சங்கரா தொலைக்காட்சியில் காஞ்சி காமகோடி பீடம் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 75-வது ஆராதனை விழாவைப் பற்றிய நேரடி ஒளிபரப்பு வந்தது. குஜராத்தில் அஹமதாபாதில் நடந்த இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். மாற்று மதங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் விழாவுக்கு அழைக்கப் பட்டு முதல் வரிசையில் மரியாதையுடன் உட்கார்த்தி வைக்கப் பட்டனர். வயலின் வித்துவான் திரு எல். சுப்பிரமணியம், தன் மகனோடு சேர்ந்து இன்னிசை மழை பொழிந்தார். வெங்காடாசல நிலையம் பாடல் மிக அருமையாக வாசித்தார். பக்கவாத்தியக்காரர்களும் அவரின் வேகத்துக்கு ஒத்துழைக்க ஒரு அருமையான கச்சேரி அரங்கேறியது.
பின்னர் எல். சுப்பிரமணியம் அவர் மனைவி கவிதா கிருஷ்ணமூர்த்தி, மகன், பக்கவாத்தியக் கலைஞர்கள் அனைவரும் கெளரவிக்கப் பட்டனர். பின்னர் திரு ஹரீஷ் என்பவர் முன்னுரை ஆற்றினார். குஜராத் பூகம்பத்தின் போது பாதிக்கப் பட்ட கட்ச் பகுதியில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஒரு நாளைக்குக் குறைந்த பக்ஷமாய் 700 மைல்கள் பிரயாணம் செய்து ஆங்காங்கே பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணத் தொண்டு ஸ்ரீமடத்தின் மூலமாய் நடக்க ஏற்பாடுகள் செய்ததைச் சுட்டிக் காட்டினார். அதில் குஜராத்தின் போரா முஸ்லீம்களும் அடங்குவார்கள் என்றும் அவர்களும் இன்றைய விழாவில் பங்கேற்கின்றனர் என்றும் கூறினார். குஜராத்தின் ஒவ்வொரு மூலை, முடுக்குக்கும் ஸ்ரீ ஸ்வாமிகள் விஜயம் செய்து பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு ஸ்ரீமடத்தின் சார்பில் நிவாரணங்கள் செய்ய ஏற்பாடு செய்து கொடுத்ததையும், இது போல் ஸ்ரீ ஸ்வாமிகள் இந்தியா முழுமையும், நேபாளம் போன்ற நாடுகளிலேயும் மூன்று முறை சுற்றுப் பயணம் செய்து ஆங்காங்கே சமூகப் பணி ஆற்றியதையும் குறிப்பிட்டார். சிதம்பரத்திலிருந்து வந்திருந்த பட்டு தீக்ஷிதரும், சிவராம தீக்ஷிதரும் ஸ்ரீ ஸ்வாமிகளுக்குப் பொன்னம்பலத்தான் படமும், குஞ்சிதபாதமும், மாலையும் கொடுத்தனர். அதே போல் நரேந்திர மோடிக்கும் கொடுக்கப் பட்டது.
டாக்காவின் டாகேஸ்வரி கோயிலுக்கு ஸ்ரீஸ்வாமிகள் விஜயம் செய்தபோது அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா ஸ்வாமிகளை வரவேற்றுப் பேசியதையும் டாகேஸ்வரி கோயிலின் திருப்பணிக்கு அரசின் தரப்பிலிருந்து நிதி உதவி செய்ததையும், அங்கே உள்ள ஒரு வாயிலுக்கு ஸ்ரீஜெயேந்திரா தர்வாஜா எனப் பெயரிட்டிருப்பதையும் குறிப்பிட்டார். பின்னர் இலக்கியம், இசை, சங்கீதம், சமூகசேவை, சாஸ்திர விற்பன்னர்கள் எனத்தேர்ந்தெடுக்கப் பட்ட நபர்களுக்கு ஸ்ரீஸ்வாமிகளால் மரியாதைகள் செய்யப் பட்டு விருதுகள் வழங்கப் பட்டன. பின்னர் திரு நரேந்திரமோடி பேசினார். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஸ்ரீராமன் என்ற பெயர் ஒவ்வொரு மாதிரி வழங்கப்பட்டாலும் அடிப்படையில் அனைத்துமே ஸ்ரீராமனின் பெயர் தான். இந்தியா முழுதும் இப்படிப்பிணைக்கப் பட்டுள்ளது என்ற மோடி ஸ்ரீஸ்வாமிகளின் தொண்டையும் பாராட்டிப் பேசினார். குஜராத் மாநிலத்திற்கு அடிக்கடி விஜயம் செய்து அங்கே அவர் நடத்திவரும் பணிகளையும் குறிப்பிட்டார்.
பின்னர் ஸ்ரீஸ்வாமிகள் சிற்றுரை வழங்கி அனைவரையும் ஆசீர்வதிக்க, எம். எஸ், அம்மாவின் குரலில் மைத்ரிம் பஜதே பாடல் முழங்கியது. கூடவே பாடின ஸ்ரீ ஸ்வாமிகள் பின்னர் வந்த தேசீய கீதத்தின் போதும் எழுந்து நின்று தாமும் கூடவே பாடினார். படங்கள் எடுத்திருக்கேன். காலம்பரதான் கணினியில் இணைக்கணும். காலம்பரச் சுட்டி கொடுக்கிறேன்.
படங்கள்
No comments:
Post a Comment