ஜராசந்தன் வருகின்றான்!
தோல்வியே காணாத ஜராசந்தன் தன் வாழ்நாளில் இப்படிப் பட்டதொரு பெரிய அடியை வாங்கியதில்லை. அவன் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க ஆரம்பித்ததில் இருந்து கம்சன் அவனுக்குத் துணையாக நின்று ஜராசந்தனின் அனைத்துக் கொடூரமான நடவடிக்கைகளுக்கும் துணை போயிருக்கின்றான். தன் பங்குக்கு யாதவ குலத்தையே இரண்டாய்ப் பிரித்து உடைத்தும் இருக்கிறான். அவனுடைய ஈடு இணையற்ற வீரத்தைக் கண்டே தன்னிரு மகள்களையும் கம்சனுக்குக் கொடுத்தான் ஜராசந்தன். இப்போது அந்தப் பெண்கள் இருவரும் இளம்பருவத்திலேயே விதவையாகிவிட்டனர். அதோடு ஜராசந்தனின் வம்சத்தைச் சேர்ந்த வ்ருதிர்கனனும் அந்தக் கிருஷ்ணனாலும், அவன் அண்ணனாலும் துண்டு துண்டாய்க் கொல்லப் பட்டிருக்கிறான். ஆஹா, இப்படி ஒரு அவமானமா எனக்கு? உண்மையாகவே மீசை கோபத்தில் துடித்தது ஜராசந்தனுக்கு. கோபம் தலைக்கு மேல் ஏறியது. பதினாறு வயது தாண்டாத இரு இளம் சிறுவர்கள், அதுவும் மாடு மேய்க்கும் சிறுவர்கள், அவர்கள் கம்சனின் மறுமகன்களாம், அவர்களால் கொல்லப் பட்டிருக்கிறானே என் அருமை மறுமகன். அதோடு மட்டுமா? ஜராசந்தன் மதுராவின் காவலுக்கென அனுப்பி இருந்த பெரும்படையும், அதன் தலைவர்களும் அங்கிருந்த யாதவர்களால் அவமானம் அடைந்து திரும்பி இருக்கின்றனர். அவர்கள் திரும்பியதும் மதுராவின் நடந்ததைப் பற்றிக் கதை கதையாக வர்ணிக்கின்றனர். போறாததுக்கு, இந்த ருக்மி, விதர்ப்ப நாட்டுப் பட்டத்து இளவரசன் நேரே மகதத் தலைநகரான கிரிவ்ரஜ நகருக்கே புறப்பட்டு வந்துவிட்டான். அவனும் கதை கதையாகத் தான் சொல்கிறான்.
இப்போது இன்னும் மனம் வருந்தும்படியாக ஒரு நிகழ்வு. அவனிரு பெண்களும் ஒருவருஷம் துக்க நாட்களை அநுசரித்தபின்னர், மதுராவில் இருந்து மகதம் திரும்பி விட்டார்கள். இருவரும் துக்கத்திலும், துயரம் தாங்காமலும் துடிதுடித்து அழுவதைக் காணச் சகிக்கவில்லை. மேலும் தங்கள் கணவனைத் தந்தை சரியானபடி பாதுகாக்கவில்லை என்று குற்றமும் சாட்டுகின்றனர். மகத சாம்ராஜ்யத்தின் வளர்ச்சிக்காக உழைத்த தங்கள் கணவனைச் சரியான படி கவனித்துப் பாதுகாக்காத நீயும் ஒரு தகப்பனா என்று தந்தையை வசை பாடினார்கள் இருவரும். கோபத்துடன் ஜராசந்தன், “வசுதேவனின் இரு குமாரர்களையும் யமனிடம் அனுப்பும் வரையில் ஓயமாட்டேன். இது சத்தியம். ஆகாசவாணி, பூமாதேவி சாட்சியாக, அஷ்டதிக்பாலர்கள் சாக்ஷியாக, சூரியன், சந்திரன் சாக்ஷியாக இது சத்தியம்!” என்று கடும் சபதம் எடுத்துக்கொண்டான். விதி சிரித்தது. மதுராவின் மேல் படை எடுக்கவேண்டும் எனத் தீர்மானம் செய்தான். அவன் உடனே உதவிக்கு அழைத்தது. சேதி நாட்டு அரசனும், குந்தியின் சகோதரியின் கணவனும் ஆன தாமகோஷனை. பின்னர் விதர்ப்ப நாட்டு அரசனை விட அவன் இளவரசன் யாதவர்களை, முக்கியமாய்க் கண்ணனை அழிப்பதில் முனைப்பாக இருப்பது தெரிந்து அவனையும், அவந்தி இரட்டையர்களான விந்தன், அநுவிந்தனையும், சால்வ தேசத்து அரசனையும், திரிகர்ட தேசத்துத் தலைவனையும் தன் பக்கம் சேர்த்துக்கொண்டான்.
