
தான் பெற்ற மகன்களே தன் முன்னால் வந்து தன் கதையையே சொல்லுவதை ராமர் அறிந்திருக்கவில்லை, என்பதே வால்மீகி ராமாயணத்தின் மூலம் நாம் காண்பது. கம்ப ராமாயணத்தில் கம்பர் ராமாயணம் எழுதும்போது அவரை ஒரு அவதார புருஷனாகவே நினைத்துக் கடவுளருக்குச் சமமாக மட்டுமில்லாமல் கடவுளாகவே நினைத்தும் வந்ததால் அவர் அவ்வாறு எழுதவில்லை. ஆகவே வால்மீகி ராமாயண ராமர் ஒரு சாதாரணமனிதன் போலவே தன் மனைவியிடம் கோபம் கொள்ளுவதையும், சந்தேகம் கொள்ளுவதையும், பின் நாட்டு மக்களுக்காக மனைவியைத் தியாகம் செய்வதையும் செய்ய முடிகின்றது. ஏன் தியாகம் செய்ய வேண்டும்? எல்லாரும் நினைப்பது போல் வண்ணானும், வண்ணான் மனைவியும் பேசிக் கொண்டார்கள் என்பதாலா? இல்லை, அம்மாதிரி எங்கேயும் வால்மீகி ராமாயணத்தில் காணவே முடியாது. பின் என்ன தான் நடந்தது?
ராம, ராவண யுத்தம் முடிந்து ராமர் அயோத்திக்குத் திரும்பிப் பட்டாபிஷேகம் முடிந்து நல்லாட்சி புரிந்து கொண்டிருக்கும் வேளையில் சில வருடங்களில் சீதை கருவுருகிறாள். கருவுற்றிருக்கும் மனைவியை மனமகிழ்விக்க ராமர் பலவிதங்களிலும் முயலுகின்றார். அப்போது சீதை ராமரிடம், தான் மீண்டும் காட்டுக்குப் போய்ச் சில தினங்கள் ரிஷி, முனிவர்களுடைய ஆசிரமத்தில் இருந்து வரவேண்டும் என்ற ஆசையைத் தெரிவிக்கின்றாள். மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்வதாய்ச் சொல்லுகின்றார் ராமர். அப்போது நாட்டின் பல திசைகளுக்கு அவர் அனுப்பி இருந்த தூதுவர்கள் வந்திருப்பதாய்ச் செய்தி வரவும், ராமரும் அவர்களைச் சந்திக்கப் போகின்றார். அவர்களில் ஒருவன், "பத்ரன்" என்ற பெயர் கொண்டவன், மிகவும் தயக்கத்துடனும், வணக்கத்துடனும் ராமரைப் பார்த்து, "அரசே, மக்கள் உங்கள் நல்லாட்சியால் மனம் மகிழ்ந்திருந்தாலும், அரசர், மனைவியின் அழகிலும், அவளுடன் வாழ்வதிலும் உள்ள பெரிய ஆசையால், பல மாதங்கள் ராவணனிடம் சிறை இருந்த மனைவியைத் திரும்பச் சேர்த்துக் கொண்டு விட்டாரே? ராவணனைக் கடல் கடந்து சென்று கொன்று வீழ்த்திய அவரின் சாதனை, இந்தச் செயலால் மாசு பட்டுவிட்டதே? சிறை இருந்த ஒரு பெண்ணை எப்படி அவர் திரும்பச் சேர்த்துக் கொண்டு வாழலாம்? நாளை நம் மனைவிகளுக்கும் இம்மாதிரியாக நேர்ந்தால், நாமும் அவ்விதமே செய்யவேண்டும், ஏனெனில் அரசன் எவ்வழி, அவ்வழி குடிமக்கள்" எனப் பேசிக் கொள்வதாயும், மற்ற விஷயங்களில் மக்கள் பெருமளவு திருப்தியாகவே இருப்பதாயும் தெரிவிக்கிறான். மனம் நொந்த ராமர், மற்றவர்களையும் பார்த்து இது நிச்சயம் தானா எனக் கேட்க, அவர்களும் அவர்கள் சென்ற இடங்களிலும் இம்மாதிரியான பேச்சே இருப்பதாய்ச் சொல்லுகின்றனர்.
