எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 27, 2017

நவராத்திரி எட்டாம் நாளைக்கான தகவல்கள்!



இன்றைய தேவி மஹா கௌரி எனப்படுவாள். நாரசிம்ஹ தாரிணியாக வில், அம்புகளை ஏந்திக் கொண்டு அணிமா, லஹிமா போன்ற அஷ்டமாசித்திகளும் சூழ்ந்து  கொண்டிருக்கக்  காட்சி தருகிறாள் தேவி.  ரக்தபீஜனை வதம் செய்த பின்னர் சாந்தமான திருக்கோலத்தில் மஹா கௌரியாக ரிஷபத்தின் மீதோ அல்லது சிங்காதனத்தில் வீற்றிருக்கும் திருக்கோலத்திலோ வழிபடலாம். இன்னும் சிலர் அன்னபூரணியாகப் பாவிப்பார்கள்.
அன்னபூரணி க்கான பட முடிவு
 அன்னபூரணி க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

ஒன்பது வயதுப் பெண் குழந்தையை "துர்கை"யாகப் பாவித்து வழிபட வேண்டும். காசுகளால் பத்மம் வரையலாம். அல்லது அரிசி மாவினால் பதினாறு இதழ் கொண்ட தாமரைப்பூக்கோலம் போடலாம். மருதாணிப் பூக்கள், செண்பக மலர், சாமந்தி, வெண் தாமரை மலர், விபூதிப் பச்சை போன்றவை வழிபாட்டுக்கு உரியவை ஆகும். குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யலாம். இன்றைய நிவேதனம் நெய்ப்பாயசம் செய்யலாம்.,

நெய்ப் பாயசம் செய்முறை:

அரைக்கிண்ணம் பச்சை அரிசி களைந்து ஊற வைக்கவும். ஒரு மூடி தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தேங்காயை மிக்சி ஜாரில் போட்டு இரண்டு,மூன்று முறை பால் எடுத்துக் கொள்ளவும். ஊறிய அரிசியையும் மிக்சியில் போட்டுக் கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும். மூன்றாம் தேங்காய்ப் பாலில் அரைத்த அரிசி விழுதைப் போட்டு வேக வைக்கவும். ஒரு கிண்ணம் தூள் செய்த வெல்லப் பொடியை அரிசி நன்கு குழைய வெந்ததும் சேர்க்கவும். இரண்டாம் தேங்காய்ப் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். பின் பாயசம் கரண்டியால் எடுக்கும் அளவு தோசை மாவு பதத்துக்கு கெட்டிப் பட்டதும் முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு நிமிஷம் கொதிக்க வைத்துக் கீழே இறக்கவும். நெய்யில் முந்திரி, திராக்ஷை வறுத்து தேங்காய்ப் பால் எடுத்தது போக இருக்கும் தேங்காய்ச் சக்கையையும் நெய்யிலேயே வறுத்துப் பாயசத்தில் சேர்க்கவும்.

மாலை நிவேதனமாக இன்று வெள்ளிக்கிழமையாக இருந்தால்   புட்டு செய்யலாம். அல்லது கடலைப்பருப்பு, கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல் செய்யலாம். புட்டுச் செய்முறை பழைய பதிவில் இருந்து எடுத்தது கீழே கொடுத்திருக்கிறேன். எந்தக் கிழமையாக இருந்தாலும் சுண்டல் செய்யலாம். புட்டு பொதுவாக  வெள்ளிக்கிழமை அன்றோ சரஸ்வதி பூஜை அன்றோ செய்வார்கள்.

புட்டு செய்முறை:
நவராத்திரி வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் அல்லது சரஸ்வதி ஆவாஹனம் செய்யும் தினத்தன்று புட்டு நிவேதனம் செய்வார்கள். அதற்குத் தேவை நல்ல மாவு வரும் அரிசி ஐ ஆர் இருபது அரிசி கால் கிலோ. இந்த அளவிற்கு ஏற்றாற்போல் கூடுதலாய்ச் செய்பவர்கள் கூட்டிக் கொள்ளலாம்.

