எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 29, 2013

நாளை மணமேடை மாலைகள் வழங்காதோ நாதஸ்வரத்தோடு மேளங்கள் முழங்காதோ



என்ன இது எல்லாரும் அலங்காரம்  முடிஞ்சு வர நேரமாகுது போல! :))) அட, பையருக்கும் ப்யூட்டி பார்லரில் இருந்து வராங்களா இப்போல்லாம்! இது புதுசு! ஒரு வழியா அலங்காரம் முடிஞ்சு இரண்டு குடும்பத்து முக்கியஸ்தர்களும், அருகில் உள்ள கோயிலுக்குப் போயிட்டு மறுபடியும் சத்திரத்துக்கு வரதாப் பேச்சு. சத்திரத்திலும் கூட்டம்.  ஒரே பேச்சு.  நாதஸ்வர இசையே காதில் விழலை.  ஆனாலும் அவர் நல்லாவே வாசிக்கிறார். அருமையான பாடல்களாகத் தேர்ந்தெடுத்து வாசிக்கிறார். அங்கே என்னமோ ஒரு ஆலோசனை நடக்குதே.  கிட்டே போய் என்னனு கேட்போமா?  அட, பெண்ணும், பிள்ளையும் சேர்ந்து நிச்சயதார்த்த மேடையில் உட்காரணுமாங்கறதைப் பத்திப் பேசறாங்க.  பிள்ளை வீட்டுக்காரங்க தஞ்சாவூர்க் காரங்களாம்.  அவங்களுக்கு வழக்கம் இல்லையாம். அதெல்லாம் வேண்டாம் புதுசாங்கறாங்க.  இப்போல்லாம் யார் பார்க்கிறா இதெல்லாம் அப்படினு பெண்ணோட மாமா சொல்ல, பெண்ணின் அப்பா, அம்மா, அவங்க வேண்டாம்னால் சரினு சொல்லிடறாங்க.


மாமாவுக்குச் சின்னதா வருத்தம்.  அவர் பேசாமல் அங்கே இருந்த நாற்காலியில் உட்கார்ந்துக்கறார்.  பெண்ணின் அப்பா, அம்மா, பிள்ளையின் அப்பா, அம்மா, அவங்க வீட்டு முக்கியஸ்தர்கள்னு மேடையிலே உட்கார்ந்துக்கறாங்க.  முதல்லே பிள்ளையை அமர வைத்து நிச்சயமாம்.  அப்புறமாப் பெண்ணாம். இரண்டு பேருக்கும் நிச்சயம் முடிஞ்சு அதுக்கு அப்புறமா சாவகாசமா மாப்பிள்ளை அழைப்பு.வைச்சுக்கலாம்னு ஒரு சாரார் கூற இன்னொரு சாரார் இப்போக் கோயிலுக்குப் போறச்சே அங்கேயே வைச்சுப் பிள்ளையின் நிச்சயத்தை முடிச்சுப் பிள்ளையைக் கோயில் வாசல்லே இருந்து அழைத்து வரப் போவதாக ஏற்பாடு பண்ணி இருப்பதாகக் கூறினார்கள். அந்தக் கோயிலும் சத்திரத்துப்பிள்ளையார் கோயில் இல்லையாம்.  கொஞ்சம் தள்ளி இருக்கும் கோயிலாம்.  போறச்சே சத்திரத்துப் பிள்ளையாரைப் பார்த்துத் தேங்காய் உடைத்துச் செல்வதாக முடிவு செய்யப் பட்டது.

பெண்ணின் அம்மா, அப்பாவுக்கே இந்த விஷயம் இப்போது தான் தெரிய வர, அவங்க விசாரிச்சப்போ ஊர்வலம் வர லைசென்ஸ் ஆறிலிருந்து ஏழுக்குள்ளாகக் குறிப்பிட்ட தெருக்களில், குறிப்பிட்ட கோயிலில் இருந்துனு மாநகராட்சியிடம் அனுமதி வாங்கி இருப்பதாகக் காட்டரிங் காரர் கூறினார். ஆஹா, இப்போல்லாம் அவங்க இல்லை ஏற்பாடுகள் பண்ணறாங்க.  அதை விட்டுட்டு நாமே பேசிக்கறோமேனு பெண்ணின் பெற்றோரும், பிள்ளையின் பெற்றோரும் இறுக்கம் தளர்ந்து சிரிக்கப் பெண்ணின் மாமாவும் சிரிப்பில் கலந்து கொள்கிறார்.  ஆனாலும் பிள்ளை வீட்டினர் பெண்ணின் நிச்சயத்தை இங்கே சத்திரத்திலேயே வைச்சுக்கலாம்.  ஊர்வலம் முடிஞ்சு வந்து தனியாத் தான் பண்ணணும் என்பதில் உறுதியாக இருந்துட்டாங்க.  ஆகவே இங்கே சத்திரத்தில் யார் இருக்கப் போறாங்கனு கேட்டு முக்கியமான சிலர் பாதுகாப்பில் இன்னமும் அலங்காரத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்ணையும், அவள் தோழியரையும் விட்டு விட்டுச் செல்வதாக முடிவு செய்தனர்.  பெண்ணின் அம்மா கவலையோடு பெண்ணைப் பார்த்துச் சொல்லிவரச் சென்றார். பெண்ணின் பாட்டி, அத்தை(அவரால் நடக்க முடியலையாம்) இன்னும் சிலர் சத்திரத்தில் தங்க, மற்றவர்கள் எடுத்துச் செல்லவேண்டிய தேங்காய்கள், பழங்கள், பருப்புத் தேங்காய் (மற்ற பக்ஷணங்கள் அங்கேயே அலங்காரமாக வைக்கப்பட்டது.) மற்றும் நிச்சயத்துக்கு வைக்க வேண்டிய தட்டுகளைச் சுமந்து கொண்டு ஒரு குழு பெண் வீட்டினர் முன்னே சென்று இவர்களை வரவேற்கக் காத்திருக்க வேண்டிச் சென்றனர்.  நாதஸ்வரக் காரர்களும் அவர்களோடு சென்றுவிட,  மற்றவர்களில் நடக்க முடியாதவர்களுக்கு வண்டி ஏற்பாடு செய்ய,

மாப்பிள்ளை அழைப்பைப் படம் எடுக்க வேண்டிய ஃபோட்டோகிராஃபர்களும் சென்று விட்டனர்.  பின்னர் பிள்ளைக்குக் கொடுக்க வேண்டிய டிரஸ், மோதிரம், மாலைகள் போன்றவற்றோடு பெண் வீட்டார் ஒரு காரிலும், பிள்ளை வீட்டார் இன்னொரு காரிலும் ஏறிக் கொள்ள வண்டி கோயிலை நோக்கிச் சென்றது.
அங்கே கார் ஒன்று அழகாக அலங்கரிக்கப்பட்டுக் காத்திருந்தது.  காரிலேயே உயரமாக இருக்கை அமைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.



 அதன் பத்திரத்தைப் பற்றிப் பிள்ளையின் அப்பா கவலைப்பட கார்க்காரர் அதெல்லாம் கவலைப்படவே வேண்டாம். நல்லாக் கட்டி இருக்கேன்.  ஜாக்கிரதையாப் பார்த்துப்பேன் என உறுதி அளித்தார்.  அங்கே ஒரு ஆனைக்குட்டியும் நின்று கொண்டிருந்தது.  அட, ஆனை கோயிலோடதானு கேட்டவருக்கு, இல்லைங்க ஆனை மாலை போட்டு மாப்பிள்ளையை வரவேற்கும், திரும்ப மாலை போட்டுக் காரில் உட்கார வைக்கும்.  கீழே இறங்கறச்சேயும் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் மாலை போட்டு இறங்கச் சொல்லும் னு சொல்லிட்டு, அப்போக் கீழே இறங்கி இருந்த மாப்பிள்ளையைச் சட்டென அடையாளம் கண்டு கொண்டு யானைக்குட்டியை மாலை போட வைத்தார் ஆனைப்பாகன்.
 அதுவும் மாலையைப் போட்டுவிட்டுத் தும்பிக்கையைத் தூக்கிப் பிளிறிவிட்டு ஒரு சலாம் வைத்தது. அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு நிச்சயத்துக்கு உள்ளே சென்றனர்.

முன்னெல்லாம் கல்யாணத்துக்கு முதல்நாள் தான் இந்தச் சடங்கு நடந்து வந்திருக்கிறது என நினைக்கிறேன்.  அதற்கு முன்னர் பெண் பார்த்துப்பிடித்ததும், ஒப்புத் தாம்பூலம் என வெறும் பாக்கு வெற்றிலை மட்டுமே பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும் மாற்றிக் கொண்டிருப்பார்கள்.  இப்போதும் பிள்ளையார் பூஜை செய்து நிச்சயம் நடக்கும்.  மீண்டும் ஒரு முறை பத்திரிகையைப் படிப்பார்கள். இது எல்லாம் அந்தக் கல்யாணத்தில் யாருக்கானும் ஒரு சின்ன ஆக்ஷேபம் இருந்தால் கூட அப்போது கூட எழுப்பலாம். அதற்காகவும், பிள்ளை வீட்டினர் குறித்து எந்த சந்தேகம் பெண் வீட்டினருக்கு இருந்தாலும் கேட்டுக் கொள்ளலாம் என்பதற்காகவுமே. அடுத்துக் கோயிலில் பிள்ளைக்கு நிச்சயம் நடக்கிறது.  பெண்ணின் சகோதரன் பிள்ளைக்குச் சந்தனம் குங்குமம் கொடுத்துப்  பிள்ளைக்கு என வாங்கி இருக்கும் ஆடையைப் பரிசளிப்பான். மைத்துனன் துணையோடு ஆடை அணிய வேண்டும் என்பது சம்பிரதாயம். இதன் மூலம் ஒருவரோடு ஒருவருக்கான உறவு முறை நெருங்கி வரும் என்பதற்காகவும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதே போல் பெண்ணிற்கு அவள் நாத்தனார், பிள்ளையின் சகோதரி உடை அணிய உதவி செய்வாள். தன் தோழர்களோடு சேர்ந்து உடைமாற்றச் சென்ற மாப்பிள்ளை உடை அணிந்து வந்த பிள்ளைக்கு மாலை போட்டு மீண்டும் சந்தனம், குங்குமம் கொடுத்து பிள்ளைக்கு என வாங்கி இருக்கும் நகைகளையும் கொடுப்பார்கள்.  இந்த நகை பரிசளிப்பது கட்டாயம் அல்ல. இப்போதெல்லாம் எல்லாரும் பிள்ளைக்கும் பிரேஸ்லெட், மோதிரம், சங்கிலி என வாங்கிக் கொடுக்கின்றனர். :)))))

இதன் பின்னர் தோழர்கள் புடை சூழ மாப்பிள்ளை அலங்கரிக்கப்பட்ட காரில் வந்து ஏறிக்கொள்ள அவரைச் சுற்றிச் சிறு குழந்தைகள் உட்கார வைக்கப்படுவார்கள்.  மாப்பிள்ளையின் பக்கம் அமர, பெண்ணின் உறவினர் குழந்தைகளும், பிள்ளையின் உறவினர் குழந்தைகளும் போட்டி போடும்.  இதனாலும் பலருக்கு மன வருத்தங்களும் ஏற்படும். :))) எல்லாவற்றையும் மீறிக் கொண்டு நாதஸ்வரக் காரர் அருமையான பாடல்களை வாசித்துக் கொண்டு வர, மெல்ல மெல்ல ஊர்வலம் நகர்கிறது.