நாடு முழுமைக்கும் தனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் தூது அனுப்பி வைத்தான். தன்னுடைய ஏற்பாடுகள் முழுமையடைந்தவுடன், மழைக்காலம் முடியும் வரை காத்திருந்து தன் படைகளை மதுராவை நோக்கிச் செலுத்தினான் ஜராசந்தன். மதுராவை அப்போது நிர்வாகம் செய்து கொண்டிருந்த யாதவத் தலைவர்களுக்கு ஒற்றர்கள் மூலம் செய்திகிடைத்தது. ஜராசந்தன் படை எடுத்து வருவதாயும், கிருஷ்ணனையும் , பலராமனையும் கொடுத்துவிட்டால் படை எடுப்பு நீடிக்காது எனவும், இல்லாவிட்டால் மதுராவை அழிக்கப் போவதாயும் ஒற்றர்கள் கூறினார்கள். பலராமன் கண்ணனோடு வைவஸ்வதபுரி செல்லவில்லையாதலால், குரு சாந்தீபனியின் ஆசிரமத்திலிருந்து திரும்பியிருந்தான். சில நாட்களில் கண்ணனும், புநர்தத்தனை குருவிடம் ஒப்படைத்துவிட்டுத் திரும்பி விட்டான். அப்போது மதுரா நகரமே சந்தோஷ ஆரவாரத்தில் இருந்தது. ஏற்கெனவே பராபரியாகச் செய்திகள் வந்த வண்ணமிருந்தன. கண்ணன் வைவஸ்வதபுரி சென்றதும், நாகலோகத்திலிருந்த புநர்தத்தனை மீட்டுக்கொண்டுவந்ததும், ஆங்காங்கே மக்களால் பேசப்பட்டு வந்தது. இப்போது கண்ணனும் திரும்பிவிடவே, உத்தவன் மூலம் அனைத்து விஷயங்களையும் அறிந்த மக்கள் கண்ணனைத் தெய்வமாகவே கொண்டாட ஆரம்பித்தனர்.
கண்ணன் திரும்பி வந்த நாளை ஒரு பெரும் விழா போல் எடுத்தனர். உக்ரசேனனே நேரில் சென்று கண்ணனை வரவேற்றிருந்தார்.பதினெட்டு வயது நிரம்பாத கண்ணனனத் தங்கள் தலைவனாக ஆகும்படி வற்புறுத்தினார்கள். உக்ரசேனனுக்கோ வயதாகிவிட்டது. மகனையும் இழந்தபடியால் மனமும் பலவீனமடைந்திருந்த நிலையில் அவருக்கும் இதுவே சம்மதமாய் இருந்தது. ஆனால் கண்ணன் தனக்கு மூத்தவனிருக்கத் தான் எப்படித் தலைமை ஏற்பது என மறுக்க பலராமனோ, தன்னைவிடக் கண்ணனே அனைவரிடமும் ஒத்த தோழமையுடன் பழகுகிறான் என்று தனக்கு வந்த பதவியை மறுத்துக்கொண்டிருந்தான். இப்படிப் பட்ட ஒரு சூழ்நிலையில் தான் மகத நாட்டுப் படை மதுராவை நோக்கி வேகமாய் வந்து கொண்டிருக்கும் செய்தி கிடைத்தது. உடனடியாக அவசரக் கூட்டத்தைக் கூட்டினார் உக்ரசேன அரசர். ஒற்றர்கள் சொன்ன செய்தியோ பயங்கரமாய் இருந்தது. கடந்த இரு வருடங்களில் இந்தப் படை எடுப்புக்குத் தயாராக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டு பூரண உதவிப் பொருட்கள், அனைத்து வித மருத்துவ ஏற்பாடுகள், அஸ்திர, சஸ்திரப் பிரயோகங்கள், ஆயுதங்கள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு, தேவையான உணவுப்பொருட்கள், சமைக்கும் ஆட்கள் எனப் பரிபூரணமான ஒரு முற்றுகைக்குத் தயாராய் வருவதாய்த் தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த உக்ரசேனர் தன் படைத் தலைவர் ஆன, விகத்ருவைப் பார்த்து, முற்றுகையை எத்தனை நாட்கள், மாதங்கள், அல்லது வருடங்கள் மதுரா தாக்குப் பிடிக்கும்? குறைந்தது ஆறுமாதமாவது தாங்குமா?
