மதுராபுரி எப்படிக் கிடைத்தது??
“ம்ம்ம்ம்ம்?? போதுமான உணவுப் பொருட்களும் இல்லை, படைகளும் தயாராக இல்லை. எனில் முற்றுகையை எவ்விதம் எதிர்கொள்வது? கிருஷ்ணன் என்னமோ மதுராவின் இளைஞர்களுக்குப் போர்ப்பயிற்சி அளிப்பதாய்க் கேள்விப் பட்டேனே?” உக்ரசேனர் கேட்க, வசுதேவரோ அந்தப் படை எல்லாம் இத்தனை பெரிய தாக்குதலை எதிர்கொள்ளும் அளவு பலமில்லாதது எனத் தெரிவித்தார். கண்ணன் எழுந்து நின்று உக்ரசேனரை வணங்கிவிட்டு, இரு கைகளையும் கூப்பிய வண்ணம், “அரசே, போர் என்பது வெறும் உடல்பலத்தால் மட்டுமின்றி, புத்தியாலும் இதயத்தாலும் போரிடவேண்டிய ஒன்று. அப்படிச் சில இளைஞர்கள் மதுராவைக் காக்கவேண்டித் தங்கள் உயிரையும் தியாகம் செய்யத் தயாராய் இருக்கின்றனர்.” என்றான்.
“யாரெல்லாம் நமக்கு உதவ முடியுமோ அவர்களுக்கு எல்லாம் இப்போது நம் உதவிக்கு வரமுடியாததொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாசுதேவ கிருஷ்ணா, உன்னைத் தான் நம்பி உள்ளோம். ஏதேனும் வழி இருக்கிறதா?”
“அரசே, இப்போது நாம் செய்யவேண்டியது ஒன்றே தான். நாம் மிகப் பலவீனமான நிலையில் இருக்கிறோம். மதுராவையும் அதன் மக்களையும் காக்க ஒரே வழிதான் இருக்கிறது. ஜராசந்தன் கேட்டிருப்பது என்னையும், பலராமனையும் மட்டுமே. நாங்கள் இல்லை எனில் அவன் மதுராவுக்குள் நுழைய மாட்டான். நாங்கள் இங்கே இருந்தால் மதுராவுக்குப் பல வகைகளிலும் நாசம் ஏற்படும். ஆகவே நாங்கள் இருவரும் நகரை விட்டுத் தொலை தூரம் சென்று விடுகிறோம். நாங்கள் இங்கே நகருக்குள் இல்லை என்பது தெரிந்தால் ஜராசந்தன் முற்றுகையைக் கைவிட்டு எங்களைப் பின் தொடருவான்.” என்றான் கண்ணன்.
“ஆஹா, இது என்ன?? எங்கே செல்வீர்கள் நீங்கள் இருவரும்? அவன் மஹா சக்கரவர்த்தி தெரியுமா? அவனின் செல்வாக்கும், பராக்கிரமமும், சஹ்யாத்ரி மலைகளையும் தாண்டி பரந்து விரிந்துள்ளது. அவனுக்கு நீங்கள் எதிரி என்பது தெரிந்தால்????” உக்ரசேனருக்கு நினைக்கவே நடுங்கியது. அக்ரூரரோ, “ஆனால் அவன் நெருங்கிவிட்டானே? நாளைக்குள் மதுராவுக்குள் நுழைந்துவிடுவான் போலிருக்கிறதே?” என்றார். கண்ணன்,”இதோ உடனே நாங்கள் கிளம்பிவிடுகிறோம். விகத்ரு, நீங்கள் சொல்லுங்கள், இந்தப் பரந்த பூமியின் எல்லாப் பாகங்களுக்கும் சென்றவர் நீர். உமக்குத் தெரியும் எங்கே சென்றால் எங்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என. சொல்லுங்கள்.” என்றான் கண்ணன்.
“இதை விட நல்ல முடிவு எதுவும் இல்லை.” அனைவரும் ஒரு மனதாக ஆமோதிக்க, கிருஷ்ணனின் தந்தை வசுதேவனுக்கோ கண்ணன் எங்கே செல்லமுடியும் என்று கவலை. சேதிநாட்டு அரசனான தாமகோஷன் வசுதேவனின் தங்கை கணவனாக இருந்தும் ஜராசந்தனின் நண்பனாகிவிட்டபடியால் கண்ணனுக்கு உதவ முடியாது. ஆகவே கண்ணன் சேதிநாட்டுப் பக்கம் செல்ல முடியாது. விதர்ப்பநாட்டு இளவரசன் ருக்மியோ கண்ணனைக் கண்டாலே கொல்லும் வெறியோடு உள்ளான். ஆகவே அங்கும் செல்லமுடியாது. மற்ற நாடுகளோ ஏதோ ஒரு வகையில் ஜராசந்தனுக்குக் கட்டுப்பட்டுள்ளது. வசுதேவன் கவலையில் ஆழ்ந்தான். கண்ணனோ அவனைத் தேற்றினான். ஜராசந்தன் நியாயமாகவும், தர்மத்தின் வழியிலும் செல்லவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய கண்ணன், அவனுடைய அழிவு தனக்குத் தெரிவதாயும் கூறினான். ஆனால் அவனை அழிக்கவேண்டிய தக்க தருணம் இன்னும் நெருங்கவில்லை என்பதால் தாமதிக்க வேண்டி இருக்கிறது என்ற கண்ணன், மீண்டும் தாங்கள் எங்கே சென்றால் பத்திரமாய் இருக்க முடியும் எனக் கேட்டான்.