Sunday, July 28, 2013

Saturday, July 27, 2013

நான் கணினி கற்றால், அதை முழுதும் கற்றால் இணைய ரசிகர்களைப் படுத்தாமல் விடமாட்டேன்!

அப்போல்லாம் நாம் வேண்டுகிற தளத்தின் விலாசத்தைத் தான் முழுவதுமாகத் தட்டச்சணும்.  நான் என்ன செய்யறதுனு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன்.  அப்போ என்னோட ஆசிரியர் வந்து ப்ரவுஸ் பண்ணப் போறீங்களானு கேட்க, நானும் என்னனு யோசிக்காம, ஆமாம்னு சொல்லிட்டேன்.  என்ன சைட்னு கேட்டார்.  சைட்டா?  நான் யாரையும் சைட் அடிக்கலையேனு வாயிலே வந்ததை முழுங்கிட்டேன்.  எனக்குக் கூச்ச சுபாவம் இல்லை;  நேரடியாச் சொல்லி இருக்கலாமோ!  அதுக்கும் திரு திரு.  அப்புறமா அவரே சரினு ஏதோ ஒரு தளத்தைத் திறந்து கொடுத்தார்.  அதிலே சில முக்கியமான தளங்களின் வெப் அட்ரஸ் இருந்தது.  அதிலே இருந்து ஒரு தினசரியின் தளத்தைக் க்ளிக்கிப் பார்க்க  முயல, மெளஸ் அந்தக் குறிப்பிட்ட சுட்டியில் நிக்காமல் ஓடிட்டே இருந்தது.  பொறி வைச்சுத் தான் பிடிக்கணும் போலிருக்கேனு அலுத்துப் போயிட்டேன். மீண்டும் ஆசிரியர் வருகை.  வெண்ணை திருடின கண்ணனாட்டமா நான் முழிக்க, அவருக்குச் சிரிப்பு.  நேத்திக்கு நடந்ததை அந்த ஆசிரியர் சொல்லி இருப்பாரோ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சே, நேத்திக்கு எவ்வளவு ஜாலியா இருந்தது!  நல்லா விளையாட முடிஞ்சதே, இன்னிக்கு என்னன்னா, பாடம் ஆரம்பிச்சு நடத்தறாரே!  எனக்குத் தான் கூச்ச சுபாவமே இல்லைனாலும் அந்த ஆசிரியர் கிட்டே இதைச் சொல்ல முடியலை. :P

என்ன ஆச்சு மேடம்னு கேட்க, மெளஸ் ஓடிப் போயிடறதுனு புகார் கொடுத்தேன்.  நீங்க பிடிச்சுக்கறதிலே இருக்குனு சொன்னார்.  மெளஸ்னு நினைச்சாலே பிடிக்கவா தோணும்! இதோட பெயரை வேறே ஏதானும் வைச்சிருக்கக் கூடாதோ!  யாருங்க அது இதுக்கு மெளஸ்னு பெயர் வைச்சது! னு மனசுக்குள்ளே நொந்து நூலாகிப் போயிட்டேன். அதுக்குள்ளே மெயில் கொடுக்கணுமேனு யோசனை வர, என் பையருக்கும், பொண்ணுக்கும் மெயில் கொடுக்கணும்னு சொன்னேன்.  அவங்க மெயில் ஐடி தெரியுமானு கேட்டார்.  எழுதிக் கொண்டு போயிருந்தேன்.  அதைச் சொல்லவும். என் கிட்டே இருந்து மெளஸை வாங்கி எதையோ க்ளிக்கினார்.  ஒரு தளம் வந்தது.  அதிலே என்னோட பெயர், வயசு எல்லாம் கொடுத்து ஓகே கொடுக்கச் சொல்ல சரினு அவர் சொன்னதெல்லாம் பண்ணி வைச்சேன்.  பாஸ்வேர்ட்னு ஒண்ணு கொடுக்கணுமே.  அப்போல்லாம் யாஹூ தான்.  யாஹூ.காமில் ஒரு அக்கவுன்ட் க்ரியேட் பண்ணினேன்.  பாஸ்வேர்ட் கொடுக்கையில் என்ன கொடுக்கிறதுனு புரியலை.  ஏதோ ஒரு பூவின் பெயரைக் கொடுத்தேன்னு நினைக்கிறேன்.  எல்லாம் முடிச்சாச்சு. மெயில் கொடுக்க என்ன செய்யறதுனு புரியாம எதையோ க்ளிக்கினால் தளம் மறைஞ்சே போயிச்சு.  ஆஹா, காக்கா தூக்கிண்டு போச்சோனு, உஷ், உஷ்னு கத்தலாம்னு நினைச்சேன்.  அதுக்குள்ளே கணினியே முழுசா ஆஃப் ஆக என்னமோ தப்பாயிடுச்சுனு புரிஞ்சது.

அதுக்குள்ளே என்னோட மூஞ்சியைப் பார்த்துட்டே அந்த ஆ"சிரி"யர் வந்து சேர்ந்தார்.  என்னனு கேட்க, வாயே திறக்காமல் கணினியைச் சுட்டிக் காட்டினேன்.  ஹிஹிஹி, ஷட் டவுன் பண்ணி இருக்கீங்க, எப்படிச் செய்தீங்கனு கேட்டார்.  நான் எங்கே ஷட் டவுன் பண்ணினேன்.  மெயில்கொடுக்கணும்னு தான் நினைச்சேன்.  அது ஒரேயடியா காணாமப் போச்சுனு சொன்னேன்.  மறுபடியும் ஸ்விட்சைப் போட்டு கணினியைத் திறக்கச் சொன்னார். திறந்து ஸ்டார்ட் பட்டனைக் க்ளிக்கச் சொல்ல ஸ்டார்ட் க்ளிக் பண்ணினேன்.  டபுள் க்ளிக் என்று சொன்னதாக நினைவு.  ஆகவே இன்னொரு தரம் எதிலோ க்ளிக்க, பெயின்ட், ப்ரஷ்னு வந்துடுச்சு.  அங்கே பார்த்தால் ஒரு ப்ரஷ் ஒண்ணு ஓரமா இருக்க அதைக்க்ளிக்கினால் சென்டருக்கு வந்தது.  மேலும்,மேலும் க்ளிக்கிக் கொண்டே போக விதவிதமான கோடுகள், வளைசல்கள். வட்டங்கள், செவ்வகங்கள்னு தோணினதை எல்லாம் கைக்குக் கிடைச்சபடி போட்டுட்டு இருந்தேன்.  இது நேத்தை விட இன்னிக்கு இன்னும் ஜாலியாவே இருந்தது.  இப்படி எல்லாம் விளையாடலாம்னு யாருமே சொல்லலையே, துரோகிங்கனு பொண்ணையும், பையரையும் திட்டிக் கொண்டேன், மனசுக்குள்ளே தான்.  பார்த்தார் ஆசிரியர். என்னதான் இவங்களுக்குக் கூச்ச சுபாவம் இல்லைனாலும் இதெல்லாம் டூ மச் இல்லை, ஃபோர் மச்ச்னு தோணிப்போய், என்ன மேடம் மெயில் ஐடி க்ரியேட் பண்ணணும்னு சொல்லிட்டு வரையறீங்களேனு கேட்க, அசடு வழிய நான் ஸ்டார்ட் பட்டனிலே டபுள் க்ளிக் பண்ணினதிலே இது வந்ததுனு சொல்ல, அதெல்லாம் இல்லை, ப்ரொகிராமிலே பெயின்ட், ப்ரஷிலே க்ளிக்கி இருக்கீங்கனு நாலு பேர் முன்னாடி சொல்லி என் மானத்தை(இருக்கா என்ன?) ஒட்ட வாங்கினார். ப்ரொகிராமா அது எங்கே இருக்கு??  ம்ம்ம்ம்?? தனியாக் கேட்டு வைச்சுக்கணும், இல்லைனா இன்னொரு நாள் வந்து கணினியைத் துருவிப்பார்க்கணும்னு நினைச்சுக் கொண்டேன்.  பின்னர் அங்கே வந்து யாஹூவைத் திறந்து கொடுத்தார்.

மெயில் கொடுக்க இன்பாக்ஸ் திறந்துடுச்சு.  ஆ னு வாயைப் பிளந்தேன். கொடுங்க மேடம்னு சொன்னார்.  இதிலே ஒருத்தருக்குத் தானே கொடுக்க முடியும்னு சொல்ல, நீங்க மேட்டரை டைப் பண்ணுங்க.  இல்லைனா சொல்லுங்க, நான் டைப்பறேன்னு சொல்லவே, அட, இந்த ஆங்கிலம் கூடவா தெரியாதுனு நினைச்சுட்டார்னு கோபம் வர, கிடு கிடு கிடு கிடுனு டைப்பினேன்.  அவசரத்தில்" கிடுகிடு"  "கிடு கிடு" "கிடு கிடு" அப்படின்னே அடிச்சுருக்கப்போறேனேனு பார்த்துக் கொண்டேன்.  நல்ல வேளையா இல்லை.நான் டைப்பின வேகத்தைப் பார்த்து அசந்துட்டார்.  என்ன இவ்வளவு வேகமா டைப்பறீங்க! ஒண்ணும் அவசரம் இல்லை.  இன்னும் பத்து நிமிஷம் இருக்கு உங்க நேரம் முடிய.  அப்புறமாக் கூட ஒரு ஐந்து நிமிஷம் ஆனாப் பரவாயில்லைனு ரொம்பப் பெருந்தன்மையாச் சொல்ல, அலட்சியமா அவரைப் பார்த்த நான். என்னோட டைப்பிங் குறைந்த பட்ச வேகம் இதுனு சொல்லி அவரைத் திரும்ப அசர அடிச்சேன். அப்புறமா அந்த ஐடியை மேலே டைப் பண்ணச் சொன்னார். சென்ட் கொடுக்கச் சொன்னார். நாளைக்கு பதில் என்னோட இந்த ஐடியிலே இருக்கும், வந்து பார்த்துக்குங்கனு சொன்னார்.  நான் எனக்கு? எனக்கு? னு சுண்டல் கேட்கிறாப்போல் கேட்க, அவரும் இங்கே பக்கத்துப் பிள்ளையார் கோயில்லே தான் தராங்கனு சொல்லிட்டார்.  பதிலுக்கு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரின நான், அவர் கிட்டே நானே சொந்தமா என்னோட மெயில் ஐடி ஒண்ணு க்ரியேட் பண்ணணும்னு சொல்ல,  அதான் மேடம் இதுனு செந்தில்--கவுண்டமணி வாழைப்பழ ஜோக் மாதிரிச் சொல்லிட்டார்.

