எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, February 03, 2007

வாமனன் பூஜித்த சிவனார்

நடேசன் அவர்கள் கூட்டிச் சென்ற அந்த "அகஸ்தீஸ்வரர்" (பேர் நான் வச்சது), கோவிலின் ஸ்தல வரலாறு பற்றி ஏதும் தெரியவில்லை. அங்கே பூஜை செய்யும் சிவனடியாருக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் மறுநாள் தான் வருவாராம். அவ்வளவில் நாங்கள் அந்தக் கோவிலில் இருந்து கிளம்பி மற்றொரு சிவன் கோவிலுக்குப் போனோம்.

திருவஹிந்திபுரத்தில் இருந்து வரும் வழியிலேயே அமைந்துள்ளது இந்தக் கோவில். இதுவும் சற்றுக் குன்றிலேயே அமைந்துள்ளது. 12 ஜ்யோதிர்லிங்கங்களுள் பத்தாவது இது என்று கூறுகிறார்கள். இந்தக்கோவிலின் ஸ்தல புராணம் திருமாலின் "வாமன" அவதாரத்துடன்

சம்மந்தப் பட்டிருக்கிறது. தவிர, மாணிக்கவாசகருக்குச் சிதம்பரத்தில் முக்தி கொடுப்பதற்கு முன் அவரை இங்கே அழைத்ததாயும் கூறுகிறார்கள். அதனால் இதை "ஆதி தில்லை" என்றும் சொல்வது உண்டாம். திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவது போல் இங்கேயும் குன்றின் மேல் உள்ள ஒரு தூணில் திருவண்ணாமலையில் தீபம்

ஏற்றும் அதே நேரம் ஏற்றுவது உண்டாம். இந்தத் தூண் அம்மன் சன்னதியில் இருந்து

நன்கு பார்க்கும்படி இருக்கிறது.திருவண்ணாமலைத் தீபம் பார்த்துவிட்டுப் பின் இதையும் பார்க்கவேண்டும் என்ற ஐதீகம் இருப்பதாயும் சொல்கிறார்கள். இப்போது இந்தக் கோயிலின் ஸ்தல வரலாறு:


இந்திரனின் தாயான அதிதி தேவியைப் பூஜித்து வரும்போது ஒரு நாள் விளக்கில்

விட்டிருந்த நெய் உறைந்து போய் விளக்கு அணையும் தருவாயில் இருந்தது. அப்போது அங்கே பசியுடன் வந்த ஓர் எலி அந்த உறைந்த நெய்யைச் சாப்பிட எண்ணி விளக்கில் வாயை வைத்துச் சாப்பிட ஆரம்பிக்கும்போது, தன்னை அறியாமலேயே விளக்குத் தூண்டி விடப் பட விளக்குப் பிரகாசமாய் எரிந்தது. சிவன் கோவில் விளக்கு எரியக் காரணமாய்

அமைந்த காரணத்தால் அந்த எலியின் மறுபிறவியில் அது "மஹாபலி"ச் சக்கரவர்த்தியாய்ப் பிறந்தது. தன்னுடைய நியமங்களை மறவாமலும் இருந்த மஹாபலிச் சக்கரவர்த்தி செய்த யாகத்தில் பலவிதமான தானங்கள் எல்லாருக்கும் கொடுக்கப் பட்டது. தானங்கள் எல்லாம்

முடிந்து விட்ட நிலையில் மஹாபலி யாகம் செய்யத் தயாரானார். அப்போது இந்திரன்

மஹாபலியானவர் இந்த யாகத்தை முடித்துவிட்டால் இந்திரபதவியை விட உயர்ந்த பதவிக்குத் தகுதியாகி விடுவாரே என்ற கவலையில் ஆழ்ந்தான்.

மஹாவிஷ்ணுவோ இந்திரனிடம் கூறினார்: "இந்த்ப் பதவிகளை எல்லாம் விட உயர்ந்த

வைகுண்ட மோட்சத்திற்கும், முக்திக்கும் மஹாபலி தகுதி உடையவன் ஆகிறான்.

அவன் அதை அறியாமல் இந்த யாகம் செய்தால் உயர்பதவி என்ற எண்ணத்தில் இருக்கிறான்." என்று கூறிவிட்டு, மஹாபலிக்கு மோட்சத்தையும், அவன் பிறவி எடுத்ததின் லட்சியத்தை நிறைவேற்றவும் எண்ணி ஒரு வாமனனாகப் போய் நின்றார். அதாவது, ஒரு

ரிஷிகுமாரனாக, பிரம்மச்சாரியாகப் போய் நின்றார். பிரம்மச்சாரிகள் எது கேட்டாலும்

இல்லை என்னாது கொடுப்பது வழக்கம். ஆகவே அவர் வந்ததும் மஹாபலி, வரவேற்று என்ன வேண்டும் எனக் கேட்க, மஹாவிஷ்ணுவோ, "என்ன கேட்டாலும் கிடைக்குமா?" என்று கேட்கிறார். மஹாபலி எது கேட்டாலும் கொடுக்க ஒத்துக் கொள்ளவே தன் காலால் மூன்றடி நிலம் அளந்து எடுத்துக் கொள்வேன் என்று கேட்கிறார், மஹாவிஷ்ணு. மஹாபலியின் மாயை விலகி வந்திருப்பது மஹாவிஷ்ணு என்று புரிந்து தனக்கு முக்தி கொடுக்க வந்திருப்பதையும் அறிந்து கொள்கிறார். உடனேயே தானத்துக்குத் தயாராகிறார்.

