ஆஷிகா! ஆஷிகா! திரும்பிவிடு!
அரசன் போரிட்டுக்கொண்டிருந்த வீரர்கள் இருவரையும் நோக்கி நடந்தான். அவன் கையில் நீண்ட வாள் இருந்தது. கண்ணனும், புநர்தத்தனும் ஒருவரையொருவர் கீழே வீழ்த்த முயன்று கொண்டிருந்தனர். வெளிப்படையாகப் பார்க்கும்போது அவ்வாறே தெரிந்தது. ஆனால் உண்மையில் இருவருமே ஒருவரை மற்றொருவர் வீழ்த்தாதவண்ணமே பார்த்துக்கொண்டிருந்தனர். தெய்வீகத் தந்தை ஓங்கிய வாளோடு அவர்கள் இருவரிடையே செல்லவும், “ஓஓஓஓஓஓ” என்றொரு ஓலக்குரல் கேட்டது. அங்கிருந்த அனைவர் மனமும், உடலும் நடுங்கியது அந்தக் குரலைக் கேட்டு. அப்படி அனைவர் மனத்தையும் நடுங்கும்வண்ணம் ஓலக்குரல் கொடுத்துக்கொண்டு, நீண்ட கூந்தல் காற்றில் அலைபாய ஓடி வந்து கொண்டிருந்தது ஒரு மெல்லிய உருவம். இத்தனை மெல்லிய உருவத்துக்குள்ளே இவ்வளவு ஓங்கிய சப்தமா என்னும் வண்ணம் குரல் எதிரொலிக்க ஓடி வந்த ஆஷிகா தன் தகப்பனுக்கும், அந்த வீரர்கள் இருவருக்குமிடையே போய் நின்று மறைத்துக்கொண்டாள். கூட்டம் ஸ்தம்பித்துப் போனது. ஆஷிகா படிகளில் இறங்குவதை மட்டுமே கண்ட அவர்கள், அவள் அலறித்துடித்தவண்ணம் இப்படி வந்து நிற்பாள் என்பதை எதிர்பார்க்கவில்லை.
அங்கே இருவரில் ஒருவர் கொலையுண்டு விழுவதை எதிர்பார்த்துக் காத்திருந்த ரத்தவெறி பிடித்த கூட்டம் ஏற்கெனவே அப்படி நடவாததால் பொறுமையை இழந்திருக்க, இப்போதோ இருவரையும் கொல்ல விடாமல் இளவரசி மறைத்துக்கொண்டும், தடுத்துக்கொண்டும் நிற்கிறாளா? அங்கிருந்த மக்களின் தொண்டையில் இருந்து எழும்பிய சப்தம் உருத்தெரியாமல் நூறு நூறு சிங்கங்கள் ஒரே சமயத்தில் கர்ஜித்தாற்போன்ற தொனியில் கேட்டது. ஆனால் தெய்வீகத் தந்தை கண்ணனையோ, புநர்தத்தனையோ போய் அடையுமுன்னரே தன்னிலைக்கு வந்து விட்டிருந்த கிருஷ்ணன், தன்னைக் காக்கவேண்டித் தன்னைக் கட்டிக்கொண்டு நின்ற ஆஷிகாவை ஒரு கையால் உத்தவனிடம் தள்ளிக்கொண்டே இன்னொரு கையால் உத்தவனின் வாளையும் வாங்கிக்கொண்டான். தன் வாளை நன்கு நீட்டிக்கொண்டே தெய்வீகத்தந்தையின் பக்கம் திரும்பினான். அப்படித் திரும்பும்போதே புநர்தத்தனையும் கீழே வேகமாய்த் தள்ளி அவனையும் அரசனின் வாள் வீச்சிலிருந்து காத்தான். இத்தனையும் சில நொடிகளில் நடந்து முடிந்துவிட்டது.
அரசன் பக்கம் திரும்பிய கிருஷ்ணன், “உத்தவா, ஆஷிகாவையும், புநர்தத்தனையும் கூட்டிச் செல்.” என்று உத்தரவு கொடுத்தான். அரசனை நோக்கிக்கொண்டே கிருஷ்ணன் ஒவ்வொரு அடியாகப் பின்னால் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான். அவனின் ஒவ்வொரு அடியும் துறைமுகத்தை ஒட்டிச் சரக்குகள் இறக்குமிடத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த மாலுமிகளை நோக்கிச் சென்றன. அரசனும் தன்னையறியாமல் முன்னேறினான். அவனையும் தன் பக்கம் மெல்ல மெல்ல இழுத்துக்கொண்டிருந்தான் கண்ணன். கூட்டம் செய்வதறியாது பயம் கலந்த பக்தியோடு கண்ணனையும், தெய்வீகத் தந்தையையும், அன்னை மாதாவையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தது. அதே சமயம் விழிப்புள்ள சிலர், நம் மன்னன் மீதே வாளை மாற்றன் ஒருவன் ஓங்கி விட்டானே? உடனடியாக அவனைக்கொல்லு, குத்து, தள்ளு என அலறிக்கொண்டிருந்தனர். ஆயுதம் தாங்கிய காவலாளிகள் மன்னனைக்காக்கவென்று சுற்றி வளைக்க மன்னன் அவர்களை விலகுமாறு அலறலுடன் எச்சரித்தான். தன்னைத் தானே காத்துக்கொள்ள முடியும் என்றும் உறுதி அளித்தான்.