அப்புறமா அங்கிருந்து பொண்ணுக்குத் தனியா, பிள்ளைக்குத் தனியானு மறுபடி  என் முயற்சியாலேயே இன்னொரு மெயில் கொடுத்தேன். அப்பா!  இமயமலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினாக் கூட இவ்வளவு சந்தோஷம் வந்திருக்காது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு சந்தோஷமா இருந்தது.  போயிருக்குமானு சந்தேகம் வேறே.  அன்னிக்கு வீட்டிலே போய் ரங்க்ஸ் கிட்டே இதான் பெருமையாச் சொல்லிட்டு இருந்தேன்.  பையர் அன்னிக்கு ராத்திரியே ஃபோன் பண்ணி அம்மா மெயில் வந்ததுனு சொல்லிட்டு, என்னோட ஆர்வத்தைப் பொசுக்கிட்டார். "ஏண்டா, சொன்னே! ஒரு மெயில் கொடுக்கக் கூடாதோ! நான் வந்து அப்பா கிட்டே சொல்லுவேனே!" னு சொன்னா. "ஹை டெக் அம்மா" னு கிண்டல் வேறே!  இப்போவும் என்னை ஹை டெக் அம்மானு தான் சொல்லுவார். :P:P:P:P

மறுநாளைக்குப் பொண்ணு சமத்தா மெயிலில் பதில் கொடுத்திருந்தாள். ரொம்பவே சந்தோஷமா இருந்தது.  அதுக்கப்புறமா ஆரம்பிச்சார் எங்க பையர்.  அம்மா கணினி எக்ஸ்பெர்ட் ஆயிட்டானு, அவர் அமெரிக்கா போகிறதுக்குண்டான வேலையை எல்லாம் இங்கே என்னைச் செய்ய வைச்சு, அதைக் கணினி மூலமா அப்டேட் செய்யச் சொல்லி இன்னும் பழக்கினார்.  ஓரளவுக்குக் கணினியைத் திறக்கவும், மூடவும், மெயில் ஐடியைத் திறக்கவும் வந்தது.  அப்புறமா முதல்முறை அமெரிக்கா போனப்போ பொண்ணு வீட்டு கணினியிலே தான் முதல்முறையாத் தமிழ் படிச்சேன். அந்தக் கதை தனி. அதை வேறே யாரானும் கேட்டா வைச்சுக்கலாம்.  மொத்தத்தில் நான் கணினி கற்றுக் கொண்டதுனு பார்த்தா மெயில் கொடுக்க மட்டுமே தெரிந்து கொண்டிருந்தேன்.  மிச்சம் எல்லாம் அவ்வப்போது செய்த தவறுகளின் மூலமே தெரிந்து கொண்டேன்.


தொழில் நுட்பப் பிரச்னைகள் என வரும்போது நண்பர்கள் உதவி செய்யறாங்க, செய்தாங்க, இன்னும் செய்வாங்க.

நான் அழைக்கும் ஐந்து பேர்

வல்லி சிம்ஹன்

ரஞ்சனி நாராயணன்

வை.கோபாலகிருஷ்ணன்

ஜி.எம்.பி. சார்

ஜீவி அவர்கள்

ரொம்ப யோசிச்சு இவங்களை எல்லாம் யாரும் கூப்பிடலை என்பதை உறுதி செய்து கொண்டு கூப்பிட்டிருக்கேன்.  பதிவு ரொம்பவே பெரிசா ஆயிடுமோனு இதைக் கொஞ்சம் அவசரமாவே முடிச்சிருக்கேன்.  மன்னிக்கவும். :))))

Friday, July 26, 2013

நான் காற்று வாங்கவில்லை, கணினி கற்கச் சென்றேன்!

இப்போல்லாம் நிறையப் பேர் கணினி கத்துக் கொடுக்கறாங்க.  போதாததுக்கு எல்லாப் பத்திரிகைகளும் கணினி அறிவு பற்றிய செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.  நமக்கெல்லாம் அப்படி யாரும் கிடைக்கலை.  சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா, ஒரு மெயில் கொடுக்கக் கத்துக்கலாம்னு போனது தான். லோட்டஸ் னா எனக்குத் தாமரைனு தான் அர்த்தம் புரியும்.  ஜாவானா, பைக் நினைப்பிலே வரும். இப்படி இருக்கிறவ கிட்டேப் போய் ஜாவாவும், லோட்டஸும் படின்னா, யார் படிப்பாங்க!  அதானால் நான் ஸ்ட்ரிக்டா ஹிஹிஹி, கவனிக்கவும், ஸ்ட்ரிக்டா என்னோட கணினி ஆசிரியர் கிட்டே என்னோட தேவை என்னனு விளக்கிட்டேன். பையர் பரோடாவிலும், பொண்ணு அமெரிக்காவிலும் இருக்கிறதாலே அவங்களுக்கு ஆத்திர, அவசரத்துக்கு மெயில் கொடுக்கத் தெரிஞ்சாப் போதும்னு சொல்லிட்டேன். நமக்குத் தான் கூச்சமே கிடையாதே!  ஆசிரியர் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்திருப்பார்.  ஆனாலும் காட்டிக்கலை.



தலை எழுத்தை நொந்து கொண்டு அடிப்படை எப்படியும் தெரிஞ்சிருக்கணும்னு சொல்லி, இதான் சிபியுனு சொன்னார். அப்படின்னா? இதாங்க கம்ப்யூட்டரே.  ஓஹோ, அப்படியா? பொட்டி உள்ளே என்னெல்லாம் இருக்கும்?? அவர் மனசுக்குள்ளே இது என்ன துணிமணி வைக்கிற சூட்கேஸா, இல்லை மேக்கப் பொட்டியா, இவங்க கேட்கிறதைப் பார்த்தால் அப்படித் தான் நினைக்கறாங்க போலனு நினைப்பது பளிச்சென எனக்குத் தெரிய, ஹிஹி, இல்லை, அதுக்குள்ளே உள்ள மெகானிசம்னு ஆரம்பிக்க, அதெல்லாம் உங்களுக்கு எதுக்குங்க?  இதோ, இந்த ஸ்விட்சை ஆன் பண்ணினா இங்கே ஹோம் பேஜ் வரும்னு சொன்னார்.  நமக்குத் தான் கூச்ச சுபாவமே கிடையாதுனு உங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியும்,  ஆகவே,  ஹோம் பேஜ் இப்படித் தான் இருக்கணுமா?  அந்தக் கம்ப்யூட்டரில் வேறே மாதிரி இருக்கே! னு நான் கேட்க, அது எல்லாம் எப்படி வேணா வைச்சுக்கலாம்ங்க.  அவங்க அவங்க விருப்பத்துக்கு ஏத்தாப்போல் மாத்தி அமைச்சுக்கலாம்னு ஆரம்பிச்சார்.  துளிக்கூடக் கூச்ச சுபாவம் இல்லாமல் நான் அப்போ இதை மாத்திக்காட்டுங்களேன்னு நான் சொல்ல, அவரும் தலை எழுத்தை நொந்து கொண்டு டெஸ்க் டாப்பில் தெரிஞ்ச படத்தை மாத்தி வேறே படத்தைக் கொண்டு வந்தார்.  அந்த விளையாட்டு எனக்குப் பிடிச்சுப் போக நானும் விளையாடறேனேனு கேட்க, சரினு சொல்லிக் கணினி பாடு; உன்பாடுனு என்னையும் அதையும் தன்னந்தனியே விட்டுட்டுப் போயிட்டார்.

நானும் இரண்டையும் கொஞ்ச நேரம் மாத்தி, மாத்திப் போட்டுப் பார்த்துட்டு, அலுத்துப் போய், என் ஆசிரியரைக் கூப்பிட்டு, எனக்கு மெயில் கொடுக்கக் கத்துக் கொடுக்கறதாச் சொல்லிட்டுப் போயிட்டீங்களேனு கேட்டேன்.  ஹிஹிஹி, நமக்குத் தான் கூச்ச சுபாவமே கிடையாதே!  திருதிருவென விழித்த அவர், இன்னும் பேசிக்கே நீங்க கத்துக்கலையேனு ஆரம்பிச்சார்.  என்னங்க, நீங்க தானே சொல்லிக் கொடுக்கணும்!  என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களேனு நான் அவரைத் திருப்ப, பதில் சொல்ல முடியாமல் திணறின மனிதர், இன்னிக்கு ஒரு மணி நேரம் ஆயிடுச்சுங்க, நாளைக்கு வாங்க, பார்க்கலாம்னு சொல்ல, ஒண்ணுமே சொல்லிக் கொடுக்கலை, அதுக்குள்ளே ஒரு மணி நேரம் ஆயிடுச்சா? சரியாப் போச்சு போங்க, இப்படிச் சொல்லிக் கொடுத்தால் நான் எப்படிக் கத்துக்கறதுனு சொல்லிட்டு நாளைக்கு வரேன்னு அவரைப் பயமுறுத்திட்டு நடையைக் கட்டினேன்.  ஹிஹிஹி,இதுவும் கூச்ச சுபாவம் இல்லாமல் தான் சொன்னதாக்கும்.


 அன்னிக்குப் பூராப் பார்க்கிறவங்க கிட்டே எல்லாம் டிவி பெட்டியைக் காட்டிக் கம்ப்யூடரில் ஸ்க்ரீன் ஒண்ணு  இப்படித் தெரியறது பாருங்க அது ஒண்ணும் கம்ப்யூட்டர் இல்லையாக்கும்.  கீழே செவ்வக வடிவில் ஒரு பெட்டி இருக்குப் பாருங்க அதான் கம்ப்யூட்டர்.  அதை சிபியூனு சொல்லணும்.  அப்படினு சொல்லிட்டு இருந்தேன்.  ரங்க்ஸ் கிட்டேயும் அதே பாடம்.  அவர் சும்மா இருக்காம, சிபியுனா ஃபுல் ஃபார்ம் என்னனு கேட்டு வைக்க, அதைக் கேட்டுக்கலையேனு திகைச்ச நான்,  அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?  நான் தானே கம்ப்யூட்டரைக் கத்துக்கப் போறேன்.  நான் தெரிஞ்சுண்டாப் போதும்னு சொல்லிட்டுக் காஃபியையும், டிஃபனையும் கொடுத்து அவர் வாயைத் தாற்காலிகமா அடைச்சு வைச்சேன்.

மனசுக்குள்ளே நாளைக்கு சிபியூனா என்னனு கேட்டு வைச்சுக்கணும்னு குறிச்சுண்டேன்.  மறுநாளைக்குக் கரெக்டாப் பத்து மணிக்குப் போயிட்டோமுல்ல!  அங்கே போனால் முதல் நாள் இருந்தவர் இல்லை.  அவருக்கு அன்னிக்கு லீவாம். வேறொருத்தர் இருந்தார்.  நானும் கடவுளே, அவர் இல்லையேனு இன்னிக்குப் போயிடலாமானு யோசிக்கிறதுக்குள்ளே புதுசா இருக்கிறவர் என்ன மேடம், எனி ஹெல்ப்னு கேட்க, நானும் நான் காற்று வாங்க வரலை, ஒரு கணினி கற்க வந்தேன்னு சொல்ல, அவர் தன்னைப் பிரகாஷ்னு அறிமுகம் செய்து கொண்டு வாங்க, நேத்து எதிலே பண்ணினீங்க?  சிபியூ, மானிடர், எல்லாம் காட்டியாச்சா? அப்புறமா, எப்படி ஸ்டார்ட் பண்ணணும்னு சொல்லி இருப்பாங்களே, எங்கே ஸ்டார்ட் பண்ணிக் காட்டுங்கனு ஏற்கெனவே ஸ்டார்ட் செய்து வைச்சிருந்த கணினியை ஷட் டவுன் பண்ணிட்டு ஸ்டார்ட் பண்ணச் சொல்லிட்டார்.  இவர் நம்மைவிடக் கூச்ச சுபாவம் இல்லாதவரா இருப்பார் போலிருக்கே! போச்சு, போச்சு, நேத்து விளையாடின விளையாட்டை இன்னிக்கு விளையாட முடியாது போலிருக்கேனு மனசை நொந்து கொண்டு கம்ப்யூட்டரின் ஸ்விட்சை அழுத்தினேன்.  மானிடரில் வெளிச்சம் வர அதிலே ஸ்டார்ட் பட்டனைத் தேடணுமோனு நினைக்கிறதுக்குள்ளே கண்ணெதிரே ஸ்டார்ட் பட்டன் தெரிய ஆஹானு அது கிட்டே மெளசைக் கொண்டு போறதுக்குள்ளே அது என்னமோ நான் பிடிச்சுக் கூண்டில் அடைக்கப் போறேன்னு நினைச்சுட்டுச் சரியா வராமல் ஆரோ மார்க் எங்கெல்லாமோ நடனம் ஆடினது.   என்றாலும் கூச்ச சுபாவம் இல்லைங்கறதையும் நீங்க புரிஞ்சுக்கணும்.

