
விநாயகரை மிகவும் சுலபமாய் வழிபடலாம். அணுகுவதற்கு மிக எளியவர் அவர். மஞ்சள் தூளில் நீர் சேர்த்தோ, அல்லது களிமண்ணாலோ அல்லது சாண உருண்டையாலோ விநாயகரைப் பிரதிஷ்டை செய்து விநாயகரை மிகவும் சுலபமாய் வழிபடலாம். களிமண்ணால் ஆன விநாயகருக்குத் தான் விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்து பின்னர் அந்த விநாயகரைக் கடலிலும் கரைக்கிறோம். ஏன் தெரியுமா? இந்த உலகம் மண்ணால் ஆனது. ஒரு காலத்தில் முழுதும் கடல் நீரினால் சூழப் பட்ட இவ்வுலகம் கடல் பின் வாங்கியதால் தோன்றியது என்றும் சொல்வதுண்டு. அந்தக் கடல் பின்வாங்காமல் முன் வாங்கினால் இவ்வுலகம் மீண்டும் கடலுக்குள் போவதும் உறுதி! பூமித் தாய்க்கும், கடலரசனுக்கும் நன்றி செலுத்தும் விதமாய்க் களிமண்ணால் ஆன விநாயரைப் பிடித்து வைத்துப் பூஜை செய்துப் பின்னர் அதைக் கடலிலும் சேர்க்கிறோம். இன்னொரு விதமாயும் சொல்லலாம். உமையவளின் அழுக்கைத் திரட்டி வைத்து விநாயகர் உருவானார் என்பதாயும் ஒரு கதை உண்டு. அந்தக் கதையிலும் உள்ள உள்ளார்ந்த தத்துவம் என்னவென்றால், இந்தப் பிரபஞ்சத்தைச் சக்தியாக நினைத்தோமானால் அந்த மாபெரும் சக்தியின் சுழற்சியால் தோன்றிய இந்தப் பூமியின், மாசு, மருக்களான அழுக்குகளைத் திரட்டி விநாயகர் உருவானார் என்றும் சொல்லலாம். இது பற்றித் திரு சுகி சிவம் அவர்கள் தன்னுடைய சொற்பொழிவிலும் மிக அழகாய்ச் சொல்லுவார்.
மேலும் நம் உடலில் மூன்று விதமான நாடிகளும் இணைந்துள்ள மூலாதாரத்துக்கும் அதிபதி "கணபதி"யே ஆவார். இட, பிங்கள, சூஷ்மன நாடிகள் மூன்றும் சேரும் இடுப்புக்குக் கீழ் பாகத்தை பூமிக்குச் சமமாகச் சொல்லுவதுண்டு. இங்கே தான் மூலாதார சக்தி உறைந்து கிடக்கிறது. அது எழும்பி மேலே உள்ள "ஸ்வாதிஷ்டானம்" என்னும் நீரின் சக்தியுடன் சேர்ந்து கொண்டால் தான், பூமியில் உள்ளே கிடக்கும் விதையில் இருந்து முளை வெளிக் கிளம்பிப் பின்னர் அது வளர்ந்து பெரிய விருட்சமாய் ஆவதைப் போல் நம் "குண்டலினி சக்தி" படிப் படியாக மேலே எழும்பிப் பின் சகஸ்ராரத்தை அடைய முடியும். அந்த மூலாதாரத்துக்கு அதிபதியாகவும் கணபதி தான் விளங்குகிறார். அதற்காகவும் கணபதி வழிபாடு செய்யப் படுகிறது. என்றாலும் இது மிகுந்த ஞானிகளுக்கு மட்டுமே உணரக் கூடிய ஒன்றாகையால், நம் போன்ற சாதாரண மக்களின் அறிவுக்கு எட்டும் வகையில் இந்த பூமியைப் பெண்ணாக உருவகப் படுத்தி, அவளின் மண்ணில் இருந்து உருவான பிள்ளையாரைக் கும்பிடச் சொல்லி இருக்கிறார்கள் பெரியோர்கள். வழிபடும் விதம் எப்படி இருந்தாலும் நோக்கம் ஒன்று தானே.
கேட்ட உடனேயே வரம் கொடுப்பவர் விநாயகர். ஆனால் நாம் வேண்டுவது பிறருக்கு நன்மை அளிக்கக் கூடியதாய் இருத்தல் வேண்டும். விநாயகரை வழிபடுவதால் எல்லா வினைகளும் வேரோடு அறுக்கப் படுகிறது. கணங்கள் அனைத்துக்கும் அதிபதியான விநாயகர் வழிபாடு எப்படிச் செய்ய வேண்டும் தெரியுமா?
