எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 31, 2010

ஆண்டவன் அருளால் நலமே! நன்றி!

கவலையோடு விசாரித்த அனைவருக்கும் நன்றி. தற்சமயம் பிசியோதெரபி எடுத்துக்கொண்டு வருகிறார். ஓரளவு வலி குறைந்துள்ளது. என்றாலும் இன்னும் குறையவேண்டும். வெயிட் தூக்குவதற்கெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. அனைவரின் அன்பும், அக்கறையும் மனம் நெகிழ வைக்கிறது. ஆனாலும் இது பற்றி முதலில் எழுத வேண்டாம்னு நினைச்சுட்டு அப்புறமா எழுதக் காரணம் இருக்கிறது. அந்தக் காரணம் இதோ!
***************************************************************************************

நம் நாட்டின் மன்னர்கள் கோயிலைப் பிரம்மாண்டமாகக் கட்டியதோடு அல்லாமல் அவற்றின் தளங்களைக் கல்லில் அமைத்துள்ளனர். கற்களே கிடைக்காத அதுவும் மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டக் கோயில்கள் கூட கற்றளிகளாகவே மாற்றப் பட்டன பிற்காலச் சோழர் காலத்தில். இந்தக் கல் தரை நம் நாட்டு சீதோஷ்ணத்துக்கு உகந்தது என்பதோடு நடக்கவும் வசதியாக இருக்கும். கோயில் என்றால் பலரும் வருவார்கள். அந்நாட்களில் வெளியே தங்க இடமில்லாதவர்கள், தங்க முடியாதவர்கள் கோயிலில் கிடைக்கும் பிரசாதங்களை உண்டுவிட்டு அங்கேயே மண்டபங்களில் தங்குவார்கள். அதன் பொருட்டே விசாலமான மண்டபங்கள், சுற்றிலும் நடைமேடைகள், பெரிய பெரிய திண்ணைகள் எனக் கட்டப் பட்டது. நாளாவட்டத்தில் பெரிய கோயில்களில் சுற்றிலும் உள்ள மண்டபங்கள் வணிக வளாகங்களாக மாற, சிறிய கோயில்களில் வேறுவிதமான மாற்றங்கள். நல்லவேளையாக உள் பிராஹாரங்களுக்கு எதுவும் வரவில்லை.

ஆனால் திருப்பணி என்ற பெயரில் அந்த அழகான கல்தளங்களைப் பெயரத்து எடுத்துவிட்டு தற்காலங்களில், அதுவும் கடந்த பத்து வருடங்களாக வழவழவென்றிருக்கும் கிரானைட் பதிக்கின்றனர். இது எந்த அளவுக்குப் பாதுகாப்பு என்று தெரியவில்லை, புரியவில்லை. மேலும் அந்தக் கல் தளங்களில் பல புராதனமான கோயில்களிலும் பல்வேறு விதமான கல்வெட்டுக்கள், எழுத்துக்கள் காணப்படும். கோயில் கட்டிய காலத்தைச் சொல்வதோடு, அந்தக் கால மக்களின் திருப்பணிகள் பற்றிய விபரங்கள், பல்வேறு சரித்திரச் சான்றுகள் எனக் கிடைத்து வருகின்றன. மேலும் கோயிலுக்கு வரும் நபர்கள் அங்கே நடக்கும், நடத்தி வைக்கும் அபிஷேஹ ஆராதனைகள் மூலமும், விளக்குகள் போடுவதிலும் எண்ணெய் ஆங்காங்கே சிந்தி இருக்கும். அதில் இருந்தெல்லாம் வழுக்காமல் இருக்கவேண்டுமென்றால் கல் தளமே சரியாக இருக்கும்.

எட்டுக்குடி கோயிலில் உள்ளே மூலவரைப் பார்க்கப் போகும் இடத்திலேயே இரண்டு பக்கமும் கம்பிக்கிராதி கட்டித் தடுப்பு அமைத்துள்ள மேடையில் இரு பக்கங்களும் சறுக்கு மேடை மாதிரி சரிவாக அமைத்திருக்கின்றனர். மேடை ஒரு அடிக்கு மேல் உயரம். அந்த ஒரு அடிக்கும் சறுக்கு மேடை அமைத்திருப்பது, எல்லாருக்கும் சட்டெனத் தெரியறாப்போல் இல்லை. அதிலேயே என் கணவருக்கு முதலில் தடுக்கி விட்டது. என்றாலும் சமாளித்துக்கொண்டார். தரிசனம் முடித்துத் திரும்பி வருகையில் சனைசரருக்கு விளக்குப் போட என்று மேலே ஏறியதில் இந்த மாதிரி ஆகிவிட்டது. விழுந்த இடத்துக்கு எதிரே பீடம் வேறே. என்னை மாதிரி உயரம் குறைந்த ஆட்கள் என்றால் கட்டாயமாய் மண்டை உடைந்திருக்கும். அவர் உயரமாக இருந்தது ஒரு வசதியாகப் போய்விட்டது. சாய்ந்தாற்போல் விழுந்தாரோ பிழைத்தார். இல்லாட்டி கம்பிக்கிராதியில் மண்டை குத்தி இருக்கணும். தேவஸ்தானத்து அலுவலக ஊழியர் ஓடி வந்தார். அவரிடம் இப்படிச் செய்துட்டீங்களேனு சொல்லிட்டேன். அநேகமாய் இப்போது அனைத்துக்கோயில்களிலும் இம்மாதிரியான ஒரு ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது. இது சற்றும் பாதுகாப்பானது அல்ல.

இதுவே ஒரு குழந்தையோ அல்லது கர்ப்பிணிப்பெண்ணோ விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? கோயில் பலதரப்பட்டவர்களும் வந்து போகவேண்டிய இடம். அதிலும் நவகிரஹ சந்நிதி, சனைசரர் சந்நிதி அனைவரும் செல்லக் கூடிய இடம். அங்கே இப்படி வழவழவென்ற கிரானைட் போட்டு வைத்திருந்தால் நிச்சயமாய் ஆபத்துத்தான். அறநிலையத் துறை உடனே விரைந்து கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் இது. கிரானைட் என்றால் பராமரிப்புக்கு வசதி என்ற காரணம் சொல்லப் படுகிறது. கல்தளம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்ப் பராமரிக்கப் பட்டுத் தானே வருகிறது? அதில் என்ன குறைந்துவிட்டது?? கட்டாயமாய் இது கண்டனத்துக்கு உள்ளாகும் ஒரு விஷயமே ஆகும். குறைந்த பட்சம் இனிமேல் திருப்பணிகள் நடக்கும், நடத்தப் போகும் கோயில்களிலாவது கல் தளங்களை மாற்றாமல் திருப்பணிகளைச் செய்து வரவேண்டும் என்பதே எங்கள் தாழ்மையான வேண்டுகோள். இதே போல் எங்கள் ஊரான கருவிலியிலும் உள்ள சிவன் கோயிலுக்குக் கல்தளத்திலிருந்து கிரானைட் தளம் மாற்றியதில் இந்த வருஷம் நவம்பரில் மழை பெய்யும்போது போய்விட்டு 86 வயதான என் மாமியாரைக் கூட்டிச் செல்ல மிகவும் சிரமப் பட்டுவிட்டோம்.

கிராமங்களின் கோயில்களுக்கு வெளி ஊர், வெளிநாடு என்றெல்லாம் அந்த அந்தக் கிராமத்து மக்கள் பல வயதில் உள்ளவர்களும் வந்து போவார்கள். அனைவருக்கும் கல் தளமே வசதி, பாதுகாப்பும். கோயிலின் பழைய தன்மையும் மாறாமல் இருக்கும். அல்லது பிடிவாதமாய் நாங்கள் கிரானைட் தான் போடுவோம் என்றால் கல் தளம் போன்றே கிரானைட்டிலும் வந்திருக்கிறது. குறைந்த பட்சம் அதுவானும் போடலாம். வழுக்கி விழுந்து ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகாமலாவது இருக்கும். :((((((((((((((

Saturday, January 30, 2010

என்னென்னமோ நடந்துடுச்சு!

உடம்பு இன்னும் சரியாகவே இல்லை எனக்கு. அதோடு குளிக்கும்போது வெந்நீர் பட்டு எரிச்சல் அதிகம். ஆனாலும் எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டே கிளம்பினேன். போகும்போதே எண்கண் முருகனைத் தரிசனம் செய்து கொண்டு பின் திருவாரூர் போயிட்டு, அங்கே தரிசனம் முடிச்சுட்டுப் பின்னர் எட்டுக்குடியும், சிக்கலும் தரிசனம் முடிச்சுக்கணும்னு திட்டம். மதிய உணவுக்கும் சற்று ஓய்வுக்கும் பின்னர் திரும்பும் வழியில் திருக்கண்ண மங்கையும், திருச்சேறையும் பார்க்கவும் திட்டம். எல்லாம் முடிச்சுட்டுத் திரும்ப ஏழு மணி ஆயிடும். அதுக்கப்புறம் சாப்பிட்டு அறையைக் காலி செய்தால் மிஞ்சிப் போனால் இரண்டு மணி நேரம். ஓடியே போயிடும்னு நினைச்சோம். ஓடினது நேரமும் இல்லை எதுவும் இல்லை. மனதில் இருந்த உற்சாகமும், சந்தோஷமும் தான்.

எங்களோட திட்டம் ஓட்டுநருக்குச் சரியா வரலை. ஏழே முக்காலுக்கு எண்கண் போயிட்டோம். ஆனாலும் அவர் கோயில் திறந்திருக்குமானு சந்தேகப் பட்டுத் திருவாரூருக்கும் போகாமல் நேரே எட்டுக்குடி ஓட்டிட்டுப் போயிட்டார். இந்த இடத்தில் சொல்ல வேண்டிய முக்கியமான செய்தி ஒண்ணும் இருக்கே. கும்பகோணத்திலிருந்து குடவாசல் வரை சாலை கொஞ்சம் மோசம் தான். சாக்கோட்டை அருகே ரொம்ப மோசமான சாலை. ஆனால் குடவாசலில் ஆரம்பிச்சு திருக்குவளை வரைக்கும் சாலை பாருங்க, சும்மா கண்ணாடி போல் பளபளப்பு, ஜொலி ஜொலிப்பு, சாலை விரிவாக்கமும் அழகாய்ச் செய்து, பளபளவென்ற சாலை! ஒரே ஓட்டம் தான் வண்டி. அலுங்காமல், குலுங்காமல் போனது. ஒரே தடங்கல் என்னன்னா, இந்தப் போர் அடிக்கிறவங்க சாலையிலேயே கொண்டு வந்து போரடிக்க கதிர்களைக் கொட்டுவது தான்.

ஒரு காலத்தில் ஆனை கட்டிப் போரடிச்சாங்க மதுரையிலேனு சொல்லுவாங்க. இங்கே ஆனைகட்டிப் போரடிக்காட்டியும், வயலுக்கு அருகே களம்னு ஒண்ணு போட்டு,அதைச் சாணியால் மெழுகி, அங்கே பிள்ளையார் பிடிச்சு வச்சு, கோலம் போட்டு, தேங்காய் உடைத்து, வெற்றிலை, பழம், பூ நிவேதனம் பண்ணி,இத்தனையும் போட்டுட்டு முதல்லே வீட்டுப் பெரியவங்க கையாலே கொட்டச் சொல்லுவாங்க. அப்புறமாக் களத்திலே அறுவடை எல்லாம் வந்து முடிச்சதும் தூத்துவாங்க. இப்படித் தான் வேலை நடக்கும். இப்போ எந்த வயலிலும் களம்னு ஒண்ணு இல்லவே இல்லை. எல்லா அறுவடையும் சாலைக்கு வருது போரடிக்க. மாடுகட்டிப் போரடிச்சது எல்லாம் கற்காலமோனு தோணுது. அதே போல் அறுக்கவும் ஆட்கள் அங்கே ஒண்ணு, இங்கே ஒண்ணுனு எண்ணினாப்போல் சில வயல்களில் தான் பார்க்கமுடிந்தது. எல்லாம் இயந்திரமயம். உடல் உழைப்பே இல்லை.

கூலி கொடுத்தால் கூட அறுக்க ஆட்கள் வருவதில்லையாம். இலவச அரிசி கிடைக்குது, இலவச சேலை கிடைக்குது, இலவச தொலைக்காட்சி கிடைக்குது. ஏன் கூலிக்கு மாரடிக்கணும்? இதுவே மக்கள் நினைப்பு என்று வயல் வைத்திருப்பவர்களின் கருத்து. விவசாயம் பண்ணவோ, நாற்று நடவோ, கதிர் அறுக்கவோ ஆட்கள் கிடைப்பதில்லை. அவ்வளவு ஏன் ஊரிலேயே தூர்ந்து போயிருக்கும் குளங்களைச் சுத்தம் செய்யவோ, அல்லது பாசன வாய்க்கால்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்றவோ மக்கள் முயல்வதில்லை. அதெல்லாம் அரசாங்கம் பார்த்துக்கும் என்று அவர்கள் எண்ணம். நாம் ஏன் செய்யணும்னு அவங்களுக்குச் செய்ய இஷ்டம் இல்லை. வெளிப்படையாகவே தெரியுது. காவிரியின் துணை நதிகளெல்லாம் பார்த்தீனியமும், ஆகாயத் தாமரையும் மண்டிக்கிடக்கு. அகற்ற யாருக்கும் மனமும் இல்லை, நேரமும் இல்லை. மானாட, மயிலாடிக் கொண்டு, சூப்பர் சிங்கரைப் பார்த்து மகிழவே நேரம் பத்தலை மக்களுக்கு. அதே போல் ஒரு காலத்தில் அரிசி மாவில் கோலம் போட்ட இடங்களில் இப்போது கல்மாவும் வந்துவிட்டது.

எல்லாக்கூத்தையும் பார்த்துக்கொண்டே போனோம். என்ன அருமையான சாலை?? நம்ம மாநில அரசால் போடப்பட்ட சாலைனு நம்பிக்கையே வரலை. நம்ம ரங்க்ஸும், ஓட்டுநரும் தேசீய நெடுஞ்சாலைனு சத்தியமே பண்ணினாங்க. ஆனால் நாம கண்டுபிடிச்சுட்டோமில்ல?? மாநில அரசுச் சாலைதான்னு. போர்டு பெரியதாய் இருந்ததைக் காட்டினோம். அவ்வளவு அருமையான சாலை வசதி தமிழ்நாட்டின் கிராமங்கள் பூராவுக்கும் இருந்தால் என்ற அல்பத் தனமான ஆசையோடு பயணித்தோம். வண்டி ஆட ஆரம்பிச்சது. என்னடா திருஷ்டியானு பார்த்தால், திருக்குவளை தாண்டி விட்டது. எட்டுக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சாலை சுமாஆஆர் தான். என்ன செய்யமுடியும்?? போய்த் தான் ஆகணும்.

இந்த எட்டுக்குடி, சிக்கல், எண்கண் மூன்றிலும் இருக்கும் முருகன் சிலையைச் செய்தவர் ஒரே சிற்பி. இந்தச் சிற்பங்கள் பற்றிய கதை சென்ற வருஷம் எழுதி உள்ளேன். அப்போதிலிருந்து போயிட்டு வரணும்னு இப்போத் தான் கிடைச்சிருக்குனு நினைச்சுட்டு கோயிலுக்குப் போனோம். உள்ளே சந்நிதியில் முருகனுக்கு விபூதிக்காப்பு நடந்துட்டு இருந்தது. அர்ச்சகர் தன்னை மறந்து முருகன் அழகில் மயங்கி அலங்காரம் செய்தார். கோயில் பற்றிய விபரங்கள் ஆன்மீகப் பயணம் பக்கத்தில் தனியே வரும். அலங்காரம் முடிச்சு தீப ஆராதனை காட்டி முருகன் பற்றிய கதையைச் சொல்லி அனுப்பி வைச்சார். பிராஹாரம் சுத்திட்டு வெளியே வரும் போது நவகிரஹ சந்நிதி. ஆனால் அது என்ன மலைமேலே இருக்கிறாப்போல் இவ்வளவு உயரத்திலே இருக்கே?

நான் தயங்கினேன். அதுக்குள்ளே நம்ம ரங்க்ஸ் நீ மேலே ஏறமுடியாது. இந்த உடம்போட ஏறும் வேலை வச்சுக்காதேனு சொல்லிட்டார். அங்கே சனைசரனுக்கு எள் தீபம் போட தீபம் விற்றுக்கொண்டிருந்த பெண்ணோ, அதெல்லாம் ஏறலாம் சார், நல்லாப் பாருங்க மேலே சாக்குப் போட்டு வச்சிருக்கேன் என்றார். இரண்டு படிகள் தான் ஏற. ஆனாலும் ஒவ்வொரு படியும் இரண்டு அடிக்கு மேல் உயரம். மேலே சின்ன நடைபாதை போன்ற இடத்தில் சுற்றிக் கம்பிக்கிராதி போட்டு அதற்குள் ஒரு மூலையில் நவகிரஹங்களும், தனியே எதிரே சனைசரரும் குடி கொண்டிருந்தனர். நம்ம ரங்க்ஸுக்கு அன்று சனிக்கிழமை என்பதால் அவர் வழக்கமாய்ப் போடும் எள் தீபத்தை அங்கேயே போடலாமே என்ற எண்ணம். அதுவும் சனைசரர் தனியே இருக்காரே? அந்தப் பெண்மணியும் வாங்க சார், போணி பண்ணுங்கனு கூப்பிடவே ஒரு தீபத்தை வாங்கிக் கொண்டு மேலே ஏறினார்.

நான் கீழேயே நின்றுகொண்டிருந்தேன். திக் திக் னு இருந்தது. ஆனாலும் அவர் மேலே ஏறி அங்கே சனைசரருக்கு எதிரே போட்டிருந்த சாக்கில் காலைத் துடைத்துக்கொண்டு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, நவகிரஹம் சுற்றினார். அப்போவே வழுக்கி இருந்திருக்கிறது. எனக்குப் புரியலை. சமாளித்துக்கொண்டு சுற்றி இருக்கிறார். ஆனால் நல்லவேளையா நீ வரலை, இங்கே ஒரே வழுக்கல் என்றும் என்னிடம் கூறினார். சுற்றி முடிச்சுவிட்டுக் கீழே இறங்கணும். வேறே ஒருத்தர் உள்ளூர்க்காரர் மேலே ஏறி விளக்குப் போட்டுக் கொண்டிருந்தார். இவர் கீழே இறங்கக் கம்பிக்கிராதியைப் பிடித்துக் கொண்டு மேல் படியிலிருந்து முதல் படிக்கு இறங்கினார். அங்கே ஒரு விநாடி நிதானித்துக்கொண்டு இரண்டாம் படியில் காலை வைக்கக் காலைத் தூக்கினது தான் தெரியும். சடபுடவென்று சப்தத்தோடு என்ன நடக்கிறது என்பதே புரியாத வேகத்தோடு கீழே வந்து விழுந்தார். நான் கத்திய கத்தலில் கோயிலில் இருந்த அனைவரும் கூடிவிட்டார்கள்.

Friday, January 29, 2010

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

காலையில் கிளம்பும் முன்னரே பூசாரிக்குத் தொலைபேசி நாங்கள் வரப்போவதைத் தெரிவித்தோம். ஏற்கெனவே அவரிடம் இரண்டு முறை உறுதி செய்து கொண்டிருந்தோம். என்றாலும் பால் வர தாமதமாகும் என அவர் யோசித்தார். போய்ப் பார்த்துக்கலாமேனு நாங்கள் கிளம்பிச் சென்றோம். இங்கே அபிஷேஹம், மாவிளக்கு போன்றவற்றை முடித்துக்கொண்டு, அந்த ஊரிலேயே இருக்கும் பெருமாள் கோயிலின் திருப்பணிக்காக பாலாலயம் ஏற்படுத்தும் நிகழ்விலும் பங்கு கொள்ள வேண்டும்.பெருமாளையே காணோம் இந்தக் கோயில் பெருமாளைத் தான் தூக்கிக்கொண்டு போயிட்டு பின்னர் திலகவதி அவர்களிடம் நேரில் சென்று மனுக்கொடுத்து வேண்டுகோள் விடுத்துப் பின்னர் கண்டு பிடிக்கப் பட்டது.பெருமாள் கிடைத்துவிட்டார் இன்னும் உற்சவர் கைக்கு வரவில்லை. ஆனாலும் அறநிலையத் துறையின் அநுமதி வாங்கித் திருப்பணியைக் கார்த்திகை மாசமே ஆரம்பித்துவிட்டார்கள். அப்போதிலிருந்து அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். போகமுடியலை. இப்போ நாங்க நிச்சயம் வந்துவிட்டோம் என்பதை உறுதி செய்து கொண்டு பாலாலயம் அமைக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள். எங்களுக்கே கும்பகோணம் வந்துதான் தகவல் தெரிந்தது.

மாரியம்மன் கோயிலில் பூசாரி ஊரில் நடந்த சில அசம்பாவிதங்களினால் கோயிலின் புனிதம் பாதிக்கப் பட்டதைச் சொல்லி வருந்தினார். அதோடு இனி தான் பூசாரியாக இருக்கவே யோசிக்க வேண்டி இருக்கிறது என்றும் சொன்னார். மனதே வேதனையில் ஆழ்ந்து போக, எப்படியோ அபிஷேஹ ஆராதனைகள் முடிந்து மாவிளக்கையும் அவசரம், அவசரமாப் போட்டுவிட்டுக் கிளம்பினோம் பெருமாள் கோயிலுக்கு. இந்தப் பூசாரி மாரியம்மன் கோயிலின் பரம்பரை பூசாரி. அவங்க அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்திலிருந்தே பூசாரியாக இருந்து வந்திருக்கின்றனர். இதற்காக அவர் பெற்றுக்கொள்ளும் சம்பளமோ அந்தக் காலத்தில் என்ன கொடுத்தாங்களோ அதுதான் இப்போதும். என்றாலும் கோயிலை விடக்கூடாது என பக்தியோடு செய்து கொண்டிருக்கிறார். இனி எப்படியோ? மனது கவலையில் ஆழ்ந்தது.

