிறது. மூலமான வால்மீகி ராமாயணத்தில் இது இல்லை என்றும் பாலகாண்டமும், உத்தரகாண்டமும் பிற்சேர்க்கை எனவும் அவற்றில் தான் ஶ்ரீராமனை ஓர் அவதாரம் எனவும் மஹாவிஷ்ணுவின் அம்சம் என்றும் கூறி உள்ளதாகச் சொல்கின்றனர்.

மூல ராமாயணம் எனக் கருதப்படும் மற்றக் காண்டங்கள் இரண்டிலிருந்து ஆறு வரையிலும் ராமனை ஓர் வீரதீரக் கதாநாயகனாக, எடுத்துக்காட்டு உதாரண புருஷனாகவே சித்திரிக்கிறது. அதோடு உத்தரகாண்டத்தை வால்மீகியே எழுதினார் என வைத்துக் கொண்டாலும் அதில் பட்டாபிஷேஹத்துக்குப் பின்னர் ராமனும், சீதையும் எவ்வளவு அன்புடன் ஒருவருக்கொருவர் இருந்து வந்தார்கள் என்பதையும் அவர்களின் சந்தோஷமான மாலை நேரங்களையும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.  அவர்கள் திரும்பி வந்து  ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த சந்தேகமும் எழுப்பப்படுகிறது.  ஆகவே ராமன் மிகுந்த மனக்கஷ்டத்தோடு தான் இந்த முடிவை எடுத்திருக்கிறான். அதை சீதைக்கு நேரே சொல்லும் மன உறுதி அவனிடம் இல்லை என்பதால் லக்ஷ்மணனை அழைத்துச் சொல்கிறான்.  லக்ஷ்மணன் மறுக்க ஒரு மன்னனாக அவனுக்கு ஆணை இடுகிறான்.


சீதை மண்ணுக்குள் போனதாகச் சொல்லப்படும் இடம். வால்மீகி ஆசிரமம்

இந்தப் படங்கள் ஏற்கெனவே போட்டிருக்கேன்.

சீதை இல்லாத அந்தக் கடைசி வருடங்களில் ராமன் இரவுத் தூக்கம் இல்லாமல், காட்டில் தவ வாழ்க்கை மேற்கொண்ட போது உணவு உண்ட மாதிரிக்கொஞ்சமாக உண்டு மனதில் வேறு பெண்ணைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் வாழ்ந்து வந்தான். இப்போதைய பெண்களுக்கு ராமன் செய்தது தப்பு என்று கூறி விட முடியும்! கூறுகின்றனர்! கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களில் எவருக்கும் ஒரு மன்னனின் பொறுப்புகள், கடமைகள் என்னவென்று புரிந்து கொள்ள முடியாது.  ஒரு நாட்டையே வழி நடத்த வேண்டியவர்கள்,  ஜனங்களுக்கு வழிகாட்டியாகவும்  அரசனாகவும், அவர்களுக்குத் தன் கடமையைச் செய்பவர்கள், சேவை மனப்பான்மையில் ஊறியவர்கள் போன்றோருக்குக் குடும்பம் ஒரு சுமை என்பதை இன்று கூடப் பார்க்கிறோம்.

தங்களுடைய சொந்த சுக, துக்கங்களைத் தியாகம் செய்தே பலரும் தலைமைப்பதவிக்கு வர முடிகிறது. அப்படிப்பட்டவர்களால் தான் மக்கள் தொண்டு ஆற்றவும் முடியும்.  இதற்குப் பல உதாரணங்கள் உண்டு!  ஆகவே ராமனை சீதையோ, சீதையை ராமனோ மன்னிக்க வேண்டியதில்லை. எனினும் ராமன் தன்னைக் காட்டுக்கு அனுப்பியும் ஓர் மன்னனாகத் தன் கடமையைத் தான் செய்திருக்கிறான் என்பதை சீதை புரிந்து கொண்டாள்.

ஆகவே தான் சீதை ராமனை மன்னித்தாள்!

