எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 19, 2017

காவிரி புஷ்கரம் என்றால் என்ன?

காவிரி புஷ்கரம் பற்றிப் பலருக்கும் பல சந்தேகங்கள். தம்பி வாசுதேவன் இதோ இங்கே போட்டிருக்கார்.
காவிரி புஷ்கரம்

இது புண்ணிய நதி தீர்த்தங்களில் ஒவ்வொரு நதி தீரத்திலும் ஒவ்வொரு மாதம் கொண்டாடப் படும். இதற்குப் பலரும் பல கதைகள், புராணங்களை மேற்கோள் காட்டுகின்றார்கள். முக்கியமாய்ச் சொல்வது என்னவென்றால்:-

ராஜஸ்தானின் அஜ்மேர் நகருக்கு அருகே புஷ்கர் என்னும் ஊர் ஒன்று இருக்கிறது. இந்தியாவிலேயே பிரம்மாவுக்குக் கோயில் அதுவும் தனிக் கோயில் அமைத்து வழிபடுவது அங்கே மட்டும் தான். தமிழ்நாட்டில் ஒரு சில கோயில்களில் பிரம்மாவுக்கும் வழிபாடு இருந்தாலும் பெரும்பாலும் கோஷ்டத்திலேயே பிரம்மா காணப்படுவார். ஆனால் இந்தப் புஷ்கரத்தில் மூலஸ்தானத்திலேயே பிரம்மா தான்.  இந்தப் புஷ்கர் நகரில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பெரிய திருவிழா நடைபெறும்.   இந்தப் புஷ்கர் நகரில் பிரம்மாண்டமான ஓர் ஏரி உண்டு. இதை சர்வ தீர்த்தங்களுக்கும் ராஜாவான புஷ்கரர் என அழைப்பார்கள். இந்தப் புஷ்கரர் பிரம்மாவின் கமண்டலத்தில் இருந்தாராம். உலகில் உள்ள மூன்றரைக் கோடி தீர்த்தங்களுக்கும் இவரே அதிபதி எனப்படுவார்.

அப்போது பிரஹஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பிரம்மாவிடம் தனக்கு சர்வக்ஞத்துவமும், கிரஹங்களின் அதிபதியாக இருக்கவேண்டும் எனவும் அனைவராலும் தான் துதிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அதோடு பிரம்மாவின் கமண்டலத்தில் இருந்த புஷ்கரரைத் தம்மிடம் தருமாறும் கேட்டுக் கொண்டார். ஆனால் புஷ்கரரோ பிரஹஸ்பதியிடம் போக மறுத்தார். ஆனால் பிரம்மா, தான் வரம் அளித்து விட்டதால் அதிலிருந்து தம்மால் மீற முடியாது என்பதால் பிரஹஸ்பதியிடம் குறிப்பிட்ட காலம் அவர் இருந்தே தீர வேண்டும் என்றார். அதன் படி குரு பகவான் ஒவ்வொரு மாதமும் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ அதன் முதல் பனிரண்டு நாட்கள், கடைசி பனிரண்டு நாட்கள், இடைப்பட்ட நாட்கள் மத்தியான காலங்களில் புஷ்கரர் பிருஹஸ்பதியிடம் இருக்கிறார். குரு பகவான் ஒவ்வொரு ராசியில் பிரவேசிக்கும்போதும் அவருக்கு ஒவ்வொரு நதியிடம் சம்பந்தம் உண்டாவதாக ஐதீகம்.

