எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 24, 2008

என் கையில் விழுந்த சாக்லேட்!

இந்த வார ஆனந்த விகடனில் "வண்ணதாசன்" எழுதும் "அகம், புறம்" அனுபவக் கட்டுரைத் தொடரில் நான் ரசித்த பகுதியை இங்கே போடுகிறேன்.

"பெயரை அறிவது ஒரு நெருக்கம் உண்டாக்குகிறது அல்லவா? அந்த உணர்வுடன் தான் சேர்ந்த வேலை, இப்போது செய்கிற வேலை, சம்பளம், குழந்தைகள் பற்றி எல்லாம் அந்தப் பெண் சொல்லிப் பகிர்ந்திருக்கிறார். "ஒரு தோழமை நிரம்பிய பெண்ணின் பெயரை அறிவதற்கு எனக்கு இருபது வருடங்கள் ஆகியிருக்கின்றன" என்று அந்த நண்பர் சொல்லும்போதே, இத்தனை வருடங்களிலும் பெயர் அறியாஹ முகங்களின் அணிவகுப்பு துவங்கியதைத் தடுக்க முடியவில்லை. மஜீத்கள், சுஹ்ராக்கள் இளம்பருவத் தோழியை பஷீர் எழுதியது போல, முதிர் பருவத்துத் தோழி பற்றி யார் எழுதப் போகிறார்கள்? முதிர்பருவத்துத் தோழியே எழுதப் படாதபோது, முதிர் பருவத் தோழன் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது!

"உங்க கிட்டே இதைச் சொல்லணும், அத்தான்!" அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போகிர பாதையில் வந்திருப்பான் போல, கையில் பை இருந்தது. ஆர்.ஷண்முகசுந்தரத்தின் "நாகம்மாள்" புத்தகம் பக்கவாட்டில் எட்டிப் பார்த்தது. ஒரு முழுவேலை நாளின் எந்த அலுப்பும் இல்லாமல், முகம் பளிச்சென்று இருந்தது, "சொல்லு மாப்பிளே!" என்று நான் உட்காரச் சொல்கையில், முகம் இன்னும் கொஞ்சம் மலர்ந்தது. கொடியில் காயப் போட்டிருக்கிற சிவப்புச் சேலையில், இதுவரை மங்கியிருந்த வெயில், இரண்டு நிமிடங்கள் தீப்பிடித்த மாதிரி பிரகாசிக்கும்போது இப்படித் தான் இருக்கும்.

உடனே சொல்ல ஆரம்பிக்கவில்லை. இந்த வீட்டை இப்போது தான் முதலில் பார்க்கிறமாதிரி கொஞ்ச நேரம் இருந்தான். வாரப் பத்திரிகையை எடுத்து விசிறிப் புரட்டாலாகத் திருப்பிவிட்டு வைத்தான். உட்கார்ந்திருந்த சோபாவில் மிச்சம் கிடந்த காலியிடத்தைத் தடவிக் கொடுத்தான். மறுபடி சிரித்தான்.டக்கென்று "ஒண்ணுமில்லை அத்தான், நகைக்கடன் வாங்குறதுக்கு ஒரு புள்ளை வந்திருந்தது. உடனே நீங்க ஒண்ணும் யோசிச்சிராதீங்க, கல்யாணம் ஆகிக் கைப்பிள்ளை இருக்கு" என்று மேற்கொண்டு சிரித்தான்.

அந்தப்பெண் கன்னங்கரேர் என்ரு ஒரு சிலை மாதிரி இருந்தாளாம். அம்மன் கோயிலில் இருந்து அப்படியே பெயர்த்து எடுத்து வந்து, இப்படி நடு ஹாலில் காஷ் கவுண்டருக்கு முன்னால் நிறுத்தி வைத்தது போலவாம்! மூக்கு அப்படியாம்! கண் அப்படியாம்! பல் அப்படியாம்! சிரிப்பைப் பற்றிச் சொல்லவே முடியாதாம்! அப்படியே "கை எடுத்துக் கும்பிடணும்போலே" இருந்தாளாம்! இத்தனைக்கும் படிப்பு, நாகரிகம் எதுவும் இல்லையாம்!"தொப்"னு தண்ணிக்குள்ளே விழுந்து, விரலால் அடிச்சுப் போய் பறிச்சுட்டு வந்த தாமரைப் பூ மாதிரினு வச்சுகிடுங்களேன்" என்று அவன் சொல்லச் சொல்ல நான் எனக்குத் தெரிந்த முகங்களின் கற்பனையில் இருந்தேன். உலகமே அப்படித் தானே!