பெருமாள் கோயிலில் பரம்பரை பட்டாசாரியார் வாரிசே வந்துவிட்டார் பாலாலயம் எடுக்க. கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவரும் நன்கு கற்றறிந்தவர் என்பதால் நியமங்கள் குறையாமல் நல்லபடியாக பாலாலயம் எடுத்து முடிந்தது. நாங்கள் அதன் பின்னர் கும்பகோணம் திரும்பும் போது மணி மூன்றாகிவிட்டது. திரும்பும் வழியிலேயே மறுநாள் சனிக்கிழமை இரவு பேருந்துக்கு முன்பதிவு செய்யவேண்டும் என்று செய்து கொண்டோம். இம்முறை நம்ம ம.பா.வுக்கு அரசுப் பேருந்து வேண்டாம்னு தோணிப்போய் ரதிமீனாவில் முன்பதிவு செய்துவிட்டார். இரவு பதினொன்றரைக்குத் தான் வண்டி. அறைக்குப் போய் ஓய்வு எடுத்துக்கலாம்னு படுத்தால், உடம்பில் ஒரே அரிப்பு. படுக்கையில்தான் ஏதோனு பார்த்தால் சின்னச் சின்னதாய் எறும்புகள் தான். அதைத் தட்டிட்டுப் படுத்தாலும் மீண்டும் மீண்டும் அரிப்புத் தாங்கலை.

கம்பளிப்பூச்சி கடிச்சாத் தடிக்குமே அது போலத் தடிச்சுப் போச்சு. கட்டி இருந்த புடவைக்கும் மேலே அரிப்புத் தாங்கலை. புடைவைக்கும் மேலே??? அட??? ஆமாம், ஒருவேளை இந்தப் புடைவை ஒத்துக்கலையோ??? ம்ம்ம்ம்ம்ம்?? எனக்குச் சில துணிகள் ஒத்துக்கவே ஒத்துக்காது. அதே போல் சில கடையில் வாங்கிய துணிகளும் ஒத்துக்கறதில்லை. இது எந்தக் கடையிலே வாங்கினதோ? ஓசி வந்த புடைவை, அண்ணா சஷ்டி அப்தபூர்த்திக்குக் கொடுத்தது. இதான் ஒத்துக்கலையா?? கடவுளே! காட்டன் புடவையோ, சிந்தடிக் புடவையோ, சில்க் காட்டன் புடைவையோ சில குறிப்பிட்ட ப்ராண்ட் புடவைகள் தான் ஒத்துக்குது. இது ஒத்துக்கலைனு முன் கூட்டியே எப்படிக்கண்டு பிடிக்கிறது?? ஒரு நாள் முழுக்க அல்லது பகல் பூராக் கட்டி இருக்கும்போது இப்படி அரிப்பு வந்தால் அப்போ அது புடைவையினால்தான் அப்படினு எனக்கே புரியும். (புத்திசாலியாக்கும்) தலை எழுத்தேனு நொந்து நூலாய்ப் போய்ப் புடைவையை மாத்தினேன். ஹிஹிஹி, அதான் அம்பிட்டே கேட்கிறதெல்லாம் வஸ்த்ரகலா, நேச்சுரல்ஸ், பரம்பரா, நகாசு, ரிவெர்சிபிள்னு கேட்டுடறது. ஒண்ணும் பண்ணாது பாருங்க! பிரச்னையே இருக்காதே! :P

என்னதான் மாத்தினாலும் 24 மணி நேரம் பிடுங்கல் தாங்காது. எண்ணெய்க்காப்புச் சார்த்தினால் தான் சரியாகும். அதுக்கு ஊருக்குப் போகணுமே. அதுவரை தாங்கிக்கணுமே! வேறே வழியே இல்லை. மாத்திரைகள் எதுவும் எடுத்துக்கவும் முடியாத நிலைமை. ரங்க்ஸ் கிட்டே சொல்லலை முதல்லே. அவரே பார்த்துட்டார் கை, முகம் எல்லாம் அதீதமாய்ச் சிவந்து தடித்திருப்பதை. தலையில் அடிச்சுண்டார். என்னதான் புடைவை ஒத்துக்குமோ னு அலுப்பு வேறே. நல்ல கைத்தறிக் காஞ்சீபுரம் பட்டு ஒத்துக்குமே , அதிலும் கோ ஆப்டெக்ஸ் என்றால் இன்னும் காரண்டியே, மினிமம் ஐந்தாயிரம் ரூபாய்தான், அதே வாங்கிக் கொடுங்கனு சொன்னேன். பதிலே இல்லை.

அதற்குள் மறுநாள் எட்டுக்குடி, சிக்கல், எண்கண், திருவாரூர், திருச்சேறை, திருக்கண்ணமங்கை செல்லத் திட்டம் போட்டு, (ராத்திரி பதினொன்றரை வரை பொழுது போகணுமே) டாக்சிக்காரரை வரச் சொல்லி இருந்தோம். அவரிடம் பேசி முடிவு செய்துவிட்டு காலை ஆறரைக்கெல்லாம் கிளம்ப நேரம் குறித்துவிட்டுப் படுத்தோம். மறுநாள் விடிந்தது, அன்று நடக்கப் போவதை அறியாமல் நாங்களும் ஏற்கெனவே செய்த முடிவின் படி எண்கண் வழியே திருவாரூர், எட்டுக்குடி, சிக்கல் செல்ல ஆயத்தமானோம்.

பாலாலயம் படங்கள்

எல்கே, படங்களைஇப்போத் தான் சேர்த்தேன், தனியாகக் கொண்டுவர முயன்று முடியலை, ராமசாமி கோயில் படங்களோட சேர்ந்து தான் வருவேன்னு அடம், என்ன பண்ணறதுனு புரியலை. அதன் கீழேயே பாருங்க. முடிஞ்சா விளக்கம் சேர்க்கிறேன். நன்றி. :D

Thursday, January 28, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!

ஜராசந்தன் யார்????

சில நாட்கள் முன்னர் தேவகியைப் பத்திப் பார்த்தோம், அவள் ஏன் துன்பம் அனுபவிக்கிறாள் என.இங்கே அது போலவே ஜராசந்தன் பற்றியும் கொஞ்சம் அறிந்து கொண்டோமானால் பின்னால் ஜராசந்தனின் வதம் வரும்போது புரிய வசதியாக இருக்கும். மகத நாட்டு மன்னன் ஆன பிருஹத்ரதன் காசி தேசத்து இளவரசிகளை மணம் புரிந்தான். சகோதரிகள் இருவரும் ஒற்றுமையாக இருப்போம் என மன்னனிடம் வாக்குக் கொடுத்திருந்தனர். அதன்படியே இருவருக்குமிடையே எந்தவிதமான சண்டை, சச்சரவும் இல்லாமல் இருந்ததைப் போல் இருவருக்கும் ஒருசேர புத்திரப் பேறும் இல்லாமல் இருந்தது. மனம் வருந்திய மன்னன் கக்ஷீவான் என்னும் முனிவரின் புதல்வன் ஆன சண்ட கெளசிகன் என்ற ரிஷியிடம் சென்று இதற்கான பரிகாரம் கேட்டான். முனிவர் மனம் மகிழும்படியாகப் பணிவிடைகளையும் செய்துவந்தான். அவன் சேவைகளால் மனம் மகிழ்ந்த முனிவரும் அவனுக்குக் குழந்தைப் பேறு அளிக்கும்படியாக ஈசனை வேண்டிக் கொண்டு மந்திர உச்சாடனங்கள் பலவும் செய்து ஒரு மாம்பழத்தில் அந்த மந்திரங்களை உருவேற்றி மன்னனிடம் கொடுத்தார்.

மன்னனும் அரண்மனைக்கு வந்தவன் அதை இரு மனைவியருக்கும் பகிர்ந்து அளித்தான். இருவரும் சரிபாதி மாம்பழத்தைச் சாப்பிட்டனர். பின்னர் கருவுற்றனர். மனம்மகிழ்ந்த மன்னனும், அரசியரும் குழந்தைப் பேறை எதிர்பார்த்திருக்கப் பிறந்ததோ ஒரு குழந்தையின் சரிபாதி. ஒரு பாதி முகம், ஒரு கை, உடலின் ஒரு பாதி, ஒரு கால் என ஒரு மனனவிக்கும், மற்ற பாதி இன்னொரு மனைவிக்குமாய்க் குழந்தை பிறந்திருந்தது. கலங்கிய சகோதரிகள் அந்தக் குழந்தையைப் பிண்டங்கள் என எண்ணிக் கொண்டு பணிப்பெண்ணிடம் கொடுத்துக் காட்டிலோ அல்லது வேறெங்காவதோ வீசி எறியச் சொன்னார்கள். பணிப்பெண்ணும் துணியில் சுற்றிக் காட்டில் வீசி எறிந்தாள். அங்கே ஜரா என்னும் அரக்கி ஒருத்தி இருந்தாள். அவள் அரச உடையுடன் ஒரு மூட்டை கிடந்ததைக் கண்டு அதைப் பொறுக்கி எடுத்து இரு கூறுகளாய்க் கிடந்த குழந்தையின் பாகங்களை ஒன்று சேர்க்கக் குழந்தைக்கு உயிர் வந்தது. குழந்தை அரசனுடையது என்பதையும் புரிந்து கொண்டு அவள் குழந்தையை அரசனிடமே ஒப்படைத்தாள். அரக்கியால் குழந்தை முழுமை பெற்றதால் அவள் பெயரை வைத்தே குழந்தைக்கு ஜராசந்தன் என்று பெயரிட்டான் மகத நாட்டு மன்னன்.

ஜராசந்தன் பல்வேறு தவங்களையும் புரிந்தான். அதன் மூலம் பல வரங்களைப் பெற்றான். தனக்கு நிகர் யாருமில்லை என்று மகத நாட்டுச் சக்கரவர்த்தியாக ஆட்சி புரிந்து வந்தான். எவராலும் வெல்லமுடியாத வரத்தையும் பெற்றான். அஸ்தி, ப்ராப்தி என்ற தனது இரு மகள்களையும் அண்டை நாட்டு யாதவகுலத் தலைவன் உக்ரசேனனின் மகன் ஆன கம்சனுக்கு மணம் புரிவித்து வைத்திருந்தான். திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு வந்த கம்சனுக்கு அவன் போட்ட ஒரே நிபந்தனை திருமணம் செய்து கொண்டு கம்சனே அரசன் ஆக முடிசூட வேண்டும் என்று. அதன்படியே தன் தந்தையான உக்ரசேனரைச் சிறையில் அடைத்துவிட்ட கம்சன் தான் அரியணை ஏறித் தன்னைத் தானே சக்கரவர்த்தி எனப் பிரகடனம் செய்து கொண்டிருந்தான். கொடுங்கோல் ஆட்சியும் புரிந்தான் கம்சன். இந்தக் கம்சனைத் தான் கண்ணன் வதம் செய்தார். ஆனாலும் ஜராசந்தன் அப்போதும் அழியாமல் கண்ணனைத் துரத்தித் துரத்தி யுத்தம் செய்வான். தன் மருமகன் இறந்ததற்குப் பழி வாங்குவான். கிட்டத் தட்டப் பதினாறு முறைகள் போர் நடந்தும் வெல்ல முடியாத ஜராசந்தனைக் கடைசியில் தந்திரமாய்க் கண்ணன் பீமனை விட்டுக் கொல்லச் செய்வார். அது பின்னர் வரும்.
*************************************************************************************

கர்ணன் யார்??

அடுத்துப் பஞ்ச பாண்டவர்களைப் பற்றிப் பார்க்கும் முன்பாக அவர்களில் மூத்தவன் ஆன குந்தியின் பிள்ளை கர்ணனின் பிறப்பு பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். இவை எல்லாம் நம் கதை தொடரும்போது புரிதலுக்கு வசதியாக இருக்கும். பலரும் ஆழ்ந்து படிக்கவில்லையோ என்றும் தோன்றுகிறது. சில விஷயங்களைத் திரும்பத் திரும்பப் படிக்கணும். அப்படிப்பட்ட ஒரு விஷயம் இது. அனைவரையும் சிரமப் படுத்துவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
கர்ணன் யார் என்று சில நாட்கள் முன்னர் துளசிதளத்தில் சூடு பறக்கப் பதிவுகளும், பின்னூட்டங்களும் போய்க் கொண்டிருந்தது. கர்ணனுக்கும் ஒரு முன் பிறவிக் கதை உண்டு. அதன்படியே தான் அவன் கர்ணனாய்ப் பிறந்து நடந்தவை எல்லாம். சஹஸ்ர கவசன் என்றொரு அசுரன் வழக்கம்போல் தவங்கள் செய்து தன் உடலை ஆயிரம் கவசங்கள் காக்கவேண்டும் எனக் கேட்க அவ்வாறே அவன் உடலுக்கு ஆயிரம் கவசங்கள் ஏற்பட்டன. அதனாலேயே அவனுடைய உண்மையான பெயர் நமக்கு இன்னும் தெரியவில்லை. சஹஸ்ர கவசன் என்ற பெயராலேயே தெரிந்து கொள்கின்றோம். ஆயிரம் கவசங்களைப் பெற்றது மட்டுமில்லாமல், தன்னை எவராலும் கொல்லவோ, வெல்லவோ முடியாது. கடுந்தவம் இயற்றிக் கொண்டு போர் புரிபவர் யாரோ அவர்கள் மட்டுமே கொல்ல முடியும், வெல்ல முடியும் என்றும் வரம் வாங்கிக் கொண்டு விட்டான். யாரானாலும் ஒன்று தவம் செய்யமுடியும், அல்லது போர் புரிய முடியும். இரண்டும் ஒருசேர யாரால் செய்ய இயலும்? அதுவும் ஒரே நபரிடத்தில்? இனி நம்மை வெல்ல இப்பூவுலகில் மட்டுமில்லை, ஈரேழு பதிநாலு லோகங்களிலும் யாரும் இல்லை என்று இறுமாப்புடன் இருந்தான் சஹஸ்ர கவசன்.

அனைவரும் காக்கும் கடவுள் ஆன மஹாவிஷ்ணு தான் இதற்கு உதவவேண்டும் என அவரை வேண்ட அவரும் தன்னை இருவேறு வடிவங்களாக மாற்றிக் கொண்டார். ஒரு வடிவம் நரன், மற்றொரு வடிவம் நாராயணன். நாராயணன் தவத்தில் ஆழ்ந்திருக்க, நர வடிவில் இருந்த விஷ்ணு சஹஸ்ர கவசனோடு சண்டை போடுவார். பின்னர் நரன் தவம் செய்ய ஆரம்பிக்கும்போது நாராயணன் சண்டை போடுவார். இப்படியே தவமும், போரும் மாறி மாறி நடந்து 999 கவசங்கள் எடுக்கப் பட்டுவிட்டன. கடைசியாய் ஒரு கவசமும், காது குண்டலங்களும் இருந்தன. அப்போது நரன் போருக்கு வர, சஹஸ்ர கவசன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி சூரியனிடம் தஞ்சம் அடைந்தான். இவன் ஒரு அரக்கன், வாங்கிய வரங்களை முறை தவறிப் போர் செய்யப் பயன்படுத்துகிறான் என்பதை அறியாத சூரியனும் அவனைக் காத்ததோடு அல்லாமல், தக்க சமயத்தில் பூவுலகில் பிறக்க வைப்பதாகவும் உறுதி அளித்தார்.அவனைப் பாதுகாத்து வந்தார். விஷயம் தெரிந்த மஹாவிஷ்ணு இவனுக்கு மரணம் தன்னாலோ அல்லது தன்னில் ஒரு பாதியான நரனாலோ தான் ஏற்படும் என்று சொல்லி விட்டார். அவன் உடலைத் துளைத்து எடுத்தார். அப்போது அவனின் சக்தியைத் தன்னுள் பாதுகாத்து வைத்துக் கொண்ட சூரியன் குந்தி துர்வாசரின் வரத்தைப் பற்றிப் பரிசோதிக்கும்போது சஹஸ்ர கவசனின் சக்தியோடு தன் சக்தியையும் சேர்த்து ஒரு குழந்தையாக குந்திக்கு அளித்தான். சஹஸ்ர கவசனின் மிச்சம் இருந்த ஒரு கவசத்தோடும், குண்டலங்களோடும் குழந்தையாய்ப் பிறந்தவனே கர்ணன் ஆவான். நரன் அர்ஜுனன் ஆகவும், நாராயணன் கண்ணனாகவும் பிறந்தனர். இவர்கள் இருவருமே கர்ணனின் மரணத்திற்கும் காரணமாக ஆயினர். இதுவே கர்ணன் கவச, குண்டலங்களோடு சூரியனின் மகனாய்ப் பிறந்ததின் கதை ஆகும்.

Tuesday, January 26, 2010

இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்......

மறுநாள் வியாழனன்று காலை கும்பகோணத்திற்கு அருகே ஒப்பிலியப்பன் கோயிலில் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டும். முதல்நாளே ராமசாமி கோயிலில் இருந்து வந்ததுமே மாயவரத்திற்கு அபி அப்பாவுக்குத் தொலைபேசி, மறுநாள் ஒப்பிலியப்பன் கோயிலில் இருந்து மாயவரம் வருகிறோம் என்பதை உறுதி செய்தேன். நட்ராஜ் பிறந்ததில் இருந்து அபி அப்பா கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். நாங்களும் இரண்டு மாசத்துக்கு ஒருதரம் மாயவரம் வழியாப் போயிட்டிருக்கோம். இம்முறை எட்டிப் பார்த்துவிடுவது என முடிவு செய்தாச்சு. வியாழனன்று காலை ஒப்பிலியப்பன் கோயிலில் திருமண மண்டபத்திற்குச் சென்றோம். திருமணப்பத்திரிகையை அவர் எடுத்து வச்சுப்பார்னு நான் அது பத்திக் கேட்டுக்கவே இல்லை. எந்தச் சத்திரம்னு தெரியலை. நம்ம ரங்க்ஸ் ரொம்பவே ஜாலியா கோயிலைச் சேர்ந்த மண்டபம்னு ஆட்டோக்காரர்ட்டே சொல்லிட்டார். அவரும் அழகாய்க் கோயிலைச் சேர்ந்த மண்டபத்தின் வாயிலில் கொண்டு நிறுத்திட்டார். என்னை முன்னால் போகச் சொல்லிட்டு ஆட்டோவுக்கு செட்டில் பண்ணிட்டு வரேன்னு சொன்னாரா, நானும் உள்ளே போனால், வரவேற்பில் ஆட்களே புதுசா இருந்தாங்க. ஹிஹிஹி.. கல்யாணம் செய்துக்கும் பையரை மூணு வயசிலே இருந்து தெரியும். அவங்க குடும்பமே பழக்கம். இங்கே பார்த்தால் வேறே யாரோ இல்லை இருக்காங்க. பெண் வீட்டுக்காரங்களானால் அதுவும் இல்லைனு புரிஞ்சது. ஆனாலும் அவங்க வரவேற்று(நாங்க பெண்ணுக்குச் சொந்தம்னு நினைச்சிருப்பாங்க போல! :D) உடனே போய் டிபன் சாப்பிடுங்கனு உபசாரம் வேறே பண்ணினாங்க. போயிருப்பேன். ஆனால் நம்ம மண்டைக்குள்ளே தான் குடையுமே! குடைச்சல் தாங்காமல், கல்யாண மாப்பிள்ளை பெயரைச் சொல்லி அவர் கல்யாணம்தானேனு கேட்டால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., பையர் அவர் இல்லை. அந்தப் பையர் வீட்டு ஆளுங்க எல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவுங்க போல. கல்யாணப்பையர் பெயரை நான் சொன்னதை வைச்சு அந்தப் பெயர் உள்ள பையர் கல்யாணம் நடக்கும் சத்திரத்துக்கு இப்படிப் போங்கனு வழியும் சொல்லி அனுப்பி வச்சாங்க.தேங்காய், பழம், வெத்திலை, பாக்குப் பை மட்டும் கொடுக்கலை. கொஞ்ச நேரம் இருந்தா கொடுத்திருப்பாங்க போல!

ரங்கனார் ஆட்டோவிலிருந்து இறங்கறதுக்குள்ளே ஓடிப் போய் ஆட்டோவிலே உட்கார்ந்து ஓட்டுநரிடம் சத்திரத்தின் பெயரைச் சொல்லி அங்கே போங்கனு சொன்னேன். அப்ப்பபாடா! வாசல்லேயே கல்யாணப் பையரின் அப்பாவான எங்க சிநேகிதர் நின்னுட்டு இருந்தார். நிம்மதினா என்னனு அப்போப் புரிஞ்சது. நல்லவேளையா மொய் மாறிப் போகறதுக்கு இருந்தது, உங்க பையரோட அதிர்ஷ்டம் இங்கே வந்துட்டோம்னு அவர் கிட்டே சொல்லிட்டு, டிபன் சாப்பிடப் போனா, அவரோ, “அங்கே நுழைஞ்சுட்டு டிபன் என்னனு பார்த்துட்டுச் சாப்பிட்டு வந்திருக்கக் கூடாதோ?”ங்கறார். என்னத்தைச் சொல்ல??? டிபன் முடிஞ்சு மாடிக்குப் போய் பையரின் அம்மாவைப் பார்த்துப் பேசிட்டுக் கீழே வந்து கல்யாணம் பார்க்க உட்கார்ந்தால் பெண் வீட்டுக்காரர்களில் சிலர் எங்களையே முறைச்சுப் பார்த்துட்டு இருந்தாங்க. சரினு நாங்களும் முறைச்சோம். அதுக்குள்ளே காசியாத்திரை போயிட்டு, மாலை மாத்தி, ஊஞ்சல் முடிச்சு, பெண்ணும் பையனும் மணவறைக்கு வந்தாங்க. முறைப்பு தொடர்ந்தது.



யாரு இவங்க??? எங்க சந்தேகம் தீரலை. கல்யாணம் ஆரம்பிச்சது. தாலி கட்டும்போது வழக்கம்போல கை குலுக்க வேண்டாம் என்ற அன்பான வேண்டுகோள், (இப்போ எல்லாக் கல்யாணங்களிலேயும் இதைச் சொல்லவேண்டிய கட்டாயமாயிடுச்சு! ) சப்தபதி முடிஞ்சதும், சிறிது நேரம் ஓய்வு கொடுத்து புரோகிதர்கள் இப்போதைய வழக்கப்படி பையரையும்,, பெண்ணையும் பெரியவங்களை நமஸ்கரிக்க அனுப்பினாங்க. அப்போ நாங்க அட்சதை போடும்போது பெண்ணோடு வந்த பெண்களில் ஒருத்தி, நம்ம ரங்க்ஸ் கிட்டே எங்க ஜாதகத்தைக் கேட்க அவரும் விலாவாரியாகச் சொல்ல! அட??? இவங்க ஜாம்நகரிலே நம்மளோட இருந்தவங்களா? இப்போவும் அங்கேதான் இருக்காங்களாம், பெண்ணுக்கு மித்தாபூரில் வேலைங்கறதாலே அங்கே போயிருக்காங்களாம். மித்தாப்பூர்னதும் யாரோனு நினைச்சோமே. அதுக்குள்ளே பெண்ணின் அம்மாவுக்குத் தகவல் போக அவங்க வந்து, “நிச்சயதார்த்தம் போதே உங்களைப் பார்த்தேன், நினைச்சேன் நீங்கதானோனு. ஆனால் சந்தேகமா இருந்தது”னு சொல்ல இரு தரப்பிலும் சற்று நேரம் பதினைந்து வருஷத்திய மலரும் நினைவுகள் ஓடின.