34 comments:

 1. நல்ல விளக்கங்கள். ஆன்மீக விஷயங்களிலும் உங்களை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது. வாலமீகி ராமாயணம், கம்பராமாயணம், துளஸி ராமாயணம் எல்லாமே நீங்கள் பிடித்திருப்பதால் உங்கள்மூலம் நாங்களும் தெளிவு பெறுகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், எனக்குக் கம்பராமாயணம் அவ்வளவாப் பரிச்சயம் இல்லை! ஹிந்தி படிச்சப்போ துளசி ராமாயணம் படிக்க நேர்ந்தது. கூடவே மைதிலி ஷரண் குப்தாவின் "சாகேத்" ராமாயணமும்!

   Delete
 2. ஆன்மீகம், அதிலும் ராம, கிருஷ்ண அவதாரங்கள் சம்பந்தமானது, மத்திய அரசு செய்ய நினைக்கும் நல்ல திட்டங்கள் - இந்த டாபிக்ல எல்லாம் நீங்க நல்லாத் தெரிஞ்சுதான் எழுதுறீங்க. வாழ்த்துக்கள்.

  ராமர் சொல்றார் - என் அவதாரம் முடிஞ்சு அடுத்து கிருஷ்ணாவதாரம் முடிஞ்சு, உலகம் போற போக்கைப் பார்த்தால், நான் திட்டமிட்டதற்கு வெகு முன்னாலேயே கல்கி அவதாரம் எடுக்கவேண்டி வந்துடும் போல இருக்கு. மக்கள்ல சிலர் என்னடான்னா, என் காலத்தில் நடந்ததையே இன்னமும் பேசிக்கிட்டிருக்காங்க. ராஜ்ஜிய மக்கள் சந்தோஷமாக இருந்தாங்க, குடிமகன்களுக்கு ஏற்ற ஆட்சி நடந்தது, அதைப் பத்தியெல்லாம் ஆராய்ச்சி பண்ணி, சரி நாமும் இப்படி நடந்துப்போம்னு பேசாமல், ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டு சர்ச்சை பண்றதே இந்தக் கலியுகத்துல சிலர் வேலையாப்போயிடுத்து.

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்வது உண்மை தான் நெ.த. இப்போத் தேவையே இல்லாமல் ராமர் காலத்தில் ராமன் நடந்து கொண்டது தானே அனைவருக்கும் பேசு பொருளாக இருந்து வருகிறது! :(

   Delete
 3. விளக்கங்கள் அருமை சகோ எனக்கும் புரிகிறது ராமாயணம் நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, உங்களுக்குப் புரியாமலா இருக்கும்? நன்றிங்க! :)

   Delete
 4. அன்பின் கீதா மேடம் . எங்கள் ப்ளாகுக்கு சீதை ராமனை மன்னித்தாள் என்ற தலைப்பில் எழுதியவருள் நானும் ஒருவன் ராமாயணம் ஒரு புனைவு என்றே நினைக்கிறேன் இந்த நிலையில் சீதை ராமனை மன்னித்தாள் என்பதை கம்பராமாயண வரிகளின் உதவியுடன் எழுதி இருந்தேன் /யாது யான் இயம்புவது உணர்வை ஈடு அறச்
  சேதியா நின்றது உன் ஒழுக்கச் செய்தியால்
  சாதியால் அன்று எனின் தக்கது ஓர் நெறி
  போதியால் என்றனன் புலவர் புந்தியான் /
  /நான் பலவற்றைக் கூறுவது ஏன் ?உன் தீயொழுக்கம் என் அறிவை வலிமையற அறுக்கின்றதுஆதலால் இப்போது நீ செய்யக் கூடியதுஎன்னவென்றால் இறப்பாயாக..!அங்ஙனமின்றேல் உனக்குத் தக்கதொரு இடத்துக்குச் செல்வாயாக, என்று ஞானிகளின் மனதில் இருப்பவனான இராமன் சொன்னான்/ ராமாயணக் கதா பாத்திரங்களை ஒரு புனைவாகவே அணுகும் என் போன்றோருக்கு ஒரு தலைப்புக்கு எழுத நேரும்போது தமிழில் இருந்த கம்பனின் இராம காதையே உதவியது மற்றபடி சம்ஸ்கிருதமூலம் ஆன வால்மீகி ராமாயணம் குறித்து கருத்துச் சொல்ல முடியவில்லை

  ReplyDelete
  Replies
  1. ஐயா, புனைவாக நடந்த ஒரு கதையின் நாயகன் எப்படி நடந்து கொண்டான் என்பதற்கு நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் ஏன் கொடுக்கிறீர்கள் என்பதே புரியவில்லை! நான் ராமாயணம் நடந்தது என நம்புகிறேன்.

