எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 26, 2017

நவராத்திரி ஏழாம் நாளைக்கான தகவல்கள்!

நவராத்திரி கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாக வழிபடுவோம். இன்றைய தினம் தேவியின் திருநாமம் காலராத்ரி! பொதுவாக சனிக்கிழமைகளில் இவளை வழிபடுவார்கள். என்றாலும் சிலர் ஏழாம்நாளுக்கான தேவியாக வணங்குகின்றனர்.  காலராத்ரி” “காலி” என்றெல்லாம் அழைக்கப் படும் அம்பிகை ஆவாள். கால என்பது காலத்தை மட்டும் குறிக்காமல், கறுப்பு நிறத்தையும், காற்றையும் குறிக்கும். காற்றின் வேகத்தில் நம்மிடம் வந்தடைவாள் காலி என அழைக்கப் படும் மஹாகாளி. காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். என்றாலும் அன்பர்களுக்கு அருளும் தயவான உள்ளம் படைத்தவள் இவள். கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயும் இவளுக்குக் காலராத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. ராத்ரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்னும் அர்த்தமும் உண்டு. மங்களகரமான காலத்தை ஏற்படுத்துவதாலும் மங்களகாலி என்றும் அழைக்கப் படுவாள் இவள். நவராத்திரி சனிக்கிழமைகளில் இவளை வணங்கலாம். சனீஸ்வரனின் ஆதிக்கத்தின் வலிமை கொஞ்சம் குறையும் என்பதோடு அதைத் தாங்கும் மனவல்லமையையும் அளிக்க வல்லவள் இந்தக் காளி. ஈசன் தாருகாமுனிவர்கள் ஏவிய கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம் பூதத் தாண்டவம் எனப் படும் அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் காலராத்திரி என்பார்கள்.



சித்தாத்ரி: இவளும் சனிக்கிழமைகளில் வழிபடவேண்டியவளே. கேதுவின் பார்வையால் தீது வருமோ என அஞ்சுபவர்கள் இவளை வழிபடலாம். சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம் என்று சொல்கின்றனர். நவரசங்களையும் வெளிப்படுத்து நவரச நாட்டியத்தை சிவ நடனம் அல்லது சிருங்காரத் தாண்டவம் என்பார்கள். ஈசன் இந்தத் தாண்டவம் ஆடும்போது தோன்றியவளே சித்தாத்ரி அல்லது சித்தி ராத்திரி.
சித்தாத்ரி க்கான பட முடிவு
சித்தாத்ரி க்கான பட முடிவு

ஶ்ரீவித்யா உபாசகர்கள் இவளை ஶ்ரீவித்யா பீஜாக்ஷரியாக ஆராதிக்கின்றனர். சண்ட, முண்டர்களை நேருக்கு நேர் மோதி அழித்த தினம் என்பதால் அன்னையின் சக்தி அதிகமாக ஆகும் தினமாகச் சொல்லுவார்கள். இன்றைய தினம் அன்னையை தங்கப் பீடத்தில் வீணா, புஸ்தக தாரிணியான சாம்பவியாக அலங்கரிக்கலாம். எட்டு வயதுப் பெண் குழந்தையை சாம்பவி என்னும் பெயரால் வழிபட வேண்டும். வெண்ணிற மலர்கள் மிகவும் உகந்தவை. மல்லி, நித்தியமல்லி, நந்தியாவட்டை போன்றவை உகந்தவை.
செண்பகம், ரோஜா, பன்னீர் இலை, புஷ்பம் போன்றவற்றால் திட்டாணிக் கோலமோ, வட்ட வடிவமான கோலமோ போடலாம்.
சாம்பவி க்கான பட முடிவு
சாம்பவி க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி கூகிளார்!

இன்றைய நிவேதனம் எலுமிச்சைச் சாதம். மாலை சிவப்புக்காராமணியில் வெல்லம் போட்ட சுண்டல் அல்லது பயறு வெல்லச் சுண்டல் செய்யலாம். வியாழக்கிழமை  வந்தால் அன்றைய தினம் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டலும் செய்யலாம்.

