ருக்மியின் திட்டமும், ருக்மிணியின் கோபமும்!
ருக்மிணி கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாள். அவள் அண்ணன் ருக்மி ஜராசந்தனிடம் ஒரேயடியாகச் சரணடைந்துவிட்டானே. கம்சன் இறந்தது அவனை மிகவும் பாதித்துவிட்டது. தன்னுடைய எதிர்காலமே இருளடைந்துவிட்டதோ என எண்ணிவிட்டான். ஹூம், உடனேயே அந்த மூர்க்கன் ஜராசந்தனிடம் சென்றுவிட்டான். அவனும் இவனுக்குக் கண்ணனை எங்கே, எந்த நிலையில் கண்டாலும் அழிக்கவேண்டும் என ஆணை இட்டு விட்டானாம். ஹா!! நடக்குமா அது?? கண்ணன், கண்ணா, கண்ணா, அவனை மறக்க முடியுமா? தன் தாயிடம், பல வருடங்கள் கழித்துப் பார்த்தப் பெற்ற தாயிடம் எவ்வளவு அன்பும், பாசமும் கொண்டிருந்தான். தனக்கெனக் கொடுக்கப் பட்ட மதுராவின் கிரீடத்தைக் கூட வேண்டாம் என மறுத்துவிட்டானே? ம்ம்ம்ம்ம்?? மதுராவில் இருந்து செய்தி வரவேண்டுமானால் திரிவக்கரை மூலம் தான் வரவேண்டும். ஆம், ருக்மிணியையும், திரிவக்கரையையும் கண்ணன் நன்கு பிணைத்துவிட்டான். மதுராவில் இருந்து தூர தேசங்களுக்குச் செல்லும் பிராமணர்கள் மூலம் திரிவக்கரை ருக்மிணிக்குச் செய்திகள் அனுப்பி வருகிறாள். அதோடு அவள் தகப்பனுக்கும் மதுராவின் செய்திகள் வருகின்றன.
புண்யாஜனா கப்பலையும், அதன் தலைவன் பாஞ்சஜனாவையும் கண்ணன் அழித்ததையும், நாகலோகம் சென்று புநர்தத்தனை மீட்டு வந்ததையும் குறித்த கதைகள் இங்கே விதர்ப்ப நாட்டுக்கும் வந்துவிட்டன. ருக்மிணிக்குப் பெருமை தலைக்கு ஏறியது. என்னவோ கண்ணன் அவள் சொல்லித் தான் எல்லாம் செய்தாற்போல மனம் மகிழ்ந்தாள். கண்ணனை நினைக்கும்போதெல்லாம் அவன் அழகிய மலர்ந்த புன்னகையுடன் கூடிய முகம் நினைவில் வருகிறது ருக்மிணிக்கு. ஆனால் அவனைப் பற்றியே இங்கே பேசமுடியவில்லை. என்னதான் இடைக்குலத்தோரால் வளர்க்கப் பட்டாலும், அவனும் ஒரு யாதவகுலப் பையன் தானே? அது ஏன் இந்தப் பெரியவர்களுக்குப் புரியவே இல்லை?? அவள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் இளவரசியாம். அவளைக் கரம் பிடிக்கும் தகுதி மற்றொரு மன்னனுக்கோ அல்லது பட்டத்து இளவரசனுக்கோதான் இருக்கிறதாம். யாருக்கு வேண்டும், அரியணை எல்லாம். ஆனால் அவள் அண்ணன் ருக்மி இருக்கிறானே? அவள் திருமணத்தின் மூலம்தான் அவனுடைய சாம்ராஜ்யக் கனவுகள் பூர்த்தி அடையவேண்டுமாம். அதற்கு அவன் சொல்லும் அரசகுமாரனைத் தான் அவள் திருமணம் செய்தாகவேண்டுமாம். சொல்கிறான். இதை எவரும் எதிர்க்கிறார்களா என்றால் இல்லை, அனைவரும் தயங்குகிறார்கள். ருக்மியின் கோபம் அவ்வளவு பிரபலம். என்ன செய்யலாம்?? ருக்மிணிக்கு மீண்டும் கோபம் தலைக்கு ஏறியது. அப்போது அவளின் அந்தரங்கச் சேடி வந்து ஒரு தகவல் சொன்னாள். ஜராசந்தன் கண்ணனையும், பலராமனையும் எவ்விதத்திலேனும் கொல்லப் போகின்றானாம். அவர்களை ஒப்படைக்கவில்லை எனில் மதுராவையே அழிக்கப் போகிறானாம். அதற்கு அவள் அண்ணனும் உதவி செய்யப் போகிறானாம். அவள் தகப்பனும், அவள் அண்ணனும் இதைப் பற்றி விவாதிக்கின்றனராம். ருக்மிணிக்குத் தலையோடு கால் வரையிலும் நடுங்கியது. உடனே ஒரு புயல் போலக் கிளம்பித் தன் அண்ணனையும் தகப்பனையும் பார்க்கக் கிளம்பினாள்.
