
இப்போது நாம் சற்று வியாசரைத் தொடர்ந்து அஸ்தினாபுரம் வரைக்கும் போயாகவேண்டிய வேலை இருக்கின்றது. அஸ்தினாபுரத்தின் ராணிமாதாவான சத்தியவதி வியாசரை அழைத்திருக்கின்றாள். சத்தியவதி குரு வம்சத்து அரசன் ஆன ஷாந்தனுவின் மனைவியாவாள். ஷாந்தனுவிற்கு முதலில் கங்கை மனைவியாக இருந்தாள். கங்கைக்கும், ஷாந்தனுவிற்கும் பிறந்த பிள்ளையே பீஷ்மர். இவர் பெயர் உண்மையில் தேவ விரதர் ஆகும். இவர் பிறந்து வளர்ந்து வாலிபப் பருவம் எய்திய தருணத்தில் இவரின் தந்தை ஆன ஷாந்தனு, கங்கைக் கரையில் உலாவிக் கொண்டிருந்தவருக்கு, திடீரென சுகந்தமான மணம் வீச, மணம் வந்த திக்கை நோக்கிய ஷாந்தனுவின் கண்களுக்கு அங்கே உலாவிக் கொண்டிருந்த மீனவப் பெண்ணான மச்சகந்தி என்னும் சத்தியவதி கண்ணில் பட்டாள்.

அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்ட ஷாந்தனுவிடம் சத்தியவதியின் தந்தை, “என் பெண்ணிற்குப் பிறக்கும் மகனே பட்டம் சூடி மன்னன் ஆகவேண்டும்.” என நிபந்தனை விதிக்க, ஷாந்தனு, மூத்த மகனும், வீரனும், பரசுராமரின் சீடனும் ஆன தேவ விரதன் இருக்கையில் சத்தியவதியின் பிள்ளைக்கு முடி சூட்ட முடியாது என மறுக்கின்றான். ஆனால் அரண்மனைக்கு வந்தும் சத்தியவதியின் அழகை எண்ணி, எண்ணி ஏங்க, தந்தையின் கவலையைப் போக்க எண்ணிய தேவ விரதர், “வாழ்நாள் முழுதும் பரிபூரண பிரம்மசரியம் காப்பதாய்” கடுமையான சபதம் பூண, விண்ணோரும், மண்ணோரும் அவரை “பீஷ்ம, பீஷ்ம” என ஆசீர்வதிக்க, அன்றில் இருந்து அவர் பெயர் பீஷ்மர் ஆயிற்று.
அதே போல் அன்றிலிருந்து இன்று வரையிலும் குரு வம்சத்தின் முன்னேற்றத்தையும், அஸ்தினாபுரத்தை ஆளும் அரசனுக்கு உதவிகள் புரிந்தும், ஆலோசனைகள் சொல்லியும் தன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்தார் பீஷ்மர். அவர் கடுமையான சபதம் பூண்ட காரணத்தாலும், அவரின் பக்தியை மெச்சியும், அவர் விரும்பும்போது மரணம் அவரைத் தழுவும் என ஆசீர்வதிக்கப் பட்டதால் வயது சென்றும் பரிபூரண பலத்தோடும், ஆரோக்கியத்தோடும் திகழ்ந்தார். தன் தம்பியின் மகன்கள் ஆன திருதராஷ்டிரனுக்கும், பாண்டுவுக்கும் பெருமளவில் உதவி வந்தார். அந்நாட்களில் பீஷ்மர் ஒரு நாட்டிற்குப் படை எடுத்து வருகின்றார் என்றாலே அனைவரும் நடுங்கினர். அவரின் வயதையும், தவத்தையும், ஞானத்தையும், சரியான நேரத்தின் சரியான முடிவை எடுக்கும் விவேகத்தையும் எண்ணி, அனைவரும் அவரை மதித்தும், போற்றியும் வந்தனர். பீஷ்மரின் சிறிய தாயும், ஷாந்தனுவின் மனைவியுமான சத்தியவதியும் பலமுறை விரதத்தைக் கைவிட்டு பீஷ்மரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியும் அவர் மறுத்துவிட்டார். இப்போது அஸ்தினாபுரத்துக்கும், அதன் ராணிகளுக்கும் கொஞ்சம் போதாத காலமோ என்னும் வண்ணம் திருதராஷ்டிரன் மனைவியான காந்தாரி கர்ப்பம் தரித்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. அவளுக்கு ஏதோ ஒரு சாபம் இருக்கின்றது. அதனால் தாமதம் ஆகின்றது. திருதராஷ்டிரனோ பிறவிக் குருடன். ஆகையால் அவனால் அரசாள முடியாது. எனவே அவன் தம்பியான பாண்டுதான் அரசனாய் இருந்து வந்தான்.