அதன்படி மேஷ ராசிக்கு குரு செல்லும்போது கங்கா புஷ்கரம், ஹரித்வார், காசி, ரிஷிகேஷ் ஆகிய ஊர்களிலும் மற்றும் கங்கைக்கரையோரம் உள்ள புண்ணிய ஸ்தலங்களிலும் நடைபெறும். ரிஷப ராசியில் குரு பிரவேசிக்கையில் நர்மதா புஷ்கரம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதா நதி தீரங்களில் குறிப்பாக ஓங்காரேஸ்வரர் குடியிருக்கும் ஓங்காரேஸ்வரத் தலத்தில் சிறப்பாக நடைபெறும். மிதுன ராசிக்கு சரஸ்வதி புஷ்கரம். இது  குருக்ஷேத்திரம், கேசவ பிரயாகை, குஜராத் சோம்நாத், அலஹாபாத் திரிவேணி சங்கமம், ஆந்திரா காளேஸ்வரம், மத்திய பிரதேசம் பேடாகட் என்னும் இடத்திலும் நடைபெறும்.

குரு பகவான் கடக ராசியில் நுழையும்போது யமுனா நதி தீரங்களான யமுனோத்ரி, ஹரித்வார், ப்ருந்தாவன், மத்ரா, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களிலும், குரு பகவான் சிம்ம ராசியைக் கடக்கும்போது கோதாவரி நதி தீரங்களான நாசிக் அருகே உள்ள திரியம்பகம், ஆந்திராவில் உள்ள கோதாவரி நதி தீரங்கள் ஆகிய இடங்களில் கோதாவரி புஷ்கரம் நடைபெறும். குரு பகவான் கன்னி ராசியில் நுழைகையில் கிருஷ்ணா நதி தீரங்களில்  துளசி, காசரி, போகவதி, கும்பி, சாவித்ரி ஆகிய ஐந்து நதிகள் கூடும் பஞ்ச நதி க்ஷேத்திரங்களில் உள்ள பிரயாக் சங்கமம், ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் கிருஷ்ணா புஷ்கரம் நடைபெறும். குரு பகவான் துலா ராசிக்குள் நுழைகையில் காவிரி புஷ்கரம் காவிரி நதி தீரங்களில் முக்கியமாய்த் தலைக்காவிரி, ஶ்ரீரங்கப்பட்டினம், ஶ்ரீரங்கம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் சிறப்பாக நடைபெறும்.

குரு பகவான் விருச்சிக ராசியில் நுழைகையில் பண்டர்பூர் அருகிலுள்ள பீமா நதியில் பீம புஷ்கரம் எனவும், அதுவே தாமிரபரணி நதிக்கரையில் தாமிரபரணி புஷ்கரம் எனவும் கொண்டாடப் படுகிறது. இது தாமிரபரணி நதிக்கரை ஸ்தலங்கள் ஆன, பாபநாசம், பாண தீர்த்தம், திருநெல்வேலி அருகிலுள்ள சிந்துபூந்துறை ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெறும். குரு பகவான் தநுர் ராசியில் நுழைகையில் பிரம்மாபுத்திரா நதி தீரங்களில் நடைபெறும் அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திரா நதிக்கரையோர ஸ்தலங்களில் சிறப்பாக நடைபெறும்.  குரு பகவான் மகர ராசியில் நுழைகையில் துங்கபத்ரா நதி தீரங்களான  சிருங்கேரி, மந்திராலயம் ஆகிய ஊர்களிலும், குரு பகவான் கும்ப ராசியில் பிரவேசிக்கையில்  சிந்து நதி தீரங்களான ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் ஆகிய இடங்களில் சிந்து புஷ்கரமாக நடைபெறும். குரு பகவான் மீன ராசியில் பிரவேசிக்கையில் ப்ராணஹிதா புஷ்கரம் என்னும் பெயரில் தெலங்கானாவில் உள்ள அடிலாபாத்தில் காலேஸ்வரம் உள்ளிட்ட பனிரண்டு நதி தீரங்களில் கொண்டாடப்படும்

இவ்வருடம் காவிரி புஷ்கரம் சுமார் 144 ஆண்டுகளுக்குப்பின்னர் வரும் சிறப்பான புஷ்கரம் ஆகும். இது செப்டெம்பர் 12-9-17 இல் இருந்து 24-9-17 வரை காவிரி நதி தீரங்களில் நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளும் பெண்கள் வடிவில் இந்தக் காவிரி நதியில் வந்து நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதிகம். இது ஒவ்வொரு வருடமும் துலா மாசம் எனப்படும் ஐப்பசி மாதம் நடைபெறும். ஒவ்வொரு வருடமும் துலா மாதம் எனப்படு ஐப்பசி மாதத்தில் காவிரி நதியில் நீராடுவதைப் புனிதமாகக் கருதுவார்கள். இந்த வருடம் புஷ்கரமும் சேர்ந்து கொண்டதால் இது மிகுந்த  முக்கியத்துவம் பெறுகிறது.