மெளசைப் பிடிக்க வரலையானு பிரகாஷ் கேட்க, மெளசா எங்கேனு நான் துள்ள, அவர் இப்போ ஹிஹிஹிஹி.  நீங்க கையிலே பிடிச்சிருக்கீங்களே அதான் மேடம் மெளஸ்னு சொல்ல, ஒரு நிமிஷம் பயத்திலே கையை உதறப் போன நான் சுதாரிச்சுட்டு அசடு வழிந்தேன்.  ஹிஹி, இதுக்கு மெளஸ்னு பேரா? பொண்ணு இதெல்லாம் சொல்லவே இல்லையே! மெளஸ் இருக்கும்னு!  முன்னாடியே தெரிஞ்சா பயப்படாம இருந்திருக்கலாமேனு பல்லைக் கடிச்சுட்டு, மெளசைக் கெட்டியாப் பிடிக்கலைனா ஓடிடாதோனு கேட்டு வைச்சேன்.  நல்லா ஹாஸ்யம் பண்ணறீங்க மேடம்னு சொல்லிட்டு, (ஹாஸ்யமா அது?  நான் நிஜம்மாத்தான் கேட்டேன்னு தெரியலை அவருக்கு, பாவம்) மெளசை எப்படிப் பிடிக்கணும்னு சொல்லிக் கொடுத்து ஸ்டார்ட் பண்ணச் சொன்னார்.  அப்போத் தான் சிபியூன்னா என்னனு கேட்கவில்லையேனு தோண, அவரிடம் அதைக் கேட்க, என்ன, நேத்திக்கு அப்போ என்ன சொல்லிக் கொடுத்தார் உங்களுக்குனு கேட்க, ஹிஹிஹி, நேத்திக்கு விளையாடிட்டு இருந்தேன்னு சொல்லவா முடியும்.  நான் திருதிரு.  சிபியூன்னா சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் அப்படினு அழுத்தம் திருத்தமாச் சொல்ல மனதுக்குள்ளே நயாகரா.  ஆகா, கம்ப்யூட்டர் பாஷையிலே ஒண்ணு தெரிஞ்சுடுச்சே!  ஹையா, ஜாலி!  அப்புறமா மானிடரைக் காட்டி, இது மானிடர், எல்லாரும் நினைக்கறாப்போல் இது கம்ப்யூட்டர் இல்லைனு சொல்ல, அதான் எனக்குத் தெரியுமேனு சொல்ல வாயைத் திறந்துட்டு அப்புறமா அடக்கிட்டேன்.  இது ஒண்ணும் கூச்ச சுபாவத்தினாலே இல்லையாக்கும்.  ஆசிரியர் எதிரே எதிர்த்துப் பேசக் கூடாதுனு மரியாதை! அவர் கேட்காமலேயே இது மெளஸ்னு சொல்லிட்டு, தட்டச்சற கீ போர்டைத் தான் ஏற்கெனவே டைப்பிங் கத்துண்டப்போ பார்த்திருக்கோமே, இது கீ போர்ட் அப்படினு அவர் கேட்காம நானாச் சொல்லிட்டு இல்லாத காலரைத் தூக்கி விட்டுண்டேன்.

இதுக்குள்ளே கணினி ஸ்டார்ட் ஆகி, இணைய இணைப்புக்குப் பாஸ்வேர்ட் கேட்டது.  அப்போல்லாம் ப்ரவுசிங் சென்டரில் கூட டயல் அப் தான்.  உடனே நம்பர் போடச் சொல்லி ஏதோ வர, இருங்க நான் கனெக்ட் பண்ணித் தரேன்னு சொல்லி அவர் கனெக்ட் பண்ணினார்.  இணையம் விரிந்தது.  கூடவே என் கனவுகளும்.

Thursday, July 25, 2013

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ கற்றுக் கொண்டாய்?

இப்போ நான் ஶ்ரீராம் மாதிரி ஆப்பீச்ச்சுக்கெல்லாம் போகலை.   ஒரு காலத்தில் போனேன். அதுவும் டைபிஸ்டாத் தான் சேர்ந்தேன். தட்டச்சும் வேகம் அப்போவெல்லாம் இன்னும் அதிகம்.  அப்புறமா வாழ்க்கைப் பயணத்தில் எப்படியெல்லாமோ பயணம் செய்யும்படி ஆச்சு. ஆனாலும் டைபிங்கோ, சுருக்கெழுத்தோ மறக்கலை.  இப்போக் கூட எந்த ஆங்கில வார்த்தையைப் பார்த்தாலும் உடனே சுருக்கெழுத்தில் மானசீகமா எழுதிப் பார்த்துடுவேன். எனக்குக் கூச்ச சுபாவம் எல்லாம் இல்லை. ஶ்ரீராமுக்கு நேர் எதிரிடை! :)))) அப்படி இருந்தும்,   பாருங்க, கணினி மட்டும் யாரும் கத்துக்கொடுக்கலைனு தான் சொல்லணும்.  எண்பதுகளில் சூப்பர் கம்ப்யூட்டர் வந்தப்போ வாயைப் பிளந்துட்டு பார்த்ததோடு சரி.  இதெல்லாம் நம்மாலே எப்படினு ஒரு எண்ணம் அப்போல்லாம்.


குழந்தைங்க எல்லாம் காலேஜ் போக ஆரம்பிச்ச சமயம் பொண்ணு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்னு ஒரு கோர்ஸ் படிச்சா.  எங்க வீட்டிலே முதல்லே கணினியைத் தொட்டது அவ தான். அப்போ பெர்சனல் கம்ப்யூட்டர் எல்லாம் இத்தனை கிடையாது.  அவ சொல்றச்சே கேட்டுப்பேன். நான் கத்துக்க முடியுமானு நினைச்சுப்பேன்.  நமக்கெல்லாம் எங்கே கம்ப்யூட்டரைப் பார்க்கக் கூட முடியுமானு நினைச்சுப்பேன்.  அப்புறமாப் பையர் ஒரு தரம் காலேஜ் லீவிலே சென்னை வந்திருந்தப்போ ஆப்டெக்கில் போய்க் கணினி கோர்ஸ் முடிச்சார். அவர் பண்ணிட்டு இருந்தது மெகானிகல் இஞ்சினியரிங்.  ஆகவே தனியாத் தான் படிச்சார்.

அப்புறமா அவர் பரோடாவில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அங்கிருந்து ஒரு தரம் லீவுக்கு வந்திருந்தப்போ விளையாட்டா என்னைச் சும்மாத்தானே இருக்கே! கம்ப்யூட்டர் கத்துக்கோயேன் அப்படினு சொன்னார். பெண்ணுக்கு அப்போத் தான் கல்யாணம் ஆகி இருந்தது.  தொலைபேசி இணைப்பே பொண்ணு கல்யாணம் ஆகி அமெரிக்கா போன அப்புறமாத் தான் எங்க வீட்டுக்கு இணைப்புக் கொடுத்தோம்.   அது தனிக்கதை, இன்னொரு நாள் வைச்சுக்கலாம். அப்போ அவ ஒரு தரம் பேச்சு வாக்கிலே உனக்கு மெயில் ஐடி இருந்தால் ஏதானும் முக்கியமானதுனு இருந்தாக் கொடுக்கலாம்.  நீ உடனே ப்ரவுசிங் சென்டர்லே போய்ப் பார்க்கலாம்.  இப்போ நான் லெட்டர் எழுதி உனக்கு வரப் பதினைந்து இருபது நாட்கள் ஆயிடுதுனு சொன்னா.


அதோட இல்லாமல்   என்னோட சிநேகிதி ஒருத்தி அப்போ கணினி கத்துட்டு மெடிகல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் பண்ணிட்டு இருந்தா.  அதுக்கு ஆங்கில அறிவும், தட்டச்சும் தெரிந்தால் போதும்னு சொன்னாங்க.  நமக்கு இருக்கிற ஆங்கில அறிவு போதாதானு நானே முடிவு பண்ணிக் கொண்டு நமக்குத் தட்டச்சத் தெரியும். ஆகவே இந்த கோர்ஸ் பண்ணினால் வசதினு தோணிச்சு.எனக்குக் கூச்ச சுபாவமே இல்லையா, உடனேயே   ரங்க்ஸ் கிட்டே என்னோட ஆசையை வெளியிட்டேன்.  இப்போ இருக்கிற பணத் தேவைக்கு வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்னு அல்நாஷர் கனவுகள்.  அப்படியே நிறைய க்ளையன்ட் கிடைச்சு, எல்லார் கிட்டேயும் இப்போ முடியாது; இன்னும் இரண்டு நாள் பொறுங்க.  உங்களுக்கு முன்னால் கொடுத்தவங்களுக்கு முடிச்சுட்டுத் தான் உங்களோடதுனு மானசீகமாப் பேசி எல்லாம் பார்த்துண்டேன்.  வீட்டிலேயும் எப்போவும் என்னைப் பார்க்கவென்றே ஒரு கூட்டம் வராப்போல் எல்லாம் கனவுகள்!  கத்துண்டால் மட்டும் போதுமா?   கணினி வீட்டிலே சொந்தமா இருக்கணும்.  அப்போத் தான் இதிலே கொஞ்சமானும் சாத்தியம் ஆனால் எனக்குத் தான் கூச்ச சுபாவம் எல்லாம் இல்லையே!  அதனாலே எனக்குத் தோணினபடி எல்லாம் கற்பனையில் மிதந்தேன்.


ஆனால் பாருங்க, இந்த அழகான, அற்புதமான கற்பனைகளுக்கு, அநியாயமா செக் வைச்சது நம்ம ரங்க்ஸ் தான். இதுக்குச் சொந்தமாக் கணினி வாங்கணும்.  நம்மால வாங்க முடியுமா? முதல் கேள்வி! கணினியோட விலையெல்லாம் அப்போ நினைச்சுப் பார்க்கிற லெவலில் இல்லை.  அது இருந்தால் பொண்ணோட முதல் பிரசவத்துக்கு அமெரிக்கா போயிடலாமே! சரியான இடத்தில் கொக்கி போட்டார் ரங்க்ஸ்!