அப்புறமா அங்கே சாப்பாடு முடிச்சு கும்பகோணம் வந்து மாயவரம் பேருந்தில் ஏறி அபி அப்பாவுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால் அவர் காலையே மிஸ் பண்ணி இருக்கார்னு அப்புறமாத் தெரிஞ்சது. ஒருவழியா மாயவரம் வந்து, அபி அப்பாவை மறுபடி கூப்பிட்டு, எப்படி வரணும்னு கேட்டு, ஆட்டோக்காரர் கிட்டே வழி சொல்லிப் போனால் அது பாட்டுக்குப் போகுது. நம்ம ரோடு மாதிரியே அங்கேயும் ரோடு போட்டிருக்காங்கப்பா. ஒருவேளை வலை உலகப் பதிவர்கள் குடியிருக்கும் வீடுகளில் இதுதான் அங்கீகரிக்கப் பட்ட சாலை அமைப்போனும் நினைச்சேனே. அபி அப்பா என் கிட்டே அவங்க வீடு ரொம்பக் கிட்ட பேருந்து நிலையத்திலே இருந்துனு சொன்னார். ஆனால் அது பாட்டுக்கு தூரக்கத் தான் இருக்கு. வீட்டுக்குப் போனோம். நட்ராஜைப் பார்த்தோம். ஆஹா, அவன் என்னை அழைத்த அழைப்பு இருக்கே! நட்ராஜுக்கு அபி அப்பா என்னை அறிமுகம் செய்து வைத்தார். என்ன வழக்கம்போல் பாட்டினு சொல்லித் தான். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆனால் நட்ராஜா அதெல்லாம் கேட்பான்? அவன் யாரு?? நாம பேரு வச்சு ஆளாச்சே? அதெல்லாம் காதிலேயே போட்டுக்கலை. அவன் பாட்டுக்கு ஆண்ட்டினு கூப்பிட்டுட்டான். (புதுகைத் தென்றல், என்னமோ என்னோட படத்தைப் பார்த்துட்டேன், அப்படி, இப்படினு பெருமை அடிச்சீங்க இல்லை??, பதிவர் மீட்டிங்கைப் பத்தி எழுதுங்கனு சொன்னீங்கல்ல?? இதான் விஷயமே! ஹிஹிஹி, ரொம்ப சந்தோஷமா, குளிர்ச்சியா இருக்கு, அம்பி நோட் திஸ் பாயிண்ட்! நட்ராஜே சொல்லிட்டான்! இனிமே என்னைப் பாட்டினு எழுதினீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே!(என்னங்க?? அதெல்லாம் கட்டெறும்பு போகலை காதுக்குள்ளே) இதனால் வலை உலகத்தினர் சகலருக்கும் தெரியப் படுத்துவது என்னவென்றால் நான் சின்னப் பொண்ணுதான் என்பதை நட்ராஜே உறுதி செய்துவிட்டான். எப்படிக் கூப்பிட்டாங்கறீங்க?? “அந்த ஆண்ட்டி எங்கே?” னு கேட்டான். ஆண்ட்டினு கூப்பிட்டானே! அபி அப்பா முகத்திலே டன் டன்னாக அசடு வழிய, வேறு வழியில்லாமல் முழிச்சார். கவனிக்காதது போல் காட்டிக் கொண்டார். உடம்பு அலுப்பு மட்டும் இல்லைனா டான்ஸே ஆடியிருப்பேன். அபி பள்ளிக்குப் போயிருந்தா. பேசிட்டு இருந்தோம். அபி அம்மா நாங்க போனதிலே இருந்து சமைச்சாங்க. பாவம். அவங்க சமைச்ச நேரத்திலே ஆயிரத்திலே ஒரு பங்கு நேரம் கூட நாங்க சாப்பிட எடுத்துக்கலை. வேண்டாம், நாங்க கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டாச்சுனு சொன்னாக் கேட்டாத்தானே! நினைச்சு, நினைச்சு ஏதேதோ பண்ணிட்டு இருந்தாங்க. ஆயில்யன், குசும்பன், சீமாச்சு, ராமலக்ஷ்மி, கண்மணி டீச்சர், கயல்விழி முத்துலக்ஷ்மி, வல்லி சிம்ஹன், துளசி கோபால்னு எல்லாரையும் பத்தி நினைவு கூர்ந்தோம்.விட்டுப் போனவங்க எல்லாம் உங்களையும் நினைச்சோம்பா. கோபி, முக்கியமா உங்களை! வீட்டையும் சுத்திப் பார்த்தோம். எங்களைப் போல அபி அப்பாவும் சுப்புக்குட்டிகளைச் செல்லமாக வைத்திருப்பது தெரிய வந்தது. அவை வந்து போகும் வழியையும் காட்டினார். அபி அப்பா எங்களை அழைத்துச் செல்லவேண்டிய இடங்கள்னு பெரிய ப்ளானெல்லாம் வச்சிருந்தார் எங்களை அழைத்துச் செல்லவேண்டிய கோயில்கள்னு ஒரு லிஸ்டே கொடுத்தார். ஆனால் எங்கள் உடல்நிலையும் இடம் கொடுக்கலை, நேரமும் பற்றாக்குறை, மேலும் அவர் சொன்ன கோயில்கள் அனைத்தும் நாங்க இரண்டு, மூன்று முறை போய்வந்தவையே. அலையவேண்டாம் மறுநாள் பெருமாள் கோயிலில் நிறைய வேலை இருக்குனு சொல்லிட்டோம். பேச்சு வாக்கில் அவரோட நெருங்கிய சிநேகிதர் குரங்கு ராதா என் மாமியாரோட சொந்தம்னு புரிஞ்சது. அபி பள்ளியிலிருந்து வந்ததும் அங்கே இருந்து மாயூரநாதர் கோயிலுக்குப் போனோம். நட்ராஜ் கொஞ்சம் கூடக் கவலையே இல்லாமல் எங்களோட தனியா ஆட்டோவிலே வந்துட்டான். அவங்க அப்பாவையோ, அம்மாவையோ தேடவே இல்லை. ரொம்பச் சமர்த்தாக இருந்தான். நாங்க முன்னாலே போய் கோயில் மண்டபத்தில் நின்னுட்டு இருந்தோம். உள்ளே திரை போட்டிருந்தது. சாயரட்சை வழிபாட்டிற்காக. அபி அப்பா வந்ததும் உள்ளே போய் ஸ்வாமி தரிசனம் செய்துட்டு அங்கே இருந்தே பேருந்து நிலையம் வந்து கும்பகோணம் வந்து, மறுநாள் குலதெய்வம் கோயிலில் செய்யவேண்டிய அபிஷேஹத்திற்கான பொருட்கள், மலர்மாலைகள், பெருமாள் கோயிலின் பாலாலயம் எடுக்க வேண்டியதற்காக பெருமாளுக்குத் துளசி மாலைகள் என வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினோம். மறுநாள் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் எங்க ஊரான பரவாக்கரைக்குச் சென்றோம். மாயூரநாதர் கோயில் பற்றிய கட்டுரை ஆன்மீகப் பயணம் பக்கத்திலே வரும்.

Monday, January 25, 2010

ரயிலோ, பேருந்தோ, பயணம்னாலே பயமா இருக்கு!

எப்போவுமே முதல்வகுப்பு அல்லது ஏ.சி. இரண்டாம் வகுப்பிலேயே பிரயாணம் செய்வதாலும், பேருந்துகளிலும் ஏ.சி.யிலேயே போவதாலும்/அல்லது வண்டி ஏற்பாடு செய்து கொண்டு போவதாலும் நமக்குத் தான் இப்படி எல்லாம் தெரிகிறதோ என்று நினைக்கவும் இடம் இல்லை. ஏனெனில் அடிக்கடி குலதெய்வம் கோயிலுக்குப் போவது என்று முடிவானபின்னால் திடீர் திடீர்னு கிளம்புவதால் எந்த வகுப்பில் முன்பதிவு கிடைத்தாலும் போயிட்டுத் தான் இருந்தோம். மேலும் அடிக்கடி மாற்றல் வரும் கணவரின் அலுவல் வேலையில் மாற்றலாய்ப் போகும் சமயங்களில் பலமுறைகள் தொடர்ந்து செல்லவேண்டிய ரயில்களைப் பிடிக்கமுடியாமல்,முதல் வகுப்புக்கோ அல்லது ஏசிக்கோ முன்பதிவுப் பயணச் சீட்டு இருந்தும், மாற்று வண்டியில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஒண்டிக்கொண்டு சென்ற அநுபவங்களும் நிறைய. ஆகவே இது இப்போது தோன்றி இருக்கும் ஒரு மோசமான கலாசாரம் என்பதில் சந்தேகமே இல்லை. இதுக்கு முடிவோ, விடிவோ வரும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஏனெனில் முன்பதிவு செய்துட்டுப் போகும் நம்மைவிட பதிவு செய்யாமலே போகிறவர்களுக்கே அங்கே இருந்த மக்கள் பெரும்பாலோர் மறைமுகமாக உதவினார்கள், யாருமே அவர்களை ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை. இந்த அலட்சிய மநோபாவம் இருக்கும் மக்கள் எப்படித் திருந்துவார்கள்.??? எப்படியோ திருச்சி வரை போய்ச் சேர்ந்தோம். அங்கே திரும்ப முன்பதிவு செய்யலாம்னு நினைச்சா மாயவரம் போகும் வண்டி தயார் நிலையில் நின்னுட்டு இருந்தது. சரினு கிளம்பி அந்த வண்டியில் ஏறிடலாம்னு நினைச்சா, எங்க வண்டியிலே இருந்து நாங்க இறங்கி அது நிற்கும் நடைமேடைக்குப்போறதுக்குள்ளே வண்டி கிளம்பிவிட்டது.

முன்பதிவும் கிடைக்கவில்லை. ஆகையால் கும்பகோணம் செல்லும் பேருந்தைப் பிடிச்சோம். தேசீய நெடுஞ்சாலையான இந்தச் சாலை எனக்குத் தெரிஞ்சு பத்தாண்டுகளாய்,சீரமைப்பு நடந்தும் முடிவடையாமல் அப்படியே இருக்கிறது. விரிவாக்கம் முடிந்து சாலையை உடைத்து சமன் செய்து, கற்களும், ஜல்லிகளும், கிராவலும் அடித்த நிலையிலேயே இந்தச் சாலையைத் தொடர்ந்து சில ஆண்டுகளாய்ப் பார்க்கிறேன். இன்னும் சாலைப் பணி முடிந்தபாடில்லை. எப்போது முடியும் என்று நிச்சயமாயும் யாராலும் சொல்லமுடியவில்லை. பேருந்து சில சமயம் அப்படியே ஒருபக்கமாய்ச் சாயும்போது அடி வயித்தைக் கலக்கும். சாலை போடுவதில் நம் நாட்டினருக்கு என்ன சுறுசுறுப்பு என்று தோன்றியதோடல்லாமல், வேந்தரை இந்தச் சாலையில் பயணிக்கச் சொல்லவேண்டும் என்ற விபரீத ஆசையும் தோன்றியது. இல்லாட்டி, கும்பகோணம்-சென்னை பேருந்துப் பாதையில் பயணிக்கச் செய்துவிட்டு, சேத்தியாத் தோப்பில் அணைக்கரைப்பாலத்துக்கருகே இறங்கி நடக்க வைக்கிறாங்களே? அது மாதிரி ஒருமுறையாவது நடந்து வரவேண்டும் வேந்தர். மூட்டை, முடிச்சைத் தூக்கிண்டு பயணிகள் நடப்பதைப் பார்த்தாலே கஷ்டமாய் இருக்கும். ஆனாலும் அந்தப் பாலத்துக்கும் எங்க தெரு மாதிரியான ஜாதகம் போல. இன்னும் விடிவு வரவில்லை. அந்தப் பாலத்திலும் வேந்தர் ஒருமுறையாவது பெட்டி, படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு இறங்கி நடந்து பாலத்துக்கு இந்தண்டை வரவேண்டும் என்ற ஆசையும் தோன்றியது. தமிழ்நாட்டைப் போல முன்னேறிய மாநிலம் இந்தியாவிலேயே இல்லை என்று சொல்றவங்க எல்லாருமே வந்து ஒருமுறையாவது இந்த அவதியைப் படவேண்டும். நல்லவேளையா அந்தப் பக்கமாய்ப் போக நேர்ந்தப்போ எல்லாம் காரிலேயே பயணித்ததால் கஷ்டப்படவில்லை. ஆனாலும் வரிசையாய்க் கார்கள் நின்றிருப்பதைப் பார்த்தால் அந்த இடுக்கான பாலத்தில் எப்படிக் கடக்கப் போகிறது என்று திக் திக்கென்றிருக்கும். பாலம் உடைந்திருக்கும் இடத்தினருகே வந்ததும் சொல்லி வைச்சாப்போல் இரண்டு பக்கமும் வண்டிகள் சற்று நேரம் நின்றுவிடும். கனம் தாங்காமல் கீழே விழுந்துவிடப் போகிறோம் எனக் கலவரமாய் இருக்கும். அந்தச் சில நிமிடங்கள்! வண்டி அந்த இடத்தைக் கடந்து பாலத்துக்கு அந்தப் பக்கம் போனதும் தான் அப்பாடா! நிம்மதியாய் மூச்சு வரும்.

ஒருமாதிரியாத் திருச்சியிலே இருந்து கும்பகோணத்துக்கு மூன்று மணி நேரம் பயணம் செய்து வெகு சீக்கிரமாய் :P கும்பகோணத்தை அடைந்தோம். அங்கே அறை ஏற்கெனவே முன்பதிவு செய்து வைத்திருந்ததால் பிரச்னை இல்லை. அறைக்குப் போய் சாமான்களை வைத்துவிட்டு, சுத்தம் செய்துகொண்டு கும்பகோணம் ராமசாமி கோயிலுக்குப் போனோம். ராமசாமி கோயில் பற்றிய விபரங்களை ஆன்மீகப் பயணம் பக்கத்தில் காணலாம். இங்கே பிரயாண அனுபவங்கள் மட்டுமே.

Sunday, January 24, 2010

ரயில் பயணமா??? வேண்டவே வேண்டாம்!

இம்முறை குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும்போதும் சரி, சென்று அங்கே இருந்த நாலு நாட்களிலும் சரி பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தது. கிளம்பற அன்னிக்கே கொஞ்சம் மனம் யோசனைதான் செய்தது. ஏதோ ஒரு இனம்புரியாத கவலை. என்னதான் தை மாசம் கிளம்பவேண்டும் என்ற திட்டம் முன் கூட்டியே போட்டாலும், மூணு மாசம் முன்னாலேயே பயணச்சீட்டு எடுக்க முடியவில்லை. திடீர்னு எடுத்துட்டுத் தான் போக முடியுது. முன்பெல்லாம் ஒரு மாசம் முன்னாலேயே பயணச்சீட்டு தாராளமாக் கிடைச்சு வந்தது. இப்போ தத்காலில் கூட முன் பதிவே கிடைக்கிறதில்லை. அதுவும் கும்பகோணம் போக ரயில் வசதியும் இப்போ இல்லை. ராத்திரி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்ப்ரஸ் ஒண்ணுதான். அதுக்கு சென்னை கல்யாண மண்டபங்களைப் பதிவு செய்யறாப்போல் எல்லாரும் ஒரு வருஷம், இரண்டு வருஷம் முன்னாடியே பண்ணிடுவாங்க போல. நாங்க முன்பதிவுக்குப் பார்த்தப்போ இடமே இல்லை. திருச்சி போய் அங்கிருந்து போகலாம்னு முடிவு பண்ணினா பல்லவன் பல்லை இளிக்குது, மதுரை செல்லும் வைகையோ மாயமாய் மறைஞ்சு போச்சு! வேறே வண்டிகள் கிளம்பும் நேரம் செளகரியமாய் இல்லை. குருவாயூர் எக்ஸ்ப்ரஸில் சென்றமுறை போனப்போ குளிரூட்டப் பட்ட பெட்டியில் முன்பதிவு செய்யப் பட்ட பயணச்சீட்டு அமர்ந்து செல்லும் வசதியில் கிடைச்சது. இப்போ அந்த வசதியையே எடுத்துட்டாங்களாம். குளிரூட்டப் பட்ட பெட்டிகளில் எல்லாம் படுக்கை வசதிதான். அதிலே திருச்சி வரை அமர்ந்து செல்லும் வசதியில் கிடையாது. சரினு சேர் கார் என அழைக்கப் படும் பெட்டியில் கிடைச்ச வசதியில் சீட்டு எடுத்தாச்சு. வீட்டை விட்டுக் கிளம்பும்போதே சில பிரச்னைகள். என்றாலும் மனசைத் தேத்திக்கொண்டு கிளம்பினோம்.

அங்கே போய் எங்க இடத்தைக் கண்டுபிடிச்சு உட்கார்ந்தும் ஆச்சு. அப்புறமாப் பார்த்தா கூட்டமோ கூட்டம் திபு,திபுனு. எங்கே இருந்து வந்தாங்க?? மூணு பேர் உட்காருமிடத்தில் நெருக்கி அடித்துக் கொண்டு, 4,5 பேரா?? இது என்ன முன்பதிவு செய்யப் பட்ட பெட்டியா? இல்லைனா எல்லாரும் ஏறும் பொதுப் பெட்டியானு திகைச்சுப் போயிட்டோம். அதிலே எல்லாரும் எங்க கிட்டே சண்டை வேறே. நாங்க இரண்டு பேரும் எங்களுக்கு அனுமதிக்கப் பட்ட இடத்திலே உட்கார்ந்துட்டு இருந்தும், அவங்களுக்கும் இடம் விடணும், விட்டுட்டு உட்காரணும், நீங்க என்ன ரயிலையே விலைக்கா வாங்கி இருக்கீங்க?? இந்த சீட் என்ன உங்களுக்குச் சொந்தமானதா?? யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் உட்காரலாம். அப்படினு ஒரே சத்தம், சண்டை. கூச்சல். நாராசமா இருந்தது. திருச்சி வரைக்கும் இந்த இடத்தை 35ரூ கொடுத்து நாங்க விலைக்குத் தான் வாங்கி இருக்கோம்னு சொல்லலாம்னு வாயெடுத்தால், நம்ம ம.பா. என்னிடம் கடுமையான ஆக்ஷேபணை பண்ணிட்டு, சீட்டிலிருந்து எழுந்துட்டு, நாங்க நின்னுட்டு வரோம், நீங்க உட்காருங்கனு சொல்லி வெள்ளைக்கொடி ஏத்திட்டார். என்னத்தைச் சொல்றது? அப்போ பார்த்து டிக்கெட் பரிசோதகர் வந்தாரோ, அவங்க கப் சிப்னு அடங்கிப் போனாங்களோ! ஆனாலும் அதிலும் ஒரு அநியாயம், கொடுமை என்னவென்றால், எங்களைப் போல் முன்பதிவு செய்துட்டு அவங்க அவங்களுக்குனு ஒதுக்கப்பட்ட இடத்திலே அமர்ந்திருக்கிறவங்க பயணச் சீட்டை மாத்திரம் பரிசோதகர் வாங்கி அவரோட அட்டவணையோட சரிபார்த்துட்டுத் திருப்பிக் கொடுத்தார். ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டு கொள்ளவும் இல்லை, அவங்க கிட்டே இருந்து பயணச் சீட்டை வாங்கிக் கூடப் பார்க்கவில்லை.

பயணச்சீட்டு இல்லாமலேயே பிரயாணம் செய்யலாம்போல. இப்போ புதுசா மக்களுக்கு இந்த வசதியை அறிமுகம் செய்திருப்பாங்கபோல! முன்பெல்லாம் ஐம்பது காசுகள் கொடுத்து முன்பதிவு செய்த இடத்திலே ஒரு நாய்க்குட்டி வந்தால் கூட அப்போதைய பரிசோதகர்கள் விரட்டி அடிப்பாங்க. இப்போ??? நாடு முன்னேறி இருக்கே? எவ்வளவு முன்னேற்றம்??? முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் யார்வேண்டுமானாலும் ஏறி ஏற்கெனவே வசதியாய்ப் பிரயாணம் செய்யனு பதிவு செய்துட்டுப் போறவங்களோட சண்டை போட்டுட்டுப் போகலாம்னு ரயில்வே அனுமதி கொடுத்திருப்பது கடந்து நாலு ஆண்டுகளில் கொடுத்திருக்கும் மாபெரும் வசதி. உண்மையில் இந்த வசதியைப் பிரயாணிகளுக்கு எந்த நாட்டிலும் கொடுக்கவே மாட்டாங்க! நாளை கழிச்சு மறுநாள் குடியரசு தினம் கொண்டாடப் போறோமே? இந்த ஒரு காரணத்துக்காகவே நம் ரயில்வே துறைக்குப் பாராட்டு விழா எடுக்கலாம், பட்டங்கள், விருதுகள் கொடுக்கலாமே! பரிசோதகர் திரும்பினாரோ இல்லையோ, ஆக்கிரமிப்பாளர்கள் எங்க இடத்தில் வந்து உட்கார்ந்துட்டு வெற்றிப்புன்னகை செய்தாங்க. வேறே வழி?? கிடைச்ச இடத்தில் ஒண்டிக்கொண்டோம். இந்த மட்டும் எங்களை எழுந்து போங்கனு சொல்லலையே? ஒரே ஆச்சரியம் என்னன்னா அந்தப் பெட்டியில் இருந்த மற்ற முன்பதிவு செய்து பிரயாணம் செய்யும் பயணிகளில் யாருமே எங்களுக்கு உதவிக்கு வரவில்லை என்பதே! நம்ம இடத்துக்கு வரலையே? நமக்கு என்ன என்று பேசாமலே இருந்துவிட்டனர். ஒரு சிலர் எங்களோட சண்டை போட்டவங்களுக்கு மறைமுக ஆதரவும் தெரிவித்தனர். அவங்க சாமான்களை நாங்க கால் வைக்கும் இடத்தில் வைக்கலாமே என்ற ஆலோசனைகளையும் தாராளமாய் வழங்கினார்கள். நம்ம ம.பா. உடனே இதுக்குத் தான் பேருந்திலே போகலாம்னு சொன்னேன். அங்கே இந்த மாதிரி சீட்டுக்குப் போட்டி போடமாட்டாங்க பாருனு என்னைப் பார்த்துக் கிண்டலடிச்சார். சரிதானோனு தோணியது எனக்கும்.