அரிசி கால் கிலோ

பாகு வெல்லம் கால் கிலோ

தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்

முந்திரிப்பருப்பு, ஏலக்காய், பொட்டுக் கடலை, அல்லது வேக வைத்த துவரம் பருப்பு. இரண்டு டேபிள் ஸ்பூன்.

உப்பு ஒரு சிட்டிகை

முதல் முறை:
இது ரொம்பவே ஆசாரம் பார்க்கிறவங்களுக்கானது என்பதோடு அதிகம் வேலையும் இல்லை. அரிசியைக் களைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து விட்டுப் பின்னர் ஜலத்தை வடித்துவிட்டுச் சிறிது நேரம் வைக்கவும். இரும்பு வாணலியில் அரிசியைப் போட்டு நன்கு சிவப்பாகப் பொரியும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதிலேயே ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். கொதிக்கும் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாவில் விட்டுக் கலக்கவும். மாவு கலக்கும்போது நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் சேர்க்கவேண்டும். மாவு எல்லாவற்றிலும் நீரைச் சேர்த்ததும், மாவைக் கையால் உருட்டினால் உருட்டும் பதமும், உதிர்த்தால் மாவாகவும் ஆகவேண்டும். ஆகவே இதை நிதானமாய்ச் செய்யவும். நீர் கலந்த மாவை இரண்டு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.

பின்னர் உருளி அல்லது வாணலியில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டுச் சுத்தம் செய்துவிட்டுப் பாகு காய்ச்ச வேண்டும். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு பாகை அதில் விட்டால் நன்கு உருட்ட வரவேண்டும். அந்த உருண்டையை எடுத்து ஒரு தட்டில் போட்டால் "டங்"கென்று சத்தம் வரவேண்டும். இந்தப் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலந்து வைத்திருக்கும் மாவில் சேர்க்க வேண்டும். தேவையான பாகைச் சேர்த்ததும்,கீழேயே வைத்து நன்கு கலக்க வேண்டும். மாவும், பாகும் நன்கு கலந்ததும், நெய்யில் முந்திரிப் பருப்பு, பொட்டுக் கடலை, (இதற்குப் பொட்டுக்கடலையே ஏற்றது.), தேங்காய் வறுத்துச் சேர்த்து, ஏலப் பொடியும் சேர்க்கலாம்.

மற்றொரு முறை:

அரிசியை ஊற வைக்கவும். நீரை வடிக்கவும். மிக்ஸியில் போட்டு நன்கு மாவாக்கிச் சலித்து வைத்துக் கொள்ளவும். மாவை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவேண்டும். வறுத்த மாவில் முன்னர் கூறி இருக்கும்படியாக வெந்நீரில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு கலக்கவேண்டும். இது ஈர மாவு என்பதால் நீரைக் கொஞ்சமாகவே கலக்கவேண்டும். சிறிது நேரம் வைத்துவிட்டு ஒரு வெள்ளைத் துணியில் மாவைப் பரப்பி, இட்லிப் பானையிலோ, அல்லது குக்கரிலோ ஐந்து நிமிஷம் வைக்க வேண்டும். மாவை ஒரு குச்சியால் கிளறினால் ஒட்டாமல் வரும் என்பதோடு முன்னர் சொன்ன பதத்துக்கும் வரும். கையில் பிடித்தால் பிடிக்கவும், உதிர்த்தால் உதிர்க்கவும் வரவேண்டும். பின்னர் பாகு வைப்பது, கலப்பது எல்லாம் மேலே சொன்னபடி தான். இதற்கு ஊற வைத்த துவரம்பருப்பை மாவில் வெந்நீர் கலக்கும்போதே சேர்த்துவிட்டுப் பின்னர் இட்லிப் பானையில் வேகவைக்கும்போதும் வைத்துவிட்டால் பருப்பு நன்கு வெந்துவிடும். இதன் சுவை தனியாக இருக்கும். முதலில் சொன்ன புட்டு ஒருவாரம் ஆனாலும் கெடாது. இது சீக்கிரம் பயன்படுத்த வேண்டும்.

