கண்ணன் கேட்ட உதவி!
விதர்ப்ப நாட்டை ஜராசந்தன் ஆக்கிரமிக்க முயன்றபோது கெளஷிகன் அரசியல் விவகாரங்களில் இருந்து முற்றிலும் ஒதுங்கினார். தன் மகன் ஆன பீஷ்மகனிடம் பொறுப்பை ஒப்படைத்த அவர் தான் தனி மாளிகையில் வசித்து வந்தார். இப்போது அவரிடம் தான் ருக்மிணி சென்றாள். தன் தகப்பனைப் பற்றியும், தன் அண்ணனைப் பற்றியும் குறை கூற ஆரம்பித்த ருக்மிணி கோபமாய்ப் பேச ஆரம்பித்துக் கடைசியில் கண்ணீரில் முடித்தாள். அவள் கண்ணீருக்கு அணை கட்ட முடியவில்லை. பாட்டனோ, இவை எல்லாம் ராஜரீகமான விஷயங்கள் எனவும், ஆண்களே புரிந்து கொள்ள முடியும் என்றும், அவர்களால் தான் இவற்றைச் சமாளிக்க முடியும் எனவும் அவளுக்குக் கூறினான். எவ்வளவு கூறினாலும் ருக்மிணியின் கோபம் அடங்கவில்லை. தேவகியின் மைந்தன் கண்ணனுக்கு என்ன நேரிடுமோ எனக் கலங்கினாள்.
ஒரு நாள் அரண்மனையின் கோயில் பூசாரி ருக்மிணிக்குச் செய்தி அனுப்பினார். செய்தியை ருக்மிணியின் செவிலித் தாய் மூலம் அனுப்பி இருந்தார். செவிலித்தாய் ருக்மிணியைப் பிறந்தது முதல் தன் குழந்தை போல் வளர்த்து வந்திருந்தாள். அவள் ருக்மிணியிடம் வந்து திரிவக்கரை செய்தி அனுப்பி இருப்பதாய்ச் சொன்னாள்.
“அம்மா, அம்மா, எவ்வளவு நற்செய்தி கூறுகிறீர்கள். திரிவக்கரை என்ன சொன்னாளாம்?” மனதுக்குள் படபடப்பு. கிருஷ்ணனுக்கு ஏதேனும் நடந்து விட்டதோ??
“ஒரு இளைஞன் திரிவக்கரையின் செய்தியைக் கொண்டு வந்துள்ளான். அவன் பெயர் உத்தவனாம், அவனை உனக்குத் தெரியும் எனச் சொல்கிறானே?”
“ஆஹா, உத்தவன்?? அம்மா, நிச்சயம் தானே? அது உத்தவனா? என்ன செய்தி கொண்டு வந்துள்ளான்?” கண்ணனை விட்டு இணை பிரியாமல் அன்றோ இருப்பான் உத்தவன்? அவனே செய்தி கொண்டு வந்துள்ளான் என்றால் அதில் ஏதோ இருக்கும் நிச்சயமாய்.
“அவன் குருதேவரிடம் சொல்லமாட்டேன் என்று சொல்லி விட்டானே. உன்னை நேரில் சந்தித்துத் தனிமையில் தான் சொல்வானாம்.”
“ஓஹோ, அதுவும் அப்படியா? அம்மா, அவரைத் தாத்தாவின் மாளிகைக்கு வரச் சொல்லுங்கள். குருதேவரிடம் சொல்லி அழைத்து வரச் செய்யுங்கள். நான் அவரை அங்கே சந்திக்கிறேன். இதோ நான் இப்பொழுதே பாட்டனாரின் மாளிகைக்குச் செல்கிறேன்.”
கெளஷிகனின் மாளிகைக்குச் சென்ற ருக்மிணி அவரிடம் உத்தவன் வந்திருக்கும் செய்தியையும், தேவகியிடம் இருந்து செய்தியைக் கொண்டு வந்திருப்பான் என்றும் சொல்ல, ருக்மிணியின் மனத்தைப் புரிந்து கொண்ட அவள் பாட்டனார் உத்தவனை அங்கே தனிமையில் எவரும் அறியா வண்ணம் சந்திக்கச் சம்மதித்தார். இளம் வயதிலேயே தாயை இழந்த ருக்மிணிக்குப் பாட்டனாரின் இத்தகைய அன்பே அவள் வாழ்க்கையின் கொஞ்சமாவது ஆறுதலைக் கொடுத்து வந்தது. இதைப் பாட்டனும் அறிந்திருந்தார். அன்று மதியம் உத்தவன் வந்தான். பெரியவரை நமஸ்கரித்துத் தன் அறிமுகத்தைச் சுருக்கமாய் முடித்துக்கொண்ட உத்தவன், “நான் தேவகியிடமிருந்து செய்தி கொண்டு வந்துள்ளேன். ஜராசந்தனின் படைகளும், ஜராசந்தனும் மதுராவை நெருங்கிவிட்டார்கள். எந்நேரம் வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம். கிருஷ்ணனின் உயிரையும், பலராமனின் உயிரையும் கேட்டு நடத்தப் போகும் இந்தத் தாக்குதலில் இருந்து மதுராவையும், அதன் மக்களையும் பிழைக்க வைக்க வேண்டி, கிருஷ்ணனும், பலராமனும் இரவோடிரவாக மதுராவை விட்டுச் சென்றுவிட்டார்கள். “ ருக்மிணியின்கலக்கம் கொஞ்சம் குறைந்தது. ஆறுதலாய்ப் பெருமூச்சு விட்டாள். மேலும் கேள்விக்குறியுடன் உத்தவனைப் பார்க்க அவன் தொடர்ந்தான்.