கண்ணன் மேல் வைத்த வாளை எடுக்காமல் அரசன் முன்னேற, மன்னன் மேல் வைத்த வாளை எடுக்காமல் கண்ணன் பின்னே செல்ல, இருவரும் கப்பலில் இருந்து சாமான்களை இறக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அந்த மரப்பலகையில் இருவரின் காலடி ஓசையும் மட்டும் கேட்டது. சற்றுத் தூரத்தில் மாலுமிகள் நின்றுகொண்டு பார்த்துக்கொண்டிருந்தனர். ஆஹா, என்ன இது? திடீரென அந்தப் பலகை தூக்கப் படுகிறதா? அல்லது பாரம் தாங்காமல் தானே தூக்கிக்கொள்கிறதா? திடீரென அங்கே தோன்றிய புண்யாஜனாக் கப்பலின் வீரர்கள் ஹூக்குவின் துணையோடும், ஹூல்லுவின் துணையோடும் புநர்தத்தனையும், ஆஷிகாவையும் கப்பலில் ஏற்ற வசதியாக அங்கே பிணைத்திருந்த படகுகளில் ஏற்றினார்கள். கண்ணன் அவர்கள் படகுகளில் ஏற்ற்ப்பட்டதை உறுதி செய்துகொண்டு தன் வாளைத் தூக்கி வீசி எறிந்தான். மன்னனைப் பார்த்து, “மஹரிஷி பரசுராமரின் சீடரே, என் மரியாதைக்கு உகந்தவரே! என்னைக் கொல்வதுதான் உங்கள் அறம், தர்மம் என நீங்கள் நினைத்தீர்களானால், இதோ நான் நிற்கிறேன் உங்கள் முன்னால், தாராளமாய் என்னைக் கொல்லுங்கள்.” என்று கூறினான். கூடவே,”ஆனால் உங்களால் என்னைக் கொல்ல முடியாது.” என்றும் சொல்லிச் சிரித்தான்.
ஏதோ மயக்கத்திலோ அல்லது தூக்கத்திலோ இவை எல்லாம் நடக்கின்றனவோ என மன்னன் மயங்கினான். அவனால் எதுவும் செய்ய இயலவில்லை. அவன் கைவாள் அவனையும் அறியாமல் கீழே விழ மன்னன் நிற்கக் கூட முடியாமல் தள்ளாடினான். கண்ணனின் பார்வை அவனை விட்டு அலகவே இல்லை. ஏதோ வசியம் செய்கிறாப்போல் தொடர்ந்து தன் பார்வையை அவன் மீதே கண்ணன் செலுத்த மன்னனால் எதுவுமே செய்ய முடியவில்லை. தள்ளாடிய மன்னனைப் பார்த்த வண்ணம் கண்ணன் கிளம்பத் தயாராகத் துடுப்பைக் கையில் பிடித்த வண்ணம் பிக்ரு காத்திருந்த படகில் குதித்தான். படகு வேகத்துடன் கிளம்பியது. அவ்வளவு நேரம் திகைத்துப்போயிருந்த கூட்டம் அப்போது தான் உயிர் வந்தது போல் ஓலமிட்டுக் கண்ணனைப் பிடித்துக் கொல்ல வேண்டுமென்று கூக்குரல் இட்டது. மன்னன் மயக்கத்தில் ஆழ்ந்தவன் போலப் பார்த்துக்கொண்டிருக்கக் கண்ணன் சாவதானமாகக் கை அசைத்து விடைபெறப் படகு போய்க்கொண்டிருந்தது.
கண்ணனும், மன்னனும் நின்று கொண்டிருந்த கப்பலின் தொடர்புப் பலகையில் ஆயுதபாணியான காவலாளிகள் குதித்துப் படகைத் தொடர முற்பட பலகைக்கும் கப்பலுக்கும் தொடர்பு திடீரென அறுந்து போய்ப் பலகை மிதக்க ஆரம்பித்தது. திடீரென ஏற்பட்ட இந்த அதிர்ச்சியில் ஒரு சில காவலாளிகள் கடலில் விழ, மற்றவர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து தடுமாற ஒரே குழப்பம் நீடித்தது. படகுகள் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தன. சமாளித்துக்கொண்ட ஒரு சிலர் படகைத் தொடர முற்பட, கண்ணனின் வாளால் கொல்லப் பட்டனர். முரசுகள் அதிர்ந்தன கரையில். எக்காளங்கள் ஓலமிட்டன. அவசர நிலைமை அறிவிக்கப் பட்டது. அப்போது திடீரென யாக குண்டத்து நெருப்பு அங்கே தோன்ற அன்னை ராணியின் உடலில் தேவிமாதா உலகுக்கெல்லாம் அன்னையானவள் ஆவிர்ப்பவித்தாள். கூட்டம் இதைப் புரிந்துகொண்டு அன்னையையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது.
