எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 16, 2008

மீனாட்சி எங்கே இருக்கிறாள் மதுரையில்?


//ஹூஸ்டன் மீனாட்சி திருக்கோயிலில் மதுரைச் சகோதரர்கள் இராஜரத்தின பட்டர்
(வயது 81), தங்கம் பட்டர் (85 வயது) ஆகிய ஆகம விற்பன்னர்களுடன்
பேசிக்கொண்டிருந்தேன். சென்னை உயர்நீதி மன்றம், டெல்லி உச்ச நீதிமன்றம்
போன்றவற்றில் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், வெங்கட்ராம சாஸ்திரி போன்றோர்
முழுமுயற்சியின் விளைவாக 20-ஆம் நூற்றாண்டில் 'சிதம்பரம் கோயில் ஒரு
'ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி', அது மடம், கோயில் (temple) அல்ல' என்று சட்ட
பூர்வமாக எழுதப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சினை என்று விளக்கினர்.
அதற்கு ஆதரவைச் சைவமடங்கள் - தருமபுரம், திருவாவடுதுறை, ... போன்றவை
தந்துள்ளன. எனவே, மெல்ல மெல்லத் தான் மக்களளட்சி அரசின் முயற்சிகள்
நடைமுறைக்கு வரும். தீட்சிதர்களுக்கு வருமானம் பெருகவும், தனியாரிடம்
விதவிதமாய் வசூல்கள் ஒழுங்கடையவும், கோயில் கட்டிடங்கள், மண்டபம்,
கோபுரம், விமானம் நல்லமுறையில் வெகுபணம் செலவிட்டு ஏனைக் கோவில்கள் போலச்
செழிக்கவும் தில்லைத் திருத்தலம் ஒரு private property அன்று, அனைத்துச்
சைவருக்கும் சொந்தமானது என்னும் நிலையை அரசு ஏற்படுத்தவேண்டும். 21-ஆம்
நூற்றாண்டில் ஏற்படப்போகும் நீதிமன்றங்களும், சர்க்கார்களும்
அந்நிலைக்குச் சரி செய்துவிடுவார்கள் என்று நம்புவோம். திருப்பதி, பழனி,
மதுரை, ... போன்று வரும்படி சிதம்பரத்தில் மிகுங்காலத்தில் தமிழ்ப்
பள்ளிகள், நுட்பக் கல்லூரிகள் தொடங்கி அரசாங்கம் நடத்தலாம்.
தென்னார்க்காடு மாவட்டத்தில் (உ-ம்: வள்ளலாரின் வடலூரில் ஒரு
சர்வகலாசாலை), யாழ்ப்பாணத்திலுங் கூட, கல்லூரிகளுக்கு நிதி அளிக்கும்
நிலை ஏற்பட வேண்டும்.//

திரு நா.கணேசன் அவர்கள் எழுதியவை மேற்கண்ட குறிப்புக்கள். மதுரைக் கோயிலைப் போல் தில்லைக் கோயிலும் ஆகவேண்டும் என்று ஆசைப் படுகின்றார். ஆனால் மதுரைக்கோயிலுக்கு அவர் போய் எத்தனை வருஷம் ஆகின்றது என்று புரியவில்லை. 70களிலும், அதற்கு முன்னரும் மதுரையில் மீனாட்சி அம்மனைத் தரிசனம் செய்வது மிக மிக எளிது. பண்டிகை நாட்களிலும், கோயிலின் திருவிழா நாட்களிலும் மட்டுமே கூட்டம் காணப்பட்டாலும் அம்மனைத் தரிசனம் செய்வது என்பது அப்போதும் சுலபமான ஒன்றாகவே இருந்து வந்தது. அப்போது அறங்காவலர் திரு பி.டி.இராசன் அவர்கள் என நினைக்கிறேன். அதற்குப் பின்னரும், சில காலம் வரையிலும் மீனாட்சி அம்மனைத் தரிசிக்க எந்தவிதத் தடையும் இல்லை. கர்ப்பக் கிரஹத்தில் மிக அருகே சென்று தரிசிக்க முடியும்.

அப்படியே பணம் கொடுத்துத் தரிசனம் செய்தாலும் ரொம்ப அதிகமாய்ப் போனால் ஒரு ரூ, 2ரூ, 5 ரூ என்றுதான் இருந்தது. கல்யாணம் ஆகி நான் திரும்ப எப்போ மதுரை போனாலும் இந்த மாதிரிப் பணம் எல்லாம் கொடுத்து மீனாட்சியைப் பார்த்ததே இல்லை. காலை வேளையில் 11-00 மணிக்குப் போனால் நன்றாய்த் தரிசனம் செய்ய முடியும். மாலையில் 4-00 மணியில் இருந்து 4-30 வரையிலும், சில சமயம் 5-00 மணி வரையிலும் கூடப் பார்க்கலாம். இரவில் 9-00 மணிக்கு மேல் எப்போப் போனாலும், கோவில் நடை சாத்தும் வரையிலும் அம்மனைப் பார்க்க முடியும்.

