எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 05, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 26


கொஞ்ச நாட்களாய் எனக்குத் தான் எழுத முடியலைனா, வாசகர்களும் வரதில்லை. அவங்க அவங்களுக்குனு சில வேலைகள், பிரச்னைகள் இருக்குமே. அனைவரும் எல்லா நலனும் பெற்று அம்பிகையின் அருளையும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்திக்கொண்டு இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்.

அநாஹதத்திற்கு அடுத்து ஸ்வாதிஷ்டானம். அக்னியின் இருப்பிடம் ஆகும் இது. வாயோர் அக்னி என்பார்கள். வாயுவில் இருந்து அக்னி உண்டாகிறது. இங்கு ஆறு தள கமலத்தில் அம்பிகை காமேசுவரியாகப்பிரகாசிக்கிறாள். “காகினீ” என்ற பெயரிலும் வழங்கப் படுவாள்.

“ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா சதுர்வக்த்ர-மநோஹரா
சூலாத்யாயுத-ஸம்பந்தா பீத வர்ணா திகர்விதா
மேதோ-நிஷ்டா மதுப்ரீதா பந்தின்யாதி-ஸமன்விதா
த்த்யன்னாஸக்த-ஹ்ருதயா காகினீ-ரூப-தாரிணீ!!

அக்னி தத்துவமாய்க் காட்சி அளிப்பது திருவண்ணாமலையாகும். இங்குள்ளது தேஜோமயமான லிங்கம். மேலும் இங்கு தான் அம்பிகையும், ஈசனும் சமமாகவும் ஆனதாய்ச் சொல்லப் படுகிறது. அம்பிகை ஈசனின் உடலில் சரிபாதியை எடுத்துக்கொண்ட அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தை இங்கே ஒவ்வொரு கார்த்திகைப் பெளர்ணமி தீபத்தின் போதும் காணமுடியும். ஈசன் இங்கே ஸமவர்த்தகேஸ்வரராகவும், அம்பிகையை ஸமயா என்றும் வணங்குவார்கள் சாக்த உபாசகர்கள். நெற்றிக்கண்ணால் அகில உலகத்தையும் அழித்து சம்ஹரிக்கும் ருத்ரனை ஸமயா என்னும் அம்பிகை தன் குளிர்ந்த பார்வையால் குளிர்ச்சி அடைய வைத்து அதே சமயம் எரிந்த இவ்வுலகையும் மீண்டும் உயிர்ப்பிக்கிறாள். காமனை எழுப்பிய சஞ்சீவனியான அம்பிகை இங்கு நம் அனைவரையும் உயிர்ப்பிக்கும் சர்வ சஞ்சீவியாகவும் விளங்குகிறாள். மேலும் அம்பிகையை வழிபடுபவர்களுக்கு வேறு சமயங்களும் இல்லை. அவளை விடவும் உயர்ந்த தாய் வேறொருத்தியும் உண்டோ? இதையே அபிராமி பட்டர்,

“உமையும் உமையொருபாகனும் ஏக உருவில் வந்திங்
கெமையும் தமக்கன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே!”

என்கிறார். ஏக உருவென்று அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தைக் கூறும் பட்டர், பக்குவமே இல்லாத நம் போன்ற பக்தர்களையும் அம்பிகையின் திருக்கடைக்கண் பார்வையானது ஆட்கொண்டு தனக்கு அன்பு செய்ய வைக்கும் என்கிறார். இதை விடவும் வேறு உயர்ந்த்தொரு சமயம் வேறு உண்டா என்று கேட்கும் பட்டர் பெருமான், அம்பிகை மேல் வைத்த பக்தியால் நமக்கு இனி மற்றொரு பிறவி எடுத்துத் துன்பப் படும் பிணி இல்லை. நம்மை ஈன்றெடுக்க மனித உருவில் இனி ஒரு தாய் இல்லை. அம்பிகையே நமக்குத் தாயாக ஆனாள். மேலும் பெண்ணாசையையும் ஒழிக்க வல்லது அர்த்த நாரீசுரத் தியானம் என்பதைச் சுட்டும் விதமாய்க் கடைசியில், “ அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே” என்கிறார். மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய பெண்கள் மேல் வைத்த ஆசையும் ஒழிந்து போகும் என்று பொருள் கொள்ள வேண்டும்.

பொதுவாகச் சக்கர வரிசையில், விசுத்தி, அநாஹதம், மணிபூரகம் என்றே வரும். ஆனால் இவ்வுலகப் பஞ்சபூதத் தத்துவங்களின்படி, ஆகாயத்தின் பின் வாயுவும், வாயுவிற்குப் பின்னர் அக்னியும் தத்துவமானதால் ஸ்வாதிஷ்டானத்தைப் பார்த்தோம். அடுத்து மணிபூரகத்தைப் பார்ப்போமா? மணிபூரகம் நீரின் இருப்பிடமாய்க் கூறப்படும். நம் தமிழ்நாட்டில் திருவானைக்காவல் ஜலதத்துவமாய்ச் சொல்லப் படுகிறது. இங்கே அம்பிகை
பத்துத் தளக் கமலத்தில், ஈசனோடு அம்ருதேஸ்வரியாய்க் கூடிக் காட்சி அளிக்கிறாள். லாகினீ என்ற பெயரிலும் அழைப்பார்கள்.