ஒருத்தர் வைத்த புள்ளிக்கு இன்னொருத்தர் போடுகிற கோலம் வேறு அல்லவா? நான் வரைந்த ஊஞ்சல் ஆடும் பெண்ணை, நீங்கள் பார்க்கும்போது ஆடுவது உங்களுக்கு நெருக்கமான பெண்தானே?

"அது அழகா இருக்கிறது எல்லாம் முக்கியமில்லை அத்தான்!"யம்மா! நீ ரொம்ப அழகா இருக்கே தாயி!"ன்னு அதைக் கூப்பிட்டு ஒரு வார்த்தை சொல்லணும்னு எனக்குத் தோணினதுதான் ஆச்சரியம்!"

"சொல்லிட்டியா?"

"சொல்லிட்டேன்!"

"அடிகிடி, விழுந்ததா?"

"நான் சொன்னவுடனே அது முகத்திலே வெட்கத்தைப் பார்க்கணுமே!" கிட்டத் தட்ட அந்தப் பெண் வெட்கப் பட்ட விதத்தை அவன் நடித்தே காண்பித்து விட்டான்.

"அது வெட்கமா? மாப்பிளே! சந்தோஷம்! நீ சொன்னது, அது அதைக் கேட்டுக்கிட்டது இரண்டையுமே நம்ப முடியல்லே!" நான் சொல்ல, அவன் தங்கத் தாள் சுற்றின அந்தச் சாக்லேட் பட்டியை என் முன்னே நீட்டினான். "இதை நம்புகிறீர்களா? அது கொடுத்துட்டுப் போச்சு!" என்று என்னைப் பார்த்தான்.

"சாப்பிடாமல் அப்படியே வச்சுகிடப் போறியா?"

"யார் சொன்னா? உங்க கிட்டே சொன்ன மாதிரி எல்லாக் கதைகளையும், ஹரி அம்மா கிட்டே சொல்லிட்டு, அப்புறம் அல்லவா முடிவு பண்ணணும்? அதைச் சாப்பிடுறதா, வச்சிருக்கறதா என்று!"

சாக்லேட் பட்டி அவனுடைய உள்ளங்கையை நிரப்பியிருந்தது. நான் என்னுடைய கையைப் பார்த்துக் கொண்டேன்.

எல்லோர் கையிலும் இப்படி ஒன்றை வைத்துக் கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!"

வண்ணதாசனின் எழுத்தின் ஒரு பகுதி, எனக்குப் பிடிச்ச இடத்தை மட்டுமே கொடுத்திருக்கேன். ஸ்கான் பண்ணிப் போடவேண்டாம்னு முடிவெடுத்ததுக்குக் காரணமே, மீண்டும் ஒரு முறை படிக்கிற ஆசையில் தான். அந்த இளைஞனின் தெளிவான மனமும், மனைவியிடம் இன்னொரு பெண்ணின் அழகைப் பற்றிச் சொல்லப் போவதையும், அவள் கொடுத்த சாக்லேட்டைப் பின்னர் தான் சாப்பிட வேண்டும் என வைத்திருப்பதும், எழுத்தில் அந்த உணர்வுகளை வண்ணதாசன் வடித்திருப்பதும்

சாக்லேட் என் கையிலேயே வந்துட்ட மாதிரி உணர்வு!

10 comments:

  1. \\சாக்லேட் என் கையிலேயே வந்துட்ட மாதிரி உணர்வு!\\

    அதே..அதே...விகடனில் உடனே படிக்கிறேன் ;)

    நன்றி தலைவி ;)

    ReplyDelete
  2. ஆரம்பிச்சாச்சா மறுபடியும்?

    ஒரு நிமிஷம் நான் எந்த பிளாக்குல இருக்கேன்னு கண்ண கட்டிடுச்சு. :p

    ReplyDelete
  3. //ஒரு நிமிஷம் நான் எந்த பிளாக்குல இருக்கேன்னு கண்ண கட்டிடுச்சு.//

    ரீப்பீட்டே....