எலுமிச்சைச் சாதம்:- சாதத்தை உதிராக வடித்துக் கொண்டு நல்லெண்ணெய், பெருங்காயத் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஆற வைக்கவும். எலுமிச்சம்பழம் பிழியவும்.  பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும், வேர்க்கடலை வெடித்ததும் அடுப்பை அணைத்துவிட்டுப் பச்சை மிளகாய், கருகப்பிலை சேர்க்கவும். இஞ்சி தேவையானால் சேர்க்கவும். (நான் சேர்ப்பதில்லை) பின்னர் இந்தக் கலவையை ஆறிய சாதத்தில் ஊற்றிக் கலக்கவும்.  நன்கு ஊறியதும் பரிமாறவும்.

கொண்டைக்கடலையை அல்லது பயறு அல்லது காராமணியை ஊற வைத்துக் கொள்ளவும்.  பின்பு குக்கரில் தேவையான உப்புச் சேர்த்து வேக விடவும். இனிப்புச் சுண்டல்னா உப்பு ஒரு அரை டீஸ்பூன் மட்டும் சேர்த்தால் போதுமானது. உப்புச் சுண்டலுக்குக் கொண்டைக்கடலையை வடிகட்டிக் கொண்டு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, மிவத்தல், கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு வெந்த கடலையைப்போடவும். மி.வத்தல், கொத்துமல்லி விதையை எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து கொண்டு அதை இதில் சேர்க்கவும். தேங்காயைச் சிறு கீற்றுக்களாக அல்லது துருவலாகச் செய்து கொண்டு இதில் போடவும்.

இனிப்புச் சுண்டலுக்கு வேக வைத்ததை வடிகட்டிக் கொண்டு, கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு மட்டும் ஒரு சின்ன மிவத்தலோடு தாளித்துக் கொண்டு வெந்ததைப் போட்டு விட்டு, ஒரு கிண்ணம் பயறு/காராமணி எனில் அரைக்கிண்ணம் வெல்லம் தூளைச் சேர்க்கவும். வெல்லம் சேரும் வரை நன்கு கிளறிப் பின்னர் தேங்காய்த் துருவலைச் சேர்த்துவிட்டுத் தேவையானால் ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும்.

நமஸ்கார ஸ்லோகங்கள்

யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

அம்மா= அம்மா என்றால் அன்பு, அம்மா என்றால் பொறுமை, அம்மா என்றால் பாசம், அம்மா என்றால் இனிமை. அம்மா என்ற ஒரு வார்த்தையே நாம் அனைவருக்கும் எத்தகையதொரு நிம்மதியையும், பாசத்தையும், ஆறுதலையும் தருகின்றது. எத்தனை வயது ஆனாலும் அம்மா இருந்தால் என்ற எண்ணம் எழுவதையும், அம்மா நினைவு வருவதையும் மறுக்கவோ, மறைக்கவோ முடியலையே! பெண்கள் அனைவரிடமும் தாய்மை சக்தி ( இன்றைய பெண்கள் வேண்டாம்னு சொன்னாலும், உறைந்தே இருக்கின்றது. அதை எவராலும் மாற்றவோ, மறைக்கவோ முடியாது. தேவையான சமயங்களில் தன்னை மீறி வெளிப்பட்டே ஆகும்.) பட்சிகள் ஆகட்டும், புழு, பூச்சிகள் ஆகட்டும், மிருகங்கள் ஆகட்டும் அனைத்திலும் பெண் இனமே குழந்தை பெறுகின்றது. ஏதோ சில குறிப்பிட்ட ஊர்வன?? (மீன்??) இனத்தில் மட்டுமே ஆண் கர்ப்பம் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆகவே அந்த அன்னை என்னும் சக்தியாக உறைகின்றவளே தேவி தான். அவளின் சக்தி இல்லை எனில் தாய்மை என்பது கேலிக்கூத்தாக இருக்குமோ??அந்த தாய் வடிவான சக்தியாக உறைந்திருக்கும் அன்னைக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