   Delete
  2. அது ஒரு நல்ல புனைவு மேலும் அதன் அடிப்படையில் எழுதச் சொல்லிக் கேட்டதால்தான் இவ்வளவு ஆராய்ச்சியும்

   Delete
  3. என்னோட கேள்விக்கு இது பதில் இல்லை ஐயா! புனைவுக் கதையை இருக்கிறபடியே தானே படிக்க வேண்டும்! அதுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்க? படிக்கும் எல்லாக் கதைகளையும் படிச்சுட்டுச் சும்மாத் தானே இருக்கோம்! தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் காட்டாததா? அவற்றை எல்லாம் பார்த்துட்டு இது இப்படித் தான் எனப் பேசாமல் இருக்கோமே! :)

   Delete
 5. -- ​//​
  கம்பரும் சரி, துளசிதாசரும் சரி ராமனை ஓர் அவதாரமாகக் கடவுளாகக் காட்டி இருக்கின்றனர், வால்மீகி ஒருத்தர் தான் ராமனை மனிதனாகக் காட்டி இருக்கின்றார்.​//

  ராம்னைக் கடவுளாக எண்ணி அயோத்தியில் கோயில் கட்ட முற்படும் சங் பரிவார் உங்கள் வீட்டுக்கு வந்து விடப் போகிறார்கள். ராமன் கடவுள் தான் என்று ஒரு மறு பதிவு எழுத வேண்டும்.

  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. http://sivamgss.blogspot.in/2008/07/72.html

   http://sivamgss.blogspot.in/2008/07/72_12.html

   http://sivamgss.blogspot.in/2008/07/blog-post_13.html

   http://sivamgss.blogspot.in/2008/07/blog-post_16.html

   வாங்க ஜேகே அண்ணா, மேற்கண்ட சுட்டிகளில் நான் ஏற்கெனவே வக்காலத்து வாங்கி இருப்பது சங்கப் பரிவாருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆகவே நான் மறுபதிவு எழுத வேண்டிய அவசியம் இல்லை! வட மாநிலங்களில் ராமனை "மர்யாதா புருஷோத்தம்" என்று தான் சொல்லுவார்கள். மரியாதைக்கு உரிய மனிதர்களில் உத்தமமானவன் என்னும் பொருளில். :)

   Delete
 6. அதோடு இல்லாமல் உத்தர காண்டமே பிற்சேர்க்கை எனக் கூறப்படுகிறது. மூலமான வால்மீகி ராமாயணத்தில் இது இல்லை என்றும் பாலகாண்டமும், உத்தரகாண்டமும் பிற்சேர்க்கை எனவும் அவற்றில் தான் ஶ்ரீராமனை ஓர் அவதாரம் எனவும் மஹாவிஷ்ணுவின் அம்சம் என்றும் கூறி உள்ளதாகச் சொல்கின்றனர்.// ஆம் அக்கா! நானும் துளசிராமாயணமும், அத்யந்த ராமாயாணமும் தமிழில், ஆங்கிலத்த்ல் வாசித்திருக்கிறேன்.

