கம்சனை யாராலும் தடுக்க முடியாது என்பதையும் அனைவரும் அறிந்தே வைத்திருந்தனர். வசுதேவரையும், தேவகியையும் சிறை வைத்தது யாதவர்களில் எவருக்கும் பிடிக்கவில்லை. அதிலும் திருமண தினத்தன்றே இம்மாதிரிக் கம்சன் அவர்களை நடத்தியதில் தங்கள் குலத்துக்கே இழுக்கு நேர்ந்திருக்கின்றதாயும் நினைத்தனர். கம்சனின் தந்தையான உக்ரசேனன் இருந்த வம்சம் ஆன அந்தகர்களிலும் கம்சனின் இந்தப் போக்கும், முரட்டுத் தனமும் பலருக்குப் படிக்கவில்லை. கம்சனும் இதை நன்கு அறிந்திருந்தான் என்பதை அவன் செய்த அடுத்த காரியங்களில் இருந்து நன்கு புலனாகின்றது. யாதவகுலத் தலைவர்களில் முக்கியமானவன் ஆன வசுதேவருக்கும், அவர் மனைவிக்கும் நேர்ந்துள்ள இந்தத் துயரம் பெரும்பாலான யாதவகுலப் பெண்களையும் மன வேதனையில் ஆழ்த்தியது. வயது முதிர்ந்த ஸ்த்ரீகள் பலரும் தேவகியைத் தங்கள் மகள் போல் நினைத்து வந்தனர். ஆகையால் அவர்களுக்கும் இதில் உடன்பாடு இல்லை. கம்சனைக் காணவே பலரும் வெறுத்தனர். தலைவர்களும் அவனுடைய கொடுமையான நடவடிக்கைகளாலும், அவனை எதிர்ப்பவர்களை அழியோடு அடித்துவிடுகின்றான் கம்சன் என்பதை உணர்ந்தவர்கள் ஆதலாலும், வாய் மூடி மெளனிகளாய் இருந்து வந்தனர். அவர்களுக்குள்ளேயே இதை எவ்வாறு எதிர்ப்பது என்பது குறித்து ரகசிய ஆலோசனைகளும் செய்து வந்தனர்.
ஆனால் கம்சனோ இதை எல்லாம் அலட்சியம் செய்தவனாய்த் தன் மாமனார் ஆகிய ஜராசந்தனின் நம்பிக்கைக்குத் தான் உரியவனாய் இருப்பதால் அதைப் பயன்படுத்திக் கொண்டு மகத வீரர்களைத் தன் மெய்க்காப்பாளர்களாகவும், முக்கியமான ரகசிய வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டான். இது தவிர, யாதவ சமூகத்திலேயே உள்ள மிகவும் வஞ்சனையும், சூதும் நிறைந்த பலரைத் தனக்குத் துணையாகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டான். அவன் தேர்ந்தெடுத்தவர்கள் மனசாட்சியின்படி வேலை செய்யாதவர்களாக இருந்ததோடு அல்லாமல், கம்சனின் பணத்தால் தங்கள் ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்தும் வந்தனர். பணமும் அதனால் கிடைக்கும் சுகமுமே அவர்களுக்குப் பெரும் சந்தோஷத்தைத் தந்தது. கம்சன் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்து வந்தனர் அவர்கள். கம்சனை எதிர்ப்பவர்களை அழிப்பதோடு அல்லாமல், அவன் ஆசைப்படுகின்ற பெண்களையும் கவர்ந்து வருவதில் வல்லவர்களாய் இருந்து வந்தார்கள் அவர்கள்.
இங்கே வசுதேவரும், தேவகியும் மாளிகையில் வீட்டுச்சிறையில் தனிமையை அனுபவித்து வந்தாலும், இறைவன் பால் கொண்டிருந்த அவர்களின் நம்பிக்கை போகவில்லை. இறைவனை சதா பிரார்த்தித்துக் கொண்டே இருந்தனர். தங்களையும், தங்கள் யாதவ குலத்தையும் காக்கவேண்டியவன் தன் வயிற்றில் தான் பிறக்கப் போகின்றான் என்பதை அறிந்ததில் இருந்து தேவகி அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருக்க ஆரம்பித்தாள். இறைவனிடம் அவள் வேண்டியது எல்லாம் இது தான்:" இறைவா, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அத்தனை சீக்கிரமாய் என்னுடைய முதல் ஏழு கர்ப்பங்களும், அதன் பிரசவங்களும் முடிந்து, நீ சீக்கிரமாய் வந்து என் வயிற்றில், என் கர்ப்பத்தில் உதித்து எங்களையும், இந்தக் குலத்தையும் காப்பாயாக. சர்வலோக ரட்சகனே! உனக்காகவே நாங்கள் காத்திருக்கின்றோம். நீ சீக்கிரமே வருவாயாக!"
தேவகி முதன்முறையாகக் கர்ப்பம் தரிக்கின்றாள். ஆண் குழந்தையும் பிறக்கின்றது.
மனதில் ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்தக் குழந்தைக்கு நேரப் போகும் கதியைக் குறித்த கற்பனையில் நெஞ்சே நடுங்குகின்றது. அந்தச் சமயம் மகதத்திற்கு மாமனார் வீட்டுக்குச் சென்றிருந்த கம்சன் செய்தி அறிந்ததும், விரைவில் மதுரா திரும்புகின்றான், தன் இரு மனைவியருடனும், இன்னும் கூடுதலான படை வீரர்களுடனும். இங்கே யாதவ குலமே பிறந்திருக்கும் குழந்தையின் கதியை எண்ணி அஞ்சி நடுங்கி, குழந்தையைக் கம்சன் கொல்லப் போகும் சமயத்தை எண்ணி விதிர் விதிர்த்துப் போய் இருக்கின்றனர். கம்சனுக்குச் செய்தி சொல்லப் பட்டது.
உ அ :)
ReplyDeleteகூடவே வந்துக்கிட்டு இருக்கேன்...
ReplyDeleteநல்லா கதை சொல்றீங்கம்மா :) அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்...
ReplyDeleteகூடவே வரும் அனைவருக்கும் நன்றி.
ReplyDelete