அதற்கு விகத்ரு, விண்ணைத் தொடும் சஹ்யாத்ரி மலைத் தொடரின் மறுபக்கம் கரவீரபுரம் என்னும் நகரம் இருப்பதாகவும், யாதவ குலத்து முன்னோர்களில் ஒருவனான மாதவன் என்பவனால் அங்கே ஒரு நாடு ஸ்தாபிக்கப் பட்டதாகவும், இந்த நகரம் அதன் வழித்தோன்றல்களின் ஒருவனான பத்மவர்மாவால் ஏற்படுத்தப் பட்டதாகவும், தற்சமயம் அங்கே ஸ்ரீகாலவன் என்னும் அரசன் ஆண்டு வருவதாகவும் கூறினான். ஸ்ரீகாலவன் எவ்வகையில் நமக்கு உறவினன் ஆகின்றான் என பலராமன் கேட்க, யாதவர்களின் முன்னோர்களைப் பற்றிக் கண்ணனும் தெரிந்து கொள்ள ஆசைப்பட வசுதேவன் கூற ஆரம்பிக்கிறான்.
யாதவர்கள் எவ்வளவு தூரம் பரந்து விரிந்திருக்கிறார்கள் என ஆச்சரியமடைந்தான் கண்ணன். வசுதேவன் கூறினார்: யயாதியின் பிள்ளைகளில் ஒருவனான யதுவின் வம்சாவழியான நம் குலத்து முன்னோர்களில் ஹர்யஷ்வா என்னும் அரசன் மதுவனத்தை ஆக்கிரமித்திருந்த மது என்னும் துர்த் தேவதையின் மகளான மதுமதியை மணக்க நேரிட்டது. அதற்குப் பரிசாக அவனுக்கு அநர்த்தம், சுராஷ்டிரம் என்ற நாடுகள் பரிசாய்க் கிடைத்தது. அவனே கிரிநகரை நிர்மாணம் செய்தான். யாதவ குல இளவரசிகள் ஐவரை மணந்த நாக குல அரசன் ஆன தூம்ரவர்ணனுக்கு அவர்கள் மூலம் ஐந்து இளவரசர்கள் பிறந்தனர். அவர்கள் முசுகுந்தன், இவன் மூலம் விந்திய மலையில் மாஹிஷ்மதி அரசும் பூரிகாவும் நிர்மாணிக்கப் பட்டது. பத்மவர்மன் மூலம் கரவீரபுரம் நிர்மாணிக்கப் பட்டது. சரஸன் மூலம் க்ரெளஞ்சபுரியும், ஹரிதா மூலம் முத்துக்களும், பவளங்களும் கிடைக்கும் தீவுகளும், மாதவன், நமது முன்னோர்களில் ஒருவன் மூலம் இந்த அரசும் கிடைக்கப் பெற்றோம். மாதவனின் காலத்தில் தான் ஸ்ரீராமனின் சகோதரன் ஆன ஷத்ருகனன் மதுவனத்தை ஆண்டு வந்த கொடிய அரக்கத் தன்மை வாய்ந்த மதுவின் பிள்ளைகளை அழித்துவிட்டு மதுராவை நிர்மாணம் செய்தான். பின்னால் நமது மாதவரின் வழித்தோன்றலான பீமன் என்பவனால் மதுராபுரி ஷத்ருகனின் வாரிசுகளிடமிருந்து பெறப்பட்டு நம் கைக்கு வந்தது. இதுவே மதுரா நமக்குக் கிடைத்த முறை” என்றான் வசுதேவன்.
சத்ருக்னன் என்றே எழுதலாம் அம்மா; ஷத்ருகன் என்பது வடபுல உச்சரிப்பு முறை.घ्न: என்பது வெல்லும் ஆற்றலைக் குறிப்பது.
ReplyDeleteपापघ्न: என்றால் பாவங்களை அழிப்பவன் என்பது பொருள்
தேவ்
வாங்க தேவ் அவர்களே, முதல் வரவுக்கும், திருத்தத்துக்கும் ரொம்ப நன்றி. ரொம்ப நாளா யோசனை, எழுதலாமானு! நன்றி.
ReplyDelete