மெல்ல மெல்லக் கீழே இறங்கி மன்னன் நின்றிருந்த இடத்துக்கு வந்த அன்னை ராணி தன் காவலாளிகளுக்குக் கட்டளை இட, அவர்கள் மன்னனைத் திரும்ப அழைத்துச் சென்றனர். படகு தெரியும் இடத்திற்காக வந்த ராணி, அங்கே இருந்த ஒரு உயரமான மேடையின் மேல் ஏறிக்கொண்டாள். படகையே விடாமல் பார்த்தாள். படகிலிருந்த ஆஷிகா பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அன்னை ராணியின் விழிகள் இரண்டும் பெரிதாகி அவளை விழுங்க வருகிறாப்போல் தோற்றியது அவளுக்கு. நடுங்கினாள் ஆஷிகா. கண்ணன் சமாதானம் செய்ய முற்பட்டான். அப்போது அனைவரும் கப்பலுக்கு அருகே வந்துவிட்டனர். கண்ணன் ஆஷிகாவைத் தொட்டுச் சமாதானம் செய்ய முற்பட, கரையில் இருந்து, அன்னை ராணியின் குரல், “திரும்பி வா ஆஷிகா, திரும்பி வா!” என்றது. கப்பலில் தானும் ஏறிக்கொண்டு ஆஷிகாவையும் ஏற்ற முயன்ற கண்ணன் அவளைத் தடுக்க முயல ஆஷிகாவோ வைத்த கண் வாங்காமல் அன்னை ராணியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவ்வளவு தூரத்தில் இருந்தும் அந்தக் குரல் தெளிவாக அவளை அழைக்க, ஆஷிகாவோ தன்னிலை இழந்தவளாய் அந்தக் குரலில் வசத்துக்கு ஆட்பட்டுத் திரும்ப முயன்றாள். கண்ணன் தடுத்தும் முடியவில்லை. கப்பலில் பாதி தூரம் ஏறிய ஆஷிகா ஒரே பாய்ச்சல்! கடலில் பாய்ந்தாள். வெகுவேகமாய் ஒரு மீன்குஞ்சைப் போல் நீந்தினாள். கப்பலில் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே ஆஷிகா கரையை அடைந்து தன் அன்னையிடம் சென்று விட்டாள். கண்ணன் மாறாத புன்னகையுடன், “நினைத்தேன், ஒரு நாக கன்னிகை தன் அன்னையைப் பிரிந்து இருப்பாளா என, சரியாகிவிட்டது. நல்லது, பிக்ரு, நாம் செல்வோமா?” என்றான். திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தான் புநர்தத்தன்.
நாளை ஜராசந்தனின் கோபம், தன் மறுமகன் ஆன கம்சனைக் கொன்ற கிருஷ்ணனையும், அவனுக்குத் துணையாக நின்ற யாதவர்களையும் எப்படிப் பழிவாங்குவது என யோசிக்கிறான் ஜராசந்தன். அதோடு மட்டுமா? மற்ற அரசர்களையும் தன் பக்கம் இழுத்துக்கொண்டு கிருஷ்ணனையும், யாதவர்களையும் தனிமைப்படுத்தவும் திட்டங்கள் தீட்டுகிறான்.
nalla velai innikum pathila niruthuveengalonnu ninachen :)
ReplyDeleteகீதா,கண்ணன் கதையை மிகவும் அருமையாகச்
ReplyDeleteசொல்லுகிறீர்கள்!படிக்கச் சுவையாக இருக்கிறது!
வாழ்த்துகள்!நன்றி
அன்புடன்,
தங்கமணி.
எப்படியோ அந்த இடத்தை விட்டு கிளம்பிட்டாங்க..ரைட்டு ;))
ReplyDeleteவாங்க தாத்தா, சஸ்பென்ஸ் வைக்கலை பாருங்க. :D
ReplyDeleteஅம்மா, வாங்க, உங்க கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. உங்கள் ஆசிகள் என்னை நல்வழிப்படுத்தட்டும்.
ReplyDeleteஅப்பாடா கோபி, கடைசியிலே ஒரு வார்த்தை எழுதிட்டீங்க?:P
ReplyDelete