நமஸ்கார ஸ்லோகங்கள் முடிந்தன. கீழே சரஸ்வதி குறித்த சில தகவல்கள். மீள் பதிவாக!


சரஸ்வதி: புராணங்களில் பிரம்மாவின் மனைவி எனக் கூறப்படும் இவளைப் படைத்தவனே பிரம்மா தான் என்றும், பிரம்மாவின் உடலில் இருந்து இவள் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இவளின் மற்ற பெயர்கள், சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகியன. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு உருவம் எடுத்துப் பூஜிக்கப் படுகின்றாள். ரிக் வேதம் சரஸ்வதி ஸூக்தத்தில் உலகின் ஆதிகாரணி என இவளைப் போற்றுகிறது. சரஸ்வதி வடிவங்கள் தாராபூஜையில் வழிபடப் படுகின்றன. எட்டுவிதமான சரஸ்வதி வடிவங்களை வழிபடுகின்றனர். அவை வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியன. கட சரஸ்வதியை வழிபட்டு தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை வழிபட்டு சாலிவாகன மன்னனும், சியாமளாவாக வழிபட்டு காளிதாசனும் பெருமை பெற்றிருக்கின்றனர் என்று சரஸ்வதி மஹாத்மியம் சொல்லுகிறது.

இவளே சரஸ்வதி என்னும் நதியாகவும் ஓடினாள். சரஸ் என்னும் பெயருக்குத் தடையில்லாமல் தெரியும் ஒளி என்றும் அர்த்தம் உண்டு. கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தியும் இவளிடம் இருப்பதாலேயே சரஸ்வதி என்னும் பெயர் உண்டாயிற்று. இவள் நதியாக ஓடியதற்கு ஒரு காரணம் உண்டு. ததீசி முனிவரிடம் தேவர்களின் ஆயுதங்கள் கொடுத்து வைக்கப் பட்டிருந்தன. நீண்ட காலம் தேவாசுர யுத்தம் நடைபெற்று வந்த சமயம் அது. தேவர்கள் தோற்றுப் போகும் சமயமாக இருந்தது. வலிமையும், சக்தியும் வாய்ந்த பல ஆயுதங்களையும் அசுரர்களிடம் இழக்க மனமில்லாத தேவர்கள் ததீசி முனிவரிடம் ஆயுதங்களைக் கொடுத்து வைக்க அவரும் மறைத்து வைக்கிறார். காலதேச வர்த்தமான மாற்றங்களால் தேவர்களும் மறைந்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட அவர்களும் அசுரர்கள் கண்களில் படாமல் மறைந்தே வாழ்கின்றனர். அப்போது விருத்தாசுரன் தேவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட அவனோடு போர் செய்யும் கட்டாயத்தின் பேரில் தேவர்கள் வெளியே வந்தாகவேண்டி இருக்கிறது.