ஆனால் இப்போது 2 வருஷத்துக்கு முன்னர் மீனாட்சி கோயிலுக்குச் சென்ற போது அம்மனை வெளியில் உள்ள உள் பிராகாரத்துக்குச் செல்லும் வழியிலோ, அல்லது உள்ளேயோ சென்று பார்க்க முடியாமல் டிக்கெட் முதல் முறையாக வாங்கினோம். ஆனாலும்
அம்மனை கர்ப்பகிரகத்துக்குச் செல்லும் வழியில் கீழே உட்கார்ந்து தான் பார்க்க முடிந்தது. ஒரு ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து பார்க்க முடிந்தது. வெளியே கம்பிகளுக்குப் பின்னர் தரிசனம் செய்யுமிடத்தில் கூட்டமோ கூட்டம்,தாங்க முடியவில்லை. சாமி சன்னதியில் அவ்வளவாய்க் கூட்டம் இல்லை, கொஞ்சம் பார்க்க முடிந்தது, என்றாலும் உள்ளே போய்த் தரிசனம் செய்ய முடியவில்லை. இது தவிர, கோயிலில் கடைகள் பெருகி விட்டன. எங்கே பார்த்தாலும் மூலைக்கு மூலை புத்தகங்கள், பிரசாதங்கள் விற்கும் கடைகள். முன்னர் ஆடி வீதியில் மட்டுமே இருந்த புத்தகக் கடைகள் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெற்கு கோபுர வாசல் வழியாகக் கோயிலின் ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம் எதிரே வந்து இடம் பிடித்துக் கொண்டு, இப்போது எங்கேயும் நெரிசல். பொற்றாமரைக் கரையிலும் எப்போவும் கூட்டம், தாங்க முடியலை.

சென்ற வருஷம் டிசம்பரில் இப்போ என்ன கூட்டம் வந்திருக்கப் போகிறது, மார்கழி மாதம் தானே, திருநாள் ஒன்றும் இல்லைனு மதுரைப் பயணம் வைத்ததே தப்பாப் போச்சு. முதலில் காலேஜ் ஹவுசில் தங்கவே இடம் இல்லைனு சொல்லிட்டாங்க. வேணும்னா 1,500/-ரூக்கு ஒரு ரூம் காலி இருக்கு, அதைத் தரோம்னு சொல்றாங்க, அனெக்ஸில் போய்க் கேட்டா அங்கே தான் அறைகள் நிறைய, இங்கே இல்லைனு ஒரு மத்தியானம் பூரா அங்கேயும், இங்கேயும் அலையவிட்டுப் போதும், போதும்னு ஆயிடுச்சு. பின்னர் எப்படியோ வேறே ஒரு லாட்ஜில் ரூம் போட்டுக் கொண்டோம், கோயிலுக்குப் போனால் கூட்டம் தெற்கு கோபுரத்துக்கு வெளியே நிற்கிறது. எப்போ சாமி பார்த்து, எப்போத் திரும்பறதுனு புரியலை. இதிலே வண்டியை வேறே அங்கே நிறுத்தக் கூடாதுனு வேறே இடம் சொல்லிட்டாங்க. அது தனியாகத் தெற்காவணி மூலவீதியில், நியூ சினிமா எதிரே போயிட்டது. நாங்க கூட்டத்தில் எப்படியாவது போய்த் தரிசனம் பண்ணிடலாம்னா முடியாது போல் இருந்தது. பின்னர் ஸ்பெஷல் தரிசனம் தான் முடியும்னு யோசிச்சு, (கண்ணபிரான் கவனிங்க) டிக்கெட் வாங்கிட்டுப் போனோம். அப்போக் கூடக் கொலு மண்டபம் தாண்டி உள்ளேயே போக முடியலை, முன்னர் ஒரு வயசான தாத்தா மயில் தோகை விசிறியால் நின்னுக்கிட்டே விசிறிட்டு இருப்பார். இப்போவும் யாரோ இருக்காங்க, ஆனால் அவருக்கே நிக்க இடம் இல்லை, கூட்டம். அதையும் தாண்டி உள்ளே போய் டிக்கெட் கவுண்டர் வழியா ஸ்பெஷல் தரிசனத்துக்கு அர்த்த மண்டபத்துக்குப் போகலாம்னா, அர்த்த மண்டபத்துக்கு விடறதே இல்லையாம், இப்போ எல்லாம் வெளியே கம்பிக்குப் பின்னால் நின்னு பார்க்கத் தான் இந்த டிக்கெட்டாம், பின்ன டிக்கெட் வாங்காதவங்க எப்படிப் பார்ப்பாங்கன்னால், உண்டியலுக்குப் பின்னர் வழி ஏற்படுத்தி அவங்க கூட்டமா, (வரிசையா எல்லாம் இல்லை, கூட்டமான்னா கூட்டமாத் தான்) வந்து தரிசனம் பண்ணுவாங்கனு சொன்னாங்க. அதை ஒழுங்கு படுத்த யாருக்கும் தெரியலை, இத்தனைக்கும், ஆண், பெண், போலீஸ் காரங்க, கோவில் ஊழியர்கள் எல்லாமே இருந்தாங்க. யாரும், யாரையும் தடுத்து நிறுத்தி, ஒரு ஒழுங்கான முறையிலே விடவில்லை. நாங்க டிக்கெட் வாங்கினவங்க போற வழியிலே உள்ளே நுழைஞ்சோமோ இல்லையோ, உடனேயே ஒரு பெரும் கூட்டம் எங்க பின்னாலேயே வந்து எங்களைத் தாண்டிட்டுப் போய்ச் சாமி தரிசனத்துக்குப் போயாச்சு. கூட்டத்தின் நடுவில் நான் மாட்டிக் கொள்ள, என் பையன், கணவர் இருவருக்கும் என் மூச்சுத் திணறல் பற்றிய கவலை வந்து, பெண் காவலரிடம் இருவரும் சண்டை போட்டு வழி ஏற்படுத்தி, என்னை மீட்டு வெளியே கொண்டு வர, நான் மீனாட்சியைப் பார்க்காமலேயே அவளிடம் இருந்து விடை பெற்று வெளியே வந்து விட்டேன். 15ரூ? அல்லது 25 ரூ கொடுத்து( நினைவில்லை, மறக்க நினைத்த சம்பவம், மறந்தும் போச்சு) டிக்கெட் வாங்கியும் கடைசில் அம்மனையும் பார்க்கவில்லை, சுந்தரேஸ்வரரையும் பார்க்கவில்லை. சாமி சன்னதிக்குள் நுழையவே முடியலை. இது தான் இன்றைய அறநிலையக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் மீனாட்சி கோயிலின் நிலைமை. பழனி பற்றியும் இன்னும் விரிவாய் எழுதறேன்.

