
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு. (2)
இன்றில் இருந்து சகல விஷ்ணு ஆலயங்களிலும் திருப்பல்லாண்டு உற்சவம் ஆரம்பம். பகல் பத்து என்று சொல்லுவார்கள். ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாருக்கும் ராஜாங்க சேவை எல்லாம் நடக்கும். நாளை?? சரியாத் தெரியலை. ஆனால் முன்பெல்லாம் நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் இருந்து ஸ்ரீரங்கம் வந்து ரங்கநாதரைச் சேவித்துவிட்டுச் சென்றார் என்றும், ரங்கநாதரே நேரில் எதிர்கொண்டழைத்துப் பின் திரும்பக் கொண்டு விடுவார் என்றும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. அது பற்றி விபரமான பதிவை வைகுண்ட ஏகாதசி அன்று பார்ப்போம். இப்போ இந்தப் பல்லாண்டு, பிறந்திருக்கும் குழந்தைக்குப் பாடியது. பெரியாழ்வார் மதுரையில் கண்டுவிட்டுப் பாடினார். நாம் பிறக்கும்போதே பாடிடுவோமே! பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்தக் கண்ணனின் லீலைகள் பற்றிப் பேசுவதோ, எழுதுவதோ, கேட்பதோ குறையவில்லை அல்லவா? இவன் பிறந்ததால் தேவகி அதிர்ஷ்டக் காரியா? அல்லது இவனை வளர்த்த யசோதை அதிர்ஷ்டக் காரியா என்றால் சந்தேகத்துக்கு இடமில்லாமல் யசோதை தான் அதிர்ஷ்டக் காரி. இப்போ சிறையில் தன்னந்தனியே விட்டுட்டு வந்த தேவகியின் நிலைமை மோசமடைவதற்குள் வசுதேவரை அங்கே கொண்டு போய்ச் சேர்த்துடலாமா?
*************************************************************************************
முதலில் கம்சனின் நிலையைப் பார்க்கலாம். நிலைகொள்ளாமல் தவித்தான் கம்சன். ஏற்கெனவே காவலாளிகளை அடிக்கடி மாற்றியும், வசுதேவரையும், தேவகியையும் யாரும் நெருங்காமலும் பார்த்துக் கொண்ட கம்சனால் கர்காசாரியார் தினசரி வழிபாடுகளுக்கு அங்கே செல்லுவது அவ்வளவாய்ப் பிடிக்கவில்லை என்றாலும் ஆசாரியர்களைப் பகைத்துக் கொள்ளுவது தனக்கு மிகவும் அபகீர்த்தியை உண்டாக்குவதோடல்லாமல், மக்கள் வெளிப்படையாகத் தங்கள் அதிருப்தியைக் காட்டிக் கொள்ளவும் ஆரம்பிப்பனர். ஆகவே அதை அவனால் தடுக்கமுடியவில்லை என்றாலும் பூதனையை அந்தச் சமயம் அங்கேயே இருந்து கவனிக்குமாறு ரகசிய உத்திரவிட்டிருந்தான். சிராவண மாதத்தின் கிருஷ்ண பட்ச அஷ்டமியான அன்று காலையில் இருந்தே கம்சன் பீதியின் உச்சத்தில் தவித்தான். இடியும், மின்னலும், மழையும், புயல்காற்றும் வெளியில் வீசியதா? அவன் உள்ளத்தில் வீசியதா என்று சொல்லமுடியாத அளவுக்கு அவன் மனக் குழப்பத்தில் ஆழ்ந்து கிடந்தான். அடிக்கடி உடல் தூக்கிவாரிப் போட்டது. அங்குமிங்கும் நடந்து, தூங்காமல் விழித்து, சாளரக் கதவைச் சார்த்தி, இப்படி ஏதேதோ செய்து தன் அச்சத்தைப் போக்க முனைந்தான்.