  சீதை ராமனிடம் தான் காட்டிற்குச் செல்ல விரும்புவதாகவும், மும்பு வனவாசம் இருந்த போது தங்களுக்கு உதவிய முனிவர்களுக்குப் பரிசுகள் வழங்கி அவர்களுக்கு நன்றி கூறும் விதத்தில் அவர்களுடன் இருந்துவிட்டு வரவும் ஆசைப்படுகிறாள். அதில் ராமனுக்கு முதலில் விருப்பமில்லை. வனவாசம் முடிந்து இப்போதுதான் வந்து மகிழ்ச்சியாக இருக்கிறோம் மீண்டும் வனவாசம் பிரிதல் வேண்டாம் என்று சொல்லி சமாதானப்படுத்தும் வேளையில் தான் அந்த ஒற்றன் கூறும் செய்தி. வண்ணான் ஒருவன் ராமனை இழிவாகப் பேசியதாக. உடன் ராமன் தன் சகோதரர்களை அழைப்பான். அப்போது கூட இலக்குமணனை அதில் சேர்த்துக் கொள்ள மாட்டான் ஏனென்றால் ராமன் சொல்லிய சொல்லுக்கு மறு பேச்சு என்பதே லஷ்மணன் செய்ய மாட்டான். எனவே ராமன் மற்ற இரு சகோதரர்களிடமும் இதைப் பற்றி கலந்தாலோசித்துத் தன் முடிவையும் சொல்லுகிறான். சீதையும் முனிவர்களுடன் இருக்க விரும்புவதால் இப்போது அதையே நிறைவேற்றலாம் என்று சீதையை லஷ்மணனை க் கொண்டு விடச் சொல்கிறான். லக்ஷ்மணனுக்கு மனம் மிகவும் வருந்தும் என்றாலும் அண்ணன் சொற் பேச்சுக்கு மறு பேச்சில்லையே அதனால் சீதையை ரதத்தில் கொண்டு செல்லும் போது சீதை மகிழ்வுடன் தான் செல்கிறாள். இறக்கி விடும் சமயம்தான் லஷ்மணன் சீதையிடம் காரணம் சொல்லுவதாக வருகிறது. விட்டுவிட்டு மன்னிபும் கேட்டுவிட்டு லஷ்மணன் சென்று விடுகிறான் அப்போது சீதை மயங்கிவிடுவதாகவும் அங்கு வரும் ஆஸ்ரமத்தைச் சேர்ந்தவர்கள் அருகிலிருந்த வால்மீகி ஆஸ்ரமத்தில் கொண்டுவிடப்படுவதாகவும் வருகிறது. அப்போது அங்கிருக்கும் ஆஸ்ரமத்துப் பெண்களுடன் பெசும் போது சீதை தனக்கு நேர்ந்தது தான் சிறு வயதில் செய்த ஒரு தவறினால் அதற்கான பலனைத்தான் அனுபவிப்பதாகச் சொல்லுகிறாள். இளம் பருவத்தில் தன் அரன்மனைக்கு வந்த சோடிக் கிளிகளில் பெண் கிளியை சீதைக்குப் பிடித்துப் போக ஆண் கிளி அதை அழைத்துச் செல்ல சீதை மறுத்து பெண் கிளியைத் தன்னுடன் வைத்திருக்க விரும்பி ஆண் கிளியை அனுப்பி விடுகிறால். பெண் கிளி கருவுற்றிருக்கிறது. ஆண் கிளி தன்னையும் தன் இணையையும் பிரித்ததற்க்காகச் சீதைக்குச் சாபம் கொடுக்கிறதாகவும் சீதையும் கருவுற்றிருக்கும் போது தன் கணவனைப் பிரிந்து வாழ்வாள் என்றும் சாபமிட்டதால்தான் தான் இப்படித் துன்ப நேர்கிறது என்று சொல்லுவதாகவும் வாசித்த நினைவு.

  நல்ல விளக்கங்கள் கீதாக்கா...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதா. கிளிக்கதை அத்யாத்ம ராமாயணத்தில் படித்த நினைவு. இதை காமகோடி என்னும் மாதாந்தரி புத்தகத்தில் வரகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதியதைப் போட்டு வந்தார்கள். (நம் மீசைக்கார பாரதி அல்ல! இவர் இன்னொரு சுப்பிரமணிய பாரதி!) அதிலே படிச்சிருக்கேன். மற்றபடி நீங்கள் குறிப்பிட்டிருப்பவை குறித்து நானும் ராமாயணம் எழுதுகையில் எழுதி இருக்கேன்.

   http://sivamgss.blogspot.in/2008/07/600-79.html

   http://sivamgss.blogspot.in/2008/07/80.html

   மேற்கண்ட சுட்டிகளில் காணலாம். நன்றிம்மா கருத்திற்கும் ஆதரவிற்கும்.

   Delete
 7. விளக்கங்கள் சொல்ல உங்களால் மட்டுமே முடியும் அம்மா...

