கரவீரபுரத்தை நோக்கி!
சில நாட்களில் காவி உடைகள் தரித்த இரு இளைஞர்கள், தங்கள் நீண்ட குடுமியைத் தூக்கிக் கட்டிய வண்ணம் இரண்டு துறவிகளைப் போல் குண்டினாபுரம் வந்து சேர்ந்தனர். ஒரு வைதீக பிராமணன் போல மாறி இருந்த உத்தவன் அவர்களை வரவேற்று, கெளஷிகனின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அவர்களை மிகவும் மரியாதையுடனும், உற்சாகத்துடனும் கெளஷிகன் வரவேற்றான். அவர்களுக்கு உணவளித்து உபசரிக்கவென இளவரசி ருக்மிணியே அங்கே வந்துவிட்டாள். அவர்கள் வந்திருக்கும் செய்தி கிடைத்ததுமே ருக்மிணியின் இதயம் எழும்பிக் குதித்தது. கண்ணனுக்கும், பலராமனுக்கும் உணவளிக்கும்போது கண்ணனின் முகத்தையே பார்த்தாள் ருக்மிணி. அந்த முகத்தில் தெரிந்த மந்தகாசம், அவளை அன்புடனும், கருணையுடனும், நம்பிக்கை அளிக்கும் வண்ணமாகவும் பார்த்த அந்தப் பார்வை அவள் மனதை விட்டு நீங்க மறுத்தது. கண்ணனின் இளமை பொங்கும் முகம் அவ்வண்ணமே அனைவரையும் பார்த்து அனைவருக்கும் வாக்குறுதியைக் கொடுத்தது என்பதையும் அவள் புரிந்து கொண்டாள். தன்னைப் பார்த்துத் தன்னோடு பழகும் ஒவ்வொரு நபருக்கும் அவர்களோடு மட்டுமே பழகுவதாய் ஒரு பிரமையை அந்தப் பார்வையும் சிரிப்பும் ஏற்படுத்தியது. ஒவ்வொருவரும் கண்ணன் தங்களுக்கு மட்டுமே சொந்தமானவன் என நினைக்கும் வண்ணம் இருந்தது. ஆனாலும் இப்போது ருக்மிணி பலவிதமான கட்டுக்காவல்களையும், தன் உடன்பிறந்த அண்ணனின் எதிர்ப்பையும் மீறித் தனக்குச் செய்திருக்கும் உதவிகளை அறிந்த கண்ணன் அவளுக்கு மிகவும் நன்றி செலுத்தினான் என்றால் மிகையில்லை.
கெளஷிகன் கண்ணனிடமும், பலராமனிடமும் மதுராவின் நிலைமை பற்றியும், வைவஸ்வதபுரியில் இருந்து அவர்கள் சாந்தீபனியின் மகனை அழைத்து வந்த விபரங்கள் பற்றியும் கேட்டறிந்தான். வாய் திறவாமல் அனைத்தையும் கேட்ட ருக்மிணி அந்த நாககன்னியின் மேல் கோபமும், வெறுப்பும், பொறாமையும் கொண்டாள். எனினும் அவள் கண்ணனைத் திருமணம் செய்து கொள்ளாதது அவளுக்கு ஓர் ஆறுதலையும் கொடுத்தது. என்றாலும் கெளஷிகன் விடவில்லை. ஏன் அந்த நாககன்னியைத் தடுத்து நிறுத்தி உன்னோடு அழைத்துவரவில்லை எனக் கண்ணனைக் கேட்க, ஒரு நாககன்னியைத் திருப்திப் படுத்துவது இயலாத ஒன்று எனக் கண்ணன் பதில் சொன்னான். மேலும் அவள் எப்போதும் தன் அன்னையின் நினைவாகவே இருப்பாள் என்றும் சொன்னான். கெளஷிகனுக்கு இப்போது தன் பேத்தியைச் சீண்டிப் பார்க்கும் எண்ணம் வந்தது. “ஒருவேளை அவளுக்குத் தாயே இல்லை எனில்?” என்று கிருஷ்ணனிடம் கேட்டுவிட்டுக் கோபத்தில் சிவந்த தன் பேத்தியின் முகத்தை ஜாடையாகப் பார்த்துக்கொண்டான். கண்ணனும் கிழவனின் சீண்டலை ரசித்தவண்ணமே, “ அப்போ அவள் தன்னைப் பற்றி மட்டுமே நினைத்திருப்பாள். இல்லையா? எல்லா அழகான பெண்களுமே அப்படித்தானே?” என்ற வண்ணம் கிழவனையும், ருக்மிணியையும் பார்க்க கெளஷிகன் அடக்க மாட்டாமல் சிரித்தான். பின்னர் தன் பேத்தியைப் பார்த்து, “அது உனக்காகவே சொல்லப் பட்டது” என்றவன் தொடர்ந்து, “ உன்னை ஒரு முட்டாள் எனக் கண்ணன் ஒரு போதும் நினைக்கமாட்டான். அவ்வாறு அவனை நினனக்க வைக்க உன்னால் இயலாது.” என்றான். அதற்கு பலராமன், “கண்ணனுக்குத் தேவை அவன் விருப்பங்களை, அவன் எண்ணங்களைப் பூர்த்தி செய்ய உதவும் ஒரு மனைவியே!” என்றான்.