வந்த தேவர்கள் தங்கள் ஆயுதங்களை ததீசி முனிவரிடம் கேட்க, நீண்ட நெடுநாட்கள் அவர்கள் வராத காரணத்தால் ஆயுதங்களைக் கரைத்துக் குடித்துவிட்டதாய்ச் சொல்லுகின்றார் ததீசி முனிவர். ஆயுதங்கள் இல்லாமல் தவித்த தேவர்களின் நிலை கண்ட முனிவர் தம் உயிரைப் பிராணத்தியாகம் செய்து, தன் முதுகெலும்பில் இருந்து தேவேந்திரன் ஆயுதம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறார். தானே தன் உயிரைப் போக்கிக் கொள்ளும் வல்லமை கொண்ட மகரிஷியாதலால் அவ்வண்ணமே தன் உயிரையும் போக்கிக் கொள்ளுகிறார். அவருடைய எலும்பில் இருந்து வஜ்ராயுதம் செய்யப் பட்டு இந்திரனுக்கு முக்கிய ஆயுதமாகிறது. இங்கே ரிஷியின் மனைவி ப்ராதி பூரண கர்ப்பிணி. தன் கணவன் தன் உயிரைப் போக்கிக் கொண்ட தகவல் அறிந்த அவள் தானும் உடன்கட்டை ஏற முடிவெடுக்கிறாள். ஆனால் தன் வயிற்றில் வளரும் சிசுவுக்கு எந்தவிதமான ஹானியும் ஏற்படக் கூடாது என முடிவு செய்து தன் தவ வலிமையாலும், தன் பதிவ்ரதா வலிமையாலும் அந்தச் சிசுவை வெளியே எடுத்து வனதேவதைகளையும், வன மூலிகைச் செடி,கொடிகளையும், இன்னும் நதிகள், மலைகள், மற்றத் தாவரங்கள் போன்ற வனவளங்களை வேண்டிக் கொண்டு அங்கிருந்த பெரிய அரசமரத்திடமும் வேண்டிக் கொண்டு அந்தச் சிசுவை அங்கே விடுகிறாள். அதன் பின்னர் அவள் உடன்கட்டை ஏறித் தன் உயிரைத் தானும் போக்கிக் கொள்கிறாள். அரசமரம் வளர்த்த சிறுவன் “பிப்பலாதன்” என்னும் பெயருடன் வளர்ந்துவந்தான். 

வளர, வளர அவனுக்குத் தேவர்களுக்கு உதவி செய்யவேண்டித் தன் தந்தையும், தந்தையுடன் தாய் உடன்கட்டை ஏறினதும் தெரியவருகிறது. தேவர்களிடம் விரோத பாவம் மேலிட அவன் தேவர்களைப் பழிவாங்க நினைக்கிறான். பிரம்மாவின் அருள் பெற்று ஈசனைக் குறித்துத் தவம் செய்கின்றான். தேவாதிதேவர்களை அழிக்கவேண்டிய ஆற்றலைத் தருமாறு ஈசனிடம் வேண்டுகிறான். அவனுடைய பலத்தைச் சோதிக்க எண்ணிய ஈசனோ, தன் நெற்றிக்கண்ணைத் தான் திறக்கப் போவதாயும், அதைத் தாங்கும் வல்லமை அவனுக்கிருந்தால் கேட்ட வரம் தானாகவே கிட்டும் என்றும் சொல்லுகின்றார். நெற்றிக்கண்ணின் வல்லமை தாங்காமல் மீண்டும் தவம் செய்கிறான் பிப்பலாதன். இம்மாதிரி இன்னும் இருமுறைகள் அவனைச் சோதித்துவிட்டு தன் நெற்றிக்கண்ணை அவனையே திறக்கச் சொல்லுகிறார் ஈசன். பிப்பலாதனும் நெற்றிக்கண்ணைத் திறக்கிறான். இவனையும் ஈசனின் ஓர் அவதாரம் எனக் கருதுவோர் உண்டு. 

