பராசர முனிவருக்கும், சத்யவதிக்கும் பிறந்த பிள்ளையான வேத வியாசரைப் பிறந்ததில் இருந்தே பராசரர் வளர்த்து வந்து அனைத்து சாஸ்திரங்களையும் கற்பித்தார். தன் குமாரனாலேயே வேதங்கள் புதிய வடிவம் பெற்றுப் பொலியப் போவதோடு அல்லாமல், அவனே ஒரு ஆசாரியனாகவும் இருக்கப் போகின்றான் என்பதை முன்கூட்டியே உணர்ந்திருந்த பராசரர், அதற்கு ஏற்றாற்போலவே தன் குமாரனும் வளர்ந்து வருவதை எண்ணி மகிழ்ந்திருந்தார். வேதங்களைக் கண்டு அறிந்ததோடு அல்லாமல் அவற்றை நான்கு பாகமாகவும் பிரித்து ஒவ்வொன்றையும் கற்பிக்கத் தன் சீடர்களையும் நியமித்திருந்தார் வேத வியாசர். அவருடைய வேத பாடசாலை அந்நாட்களில் மிகவும் பிரசித்தி அடைந்திருந்தது. மன்னாதி மன்னர்களும், ரிஷி குமாரர்களும் அதில் சேர்ந்து படிக்க ஆர்வமுள்ளவர்களாக இருந்து வந்தனர். பல மன்னர்களுக்கும் குடும்ப ஆசாரியனாக இருந்து வந்தார் வியாசர். அவருக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை, நடந்தது, நடப்பது, நடக்கப் போவது அனைத்தும் அறிந்தவர் அவர் என்றும் அனைவராலும் சொல்லப் பட்டதோடு அல்லாமல், உண்மையில் அனைத்தும் அறிந்தவராகவே இருந்தார் வியாசர். மேலும் அவர் படகுகளிலே தன் சீடர்களோடு சென்று நதிக்கரைகளில் கூடாரங்கள் அமைத்துத் தங்கி ஒவ்வொரு நாட்டிலும், மன்னனுக்கும், மற்றவர்களுக்கும் வேதங்கள் பற்றியும், யாகங்கள், யக்ஞங்கள் பற்றியும் எடுத்துச் சொல்லுவதோடு அல்லாமல், கற்பித்தும் வந்தார். ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பிட்ட நாட்கள் தங்கி இருந்து இந்தச் சேவையைச் செய்து தர்மத்தையும், நியாயத்தையும், சத்தியத்தையும் பரப்பி வந்தார்.
இத்தகைய பெருமை வாய்ந்த முனி சிரேஷ்டர் ஆன வியாசரின் வருகையால் மதுரா நகரே குதூகலம் கொண்டது. யமுனைக்கரைக்கு அவரை வரவேற்க அக்ரூரர் சென்றார். முனிவர் படகிலிருந்து இறங்கும்போது, அவருடன் கூடவே ஒரு விவேகியான முகத் தோற்றத்துடன் கூடிய இளைஞன் ஒருவனும் இறங்குவதைக் கண்டார் அக்ரூரர். மிக நீண்ட தாடியுடன் இருந்த வியாசர், கண்களாலேயே சிரித்தார், அக்ரூரரைக் கண்டு. அக்ரூரருக்கு இதமான மயிலிறகால் அந்தப் பார்வையே வருடுவது போல் தெரிந்தது. "அக்ரூரா, இதோ என் குமாரன் விதுரன், இவனைத் தெரியுமா உனக்கு?" எனக் கேட்டார் வியாசர் பரிவும், அன்பும் நிறைந்த குரலில். ஆஹா, இவன் அந்தப் பையனா??? அஸ்தினாபுரத்து ராணிகளின் வேலைக்காரியாக இருந்து, ராணிக்குப் பதிலாய் வியாசரிடம் பிள்ளை வரம் பெற்றவளின் பையனா?? இவன் முகத்திலேயே விவேகமும், அமைதியும் தெரிகின்றதே என அக்ரூரர் நினைத்தார்.
அனைவரும் சென்று வசுதேவரையும், தேவகியையும் கண்டனர். முனிவரை நமஸ்கரித்த வசுதேவரையும் தேவகியையும், ரிஷி ஆசீர்வதித்தார். பின்னர் இருவரையும் தன்னுடன் இந்திரப் பிரஸ்தம் வருமாறு அழைக்க, வசுதேவர் கம்சனுக்குப் பயந்து மறுக்கின்றார். வியாசர் இருவரையும் தேற்றுகின்றார். "கம்சன் அரக்க குணத்தோடு பிறந்திருக்கின்றான். அதை மாற்ற யாராலும் இயலாது. அவனுடைய பாவங்களை அவன் முற்றிலும் அனுபவித்துத் தீர்ப்பான். உங்கள் இருவருக்கும் விடுதலை கிடைக்கும். வசுதேவா, இப்போது உனக்குப் பதிலாய் அக்ரூரன் வரட்டும் என்னோடு. பீஷ்மன் புரிந்து கொள்ளுவான் உன்னுடைய நிலைமை. நீ அதை எண்ணி வருந்தாதே." என்கின்றார். தேவகி வியாசரிடம் தன் கவலையையும், பயத்தையும், தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளைக் கம்சன் கொன்றுவிடப் போவதையும் சொல்லி அழுகின்றாள். வியாசர் அவளைத் தேற்றி, "பொறுமையாக இரு மகளே! நாரதர் கூறியது நிச்சயம் பலிக்கப் போகின்றது." என்று சொல்கின்றார்.