20. யா தேவீ ஸர்வ பூதேஷு ப்ராந்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

ப்ராந்தி என்றால் சுற்றுதல் என்ற அர்த்தமும், ஸ்திரமற்ற தன்மையைக் குறிக்கும் என்ற பொருளிலும் வருகின்றது. மாயை, என்ற அர்த்தமும் வரும். காட்சிப்பிழை, பொய்த்தோற்றம் என்றும் சொல்லலாம். பூமியின் சுழற்சியையும் எடுத்துக் கொள்ளலாம். இறை சக்தி இல்லை எனில் பூமி சுற்றுவது எங்கே?? என்றாலும் நமக்குத் தோன்றும் மாயையைக் களைய அன்னையின் சக்தி வேண்டுமல்லவா?? அந்த மாயைத் தோற்றுவித்து, அதன் மூலம் நம்மைப் பண்படுத்தி, நல்வழியில் திருப்பி, நம்மைப் பூரண சரணாகதி அடையச் செய்யும், மாயா தேவி என்னும் சக்தியாக இருக்கும் அந்த அன்னைக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

21. இந்த்ரியாணாம் அதிஷ்டாத்ரீ பூதானாஞ்சாகிலேஷு யா
பூதேஷூ ஸததம் தஸ்யை வ்யாப்தி தேவ்யை நமோ நம:

அனைத்து உயிரிகளிடத்திலும் உறைந்திருக்கும் இந்திரியங்களை அடக்கி ஆள்பவளாய் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
அகிலம் பூராவும் வியாபித்து, நாம் நிற்பது, நடப்பது, பார்ப்பது, கேட்பது, பேசுவது, முகர்வது, உண்ணுவது என அனைத்தை இயக்கங்களிலும் தானே சர்வமுமாய் நிறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரங்கள்.

22. சிதிரூபேண யா க்ருத்ஸன மேதத் வ்யாப்ய ஸ்திதா ஜகத்
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

சிதிரூபேண= சைதன்யமாக, ஆன்மா, உயிர், ஜீவன், உணர்ச்சி அல்லது நம் புத்தியை ஆட்டுவிக்கும் சக்தி?? என்று அந்த உணர்வாய் உறைபவளே நம் ஆன்மாவே அந்த தேவிதான். அப்படி சகல ஜீவராசிகளிலும் இவ்வாறே நிலைத்து வியாபித்துப் பரவி இருக்கின்றாள் . அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

23 comments:

  1. அருமையான தகவல்கள். இதில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு நிறமும் இருக்காமே.. இன்று 7ம் நாளுக்கு வெள்ளை நிறம் எனப் படிச்சேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நிறங்களோடும் போட்டிருக்கேன். பழைய பதிவுகளில் தேடிப் பார்க்கணும். இது போன வருஷத்து மீள் பதிவு! நன்றி அதிரா.

      Delete
  2. தகவல்கள் அறிந்தோம்..

    கீதாக்கா 7 ஆம் நாள் புதன் தானே நாளை தானே 7 ஆம் நாள்....//வியாழக்கிழமை என்பதால் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டலும் செய்யலாம்.// என்று சொல்லியிருப்பதால் கேட்கிறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அது போன வருஷம் வியாழக்கிழமைக்குப் போட்டது. நல்லவேளை சுட்டிக்காட்டி இருக்கீங்க. எடுத்துடறேன். :) இந்தவருஷம் நாளை புதன் தான் ஏழாம் நாள். வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜை, சனிக்கிழமை விஜயதசமி.

      Delete
    2. திருத்திட்டேன் கீதா. நன்றி. :)

      Delete
    3. கொஞ்சம் குழம்பி விட்டேன் அதனால்தானே கேட்டேன் அக்கா...நன்றி அக்கா...