மன்னரின் நம்பிக்கை பொய்த்துப்போகும்படி விகத்ரு சொன்னான்:”மரியாதைக்குகந்த அரசே, மதுராவின் கோட்டை பலவீனமாய் உள்ளது. தங்கள் குமாரரும், மதுராவின் முன்னாள் அரசரும் ஆன கம்சர், பல வருடங்கள் வெளி நாட்டுப் படை எடுப்பிலேயே இருந்துவிட்டமையால் மதுராவை கவனிக்கவில்லை. மதுரா நகர் இன்றைக்கு யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து கொள்ளும் வசதியோடு எந்தவிதமான பாதுகாப்புமின்றி உள்ளது. அதோடு இப்படி ஒரு முற்றுகையை எதிர்பார்க்காததால் போதிய வீரர்களோ, ஆயுதங்களோ, அவர்களுக்கு அளிக்கவேண்டிய உணவுப் பொருட்களோ இல்லை. அவ்வளவு ஏன்? இங்கே இருக்கும் மக்களுக்கே போதிய உணவுப்பொருட்களை நம்மால் அளிக்க முடியாது.” என்றான். மேலும் கம்சன் இறந்ததும், அவனால் வெளியேற்றப் பட்ட மக்கள் திரும்பி வந்ததால் மக்கள் தொகையும் அதிகமாகிவிட்டதையும் தெரிவித்தான். உக்ரசேனர் செய்வதறியாது திகைத்தார்.
“ஆஹா, அக்ரூரரே, நீங்கள் வெளி தேசங்களின் உதவிக்குச் சென்றிருந்தீர்களே? அவர்களிடம் கேட்டீர்களா? உங்கள் தூதுவர்கள் என்ன சொல்கின்றனர்??’ உக்ரசேனன் கேட்டார்.
அக்ரூரர் சொல்லுவார்:”அரசே, நம்முடைய நண்பர்கள் யாவரும் இப்போது நமக்கு உதவி செய்யும் நிலையில் இல்லை. சேதி நாட்டு அரசன் ஆன தாமகோஷன் நமக்கு உதவி செய்ய நினைத்தாலும் ஜராசந்தன் விடமாட்டான். ஆகையால் அவன் வெளிப்படையாக ஜராசந்தனுடனே சேருவான். ரகசியமாக நமக்கு ஆயுத உதவி வேண்டுமானால் கொடுப்பான். விதர்ப்ப நாட்டிலிருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது. நானே ஹஸ்தினாபுரம் சென்றிருந்தேன். பீஷ்ம பிதாமகரையும் சந்தித்து உதவி கேட்டேன். அவர் தான் இந்த சூழலை நினைத்து மிக வருந்துவதாயும், ஆனால் தற்சமயம் உதவும் நிலையில் இல்லை என்றும் சொன்னார். அதற்கு அவர் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? குருட்டு அரசன் திருதராஷ்டிரனும், அவன் மூத்த மகன் துரியோதனனும் நாம் பாண்டுவின் புத்திரர்களுக்குப் பக்ஷமாக நடக்கிறோம் எனச் சந்தேகப் படுகின்றார்களாம். இதை அந்த அரசன் திருதராஷ்டிரன் என்னிடம் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் இது தான் அவன் உள் நோக்கம். நமக்கு ஹஸ்தினாபுரம் உதவினால் பாண்டுவின் புத்திரர்களின் கை ஓங்கிவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் ஹஸ்தினாபுரத்திலிருந்து நமக்கு உதவி கிட்டாது என்று சொல்கின்றனர்.” என்றார் அக்ரூரர்.
“எனில் நம்மால் முற்றுகையைத் தாக்குப் பிடிக்க முடியாது?” உக்ரசேனர் கேட்க, விகத்ரு அதை ஆமோதித்தார். “சில நாட்கள் கூட முற்றுகையை நம்மால் தாங்க முடியாது.”
hmm muthal poraa
ReplyDelete