3 comments:

  1. இந்த கோவிலில் பெருகி வரும் கூட்டத்தைப்பற்றி நண்பர்கள் யோசித்து இருக்கிறோம். மக்கள் தொகையும் அதிகமாகிவிட்டது. கையிலும் நிறைய பணம் புரளுகிறது. மக்களுக்கு பக்தி அதிகம் ஆகிவிட்டதா பயம் அதிகம் ஆகி விட்டதா? பயம்தான் என்பது எங்கள் கருத்து.
    கால வெள்ளத்தில் பலரும் தெரிந்தே பல தவறுகள் செய்கிறோம். இவை எல்லாம் கோவிலுக்கு போய் தரிசனம் செய்து உண்டியில் பணம் போட்டால் சரியாகிவிடும் என்று மக்கள் நம்புகிறார்கள். இது சரியா?

    ReplyDelete
  2. ///////ஹூஸ்டன் மீனாட்சி திருக்கோயிலில் மதுரைச் சகோதரர்கள் இராஜரத்தின பட்டர்
    (வயது 81), தங்கம் பட்டர் (85 வயது) ஆகிய ஆகம விற்பன்னர்களுடன்
    பேசிக்கொண்டிருந்தேன். சென்னை உயர்நீதி மன்றம், டெல்லி உச்ச நீதிமன்றம்
    போன்றவற்றில் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், வெங்கட்ராம சாஸ்திரி போன்றோர்
    முழுமுயற்சியின் விளைவாக 20-ஆம் நூற்றாண்டில் 'சிதம்பரம் கோயில் ஒரு
    'ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி', அது மடம், கோயில் (temple) அல்ல' என்று சட்ட
    பூர்வமாக எழுதப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சினை என்று விளக்கினர்.
    அதற்கு ஆதரவைச் சைவமடங்கள் - தருமபுரம், திருவாவடுதுறை, ... போன்றவை
    தந்துள்ளன./////////

    இதற்கான மேலதிகத் தகவல்கள்,இணையத்தில் சுட்டிகள் இருந்தால் அளிக்க இயலுமா? அறியும் ஆர்வத்தில் கேட்கிறேன்.

    ReplyDelete
  3. @திவா, இதுக்கு வழி ஒரு கட்டுப்பாடான தலைமை கோவில்களின் நிர்வாகத்தை ஏற்பது தான் என்று என் கருத்து. ஆனால் அது எப்போ நடக்கும்னு தெரியலை! :(((

    @அறிவன், உங்களுக்குப் பதில் கொடுத்துட்டேன். :)))))

    ReplyDelete