உன்னாலே தினம் தினம் அண்ணாநகர் போய்ட்டு வர முடியுமா? இரண்டாவது கேள்வி!  மெடிகல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் கோர்ஸ் அப்போ அண்ணாநகரில் தான் நடத்தினாங்க.  தினம் மதியம் போயிட்டு வரணும்.  அப்போ  குடும்பக் கவலைகள்னு சொல்ல முடியாட்டியும் பொறுப்புகள் இருந்தன. ஆகவே கணினி கோர்ஸுக்கான கட்டணம், அம்பத்தூரில் இருந்து அண்ணாநகருக்கு தினம் போயிட்டு வரக்கூடிய செலவுனு யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.  மூணாவது கேள்வியைப் போட வேண்டிய அவசியமே ரங்க்ஸுக்கு ஏற்படலை! :))))

நம்ம ரங்க்ஸ் எதையும் தன் வாயால் வேண்டாம்னு சொல்லவே மாட்டார்.  இதை எல்லாம் எடுத்துச் சொல்லி, "நீ புத்திசாலி! யோசிச்சுக்கோ!" அப்படினு சொல்லிடுவார்.   நாமளே வேண்டாம், விடுங்கனு சொல்றாப்போல ஆயிடும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது ஒரு  ஐஸ்னு புரிஞ்சுக்கவே பல வருஷங்கள் ஆயிடுச்சு! மரமண்டை தானே!   :P :P :P ஆகவே ஆவலை அடக்கிக் கொண்டு விட்டேன்.  கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆசை என்னமோ மனசில் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டு தான் இருந்தது.   அதுவரை கணினியைப் பார்த்ததில்லை.   உங்களை எல்லாம் நான் இப்படிப் படுத்தணும்னு விதி இருக்கிறச்சேச் சும்மா விடுமா! பையர் உசுப்பேத்தி விடவே, நானும் பிடிவாதம் பிடிச்சேன்.  அதோட பாருங்க, எனக்குத் தான் கூச்ச சுபாவமே இல்லையே! :))))

ஒரு நாள் காலை தினசரியோட வந்த விளம்பர அறிவிப்புகளில் ஒண்ணு அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு ப்ரவுசிங் சென்டரில் இல்லத்தரசிகள்,படிச்சுட்டுச் சும்மா இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை கணினி அறிவு கற்றுக் கொடுக்கப்படும்னு சொல்லி 20 மணி நேரம் கத்துக்கறவங்களுக்கு அதே 20 மணி நேரம் இலவசமாய் ப்ரவுசிங் செய்துக்கலாம்னு சொல்லி இருந்தாங்க. அடிச்சது நல்லதொரு வாய்ப்பு, விடுவேனா!  ரங்க்ஸ் ஆப்பீச்சு போறச்சே அவரோட வண்டியிலே தொத்திக்கொண்டேன்.  அவருக்கு என்னமோ இஷ்டமில்லை தான்.  உன்னாலே எல்லாம் முடியாதுனு புலம்பிட்டே வந்தார்.  என் கிட்டே கெட்ட பழக்கம் என்னன்னா, யாரானும் உன்னால முடியாது இதுனு சொல்லிட்டாப் போதும் ;  அதைச் செய்தே காட்டணும்னு ஒரு வீராப்பு வரும்.  அப்படி ஒரு சமயம் இப்போ, விடாதேனு ம/சா. அடிச்சுச் சொல்லவே அதன் குரலுக்குக் கீழ்ப்படிந்தேன்.


எத்தனை பதிவு வரும்னு இப்போச் சொல்ல முடியாது! உங்க அதிர்ஷ்டம் எப்படி இருக்கோ, அப்படி! :))))))

ஹிஹிஹி, தாங்க்ஸ் ஶ்ரீராம், கூச்ச சுபாவம் பயனுக்கு!

Wednesday, July 24, 2013

மாப்பிள்ளை அழைப்பு, மாலை டிஃபன், இரவு உணவு மெனு! :)))

மாலை மூன்று மணிக்கு டிபன் கொடுக்கப்படும். இரவு ஏழு மணி வரையிலும் வரவங்களுக்குக் கொடுக்கச் சொல்லிப் பெண் வீட்டார் கட்டளை. ஆகவே அது வரைக்கும் டிபன் கொடுக்கப்படும்..


ஸ்வீட் அசோகா,



 ஜாங்கிரி (பெண் வீட்டார் விருப்பம் 2 ஸ்வீட்)

அடை, அவியல்

போண்டா, சட்னி

சேமியா கிச்சடி, கொத்சு,

காஃபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட், பால்.



இரவு உணவு  ஏழரை மணியிலிருந்து பத்து மணி பத்தரை மணி வரை.

பால் பாயசம்

வெள்ளரிக்காய்த் தயிர்ப்பச்சடி,

பாசிப்பருப்பு கோசுமலி

கடலைப்பருப்பு கோசுமலி(இனிப்பு)

முட்டைக்கோஸ் கறி

கத்தரிக்காய்  ஸ்டஃப் செய்த எண்ணெய்க் கறி,

பூஷணிக்காய்க் கூட்டு,

உருளைக்கிழங்கு வறுவல்,

அப்பளம்

ஆமைவடை,

போளி,

மைசூர்ப்பாகு,

எலுமிச்சை ஊறுகாய்

சாதம், பருப்பு, நெய்

வெண்டைக்காய், குடைமிளகாய், முருங்கைக்காய் போட்டு சாம்பார்

தக்காளி ரசம்,

மோர்.

ஆமவடை, போளியும், மைசூர்ப்பாகும் நம்ம கைவண்ணம் தான். பயப்படாமல் சாப்பிடலாம். :))))








மடிச் சமையல் சாப்பிடும் பெரியவங்களுக்காகத் தனியாகக் கேசரியும், வாழைக்காய் பஜ்ஜியும் போட்டுக் கொடுக்கப் பட்டது.

அம்பி, கேசரி படம் போட்டாச்சு, வந்து பாருங்க! :)))))))))) கேசரி நம்ம வீட்டிலே பண்ணினதாக்கும், நிறைய மு.ப.போட்டு, நெய்யைக் கொட்டி....... நல்லவேளையா உங்களுக்குக் கொடுக்கலை. :))))))))))


மத்ததுக்கு நன்றி கூகிளாண்டவர்!





Tuesday, July 23, 2013

ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம், வீடெங்கும் மாவிலைத் தோரணம்!


திருமண சம்ஸ்காரங்களில் இரு வீட்டாரின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. எல்லாச் சமூகங்களிலும் இரு வீட்டார் பங்கு என்பது முக்கியமானது.  முன் பதிவுகளில் சொல்லப்பட்டவை பிராமணர்களுக்கு என்றால் மற்ற சமூகத்திலும் சம்பிரதாயங்கள் இல்லாமல் போகவில்லை. ஒவ்வொருத்தருக்கும் அவரவர் குடும்ப, குல வழக்கப்படியான சம்பிரதாயங்கள் கட்டாயமாகவே கடைப்பிடிக்கப் படுகின்றன.  மற்ற சமூகத்தினரில் பொன்னுருக்குதல் என்னும் திருமாங்கல்யத்துக்குப் பொன்னுருக்குவதை மாப்பிள்ளை வீட்டில் செய்வதை இன்னமும் பலர் கடைப்பிடிக்கின்றனர்.  அதன் பின்னரே கன்னிக்கால் ஊன்றுதல் என்னும் பந்தக் கால் முஹூர்த்தம் நடைபெறுகிறது.  இது அநேகமாய் இரண்டு வீடுகளிலும் ஒரே நாள் ஒரே நேரம் அவரவர் வீடுகளின் ஈசான்ய மூலையில் கன்னிக்கால் ஊன்றப்பட்டு நடைபெறும்.  இதற்குப்பெரும்பாலும் கல்யாண முள்முருங்கை மரத்தின் கொம்புகளே பயன்படுத்தப் படுகின்றன. வீட்டுக்கு மூத்த முதியவர் ஒருவரால் அந்தக் கொம்பின் நுனியில் மஞ்சள் பூசப்பட்டு மாவிலைக்கொத்து கட்டப்பட்டு ஒரு துணியில் செப்புக்காசும் முடிந்து வைக்கப்பட்டு ஊன்றப்படும். பின்னர் மற்றவை அனைவருக்கும் இருப்பது போல் நவதானியம், காசுகள், நவமணிகள் போன்றவற்றை இட்டு 3 சுமங்கலிப் பெண்களால் பால் ஊற்றப்பட்டுக் கீழே பூமியிலிருந்து கொம்பு தெரியும் அடிப்பக்கம் திருநீறு, குங்குமம், சந்தனம் பூச்சப்படும்.. ஒரு சிலர் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபட்டும் பந்தக்கால் ஊன்றுகிறார்கள்.  இது அவரவர் குடும்ப வழக்கப்படி செய்வார்கள்.  பந்தக்கால் ஊன்றிய பின்னர் இரு வீட்டினரும் எந்தவிதமான துக்க நிகழ்விலும் பங்கெடுக்க மாட்ட்டார்கள்.

மற்ற சமூகத்திலும் முளைப்பாலிகை போடுவது உண்டு.  ஆனால் இது அநேகமாய்ப் பெண் வீடுகளிலேயே நடைபெறும். மூன்று அல்லது ஐந்து மண் கலசங்க்களில் மண் பரப்பி நீர் ஊற்றிப் பாலில் ஊற வைத்த நவதானியங்களை 3 அல்லது ஐந்து சுமங்கலிப் பெண்கள் தூவிவிட்டுப் பாலும், நீருமாய்க் கலந்து விடுவார்கள்.  மூன்று முறைகள் விதை தெளிப்பார்கள்.  பின்னர் வீட்டின் பூஜையறையில் அவை வைக்கப்பட்டிருக்கும்.  திருமணதினத்தன்று மணவறைக்குக் கொண்டு செல்வார்கள்.  அநேகமாகப் பிள்ளை வீட்டினர் பொன் உருக்கும் தினத்தன்று பெண் வீட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். "

"சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்துஇள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தல் பொலன்நறுங் கொடிஅன்னார்" 60

எனச் சிலப்பதிகாரத்தில் வருவது போல் முளைப்பாலிகை என்பது பல ஆயிரம்  ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே இருந்து வருவது தெரிகிறது.  மற்றப்படி பந்தல் அமைப்பது, அலங்காரங்கள் செய்வது, சத்திரங்களில் கல்யாணம் நடந்தால் தாங்கள் இருக்கும் வீடுகளிலும், சத்திரத்திலும் குலை தள்ளிய வாழைமரங்களைக் கட்டுவது போன்றவை நடக்கும்.  வாழை ஒரே முறை குலை தள்ளினாலும், அதன் சந்ததியானது தொடர்ந்து வரும்.  அதைப் போல் நம் வாழ்க்கையிலும் திருமணம் என்பது ஒரே முறை தான் ஆனாலும் நம் சந்ததியும் வாழையடி வாழையாகத் தொடர வேண்டும் என்பதைச் சுட்டவே மங்களமாக வாழைமரம் கட்டுவார்கள். பாக்கு மரங்களாலும் அலங்கரிக்கப்படும்.  பாக்குக் கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் தம்பதிகள் ஒற்றுமையாக இருந்து பல நன் மக்களைப் பெற்று மகிழ்வோடு வாழவேண்டும் என்பது இதன் ஐதீகம். தென்னை மரத்தின் தேங்காயும் இப்படியே தென்னை மரம் கற்பகத் தருவாகக் கருதப் படுவதால் திருமணத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.

ஆயிற்று, விரதம் முடிந்து அனைவரும் ஓய்வு எடுத்துண்டாச்சா?  மதியம் இரண்டு மணிக்குக் காஃபி குடிப்பவர்களுக்குக் காஃபியும், தேநீர்க்காரங்களுக்குத் தேநீரும் அளிக்கப்படும்.  சரியா மூணு மணிக்கு டிஃபன் இலை போடுவதாகத் தலைமை சமையல்காரர் சொல்லி இருக்கார்.  ஆகவே எல்லாரும் டிஃபன் சாப்பிட்டுட்டு அலங்காரங்கள் முடிந்து நிச்சயதார்த்தத்துக்குத் தயாரா இருக்கணும்.  சரியா? :))


பெண்ணின் அம்மா நிச்சயதார்த்தம் நடைபெறப் போவதாக அனைவரையும் வந்து அழைத்துவிட்டுச் செல்வார்.  அதே போல் பெண்ணின் அப்பாவும் ஆண்கள் தரப்பில் சொல்லுவார்.