இப்படி அன்றைய பொழுது கழிந்து, இரவெல்லாம் கண் விழித்த கம்சன், காலையின் கதிர்கள் சாளரம் வழியாக எட்டிப் பார்த்ததும் மன தைரியத்தை அடைந்தான். இதோ, இப்போது பூதனை வந்து தேவகிக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை, நாட்கள் ஆகும் என அறிவிக்கப் போகின்றாள். பூதனையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான் கம்சன். பூதனையும் வந்தாள். "அரசே! நேற்றிரவு தேவகிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது!" என்று அறிவித்தாள். கம்சனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவனுக்கு என்னமோ எட்டாவது குழந்தை ஒரு ஆண் குழந்தையாக இருக்கும் என நினைத்தால் பெண்ணா? "பூதனை, உறுதியாகச் சொல்கின்றாயா?" என்று கேட்டான். பூதனைக்குக் கொஞ்சம் மனதில் பயம் ஏற்பட்டாலும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு," ஆம் ஐயா, குழந்தை பிறக்கும்போது நான் மட்டுமே அருகிலிருந்தேன். என் முன்னிலையில் தான் பிறந்தது." என்று சொன்னாள். கம்சன் உடனே தன்னுடைய ரதத்தை கொண்டு வரச் சொல்லி முட்கள் போன்று தயாரிக்கப் பட்ட தன் கதையையும் எடுத்துக் கொண்டான். மாளிகையை அடைந்தான்.

கம்சன், அந்தக் குழந்தையை தேவகியின் கைகளில் இருந்து பிடுங்கினான். தலைகீழாய்த் தூக்கினான் குழந்தையை. திடீரென அவன் கைகளில் உணர்வில்லாதமாதிரி இருந்தது கம்சனுக்கு. தன்னைத் தானே அவன் நிதானம் செய்து கொள்ளுமுன்னர் குழந்தை அவன் கைகளில் இருந்து நழுவுவது போல் இருந்தது. "க்றீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈச்ச்ச்ச்" என்ற நீண்ட ஒரு அலறல் கேட்டது அவனுக்கு. அடுத்த கணம் குழந்தை சாளரத்துக்கு வெளியே பறக்கின்றாற்போல் தெரிந்தது கம்சனுக்கு. ஒரு கணம் அவனுக்கு அந்த அறை சுழன்றது. எதிரே நின்ற வசுதேவர், தேவகி சுழன்றனர். அவனே சுழல்வது போல் இருந்தது. இருட்டு. கும்மிருட்டு. காரிருள் சூழ்ந்தாற்போல் ஒரு பிரமை.


ப்ரலம்பா தன்னுடைய யோசனையைக் கூறலாமா எனக் கேட்டுவிட்டு, மக்கள் கம்சனிடம் அதிருப்தி அடைந்திருப்பதையும் ரட்சகன் எப்போது வருவான் எனக் காத்திருந்ததையும் கூறியதோடு, நேற்று கம்சனின் காதில் விழுந்த செய்தி, வேறு யார் காதிலும் விழுந்திருக்குமா எனவும் கேட்கின்றார். பூதனை தன் காதிலும் விழுந்ததை உறுதிப் படுத்துகின்றாள். கம்சன் சற்று யோசித்துவிட்டு, தான் எந்த விஷயத்திலும் சந்தேகத்துக்கு இடமின்றி இருக்கப் போவதாயும், ஆகவே கடந்த பத்து நாட்களுக்குள் பிறந்த குழந்தைகள் அனைத்தையும் கொன்றுவிடுமாறும் கூறுகின்றான். வேண்டாம், வேண்டாம், கடந்த ஒரு மாதத்தில் பிறந்த அனைத்தையுமே கொன்றுவிடலாம் இல்லையா பஹூகா? என்று தன்னுடைய மகத மெய்க்காப்பாளனைக் கேட்டுக் கொள்கின்றான். பஹூகா சொல்லுகின்றான், மக்கள் மனதில் தர்மத்தின் நினைவு தோன்றாதபடிக்கு அவர்களைக் களியாட்டங்களிலும், சூதாட்டங்களிலும், பெண்களின் மோகத்திலும் ஆழ்ந்து போகும்படிச் செய்யவேண்டும். அவர்களுக்குப் பணத்தை வாரி இறையுங்கள். பணத்தினால் கிடைக்கும் இந்த சுகத்தை அனுபவித்த பின்னர் அவர்களுக்குக் குடும்பம், குழந்தைகள், மனைவி, மக்கள், பெற்றோர் என்று தோன்றாது. பின்னர் தர்மமாவது, ஒன்றாவது? ரட்சகன் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது." என்று கூற, கம்சன், இது சரியாய் வருமா என்ற சந்தேகத்தில் ஆழ்ந்தான். பூதனையை எதற்கும் குழந்தைகள் பிறந்திருப்பது பற்றியும் விசாரித்து, அவற்றைக் கொன்றுவிடும்படியும் கட்டளை இடுகின்றான்.
