எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 09, 2008

கண்ணன் வருவான் கதை சொல்லுவான் - பகுதி 4

நாரதரோ, “கம்சா, தர்மத்தின் பாதையில் செல்பவர்களுக்கு மட்டுமே என்னால் ஆசி அளிக்க முடியும். அதர்மத்தின் பாதையில் செல்பவர்களை ஆசீர்வதிக்க முடியாது.” என்று திட்டவட்டமாய்ச் சொல்லி விடுகின்றார். கம்சன் எகத்தாளமாய் நகைத்த வண்ணம் சொல்லுகின்றான்:” முனிவரே, தர்மமோ, அதர்மமோ, நான் என் வழியில் தான் செல்லுவேன். கடவுள், கடவுள் என்று யாரையோ சொல்லுகின்றீர்களே?? மனம் கோழையாய் இருப்பவர்களே அதை நம்புவார்கள். நான் உடல் பலம் மட்டுமின்றி மனோபலமும் பெற்றிருக்கின்றேன். பலஹீனமாயுள்ளவர்களைப் பயமுறுத்துகின்றாற்போல் என்னையும் பயப் படுத்த முடியாது. என்னுடைய விருப்பமே கடைசி விருப்பம். அதை யாரும் மீற முடியாது. மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. யாரேனும் என் விருப்பத்தை மீறி நடக்க நேரிட்டால் அவர்களை வற்புறுத்தி என் இஷ்டம் போல் நடக்கச் செய்வேன்.” என்று சொல்கின்றான்.

நாரதர் இகழ்ச்சியாய்ச் சிரிக்கின்றார். “தர்மத்திலிருந்தும், சத்தியத்திலிருந்தும் யாராலும் பிறழ்ந்து நடக்க முடியாது. பிறழ்ந்து நடப்பவனுக்கு அவன் விதி முடியப் போகின்றது என்று அர்த்தம். அதன் விதிமுறைகள் மாற்ற முடியாதவை. தர்மம் பிறழ்ந்து அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் ஈசனே பூமிக்கு வந்து தர்மத்தைக் காக்கின்றான் என்பதையும் கவனித்துப் பார்”, என்று சொல்கின்றார் கம்சனிடம். யாராலும் என்னைத் தொடமுடியாது, கடவுளாகவே இருந்தாலும் என்ற கம்சனிடம், உன்னுடைய விதி, எப்போது, எங்கே, யாரால், எப்படித் தீர்க்கவேண்டும் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப் பட்டு விட்டது என்று சொல்கின்றார் நாரதர். “ஹா, ஹா, ஹா” என்று கிண்டலுடன் சிரிக்கின்றான் கம்சன். நாரதர் பதில் ஒன்றும் சொல்லாமல் சிறிது நேரம் ஆழ்நிலைத் தியானத்தில் இருக்கின்றார். பின்னர் கம்சனைப் பார்த்துச் சொல்லுவார்:” இளவரசே, மன்னிக்க, மன்னிக்க, அரசே, நம் அனைவருக்கும் மேலே இருப்பவனால் உங்கள் விதி தீர்மானிக்கப் பட்டுவிட்டது. இதோ இப்போது திருமணக் கோலத்துடன் இருக்கின்றாளே, உங்கள் சித்தப்பன் மகளான தேவகி, இவளுக்குப் பிறக்கப் போகும் எட்டாவது குழந்தையால் நீங்கள் கொல்லப் படுவீர்கள்.” என்று சொல்கின்றார் நாரதர்.

கம்சனின் தந்தையான உக்ரசேனன் மன்னன் என்று பெயரளவுக்குத் தானே தவிர, அரசியல் நிர்வாகம் பூராவும் கம்சனின் கையில் தான். தன் மாமனார் ஆன ஜராசந்தனின் உதவியுடன் அவன் அனைத்து அக்கிரமங்களையும் செய்து வந்தான். சுற்று வட்டாரத்தில் இருந்த மற்ற யாதவத் தலைவர்களாலும் சரி, மற்ற குலங்களைச் சேர்ந்த அரசர்களாலும் சரி கம்சனை எதுவும் செய்ய முடியாமல், அவன் பெயரைக் கேட்டே அஞ்சி நடுங்கினர். இது இவ்வாறிருக்க, இப்போது இது என்ன இந்த நாரதர் புதுக் கரடி விடுகின்றார். கம்சனால் தாங்க முடியவில்லை. ஒருவேளை இது நிஜமாய் இருக்குமோ? பலித்து விடுமோ? ம்ம்ம்ம்ம்???? என்ன செய்யலாம் இப்போது? ம்ம்ம்ம் அது தான் சரி, தேவகி இருந்தால் தானே குழந்தை பெறுவாள்? அவளையே கொன்று விட்டால்?? கம்சன் முடிவுக்கு வந்துவிட்டான். தேவகியைக் கொல்லவேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு விரைந்தான்.