மாப்பிள்ளை அழைப்பு உண்டா?  ஆஹா, உண்டு, உண்டு.  நிச்சயம் உண்டு.  அலங்கரிக்கப்பட்ட கார் அல்லது சாரட் வண்டி ஏற்பாடு பண்ணணுமே!  பண்ணியாச்சு!  அதிலே பாதி வழியிலே பெண் போய்க் கூட உட்கார்ந்து சத்திரம் திரும்பும்போது வருவாளே, பெண்ணைத் தயார் செய்ய வேண்டாமா?

 இல்லை, பிள்ளை வீட்டில் அது பழக்கம் இல்லையாம்.  சும்மா சத்திரத்து வாசலிலே ஆரத்தி எடுத்துப் பிள்ளையை உள்ளே அழைக்கையில் சேர்த்து உட்கார வைத்துப் படம் பிடிச்சால் போதும்னு அபிப்ப்ராயப் படறாங்க.

அப்படியா, சரி அப்படியே செய்துடலாம்.  இதில் எல்லாம் வருத்தம் வரக்கூடாது.

ரெண்டு பேருக்கும் மாலை போட ஆனை வந்திருக்கு! என்ன ஆனையா?? ஆனையைக் கட்டி யார் தீனி போடறது?

அட, அதெல்லாம் பெண்ணின், பிள்ளையின் நண்பர்கள் ஏற்பாடாம்!

அது சரி, நிச்சயம் சத்திரத்திலா? கோவிலிலா?

அதான் மாப்பிள்ளை அழைப்பு உண்டுனு சொல்லிட்டீங்களே, அதனாலே பிள்ளைக்கு  மாப்பிள்ளை அழைப்பு டிரஸ் கொடுப்பதை  அங்கே வைச்சுண்டு மாப்பிள்ளை அழைத்துச் சத்திரம் திரும்பியதும் நிச்சயம் வைச்சுக்கலாமா? நேரம் ஆயிடாதோ?

அப்போ ஒண்ணு செய்யலாம்.  இரண்டு வீட்டினரும் தனித் தனிக் காரில் கோயிலுக்குப் போயிட்டு வந்து, இங்கே நிச்சயம் முடிந்து மாப்பிள்ளை அழைக்கலாம்.

இல்லை, இல்லை, இங்கே சத்திரத்து வாசலிலேயே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு.  இரண்டு வீட்டுக்காரங்களும் அங்கே போயிட்டு வந்துடுங்க. அப்புறமா நிச்சயம் பண்ணிக்கலாம்.

அப்பாடா, சாஸ்திரிகள் சரியாத் தான் சொல்லி இருக்கார், அப்படியே செய்துடலாம்.  சீக்கிரமா நிச்சயதாரத்தத்துக்குத் தயாராகுங்கப்பா எல்லாரும்.  அதுக்குள்ளே நிச்சயதார்த்ததுக்கு வேண்டியவற்றைத் தயார் பண்ணிடுங்க யாரானும்'

அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்.  நீங்க நிம்மதியா கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை பண்ணிட்டு வாங்க.


பாலிகை படம் நன்றி: அகோபிலம் தளம்.

நிச்சயதார்த்த அலங்காரம் படம் சொந்தம்! :))

Saturday, July 20, 2013

மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ!

அடுத்துப் பெண்ணிற்குச் செய்ய வேண்டியவற்றைப் பார்க்கலாம்.  பெண்ணிற்கு ஏற்கெனவே ஜாதக கர்மா முதலியன நடந்திருந்தாலும் கல்யாணத்திற்கு முதல்நாள் திரும்பவும் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.  எனக்கெல்லாம் நடக்கவில்லை. ஆகையால் செய்யாததற்குப் பிராயச் சித்தம் செய்வார்கள். அதன் பின்னர் புண்யாஹவசனம் செய்வார் பெண்ணின் தந்தை. புண்யாஹவசனம் செய்த ஜலத்தினால் பெண்ணிற்கு ப்ரோக்ஷணம் செய்து அவளை நேருக்கு நேர் பார்த்து உச்சி முகர்ந்து, (சின்ன வயசில் செய்யலையோ?) வலது காதில் அவளுடைய பெயரைச் சொல்லச் சொல்லுவார்கள்.  பெண்ணிற்குத் தொட்டில் போடுகையில் என்ன பெயர் வைத்தார்களோ அந்தப் பெயரைத் தான் சொல்ல வேண்டும்.  ஒரு சிலர் தொட்டிலின் போது வைத்த பெயரால் கூப்பிடுவதில்லை.  கூப்பிடத் தனிப் பெயர் இருக்கும்.  இப்போது என் தொட்டில் பெயர் சீதாலக்ஷ்மி.  கூப்பிடுவது தான் கீதா. ஆகையால் திருமணப் பத்திரிகையிலும், கல்யாணத்தின்போது ஜாதககர்மா செய்யும் போதும் சீதாலக்ஷ்மி என்ற பெயரே சொல்லுவார்கள். அப்புறமா அன்னப்ராசனம்.  ஹிஹிஹி, எட்டு மாசத்தில் செய்ய வேண்டியது. அந்தக் காலத்திலே எல்லாம் பெண்கள் குழந்தைகளா இருக்கிறச்சே கல்யாணம் நடந்திருக்கு.  இப்போ வயது வந்த பின்னர் நடக்கும் கல்யாணங்களிலும் இதைப் பார்க்கையில் கொஞ்சம் வேடிக்கையாத் தான் இருக்கும்.  தயிரும், நெய்யும் கலந்து அன்ன ப்ராசனம் செய்வித்துப் பின்னர் நெல்லில் பெயரை எழுத வேண்டும். இது அத்தனையும் பெண்ணின் அப்பா செய்வார்.

அடுத்தது பெண்ணிற்கு முக்கியமானது கங்கணதாரணம். பிள்ளைக்கும் உண்டு என்றாலும் பெண்ணின் கங்கண தாரணத்தை முக்கியமாகச் சொல்லுவார்கள்.  திருமணம் நிச்சயம் ஆனதுமே சங்கல்பம் செய்து கொண்டு கங்கணம் என்னும் ரக்ஷை கட்டிக் கொள்வார்கள்.  இது கட்டிக் கொண்டுவிட்டால் பின்னர் ஆறு தாண்டி, கடல்தாண்டி, வெளியே செல்லக் கூடாது.  அதனாலோ என்னமோ தெரியலை கல்யாணத்திற்கு முதல்நாள் தான் இப்போல்லாம் கங்கணதாரணம் நடைபெறுகிறது.  பிராமணருக்குக் கல்யாணத்திற்கு முதல்நாள் எனில் மற்ற சமூகத்தினருக்குக் கல்யாணத்தன்றே நடக்கிறது.  இது கல்யாணப் பெண், பிள்ளை இருவருக்கும் உண்டு.  துர்தேவதைகள் அண்டாத வண்ணமும், ஆஸெஸம் எனப்படும் தீட்டு முதலியவை அவர்களைப் பாதிக்காது என்றும் இந்த ரக்ஷை பாதுகாப்பதாகச் சொல்லுவார்கள்.  ரக்ஷை கட்டிக் கொண்டதும் வீட்டை விட்டே வெளியே செல்லத் தடையும் விதிப்பார்கள்.  ஆனால் இந்தக் காலங்களில் அன்று மாலை தான் ரிசப்ஷனுக்காகப் பெண் ப்யூட்டி பார்லர் போகும்படி ஆகிறது.  மிகச் சிலரே கல்யாணச் சத்திரத்துக்கு ப்யூட்டி பார்லரில் இருந்து ஆட்களை வரவழைக்கின்றனர்.  பெண்ணுக்கு இடக்கையிலும், ஆணுக்கு வலக்கையிலும் இந்த ரக்ஷை தரிக்க வேண்டும்,  கல்யாணம் முடிந்தப்புறமும் இது கையில் இருக்கும்வரை இருக்கலாம்.  தப்பில்லை.  பெண் வீட்டிலும் நாந்தி சிராத்தம் செய்வது உண்டு.  அது குறித்து போன பதிவிலேயே குறிப்பிட்டு விட்டேன்.

அடுத்த முக்கியமான ஒன்று பாலிகை தெளித்தல்.(அங்குரார்ப்பணம்) எனச் சொல்லுவார்கள்.  இது முழுக்க முழுக்க இரு வீட்டுப் பெண்களாலும் செய்யப்படும்.  இது கல்யாணத்திலும், உபநயனம் எனப்படும் பூணூலிலும் உண்டு. பயிர்கள் நன்கு செழித்து வளர்வது போல் திருமணம் நன்கு நடந்து அந்தக் குடும்பமும் நன்கு செழித்து வளர்வதற்காகச் செய்யப்படும் ஒரு பிரார்த்தனை இது. திருமணம் நடைபெறும் தினத்திற்கு முன்னர் வரும் ஒற்றைப்படையான தினத்தில் மந்திரோக்தமாகச் செய்யப்படும் ஒன்று இது. உதாரணமாக வெள்ளிக்கிழமை கல்யாணம் எனில் அதற்கு முந்தைய புதன், திங்கள் ஆகியன ஒற்றைப்படை தினமாக வரும். பாலிகைகள் தெளித்தலின் போது பயன்படுத்தப்படும் மண் கலசத்திற்குப் பாலிகா என்று பெயர்.  மண் கலசத்திலேயே பாலிகைகளைத் தெளிப்பார்கள். கூரான இலைகளையுடைய பயிருக்கும் பாலிகா என்ற பெயர் வரும். மண் கலசங்களில் மந்திரோக்தமாகத் தெளிப்பார்கள்.  விதைகள் தெளிக்கையில் தனித்தனியாக மந்திரம் சொல்வார்கள்.  இந்த உறவு நன்கு பல்கிப் பெருகி வளரவேண்டி, ப்ரஹ்மா, இந்திரன், யமன், வருணன், ஸோமன் ஆகிய தேவதைகள், பரிவாரங்களை ஆவாஹனம் செய்து ஓஷதி என்னும் வேத மந்திரங்களையும், ஸூக்தமும் சொல்லி ஜபித்துப் பாலிகையைத் தெளிப்பார்கள். இதற்குத் தனியாக ஏதும் சாமான்கள் தேவையில்லை.  ஐந்து பாலிகைக் கிண்ணங்கள்/மண் கலசங்கள், முளைக்க வைத்த ஊறிய தானியங்கள், கொஞ்சம் பால் ஆகியவையே தேவை.