    எனக்கும் பதிவினை படிச்சு முடிக்கையில் டோண்டு பதிவினை படித்த உணர்வு.....உங்க ரெகுலர் பதிவு போல இல்லை, ஏதோ மிஸ்ஸிங். :)

    ReplyDelete
  4. அவசியம் விகடனைப் படித்தே ஆகணும்..:)))

    ReplyDelete
  5. //அந்த இளைஞனின் தெளிவான மனமும், மனைவியிடம் இன்னொரு பெண்ணின் அழகைப் பற்றிச் சொல்லப் போவதையும், அவள் கொடுத்த சாக்லேட்டைப் பின்னர் தான் சாப்பிட வேண்டும் என வைத்திருப்பதும், எழுத்தில் அந்த உணர்வுகளை வண்ணதாசன் வடித்திருப்பதும்

    சாக்லேட் என் கையிலேயே வந்துட்ட மாதிரி உணர்வ//

    ஒரு கணம் நினைத்துப் பார்ப்போமா ?]

    இதே எழுத்துக்கள் விகடனில் ஒரு 30 வருடங்களுக்கு முன்னால் வந்து அதை நீங்கள் அல்லது த‌ங்கள் தாய் தந்தையர் படிக்க நேர்ந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள் ? அது இருக்கட்டும் ! இப்படிப்பட்ட ஒரு கட்டுரை அல்லது கதைதனை விகடனில் பிரசுரித்து இருப்பார்களா என்றே தோன்றுகிறது.

    2008 ல் உங்களுக்கு " சாக்லேட் ..கையில் வந்துட்ட மாதிரி உணர்வு " ஒருவேளை

    2028 அல்லது 2038 ல் ,
    காட்சி காலத்துக்கேட்டவாறு மாறும்போது,
    இது போன்ற வர்ணனை வரின் ? (சற்றே பாத்திரங்களை மாற்றி எழுதுங்கள் ! )

    "..அந்தப் பெண்ணின் தெளிவான மனமும், கணவனிடம் இன்னொரு ஆணின் அழகைப் பற்றிச் சொல்லப்போவதையும், அவன் கொடுத்த சாக்லேட்டைப் பின்னர் தான் சாப்பிட வேண்டும் என வைத்திருப்பதும்....."

    ஒரு வர்ணனை இப்படிப் போனால்,
    எத்தனை ஆண்கள் பொறுமையுடன் கலை உணர்வுடன் இலக்கிய சுவையுடன் படிப்பார்களெனத்
    தெரியவில்லை.

    Mr.& Mrs.X படம் பார்த்திருக்கிறீர்களா ?

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  6. சொன்னதை செயலாக்கும் வகையில் நேற்றிரவே வாங்கிப் படிக்க ஆரம்பித்ததில்...வண்ணதானின்
    "அகமும் புறமும்" தொடரை நிறையவே மிஸ் பண்ணிவிட்டது போன்ற வருத்தம் மேலோங்கவே செய்தது... "மனசே ரிலக்ஸ் ப்ளிஸ்" போல் இத்தொடரும் புத்தக வடிவம் கண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்... ஆனாலும் யார் இந்த வண்ணதாசன் என்ற எண்ணம் மட்டும் மேலோங்கியுள்ளது... தமிழக எழுத்தாளர்களை படித்து நீண்ட காலமாகிவிட்டது என்ற உண்மை இப்பொழுது நன்றாகவே புரிகிறது... :(

    ReplyDelete
  7. ம்ம்ம்... பெரிய கருத்து மோதல் எதுவும் இல்லை. அப்புறம் லிங்க் நான் இன்பாக்சுக்கு வரும் மெயிலிலிருந்து அப்படியே க்ளிக் செய்து போவேன். நோ காபி பேஸ்ட்!

    ReplyDelete
    Replies
    1. krrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

      Delete
  8. இப்போது மறுபடி படிக்கையில் இரண்டு விஷயங்கள் தோன்றுகின்றன.  முதலாவது,  2008 வரை விகடன் வாங்கி இருக்கிறீர்கள், அல்லது படித்திருக்கிறீர்கள்.  இரண்டாவது, விகடன் அப்போது நானும் வாங்கி கொண்டிருந்தேன் என்று நினைவு.  அதில் அகம் புறம் என்றுவ வந்ததா என்று நினைவில்லை.  புத்தகமாக பி டி எஃப்பாக கிடைக்கிறதா என்று தேடிப்பார்க்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. விகடன் அப்போதெல்லாம் வாங்கிய நினைவில் இல்லை. அநேகமாய் ரயில்ப் பயணம் ஏதேனும் ஒன்றில் வாங்கிப் படித்திருக்கணும். அல்லது அண்ணா வீடு/தம்பி வீடுகளில் படிச்சிருக்கணும். படிப்பதை நிறுத்தியது 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர்.

      Delete