நெற்றிக் கண் திறந்ததும், அதிலிருந்து உக்கிரமான வெப்பத்துடன் கூடிய ஒரு தீக்கொழுந்து தோன்ற அதைப்பிப்பலாதனிடம் கொடுத்து இந்தத் தீக்கொழுந்து அனைத்து உலகையும் அழிக்கவல்லது என்றும் சொல்லுகிறார். பிப்பலாதனும் தேவர்களைத் துரத்துகிறான். தேவர்கள் பிரம்மாவைச் சரணடைகின்றனர். தேவர்களை அழிக்கக் காத்திருந்த பிப்பலாதனுக்கு வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளையும், ஜனனம், மரணம் ஆகியவற்றையும் பற்றிய தத்துவங்களை விரிவாக எடுத்துரைத்தார் பிரம்மன். மேலும் சொன்னார்:” தேவர்களின் நன்மைக்காக வேண்டி உன் தந்தை தானாகவே மனம் விரும்பி உயிர் துறந்தார். நீயானால் தேவர்களை அழிக்கக் கிளம்பியுள்ளாய். இதோ புஷ்பக விமானத்தில் உன் தந்தையை இங்கே வருவிக்கிறேன். நீயே கேட்டுக் கொள்.” என்று கூறிவிட்டு ததீசி முனிவரையும், அவர் மனைவியையும் அங்கே வரவழைக்க உண்மை தெரிந்த பிப்பலாதன் மனம் அமைதி அடைகிறது. ஆனால் இந்தத் தீக்கொழுந்தை என்ன செய்வது? அதை எப்படி அழிப்பது? ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். அப்போது ஈசனால் எழுப்பப் பட்ட அந்த அக்னியே குரலெடுத்துச் சொன்னது:”என்னை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து சமுத்திரத்தில் விட்டுவிடுங்கள். நான் சமுத்திரத்தின் உள்ளே சென்று விடுகின்றேன். வடவாமுகாக்கினியாய் அங்கேயே இருப்பேன். உங்களை எல்லாம் அழிக்க மாட்டேன், எனக்கு வேண்டிய இரைகள் அங்கேயே கிடைக்கும்.” எனச் சொல்ல அவ்வாறே முடிவு செய்யப் பட்டது.

16 comments:

  1. கண் நமஸ்கார ஸ்லோகங்களைவிட புட்டு செய்முறையில்தான் போகிறது. ரெண்டுவகை புட்டு செய்முறையும் குறித்துக்கொண்டேன். இந்தத் தடவை இங்கு ஹஸ்பண்ட் வரும்போது செய்யச்சொல்லவேண்டும் (ஒரு வாரத்தில்)

    நெய்ப் பாயாசம், தேங்காய் பாயசம்போல் இருக்கிறது. செஞ்சு பாத்திடறேன்.

    கொலு வைக்கிற வீடுகளில், இந்த வழக்கத்தை ஃபாலோ பண்ணித்தான் அன்றன்றைக்கு பிரசாதம் செய்கிறார்களா? (ஸ்ரீராமுக்குத் தெரிந்திருக்கும். அவர்தான் கலெக்ஷன் அனுபவம் உள்ளவர்போல் தெரிகிறது)

    ReplyDelete
    Replies
    1. இல்லை, நெல்லை! நவராத்திரி பூஜை கிரமமாகச் செய்கிறவர்களுக்குத் தான் இந்தக் குறிப்புக்கள் எல்லாம். நாங்கள் நவராத்திரி பூஜை செய்வதில்லை. நான் சுந்தரகாண்டம் மட்டும் நவாஹ பாராயணம் செய்வேன். எப்போவானும் தேவி மஹாத்மியம் நவாய பாராயணம். மடி, ஆசாரம் தேவை என்பதால் முடியும்போது மட்டும் சொல்வது உண்டு. சுந்தரகாண்டம் நிச்சயமாய் உண்டு. இப்போவும் பண்ணிக் கொண்டிருக்கேன். அதுக்கு நிவேதனமே வேறே மாதிரி! :) முன்னெல்லாம் காலை சுந்தரகாண்டப் பாராயணத்துக்கு நிவேதனங்கள், மாலை சுண்டல்னு அமர்க்களப்படும்! அதெல்லாம் ஒரு காலம்! :) ஶ்ரீராமுக்குக் கலெக்‌ஷன் அனுபவம் உண்டு! ஆனால் பூஜை வழக்கம் தெரியாதுனே நினைக்கிறேன்.