தெளித்த பின்னர் பஞ்சகவ்யத்தை ப்ரோக்ஷணம் செய்து மண்ணைப் போட்டு மூடுவார்கள்.  பின்னர் ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் சுமங்கலிகளைக் கொண்டு பாலிகை விதைகள் ஊற வைத்த ஜலத்தை அப்பாலிகைகளில் தெளிக்கச் சொல்லுவார்கள்.  ஆனால் பெரும்பாலோர் அதில் இருக்கும் விதைகளையும் சேர்த்தே தெளிக்கின்றனர்.  இது கூடாது என்பதையும் ஜலம் மட்டுமே தெளிக்க வேண்டும் என்பதையும் எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே அறிந்து  கொண்டேன். ஊற வைத்த தான்யங்களைத் தெளிப்பது கர்த்தாக்கள் மட்டுமே.  அதாவது பிள்ளையின் அப்பாவும், பெண்ணின் அப்பாவும் மட்டுமே.  பாலிகையைக் கரைக்கும்வரை அதற்கு யாரேனும் ஒரு சுமங்கலியை விட்டு நீர் வார்த்து விளக்கேற்றி, வழிபட்டு, நிவேதனம் செய்யச் சொல்வார்கள். இதைப் பெண் வீட்டில் தனியாகவும், பிள்ளை வீட்டில் தனியாகவும் செய்ய வேண்டும்.  இரு பாலிகைகளும் திருமணத்திற்குள் நன்கு வளர்ந்து விவாஹம் ஆன ஐந்தாம் நாள் நதியில் அல்லது குளக்கரையில் கரைப்பார்கள்.  அப்போதும் மந்திரங்களால் ஆவாஹனம் செய்த பிரம்மாதி தேவர்களை அதிலிருந்து எழுந்தருளப் பண்ணிப் பின்னரே நதியில் கரைக்க வேண்டும்.

(ஆனால் இப்போதெல்லாம் கல்யாணத்துக்கு முதல்நாள் தான் பெரும்பாலான கல்யாணங்களில் பாலிகை தெளிக்கப்படுகிறது.  பெண்ணின் தந்தை, பிள்ளையின் அப்பா போன்றோருக்கு இது குறித்த தெளிவு இல்லாததால் இதைக் குறித்து அதிகம் பொருட்படுத்துவது இல்லை.  பாலிகைகளில் நீர் தெளிக்க அழைக்கும் பெண்களோ எனில் ஊற வைத்த விதைகளைத் தான் தாங்கள் தெளிக்க அழைப்பதாக நினைத்துக் கொண்டு அவ்வாறே செய்கின்றனர்.  ஒரு சில புரோகிதர்கள் மட்டுமே தண்ணீரை ஊற்றினால் போதும் என்கின்றனர்.  பொதுவாக இதைக் குறித்துப் புரோகிதர்களும் தெளிவு செய்வதில்லை.  நான் தற்செயலாக அறிந்து  கொண்டேன்.)

 இதன் பின்னர் ஆரத்தி எடுப்பார்கள்.  இந்த ஆரத்தி எடுப்பது பிள்ளை வீட்டினர் தனியாகவும், சில சமயம் அவங்களுக்கு முன்னாடியே முடிஞ்சுடும். பெண் வீட்டினர் தனியாகவும் ஆரத்தி எடுப்பார்கள்.  கல்யாணத்தன்று தான் பொதுவில் ஆரத்தி.

Friday, July 19, 2013

மன்னாதி மன்னன் மாப்பிள்ளை ஆக, மாப்பிள்ளை ஆக!

உபநயனத்தின் போது இடுப்பில்கட்டும் முளஞ்சிக்கயிறு அல்லது முஞ்சிப்புல்லை இப்போத்தான் அவிழ்க்கணும். அதையும் சும்மாவானும் அவிழ்த்து எறிய முடியாது.  மந்திரங்கள் சொல்லி மந்திரோக்தமாகவே அவிழ்க்கணும்.  ஆனால் இப்போ யார் இடுப்பிலும் மொளஞ்சிக்கயிறு இருக்காது.  அப்படின்னா என்னனு கேட்பாங்க. :))) அதன் பிறகு வபனம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஸ்நானம் முடித்து ஆசாரியர் ஆசீர்வதித்துக் கொடுக்கும் வேஷ்டியைப் பஞ்சகச்சமாகக் கட்டிக் கொள்ள வேண்டும்.  அதற்கு முன்னர் புதியதாகப் பூணூலை மாற்ற வேண்டும்.  பிரமசாரிக்கு ஒரே பூணூல் தான்.  இப்போது அவன் திருமணம் செய்து கொள்ளப் போவதால் இரண்டு உபவீதங்களை அணிவான். அதே போல் இது வரை ஒற்றை வேஷ்டி தான்.  இப்போது இரட்டை வேஷ்டி கட்டிக் கொண்டு அதையும் பஞ்சகச்சமாகக் கட்டிக் கொண்டு மேல் உத்தரீயம் அணிவிக்கப் படுவான். இப்போது அவன் வாசனாதி திரவியங்களையும் பயன்படுத்தத் தடை இல்லை.  அதனால் தான் கண்ணுக்கை மை, நெற்றியில் பொட்டு, சந்தனம், குங்குமம் என்றெல்லாம் வைக்கின்றனர். அதோடு இல்லாமல் அவன் கல்வி கற்றவன் என்பதைக் குறிக்கும் வகையில் கையில் சுவடிகளை முன்பு வைத்திருந்தது போக இப்போது ஏதேனும் ஒரு புத்தகம் கொடுக்கப்படுகிறது.  அநேகமாக ராமாயணம், அல்லது பகவத் கீதை புத்தகமே கொடுப்பார்கள். சமுதாயத்தில் அவனுக்கும் இந்தத் திருமணத்தின் மூலம் ஏற்படப் போகும் அந்தஸ்தைச் சுட்டிக் காட்டும் வகையில் கையில் ஒரு தடி, விசிறி, குடை, செருப்பு போன்றவற்றையும் அணிவான்.  இவை எல்லாம் பெண் வீட்டுக்காரர்களாலேயே கொடுக்கப்படுகிறது.   இப்போது காடரிங்காரர்களின் பொறுப்பில் இவையும் ஒன்று.  இது கல்யாணத்தன்று காசி யாத்திரைக் கோலத்தில் நடப்பது. என்றாலும் விஷயத்தின் தன்மையைக் குறித்து இன்றே சொல்லி விட்டேன்.



அடுத்த முக்கியமான ஒரு விஷயம் ஸமிதா தானம்.  பிரமசாரிகள் தினம் தினம் ஸமிதா தானம் செய்யவேண்டும். இப்போது பிரமசாரி கிருஹஸ்தனாக ஆகப் போவதால் அந்திம ஸமிதாதானம் செய்ய வேண்டும்.  இது அனைத்து வேதக்காரர்களுக்கும் கிடையாது.  ஸாமவேதிகளுக்கு மட்டுமே உண்டு.  இதை முடித்ததும், அந்த அக்னியைப்பாதுகாத்து ஆயுள் பரியந்தம் தினம் தினம் ஒளபாஸனம் செய்ய வேண்டும். (என் மாமனார் எவ்வளவோ இதற்கு முயன்றார்.  ஆனால் என் கணவரின் பணி நிமித்தமாக, பல ஊர்களுக்கு ஏற்படும் மாற்றல் காரணமாக இதை ஏற்க முடியவில்லை.) அடுத்து நாந்தி ஸ்ராத்தம்.

நாந்தீ என்றாலே மகிழ்ச்சி என்றே பொருள் வரும்.  சுப சடங்குகள் செய்கையில் அதன் தொடக்கத்தில் செய்யப்படும் ஒரு பிரார்த்தனை இது. பித்ருக்களுக்குச் செய்தாலும் இதுவும் தேவர்களுக்குச் செய்யப்படும் வழிபாடுகளைப் போலவே மங்களமான ஒன்றே.  என்றாலும் பலரும் இதை அச்சானியம் எனக் கருதிச் செய்வதில்லை. நம் மீது உள்ள பிரியத்தாலும் அன்பாலும் பித்ருக்கள் நாம் அழைக்காமலேயே நம் சந்ததிகளை ஆசீர்வதிக்க வருவதாக ஐதீகம்.  ஆகையால் அப்போது வேத அத்யயனம் செய்த பிராமணர்களுக்கு திரவியங்கள் கொடுத்து, சாப்பாடு போட்டு தக்ஷணை கொடுப்பார்கள்.  வஸ்திரமும் கொடுக்கலாம்.




ஆனால் இந்த நாந்தி ஸ்ராத்தம் செய்யும் வீடுகளில் கோத்திரக்காரர்கள் மட்டுமே சாப்பாடு சாப்பிடலாம் என்றொரு விதி இருப்பதால் பலரும் இதைச் சாப்பாடு போட்டுப் பண்ணாமல் ஹிரண்ய ரூபமாக அரிசி வாழைக்காய், தக்ஷணை, வஸ்திரம் கொடுத்துச் செய்கின்றனர்.  மேலும் கல்யாணச் சத்திரங்களிலேயே கல்யாணம் நடப்பதால் நாந்தி ச்ராத்தம் செய்தவர்களுக்கு எனத் தனிச் சாப்பாடு இப்போதெல்லாம் பண்ணுவதில்லை.  எங்க கல்யாணத்தில் தனியாக மடிச் சமையல் என்றிருந்தது.  ஆகையால் நாங்க ஒரு ஐம்பது பேர் அந்தச்  சாப்பிட்டோம். எங்க பெண், பிள்ளை கல்யாணங்களிலும் தனிச் சமையல் ஏற்பாடு செய்திருந்தோம். ஆகவே பிரச்னை இல்லை. ஆனாலும் அரிசி, வாழைக்காய் தான் கொடுக்கப்பட்டது.

இதன் பின்னர் கல்யாணப் பிள்ளை கூஷ்மாண்ட ஹோமம் செய்வார். பொதுவாய்க் கூஷ்மாண்டம் என்றால்  பூஷணிக்காய் என்றாலும் இங்கே குறிப்பிடுவது அதுவல்ல.  இது விவாஹம் ஆகும் முன்னரே செய்யவேண்டும்.  இந்த ஹோமம் பெண் வயதுக்கு வந்த பின்னர் திருமணம் செய்து கொள்வதற்குப் பிராயச்சித்தமாகச் செய்யப்படுவது.  இதனால் தோஷங்கள் ஏற்படாது என்கிறார்கள். மேலும் ருதுவான பெண் எத்தனை முறை ருதுவாகி இருக்கிறாளோ அத்தனை முறையும் கோதானம் செய்ய வேண்டும் என்று விதி.  ஆனால் இப்போது எல்லாமும் தக்ஷணை தான் என்பதோடு இந்த கூஷ்மாண்ட ஹோமத்தை விபரம் தெரிந்த வெகு சிலரே செய்கின்றனர்.  கல்யாணப் பெண்ணும் உபவாசம் இருந்து வயதுக்கு வராத கன்னிக் குழந்தைப் பெண்ணுக்கு ஏதேனும் பொருளை அல்லது ஆபரணத்தைத் தானமாகத் தருவாள். இந்தக் கூஷ்மாண்ட ஹோமம் ப்ராயச்சித்த ஹோமம் என்பதால் வருடா வருடம் செய்யும்  ச்ராத்தத்திற்கு முதல்நாள் கூடச் செய்பவர்கள் உண்டு. விவாஹத்திற்கு முதல்நாள் இதைக் கட்டாயமாய்ச் செய்யவேண்டும் என்பது விதி. அதோடு அக்னி ஹோத்ர அக்னியில் செய்யாமல் ஒளபாசன அக்னியிலேயே செய்ய வேண்டும்.  ஒளபாசன அக்னியில் செய்யும் கர்மாக்களையே ஹோமங்கள் என அழைக்கிறோம்.  இப்போதெல்லாம் யார் வீட்டிலும் ஒளபாசன அக்னி இல்லாததால் அவ்வப்போது மூட்டும் லெளகீக அக்னியிலும் செய்யலாம். அக்னி ஹோத்ர அக்னியில் செய்வதெல்லாம் யாகங்கள். இவை ஸ்ரெளத கர்மாக்கள் எனவும், மேலே சொன்ன ஹோமங்கள் ஸ்மார்த்த கர்மாக்கள் எனவும் அழைக்கப்படும்.