இந்தப் பாண்டுவிற்குத் தான் வசுதேவரின் சகோதரியும், குந்திபோஜனின் வளர்ப்பு மகளும் ஆன ப்ரீத்தா என்னும் குந்தியைத் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றது. இது தவிரவும் மாத்ரி என்னும் பெண்ணையும் பாண்டு விரும்பித் திருமணம் செய்து கொண்டிருக்கின்றான். எனினும் அவனுக்கும் குழந்தை பிறக்க வழியில்லை. அவனுக்கும் அத்தகையதொரு கடுமையான சாபம் உள்ளது. இந்நிலையில் குரு வம்சம் தொடர்ந்து அரசு கட்டிலில் இருக்குமா? இந்த வம்சம் இத்தோடு முடிந்து விடுமோ? சத்தியவதி தன் கணவனுக்குச் செய்து கொடுத்த சத்தியம், எப்பாடு பட்டாவது குருவம்சத்தைக் காப்பது என்பதே. இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் எவ்வாறு குரு வம்சத்தைக் காப்பது? ஒன்றும் புரியவில்லையே?? இந்த அழகில் பாண்டுவின் மனைவி குந்தி அக்னிப்ரவேசம் செய்யப் போகின்றாளாமே?? குழம்பித் தவித்தாள் சத்தியவதி. வயது அறுபதுக்கு மேலாகியும் இன்னும் இளமையின் அழகுக் கிரணங்கள் அவளை விட்டு நீங்கவில்லை. பார்ப்பதற்கே ஒரு தேவ கன்னிகையைப் போல் இருந்த அவளின் நெற்றியில் இருந்த ஈசனின் பக்தை எனக் குறிக்கும் அடையாளம் ஆன சாம்பலில் இருந்தே அவள் ஓர் விதவை எனப் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் அருகே பீஷ்மரும் அமர்ந்திருந்தார். இருவரும் வியாசருடன் அந்தரங்கமாய்ப் பேசிக் கொண்டிருந்தனர்.
சத்தியவதி நிலைமையைத் துல்லியமாய் அறிந்து வைத்திருந்ததால் வியாசரிடம் எடுத்து உரைத்தாள். பராசரரிடமே வளர்ந்து வந்த வியாசர் தன் தாய் யார் என அறிந்ததும், அவளை வந்து பார்த்து நமஸ்கரித்துத் தாய் விரும்பும்போது தன்னை அழைக்குமாறும், அவளின் ஆவலைப் பூர்த்தி செய்வது தன் கடமை எனவும் கூறி இருந்தபடி, அவ்வாறே அவர் இன்று வரை நடந்தும் வந்தார். தன் தம்பியின் இரு மனைவியருக்கும், அவர்களின் பணிப்பெண்ணிற்கும் குழந்தைப் பேறு அளிக்க உதவி செய்தார். ஆகவே இப்போதும் வியாசரின் உதவியை நாடினாள் சத்தியவதி. தன்னாலேயே பீஷ்மர் இம்மாதிரியான சத்தியத்தைச் செய்ய வேண்டியிருந்தது பற்றியும் குரு வம்சம் அழியத் தான் காரணமாய் இருந்துவிடுவோமே என்றும் அச்சமாய் இருந்தது அவளுக்கு. பீஷ்மரும் சத்தியவதியும் வியாசரிடம் நிலைமையை எடுத்து உரைக்கின்றனர். எல்லாவற்றிலும் முக்கியமாய்க் குந்தியின் நிலை?? குழந்தைகளிடம் மாறாத அன்பு கொண்டிருக்கும் குந்திக்கு பாண்டுவின் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்காது என்பது தெரிந்ததும் அவள் தன்னைத் தானே அக்னியில் இட்டுக் கொள்வதின் மூலம் மாய்த்துக் கொள்ளப் போகின்றாள் என்பது தெரிந்தால்?? குரு வம்சத்தின் கதி என்னவாகும்??
ராஜாஜி எழுதின புத்தகத்தில் 'சந்தனு'என்று படித்த மாதிரி நினைவு.
ReplyDeleteகுந்தி எதற்காக அக்னிப் பிரவேசம் செய்ய இருந்தாள்? நான் தான் சரியா படிக்கலையா?