
பிருகு முனிவரின் ஆசிரமம். அவர் மனைவி க்யாதி தட்சனின் மகள். ஆகவே இயல்பாகவே அவளுக்கு அசுரர்களிடம் பாசம் மிகுதியாக இருந்து வந்தது. தேவர்களிடம் தோற்றுப் போன அசுரர்களை அவள் தன் கணவரின் ஆசிரமத்தில் மறைத்து வைத்துப் பாதுகாத்து வந்தாள். அப்போது இதை அறிந்த மகாவிஷ்ணு, ஏமாற்றிப் பிழைத்து வந்த அசுரர்கள், இங்கே பயம் இல்லாமல் வாழ்வதற்கு பிருகு முனிவரின் மனைவியே காரணம் என்பதைத் தெரிந்து கொண்டு, தன் சக்ராயுதத்தை ஏவ, அவள் தலை துண்டிக்கப் படுகின்றது. தன் மனைவி இறந்ததைக் கண்ட பிருகு முனிவர் கடும் கோபத்துடன், தன் மனைவியைக் கொன்றவன் மகா விஷ்ணுவே என்று அறிந்திருந்தாலும், அவரைப் பார்த்துச் "சற்றும் நியாயமே இல்லாமல் குற்றமற்ற என் மனைவியைக் கொன்ற நீர் மனிதப் பிறவி எடுத்து, மனைவியைத் துறந்து அதன் பின்னரும் நீண்ட காலம் தனிமையில் வாழக் கடவது!" என்று சபிக்கின்றார். மகாவிஷ்ணுவும், தான் ராவண சம்ஹாரத்துக்காக மனிதப் பிறவி எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டவராய், அந்தச் சாபத்தை ஏற்றுக் கொண்டார். அவர் தான் இந்தப்பிறவியில் ராமராக அவதரித்துள்ளார்.
இந்த விஷயம் துர்வாச முனிவரால் தசரதனுக்கு, வசிஷ்டரின் முன்னிலையில் சொல்லப் பட்டதாயும், ஆகவே இது இவ்வாறுதான் நடக்கும் எனத் தான் முன்பே அறிந்திருந்ததாயும், என்றாலும் இது பற்றிப் பேசக்கூடாது என்று தான் பணிக்கப் பட்டிருந்ததாயும் சுமந்திரர் வாய் மூலமாக லட்சுமணன் சீதையை வால்மீகி ஆசிரமத்தில் தன்னந்தனியே விட்டு விட்டு வரும் வழியில் அறிந்து கொள்கின்றான். யாராக இருந்தாலும் "விதி வலியது" என்பதும், முன்பிறவியின் பாவங்களுக்கு ஏற்ற தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதையும் புரிந்து கொண்டான். என்றாலும் அவன் மனம் அமைதி அடையவில்லை. நாட்டுக்குத் திரும்பி ராமரிடம் நடந்த விபரங்களைத் தெரிவிக்கின்றான். ராமர் மன அமைதியின்றித் தவிக்கின்றார். அவர் தான் அஸ்வமேத யாகம் செய்ய நிச்சயித்துச் செய்யும் வேளையில் லவ, குசர்களால் பாடப் பட்ட ராமாயண காவியத்தை மக்களோடு மக்களாய்ச் சேர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
**************************************************************************************

கோசல நாட்டு மன்னன் ஆன தசரதன் அயோத்தி என்னும் மாநகரைத் தலைநகராய்க் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்குக் குழந்தைகள் இல்லை. பல விதங்களிலும் சிறப்பு வாய்ந்த மன்னனுக்கு மூன்று மனைவியர் இருந்தனர். என்றாலும் மூவருக்கும் குழந்தைகள் இல்லை. நீதி தவறாத மன்னன் ஆன தசரதனின் அவையின் மந்திரிகள் நன்னடத்தை வாய்ந்தவர்களாய் இருந்ததிலும், குடிமக்கள் தெய்வ பக்தி நிரம்பி இருந்ததையும் கண்டு ஆச்சரியம் ஏதும் இல்லை அல்லவா? தன் மந்திரிகளைக் கலந்து ஆலோசித்த மன்னன் அஸ்வமேத யாகம் செய்தால் குழந்தை பிறக்கும் எனத் தெரிந்து கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் வேளையில், தன் மந்திரியும், தேரோட்டியும் ஆன சுமந்திரர் மூலம் விபாண்டகரின் மகன் ஆன ரிஷ்யசிருங்கர் பற்றியும், பிறந்தது முதல் பெண்களையே அறியாத அவர் அங்க தேசத்து வறட்சியைப் போக்க அந்த தேசத்து மன்னனால் வரவழைக்கப் பட்டதையும் சொல்கின்றார். பின்னர் ரிஷ்யசிருங்கர் நாட்டுக்குள் நுழைந்ததுமே அங்க தேசம் வறட்சி நீங்கிப் பசுமை பெற்று மழை பொழியத் துவங்கினதையும், மனம் மகிழ்ந்த அங்க தேச மன்னன் தன் மகள் ஆன சாந்தையை ரிஷ்யசிருங்கருக்குத் திருமணம் செய்வித்துத் தன்னுடனேயே வைத்திருப்பதையும் சொல்கின்றார். அந்த ரிஷ்ய சிருங்கர் இங்கே வந்தால் உங்கள் கவலையைப் போக்கிக் குழந்தை வரம் பெற யோசனையும் சொல்லுவார் என்று சுமந்திரர் சொல்கின்றார். அதன் படியே ரிஷ்ய சிருங்கரை மன்னன் தசரதன் வரவழைக்கின்றார். ரிஷ்ய சிருங்கரும் அஸ்வமேத யாகம் முடிந்ததும் தசரதரைப் புத்ர காமேஷ்டி யாகம் செய்யும்படிப் பணிக்கவே, தசரதர் புத்ரகாமேஷ்டி யாகம் ரிஷ்ய சிருங்கரின் தலைமையில் செய்கின்றார்.