”எனில் அது ஒருகாலும் நடவாத ஒன்று” என கெளஷிகன் கூற, கண்ணனோ, “பார்க்கலாம், ஒருவேளை கிடைத்தால்?” என்று கூறினான். அவ்வளவில் பேச்சு நிற்க கெளஷிகன் தான் ஏற்கெனவே செய்த ஏற்பாடுகளின்படி குண்டினாபுரத்தின் சில பிராமணர்களோடு கண்ணனும், பலராமனும் நகரை விட்டுப் பாதுகாப்பாகச் செல்ல வேண்டினான். ஒரு பெரிய வண்டியில் கரவீரபுரத்தை நோக்கிச் சென்ற சில பிராமணர்களோடு, கண்ணனும், பலராமனும் சேர்ந்துகொண்டனர்.
கண்ணனும், பலராமனும் சஹ்யாத்ரி மலைத் தொடர் தெரிய ஆரம்பித்ததுமே கூட்டத்தில் இருந்து பிரிந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் பயணத்தை மஹேந்திர மலை நோக்கித் தொடங்கினர். அழகு கொஞ்சும் பாதை. இயற்கை அன்னை தன் பூரண எழிலை அங்கே காட்டிக்கொண்டு காட்சி அளித்தாள். செல்லும் வழியில் தென்பட்ட கிராமவாசிகள் இரு இளைஞர்களின் மலர்ந்த முகங்களைக் கண்டதுமே அன்போடும், பரிவோடும் உபசரித்தனர். விண்ணைத்தொட்ட மலை முகடுகளின் மேல் உலவிய மேகங்களும், மேகங்கள் விலகும்போது தென்பட்ட சூரிய ஒளிக்கதிர்களும் கண்ணையும், கருத்தையும் கவர்ந்தன. பச்சைக் கரை போல் தென்பட்ட மர வரிசைகள், கூட்டம் கூட்டமாகக் காட்சி அளித்தன. நடுவே போடப் பட்ட வெள்ளி ஜரிகைபோல தென்பட்ட அருவிகள். நீல நிற மலைத்தொடர்கள். கண்ணனின் நிறத்தோடு போட்டியிட்டாற்போல் காட்சி அளித்தது. கண்ணன் அனைத்தையும் நன்கு அனுபவித்தான் என்பது அவன் முகத்திலிருந்து தெரிந்தது.
பலராமன் சற்று நேரம் கண்ணனையே நோக்கியவண்ணம் நடந்தான். புன்னகையோடு கண்ணன் அவன் கேட்கப் போகும் கேள்விக்குக் காத்திருந்தான். “கண்ணா, உனக்கும், எனக்கும் மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? நம் உறவினர்கள் அனைவரும் அவரவர் குடும்பத்தோடு சந்தோஷமாய்ப் பொழுதைக்கழிக்க, நாம் பார். முதலில் இடைக்குலத்தில் வளர்ந்தோம். தாய், தகப்பனோடு சேர வந்தும் சேர்ந்திருக்க முடியவில்லை. நாம் பிறந்த ஊரை விட்டு, தாய், தகப்பனை விட்டு, வளர்த்தோரைப் பிரிந்து, உறவினரையும் அன்புக்குரியவரையும் பிரிந்து, நாடோடியாகத் திரிகிறோம். உன்னைப் பார்த்தால் இதற்கு வருந்துபவன் போல் தெரியவில்லையே?” என்றான்.
கண்ணன் சிரித்தான். “அண்ணா, நாம் வாழ்க்கையை அதன் போக்கில் அநுபவித்து வாழவெனப் பிறந்திருக்கிறோம். அதன் முழுமையை நாம் உணர்ந்து வாழ்கிறோம். நம் உறவினரைப் போல் இருந்தால் இந்த மாதிரியான இடங்களைக் காணவோ, இம்மாதிரியான மனிதர்களோடு பழகவோ முடியுமா? எத்தனை இடங்கள்? எத்தனை மனிதர்கள்?” கண்ணன் வியந்தான். மீண்டும் கண்ணனையே உற்றுக் கவனித்த பலராமன், “கண்ணா, ராதையை, உன் உயிரான, அன்பான, உன் கண்ணின் கருமணியான ராதையை விட்டுப் பிரிந்து வந்திருப்பதில் உனக்குக் கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா? “
கண்ணன் சிரித்தான். “ராதையை நான் பிரிந்தேனா? எங்கே பிரிந்தேன்? அவள் என்னோடு என் கூடவே இருக்கிறாளே? என்னோடு வருகிறாளே? என்னுடனேயே என் உயிரில் கலந்து அவள் இருப்பதாலேயே நான் எப்போதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்.” என்றான் கண்ணன்.
“கண்ணா, உன்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்னால். அல்லது நீ சொல்வது எனக்குப் புரியவில்லை. போகட்டும். நாம் மதுராவை விட்டுக் கோழைகள் போல் ஓடி வந்துவிட்டோமோ எனத் தோன்றுகிறது எனக்கு. அங்கேயே இருந்து எதிர்த்துப் போராடி இருக்கலாம் அல்லவா?”
என்னோட பெயரைக் கொடுத்தால் தப்புனு சொல்லுது தமிழ்மணம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தவறான பயனர் பெயராம்! சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்! :P
ReplyDelete