காவிரியில் இன்னும் நீர் வரத்து இருக்கலாம் என எதிர்பார்க்கிறேன். வரத்து அதிகம் ஆனால் படங்கள் எடுக்கணும். இப்போதைக்கு இது மட்டும்.

14 comments:

  1. அறியாத விடயங்கள் அறிந்தேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு கில்லர்ஜி!

      Delete
  2. காவிரில ஏகப்பட்ட தண்ணீர் வரத்து என்று படிக்கிறேனே. இன்னும் நிறைய தண்ணீர் அரங்த்தின் காவேரில வந்துசேரலையா? சிலவாரங்களுக்கு முன்னால் வெறும் மணலோட ஏகப்பட்ட புகைப்படங்கள் பார்த்தேன். தண்ணீர் வந்தப்பறம் படங்களே காணோமே.

    காவிரியின் புஷ்கரத்தை அறிந்துகொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வரலை நெ.த. நாளைக்கு மறுபடி மொட்டைமாடிக்குப் போய்ப் பார்க்கணும்.

      Delete
  3. காவேரி பெருகி புஷ்கரம் நன்றாக நடை பெற வேணும். பகவத் சங்கல்பம் நன்றி கீதா.

    ReplyDelete
    Replies
    1. நானும் பிரார்த்திக்கிறேன் ரேவதி!

      Delete

  4. அருமை அம்மா...

    பல பல தகவல்கள்.... அனைத்தும் புதியவை எனக்கு...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அனுராதா ப்ரேம்குமார்

      Delete
  5. பல விஷயங்கள் அறியாதவை. அறிந்து கொண்டோம். காவிரியில் நீர் வரத்து மகிழ்வைத் த்ருகிறது. மணற்பாங்கு மட்டுமே புகைப்படங்களாக வந்து கொண்டிருந்தது. இப்போது நீர் வரத்து மகிழ்வாக இருக்குது. இன்னும் வரட்டும் கண் பட்டுவிடாமல் இருக்கட்டும்..

    ReplyDelete
    Replies
    1. @ தில்லையகத்து/கீதா, மழை தான் நின்னு போச்சே! இனிமே தண்ணீர் வரத்துக் குறைஞ்சுடும். :(

      Delete
  6. இந்த விஷயங்கள் எல்லாம் என் மனதில் நிற்பது இல்லை. ஏற்கெனவே படித்திருந்தாலும் புதிதாகவே இருக்கும்.

    :))

    காவிரியில் நீர் நினையாக் கடவுளை வேண்டுகிறேன். வருண பகவானை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், நம்முடைய ப்ராசீன/புராதன முறைப்படி வருணனைத் தான் துதிப்பார்கள்! ஏனெனில் மழை சரிவரப் பொழிந்தால் தான் நீர் இருந்தால் தான் மற்றவை எல்லாம்! எல்லாமே வருணனின் துதியில் தான் ஆரம்பிக்கும்.

      Delete
  7. காவேரி புஷ்கரம்அறிந்துகொண்டேன்.

    சிறப்புறட்டும் காவேரி.

    ReplyDelete
  8. தங்களின் பதிவைப் படிக்கத் தவறிவிட்டேன். நீங்கள் என் வலைப்பூவில் அனுப்பிய செய்தி மூலம் அறிந்து வந்து படித்தேன். அருமையான கூடுதல் தகவல்கள் பெற்றேன். நன்றி.

    ReplyDelete