
யயாதி மன்னனின் மூத்த மனைவியும், சுக்ராசாரியாரின் மகளும் ஆன தேவயானிக்குப் பிறந்த பையன் தான் யது என்னும் ராஜகுமாரனும், துர்வாசு என்பவனும் ஆவார்கள். இந்த யதுவின் வம்சமே யாதவர்கள் என அழைக்கப் பட்டனர். யாதவர்களில் பல பிரிவுகள் இருந்து வந்தன. அவற்றில் சில குக்குரர்கள், அந்தகர்கள், வ்ருஷ்ணிகள், சத்வதர்கள், போஜர்கள், மாதவர்கள், ஷூரர்கள் என்று இருந்த அனைத்துப் பிரிவுகளையும் மொத்தமாய் வ்ருஷ்ணி சங்கமம் எனச் சொல்லுவதும் உண்டு. யாதவர்கள் தங்கள் கடமைகளில் சிறந்து விளங்கியதோடு மட்டுமில்லாமல், சிறந்த வீரர்களாகவும் இருந்து வந்தனர். அவர்களில் அந்தக் கால கட்டத்திலேயே நேரிடையாக அரசன் என ஒருவரை மட்டும் சொல்லாமல் ஜனநாயக முறையே இருந்து வந்தது. என்றாலும் ஒரு தலைவன் வேண்டுமே என்பதற்காக, ஒவ்வொரு பிரிவினரும் தங்களில் மிகச் சிறந்தவரை, வீரரை, செல்வமும், படை பலமும் பெற்றவரை அரசர் என அழைக்கும் வழக்கம் இருந்து வந்தது.
மற்றச் சில ஆரிய அரசர்களின் நாடு விஸ்தரிப்பால் யாதவர்கள் தென் பகுதியை நோக்கி வர ஆரம்பித்தனர். கங்கையைக் கடந்து யமுனைக்கரையில் மது என்ற அரக்கனால் நிர்வகிக்கப் பட்ட இந்த மதுவனம் ஆனது காடுகள் அழிக்கப் பட்டு யமுனைக்கரையில் ஒரு நகரத்தையும் மது என்னும் அரக்கனால் நிர்மாணிக்கப் பட்ட இடம் ஆகும். இந்தக் கதை நடந்த துவாபர யுகத்துக்கு முன்னே நடந்த த்ரேதா யுகத்தில் அயோத்தியை ஆண்ட ஸ்ரீராமச்சந்திரனின் தம்பியான ஷத்ருகனனால் மதுவனத்து அரக்கர்களின் கொடுமை தாங்காமல் மதுவனம் அழிக்கப் பட்டு நாடு பூராவும் இக்ஷ்வாகு மன்னர்களின் கீழ் கொண்டுவரப் பட்டது. இதன் பின்னர் வந்த யாதவர்கள் கங்கையைத் தாண்டி, வந்து வ்ரஜபூமி என அழைக்கப் பட்ட மதுராவுக்கும் அப்பால் தங்கள் ராஜ்யத்தையையும் ஆளுமையையும் விரிவாக்கினார்கள்.

இந்தக் கம்சன் மகத நாட்டு அரசனும், அந்தக் காலத்தில் சக்கரவர்த்தி என அறியப் பட்டவனும் ஆன ஜராசந்தனின் இரு மகள்களையும் திருமணம் செய்து கொண்டு யாதவர்களின் ஜென்மப் பகைவன் ஆன மகத அரசனைத் தனக்கு உறவாக்கிக் கொண்டான். இந்தத் திருமணத்தின் மூலம் ஜராசந்தனின் உதவி தனக்குக் கிட்டும் என்பதோடு அல்லாமல் அனைத்து யாதவர்களையும் அடக்கவும், தான் ஒருவனே யாதவ குலத் தலைவனாய் இருக்கவும் ஜராசந்தன் உதவுவான் என்ற எண்ணமே காரணம் ஆகும். ஜராசந்தனுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய வீரனாகவும், அதே சமயம் பிரியத்துக்கு உகந்த மருமகனாகவும் இருந்து வந்தான் கம்சன். தன் சொந்த இனத்தையே அழிக்கவும் ஜராசந்தனுக்கு உதவியும் புரிந்து வந்தான்.

ஆரிய வருகை என்பது கி பி 1200, கிருஷ்ணன் பிறந்ததது வாழ்க்கை துறந்தது எல்லாமே கி மு 3012 இல் முடிகிறது . என் இந்த முரண்பாடு ?
ReplyDelete