மணிபூராப்ஜ-நிலயா வதனத்ரய-ஸம்யுதா
வஜ்ராதிகாயுதோபேதா டாமர்யாதிபி-ராவ்ருதா
ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன-ப்ரீத-மானஸா
ஸமஸ்த-பக்த ஸுகதா லாகின்யம்பா-ஸ்வரூபிணீ!!

பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் மாபெரும் தெப்பமாய் இங்கே அம்ருதேஸ்வரரும், அம்ருதேஸ்வரியும், எப்படி பக்தர்களின் கண்களில் காட்சி அளிக்கின்றார்கள் எனில் நீருண்ட மேகம் போன்ற ஈசனிடம் அந்த மேகத்தில் தோன்றும் மின்னல் கொடியைப் போல் காட்சி அளிக்கிறாள். ஆசையானது மனிதர் மனதில் சூரிய வெப்பத்தைப் போல் உண்டாகிறது. அதனாலேயே இவ்வுலகத்தின் மேல் இடைவிடாத பற்றும் ஏற்படுகிறது. நம் ஆசையாகிய சூரிய கிரணம் அநாஹதத்தில் இருந்து கீழிறங்கி, ஸ்வாதிஷ்டானத்தின் அக்னியோடு சேர்ந்து கொண்டு, மணிபூரகத்தில் புகுந்து குளிர்ந்த மேகத்தை உண்டாக்கி அம்பிகையின் கருணை மழை பொழிந்து நம் மனதை மட்டுமில்லாமல் இவ்வுலகையும் குளிர்விக்கிறது.
இந்த அப்புவிலிருந்து தோன்றுவது ப்ருத்வி த்த்துவம். இதன் இருப்பிடம் மூலாதாரச் சக்கரம். முக்கோணத்தின் நடுவே நாலு தளத் தாமரையில் வீற்றிருக்கும் அம்பிகையை ஸாகினீ என்ற பெயரிலும் அழைப்பார்கள்.

மூலாதாரம்புஜாரூடா பஞ்ச வக்த்ராஸ்தி-ஸம்ஸ்திதா
அங்குசாதி-ப்ரஹரணா வரதாதி-நிஷேவிதா
முத்கெளதநாஸக்த-சித்தா ஸாகின்யம்பா ஸ்வரூபிணீ”

இங்கு நடராஜரோடு கூடி சிறந்த தாண்டவம் செய்யும் அம்பிகையானவள், பிரளயகாலத்தில் அழிந்த உலகின் சிருஷ்டியை ஈசனைப் பார்ப்பதின் மூலமே உற்பத்தி செய்கிறாள்.

“மஹேஸ்வர-மஹாகல்ப-மஹாதாண்டவ-ஸாக்ஷிணீ
மஹாகாமேச-மஹிஷீ மஹாத்ரிபுரஸுந்தரி

ஸதாசிவன் தாண்டவநர்த்தனம் (வெறும் தாண்டவம் மட்டுமே) செய்யும்போது ப்ரக்ருதி ரூபமான அம்பாளோ லாஸ்ய நர்த்தனம் (இசையுடன் கூடிய நடனம்) செய்துகொண்டு ஒருவரை ஒருவர் பார்க்கவே இவ்வுலகம் தோன்றுகிறது. மூலாதார க்ஷேத்திரங்களாய்க் காஞ்சியும், திருவாரூரும் சொல்லப் படுகிறது. இனி தேவியைப் பூஜிக்கும் முக்கியமான காலங்கள்.

அன்பாய் நவராத்திரி பெளர்ணமி சுக்கிரவாரம்
அம்மன் சோபனந்தன்னைச் சொன்னபேர்க்குத்
துன்பங்கள் உண்டாகமாட்டாது ஒருக்காலும்
தென் திசையை யடையார் தினஞ்சொன்னவாள்
ரொம்பச் சொல்லுவானேன் தேவி தாஸாளுக்குத்
திரிலோகமும் அவர்கட்கு ஜயம்
நம்பினபேர்களைக் காத்திடத் தேவியல்லால்
நாட்டிலே வேறுண்டோ-சோபனம் சோபனம்

அத்திரி மஹரிஷி ஆசிரமத்தில் அநசூயை
கேட்ட இக்ஞான ரஹஸ்யத்தை
நல்துறையில் வாழும் லக்ஷ்மி கடாக்ஷத்தால்
நாராயணனுரைத்த தேவி மஹிமை
ராஜேச்வரியாள் மஹிமை யகஸ்தியரும்
ஆதரவாய்ச் சொல்லச் சொன்னதற்கு
நாடு செழிக்க அவதரித்து வந்த
மாதவர் அறிவித்தார்-சோபனம் சோபனம்