இங்கே திருமண ஊர்வலம் நகரைச் சுற்றி வலம் வரத் தயாராய்க் கிளம்பிக் கொண்டிருக்கின்றது. ஷூரர்களும் சரி, அந்தகர்களும் சரி, இந்தத் திருமணத்தால் மகிழ்வு எய்தியவர்களாய் ஊர்வலத்தோடு தாங்களும் செல்ல ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தனர். நகர மக்கள் அனைவரும் ஊர்வலத்தை வரவேற்க தங்கள் வீடுகள், தெருக்கள் போன்றவற்றை அலங்கரித்ததோடு அல்லாமல், தங்களையும் மிகச் சிறப்பாய் அலங்கரித்துக் கொண்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் உற்சாகக் கூக்குரல், பாடலும், ஆடலும் முழங்கின. சங்குகள் ஆர்ப்பரித்தன. பேரிகைகள் முழங்கின. வாத்தியங்கள் இசைத்தன. மக்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆடிப்பாடிக் களித்து உல்லாசப் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தனர். கம்சன் வந்தான். அவனையும், அவன் முகத்தையும் பார்த்ததுமே அனைவருக்கும் அடிவயிற்றில் சில்லிட்டது. ஏதோ விபரீதம் நடக்கப் போகின்றது என்றும் புரிந்து கொண்டனர். வாத்திய முழக்கங்களும், பேச்சுகளும், ஆட்ட, பாட்டங்களும் நின்றன. மெளனம். மெளனம் என்றால் அப்படிப்பட்டதொரு மெளனம்! ஆளைக் கொல்லும் மெளனம் குடி கொண்டது அங்கே. தேரில் ஏறத் தயார் நிலையில் வசுதேவரும், தேவகியும். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழவே நேரம் போதவில்லை. சந்தோஷத்தின் உச்சியில் இருந்தனர் இருவரும். யாதவத் தலைவர்களுக்கும் இவர்களின் ஜோடிப் பொருத்தத்திலும், சரியான நேரத்தில் இந்தத் திருமணம் நடந்தது பற்றியும் மிக்க பெருமையாகவும், மகிழ்வாகவும் இருந்தது. அதைக் கெடுக்கும் எண்ணத்துடன் கம்சன் தேரை நெருங்கினான். தேரில் ஏறப் போன தேவகியின் நீண்ட கூந்தலைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளினான்.

5 comments:

  1. ம்ம்ம்ம்ம் அப்புறம்?

    ReplyDelete
  2. //இதோ இப்போது திருமணக் கோலத்துடன் இருக்கின்றாளே, உங்கள் சித்தப்பன் மகளான தேவகி, இவளுக்குப் பிறக்கப் போகும் எட்டாவது குழந்தையால் நீங்கள் கொல்லப் படுவீர்கள்.” என்று சொல்கின்றார் நாரதர்.//

    இது முன்ஷியாரின் கதை வடிவமோ ! இதுவரை நான் கேள்விப்பட்டிருந்தது ஒரு அசரீரி இந்த உண்மையை சொன்னதாகத் தான். என்னிடம் உள்ள ராமகிருஷ்ண ஆசிரமத்தின் சுவாமி பிரபவானந்தா வின் பாகவதமும் அசரீரி என்றுதான் சொல்கிறது. வியாசர் என்ன சொல்கிறார் ?

    ReplyDelete
  3. @திவா, உங்களுக்குக் கதை கிடையாது போங்க!

    @கபீரன்பன், ஆமாம், இது முன்ஷி அவர்களின் கதை வடிவம். அவர் எழுதி இருப்பதை ஒட்டியே வரும். பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஆனால் தர்க்கரீதியாகக் காரணங்கள் காட்டப் பட்டிருக்கின்றன. அது எனக்குப் பிடிச்சிருந்தது. நன்றி. படத்தை மாத்தினது தான் கொஞ்சம் பிடிக்கலை, கபீரின் படமே நல்லா இருந்தது! :(

    ReplyDelete
  4. வியாசர் அசரீரி என்றே சொல்லி இருக்கின்றார்.

    ReplyDelete
  5. //வியாசர் அசரீரி என்றே சொல்லி இருக்கின்றார்.//

    நன்றி

    //படத்தை மாத்தினது தான் கொஞ்சம் பிடிக்கலை, ...//

    Kabeer-Anban யும் கபீரன்பன்-யும் பிரிச்சுக் காட்டத்தான் வேற வேற படம். ஒரு எக்ஸ்பெரிமெண்ட் தான் :))

    ReplyDelete