“அவர்கள் இருவரும் மஹேந்திர மலைப்பக்கம் பார்கவ பரசுராமரைச் சந்திக்கப் போகின்றனர். இன்னும் சில நாட்களில் கால்நடையாக விதர்ப்பாவை அவர்கள் தாண்டிச் செல்வார்கள். நான் விரைந்து செல்லும் குதிரையில் முன்னால் வந்து இளவரசி ருக்மிணிக்கு தேவகி அன்னையின் செய்தியைச் சொல்ல வந்துள்ளேன்.”
ருக்மிணியின் முகம் செக்கச் சிவந்த அந்திவானச் சூரியனைப் போல பிரகாசித்தது. நாணம் அவள் முகத்தைக் கவ்வியது. இது தேவகியின் செய்தி எனச் சொல்லப் பட்டாலும் கிருஷ்ணனின் சம்மதத்தின் பேரிலேயே வந்துள்ளது என அவளால் உணர முடிந்தது. கெளஷிகன் தன் பேத்தியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அதில் தென்பட்ட ஆச்சரியமான உணர்ச்சிப் பிரவாகத்தைக் கண்டு அதிசயித்தான். இந்தப் பெண் அதிசயமானவள், கிருஷ்ணனின் இதயத்தை இவள் வென்றாளா? இவளைக் கிருஷ்ணன் வென்றானா? சொல்வது கஷ்டம் தான். உத்தவனைப் பார்த்து, மேலே சொல் என்னும் பாவனையில் கை அசைத்தான்.
உத்தவன் சற்றே தயக்கத்துடன், “தேவகி அன்னை, விதர்ப்பாவின் வழியாகச் செல்லும் தன்னிரு குமாரர்களுக்கும் பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தித் தரும்படி இளவரசி ருக்மிணியிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பட்டத்து இளவரசர் ருக்மி ஜராசந்தனின் படைகளோடு தன்னை இணைத்துக்கொண்டது இந்தத் தேசமெங்கும் பேச்சாய் இருக்கிறது. இந்நிலையில் விதர்ப்பாவைத் தாண்டிச் செல்லும் தேவகியின் குமாரர்களின் பாதுகாப்பைப் பற்றி தேவகி அன்னை கவலை கொள்வது நியாயம் அல்லவா?”
ருக்மிணிக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. அவளுடைய சொந்தக் கட்டுப்பாட்டில் ஒரு சிறு படை அவள் பாதுகாப்புக்கென இருக்கிறது. பாட்டனாரின் முகத்தைக் கேள்விக்குறியோடு பார்த்தாள். “குழந்தாய், உன் சகோதரனோ, உன் தகப்பனோ அநுமதிக்கவேண்டும்.” என்று கவலையுடன் கெளஷிகர் சொன்னார். “தாத்தா, நீங்கள் தான் இதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும். உத்தவரே, என் தாத்தா இதற்கான ஏற்பாடுகள் செய்வார். என் தமையனின் சகோதரியான நான் உதவி செய்வேன்.” என்று ருக்மிணி சொல்லக் கடுமையாக மறுத்தார் கிழவர். ருக்மிணிக்குக் கண்ணீர் பொங்கியது. வழக்கம்போல் கண்ணீர்ப் பிரவாகத்தினூடே அவள், புலம்பினாள்.
“இந்தப் பரந்த உலகில் எனக்கு உதவி செய்வார் யாருமே இல்லையா? என் தந்தை, என் தமையன், என் அண்ணி, அவ்வளவு ஏன்? என்மேல் உயிரையே வைத்திருப்பதாய்ச் சொல்லும் என் தாத்தா! அனைவருமே என்னைக் கைவிட்டுவிட்டனரே? அம்மா, என் அம்மா, என்னைப் பெற்றுவிட்டு நீ போய்விட்டாயே? என்னையும் கூடவே அழைத்துச் சென்றிருக்க மாட்டாயா?” தன்னிரு கரங்களாலும் முகத்தை மூடிக்கொண்டு விம்மி விம்மி அழுதாள் ருக்மிணி. மெல்லிய அவள் தேகமே நடுங்கியது. புயலில் அசைந்தாடும் கொடி போலக் காட்சி அளித்தாள் அவள். துக்கமாகிய புயல் அவளை ஆட்டியது. கிழவனாரால் அவள் துயரத்தைக் காணச் சகிக்கவில்லை,. அவளைத் தன் மடியில் போட்டுக்கொண்டு அவளைத் தேற்றினார். “குழந்தாய், உன் கண்களில் நீர் வர நான் பார்த்துக்கொண்டிருப்பேனா? என் உயிர் உள்ளளவும் அது நடக்காது. நீ என்ன கேட்கிறாயோ அப்படியே நடக்கும். இப்போது சந்தோஷம் தானே?” என்று சொல்லிவிட்டு உத்தவனைப் பார்த்து, “உத்தவா, உன் துணிகளை மாற்றிக்கொண்டு ஒரு பிராமணனைப் போல் உடை தரித்துக்கொண்டு வா. என்னுடன் தங்கி இரு. தேவகியின் குமாரர்கள் வந்துவிட்ட செய்தி உனக்குக் கிடைத்ததும், அவர்களை அழைத்துக்கொண்டு என்னிடம் வா. நான் உதவி செய்கிறேன்.” என்றான்.
பாட்டி இப்படி சஸ்பென்ஸ் வைக்க கூடாதுன்னு எத்தனை முறை சொல்றது
ReplyDelete