செய்வது அறியாமல் திகைத்த ராமர், தன் சகோதரர்களிடம் கலந்து ஆலோசிக்கின்றார்.சீதை அக்னிப் பிரவேசம் செய்ததையும், அவள் மாசற்றவள் என்றே தாம் நம்புவதாயும் தெரிவித்த அவர், ஆனால் இவ்வாறு ஒரு அவப் பெயர் ஏற்பட்டுவிட்டதே, எனவும் மனம் நொந்தார். ஒரு அரசனுடைய அரசாட்சியில் இவ்வாறு அவப் பெயர் யாரால் ஏற்பட்டாலும் அவன் அவர்களைத் துறக்கவேண்டியதே நியாயம். உங்களால் ஏற்பட்டிருந்தாலும் உங்களையும் நான் துறக்கவேண்டியதே! இப்போது சீதையை நான் துறக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டிருக்கின்றேன். லக்ஷ்மணா, நீ நாளைக் காலை அரண்மனைத் தேரைத் தயார் செய்து சீதையைக் கங்கைக் கரையில் உள்ள ரிஷிகளின் ஏதாவதொரு ஆசிரமத்துக்கருகில் விட்டு விட்டு வா. என்னுடைய இந்த முடிவுக்கு மாறாக ஒருவரும் பேச வேண்டாம். அது நீங்கள் எனக்கு இழைக்கும் தீங்கு. மேலும் சீதையும் காட்டில் வாழவேண்டும் என ஆசையும் பட்டாள்" என்று ஆணையிட்டுவிட்டு, கண்ணில் பெருகும் கண்ணீரை நிறுத்த வழியில்லாமல் தனிமையை நாடிச் சென்றார். இனி தனக்கு வாழ்நாள் முழுதும் சீதை கிடைக்க மாட்டாளே என்று உணர்ந்தவர் போல்.
மறுநாள் சீதையை லட்சுமணன் கூட்டிச் செல்கின்றான். வழக்கம்போல் சுமந்திரர் தேரை ஓட்டுகின்றார். யாருக்கும் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. இதை அறியாத சீதை தன் கணவன் இவ்வளவு சீக்கிரம் தன் ஆவலைப் பூர்த்தி செய்வதை அறிந்து தான் மகிழ்ச்சி அடைவதாயும், அங்கே உள்ள ரிஷிபத்தினிகளுக்கும், ரிஷி குமாரிகளுக்கும் தான் அளிக்கப் போகும் பரிசுகள் பற்றியும் சொல்லிக் கொண்டு வருகின்றாள். கங்கைக் கரையும் வந்தது. லட்சுமணன் "ஓ"வெனக் கதறுகின்றான். சீதை சொல்கின்றாள்:"லட்சுமணா, பிரிந்து இருப்பதை நினைத்தா அழுகின்றாய்? எனக்கும் ஸ்ரீராமரைப் பிரிந்து இருப்பது வருத்தமாய்த் தான் இருக்கப் போகின்றது. ஆனால் எல்லாம் கொஞ்ச நாட்கள் தானே? ஒன்று செய்யலாம், நதியைக் கடந்து அக்கரைக்குச் சென்று, ரிஷிகளின் ஆசிரமத்தை அடைந்து அவர்களுக்குப் பரிசுகள் கொடுத்துவிட்டு ஆசிகளைப் பெற்றுக் கொண்டு உடனடியாக நான் திரும்பி விடுகின்றேன். அது வரை பொறுத்துக் கொள்!" என்று சொல்லி நதியைக் கடக்கச் சொல்கின்றாள். நதியைக் கடந்து சென்றார்கள். ராமர் இல்லாத தன் வாழ்க்கைப் பயணத்தைக் கடக்கப் போவதை அறியாத பேதை சீதையும் சந்தோஷமாய் நதியைக் கடந்தாலும், மனதில் உறுத்தலும் சில துர்ச்சகுனங்களும் அவளையும் வேதனைப் படுத்தின. லட்சுமணன் மறுகரையை அடைந்ததும் சீதையை வணங்கி, ராமர் தனக்கு இட்ட வேலையைச் சொல்கின்றான். இது எனக்கு மட்டுமில்லாமல் மற்ற தம்பிமார், மற்றும் அரண்மனையில் யாருக்கும், இன்னும் சொன்னால் ராமருக்குமே விருப்பம் இல்லாத ஒன்று என்றும் வேறு வழியில்லாமல் அரச தர்மத்த்தைக் காப்பாற்றவே இவ்வாறு செய்ய நேர்ந்தது எனவும் சொல்கின்றான். அவ்வளவில் அங்கேயே சீதையை விட்டுவிட்டு லட்சுமணன் திரும்பும்போது சீதை அவனிடம் தான் பூர்ண கர்ப்பவதியாகவே இங்கே வந்திருப்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று தன் கர்ப்ப வயிற்றை அழுகையுடனேயே லட்சுமணனுக்குக் காட்டிச் சொல்கின்றாள். லட்சுமணன் வேதனையுடனேயே திரும்ப சீதை சத்தம் போட்டு அழுகின்றாள்.