ஏனெனில் குளிரூட்டப் பட்ட பெட்டிகளிலே பயணம் செய்யும்போதுமே இம்மாதிரியான ஆக்கிரமிப்புகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்து தான் வருகிறது. அதுவும் மும்பை, புது தில்லி போனால் கேட்கவே வேண்டாம். நீங்க காலைக்கீழேயே வைக்கமுடியாது. கீழே இரண்டு பேராவது படுத்திருப்பார்கள். அவங்க மேலே தான் வைக்கணும். பரிசோதகர் கிட்டே சொன்னால் காலம்பர எழுந்து போயிடுவாங்க, கொஞ்சம் பொறுத்துண்டுதான் போகணும்னு சொல்லிடுவார். ஆஹா, நம்ம ரயில்வே ஒரு காலத்தில் எவ்வளவு உன்னதமாய் இருந்தது? இந்தத் தலைமுறை அது பற்றி அறிந்திருக்குமா?? சந்தேகமே! இந்தப் பதிவை இங்கே போடுவதின் முக்கிய காரணமே அனைத்துத் தரப்பிற்கும் இந்தச் செய்தி போகவேண்டும் என்பதே. இந்திய அரசின் grievanaces தளத்தில் இது பற்றிச் சொல்லப் போகிறேன் என்றாலும் இதன் மூலம் ரயில்வே அதிகாரிகள் எவருக்கானும் தெரிந்தால் இன்னும் நல்லது என்பது என் நம்பிக்கை! ஏனெனில் இது முதல்முறை அனுபவம் இல்லை.

Monday, January 18, 2010

நற்செய்தி! நற்செய்தி! நற்செய்தி!!!!!!!

பெருசா ரசிகர்கள் யாரும் இல்லைனாலும் படிக்கிற ஒருத்தர், இரண்டுபேருக்கு நற்செய்தி, நற்செய்தி!, இனி பதிவு திங்கள் கிழமை தான் வரும், அது வரைக்கும் அப்பாடா!!!!!!!!!

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!

நட்பு இறுகியது!


“ஆஹா, இதெல்லாம் உண்மையா, கண்ணா?? நீ அப்படி இவை எல்லாம் செய்திருந்தாயானால்????? ம்ம்ம்ம்ம்ம்ம்.. உன்னைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறதடா கண்ணா, துஷ்டனும், கொடுங்கோலனுமான கம்சனை நீ அழித்தாற்போல் என்னாலும் என் தந்தை வழி சகோதரர்கள் ஆன துரியோதனையும், துஷ்சாசனையும் அடக்க முடிந்தால்?? அதுவும் அந்தத் தேரோட்டியின் மகன் இருக்கிறானே?? கர்ணன், அவர்களின் நண்பன், அவனையும் இதே மாதிரி என்னால் மட்டும் அடக்க முடிந்தால்???””” பீமனின் கண்கள் கற்பனையில் விரிந்தன. பின்னர் அவன் வழக்கமான அட்டகாசச் சிரிப்புச் சிரித்தான். இப்போது யுதிஷ்டிரனுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்றாலும், ஒரு அண்ணனுக்கே உரிய தன்மையோடு, பீமனைப் பார்த்து, “பீமா, இப்போது தான் வந்திருக்கிறோம், கிருஷ்ணனையும் முதல் முதல் இப்போத் தான் பார்க்கிறோம். அதற்குள்ளாக நம் குடும்ப விஷயங்களை எல்லாம் அவனிடம் பேசுவதா?” பாதி விளையாட்டாய்த் தெரிந்தாலும், அதில் மீதி உண்மையும் இருப்பதை அனைவரும் உணர்ந்தனர்.

ஆனால் பலராமன் விடவில்லை. “எப்படி ஆனாலும் சரி, நீங்க எல்லாம் என்ன நினைச்சாலும் சரி, உன்னுடைய அந்தப் பொல்லாத சகோதரர்களின் செயல்களைப் பற்றியும், அவர்களைப் பற்றியும் நான் அறிய விரும்புகிறேன். அது சரி, அவங்களை முடிக்கணும்னு சொன்னியே, அது முடிவாயிடுச்சா? சொல்லு, நானும் சேர்ந்துக்கறேன்.” பலராமன் சொன்ன தொனியே அவன் கேலி செய்வதைக் குறித்தது. ஆனாலும் கிருஷ்ணனின் உள் மனதில் இதில் ஏதோ விஷயம் பெரியதாக அடங்கி இருக்கிறது போலும். ஹஸ்தினாபுரத்தில் நடந்த மனதுக்கு ஒவ்வாத விஷயங்களைப் பற்றி இவர்களிடம் இங்கே பேசுவதும் அதைப்பற்றிக் கேட்பதும் உசிதம் அல்ல எனத் தோன்றியது. உடனேயே பேச்சை மாற்றினான் கண்ணன். “ஹா, அதெல்லாம் இருக்கட்டுமப்பா! நான் இன்னும் ஒண்ணுமே படிக்கலை, நீங்க எல்லாரும் குரு துரோணாசாரியாரின் சிஷ்யர்களாமே? என்ன எல்லாம் படிச்சீங்க? யாருக்கு எந்த ஆயுதம் நல்லாக் கையாள முடியும்? உங்க குரு அவரே நேரடியாச் சொல்லித் தருவாரா? இல்லைனா அவரோட முக்கிய சீடர்களில் எவரானுமா? நீங்க எல்லாம் நல்லாப் பயிற்சி எடுத்திருப்பீங்க, எங்களைப் பாருங்க, நாங்க இரண்டுபேரும் இன்னமும் மாட்டிடையர்களாகவே இருந்தோம், இருக்கோம் இன்னமும். நீங்க எல்லாம் உங்க குருகுலத்தை முடிக்கப் போறீங்க இல்லையா?? ஹாஹ்ஹா, வேடிக்கையா இல்லை, நாங்க இப்போத்தான் போகவே போறோம்.”

“அதனால் என்ன கண்ணா? எங்கள் வாழ்நாளில் எங்களால் சாதிக்க முடியாத பல விஷயங்களை நீ சாதித்திருக்கிறாயே? பலராமனும் அதற்கு உதவி புரிந்திருக்கிறானே? மதுராவை ஒரு கொடுங்கோலனின் ஆட்சியில் இருந்து மீட்டெடுத்திருக்கிறாயே? “ அர்ஜுனன் கண்ணனைத் தேற்றுவது போல் சொன்னாலும் உண்மையில் அவன் உள் மனதில் கண்ணனின் இந்த வீர, தீர, பராக்கிரமச் செயலால் பிரமிப்பு ஏற்பட்டிருந்தது. கண்ணன் மேல் தனக்கு உள்ள அன்பு முழுதும் தன் சொற்களின் மூலம் வெளிப்படுமாறு செய்யும் கலையும் இயல்பாகவே அவனுக்குக் கை வந்திருந்தது. அவன் கண்ணன் மேல் மிகுந்த பாசமும், அன்பும் வைத்திருப்பதை அனைவரும் உணர்ந்தனர்.

“ஆமாம், ஆமாம், இதன் மூலம் நீ தர்மத்திற்குப் பேருதவி செய்துள்ளாய், உன்னால் அரச தர்மம் காக்கப் பட்டிருக்கிறது.” என்றான் யுதிஷ்டிரன்.

“ம்ம்ம்ம்??? அப்படியா? ஆனால் இதன்மூலம் சக்தியும், பலமும் பொருந்திய எதிரிகளும் ஏற்பட்டிருக்கிறார்களே?” கண்ணன் குரலில் கேலி வெளிப்படையாக இழையோடினாலும் உள்ளூர அதற்கு வருந்துவதும் புரிந்தது. “அவங்க யாருமே இன்னும் சரியாக உணரவும் இல்லை, இது நடந்தது நன்மைக்கு என.” என்று ஆழ்ந்த வருத்தத்தோடு சொன்னான் கண்ணன்.

“அப்படி யாரானும் உன்னைத் தாக்க நினைத்தால்???? நாங்க ஐந்து பேர் இருக்கிறோம் உன்னைக் காக்க. மறவாதே கண்ணா!” பீமன் அப்போதே யாரோ கண்ணனைத் தாக்க வந்துவிட்டாற்போல் முழக்கமிட்டான்.

“அது வேறேயா??? கிருஷ்ணனும், பலராமனும் நமக்கு உதவியா வரும்படி இருந்துடப் போகிறது. அப்போ என்ன செய்யறதாம்? “ அர்ஜுனன் பீமனுக்கு பதிலடி கொடுத்தான்.

ஆனால் கண்ணன் உடனடியாகக் கவனித்துவிட்டான். அர்ஜுனன் வெளிப்படையாக பீமனைக் கிண்டல் செய்தாலும் உள்ளுக்குள் விஷயம் மிகவும் கவலைக்கிடமாகவே இருப்பதை உணர்ந்தே சொல்கிறான் என்று கண்ணனுக்குப் புரிந்தது.
”என்ன?? அவ்வளவு மோசமா இருக்கிறதா ஹஸ்தினாபுரத்து நிலை?” கண்ணன் உடனே கேட்டான்.

“நாங்க எவ்வளவு துன்பத்தில் இருக்கோம்னு புரிஞ்சுக்கறது உனக்குக் கஷ்டம் கண்ணா!” தங்களுக்கு நேர்ந்திருக்கும் அவமதிப்பை மறைக்கும்படியாக அர்ஜுனன் பேசினாலும் துயரத்தை அவனால் ஒளிக்க முடியவில்லை. “ வெளிப்படையாக நாங்கள் ஐவரும் குரு வம்சத்தின் அதிகாரபூர்வ வாரிசுகளாக இருந்தாலும், இன்னமும் நாங்கள் துரியோதனாதியாருக்குக் கீழே அவர்களுக்குக் கீழ்ப்படிபவர்களாகவே இருக்க வேண்டி இருக்கிறது.”

‘சரி, சரி, இனிமேல் வரப்போகும் துன்பங்களுக்கோ, வந்து போய்விட்ட துன்பங்களுக்கோ மனதில் இடம் கொடுக்காமல், நாம் அனைவரும் சேர்ந்து இருப்பதைக் கொண்டாடிக் களிப்போமே!” பலராமன் வேண்டுகோள் விடுத்தான். இயல்பாகவே பலராமனுக்குத் துயரமான நிகழ்ச்சிகளையோ, அவற்றை நினைப்பதோ பிடிக்காது. “பீமா, நீ மல் யுத்தத்தில் தேர்ந்தவன் என்று சொன்னார்களே? எங்கே, எனக்குச் சில அபூர்வப் பிடிகளைச் சொல்லிக் கொடு, பார்ப்போம். எனக்கும் சில புதிய பிடிகள் தெரியும். அவை உனக்குத் தெரியாதெனில் சொல்லித் தருகிறேன்.”

“அவர்கள் போய்விட்டனர், நாம் அனைவரும் யமுனையில் நீச்சல் அடித்துக் குளிக்கச் செல்லுவோம். யமுனையில் எனக்குப் பழகின இடங்களை உங்களுக்குக் காட்டுகிறேன்.” கண்ணன் மற்ற நால்வரிடமும் சொன்னான்.

ஆனால் யுதிஷ்டிரனோ தான் தன் மாமனிடம் ஹஸ்தினாபுரத்து விஷயங்களைப் பற்றிப் பேசிக் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும், அது அவன் தாயான குந்தியின் கட்டளை என்றும் சொன்னான். மேலும் அவர்கள் ஹஸ்தினாபுரம் திரும்பும்போது அக்ரூரரை உடன் அழைத்துச் செல்லவேண்டும் என அவர்கள் தாய் விரும்புவதாயும் கூறிவிட்டுத் தன் மாமனைக் காண சகாதேவனுடன் சென்றான். இதைக் கண்ட நகுலன், தானும் அவர்களோடு செல்வதாயும், தங்கள் தாயான குந்திக்கு அந்தப்புரத்தில் எல்லா செளகரியங்களும் செய்து கொடுக்கப் பட்டுள்ளதா எனத் தான் கவனித்தால் தான் தனக்கு நிம்மதி என்றும் சொல்லிவிட்டு யுதிஷ்டிரனைத் தொடர்ந்தான். கிருஷ்ணனும், அர்ஜுனனும் தனித்து விடப்பட்டனர்.

கண்ணன் அர்ஜுனனைப் பார்த்து, “ வா, நாம் இருவரும் யமுனைக்குச் செல்வோம். நீ வில் வித்தையில் மிகவும் தேர்ந்தவனாமே? புதியதாய் வில் வித்தையில் என்ன பயிற்சி எடுத்துக் கொண்டாய்? எனக்கும் சொல்லிக் கொடு!” என்றான். அர்ஜுனன் அதற்கு, “நான் புதியதாய் இருட்டில் குறி பார்த்து அம்பைச் செலுத்தும் பயிற்சியை மேற்கொண்டுள்ளேன். அதில் ஓரளவு தேர்ந்து விட்டேன். குருவிற்குக்கூட ஆச்சரியம்தான். ஆச்சரியம் என்பதை விட அது அவருக்குக் கொஞ்சம் அசெளகரியமாக இருக்கிறதோ என நினைக்கிறேன்.”

“என்ன, என்ன, என்ன நடந்தது? ஏன் அப்படி?”

Saturday, January 16, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!


ஐந்து சகோதரர்களுடன், கண்ணனும், பலராமனும் சந்திப்பு!


மூன்று நாட்கள் கடந்துவிட்டன. உபநயனத்திற்குக் குறிக்கப் பட்ட நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது மதுரா நகரிலே திடீரென ஒரே கோலாகலம், ஆட்டம், பாட்டம், அரண்மனையின் அனைத்து மக்களுக்கும், சேடிப் பெண்களிடையிலேயும் ஒரே பரபரப்பு. அரண்மனையின் இளவரசிகளுக்குள்ளேயும் சளசளவென்ற பேச்சுக்கள். அனைவரும் பேசியது ஒன்றே. அது ஹஸ்தினாபுரத்தில் இருந்து சக்கரவர்த்தியான ஸ்வர்கீய பாண்டுவின் விதவை மனைவி குந்தி தன் ஐந்து புத்திரர்களுடன் கிருஷ்ண, பலராமர்களின் உபநயனத்தில் கலந்து கொள்ளவென வந்து கொண்டிருக்கிறாள் என்ற செய்தியே. அவளுடன் கூட வருவது விதுரர் என்பவராம். திருதராஷ்டிரனுக்கும், பாண்டுவிற்கும் கடைசி சகோதரராம். ஹஸ்தினாபுரத்தின் இப்போதைய அரசனும் பிறவிக்குருடனும் ஆன திருதராஷ்டிரனின் சபையின் முக்கிய மந்திரியாம். மிகவும் புத்திசாலியும், விவேகியும் ஆவாராம். சட்டதிட்டங்களை நன்கு அறிந்து வைத்திருந்ததோடு மன்னனைச் சரியான வழியிலும் நடத்துவதற்கு முயன்று வருகிறாராம்.

கண்ணனுக்கு ஹஸ்தினாபுரத்தைப் பற்றியும் குரு(KURU என்பதே சரியான உச்சரிப்பு) வம்சம் பற்றியும் மேலும் தகவல்கள் கூறினார்கள். தங்கள் யாதவ குலம் எப்படி பரதமன்னனின் ஒரு கிளையோ அது போல குரு வம்சமும் பரத மன்னனின் வம்சத்தின் ஒரு கிளைதான் என்பதையும் கூறினார்கள். ஜராசந்தனுக்குப் பின்னர் ஆர்ய வர்த்தத்தின் பலம்பொருந்திய அரசாட்சி அவர்கள் கையில் இருக்கிறதென்றும் கூறப்படது. திருதராஷ்டிரனுக்குக் கண் தெரியாது என்றாலும் அவனுக்கு உதவியாக பலமும், வீரமும் பொருந்திய ஞாநியான பீஷ்மர் என்பவர் துணை இருந்தார் என்றும், அந்த பீஷ்மர் கங்கையின் புத்திரர் என்றும், பரசுராமரால் பயிற்றுவிக்கப் பட்டவர் என்றும் சொல்லப் பட்டது. அனைவரும் அவரைப் பிதாமஹர் என்றே அழைக்கின்றனர் என்றும் கூறினார்கள். ஹஸ்தினாபுரத்தின் அனைத்து வீரர்களுக்கும் என உள்ள ஆயுதப் பயிற்சிக் கூடமும், வேத, சாஸ்திரப் பயிற்சிக் கூடமும் பரசுராமரின் மற்றொரு சீடரான துரோணாசாரியார் என்பவரால் நடத்தப் பட்டு வருவதாகவும், வில் வித்தையில் இந்த துரோணாசாரியார் மிகத் தேர்ந்தவர் என்றும் கூறினார்கள். இத்தனை சிறப்புகள் வாய்ந்த ஹஸ்தினாபுரத்து மன்னர்களாகட்டும், மற்றவர்களாகட்டும், அனைவரும் வேத வியாஸரின் வழிகாட்டலிலேயே சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆயிற்று, இவை அனைத்தையும் கண்ணன் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே அதோ, அரண்மனை வாயிலில் ஆரவாரம்!

ஆம்,, குந்தி உள்ளே வந்துவிட்டாள். நேரே வசுதேவரின் மாளிகைக்கே முதலில் வந்த குந்தி ஒருவரும் சொல்லாமலேயே கண்ணனை அடையாளம் கண்டுகொண்டாள். அவனைக் கட்டி அணைத்து, “பொல்லாதவனாய் இருக்கிறாய் என்று கேள்விப்பட்டேனே, வாசுதேவகிருஷ்ணா, உன்னைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது எனக்கு வந்து கொண்டிருக்கின்றன.” என்று சொன்னாள். அவள் அணைப்பில் ஒரு தாயின் மாசற்ற அன்பு தென்படுவதைக் கண்ணனால் உணர முடிந்தது. தன் மற்றொரு அத்தைக்கும் இவளுக்கும் எவ்வளவு வேறுபாடு?? கண்ணன் முகத்தில் புன்னகை அரும்பியது. அவன் கவனம் அவளுடைய ஐந்து புத்திரர்கள் பால் சென்றது. அதே நேரம் குந்தி வசுதேவரின் கால்களில் விழுந்து எழுந்தாள். தேவகியைக் கட்டி அணைத்த குந்தி சற்று நேரம் வாய்விட்டு அழுதாள். இரு பெண்களும் தங்கள் மண வாழ்க்கையில் பல்வேறு விதமான துன்பங்களைச் சந்திருப்பது அவர்களைப் பிணைக்கும் ஒரு கயிறாகவே விளங்கிற்றோ???

கண்ணன் குந்தியின் ஐந்து புத்திரர்களையும் பார்த்தான். மூத்தவன் யுதிஷ்டிரன், தன்னை விட மூன்று வயது பெரியவனாய் இருப்பானோ?? ஆம், அப்படித்தான் இருக்கும், ஆனாலும் அவன் முகத்தில் மிக, மிகப் பெரியவன் போல் ஒரு முதிர்ச்சி, ஓர் அமைதி, நிதானம், கம்பீரம். வயதுக்கு மீறிய அந்த முதிர்ச்சியைக் கண்டதுமே கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது கண்ணனுக்கு. அடுத்தவன் பீமன் தன் அண்ணனைவிட ஒரு பிடி கூட வளர்ந்திருப்பானோ? இருக்கலாம்?? ஆனால் அவனுடைய உடல் பருமனும், உடல்கட்டும் அதைச் சொல்லவிடவில்லை. ஆனால் அவன் முகம், எப்போதும் ஏதோ யாரையோ கேலி செய்வது போல் தோற்றமளிக்கும் முகம், கிண்டல் செய்யும் கண்கள், வெடிச்சிரிப்பாய்ச் சிரிக்கும் சுபாவம், அவன் மிகவும் ஹாஸ்ய உணர்வு உள்ளவன் என நிரூபித்துக் கொண்டிருந்தது. தன்னைவிடப் பெரியவனான அவனைக் கண்ணன் நமஸ்கரிக்கக் குனிந்த போது முதுகில் விழுந்தது, “பட்” என்ற ஓர் அடி. யுதிஷ்டிரனைப் போல் தலையைத் தொட்டு ஆசீர்வதிக்கவில்லை இவன். இந்த ஓர் அடியால் நான் உனக்கு நண்பனே எனக் காட்டிவிட்டான். கண்ணன் நிமிர்ந்து பார்த்து வெளிப்படையான அவன் போக்குப் புரிந்துவிட்டது எனக் காட்டும் விதமாய் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

அடுத்து மூன்றாமவன். என்னைப் போல் இருக்கிறானோ? இல்லை, இல்லை, என்னுடைய உடலைவிடச் சிறிய உடலாக, மெலிந்த உடலாக உள்ளது. தூக்கத்தில் கூட வில்லையும், அம்புகளையும் பிரிய மாட்டான் போலிருக்கிறதே? பெரிய வில்லாளியோ?? மிகவும் புத்திசாலி என்று கண்கள் காட்டிக் கொடுக்கிறது. உடல் அமைப்பு நல்ல வாட்டமாய், வடிவாய் இருக்கிறான். மேலும் மிகவும் ஒழுங்கையும், கட்டுப்பாடையும் கடைப்பிடிப்பவனாகவும், பெரியோருக்கு மிகவும் மரியாதை கொடுப்பவனாகவும் இருக்கிறான் போல. அட, இதென்ன?? நம்மையும் நமஸ்கரிக்கிறானே? ஆஹா, நாம் அவனை விடப் பெரியவனா?? சரிதான். கண்ணன் மனதில் என்னவோ ஒரு நிறைவு, இவன் அனைவரையும் விட நம்மை மிகவும் கவர்ந்துவிட்டானே? அவனைக் கீழே இருந்து எழுப்பிக் கண்ணன் அணைத்துக் கொண்டான். கடைசியில் அந்த இரட்டையர்கள், இன்னமும் குழந்தைத் தனம் போகவில்லை. பாவம், தாயை இழந்த குழந்தைகள் என்றாலும் குந்தி அத்தை அந்தத் துன்பம் தெரியாவண்ணம் தன் குழந்தைகள் போலவே வளர்த்துவருகிறாளாமே?? சிறிய குழந்தைகள், அவர்களும் அதைப் புரிந்து கொண்டு அனைவரையும் விழுந்து விழுந்து நமஸ்கரிக்கின்றனர். ஐவரும் ஒருவரை விட்டு மற்றொருவர் பிரிவதும் இல்லையே? எங்கே போனாலும் சேர்ந்தே போகிறார்களே??