*************************************************************************************
சிறையிலிருந்து விடுவிக்கப் பட்ட தேவகியோ, தன்னுடைய உலகில் ஆழ்ந்து போய்விட்டாள். அவள் நினனவிலும், கனவிலும் அந்த நீலமேக வண்ணக் குழந்தைதான். அவள் கண்ணெதிரே அந்தக் குழந்தை எப்போதும் இருந்தான். ஒரு சமயம் அவள் அதைத் தன் கைகளில் எடுத்துப் பாலூட்டினாள். ஒரு சமயம் அந்தக் குழந்தை தன் பிஞ்சுக்கால்களால் அவள் மார்பில் உதைத்ததை உணர்ந்தாள். ஒரு சமயம் தூக்கத்திலேயே குழந்தை சிணுங்கி அழுதது. எடுத்தால் அரைக் கண் திறந்து பார்த்துவிட்டு, மோகனச் சிரிப்புச் சிரித்தது. அவள் முகத்தை உற்றுப் பார்த்துச் சிரித்தது குழந்தை. தேவகிக்கு உடலும், மனமும் பரபரத்தது. இந்த உலகில் இருந்து வெளியே வரவே அவளுக்கு மனமில்லை. ஆனால் குழந்தையைப் பற்றி யாரிடம் பேசுவது? கைகொடுத்தார் வசுதேவர் எப்போதும்போலவே. வேறு யாரிடம் பேசமுடியும்? இருவரும் மெல்லிய குரலில் தங்கள் அருமைச் செல்வனைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். குறைந்தது ஒரு லட்சம் முறையாவது வசுதேவர் தான் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கூடையில் வைத்து யமுனையைக் கடந்தது பற்றி தேவகியிடம் விவரித்திருப்பார். கேட்கக் கேட்க அலுக்கவில்லை தேவகிக்கு.
குழந்தையைப் பார்க்கவேண்டும், தன் கைகளில் எடுத்துக் கொஞ்சவேண்டும், பாலூட்டவேண்டும் என்ற ஆவலை நாளாக நாளாக அவளால் தவிர்க்க முடியவில்லை. வசுதேவர் எவ்வளவோ அவளை சமாதானம் செய்து, ஆறுதல் வார்த்தைகள் சொன்னாலும், அவளால் குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கொஞ்சவேண்டும் என்ற ஆவலைத் தவிர்க்க முடியவில்லை. தன்னைத் தானே வருத்திக் கொண்டாள் தேவகி.
தேவகிதான் ரொம்ப பாவம் :'(((
ReplyDeleteஆமாம் கவிநயா, தான் பெற்ற ஆறு குழந்தைகளும் கொல்லப் பட்டதோடு அல்லாமல், ஏழாவது குழந்தையையும், வலுக்கட்டாயமாய் இன்னொருத்தியிடம் கொடுத்து வளர்க்க வேண்டி இருந்தது. இந்த எட்டாவது குழந்தையும் அவ்வாறே! குழந்தைகளைப்பெற்றால் மட்டும் போதுமா? குழந்தையின் வளர்ச்சியை ஒவ்வொரு நிமிஷமும் பார்த்து ஆனந்திக்கவும் கொடுத்து வச்சிருக்கணும். அப்போத் தான் கிடைக்கும். :((((((
ReplyDelete