அறிந்தறியாமல் இந்தச் சோபனத்தில்
அர்த்த அக்ஷரப்பிழை இருந்தாலும்
மஹாப்பிரபு மனுஷப்பிரபு விஷ்ணு என்பது போலும்
மராமரா என்றதொர் நாமம் போலும்
வரதசிவனார் சிவசங்கர நாமம் போலும்
வார்த்தைப் பிழைகள் தன்னைப் பொறுத்து
எதுவிதத்திலும் (பர)தேவியைத் தியானித்தால்
ஏழைக்கிரங்குவள்-சோபனம் சோபனம்

மங்கள வாழ்த்து
ஜயமங்களம் லலிதா தேவிக்கும்
ஜயமங்களம் காமேச்வரருக்கும்
ஜயமங்களம் மந்திரிணி தண்ட நாதைக்கும்
ஜயமங்களம் ஸர்வ சக்திகட்கும்
ஜயமங்களம் ஹயக்ரீவருக்கும்
ஜயமங்களம் அகஸ்தியமா முனிக்கும்
ஜயமங்களம் ஸர்வ ஜனங்கட்கும் நமக்கும்
ஜயமங்களம் நித்ய சுப மங்களம்

லலிதாம்பாள் சோபனம் முற்றுப் பெற்றது.
ஓம் தத் ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து.


உதவிப் புத்தகங்கள்:

அபிராமி அந்தாதி- உரை திரு கி.வா.ஜகந்நாதன் அவர்கள், 4-ம்பதிப்பு ஜூலை 1968

செளந்தர்ய லஹரி பாஷ்யத்துடன்: "அண்ணா" அவர்களால் எழுதப்பட்டது. ராமகிருஷ்ணா மடம் வெளியீடு

ஸ்ரீலலிதாம்பாள் சோபனம்: கிரி ட்ரேடர்ஸ் வெளியீடு. சகோதரி சுப்புலக்ஷ்மி அவர்களால் தொகுக்கப் பட்டது.பதினைந்துக்கும் மேல் பதிப்புகள் கண்டது.

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் ஸ்லோகங்கள் மட்டும்

ஸ்ரீதேவி மஹாத்மியம் "அண்ணா" அவர்கள் உரையுடன் ராமகிருஷ்ணா மடம் வெளியீடு.

8 comments:

  1. கொஞ்ச நாட்களாய் எனக்குத் தான் எழுத முடியலைனா, வாசகர்களும் வரதில்லை. அவங்க அவங்களுக்குனு சில வேலைகள், பிரச்னைகள் இருக்குமே. அனைவரும் எல்லா நலனும் பெற்று அம்பிகையின் அருளையும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்திக்கொண்டு இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்.//

    என்ன பரந்த மனசு!

    // வாயுரோர் அக்னி என்பார்கள்.//
    வாயோர் அக்னி.....

    ReplyDelete
  2. @திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)
    நீங்க வந்ததே ஆச்சரியம், வி.எ. ஊத்திக்கிட்டு வந்திருக்கீங்க, த.பி. திருத்திட்டேன். நீங்க சொன்னதும் தான் கவனிச்சேன்! :)))))

    ReplyDelete
  3. இன்றுதான் 'சோபனம்--'தொடரைப் படித்தேன்.கொஞ்சம் ஆழ்ந்து படிக்க வேண்டிய விஷயமாதலால் ஒரே மூச்சில் படிக்க முடியவில்லை.ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது-உங்கள் படிப்பு,விஷயஞானம்,உழைப்பு.தொடர்ந்து படிக்கிறேன்.
    வாழ்க!

    ReplyDelete
  4. நான் படிச்சுண்டு தான் வரேன்.
    இவ்வளவு பெரிய விஷயத்துலே படிச்சேன் என்று
    சொல்வதைத் தவிர வேறு என்ன எழுதமுடியும் !

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. வாங்க சென்னை பித்தன், முதல் வரவுக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. தொடர்ந்து வருகை தரவும். :))))

    ReplyDelete
  6. வாங்க சூரி சார், உங்களைப் போன்ற பெரியவர்கள் படிப்பதே எனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதம். ரொம்ப நன்றி.

    ReplyDelete
  7. கீதா....ஆரம்பித்து விட்டீர்களா....வாழ்த்துக்கள் இனி தொய்வில்லாமல் தொடர அந்த அம்பிகை அருள் புரிவாள்.

    அருமையாக எழுதியிருக்கிறீர்கள் கீதா.

    உங்களிடம் எனக்குப் பிடித்ததே, அந்த குறும்பான பதிலும், எதார்த்தமான உங்கள் பார்வையும்தான்....

    ReplyDelete
  8. வாங்க சங்கரி, உங்க பின்னூட்டத்தை இப்போத் தான் பார்க்கிறேன். :))) நன்றிங்க, உங்க அன்புக்கும், ஆதரவுக்கும், பரந்த மனசுக்கும், ரொம்பவே நன்றி. என்னாலே உங்க அளவுக்குச் சுறுசுறுப்பா உங்க பதிவுகளிலே பின்னூட்டம் இட முடியலை. மன்னிக்கவும்.

    ReplyDelete