பெரியோர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பேச்சுக்களோடு ஐக்கியமாகி அங்கிருந்து மெல்ல மெல்ல அகன்றனர். அதுக்காகவே காத்திருந்தது போல் பாண்டவர்களில் இரண்டாமவனான பீமன் கண்ணனைப் பார்த்து, கண் சிமிட்டிக் கொண்டு, “என்ன கண்ணா? உண்மையைச் சொல்லு, உன்னைப் பற்றிச் சொல்லுவது எல்லாம் உண்மையா, கதையா?? நீ நிஜமாவே கோபியரோடு ஆடுவாயா?? அப்புறம் இந்த சாகசங்கள் எல்லாம்?? நிஜமா நீயே செய்தவையா? என்னாலே நம்பமுடியலையே???” அட்டகாசமாய்ச் சிரித்த வண்ணம் கேட்டான் பீமன். இதே கேள்வியை வேறு எவரேனும் கேட்டிருந்தால் அவர்கள் கண்ணனைக் குறை கூறிக் கேலி செய்யக் கேட்டார்கள் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் பீமனின் உள்ளத்திலிருந்து வந்த இந்தக் கேள்வி அந்த இளைஞர்களிடையே சிரிப்பையே வரவழைத்தது. கண்ணனோ, “ நீ குறிப்பாய் எதைச் சொல்கிறாய், புரியவில்லை. ஒவ்வொன்றாய்க் கேளு. எதுனு சொல்லு.” கண்ணன் சிரிப்பை அடக்கமுடியாமலேயே பதில் சொன்னான். "நீங்கள் ஹஸ்தினாபுரத்துக்காரர்கள் இதைவிட அழகாய்க் கதை கண்டு பிடிப்பீர்களே??""

"ஓஓ கண்ணா, பேச்சை மாற்றாதே! நீ சிறு குழந்தையாய் இருக்கும்போதே பூதனை, பகாசுரன் (Bakasura), கேஷி, அரிஷ்டா ஆகியவர்களைக் கொன்றாயாமே?? மேலும் அந்தப் பயங்கரப் பாம்பான காலியனை அடக்கினாயே?? அப்புறமா நிஜமாவே கோவர்தன மலையைத் தூக்கிட்டியா?? உண்மையாய் என்ன நடந்ததுனு சொல்லுப்பா!" பீமனின் வேண்டுகோள்.

"அப்புறம் அந்த கோபஸ்திரீகள்?? அவங்களோடு நீ ராஸ் நடனம் ஆடினது? அதுவும் உண்மையா? ராதையாமே ஒரு கோபிகை? அவளைக் கல்யாணம் செய்து கொண்டது? அதுவும் உண்மையா??" இது அர்ஜுனன் கேட்டது. அவங்க நிஜமாவே தன்னைப் பற்றிக் கேள்விப் பட்டு வியந்து தன்னை மிகவும் உயர்வாய் நினைப்பது அவர்கள் கேள்விகள் கேட்கும் விதத்திலேயே புரிந்தது. இத்தனை நட்போடும், பாசத்தோடும், அன்புடனும் தன் அத்தை குழந்தைகள் தன்னோடு பழகுவார்கள் என்பதைக் கண்ணன் துளியும் எதிர்பார்க்கவில்லை. அவன் கண்களில் நீர் துளிர்த்தது. பீமனின் கழுத்தைச் சுற்றிக் கைகளைப் போட்டுக் கொண்டு அவனோடு நெருங்கிய வண்ணம், " நீ என்ன நினைக்கிறாய் பீமா?? நான் என்ன செய்திருப்பேன் என உனக்குத் தோன்றுகிறது?? அல்லது அவைகளை நானாகவே கண்டு பிடித்திருப்பேனா??" கண்ணனின் கண்களோடு முழு உடலும் சிரித்தது.

பலராமனுக்குப் பொறுக்க முடியவில்லை. வெடித்தான் அவன். கிட்டத்தட்ட உளறிக்கொட்டினான் என்றே சொல்லவேண்டும். "ஆமாம், கம்சனைக் கொன்றது, சாணுரனைக் கொன்றது, முஷ்திகனைக் கொன்றது எல்லாமும் எங்கள் கற்பனையில் உதித்தவையே! போய் மதுராவின் மக்களைக் கேளுங்களேன்! ஏன் எங்களைக் கேட்கிறீர்கள்?"

அதுவரையில் வாய்மூடிக் கொண்டிருந்த யுதிஷ்டிரன் அப்போது குறுக்கிட்டான். அவன் குரலிலேயே பணிவும், விநயமும், மன்னிப்புக் கேட்கும் தொனியும் தெரிந்தன. அவன் மிக மிகப் பணிவோடு, "சகோதரா, மன்னித்துவிடு, பீமனின் சார்பாய் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இவன் ஒரு அவசரக்குடுக்கை. இப்படித்தான் ஏதாவது கேட்டு வைப்பான். ஆனால் உங்கள் தலைவர்களின் ஒருவரான ஷங்கு என்பவர் எங்களை அழைக்க ஹஸ்தினாபுரம் வந்தபோது உங்கள் இருவரின் செயல்களையும் பற்றிக் கதை, கதையாகச் சொன்னார். அதனால் எங்களால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள், என்ன செய்ய முடியும் உங்களால் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் இருவரில் ஒருவர் என்ன நடந்தது என்பதை விளக்கமாய்ச் சொல்லுங்கள். நாங்கள் கேட்க ஆவலோடு இருக்கிறோம்." என்றான். பின்னர் கிருஷ்ணன் பக்கம் திரும்பி, மென்மையான குரலில் உறுதி தொனிக்க, "பீமனைத் தவறாய் எடுத்துக்கொள்ளாதே கிருஷ்ணா! அவன் பேசுவதே அப்படித்தான். மனதில் எதையும் வச்சுக்கத் தெரியாது அவனுக்கு! நீங்கள் இருவரும் செய்த சாகசங்களில் அவன் மதி மயங்கி அவற்றைப் பற்றியே அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தான். அனவரதமும் அதே நினைப்பும் அவனுக்கு. அவன் மனம் பூரா இவையே நிறைந்துள்ளன." என்றான்.

பீமன் தன் அண்ணனையே சற்றே கேலியுடனே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அதை அவனால் அடக்கமுடியவில்லை.

டிஸ்கி: ரொம்பக் கேட்டதில் கூகிளார் இந்தப் படம் தான் கொடுத்தார். திரெளபதியும் இருக்கிறதுக்கு மன்னிக்கவும். இனிமேல் தான் திரெளபதி சுயம்வரமே, அதுக்குள்ளே படத்திலே போடும்படி ஆயிடுச்சு! :( கோபி கேட்ட பாண்டவர்கள் பிறந்தது பற்றிய விஷயம் எழுதி வச்சேன். அந்த டாகுமெண்ட் கிடைக்கலை. மறுபடி எழுதிப் போடணும். கோபியும் இப்போ பிசி. அதனால் கொஞ்சம் நேரம் எடுத்துக்கறேன்.

Friday, January 15, 2010

ஆண்டாள் கல்யாணமே வைபோகமே!

நேற்றும், முந்தாநாளும் ஆண்டாள் கல்யாணம். எங்கே?? தொலைக்காட்சியில்! தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகள் எல்லாமே வடிவேலுவையும், விவேக்கையும் காட்டி மகிழ்ந்துகொண்டிருக்க, திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் தொலைக்காட்சியில் அமர்க்களமாய் ஆண்டாளுக்குக் கல்யாணம் செய்து மகிழ்ந்தார்கள். தினமும் மாலை ஆறேகால் மணிக்கு நாத நீராஜனம் என்ற பெயரில் ஒரு மணி நேரத்துக்கு மேல் கர்நாடக சங்கீத நிகழ்ச்சியோ, அல்லது நாட்டிய நாடகமோ போடுவார்கள். நாட்டிய நாடகம் எப்போவோதான் வரும். இம்முறை தநுர்மாச முடிவு என்பதால் ஆண்டாள் கல்யாணம் நாட்டிய நாடகம். தினமும் மாலையில் திருப்பாவையைச் சொல்லியும் கொடுத்திட்டு இருந்தாங்க. தெலுங்கு உச்சரிப்போடு கூடிய திருப்பாவையைக் கேட்கவும் இனிமையாகவே இருந்தது.

13-ம் தேதி போகியன்று மாலை மகதி ம்யூசிக் அகாடமியினரால் ஆண்டாள் கல்யாணம் நாட்டிய நாடகம் நடத்தப்பட்டது. அருமையான நாட்டியம். அதிலும் சின்ன ஆண்டாளாக வந்த குட்டிப் பொண்ணுக்கு மூணு வயசு இருக்குமா?? நாலு இருக்குமா தெரியலையே?? அள்ளிக்கொண்டு போச்சு மனசை! அது குதிச்ச குதியும், கண்ணன் விக்ரஹத்தைக் கொஞ்சின கொஞ்சலும், கொடுத்த முத்தங்களும், திரும்ப முத்தம் கொடுனு கேட்ட அழகும், பாதங்கள் தாளம் தப்பாமல் ஆடின அழகும், என் கண்ணே பட்டிருக்கும். முதல்லே தோணலை, படம் எடுக்கணும்னு, அப்புறம் நினைவு வந்து ஓடிப் போய் காமிராவை எடுத்துட்டு வந்தால் அதுக்குள்ளே குட்டிப் பொண்ணு பெரிய பொண்ணாயிடுச்சு. கொஞ்சம் ஏமாற்றம் தான். ஏன்னா இந்தத் தொலைக்காட்சியிலே மறு ஒளிபரப்பும் கிடையாது. அதனால் ஏமாற்றமாய் இருந்தது.

இந்த நிகழ்ச்சி கிருஷ்ணதேவராயரின் ஆமுக்த மால்யதா வை அடிப்படையாகக் கொண்டோ, அல்லது அதன் பாடல்களேவானும் நினைக்கிறேன். அருமையான பாடல்கள். நல்லாவே அர்த்தம் புரிஞ்சது. பெரியாழ்வாரைப் பாண்டிய மன்னன் சபையில் கூப்பிட்டுக் கெளரவிக்கும் நிகழ்ச்சியில் ஆரம்பிச்சது. அப்புறம் துளசிச்செடியில் குழந்தை ஆண்டாளைக் கண்டெடுத்ததுனு நல்லாவே எடுத்திருந்தாங்க. குழந்தை ஆண்டாள் தான் கண்ணிலேயே நிக்கிறா. பெரிய ஆண்டாளாக நடிச்ச பொண்ணும் சோடையில்லை. எவருமே சோடையில்லைதான். ஆண்டாள் கனவு காணும் காட்சியில் அந்த்ப் பொண்ணு (பதினைந்து வயசிருக்கும்னு நினைக்கிறேன்.) என்ன அருமையாக பாவங்கள், அபிந்யங்கள் காட்டி நடிச்சது. அப்புறம் பாவை நோன்பு பத்தியும் சொல்லிப் பாவை நோன்பும் இருந்து, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையைப் பெரியாழ்வார் தூக்கிப் போட்டது, வடபத்ரசாயி அதான் வேணும்னு அடம் பிடிச்சதுனு (கிருஷ்ணனா நடிச்ச பொண்ணு நல்லாவே நடிச்சது) அப்புறமா ஆண்டாளைக் கொண்டு வந்து ஸ்ரீரங்கத்திலே விடச் சொன்னது.

அதுக்கப்புறம் ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் திருமணம் நடந்ததுனு எல்லா நிகழ்வுகளும் அருமையாக் காட்டினாங்க. என்ன அழகா நாட்டியத்திலேயே பூத்தொடுத்தது?? அப்பா! ஆச்சரியமா இருந்தது. பெரியாழ்வாரா நடிச்ச பெரியவரும், (அவர்தான் இயக்குநரோ) நல்லாவே ஆடினார்.

நேத்திக்கு சத்யநாராயணாவின் நாட்டியநாடகம். இது கொஞ்சம் வேறே மாதிரியாய் இருந்தது. சிவன், பார்வதி, பிரம்மா, சரஸ்வதி எல்லாருமே வந்து ஆண்டாளின் கனவில் வந்தாப்போல் கல்யாணத்தை நடத்தி வைச்சாங்க. என்றாலும் போகியன்னிக்கு ரசிச்சாப்போல் நேத்திக்கு இல்லை. படமும் எடுக்கலை. எல்லாருமே பெரியவங்க வேறே. அதனாலோ என்னமோ????

படங்கள் எல்லாம் இணைச்சுட்டு, இணைப்புக் கொடுக்கிறேன். பாருங்க.



ஆண்டாள் கல்யாணம்

Wednesday, January 13, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்

எண்ண ஓட்டங்களில் கண்ணன்!

ருக்மிணியைப் பற்றிய எண்ணங்களிலிருந்து கண்ணன் தன்னை பலவந்தமாய் விடுவித்துக்கொண்டான். ம்ம்ம்ம்?? நாம் தான் உத்தவனுடனும், அண்ணன் பலராமனுடனும், குரு சாந்தீபனியின் குருகுலத்திற்குச் செல்லப் போகிறோமே?? இந்த அக்ரூரரும் அப்பா வசுதேவரும் எப்படியோ தநுர்யாகத்துக்கு வந்த விருந்தாளிகளை நம் உபநயனம் வரை இருந்து செல்லுமாறு சொல்லி நிறுத்தி விட்டனர். குரு சாந்தீபனியை விருந்தாவனம் வந்தப்போவே நமக்குப் பிடித்துவிட்டது. அங்கேயே சில ஆயுதப் பயிற்சிகளை குரு சொல்லிக் கொடுத்திருக்கார் என்றாலும், இழந்து போன நாட்களில் கற்க முடியாதவற்றைக் கற்கவேண்டும் என்பது தந்தை வசுதேவரின் விருப்பம். ம்ம்ம்ம்ம்??? தந்தை என்னை இன்னமும் சிறு குழந்தையாகவே நினைக்கிறாரே??? கொட்டும் மழையில் நந்தனின் கோகுலத்துக்குத் தூக்கி வந்த குழந்தை என்றே நினைத்துக் கொள்கிறார். சொன்னவற்றையே திரும்பத் திரும்பச் சொல்லி அறிவுறுத்துகிறாரே?? ம்ம்ம்ம்?? ஒருவேளை அரண்மனை வாழ்க்கைக்கு நாம் புதிது என்பதால் இருக்கும். அதனால் என்ன?? நாமும் பிறந்ததில் இருந்து அவரை விட்டுப் பிரிந்துவிட்டோமா?? அதான் இன்னமும் குழந்தையாகவே நடத்தி வருகிறார் போலும்! கண்ணனின் இதழ்களில் புன்னகை படர்ந்தது.

கம்சனின் இறுதிச்சடங்குகள் அனைத்துமே முழு அரச மரியாதைகளோடு நடந்து முடிந்தன. 12-ம் நாள் கடைசிச் சடங்கை அழுத வண்ணமே செய்து முடித்தான் உக்ரசேனன். ஆனாலும் இந்தப்பத்துப் பனிரண்டு நாட்களில் இதுவரையிலும் அறியாத, தெரியாத பல விஷயங்கள் கண்ணனுக்குத் தெரிய வந்தன. புரிய ஆரம்பித்தன. இந்த அரசபோகம் என்பது கண்ணுக்குத் தெரியாத மாயச் சுழலாகவும் இருக்கிறது. ஒரு சமயம் இதில் அகப்பட்டுக் கொண்டோமோனு வருத்தமாயும் இருக்கிறது. மற்றொரு சமயம் அரசபதவியை வேண்டாம்னு மறுத்தது சந்தோஷமாயும் இருக்கு. போகட்டும், இது வரை படிக்கமுடியவில்லை. கோகுலத்திலும், விருந்தாவனத்திலும் ஒரு மாதிரியாகப் போய்விட்டது. இதுவரை படிக்கமுடியாத அனைத்தையும் இப்போது கற்றுவிடவேண்டும். மதுரா நகரைக் காக்கவும், அரசாட்சி புரியவும் உக்ரசேனர் இருக்கிறாரே?? ஆனாலும் அவரால் எதுவும் முடியவில்லை. ஏற்கெனவே பலஹீனம், பல வருடங்கள் சிறைவாசத்தில் தளர்ந்த உடலும், மனமும். தந்தை வசுதேவரும், பெரியவர் அக்ரூரரும், மதுராவில் சகஜ நிலையை நிலைநாட்டப் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாவற்றிலும் முக்கியமாய் கிருஷ்ணனுக்குத் தன் வம்சாவளியைப் பற்றிய அறிவு இப்போது போதிக்கப் படுகிறது. மேலும் பல யாதவர்கள் கம்சனின் கொடுமை தாங்காமல் மதுராவை விட்டு ஓடியவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அனைவருக்கும் தங்கள் குலப் பெருமை அதிகமாகவே இருந்தது. பெருமைக்கும், திறமைக்கும், அரசாட்சி புரிவதில் நிகரற்றவனும் ஆன யயாதி மன்னனின் மகனான யதுவின் குலத் தோன்றல்கள் தாங்கள் என்பதில் அவர்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஆனாலும் குலப் பெருமையையும், குடிப்பெருமையையும் மட்டும் நினைவில் கொண்டு ஒதுங்கி இருக்காமல், மற்ற இனத்தவருடனும், மற்றக் குலத்தவருடனும் திருமண பந்தங்களும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆர்ய வர்த்தத்தைச்சேர்ந்த இளவரச, இளவரசிகள் மட்டுமல்லாமல், அதை விடுத்து கெளடதேசம், திராவிடம் போன்ற நாடுகளின் அரசகுமாரிகளையும், அரசகுமாரர்களையும் மணந்து கொண்டு தங்கள் வம்சத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்?? எவன் பெயரால் இந்தக் குலம் அழைக்கப் படுகின்றதோ அந்த யதுவின் ஒரு மனைவி நாகர் குலத்தின் இளவரசியாவாள். அவளுக்குப் பிறந்த ஐந்து பிள்ளைகளில் ஒருவனான மாதவனின் குலத்திலேயே இந்த அந்தகர்கள், விருஷ்ணிகள், ஷூரர்கள் எனப் பிரிந்திருக்கின்றனர். அப்பாடி, ஒருவழியாக யாதவகுல வம்சாவளியைப் பற்றிப் புரிந்து கொண்டாயிற்று. இப்படிக் கலந்து திருமணம் செய்து கொண்டாலும், யாதவ குலத்து ஆண்கள், தங்களவில் ஆரிய வர்த்தத்தின் வழிமுறைகளையும், தர்ம சாஸ்திரங்களையுமே கடைப்பிடித்தனர். அதில் அவர்கள் உறுதியையும் காட்டி வந்தார்கள். தர்மத்தை நிலை நாட்டி அதர்மத்தை வேரோடு களைவதிலும் உறுதியைக் காட்டி வந்தனர். இதில் தங்களை எவராலும் வெல்லமுடியாது என்ற எண்ணமும், பெருமையும் அவர்களுக்கு உண்டு. ம்ம்ம்ம் அதுவும் இப்போது கம்சன் இறந்ததும் மீண்டும் வேத கோஷங்களும், யாகங்களும், யக்ஞங்களும் நகரிலும், நாட்டில் நாலா பக்கமும் நடக்க ஆரம்பித்துவிட்டன. வேதியர்களும், தபஸ்விகளும், ரிஷி, முனிவர்களும் சற்றும் கலக்கமின்றித் தங்கள் கடமைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த யாதவர்களிலிருந்து பிரிந்த ஒரு கிளை போஜர்கள் என அழைக்கப் படுகிறது. இந்த போஜ நாட்டு அரசனான குந்திபோஜனுக்கே வசுதேவரின் தமக்கையான ப்ரீத்தா சுவீகார புத்திரியாகக் கொடுக்கப் பட்டாள். குந்திபோஜன் வளர்த்த காரணத்தால் அவளைக் குந்தி என அழைத்தனர். இவள் தான் அஸ்தினாபுரத்தைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டு வந்த பாண்டு அரசனுக்கு வாழ்க்கைப் பட்டு மூன்று குமாரர்களைப் பெற்றிருக்கிறாள். இவளின் இளையாள் ஆன மாத்ரிக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும், தன் கணவனான பாண்டுவின் மரணத்தில் கூடவே உடன்கட்டை ஏறிவிட்ட மாத்ரிக்குக் கொடுத்த வாக்குறுதியின் படி தன் குழந்தைகளாகவே வளர்த்துவருகிறாள். இந்தக் கதையைச் சில அத்தியாயங்களுக்குப் பின்னர் சற்றே விரிவாய்ப் பார்ப்போம். பாண்டுவிற்கு ஏற்பட்ட சாபம், அதன் விளைவுகள், குந்திக்கு துர்வாசர் கொடுத்த மந்திர ஜபம் என நீண்டதொரு விபரங்கள் அடங்கியவை. இந்த போஜ வம்சத்தில் வந்த இன்னொரு மன்னன் சேதி என்னும் நாட்டை ஆண்டு வந்தான். தாமகோஷன் என்னும் பெயருள்ள இந்த அரசனுக்கு குந்தி, வசுதேவர் ஆகியவர்களின் உடன்பிறந்த தங்கையான ஷ்ருதஷ்ரவா என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்திருந்தது. அவர்களுக்கு ஒரு பிள்ளை இருக்கிறான். அவன் பெயர் சிசுபாலன். இந்த சிசுபாலனை கண்ணனின் உபநயனத்திற்கு அழைத்திருந்தனர்.