வசுதேவரோ, "நாரதர், தேவலோகத்து ரிஷி ஆவார். அவர் அவ்வளவு சுலபமாய் பூவுலகு வந்து கம்சன் போன்றவர்களைப் பார்த்து இந்த விஷயத்தைப் பற்றிப் பேசி இருப்பது உண்மையா?" என்று சந்தேகம் கேட்க, வியாசர் சொல்லுகின்றார்: " வசுதேவா, சந்தேகமே வேண்டாம். இந்த விஷயம் பேசப் படும்போது நானும் அங்கே இருந்தேன். என் காதுகளாலேயே கேட்டேன். தேவாதி தேவர்களும், பிரம்மாவும் பேசும்போது பூவுலகில் அதர்மம் அதிகம் ஆகிக் கொண்டே போவதால் சாட்சாத் அந்தப் பரம்பொருள் அவதாரம் செய்யும் வேளை நெருங்கிவிட்டது, எனக் கூறினார்கள். ஆகவே ஒரு அதிசயம் நிகழப் போகின்றது. நம்மை எல்லாம் காக்க ஒரு அருளாளன் தோன்றப் போகின்றான். இது சத்தியம்!" என்று சொல்கின்றார் வியாசர். தேவகியோ, "தந்தையே, அந்த அவதார புருஷன் என் வயிற்றில் உதிப்பானா? இது உண்மையா? அப்படியே அவன் உதித்தாலும் இந்தக் கம்சனிடம் இருந்து தப்புவானா? அது நடக்குமா?" என்றெல்லாம் கூறிக் கலங்குகின்றாள்.
வியாசர் சற்று நேரம் மெளனமாய் இருந்துவிட்டுப் பின்னர் தன் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்து போகின்றார். சற்று நேரத்தில் கண் விழித்த அவர் சொல்லுகின்றார்:" அம்மா, கட்டாயம் ஒரு அவதார புருஷன் தோன்றப் போகின்றான். அதுவும் உன் வயிற்றிலேயே பிறக்கப் போகின்றான். அவனை வெல்ல யாராலும் முடியாது. கம்சனால் அவனைத் தொடக் கூட முடியாது. நம்பிக்கையுடன் காத்திரு. பிறக்கப் போவது அந்தப் பரம்பொருளே!" என்று சொல்லி ஆசீர்வதிக்க, சந்தோஷத்துடனும், ஆச்சரியத்துடனும், ஏற்கெனவே மனமும், உடலும் தளர்ந்திருந்த தேவகி மயக்கம் அடைந்தாள். நாட்கள் சென்றன. ஒன்றன் பின் ஒன்றாக ஆறு குழந்தைகள் கம்சனால் கொல்லப் பட்டன. தேவகி ஏழாவது முறையாகக் கர்ப்பம் தரித்தாள்.
//அவதாரம் செய்யும் வேளை நெருங்கிவிட்டது, எனக் கூறினார்கள். //
ReplyDeleteகூறினார்?
//அவனை வெல்லா யாராலும்//
வெல்ல -
திருத்தி விடுங்கள் அம்மா.
நன்றி கவிநயா, முதலில் நீங்கள் குறிப்பிட்டிருப்பதில் சில வார்த்தைகள், விடுபட்டிருக்கின்றன. வர்ட் டாகுமெண்டை வச்சுப் பார்த்துட்டுத் திருத்தினேன். தட்டச்சுப் பிழையையும் சரி செய்துவிட்டேன்.
ReplyDeleteஷாந்தனு என்றே சம்ஸ்கிருத உச்சரிப்பு, அப்படியே படிச்சதால் எழுதும்போதும் அப்படியே எழுதிட்டேன்.
குந்திக்குக் குழந்தை பிறக்கலைனு வருத்தம் இருந்ததே தவிர, அவள் அக்னிப்ரவேசம் செய்வது எல்லாம் வியாச பாரதத்தில் நானும் படிச்ச நினைவு இல்லை. ஆனால் அவள் தனக்கு அளிக்கப் பட்ட வரத்தின் மூலம் குழந்தை பெற ரொம்பத் தயங்கினாள். பின்னர் வேறு வழி இல்லாமையாலும், அவளின் வரம் பற்றி அறிந்தவர்கள் எடுத்துச் சொன்னதாலும் அந்த வரத்தை உபயோகித்து மூன்று பிள்ளைகள் பெற்றவள், பின்னர் மேலும் பயன்படுத்த மறுத்து தன் இளையாள் ஆன மாத்ரிக்கு அதை உபதேசித்து, அவளும் குழந்தைகள் பெற வழி செய்தாள்.
மனோபலம் மிக்கவள் ஆனதால், கணவன் பாண்டு இறந்ததும், தன்னைத் தேற்றிக் கொண்டதோடு அல்லாமல் மாத்ரியையும் தேற்றுகின்றாள். ஆனால் மாத்ரியோ தன்னாலேயே கணவன் இறக்க நேர்ந்தது என்ற குற்ற உணர்ச்சியும் சேர்ந்து கொள்ள தன் குழந்தைகளைக் குந்தி தன் குழந்தைகள் போலவே வளர்ப்பாள் என்பது உறுதியாய்த் தெரிய தானும் உடன்கட்டை ஏறிவிடுகின்றாள். குழந்தைகளை வளர்ப்பதற்காக உயிரை வைத்திருக்கின்றாள் குந்தி.