ஆனால் அவரின் குருவான சுக்ராச்சாரியாருக்கு இந்தத் தானத்தில் இஷ்டம் இல்லை. தன் சிஷ்யன் இந்திரனை விட உயர்ந்த பதவி பெற வேண்டுமென நினைத்தார். மஹாவிஷ்ணு தன் சிஷ்யனை ஏமாற்றப் போகிறார் என்று எண்ணிக் கொண்டு மஹாபலியிடம் தானம்

கொடுக்கவேண்டாம் எனத் தடுக்கிறார். மஹாபலி மறுக்கிறான்.

தான் சொன்ன சொல் தவறாமல் தானம் கொடுப்பதாயும், வந்திருப்பது மஹாவிஷ்ணு

என்று தான் அறிந்திருப்பதாயும், அவர் மூலம் தனக்கு என்ன நேர்ந்தாலும் சரி எனவும் கூறி ஒரு கிண்டியில் நீர் எடுத்துத் தாரை வார்த்து முறைப்படித் தானம் செய்கிறான். அப்போது மனம் பொறுக்காத சுக்ராச்சாரியார் ஒரு வண்டாக மாறிக் கிண்டியை அடைத்துக் கொள்ள ஒரு தர்ப்பைப் புல்லால் குத்துகிறார், வாமன அவதாரம் எடுத்து வந்த மஹாவிஷ்ணு.

சுக்ராச்சாரியாரின் கண்களில் பாதிப்பு ஏற்படுகிறது. வெளியே வந்த அவர் கருடனுடன் சண்டை போடுகிறார்.

மஹாவிஷ்ணு திரிவிக்கிரம அவதாரம் எடுத்துத் தன் காலால் பூமியையும்,

ஆகாயத்தையும் அளந்துவிட்டுப் பின் மூன்றாவது அடியை எங்கே வைக்க எனக்

கேட்கத் தன் தலையைக் காட்டுகிறான் மஹாபலி. தன் காலை அவன் தலையில்

வைத்து அவனைப் பாதாள உலகிற்கு அனுப்பிக் கீழே உள்ள ஏழு உலகிற்கும் அதிபதியாக்கி அவனுக்குச் சிரஞ்சீவித்துவம் கிடைக்கச் செய்தார்.

இந்த இடத்தில் எல்லாருக்கும் வரும் சந்தேகம் ஆனது:

அது எப்படி மஹாவிஷ்ணுவானவர் ஓர் அரசனை அவன் அசுரக் குலத்தில் பிறந்தான் என்ற

காரணத்தால் கொன்று விட்டு அவனுக்கு மோட்சம் கொடுத்ததாய்ச் சொல்கிறார்களே

என்று வரும். புராணங்களின் கதைகளை நன்கு படித்தோமானால் புரியும். ஒரு

எலியாகப்பிறவி எடுத்துத் தனக்குத் தெரியாமலேயே சிவன் கோவில் விளக்கு எரியக் காரணமாய் இருந்த காரணத்தால் மறுபிறவியில் அரசனாய்ப் பிறந்தும் அசுர

ராஜாவாக இருந்தாலும் நல்லொழுக்கத்துடனும், ,பக்தியுடனும், குருவே தடுத்தாலும் சொன்ன சொல் காப்பாற்றுபவனாயும் இருந்தான் மஹாபலி. அவனுடைய பக்தியை மெச்சியும், உலகில் எதுவுமே யார் ஆளுகைக்கும் நிரந்தரமாய் உட்பட்டது இல்லை. எல்லாமே தர்மத்தின் ஆளுகை என்று தெரிவிக்கவும் யாகத்தைத் தடுத்தார். யாகம் செய்து மூவுலகிற்கும் அரசனானால் அவன் குருவின் துர்ப்போதனையால் அதர்ம வழி நடக்கலாம். அதைத் தடுப்பதற்கும், இதுவரை நல்வழி நடந்த மஹாபலிக்குச் சிரஞ்சீவிப் பட்டம் கொடுக்கவுமே இந்தக் காரியம் நடந்தது. ஸ்தல வரலாறுன்னு எழுதப் போய் எனக்குத் தெரிந்த வரலாறை எழுதி இருக்கேன். ஆனால் இந்த ஸ்தலத்தில் இந்த வரலாறு சம்மந்தப்

பட்டிருக்கிறது. மேற்சொன்ன எலி தூண்டி விட்ட விளக்கு எரிந்த கோவில் இந்தக்

கோவில் தான். இங்கே தான் வாமன அவதாரத்தில் விஷ்ணுவானவர் சிவனைப் பூஜித்திருக்கிறார். அது நாளை.

2 comments:

  1. மாமி, பதிவுகளுக்கு நம்பர் கொடுத்துவிடுங்கள்.....இதன் தொடர்ச்சியான பதிவினை முதலில் படித்துவிட்டு எந்த கோவில் என பின்னூட்டமிட்டேன்.....மன்னிக்கவும்.

    ReplyDelete
  2. ஆஃப்லைனில் எழுதிப்பப்ளிஷ் செய்யும்போது நம்பர் சரியான்னு பார்க்கிறதில்லை. பப்ளிஷ் ஆனால் போதும்னு சில சமயம் ஆயிடுது. அதான் தவறு நேருகிறது. மன்னிச்சுக்குங்க. நானும் சரி செய்யணும்னு நினைப்பேன். முடியலை.

    ReplyDelete