தனது அத்தை மகனும், தன் சகோதரன் முறை ஆனவனும் ஆன சிசுபாலன் வரவுக்கு மிகவும் ஆவலுடன் காத்திருந்தான் கண்ணன். மேலும் இங்கே மதுராவில் அனைவரும் ஜராசந்தன், ஜராசந்தன் என்று அந்த மகத நாட்டுச் சக்கரவர்த்திக்குப் பயந்து கொண்டே இருக்கின்றனர். எந்த நேரம் வந்துவிடுவானோ எனப் பயம் அனைவருக்கும். மேலும் அவன் கம்சனின் மாமனார். தன்னிரு பெண்களையுமே கம்சனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தான். இப்போது இருவருமே கணவனை இழந்துவிட்டனர். இதை ஜராசந்தன் சும்மா விடுவானா?? கம்சன் அவனுக்கு மறு மகன் மட்டுமல்ல, உண்மையான விஸ்வாசம் மிகுந்த அடிமை மாதிரியும் இருந்தான். அவ்வளவு சுலபமாகவா மதுராபுரி மக்கள் ஜராசந்தனின் மறு மகன் மரணத்தை ஏற்றுக் கொண்டனர்?? ஜராசந்தனுக்கு ஒற்றர்கள் மூலம் செய்தி போயிற்று. அவன் மதுரா நகரையே அழித்துவிடுவதாய்க் கூறி இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். கிருஷ்ணனுக்கு நன்கு புரிந்துவிட்டது, கம்சனின் மரணத்தின் மூலம் அப்போது மாபெரும் சக்கரவர்த்தியாய் இருந்த ஒருவனின் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டுவிட்டோம் என்று. அது மட்டுமா?? அந்தச் சக்கரவர்த்தியின் பெருமைகளிலும், அவனுடைய வீரத்திற்கும் இது ஒரு மரண அடிபோலும் விழுந்திருக்கிறது. என்ன செய்வானோ???

ஜராசந்தனை இந்த வேளையில் சமாளிக்கும் வல்லமை கொண்டவன் தாமகோஷன் ஒருவனே. அனைத்து யாதவர்களும் ஒரு மனதாக இதை நினைத்தார்கள். என்ன தான் வசுதேவரின் சொந்தத் தங்கையை மணந்திருந்தாலும் தாமகோஷன் வலுவான கூட்டணி அமைத்திருந்தான் ஜராசந்தனுடன். ஆகவே அவன் சிசுபாலனை அழைத்து வருவதால் ஒரு வேளை, ஒருவேளை சிசுபாலனைத் தலைவனாக்கினால், ஜராசந்தன் அமைதியடையலாமோ?? மேலும் சிசுபாலன் குழந்தைப்பருவத்தில் இருந்தே தன் பாட்டன் வீடான மதுராவின் மாளிகைக்கு வந்து போய்க் கொண்டிருந்தான். இங்கே பெரியோர் அனைவருக்கும் அவன் மிகவும் பிடித்தமானவனும் கூட. ஜராசந்தனின் கொடுங்கோன்மையை அடக்க சிசுபாலனை விட வேறு யாரும் சிறந்தவரில்லை என யாதவத் தலைவர்கள் நினைப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

மேலும் இந்த விதர்ப்ப நாட்டு அரசன், பீஷ்மகன் அவனும் போஜ இனத்தைச் சார்ந்திருந்தாலும் ஜராசந்தனுடனேயே நட்பு கொண்டிருக்கிறான் என தந்தை வசுதேவர் சொல்கிறார். ஆகவே மதுராவை அப்படி ஒருவேளை தாக்க ஜராசந்தன் நினைத்தால் பீஷ்மகன் எந்த உதவியும் செய்யவும் மாட்டான் என்று தந்தை உறுதியாகச் சொல்கிறார். அந்த இளைய போஜன், பீஷ்மகனின் மகன் ருக்மி, மண்டை கர்வம் பிடித்தவனாய் இருப்பான் போல. மேலும் அவன் தன் தந்தையிடம் கூறி நமக்கு உதவி செய்ய விடமாட்டான். இயல்பாகவே கம்சனின் நண்பன் வேறே. என்னதான் குரு சாந்தீபனி கேட்டுக் கொண்டதால் நம் உபநயனத்துக்குத் தங்கினாலும், அவன் நமக்கு எந்த உதவியும் செய்யப் போவதில்லை. ஆஹா, அதோ கோஷங்கள் கேட்கிறதே! அத்தையும், சேதிநாட்டு ராணியும் ஆன ஷ்ருதஸ்ரவா வந்துவிட்டாள் போலிருக்கிறதே?? கண்ணன் அங்கே சென்றான். இது என்ன? மன்னர் தாமகோஷர் ஏன் வரவில்லை?? அவர் ஏதோ நொண்டிச்சாக்குச் சொல்லிவிட்டார் வர முடியவில்லை என்று. ஷ்ருதஸ்ரவா சொன்னாள். மேலும் ரகசியமாய்ச் சொன்னாளாம், ஜராசந்தனின் மாப்பிள்ளையைக் கொன்ற கிருஷ்ணனின் உபநயனத்துக்கு பகிரங்கமாய் வருவதற்கு தாமகோஷருக்கு விருப்பமில்லையாம். அவள் குமாரன் ஆன சிசுபாலனோ? அவன் என்ன சொன்னானாம்?? கலகலவெனச் சிரித்தாள் அத்தை.

இந்த மாட்டிடையனுக்கு உபநயனமா?? ஹாஹ்ஹா! ஹாஹ்ஹா! நான் பிறந்ததிலிருந்தே ஒரு பெரிய நாட்டின் இளவரசன். என் தகுதியை விட்டுவிட்டு மாட்டிடையனின் உபநயனத்தில் நான் எங்கனம் கலந்து கொள்வது? கண்ணன் இதழ்களில் மீண்டும் புன்னகை அரும்பியது. ஆம், நான் மாட்டிடையன் தான், அதனால் என்ன?? நான் ஒருபோதும் அதை மறுக்கப் போவதில்லை. ஆனால், ஆனால் இந்த இடையன் என என்னை இகழ்ச்சியாக நினைப்பவர்களுக்கு, அவர்கள் நினைப்பு தவறு எனப் புரியவைப்பேன்.

கண்ணன் புன்னகை பூத்த முகத்துடனேயே அவ்விடம் விட்டு அகன்றான்.

Tuesday, January 12, 2010

ஞானபாநு உதிக்கவேண்டும்!


மகா கவி பாரதியாரின் கவிதை!

"திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல்லறிவு, வீரம்
மருவுபல்கலையின் சோதி, வல்லமையென்பவெல்லாம்
வருவது ஞானத்தாலே வையக முழுதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு!"




ஸ்வாமி விவேகாநந்தரின் வாக்கு!

"உண்மையில் இருக்கும் ஒரே கடவுளை, நான் நம்புகிற ஒரே கடவுளை, எல்லா ஜீவர்களின் கூட்டுத் தொகையுமான கடவுளை வழிபடுவதற்காக நான் மீண்டும் மீண்டும் பிறந்து ஆயிரமாயிரம் இன்னல்களை அநுபவிப்பேனாக! தீயோர்களாக நிற்கும் என் கடவுளை, துயரமுற்றோராக நிற்கும் என் கடவுளை, உலகம் எங்கும் ஏழைகளாக நிற்கும் என் கடவுளை, வழிபடுவதற்காக நான் திரும்பத் திரும்ப ஜனனமெடுப்பேனாக!"

"கிழிந்த ஆடையைக் களைவது போல் இந்த உடலை எறிந்துவிட்டு வெளிக்கிளம்புவது நல்லதென எனக்குத் தோன்றக்கூடும். ஆனால் உடலுக்கு வெளியே சென்றாலும் நான் சேவை செய்வதை நிறுத்த மாட்டேன். எங்கெங்குமுள்ள மக்களை நான் ஆன்மீகத்தில் தூண்டிக் கொண்டே இருப்பேன். தான் ஆண்டவனோடு ஒன்றுபட்டிருப்பதாக உலகம் அறியும் வரை நான் சேவை செய்வேன்."




சேவை செய்யும் கோடிக்கணக்கான சேவகர்களுக்கு வழிகாட்டியாய் விளங்கும் விவேகாநந்தரின் பிறந்த நாளில் விவேகாநந்தரின் வழியைப் பின்பற்றி நாட்டையும், மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, January 10, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல!

இப்போது நாம் சற்றுப் பின்னால் செல்லவேண்டும். பின்னாலேன்னா உட்கார்ந்திருக்கிற இடத்தை விட்டுப் பின்னாடி இல்லை. காலத்தில் சற்றுப் பின்னால் செல்லவேண்டும். கம்சனின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. கண்ணனும் அதில் பங்கு பெற்றிருந்தான். தன் மாமனின் உடலைச் சிதையில் கிடத்தியதையும், அரச மரியாதைகள் அளிக்கப் பட்டதையும், கடைசியில் தன் பெரிய தாத்தாவான உக்ரசேனர் தன் ஒரே மகனுக்குச் சிதையில் தீ மூட்டியதையும் கண்டான். உக்ரசேனரின் கண்களில் இருந்து கண்ணீர்ப் பிரவாஹம். நிச்சயமாய் அது கம்சன் இம்முறையில் இறந்தான் என்பதால் இருக்காது. கண்ணனுக்கு அதில் உறுதி இருந்தது. கம்சன் தன்னைத் தானே அனைவருக்கும் தலைவன், அனைவரையும் வழிநடத்துபவன், எந்த ஒரு மனிதரையும், வாழ வைக்கவோ அல்லது இறக்கச் செய்யவோ தன் கையில்தான் அதிகாரம் உள்ளது என்ற முறையில் நடந்து கொண்டதும், அவன் கொடுங்கோன்மை எல்லையற்றுப் பரவிப்பல சின்னஞ்ச்சிறு குழந்தைகளைக் கூடக் கொல்ல வைத்ததையும், அப்பாவி மக்களும், நல்ல தேர்ந்தெடுத்த்த வீரர்களும் கம்சனுக்கு அடிபணியாததின் காரணமாய்ப் பலியானதையும் நினைத்திருப்பார். கம்சன் தவறு செய்துவிட்டான். மாபெரும் தவறு செய்துவிட்டான். ஆனால் அவன் பிறந்த அதே யாதவக் குலத்தில் தான் அக்ரூரர் போன்ற எப்போதுமே பகவத் தியானத்தில் இருக்கும் நபர்களும் பிறந்திருக்கின்றார்கள். ம்ம்ம்ம்ம் நல்லவேளையாக நான் நாரதரின் தீர்க்க தரிசனத்தை மெய்யாக்கினேன். கொடுங்கோலன் ஒருவனைக் கொன்றேன். ஆம், உலகில் சத்தியமும், உண்மையும், அமைதியும் நிலவ வேண்டுமானால் அப்பாவிப் பொதுமக்கள், தர்மவான்கள் காப்பாற்றப் படவேண்டுமானால் கொடுங்கோன்மை அறவே ஒழிய வேண்டும். தர்மத்தை நிலை நாட்டவேண்டும். அது ஒன்றே என் கடமை. நான் பிறந்ததின் நோக்கமும் அதுவே. என்ன வந்தாலும் சரி, தர்மத்தின் பாதையை விட்டு விலகமாட்டேன். அந்தப் பர வாசுதேவனின் விருப்பமும் அதுவாய்த் தான் இருக்கும்.

கண்ணனுக்கு இப்போது தன் வளர்ப்புத் தந்தையான நந்தனைப் பார்க்கவேண்டும், பார்த்தே தீரவேண்டும். தூரத்தில் இருந்து கம்சனின் இறுதிச் சடங்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் நந்தன். ம்ம்ம்ம்ம்ம் அப்பா, நல்ல அப்பாதான். மூன்று நாட்கள் முன் வரையிலும் அவருடைய செல்லப் பிள்ளையாகத் தானே இருந்தேன். இப்போது மூன்றே நாட்களில் எங்கள் உறவு முறை மாறிவிட்டதே? என்னை ஒரு இளவரசனாகவே அப்பா நடத்துகிறார். ம்ஹும் இது சரியில்லையே? எனக்குப் பிடிக்கவில்லையே. ஆனால் அப்பா ஒத்துக்கொள்ள மாட்டார். அவருக்குச் சரினு படுவதைத் தான் செய்வார். அப்பாவின் பார்வையில் நான் ஒரு அரசகுமாரன் இப்போது. ஆகவே அதற்குகந்த மரியாதைகளோட நடந்து கொள்கிறார். ம்ம்ம்ம் அப்பாவைப் போய்ப் பார்க்கணுமே??

“உத்தவா, நீ வருகிறாயா?? மூத்தவரே? அண்ணனாரே, நீரும் வருகின்றீரா? தந்தை தங்கி இருக்குமிடம் சென்று பார்ப்போமா?” கூடாரங்கள் அடித்து நந்தன் தங்கி இருக்குமிடத்துக்கு மூவரும் ஓட்டமாய் ஓடினார்கள். மூவரையும் ஒன்றாய் அணைத்துக் கொண்ட நந்தனால் கடைசியில் கண்ணனை மட்டும் விடுவிக்க முடியவில்லை. கண்ணன் குழந்தையாய் இருக்கையில் எவ்வாறு அவனைக் கிச்சுகிச்சு மூட்டிச் சிரிக்க வைப்பானோ அவ்வாறே இப்போதும் செய்ய ஆரம்பித்தான் தன்னை மறந்ததொரு நிலையில். கண்கள் நிரம்பின அனைவருக்கும். பேச முடியாமல் தவித்த நந்தன் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “கண்ணா, நாங்கள் நாளை திரும்புகிறோம்.” என்றான். “தந்தையே, நாளைக்கேவா??” பலராமனுக்கு ஆச்சரியம் மூண்டது. “இன்னும் பதினைந்து நாட்களில் எங்கள் இருவருக்கும், மற்றும் உத்தவனுக்கும் உபநயனம் செய்விக்கப் போகின்றனர். தாங்கள் இருந்து எங்களை ஆசீர்வதிக்கவேண்டாமா? கண்ணா, என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்? சொல் அப்பாவிடம்.”

“இல்லை ராமா, அது வரையிலும் எல்லாம் தங்க முடியாதப்பாஉங்களிடமிருந்து பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அது எவ்வளவு சீக்கிரம் நடக்குமோ நடக்கட்டுமே.”


”அப்பா, ஏன் இவ்வளவு அவசரம்?” கண்ணன் கேட்டான்.

“கண்ணா, என் குழந்தாய்! நீ வசுதேவனால் என்னிடம் ஒப்படைக்கப் பட்ட நாளிலிருந்தே உன்னை நாங்கள் வெகு விரைவில் பிரிய வேண்டி இருக்கும் என்பதை எதிர்பார்த்தே இருந்தேன். அந்த நேரம் இப்போது வந்துவிட்டது. இதைவிட அருமையான சந்தர்ப்பம் வேறு ஏது? நீ அனைவர் மனதையும் வென்றுவிட்டாயப்பா. உன்னிடம் அனைவரும் அன்பு செலுத்துகின்றனர். எனக்கு அதைவிட வேறு என்ன வேண்டும்? நாரதர் சொன்ன வாக்கும் சரியாகிவிட்டது. நான் சந்தோஷமாய் இருக்கிறேன். “ பேசிக்கொண்டே இருந்த நந்தனுக்குக் குரல் குழறிற்று. கண்ணீர் பெருகக் கண்களைத் துடைத்துக்கொண்டே மேலும் சொன்னான்:” எனக்கு மனதில் துக்கமும் இருக்கிறதப்பா. நீங்கள் இருவருமே என் கண்களின் கருமணி போன்றவர்கள். என் பிள்ளைகளாய் நீங்கள் இருந்திருந்தால் கூட இவ்வளவு அன்பு செலுத்தி இருப்பேனா?? தெரியவில்லையப்பா, சந்தேகமே! உங்கள் இருவரையும் என் பொறுப்பில் ஏற்றதிலிருந்து எனக்கென ஒரு மகன் இல்லை என்ற குறையே எனக்கு ஏற்பட்டதும் இல்லை. ஆனால், ஆனால், இப்போது என் மனதில் ஓர் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது.” தன் மார்பைச் சுட்டிக் காட்டினான் நந்தன். மீண்டும் குரல் தடுமாறியது. “ஆனால், ஆனால் நான் ஈசனின் விருப்பம் என்னமோ அதன்படிதான் நடக்கமுடியும். இறைவன் விருப்பம் இதுதான். உங்கள் இருவருக்கும் மாபெரும் எதிர்காலம் காத்திருக்கிறது. நீங்கள் செய்யவேண்டியது எவ்வளவோ இருக்கிறது. சாதிக்க எத்தனையோ இருக்கிறது. நான் இங்கே இருந்து கொண்டு உங்கள் இருவருக்கும் தொந்திரவு கொடுக்க விரும்பவில்லை. என் வேலை முடிந்துவிட்டது. என்ன நடக்கணுமோ அது சீக்கிரம் நடந்து முடியட்டும். அங்கே விருந்தாவனத்தில் உன் தாய், ……உன் தாய் மனமொடிந்து என்னிடமிருந்து வரும் தகவல்களுக்குக் காத்திருப்பாள். இருண்டு போன அவள் வாழ்வில் ஒளி வீசாவிட்டாலும் ஒளியின் ஓரிரு கிரணமாவது என் மூலம் தான் அவளுக்கு ஏற்படவேண்டும். உடலாலும், உள்ளத்தாலும் வலுவிழந்து இருக்கும் உன் தாய்க்கு இப்போது நான் ஒருவனே ஆறுதல் அளிக்க முடியும்.”

பலராமனின் இளகிய மனம் இதைக் கேட்டதும் தவிக்க ஆரம்பித்தது. ஆனால் யதார்த்தவாதியான கண்ணனோ தகப்பன் சொல்லுவதில் உள்ள நியாயங்களைப் புரிந்து கொண்டான். “தந்தையே, உங்களுக்கு வேண்டுமென்ற போது என்னை நினனயுங்கள். உங்கள் அருகே நான் இருப்பேன்.” என்று சொல்ல, “என் குழந்தாய், என்னருகில் நீ எப்போதுமே இருக்கிறாயே? உன்னை வளர்த்து ஆளாக்கினதில் இருந்து என் வாழ்நாளை நான் வீணாக்கவில்லை எனப் புரிகிறது அப்பா. நாங்கள் நாளைக்கே கிளம்புகிறோம். “ என்றான்.

“நாளை நீங்கள் கிளம்பும்போது நாங்கள் வந்து பார்க்கிறோம் தந்தையே. உத்தவன் உங்களுடன் வந்து என் செய்தியையும், விருந்தாவனத்து மக்களுக்கு என் சார்பாகச் சில பரிசுகளையும் எடுத்துவருவான்.” கண்ணன் திரும்பி நடக்க, நந்தனோ, அங்கேயே நின்று கொண்டு கண்ணன் செல்லுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படியே தன் கண்கள் மூலம் தன் அருமை மகனைத் தன் நெஞ்சம் நிறைய நிறைத்துக் கொள்ள முடிந்தால்????? மனம் வலித்தது நந்தனுக்கு. அந்த வலியில் கண்கள் தம்மையும் அறியாமல் நீரை வர்ஷித்தன.

திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருந்த கண்ணனுக்கோ தன் இதயத்தில் அம்பு தைத்துவிட்டாற்போன்றதொரு உணர்வு. சொல்லத் தெரியாமல் எதையோ இழந்துவிட்டோமே, அது திரும்பக் கிடைக்காதே என்ற தவிப்பு. அவன் தன் வளர்ப்புத் தந்தை, தாயை மட்டுமின்றி கோகுலத்திலும், பின்னர் விருந்தாவனத்திலும் அவனுடன் பழகின நண்பர்களையும் நினைத்துக் கொண்டான். கோப ஸ்த்ரீகளை நினைத்தான். எல்லாவற்றுக்கும் மேல், எல்லாவற்றுக்கும் மேல் அங்கே ராதை, ராதை, அவன் அன்புக்குரிய ராதை அவன் உயிர், அவன் ஜீவன், அவன் பேச்சு, அவன் மூச்சு, அவன் எண்ணம், அவன் செயல் அனைத்துக்கும் சக்தியைக் கொடுக்கும் ராதை அங்கே இருக்கிறாள். அவள் தான் அவன் சந்தோஷத்தின் அதி தேவதை. அவன் இதய ராணி. உத்தவனைத் தனியே அழைத்துச் சென்று தன் செய்திகளைக் கூறலானான் கண்ணன்.

பின்னர் தன் தாய் தேவகியைக் காணச் சென்றான் கண்ணன். தேவகி அம்மா அவனிடம் இவ்வளவு பாசம் வைத்திருப்பது அவனுக்கு ஒரு ஆச்சரியம் தான். அவனைப்பெற்றதோடு சரி, வெறும் பெயரளவில்தான் தெரியும் அவளுக்கு. ஆனால் அவனைக் கண்டாலே அவள் கண்கள் எப்படி ஒளிர்கின்றன?? என் அருகாமையால் எவ்வளவு நம்பிக்கையும், உறுதியும் கிடைக்கிறது அவளுக்கு. ஆச்சரியம் தான். ஆனால் தந்தை வசுதேவரோ?? தாயைப் போல் உணர்ச்சி வசப்படுவதில்லை. ஆனாலும் எங்கே இளவயது ஆசையில் விளையாட்டுத்தனமான வீராப்பில் கண்ணன் தனக்குக் கொடுக்க வந்த மணிமகுடத்தை ஏற்றுவிடுவானோ என்று பய்ந்திருந்தார். கண்ணனே வேண்டாமெனச் சொன்னது அவருக்கு நல்லதாய்ப் போயிற்று. கண்ணனையும், பலராமனையும், உத்தவனையும் அழைத்துப் பல பழங்கதைகளை முக்கியமாய் யாதவ குல முன்னோர்களைப் பற்றியும்,க்ஷத்ரிய தர்மத்தைப் பற்றியும் விரிவாக எடுத்துச் சொன்னார். பிரம்ம தேஜஸ் அடைந்த பல ரிஷி, முனிவர்களைப் பற்றியும், அவர்களின் தவங்களையும் பற்றிக் கூறினார். கூடவே தன் அருமை அக்கா குந்தி பற்றியும், அவள் கணவர் பாண்டு பற்றியும், இன்னொரு மனைவியான மாத்ரி பற்றியும் அவர்கள் இருவருக்கும் பிறந்த ஐந்து குமாரர்களையும், ஐவரையும் குந்தி தன் சொந்தப் புத்திரர்கள் போலவே வளர்த்து வருவதையும் கூறினார். ஹஸ்தினாபுரத்தின் குரு வம்சத்தைச் சேர்ந்திருந்தாலும் அந்தக் குமாரர்களுக்கு அங்கே சரியான கவனிப்பு கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாலும் கண்ணனின் கவனம் இன்னொன்றையும் கவனித்தே வந்தது. அது விதர்ப்ப நாட்டு இளவரசியான ருக்மிணி. எப்படியோ, எவ்வாறோ அவள் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டு தன் தாய் தேவகியுடன் வந்து பொழுதைக் கழிப்பதைக் கண்ணன் கண்டான். வரும்போதெல்லாம் திரிவக்கரையும் கூட வருகிறாள்தான். ஆனாலும், இந்தப் பெண்ணின் நடத்தை விசித்திரமாக அன்றோ இருக்கிறது? எவ்வளவு பெரிய விழிகள்? அந்த விழிகளின் ஆழத்தில் நாமே மூழ்கிவிடுவோம் போல் உள்ளதே? நான் எங்கே சென்றாலும், என்ன செய்தாலும் அந்தப் பெரிய விழிகள் என்னை விழுங்கிவிடும் போல் பார்க்கின்றனவே?? இந்தப் பெண் தன்னிரு கண்களாலேயே என்னைத் தின்றுவிடுவாளோ?? கண்ணனுக்குத் தூக்கிவாரிப் போட்டது! என்ன இது?????????????