வேகமாய் உள்ளே வரும் ருக்மிணியைப் பார்த்ததுமே ருக்மிக்குப் புரிந்து விட்டது. ருக்மிணி கோபத்துடன் அண்ணனைப் பார்த்து, “அண்ணா, என்ன இது நான் கேள்விப் படுவது? கிருஷ்ணனையும், பலராமனையும் ஜராசந்தன் கொல்ல நீ உதவி செய்யப் போகிறாயாமே? வேண்டாம், விட்டு விடு, நீ போகாதே!” என்றாள்.
அவளுக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. ருக்மி அவளை அலட்சியமாய்ப் பார்த்து, “நீ அந்தப் புரத்தில் இருக்கவேண்டியவள். இங்கே ஏன் வந்தாய்?? ராஜாங்க விஷயங்களில் நீ தலையிடாதே!” என்று கோபம் மீதூறக் கத்தினான். ருக்மிணியின் கோபம் கண்களில் மின்வெட்டுப் போல் தெறித்தது.
“ஏன் கூடாது? இது எப்படி உனக்குத் தகப்பனின் நாடோ, அப்படியே எனக்கும் என் தகப்பனின் நாடு ஆகும். உனக்குள்ள அதே உரிமைகள் எனக்கும் உண்டு. தந்தையே, என்ன இது? நீங்கள் சும்மா எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே? அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை உணர்ந்துதான் பேசாமல் இருக்கிறீர்களா? உங்களையும், இந்த விதர்ப்ப நாட்டையும் ஜராசந்தனுக்கு அடிமையாக்க நினைக்கிறான்.”
“உனக்கு அரசியல் பற்றியோ அரசியல் தந்திரங்கள் பற்றியோ என்ன தெரியும்?? குண்டினாபுரம் இன்று ஒரு வலுவான நாட்டின் தலைநகராய் இருக்கிறாதென்றால் அதற்குக் காரணம் ஜராசந்தனுடனான நமது நட்பே ஆகும். நானும் உன்னை ஒரு மஹா சாம்ராஜ்யத்தின் மஹாராணியாக்க விரும்புகிறேன். அதே போல் ஒரு பெரிய சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியின் சகோதரி என உன்னை அனைவரும் கூறவும் நினைக்கிறேன். இது என் வாழ்நாள் கனவு.”
“நீ செய்யும் எந்த உதவியும் எனக்குத் தேவையில்லை. நான் இப்போது இருக்கிறமாதிரி இருப்பதிலேயே சந்தோஷமாய் இருக்கிறேன். தந்தையே, இந்த முரட்டு அண்ணனின் வாயை அடக்காமல் வேடிக்கை பார்க்கிறீர்களே? இது உங்களுக்கே நியாயமாய் இருக்கிறதா?
