
கம்சனோ நான் அவளை விட முடியாது, கொன்றே தீருவேன் என்கின்றான். வசுதேவர் மிகுந்த புத்திசாலியாக இருந்தார். மேலும் கம்சனின் அடாவடியான நடவடிக்கைகள் பற்றியும் நன்கு அறிந்திருந்தார். ஆகவே கம்சன் எதற்காக அவளைக் கொல்லப் போகின்றான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன், என்ன காரணத்தால் தேவகியைக் கொல்லப் போகின்றாய் எனக் கேட்கின்றார். கம்சனும் தனக்கு வந்த எச்சரிக்கையைச் சொல்லுகின்றான். நாரதரின் ஆரூடத்தையும், கடவுளரிடமிருந்து வந்த எச்சரிக்கை அது என்பதையும் தெரிவித்துவிட்டு, எட்டுக் குழந்தை பிறக்கும் வரை இவளை விட்டு வைத்தால் தானே? இவளைக் கொன்றுவிட்டால்???? என்று கொக்கரிக்கின்றான் கம்சன். வசுதேவரோ, “ மைத்துனரே, எங்களுக்குப் பிறக்கப் போகும் எட்டாவது குழந்தையால் தானே உமக்குத் தீங்கு நேரிடும்? அது வரையிலும் சற்றுக் கருணை காட்டுங்கள். எங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை நானே நேரில் கொண்டு வந்து உம்மிடமே ஒப்படைக்கின்றேன். அவற்றை நீர் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். நாங்கள் அனைவரும் உம்முடைய குடிமக்கள் அன்றோ? உம்மைக் காப்பது எமக்கும் கடமை அன்றோ?” என்று மிகுந்த விநயத்தோடு சொல்லுகின்றார்.
யோசனையில் ஆழ்ந்த கம்சன் தான் தேவகியைக் கொல்லுவது தன் தகப்பனுக்கு மட்டுமில்லாமல் மற்ற யாதவத் தலைவர்களுக்கும் பிடிக்காது என்பதையும் அவர்களின் வீண் பகையும், வெறுப்பும் தன்னை வந்து சேரும் என்பதையும் உணர்ந்தவனாய், தான் ஒரு நிபந்தனையோடு தேவகியை உயிரோடு விடுவதாய்ச் சொல்லுகின்றான். அந்த நிபந்தனையாவது: “திருமண ஊர்வலம் அப்படியே நேரே மதுராவில் உள்ள கஜராஜ மாளிகைக்குச் செல்லவேண்டும். அங்கே வசுதேவரும், தேவகியும் ஒரு அறையில் சிறை வைக்கப் படுவார்கள். கம்சனின் படை வீரர்கள் ஒவ்வொரு நிமிடமும் அவர்களைக் கண்காணிப்பார்கள். கம்சனின் கண்காணிப்பில் இருந்து அவர்கள் தப்ப முடியாது. இருவருக்கும் பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தையும் கம்சனிடம் ஒப்படைக்க வேண்டும். வசுதேவர் தன் வாக்குறுதியில் இருந்து தவறக் கூடாது. தேவகிக்குப் பிறக்கும் எந்தக் குழந்தையும் தன் பிடியில் இருந்து தப்பக் கூடாது.” இவையே கம்சனின் நிபந்தனைகள். அதன் படி ஊர்வலம் நேரே அங்கே சென்றது. மணமக்கள் அந்த அரண்மனையின் ஒரு அறையில் சிறை வைக்கப் பட்டனர். நாட்கள் கடந்தன.
உள்ளேன் தலைவி...;))
ReplyDeleteம்... அப்புறம்?
ReplyDeleteவாங்க கோபி,
ReplyDeleteவாங்க கவிநயா.