அவள் அழுகுரல் கேட்டு அங்கே வரும் ரிஷிகுமாரர்களும், மற்றவர்களும் வால்மீகியிடம் போய்ச் சொல்ல அவரும் தன் மனக்கண்களால் பார்க்கக் கூடிய திறமை பெற்றவராய் இருந்தமையால் , நடந்ததை ஊகித்துச் சீதைத் தன் ஆசிரமத்தில் வைத்துப் பாதுக்காக்கின்றார். உரிய நேரத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்க அவர்கள் இருவருக்கும் வால்மீகியே லவன், என்றும் குசன் என்று பெயர் இடுகின்றார். தன் கையில் இருந்த தர்பையை இரண்டாய்க் கிழித்து மேல்பாகத்தால் சுத்தம் செய்யப் பட்டவனைக் "குசன்" என்றும், தர்பையின் கீழ்பாகத்தால் சுத்தப் படுத்தப் பட்டவனை "லவன்" என்றும் அழைக்குமாறு கூறினார். பின்னர் அந்தப் பிள்ளைகளுக்கு அவரே குருவாக இருந்து அனைத்து வித்தைகளையும் கற்பித்தார். அந்த பிள்ளைகள் தான் தன் தகப்பனுக்கு எதிரேயே அமர்ந்து தன், தாயின், தகப்பனின் சோகக் கதையைத் தன் தகப்பனிடமே பாடிக் கொண்டிருந்தார்கள். இதில் பால காண்டமும், ராமர் ஏன் சீதையைப் பிரிய நேரிட்டது? என்பதும் நாளை பார்ப்போமா?

மேலே நாம் காணும் ஆசிரமத்தில் தான் சீதை வந்து தங்கியதாய்ச் சொல்லப் படுகின்றது. கதாசிரியையின் கருத்துப் படி, வால்மீகி ராமரை ஒரு சாதாரணமான கட்டுப்பாடுகளும், ஒழுங்கும் நிறைந்த மனிதனாக மட்டுமில்லாமல் "மனிதருள் மாணிக்கம்" ஆகவே திகழ்கின்றான். தன் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன் காதல் மனைவியையே தியாகம் செய்கின்றான். அம்மாதிரியான சூழ்நிலைக்கு அவன் தள்ளப் படுகின்றான். முதலில் தந்தை சொல்லைக் காப்பாற்றிய ஒரு முன்மாதிரியான மகன், பின்னர் சகோதரனுக்காக நாட்டை விட்டுக் கொடுத்தவன், தன் சிறிய தாயாரின் ஆசைக்காகக் காட்டுக்கும் சென்றவன், அப்போதும் தன் மனைவியை விட்டுப் பிரியாத அன்பான கணவன், என்று இம்மாதிரியான ஒரு தேர்ந்தெடுக்கப் பட்ட முன்னுதாரணம் ஆன ஒரு அருமையான அரசாட்சியும் செய்து வந்த அரசனின் நேர்மைக்கும், திறமைக்கும் பின்னே அவனின் தனிப்பட்ட வாழ்க்கையின் உறவுகளின் அர்த்தங்கள் தான் என்ன? அதை விவரிக்கும் ஒரு கோணத்திலேயே சில காட்சிகளை வால்மீகி சித்திரித்திருப்பதாய்ச் சொல்கின்றார். இனி, நாம் நாளை முதல் காணப் போகும் பாலகாண்டத்தில் இருந்து ராமரின் குணாதிசயங்கள் மட்டுமில்லாமல், மற்றவர்களின் மேல் அவருக்கு உள்ள உறவின் வெளிப்பாடுகளையும் அதன் தாக்கத்தையும் காண்போம்.

ராமர் தன் மனைவியைப் பிரிந்ததற்குக் காரணமே அவரின் ஊழ்வினையும், விஷ்ணுவின் அவதாரமாகவே அறியப் பட்ட அவர் ஒரு கடவுளாக இருந்தாலும், தவறு செய்தால் சாபத்துக்குக் கட்டுப் பட்டவரே என்பதையுமே நாளை காணப் போகின்றோம். ஒழுக்கமும், நேர்மையும், சொன்ன சொல் தவறாமையும் உள்ள ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கண்ட பேரிழப்புக்களயும் அவற்றை அவன் மனத்திண்மையுடனேயே தாங்கிக் கொண்டதுமே ராமாயணத்தின் மையக் கருத்தாக அவர் சொல்கின்றார்.
"ஜகம் புகழும் புண்யகதை ராமனின் கதையே.....அதை செவி குளிரப்பாடிடுவோம்....."
ReplyDelete