“குழந்தாய், ருக்மிணி, ஜராசந்தன் ஒரு பெரிய சாம்ராஜ்யச் சக்கரவர்த்தி. அவனை எதிர்ப்பது என்பது சாமானியமான ஒன்றல்ல மகளே. அதற்குரிய படை பலமோ, அரசர்களின் உதவியோ நம்மிடம் இல்லை. அவனோடு நாம் நட்பாக இல்லை எனில் அவன் நம்மையும், நம் நாட்டையும் என் தந்தை கெளஷிகரின் ஆட்சிக்காலத்தில் அழித்தாற்போல் அழித்துவிடுவான். அவனோடு சமாதானமாய்ப் போவதே நமக்கும், நம் நாட்டுக்கும் நன்மை பயக்கும்.”
“கோழைகள், கோழைகள், வீரமே இல்லாதவர்கள்!” ருக்மிணி கத்தினாள். “ஆஹா, நான் ஒரு ஆண்மகனாய் இருந்திருக்கக்கூடாதா?” ருக்மிணி கோபத்துடன் கால்களை உதைத்தாள். வேகமாய் அங்கிருந்து வெளியேறி வயது முதிர்ந்த தன் பாட்டன் ஆன கெளஷிகனைத் தேடிக் கொண்டு சென்றாள். ருக்மி அவள் கோபத்தைக் கண்டு பலமாகச் சிரித்தான். பாட்டனிடம் சென்ற ருக்மிணி தன் கோபத்தைக் கொட்டினாள் அங்கேயும். கிழவரும் சிரித்துக் கொண்டார். "என் அருமைக் குழந்தாய்! ஆண்கள் செய்வது செய்வதாய் இருக்கட்டும். இது ராஜாங்க விஷயம், நீ இதில் தலையிடாதே! இப்போ நீ செய்ய வேண்டிய முக்கியமான வேலை உன்னைக் கைப்பிடிக்கப் போகும் இளைஞன் எவன் எனக் கற்பனை செய்து கொண்டிருப்பது ஒன்றே." என்றார்.
"பாட்டனாரே, என்னால் அது இயலாது. ருக்மி எந்த நாட்டு இளவரசனுக்கோ, அல்லது அரசனுக்கோ என்னை விற்க நினைக்கிறான். அதனால் அவனுக்குக் கிடைக்கப் போகும் அரசியல் ரீதியான லாபங்களையே அவன் நினைக்கிறான். அவன் எனக்காகப் பார்க்கப் போகும் அரசனோ, இளவரசனோ அவன் ருக்மியை விட முழு முட்டாளாகத் தான் இருப்பான் நிச்சயமாக. நான் அப்படி எல்லாம் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை." ருக்மிணியின் பதில் திட்டவட்டமாக இருந்தது. கிழவர், "குழந்தாய், நீ அழகாயும், இளமையோடும், திறமையோடும், புத்திசாலியாகவும் இருக்கிறாய். உனக்காகச் சுயம்வரம் நடத்துவதே சரி. அப்போது நீ உனக்கேற்ற மணமகனை நீயே தேர்ந்தெடுக்கலாம்." என்றார். "தாத்தா, புத்திசாலியான எந்த மணமகனையும் என் அண்ணன் அழைக்கவே மாட்டான். சுயம்வரம் அவன் ஏற்பாடுகளில் அவன் அழைக்கிறவர்களை மட்டும் வைத்துத் தானே நடத்துவான்?? என்னை ஒரு அசையும் சொத்தாக நினைக்கிறான் என் அண்ணன். நான் நிச்சயம் அப்படி இருக்கமாட்டேன்."
congrats for 1000th post paatti. treat enga
ReplyDelete///ஆயிரமாவது பதிவு ///
ReplyDeleteஅம்மாடி !!!
மேலும் பல ஆயிரம் ரன் குவிக்க வேண்டும், சச்சின் போலே.
வாழ்த்துகள்