Wednesday, January 06, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!

உக்ரசேனரின் விருந்தோம்பல்! ருக்மியின் சந்தேகம்!



“வேறு என்ன அண்ணா??? அங்கே நான் திரிவக்கரையுடன் உட்கார்ந்திருந்தேன்.”

“அதைத் தான் சொல்லிவிட்டாயே? பின்னர்?”

“பின்னர் அங்கே வசுதேவரும், உக்ரசேனரும் வந்தனர். மற்றும் அனைத்து யாதவத் தலைவர்களும் அங்கே கூடினர். அனைவரும் நாட்டு நடவடிக்கையை அலசினார்கள். உக்ரசேனருக்கு வயதாகிவிட்டதாலும், அவரால் இவ்வளவு துக்கத்தில் அரசாளுவது முடியாது என்பதாலும் வலிமையும், இளமையும் உள்ள அரசனைத் தேர்ந்தெடுக்கப் பேசினார்கள். தேவகியின் மகன் கம்சனின் ராணிகளைக் கூடக் கண்டு ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறான்.”

“ஆஹா, நாதா, ஆர்யபுத்திரா, பார்த்தீர்களா?? இவள் தேவகியின் பையன் பெயரைக்கூடச் சொல்ல மாட்டாளாம். அதைக் கவனித்தீர்களா? அதில் உள்ள தனித்துவம் புரிகிறதா உங்களுக்கு?” சுவ்ரதாவுக்கு அவள் கவலை.

“ஓஓஓஓ, சுவ்ரதா, பேசாமல் இருக்கமாட்டாயா சிறிது நேரம்?? முக்கியமான தகவல் கேட்கவேண்டும் எனக்கு.” ருக்மிக்குப் பொறுமை போய்விட்டது.

“அவர்கள் அனைவரும் ஒருமனதாக வாசுதேவ கிருஷ்ணனை அடுத்த அரசனாகத் தேர்ந்தெடுத்தனர்.””

“என்ன??? என்ன??’” ருக்மி எழுந்தேவிட்டான் பரபரப்பில். அவன் முகம் வாட்டமுற்றது. “அட கடவுளே?” எனத் தலையிலும் ஓங்கி அடித்துக் கொண்டான். அவன் செயல்களில் இருந்தே கிருஷ்ணன் அரசனாவதில் அவனுக்கு இஷ்டம் இல்லை என்பதும் புரிந்தது.

“ரொம்பவே வருத்தமடையாதே அண்ணா! சந்தோஷப் படு! கிருஷ்ணவாசுதேவன் தனக்கு அரசுரிமையே வேண்டாம் என மறுத்துவிட்டான். “

“என்ன?? அரசுரிமை வேண்டாம்னு சொல்லிவிட்டானா?” ஆச்சரியத்தில் ஆழ்ந்தான் ருக்மி.

“ஆம், அரசுரிமை தனக்கு வேண்டாம்னு சொல்லிவிட்டான். தான் இன்னமும் ஒரு இடைச்சிறுவனாகவே இருப்பதாகவும், அரசை ஏற்று நடத்தும் அளவிற்குத் தனக்கு அநுபவம் இல்லை என்றும் சொல்லிவிட்டான். இப்போ சந்தோஷமா உனக்கு?? மகிழ்ச்சி தானே?? ம்ம்ம்ம்ம்ம் எனக்குத் தான் கோபமாய் வருகிறது! ஆனால் என் கோபத்தை இங்கே யார் லட்சியம் செய்கிறார்கள்? யாருக்கும் அது பற்றிக் கவலையே இல்லை!” என்று சற்றே மனத்தாங்கலுடன் சொன்னாள் ருக்மிணி.

“ஆமாம், ஆமாம், இவள் அவனுடைய பட்டமஹிஷியாக ஆகலாம் என நினைத்துக் கொண்டிருந்தாள். அவள் எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது!” என்று ஏளனமாய்ச் சிரித்த வண்ணம் சொன்னாள் சுவ்ரதா.


அடுத்த நிமிஷம் அங்கே மாபெரும் சொற்போர் துவங்க இருந்தது. ஆனால் அப்போது உள்ளே நுழைந்த ஒரு பணிபெண்ணால் அது தடைப்பட்டது. இருவருக்குமே ஏமாற்றமோ?? பணிப்பெண் சொன்னாள்: குரு சாந்தீபனி தன்னுடைய இரு சீடர்களுடன் அங்கே வந்து கொண்டிருக்கிறார் என்பதே. அவந்தி தேசத்து இரட்டையர்களான அரசகுமாரர்கள் விந்தனும் அனுவிந்தனுமே அந்த சீடர்கள். மூவரும் ருக்மியைச் சந்திக்க வந்திருப்பதாய்த் தெரிவித்தாள். உடனே பெண்கள் இருவரின் நடவடிக்கையும் வியக்கத் தக்கவிதத்தில் மாறியது. தங்கள் சேலை முந்தானையில் தலையில் அரைமுக்காடாய்ப் போட்டுக் கொண்டு (வட இந்தியவழக்கம், பெரியவர்கள், மரியாதைக்குரியவர்கள் முன்னிலையில் இவ்வாறு இருக்கவேண்டும்) தயாராக நின்றார்கள். மூவரும் உள்ளே நுழைந்ததும், மூவருமே குரு சாந்தீபனியின் பாதங்களைத் தொட்டு வணங்கி, இளவரசர்கள் இருவரையும் முகமன் கூறி வரவேற்று அமர வைத்தனர்.

நல்ல உயரமும், அதற்கேற்ற உடல்கட்டும் கொண்ட குரு சாந்தீபனியின் புருவங்கள் இரண்டும் எப்போதுமே ஏதோ சிந்தனையிலும், கவலையிலும் இருக்கிறாரோ எனத் தோற்றமளிக்கும் விதமாய் முடிச்சிட்டே காட்சி கொடுத்தது. அவரின் கறுத்த தாடியும், வலிமையான தோள்கள், நீண்ட உறுதியான கைகள், எடுப்பான நாசி, மூக்கு, பளிச்சிட்ட கண்கள் அனைத்துமே அவரின் தவ வாழ்க்கையைப் பறை சாற்றிய அதே நேரம் ஆயுத சாஸ்திரத்திலும் கை தேர்ந்தவர் எனக் காட்டிக் கொடுத்தது. குரு சாந்தீபனி பரசுராமரின் சீடர் ஆவார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாய் பார்கவ, பரசுராமரின் ஆசிரமத்திலிருந்து பயிற்சிகளை முடித்துக்கொண்டு குருவின் ஆசிகளோடு கிளம்பினார். ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு நாடாகப் பயணம் செய்து அந்த அந்த தேசத்து மக்களில் விரும்பியவர்களுக்கும், அரசகுமாரர்களுக்கும், அரசர்களுக்கும் தேவையான ஆயுதப் பயிற்சியை அளித்துவந்ததோடு, வேத சாஸ்திரங்களையும் கற்பித்தார். வேத சாஸ்திரங்களும், ஆயுதப் பயிற்சியும் ஒன்றோடொன்று பிணைந்தே இருந்ததால் அதற்கேற்ற சீடப் பரம்பரையையும் உருவாக்கி வந்தார். பதினைந்து வருஷங்கள் முன்பாக அவந்தி தேசத்தில் அரசனின் விருப்பத்துக்கு இணங்க ஒரு பெரிய குருகுலத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார். தேச, தேசாந்திரங்களின் அரசர்கள் தங்கள் குமாரர்களையும், படைக்குத் தேவையான வீரர்களையும் அங்கே அனுப்பி வைத்து ஆயுதப் பயிற்சியிலும், போர்க்கலையிலும் தேர்ச்சி பெற வைத்தனர். குரு சாந்தீபனியின் ஆயுதப் பயிற்சிக்கூடத்திலும், வேதப் பயிற்சிக் கூடத்திலும் கற்பிக்காத விஷயங்களே இல்லை என்னும் அளவிற்கு பிரபலமும் அடைந்திருந்தார். ருக்மியும் சிறுவனாக இருந்த போதிலிருந்தே குரு சாந்தீபனியின் குருகுலத்திலே சேர்ந்தே படித்தான். இப்போது விந்தன், அனுவிந்தன் படிக்கும் முன்னேயே ருக்மி தன் குருகுலவாசத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பி இருந்தான்.

குரு சாந்தீபனி சமீப காலமாகத் தேர்ந்தெடுத்த சில சீடர்களோடு ஒவ்வொரு நாடாகச் சென்று விசேஷப்பயிற்சி அளித்து வந்தனர். அது போல் இப்போது மதுராவிற்கு வந்திருக்கின்றார் போலும். ஆயிர்று இன்னும் சில தினங்களில் அவர் தன் சொந்த ஆசிரமத்திற்குச் சென்றுவிடுவார். ருக்மி தன் ஆசிரியரிடம், தன்னால் அவருக்கு ஏதாவது ஆகவேண்டுமா என விசாரித்தான். சாந்தீபனி ருக்மியைப் பார்த்து, “ருக்மி, உக்ரசேன மஹாராஜா உன்னை இன்னும் பதினைந்து நாட்கள் இங்கே தங்கும்படி வேண்டுகிறார்.” என்று சொன்னார். ருக்மி ஆச்சரியத்தின் எல்லையில், “என்ன??? இன்னும் பதினைந்து நாட்களா?” என வினவினான். மேலும் தீராத வருத்தத்துடனேயே தொடர்ந்தான். “இல்லை, குருதேவா, இல்லை, என்னை இங்கே அழைத்தது என் நண்பன் கம்சன். அவனே இல்லை இப்போது! நான் தங்க மாட்டேன். உடனே திரும்பப் போகிறேன்.”

“உன் மன நிலை புரிகிறது ருக்மி. ஆனால் என்ன செய்வது? அவன் விதி அப்படி! மேலும் உக்ரசேன மஹாராஜா மிகவும் வற்புறுத்திச் சொன்னார் உன்னைத் தங்க வைக்குமாறு.”

விந்தனும், அனுவிந்தனும் அதை ஆமோதித்துப் பேசினார்கள். குருவின் வார்த்தை எவ்விதம் மீறுவது என்ற தர்மசங்கடத்தில் ஆழ்ந்த ருக்மி யோசனையில் ஆழ்ந்தான். சாந்தீபனி அப்போது தான் நினைவில் வந்தது போல்,” ருக்மி, எப்படி இருந்தாலும் கம்சனின் இறுதிச்சடங்குகள் அனைத்தும் நிறைவேற இன்னும் பத்துதினங்கள் உள்ளனவே. ஆகவே அதுவரையிலும் யாருமே செல்ல முடியாதல்லவா?? துக்கநாட்களில் துக்க காரியம் முடியும் வரையிலும் வெளி ஊர்களுக்கோ, அல்லது நாட்டுக்கோ செல்வதை அனுமதிக்கமாட்டார்களே??? மேலும் இந்த துக்க காரியம் முடிந்ததுமே, ஒரு நல்ல நாளில் பலராமனுக்கும், கிருஷ்ணனும் உபநயனம் செய்து வைக்கப் போகின்றார்கள். க்ஷத்ரிய இளைஞர்களான அவர்களுக்கு உபநயனம் செய்வது அவசியம் அல்லவா?”

“இன்னுமா அவங்களுக்கு உபநயனம் நடக்கவில்லை?” ருக்மி சற்றே ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ஆஹா, உனக்குத் தெரியாதா ருக்மி? அவர்கள் இருவருமே இடையர்களால் வளர்க்கப் பட்டனர் என்று??? அனைவரும் அறிந்த செய்திதானே அது?? இப்போது இந்தச் சடங்குகளைச் செய்து அவர்களை க்ஷத்திரிய தர்மத்தை மேற்கொள்ள வைக்கவேண்டும்.”

“குருதேவா? அந்தக் கிருஷ்ணன் தனக்கு வந்த மணிமகுடத்தை வேண்டாமெனச் சொன்னது உண்மையா?” ருக்மிக்கு இன்னும் சந்தேகம் தான்.


“ஆஹா, உனக்குத் தான் தெரிந்திருக்கிறதே! ஆம், ருக்மி, ஆம், உண்மையே! ஆனால் இதை நாங்கள் ரகசியமாயே வைத்திருக்க நினைத்தோமே!” கொஞ்சம் ஏமாற்றத்துடனும் கவலையுடனும் தொனித்தது சாந்தீபனியின் குரல்.

“ஏன் மறுத்துவிட்டான்?? அவனுக்கு அதில் தான் ஆசை என்றல்லவோ நான் நினைத்தேன்? அவன் கம்சனைக் கொன்றதற்கே அதுதான் காரணம் என நினைத்திருந்தேனே! நடிக்கிறானோ?” சீறினான் ருக்மி குரு எதிரே இருப்பதையும் மறந்தாற்போல்.

“சாந்தி! சாந்தி! ருக்மி, விதர்ப்பதேசத்துக்கு அரசனாகப் போகும் நீ இன்னும் சற்று நிதானத்தைக் கைப்பிடிக்கவேண்டும். இந்தக் கிருஷ்ணனுக்கு அதர்மத்தை வேரோடு அறுத்துத் தள்ளுவதில் உள்ள ஆசை, அரசாளுவதில் இருப்பதாய்த் தெரியவில்லை. எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் அதை வேரோடு அறுக்க ஆசைப்படுகிறான்.”

“அதெல்லாம் ஒன்றுமில்லை குருதேவா! இந்த யாதவர்களிலேயே அவனைப் பிடிக்காதவர்கள் நிறைய இருப்பார்களே! அவன் சும்ம்மா நடிக்கிறான்!”

“யாருமே அவனுக்கு எதிரி இல்லை ருக்மி! சொல்லப் போனால் அனைத்து யாதவர்களும் எதிர்பார்த்ததே அவன் அரசனாகவேண்டும் என்றே.”

“அப்போ?? அவன் என்னதான் செய்யப் போகிறானாம்? மறுபடி மாடு மேய்க்கப் போகிறானோ?” தன் ஹாஸ்யத்தில் தானே மகிழ்ந்துகொண்டான் ருக்மி. ருக்மிணியோ பல்லைக் கடித்தாள் அண்ணனைப் பார்த்து, முகத்தை வலித்து, பழிப்புக் காட்டினாள்.

“கிருஷ்ணன் எங்களோடு குருவின் குருகுலம் இருக்கும் அவந்திக்கு வரப் போகிறான். அங்கே வந்து ஆயுதங்களில் பயிற்சி எடுத்துக்கொள்ளப் போகிறான்.” அவந்தி தேசத்து இளவரசர்களில் ஒருவனான விந்தன் இதற்கு பதில் சொன்னான்.

“ஓஓஓ, அதுவும் அப்படியா??” ருக்மிக்கு உற்சாகம் இழந்துவிட்டது.

“ருக்மி, உனக்கு அவன் ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொள்ளுவதில் என்ன ஆட்சேபணை?? நான் அவனுடன் விருந்தாவனத்தில் சிலமாதங்கள் தங்கி இருந்து பயிற்சி கொடுத்தேன். அவனைப் போன்ற மாணாக்கர்களையே எல்லா குருக்களும் விரும்புவார்கள். அவ்வளவு அருமையான, பணிவான, விநயம் பொருந்திய மாணாக்கன்.” சாந்தீபனி பெருமிதம் தொனிக்கச் சொன்னார்.

“அப்போ, நீங்கள் கிளம்பும்போது எங்களையும் கிளம்பச் சொல்கிறீர்களா குருதேவா, “ சட்டென மனைவி பக்கம் திரும்பினான் ருக்மி. “நீ என்ன நினைக்கிறாய் சுவ்ரதா?” என்று மனைவியை ஆலோசனை கேட்டான். மேலும் ருக்மிக்குத் தன்னை சாந்தீபனியோடு போகும்படி உக்ரசேன மஹாராஜா சொல்லுவதற்கு வலுவான காரணம் ஏதோ இருக்கவேண்டும் என்றும் தோன்றியது. அந்தக் காரணம் என்னவெனத் தெரியவேண்டும். அவனுக்கு யோசிக்க நேரமும் வேண்டி இருந்தது. அதற்குள் கண்கள் பளபளக்க, முகமெல்லாம் விகசித்து மலர, ருக்மிணியோ, “அண்ணா, நாம் தங்கிவிட்டு குருதேவரோடு போகலாம். “ என்றாள். தன் நாத்தியையே வெறுப்போடு நோக்கிய சுவ்ரதா, “எனக்கு உடனே கிளம்பவேண்டும். குருதேவர் எப்போ வேண்டுமானலும் வந்து கொள்ளட்டும். அது அவர்பாடு, அவந்தி இளவரசர்கள் பாடு.” என்று சொன்னாள். பலமாகச் சிரித்தார் சாந்தீபனி.

“இதோ பார் ருக்மி, இரு பெண்களும் சொல்லுவதை! ஒருத்தி சொல்வதற்கு நேர்மாறாய் மற்றொருத்தி சொல்கிறாள். இப்போது முடிவெடுக்கும் பொறுப்போ உன் கையில். நீ யார் பக்கம் என்று அப்போது தெரிந்துவிடும்தான். ஆனாலும் இங்கே உள்ள பிரச்னைகள், அதன் முடிவுகள், அதை ஒட்டிய ராஜரீக உறவுகள், அனைத்தையும் பற்றி அறிய உன் தந்தையும் விதர்ப்ப தேசத்து அரசனுமான பீஷ்மகன் விரும்புவான். இனி உன் கையில் இருக்கிறது முடிவு. உன் விருப்பம் போல் செய். இங்கே தங்கினால் உனக்குத் தான் நன்மை.” என்று முடித்துக் கொண்டார்.

“அப்படி என்றால் எனக்குப் பூரண சம்மதம் இல்லை என்றாலும் ராஜரீக காரணங்களை ஒட்டித் தங்கிச் செல்லச் சம்மதிக்கிறேன்.” என்றான் ருக்மி. ருக்மிணியோ சந்தோஷத்தில் ஆழ்ந்தாள்.

Tuesday, January 05, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!

ருக்மிணியின் காதல்!


மதுராபுரி இப்போது ஒரு நம்பிக்கை உள்ள நண்பர்களே இல்லாத இடமாக மாறிவிட்டதே? அதிலும் இந்த தநுர்யாகத்தின் போது அனைத்து நாட்டு இளவரசர்களுமாகச் சேர்ந்து ஜராசந்தனோடு ஒரு உடன்படிக்கை செய்து கொள்ள இருந்தோம். அதையும் இந்தக் கண்ணன் வந்து கெடுத்துக் குட்டிச்சுவர் பண்ணிவிட்டானே? ஹா, ஹா, யாதவர்கள் மாட்டிக் கொண்டனர் எப்படியோ! ஜராசந்தன் அவர்களை ஒரு போதும் மன்னிக்கப் போவதில்லை. அதிருக்கட்டும், இனி யார் தலைவர்?? கிழவனான உக்ரசேனனால் இந்த ராஜ்யத்தைக் கட்டிக் காக்க முடியுமா? அவ்வளவு பலம் உள்ளவனாய்த் தெரியவில்லையே?? வேறு தலைவன் என்றால் அது யார்?? இந்தக் கிருஷ்ணனையோ அல்லது வசுதேவனையோ தலைவனாய்த் தேர்ந்தெடுப்பார்களோ?? தெரியவில்லை! கிருஷ்ணன் என்ன சொல்லி இருப்பானோ?? சே, அங்கே போய்விட்டு வந்திருக்கலாம் என்றால் யாதவத் தலைவர்கள் மட்டுமே அந்த மந்திராலோசனையில் கலந்து கொள்ளலாமாம். நாமோ விருந்தினர், அதுவும் கம்சன் அழைப்பில் வந்திருக்கும் விருந்தினர். அங்கே போகமுடியவில்லையே! மனம் நிறையக் குழப்பத்துடனும், ஏமாற்றத்துடனும், வருத்தம் நீங்காமலும் விருந்தினர் மாளிகையில் தங்கள் குடும்பத்தினர் தங்கும் பகுதிக்கு வந்தான் ருக்மி. இங்கே வந்தால்????? அடக் கடவுளே! இது என்ன??? இப்படிக் கோபத்தில் கொந்தளிக்கும் இரு பெண்களையும் எப்படிச் சமாதானம் செய்யப் போகிறேன்?? என்ன நடந்ததோ??? ஒண்ணுமே புரியலையே???

முதலில் சுவ்ரதாவே ஆரம்பித்துவிட்டாள்:”பிரபு, நாதா, தங்கள் அருமைத் தங்கையை என்னால் சமாளிக்கமுடியவில்லை. தாங்கள் தான் அதற்குச் சரியான நபர்.”

“என்ன??? என்னால் தான் உங்கள் இருவரின் அட்டூழியத்தையும் தாங்கமுடியவில்லல,” ருக்மிணி கத்தினாள் கோபத்துடன். ருக்மிக்கு வந்த கோபத்திற்கு என்ன செய்யலாம் என்றே புரியவில்லை.

“என்ன நடந்தது??” கோபத்துடன் கேட்டான். மேலும், “சேச்சே, இந்தப் பெண்களே இப்படித் தான். தாங்களும் நிம்மதியாய் இருக்கமாட்டார்கள். மற்றவர்களையும் இருக்கவிடமாட்டார்கள். சண்டைபோட்டுக்கொள்ளாமல் இரு பெண்களால் வாழவே முடியாதா? ஏற்கெனவே தலை கொள்ளாப் பிரச்னைகளால் வெந்து தவிக்கிறேன் நான், ருக்மிணி, என்ன நடந்தது? நீயாவது சொல்!”

“எல்லாம் தான் நடந்தது. உன் மனைவியையே கேட்டுக் கொள். அவளுக்கு என்னைக் கண்டாலே பிடிக்கவில்லை.”