      கீதா

      Delete
  3. நல்ல தகவல்கள். முழுமையாகப் படித்தது பிரசாதத்தைத்தான். ஏன் இனிப்பு காராமணி சுண்டலுக்கு கடுகு திருவமாற, மிளகாய் சேர்க்கச் சொல்லியிருக்கீங்க? பாகு வச்சுட்டு அதுல தளிகை பண்ணின காராமணியைச் சேர்த்தா போதாதா?

    ReplyDelete
    Replies
    1. சில பேருக்கு இனிப்பும், காரமும் சேர்ந்திருந்தால் பிடிக்கும். என்றாலும் கடுகு மட்டும் தாளித்தும் வெல்லத்தைச் சேர்க்கலாம். பாகு வைச்சுட்டுப் போட்டால் வெந்த பயறோ, காராமணியோ விறைப்பாக ஆகி விடுகிறது. ஆகவே இம்முறை தான் எனக்குச் சரியா இருக்கு! :)

      Delete
    2. கீ.சா மேடம்... உங்க கருத்துக்குத்தான் கேட்டேன். போன தடவை நான் பண்ணினபோது விரைப்பா ஆகிவிட்டது. எதனால் என்று புரியவில்லை. நீங்கள் சொன்னபடி விரைவில் செய்யப்போகிறேன் (எனக்கு ரொம்பப் பிடித்த சுண்டல் இனிப்புச் சுண்டல்தான்)

      Delete
    3. இனிப்புச் சுண்டல் வகைகள் எதாக இருந்தாலும் பாகில் போட்டால் விறைப்பாகத் தான் ஆகிறது.

      "விறைப்பு" "விரைப்பு" இரண்டில் விறைப்புத் தான் சரியானது என விக்கி சொல்கிறது. அகராதியிலே இரண்டுக்கும் பொருள் கிடைக்கிறது. :)

      Delete
    4. மீ டூ அக்கா உங்க மெத்தட்தான் இல்லைனா விறைப்பா ஆகிடும்...எனக்கும் இனிப்பும் காரமும் சேர்ந்து இருந்தால் பிடிக்கும் இந்தச் சுண்டல்...

      கீதா

      Delete
    5. என் மாமியார் வீட்டில் தோசை மிளகாய்ப் பொடிக்கு வெல்லம் சேர்ப்பார்கள். இங்கே நான் பண்ணும் அந்த மிளகாய்ப் பொடி ரொம்பவே பிரபலம்! :)

      Delete
  4. இன்றைக்கு எலுமிச்சம் சாதமா? கடவுளே... இன்று இரண்டு வீடுகள் போகணுமே... சரஸ்வதி தேவி... இதென்ன சோதனை!

    ReplyDelete
    Replies
    1. @ஶ்ரீராம், முன்னெல்லாம் எப்போவோ செய்வாங்க எலுமிச்சைச் சாதம் எல்லாம். சாப்பிட ஆவலாகத் தான் இருந்தது. இப்போ இங்கே அநேகமா வாரம் ஒரு முறை! ஹிஹிஹிஹி

      Delete
  5. கால ராத்ரி என்ற பதத்தை இப்போதுதான் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா!

      Delete
  6. முந்தைய குறிப்புகளும் பார்த்துட்டேன்....கீதாக்கா...டேதான் நீங்கள் போன முறை போட்டிருப்பது வருது ஸோ அதுதான் கொஞ்சம் குழப்பம்..இப்ப ஒகே...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எடிட் செய்யலை என்பதால் வரும் குழப்பம். இன்னிக்கு எடிட் பண்ணிட்டுத் தான் போட்டேன். என்றாலும் கண்ணில் பட்டால் சொல்லுங்க! திருத்தலாம். :)

      Delete
  7. நிறைய விடயங்கள் அறிய வைத்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  8. எல்லாக் கதைகளுக்கும் ஒரு காரணம் சுவாரசியம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜிஎம்பி சார்.

      Delete
    2. இந்தப் பதிவில் கதை ஏதும் சொல்லல்லையே ஐயா! நீங்க சொல்வது எந்தக் கதை பற்றி?

      Delete