  நன்று... நன்றி...

  ReplyDelete
 8. நாம் மன்னிப்பது ஒரு மனிதனை. மனிதனாக வாழ்ந்த ஒரு அரசனை.
  இருவர் வாழ்க்கையிலும் அனுபவித்த துன்பங்கள்
  இனி யாருக்கும் வேண்டாம். அருமையான விளக்கங்கள் கீதா மா.

  ReplyDelete
 9. வம்பிழுக்காமல் விளக்கமளித்ததற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்க அசோகன் குப்புசாமி! வம்பு இழுப்பது நமக்கு அல்வா சாப்பிடறாப்போல்! :) முதல் வருகை?

   Delete
 10. நல்ல விளக்கங்கள்.....

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட்!

   Delete
 11. Replies
  1. அட! எல்கேயைக் கூட வர வைச்சுட்டாரே ராமர்? :)

   Delete
 12. நீங்கள் சொல்வது ஒருபுறம் ஏற்புடையதாக இருந்தாலும் பல கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாது என்னுள்ளும் இராமயணம் படித்து ரொம்ப வருஷங்களாக சிலபல கேள்விகள் தொடர்கின்றன நீங்கள் அதை திரும்பவும் நியாபக படுத்திவிட்டீர்கள் நானும் என் கேள்விகளை பதிவாக போட முடியுமா என்று பார்க்கிறேன் இங்கு கேட்டல் அது பெரிய பதிவு போல் ஆகிவிட கூடும்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கேள்விகளை இங்கேயே கேட்டிருக்கலாம். பரவாயில்லை. பதிவாகப் போட்டபின்னர் சுட்டி கொடுங்கள். முடிந்தால் பதில் அளிக்கிறேன்.

   Delete
  2. நான் படிக்கும்பருவதில் இருந்த போது தோன்றிய கேள்விகள் அவைகள் இன்றும் காலாவதி ஆகாமல் இருக்கு அவ்ளளவுதான் ஞாணமுடன் இருக்குமா என்ற தயக்கமுள்ளது

   Delete
  3. எப்போது தோன்றினால் என்ன? சந்தேகம் சந்தேகம் தானே! கேளுங்கள். பதில் தெரிந்தால் கொடுப்பேன். இல்லை என்றால் தெரியலைனு சொல்லிடுவேன். :)

   Delete
 13. சம்பவங்கள் நடந்ததாகச் சொல்லப்படும் காலகட்டத்தில் தர்மம் எப்படிச் சொல்லப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். தற்காலத்தை இதோடு ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல.
  மூல கதையில் எழுதியிருப்பதையே சரியெனக் கொள்ள வேண்டும் என்பதே என் கருத்தும். உங்கள் அழகான விளக்கத்துக்கு மிக்க நன்றி.
  ராமாயண விளக்கங்களை நான் 'ராமாயணப் பேருரைகள்' (by 'silver tongue' Srinivasa Sastri) புத்தகத்தில் படித்து வியந்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மிகிமா, ரொம்பச் சரியானது நீங்க சொல்வது. ஶ்ரீநிவாச சாஸ்திரியின் ராமாயணப் பேருரைகள் படிச்சதே இல்லை! அப்படி ஒரு புத்தகம் இருப்பதே நினைவில் இல்லை. புத்தகத்தைப் பார்க்கணும். தகவலுக்கு நன்றி. நான் பெரும்பாலும் வேளுக்குடி உபந்நியாசங்கள், மற்றப் பழைய பாகவத உபந்நியாசங்கள், போன்றவற்றைப் படித்து கேட்டே சொல்லுகிறேன். மீண்டும் மீண்டும் ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து ராமாயணத்தைப் படிப்பதால் முன்னர் புரியாதவை இப்போது புரிய ஆரம்பிக்கிறது.

   Delete
 14. Replies
  1. நன்றி மொஹமது அவர்களே!

   Delete
 15. உங்கள் விளக்கங்களும் பின்னூட்டங்களில் வந்த அலசல்களும் மிகவும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. நன்றி, மனோ சாமிநாதன். ராமர் வராதவங்களை எல்லாம் வர வைச்சுட்டார். :)

   Delete