சுவ்ரதா குறுக்கிட்டாள்.”பிரபு, அவளுக்கு நம்மிருவரையும் கண்டாலே பிடிக்கவில்லை. நேற்றிலிருந்து பார்க்கிறேன். அந்த மல்யுத்தம் நடக்க ஆரம்பித்ததுமே ஒரு சாதாரணக் குடும்பத்துப் பெண்ணைப்போல் தன் அந்தஸ்தையும் தன் குடும்ப நிலையையும் மறந்துவிட்டு இவள் குதிப்பதும், கைதட்டுவதும், ஆடுவதும், பாடுவதுமாக! சேச்சே, விதர்ப்ப நாட்டு அரசகுமாரி இப்படியா நடந்து கொள்ளுவது?”

ஹா, ஹாஹா, அண்ணி?? நான் ஏன் குதிக்கக் கூடாது? உன் கால்களின் உதவியாலா குதிக்கிறேன்? என் கால்களின் உதவியோடுதானே குதிக்கிறேன்? அப்படித் தான் குதிப்பேன்.” குதிக்க ஆரம்பித்தாள் ருக்மிணி.

“எனக்குத் தெரியும், நீ ஏன் அப்படி எல்லாம் செய்தாய் என. அந்தப் பொல்லாத போக்கிரிப்பையன் உன்னைக்கவனிக்கவேண்டும் என்றுதான், இல்லையா?? என் நாதா, உங்களை எவ்வளவு மோசமாய் நடத்தினான் அந்தப்போக்கிரிப் பையன்??? நினவில் இருக்கிறதல்லவா?”

“அவன் ஒண்ணும் மோசமாய் நடக்கவில்லையே? அண்ணனைப் பிடித்துக் கொண்டுவந்து ரதத்தில் ஏற்றிவிட்டான். அவ்வளவுதான்! யமுனையிலா தூக்கி எறிந்தான்?”

“கம்சனை அவன் கொன்றபோது நீ நாட்டியமாடிக்கொண்டிருந்தாய்!” குற்றம் சாட்டினாள் சுவ்ரதா.

“அண்ணி, அண்ணி, எத்தனை சாதுர்யமாக, எவ்வளவு சாமர்த்தியமாகக்கண்ணன் அந்தக் கம்சனைக் கொன்றான் இல்லையா? ஒரே போடு! விஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்! கம்சன் தலை இரண்டு துண்டு!” மீண்டும் சிரித்தாள் ருக்மிணி.

ருக்மிக்குக் கோபம் அடங்காமல் வந்தது. “பெண்களே, வாயை மூடுகிறீர்களா இல்லையா? என்ன நடந்தது என்பதை இருவருமே சொல்லவில்லை இன்னமும்!”

“அப்புறமாய் இவள் மறைந்து போனாள்…….” சுவ்ரதா ஆரம்பிக்கும்போதே ருக்மிணி குறுக்கிட்டாள். “நான் மறைந்து எல்லாம் போகவில்லையே? நான் திரிவக்கரையோடு போனேன்.” என்றாள். “ஆமாம், அந்தக் கொலைகாரனைப் பார்க்கப் போனாய்!” ஏளனம் குறையாமல் சுவ்ரதா சொன்னாள்.

ருக்மிணி பாய்ந்து கொண்டு வந்தாள். “யார், யார்?? யார் கொலைகாரன்?? அவன் ஒண்ணும் கொலைகாரன் இல்லை. மேலும் நான் தேவகி அம்மாவைப் பார்க்கச் சென்றேன். மதுராபுரியில் அனைவரும் அந்தத் தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்திருக்கின்றனர், தெரியுமா உங்களுக்கு?? “”

“”இல்லை, இல்லை, இல்லவே இல்லை, நீ அந்தக் கிருஷ்ணனுக்கு அருகே செல்ல முயன்றிருக்கிறாய், அதற்குத் தான் போனாய்!” சுவ்ரதா சொன்னாள் அழுத்தம் திருத்தமாய்,

“இல்லை, நான் தேவகி அம்மாவுடன் தான் இருந்தேன். அப்போது….. அப்போது, அவனும், அங்கே இருக்க நேர்ந்தது.”

“என்றால் நீ வசுதேவரின் மாளிகைக்கா போனாய்?” சுவ்ரதா நிச்சயப் படுத்திக்கொள்ளக் கேட்டாள் மீண்டும்.

“இரண்டுபேரும் பேச்சை நிறுத்த மாட்டீர்களா?” ருக்மி கத்தினான் மீண்டும்.

“அண்ணா, என் அருமை அண்ணா, முதலில் உன் மனைவியை வாயை மூடச் சொல். அவள் வாயை மூடாட்டி நானும் மூட மாட்டேன்.” ருக்மிணி வெடுக்கென்று சொன்னாள்.

“எப்போவும் என்னைத் தான் குறை சொல்லுவீர்கள்” மனம் உடைந்தாற்போல் அழ ஆரம்பித்தாள் சுவ்ரதா. “அண்ணனும், தங்கையும் பேசி வைத்துக் கொண்டீர்களா?? எப்போவும் என்னைக் குறை சொல்ல?? நான் தான் எல்லாருக்கும் பொல்லாதவளாகிறேன்.” கண்களிலிருந்து கண்ணீர் பெருக அதைத் துடைத்த வண்ணமே பேசினாள் சுவ்ரதா. “அண்ணனும், தங்கையும் ஒற்றுமையாய் இருக்கக்கூடாதுனு சட்டமா என்ன?” என்றாள் ருக்மிணி மெதுவான குரலில்.

“ஆஹா, ஆஹா, மறுபடி ஆரம்பிக்காதீங்க இரண்டு பேரும். யாராவது ஒருத்தர் என்ன நடந்ததுனு சொல்லுங்க. மேலும் வசுதேவன் வீட்டில் என்ன நடந்தது? அது மிக முக்கியம்! எனக்கு ஒரு வார்த்தை கூடப் புரியவே இல்லை!”

“உங்கள் அருமைத் தங்கை சொல்லுவாள். நான் அங்கே எல்லாம் போகமாட்டேன்.”

“ஆமாம், என்ன இப்போ? நான் அங்கேதான் போயிருந்தேன். தேவகி அம்மா கிருஷ்ணனை இத்தனை வருஷம் கழிச்சுப் பார்த்ததும், அவன் அம்மானு கூப்பிட்ட குரல் கேட்டதுமே மயங்கிட்டாங்க. அவங்களுக்குப் பெண்துணைனு யாருமே இல்லை. அவங்க பிள்ளைதான் வசுதேவரின் மாளிகைக்கு அவங்களைத் தூக்கிட்டுப் போனது. ஆனாலும் நானும் திருவக்கரையும் கூடப் போனோம் துணைக்கு.”

“அவள் போகும்போது என்கிட்டே சொல்லவே இல்லை!’ சுவ்ரதா குற்றம் சாட்டினாள்.

“முதலில் அவள் என்ன சொல்லுகிறாள் என்பதைக் கேட்கலாம் சுவ்ரதா, அங்கே என்ன நடந்தது என்பது எனக்கு மிகவும் முக்கியம்,” என்றான் ருக்மி பொறுமையிழந்து. சுவ்ரதா ஆகாயத்திலிருந்து உதவி கேட்பவள் போல் மேலே நிமிர்ந்து பார்த்துவிட்டு, “அண்ணனும், தங்கையும் எப்படியோ போங்க! நீங்க அடிச்சுப்பீங்க, சேர்ந்துப்பீங்க, என்ன இருந்தாலும் நான் அந்நியம் தானே?” என்றாள். ‘வாயை மூடு! ருக்மிணி மேலே சொல்!” அதட்டினான் ருக்மி.

“மேலே என்ன? மேலே ஒண்ணுமே இல்லை! நானும் திரிவக்கரையும் அங்கே தேவகி அம்மா எழுந்திருக்கும்வரை உட்கார்ந்திருந்தோம். அம்மாவும், பிள்ளையும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரம் அழுதாங்க. பிள்ளை அம்மாவை எப்படியெல்லாமோ சமாதானம் செய்தான். ஆஹா, அந்த வாசுதேவனால் தான் அவ்வளவு அருமையான வார்த்தைகளால் ஒருவரை துக்கத்திலிருந்து மீட்கமுடியும். குரலில் எவ்வளவு நயம்?? எவ்வளவு கருணை?? ஆஹா, மிருதுவான, அதே சமயம் இனிமையான குரல்!” கடைசி வரியைத் தனக்குத்தானே சொல்லிக் கொள்வது போல் மெதுவாய்ச் சொன்னாள் ருக்மிணி.

“மேலே?? வேறு யாரெல்லாம் வந்தனர்??”” ருக்மியால் பொறுக்கமுடியவில்லை. மண்டையே வெடித்துவிடும்போல் இருந்தது.

Monday, January 04, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் இரண்டாம் பாகம்!

மண்ணரசு நான் வேண்டேன்!


சற்று நேரம் அமைதி நிலவியது. முதலில் உயிர்பெற்றவர் அக்ரூரரே. அவர் “ஜெயஸ்ரீகிருஷ்ணா, சாது! சாது!” எனக் கோஷிக்கவும் கூடி இருந்த அனைத்துத் தலைவர்களும் அவரை ஆமோதித்து மகிழ்வோடு கோஷமிட்டனர். எங்கும் கிருஷ்ணனுக்கு ஜெயம் என்ற கோஷம் நிலவ அனைவரும் வசுதேவரையும், வசுதேவன் பெற்றெடுத்த வாசுதேவ கிருஷ்ணனையும் பார்த்தனர். கூப்பிய கரங்களோடும், விநயத்தோடும் கிருஷ்ணன் எழுந்து நின்று சபையோரைப் பார்த்தான். “தாத்தா அவர்களே, தந்தையே, குருவே, மற்றும் அனைத்து யாதவத் தலைவர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விலை மதிக்கமுடியாத, பெறர்கரிய ஒரு பெரிய சிறப்பை எனக்கு அளித்து நீங்கள் கெளரவப் படுத்துகிறீர்கள். இந்த மாபெரும் கண்டத்தின் அனைத்து தேச அரசர்களுக்கும் கிடைக்க முடியாத ஒரு மாபெரும் பதவி இது என்பதையும் நான் அறிந்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் இந்த மதுரா நகரம் இந்த கண்டமாகிய நாட்டின் கிரீடத்தில் ஜொலிக்கும் விலை மதிப்பற்ற ரத்தினமாக விளங்கி வருகிறது. இதன் பெருமை வார்த்தைகளால் சொல்லவும் முடியுமோ?? ஆனால், பெருமக்களே, தகுதியற்ற ஒருவனை நீங்கள் தேர்ந்தெடுத்துவிட்டீர்கள். நான் இன்னமும், இப்போதும் ஒரு இடைச்சிறுவனாகவே இருக்கிறேனேயன்றி ஒரு அரசகுமாரனாகவோ, அல்லது பட்டத்து இளவரசனாகவோ அல்ல. எனக்கு இந்தப் பதவி ஏற்றது அல்ல.”

அனைவரும் ஒருசேர ஒருமித்த குரலில் கிருஷ்ண வாசுதேவனை விட்டால் வேறு யாரும் இந்தப் பதவியை வகிக்க முடியாது என வற்புறுத்தினார்கள். ஆனால் கிருஷ்ண வாசுதேவனோ, “நான் ஒரு அரசன் அல்ல, தலைவரே. என்னால் இந்தப் பதவியை வகிக்க முடியாது. ஒரு மாபெரும் தலைவனுக்குரிய தகுதிகள் எதுவும் எனக்குள் இல்லை. தாத்தா அவர்களே, தாங்களே அரசராக நீடிக்கலாமே? மக்களோ உங்கள் மேல் பெருமதிப்பும், மரியாதையும் பூண்டிருக்கின்றனர். அனைவராலும் நீங்கள் விரும்பப் படுகிறீர்கள். யாதவத் தலைவர்களுக்கும் நீங்கள் தலைவராக இருப்பதில் உடன்பாடே. துணைக்கு என் தந்தையும், மதிப்புக்குரிய அக்ரூரரும் இருக்கின்றனர். நீங்கள் சொல்வதை அப்படியே நிறைவேற்றத் தளபதி ப்ரத்யோதாவும் காத்திருக்கிறார். நான் என்ன சின்னஞ்சிறு சிறுவன், எப்போதும் உங்கள் சரணாரவிந்தத்தில் கிடப்பவனே. முதலில் நாங்கள் முறையான சாஸ்திர, சம்பிரதாயங்களோடு க்ஷத்திரிய மார்க்கத்திற்கு வருகின்றோம். மேலும் வேதங்களைப் பற்றிய அறிவே எங்களுக்குச் சிறிதும் இல்லை. வேதங்களையும் அவற்றோடு ஆயுதங்களைக் கையாள்வது பற்றியும் தெரிந்து கொள்கிறோம். எங்கள் குருகுல வாசமே இன்னும் சரிவர ஆரம்பித்துப் பூர்த்தியாகவில்லை.” என்று எப்போதும்போல் மனதை மயக்கும் சிரிப்போடு கண்ணன் சொன்னான்.

அவ்வளவில் அந்த யோசனை ஏற்றுக் கொள்ளப் பட்டது. சகோதரர்கள் இருவரும் அவர்களின் சிறிய தாய் மகனான உத்தவனோடு சேர்ந்து அரண்மனையில் இளவரசர்களுக்கென ஒதுக்கப் பட்டிருந்த அறையில் போய்த் தங்கினார்கள். மூவரும் சேர்ந்தே படுத்து வழக்கம் கோகுலத்திலும், விருந்தாவனத்திலும். இங்கும் அவ்வாறே படுத்தனர். அரண்மனையில் ஊழியம் செய்யும் பெண்கள் வந்து கவரி வீசத் தொடங்கினர். விளக்குகள் சிறியதாக்கப் பட்டன. அரை இருட்டில் திடீரென ஒரு சிரிப்புச் சத்தம். சிரித்தது வேறு யாருமல்ல, பலராமன் தான். கடந்த மூன்று நாட்களாய்த் தொடர்ந்து நடந்த சம்பவங்களையும், தாங்கள் மூவரும் இப்போது அரண்மனையில் படுத்துத் தூங்குவதையும் நினைத்துப் பார்த்த பலராமன், மூன்று நாட்கள் முன்னால் பெளர்ணமி தினத்தன்று மாட்டிடையர்களாகத் தாம் இருந்ததையும் மூன்று தினங்கள் முழுதாய்ச் சென்ற பின்னர் இன்று அரண்மனையில் இளவரசனாகப் படுத்திருப்பதையும் நினைத்துக் கொண்டான். மீண்டும் சிரிப்பு வந்தது அவனுக்கு. தன் இளைய சகோதரன் நாரதர் சொன்ன தீர்க்க தரிசனத்தை முடித்து வைத்துவிட்டான் தான். ஆனால் அனைவரும் சொல்வது போல் அவன் கடவுளா? அந்தப் பரவாசுதேவனா இவன்?? ம்ம்ம்ம்??? எப்படி இருந்தாலும் இவன் கடவுள் மட்டுமல்ல, நம்பினவர்க்கு நம்பியவற்றைக் கொடுக்கும் வள்ளலும் கூட. இவனைப் போன்றதொரு சகோதரன் எனக்குக் கிடைத்தது என் பாக்கியமே அன்றோ?? பலராமன் தன் அருமைத் தம்பியை இறுகக் கட்டிக் கொண்டான். கண் திறந்து பார்த்த கண்ணன் என்ன என்று கண்களாலேயே வினவ, “நீ ஓர் அற்புதமான, அருமையான, மேன்மையான சகோதரன் கிருஷ்ணா, நீ எனக்குக் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கிறேன்.” என்று சொல்ல, கண்ணன் புன்னகை மாறாமலேயே,” இவை அனைத்தும், நீ என் அண்ணனாக வந்ததால் அன்றோ?” என்று சொல்லிக் கொண்டே தன் அண்ணனை அணைத்துக் கொண்டான். இருவரும் நிம்மதியாகத் தூங்கினார்கள்.

ஆனால் அந்த மதுரா நகரில் விருந்தினர் மாளிகையில் ஒரு பெரிய அறையில் தூங்காமல் விழித்திருந்தாள் பதினாறு வயது மங்கை ஒருத்தி. தன் கைகளைப் பிசைந்து கொண்டாள். அறையின் ஒரு மூலையில் போய் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு எதிரே அவளை விட நான்கைந்து வயது மூத்தவளான இன்னொருத்தி கடுங்கோபத்துடன் நின்று கொண்டிருந்தாள். இளையவளைப் பெரியவள் ஏதோ அதட்டிக் கேட்டுக் கொண்டிருப்பதையும், இளையவள் சற்றுத் தடுமாறினாலும் சமாளித்துக் கொண்டு பதில் சொல்வதும் தெரிகிறது. யார் இவர்கள்?? அந்தச் சிறிய இளம்பெண் விதர்ப்ப தேசத்து ராஜகுமாரியான ருக்மிணிதான். பெரியவளோ, பட்டத்து இளவரசன் ஆன ருக்மியின் மனைவி சுவ்ரதா. தன் நாத்தியைக் கண்டித்துக் கொண்டிருந்தாள் அவள்.

“எங்கே போய்விட்டாய் நீ?? நேற்றிலிருந்து உன்னைக் காணவே இல்லை?? விருந்திற்காக வந்த இடத்தில் இப்படித் தான் சொல்லாமல், கொள்ளாமல் போய்விடுவதா? உன் அண்ணனுக்கு யார் பதில் சொல்வது? உன் தந்தையார் கேட்டால் என்ன சொல்லமுடியும்??” என்று கடுகடுத்துக் கொண்டிருந்தாள் சுவரதா. ருக்மிணி சற்றுத் தயங்கினாலும், சமாளித்துக் கொண்டு, “ எங்கேயும் போகவில்லையே, திரிவக்கரையுடன் தான் இருந்தேன். அதற்குப் பின்னர் தேவகி அம்மாவைப் பார்க்கச் சென்றேன். நீங்கள் தான் வரவே இல்லையே தேவகி அம்மாவைப் பார்க்க. கம்சனின் மனைவிகளோடு இருந்துவிட்டீர்கள்.”

“ஓஹோ, எனக்குப் புரிகிறது, நீ ஏன் அங்கே போனாய் என்று. உன் அண்ணன் வரட்டும். சொல்கிறேன். அவர் உனக்குத் தகுந்த பாடம் கற்பிப்பார்.” என்று ஏளனத்தோடும், கோபத்தோடும் சொன்னாள் சுவ்ரதா. “சீச்சீ, ஒரு பெரிய நாட்டின் இளவரசியாக இருந்து கொண்டு இப்படி நடக்க உனக்கு வெட்கமாய் இல்லை?? மதிப்புக்குரிய, மரியாதைக்குரிய விதர்ப்ப தேசத்து மகாராஜாவான பீஷ்மகனின் கெளரவத்திற்கு இழுக்குத் தேடிவிட்டாய்.”

“ஆஹா, நீ செய்வது மட்டும் ரொம்ப நியாயமோ??” கத்திய ருக்மிணி தன் உதடுகளைக் கோபத்துடன் கடித்துக் கொண்டாள். அவள் அண்ணன் வந்தால்??? என்ன நடக்குமோ??? அவள் அண்ணன் கம்சனின் இறுதி யாத்திரைக்குச் சென்றிருக்கிறான். இன்னும் திரும்பவில்லை. அங்கே என்ன நடக்கிறதோ??? பார்ப்போமா?? ருக்மி என்ன நினைக்கிறான்???

*************************************************************************************

அன்று அதிகாலையிலேயே ருக்மி மற்ற அரச விருந்தினர்களோடு சேர்ந்து கம்சனின் இறுதியாத்திரையில் கலந்து கொள்ளச் சென்றான். மொத்த நகருமே கம்சனின் இறுதி யாத்திரையில்கலந்து கொண்டது. என்னதான் கம்சன் ஒரு கொடுங்கோலனாக இருந்தாலும், இறந்த பின்னரும் வெறுப்பைக் காட்டி அவனுக்குக் கொடுக்கவேண்டிய அரசமரியாதைகளைச் செலுத்தத் தவறலாமா? ஆகவே அனைவருமே கலந்து கொண்டனர். வயதான அரசன் உக்ரசேனன், தன் ஒரே மகனான கம்சனின் இறுதிப் பயணத்தில் மனம் கொள்ளா பாரத்துடனேயே கலந்து கொண்டான். அவன் தான் அனைத்து சாஸ்திர, சம்பிரதாயங்களையும் தன் மகனுக்குச் செய்யவேண்டி வந்துவிட்டது. கம்சனை எரித்துவிட்டு அவன் அஸ்தியை யமுனையில் கரைத்துவிட்டு அனைவரும் யமுனையிலேயே தங்கள் ஸ்நாந பானங்களையும் முடித்துக் கொண்டே அரண்மனைக்குத் திரும்பினர். ருக்மி தனக்கென ஒதுக்கப் பட்டிருந்த அறைக்கு வரும்போது மதியத்துக்கும் மேல் ஆகிவிட்டிருந்தது.

ஏற்கெனவே அவன் மிக்க கோபத்திலும், வருத்தத்திலும், ஆத்திரத்திலும் இருந்தான். கம்சன் ஜராசந்தனின் மாப்பிள்ளையாக எவ்வளவு அதிகாரத்திலும், உன்னத பதவியிலும் இருந்தான். கம்சன் மூலம் ஜராசந்தனின் நட்பைப் பெற்றுத் தானும் ஒரு சக்கரவர்த்தியாகத் தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடனேயே அவன் இந்த தநுர்யாகத்திற்கு வந்திருந்தான். எப்படியேனும் தங்கள் விதர்ப்ப நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கக் கம்சனின் ஆலோசனைகள் பயன்படும் என்ற நம்பிக்கையிலும் இருந்தான். ஆனால் அவன் எண்ணங்கள் எல்லாமே பொய்த்துப் போய்விட்டன. அவ்வளவு ஏன்?? ஊருக்குள் நுழைந்ததில் இருந்தே எதுவும் சரியில்லை!

அந்த இடைப்பையன்கள்! பற்களைக் கடித்துக் கொண்டு தன் கைமுஷ்டியால் தன் உள்ளங்கையைத் தானே குத்திக் கொண்டான் ருக்மி. ஆஹா, எங்கிருந்தோ வந்த இரு இடைப்பையன்கள், நம்மை எவ்வளவு துவம்ஸம் செய்துவிட்டனர்?? அவர்கள் இப்போ திடீர்னு வசுதேவனின் பிள்ளைகளாகவும் ஆகிவிட்டன்ரே? உண்மையாய் இருக்குமா இது??? அதிலும் அந்த இளையவன் இருக்கிறானே?? கறுத்த நிறத்தவன்?? சிரித்துச் சிரித்தே கழுத்தை அறுக்கிறான். அவனைக் கண்டாலே பற்றிக் கொண்டல்லவோ வருகிறது???