யாகக் குண்டத்தில் இருந்து தேவ தூதன் போன்ற ஒருவர் எழுந்து வந்து தன் கையில் வைத்திருந்த ஒரு தங்கப் பாத்திரத்தை தசரதரிடம் கொடுத்து, "மன்னா! இதில் உள்ள பாயாசத்தை உன் மனைவிமார் அருந்தச் செய்! யாகம் செய்ததின் பலனைப் பெறுவாய்!" என்று கூறி மறைகின்றான். தசரதரும் அதை வாங்கிக் கொண்டு, முதல் மனைவியான கெளசலைக்குப் பாயாசத்தில் பாதியைக் கொடுக்கின்றார். மிச்சம் இருந்த பாதியில் பாதி பாகத்தை சுமத்திரைக்கும், மிச்சம் இருந்த பாதியைக் கைகேயிக்கும் கொடுத்த பின்னரும் கொஞ்சம் மிச்சம் இருக்கவே அதை மீண்டும் சுமத்திரைக்கே கொடுக்கின்றார். கொஞ்ச நாட்களில் மூன்று மனைவியருமே கர்ப்பம் தரிக்கின்றார்கள்.
*************************************************************************************
தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள் என்ற ஒரு வழக்கு உண்டு. ஆனால் வால்மீகியின் ராமாயணத்தில் தசரதனுக்கு இந்த மூன்று மனைவியர் தவிர வேறு மனைவியர் இருப்பதாய் எங்குமே குறிப்பிடவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. தசரதனின் அந்தப் புரத்தில் நூற்றுக் கணக்கான பெண்கள் இருந்து வந்தார்கள் என்று சொல்லப் பட்டாலும், அவர்கள் எல்லாருமே மனைவியர் என்று எங்குமே குறிப்பிடப் படவில்லை. அந்தப் புரத்தின் வேலைகளைக் கவனிக்கும் பெண்கள், அந்தரங்கத் தாதிமார், மற்றும் தசரதனின் உறவின் முறைப் பெண்கள் என்ற அளவில் மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கின்றது. மற்றபடி கம்பராமாயணத்தில் இருக்கிறதானும் பார்த்தேன், எனக்குத் தெரிந்த வரையில் அதிலும் அவ்வாறு குறிப்பிடப் படவில்லை. மேலும் ரிஷ்யசிருங்கரின் மனைவியான சாந்தை என்பவள் அங்க தேச மன்னன் ஆன ரோமபாதனின் மகள் ஆக இருக்கச் சிலர் அவளை தசரதனின் மகள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் தவறு. இனி நாளை, தேவருலகில் என்ன நடந்தது என்றும் பார்க்கலாம், நாளை ஸ்ரீராமர் பிறக்கப் போகின்றார். காத்திருங்கள்.
என்னது இன்னும் ராம ஜனனம் நடக்கல்ல?...:)
ReplyDeleteகீதாம்மா. சாந்தை உரோமபாதரின் மகள்; தசரதரின் வளர்ப்பு மகள் என்று தான் படித்த நினைவு. அதனால் நீங்கள் சொல்வதும் சரி; தசரதனின் மகள் என்பதும் சரி. அண்மையில் சாந்தையைக் கதாநாயகியாகக் கொண்டு வனவாசத்தின் போது இராமனும் சீதையும் அவர்களைக் கண்டு பேசுவதாக ஒரு குறுநாவல் படித்தேன். மிக அருமையாக இருந்தது.
ReplyDeleteபதிவின் சுட்டிக்கு நன்றி
ReplyDelete