      Delete
    2. ///இந்தத் தடவை இங்கு ஹஸ்பண்ட் வரும்போது செய்யச்சொல்லவேண்டும் (ஒரு வாரத்தில்)///

      ஆவ்வ்வ்வ் அப்போ இனி நெல்லைத்தமிழனைப் பிடிக்க முடியாதுபோல:) ஹா ஹா ஹா:)..

      Delete
    3. 'கண்ணுபடப் போகுதையா சின்னக்கவுண்டரே' - சிட்டுவேஷன் சாங்... பிபிசில ஓடிக்கிட்டிருக்கு.

      Delete
  2. // “பிப்பலாதன்” //

    நல்ல ஒரு கதை... இது பிரகலாதனோ எனவும் எண்ணினேன்.

    நவராத்திரியில் நானும் புட்டுச் செய்து வைப்பேன்.. சக்கரை தேங்காய்ப்பூச் சேர்த்து சேர்த்து குழலில் போட்டு எடுத்து வைப்பேன், ஆனா இப்படி இன்ன கிழமைக்கு இது எனப் பார்ப்பதில்லையே நான்...

    ReplyDelete
    Replies
    1. பிப்பல மரத்தினடியில் வளர்ந்ததால் பிப்பலாதன் என்னும் பெயர்! அரச மரம். புட்டுப் பொதுவா நவராத்திரி செவ்வாய், வெள்ளி அல்லது சரஸ்வதி பூஜை அன்று செய்வது உண்டு. குழாய்ப் புட்டு நாங்க செய்தது இல்லை. மேலே சொன்ன வகைப் புட்டுத் தான்!

      Delete
  3. 8 ஆம் நாள் குறிப்புகளும் அறிந்தாயிற்று...

    கீதாக்கா எங்கள் வீட்டில் கொலு எல்லாம் இல்லை என்றாலும் நெய்ப்பாயாசம் நாங்கள் அரிசி நொய்பாயாசம் என்போம் , செய்தாயிற்று (இதனை பெரும்பாலும் எங்கள் வீடுகளில் திவசத்தின் போதும் செய்கிறார்கள் ஆனால் தேங்காய்ப்பாலுக்குப் பதில் பால் சேர்த்து) இன்று புட்டு செய்கிறேன்....நான் இரண்டாம் மெத்தட்தான் செய்வது வழக்கம்...அந்த மெத்தட்தான்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சிராத்தம் அன்று எங்க வீடுகளில் பாசிப்பருப்புப் பாயசம். மற்றபடி நிவேதனத்துக்கே நெய்ப்பாயசம் செய்வோம். மாமியார் வீட்டில் இந்த நெய்ப்பாயசம் வழக்கம் இல்லை!

      Delete
  4. நவராத்திரி எட்டாம் நாள் தகவல் நன்று.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  5. //(ஸ்ரீராமுக்குத் தெரிந்திருக்கும். அவர்தான் கலெக்ஷன் அனுபவம் உள்ளவர்போல் தெரிகிறது)//

    கிட்டத்தட்ட இது Follow செய்யப்பட்டது. காய் நைவேத்யத்துக்கு நான் அல்லது நாங்கள் செல்வது இல்லையே.... மாலைதான். பாஸுக்கு காவலாய் நானும் சென்று வந்தேன். எனக்கும் ஓரிரு இடங்களில் வரும்படி இருந்தது!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், (அப்பாடா, பெயரைச் சொல்லிட்டேன்) அது என்ன காய் நைவேத்யம்? வரும்படி இருந்ததா உங்களுக்கும்? சுண்டல்? அல்லது நவராத்திரி கிஃப்ட்?

      Delete
  6. எட்டாம் நாள் பெருமையையும், தேவியின் மகிமையையும் அறிந்தோம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா!

      Delete
  7. எங்கு தொடங்கினலும் முடிவது பிரசாத செய்முறையில் தான் அதுவும் நன்றாயிருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜிஎம்பி ஐயா!

      Delete