நம் உடலில் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை பல எண்ணற்ற நரம்புகள் உள்ளன. அந்த நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாய் இயங்கினால்தான் நம்மால் எந்த வேலையையும் சிறப்பாகச் செய்ய முடியும். அதற்கு வழி காட்டுவது விநாயக வழிபாடு. விநாயகர் சன்னிதிக்கு முன்னால் நாம் இரண்டு கைகளாலும் தலையின் இரு பொட்டுக்களிலும் குட்டிக் கொள்வோமே அதன் காரணம என்ன தெரியுமா? நம்முடைய அந்த இரு நெற்றிப் பொட்டுக்களிலும் தான் சுறுசுறுப்பைத் தூண்டும் நரம்பு மண்டலம் ரத்த ஓட்டம் பாய்ந்து சுறுசுறுப்பைப் பெறும். அதுவும் இரண்டு கையையும் மாற்றி வைத்துக் கொண்டு வலது கையால் இடப்பாகத்திலும், இடது கையால் வலப்பாகத்திலும் குட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு "தோர்பி கரணம்" போட வேண்டும். யோக முறையில் ஒன்றான இதன் பெயர் சம்ஸ்கிருதத்தில் உள்ளது. இதன் அர்த்தம் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது எனப் பொருள். இது தான் மருவி தோப்புக் கரணம் என்றாகி விட்டது. இவ்வாறு தோர்பி கரணம் போட்டு வழிபடுவதால் நம்முடைய உடலில் மூலாதாரம் என்று சொல்லப் படும் இடுப்பின் பின் பகுதியில் உள்ள சக்தி மேலெழும்பி உடல் எங்கும் பரவி சுறு சுறுப்பைக் கொடுக்கிறது. மனம் அமைதி அடையும், உடல் சுறுசுறுப்படையும். பள்ளியில் சில மாணவர்கள் அதிகமாய்ப் படிக்காமல் இருந்தால் அவர்களுக்குத் தோப்புகரணம் போடச் சொல்லித் தண்டனையை ஆசிரியர் கொடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதன் காரணம் என்னவென்று இப்போது புரிகிறதா? அந்த மாணவர்களின் மந்த நிலை மாறி சுறுசுறுப்படைந்து பாடங்களை ஒருமைப் பட்ட மனதுடன் கவனிப்பான் என்பதால் தான்.
இப்போ விநாயகருக்கான பிரசாத வகைகளைப் பார்ப்போமா? சொல்லுவது என்னமோ விநாயக ருக்குன்னு தான். ஆனால் அவர் பேரைச் சொல்லிக் கொண்டு நாம் தானே சாப்பிடறோம்? அதனால் நமக்குப் பிடித்தமான உணவு வகைகளே அவருக்கும் படைக்கிறோம், பிடிச்சதுன்னும் சொல்லுகிறோம். அந்த உணவு வகைகள் என்னவென அருணகிரிநாதர் திருப்புகழில் ஒரு பட்டியலே போட்டிருப்பதாய்ச் சொல்லுவார்கள். எனக்குத் தெரிந்த வரை சொல்கிறேன். அவரை-இதில் அவரைக்காய் மட்டும் அடங்காது. பொதுவாய்த் தமிழில் அவரை என்றால் உள்ளே விதை உள்ள எல்லாவிதமான பீன்ஸ் வகைக் காய்களும் அடங்கும். இந்த அவரை, கரும்பு, நற்கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, தேன், அப்பம், அதிரசம், வடை, பட்சணம் எல்லாவற்றிற்கும் மேலாய் மோதகம். இதில் சிலவற்றைப் பற்றியும் விநாயகருக்கு ஏன் அருகம்புல் விசேஷம் என்றும் பின்னால் பார்ப்போமா?
தமிழ் மணத்திலே என்னோட பதிவை இன்னிக்குச் சேர்க்க முடியலை. செய்தியோடையில் தப்பாம். முழ நீளம் technical info. வருது. நடுவில் கொஞ்ச நாள் சேர்க்காமல் இருந்தேன். அதிலே கோவிச்சுக்கிட்டதோ? :P
ReplyDeleteசுத்தம், தமிழ்மணமே வரலை! நிம்மதி!
ReplyDelete