Thursday, July 18, 2013

நாளாம், நாளாம் திருநாளாம், நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்!

கல்யாண மேடை. இது விரதம் செய்வதற்கு முன்னர் எடுத்த படம். :)))) போட்டோவில் இருப்பது என் அப்பா, அம்மா, இடப்பக்கம் எங்கள் தாத்தா(அப்பாவின் அப்பா) வலப்பக்கம் அவங்க குலதெய்வம் மூங்கிலணை காமாட்சி அம்மன், நடுவே சாய்பாபா.

இந்தத் திரட்டுப்பால் பெண்ணின் அம்மாவால் கொடுக்கப்படுவது தென் மாவட்டங்களில் கிடையாது.  இப்போதும் இருக்கிறதாகத் தெரியவில்லை.  ஆனால் தஞ்சை மாவட்டத்தில் இது மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.  இது கொடுக்கவில்லை எனில் கோபம் கொள்ளும் சம்பந்தி வீட்டாரை முன்பெல்லாம் காணமுடியும். சண்டையே வரும். இப்போது சென்னையில் பலதரப்பட்டவர்களும் வசிப்பதில் காடரிங்காரர்களால் இது எல்லா மாவட்டக்காரர்களாலும் பின்பற்றப் படுவதைக் காண முடியும்.  பொதுவாகச் சீர் வரிசையில் சமையலுக்குத் தேவைப்படும் பாத்திரங்கள் தவிர, வெண்கலம், பித்தளைப்பாத்திரங்களில் தாம்பாளம், குத்துவிளக்கு, குடம், சொம்புகள், அரிக்கும் சட்டி, பொட்டுப் போட்ட மைசூர் வாணாய் எனப்படும் பாத்திரம், அடுக்கு வகைகள், பித்தளை ட்ரம், வாளி, வெண்கலப்பானைகள், அளக்கும் படி போன்றவை அவரவர் வசதிக்கு ஏற்பக் கொடுக்கப்படும்.  படியை முக்கியமாய்க் கொடுப்பார்கள்.  இப்போதெல்லாம் எவர்சில்வரிலேயே படி வந்து விட்டதால் அநேகமாய் அதில் வாங்குவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர்.  படி முக்கிய விசேஷங்களுக்குத் தேவைப்படும். நிறைநாழி வைக்க, ஏற்றி இறக்க எனப் பலவிதங்களிலும் பயன்படும் என்பதால் படி எல்லா அளவுகளிலும் வாங்கி இருப்பார்கள். வெள்ளிப் பாத்திரங்களில் பஞ்சாத்திரம், உத்தரணி, சந்தனப் பேலா, குங்குமச் சிமிழ், சின்னத் தட்டு, பன்னீர்ச்செம்பு(தேவையானால்)விளக்கு, கூஜா அல்லது சொம்பு(வரலக்ஷ்மி விரதத்திற்குக்கலசம் வைக்க) பெரிய சாப்பிடும் தட்டு, பால் இடும் கிண்ணம் போன்றவை முக்கியமாக அடங்கும்.  மற்றவை அவரவர் விருப்பமும், வசதிக்கும் ஏற்பக் கொடுப்பார்கள். மிக மிக வசதி உள்ளவர்கள் வெள்ளிக் குடம், வெள்ளித் தேங்காய் போன்றவை கொடுக்கின்றனர்.  இதெல்லாம் கொஞ்சம் ஆடம்பரமாகத் தோன்றும். வெள்ளி கொடுக்க இயலாதவர்களும் உண்டு.

மாப்பிள்ளையை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றதும் அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்து உபசாரங்கள் செய்து பின்னர் விரதம் ஆரம்பிக்க அவர்களின் செளகரியத்தைக் கேட்க வேண்டும்.  சிலர் வீட்டிலேயே (உள்ளூராக இருந்தால்) குளித்துவிட்டு வந்திருப்பார்கள்.  இல்லை எனில் அவர்கள் குளித்து முடித்துத் தயாராக வந்ததும் விரதம் ஆரம்பிக்க வேண்டும். முதலில் மணமகன் செய்யப் போகும் விரதத்தைப்பார்க்கப் போகிறோம்.  இதை அஷ்ட விரதம் என்றும் பூர்வாங்கம் என்றும் கூடக் கூறுகின்றனர். பிள்ளையின் வித்யா காலம் முடிந்துவிட்டது என்றாலே பிரமசரியம் முடிந்து கிரஹஸ்தாசிரமத்திற்குத் தயாராகிவிட்டான் என்றே பொருள். ஆனால் இந்தக்காலங்களில் குருகுல வாசம் என்பதெல்லாம் இல்லை என்பதோடு அவரவர் பொருளாதார அடிப்படையிலும் திருமணங்கள் தாமதம் ஆகின்றன.  எனினும் இந்த விரதம் செய்வதை விடாமல் கடைப்பிடிக்கின்றனர்.  இது அவரவர் சார்ந்துள்ள வேத சாகையைப் பொறுத்து வேத அத்யயனம் செய்வதையே சுருக்கமாக அஷ்ட விரதம் என்று அழைக்கின்றனர்.  இந்த சம்பிரதாயம் ஒவ்வொரு வேதக்காரர்களுக்கும் அவரவர் வேதத்தை ஒட்டி மாறுபடும்.

ரிக் வேதக்காரர்களுக்கு முதலில் ஸம்ஹிதை,  பிராம்மணம், ஆரண்யகம், உபநிஷத் என அத்யயனம் செய்துவிட்டுப் பின்னர் ஸம்ஹிதா பாகத்திற்கு பத பாடம், கிரம பாடம், ஜடா பாடம் முடித்து மலா-சிகா-ரேகா-த்வஜம்-தண்டகம்-ரதம்-கனம் என்னும் விக்ருதி பாடங்களை அத்யயனம் செய்வார்கள்.  பாஷ்யங்களும் படிக்கப்படும், யக்ஞம் முதலியவற்றை உலக நன்மைக்காகவும் தானும் நலமாக வாழவும் வேண்டிக் கொண்டு வழி செய்து கொள்வான் பிரமசாரி.

யஜுர் வேதத்தில் ப்ராபாத்ய, செளம்ய, ஆக்னேய, வைஸ்வேதேவ என்ற நான்கு, பின்னர் பூர்வம், உத்தரம் என இரு பிரிவுகள் ஆக மொத்தம் எட்டுப்பகுதிகளின் சாகைகள் அத்யயனம் செய்யப்பட்டு பதம், கிரமம், ஜடா பாடம், கனபாடம், வர்ண கிரமம் என்பது செய்யப்படும்.

ஸாமவேதத்தில் த்ராஹ்யான சூத்ரங்களைப் (எங்க புக்ககத்தின் சூத்ரம் இதுவே) பின்பற்றுபவர்களுக்கும் எட்டுப் பிரிவுகள் உண்டு. அவை உபநயனம், கோதானம், வ்ராதிகம், ஆதித்யம், மஹாநாம்நிகம், உபநிஷத், பெளதிகம், பிரமசாமம் ஆகியன.  ப்ரக்ருதி, ஊஹம், ரஹஸ்யம், ஆரணம், பூரவார்ச்சிகம், உத்ரார்ச்சிகம், பதம், லக்ஷணம் முதலிய எட்டு பிராமணங்களின் கிரந்தங்களும் அத்யயனம் செய்யப்படும்.  இதை இங்கே இவ்வளவு விளக்கமாய்ச் சொல்வதின் காரணம், எழுதி வைத்துக் கொண்டால் அவரவர் வீட்டுத் திருமணத்தின் போது சாஸ்திரிகளிடம் கேட்டு நிச்சயம் செய்து கொள்ளலாம்.  ஒவ்வொரு பகுதியும் ரிஷி தர்ப்பணம், ஹோமம் போன்றவற்றோடு தொடங்கி வேதத்தின் அந்தக் குறிப்பிட்ட பகுதி தொடர்பான சில கர்மாக்களையும் செய்து உத்ஸர்ஜனம் செய்வார்கள்.  இப்படி வேதத்தின் எல்லாப் பகுதிகளையும் கற்பதே அஷ்ட விரதம் எனப்படும். வேத அத்யயனம் முறையாகக் கற்றிருந்தால் இந்த அஷ்ட விரதம் எனப்படுவது தேவையில்லை என்பது ஒரு சாரார் சொல்கிறார்கள்.  ஆனாலும் அத்யயனம் செய்தவர்களும் இதைச் செய்கின்றனர்.


இப்போது வேதம் கற்றவர்கள் மிகச் சிலரே இருப்பதால் அனைவருக்கும் இது அவசியம் என்பது தெரிய வருகிறது. இதன் கடைசியில் வருவதே ஸமாவர்த்தனம்.  ஸமாவர்த்தனம் என்றால் முடிவு, முடிப்பது எனப் பொருள்.  இது குருகுலத்தில் இருந்து பிரமசாரி வீடு திரும்பும் கால கட்டத்தைக் குறிக்கும்.  இந்த அஷ்ட விரதத்தைக் கல்யாணத்திற்கு முதல்நாள் தான் செய்வது என்பது இப்போது ஏற்பட்ட சம்பிரதாயம் ஆகும்.  இதை எப்போது வேண்டுமானாலும் குருகுல வாசம் முடியும் சமயம், விவாஹம் செய்து கொள்வதற்கு நான்கைந்து மாதங்கள் முன்னர் என்று செய்யலாம். ஆனால் இப்போதெல்லாம் இளைஞர்களுக்கு நாற்காலி உத்தியோகம் என்பதால் அவர்கள் கல்யாணத்திற்கு லீவு எடுப்பதால் முதல்நாள் கட்டாயம் அஷ்ட விரதம் செய்யணும் என வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் இப்போதெல்லாம் மணமகனை காயத்ரி மந்திரம் சொல்லச் சொல்லிவிட்டு புரோகிதர்களே இதைச் சொல்லி முடித்துவிடுகின்றனர். இதை முடித்ததும் மணமகன் மந்திரோக்தமாக ஸ்நானம் செய்யணும்.  ஆனால் அதெல்லாம் இப்போச் செய்யறதில்லை.  இந்நிலையில் இருக்கும் பிரமசாரியை ஸ்நாதகன் என அழைக்கின்றன்னர்ர்.  பிரமசரியத்தைக் கடந்தாலும் இன்னும் கிரஹஸ்தாசிரமத்தில் நுழையவில்லை.  இப்போது அவன் அநாஸ்ரமியாக இருக்கிறான்.  ஆகவே உடனடியாகத் திருமணம் செய்து வைக்கணும் என ஏற்பாடுகள் நடக்கும்.


விரத விபரங்கள் தொடரும்!  வேதங்கள் பற்றிய குறிப்புகளுக்கு நன்றி: காமகோடி தளம், தெய்வத்தின் குரல், ரா.கணபதி.

Tuesday, July 16, 2013

கல்யாணப்பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்

அம்மோய், பூவோடு வருமே, பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்!

இதை முன்னரே குறிப்பிட்டிருக்கணும், எப்படியோ மறந்திருக்கேன்.  கல்யாணப் பெண்ணிற்கு எத்தனை நகைகள் வாங்கிப் பூட்டினாலும், கைகளில் கூடவே கண்ணாடி வளையல்களும் அணிவிப்பார்கள்.  இதை ஒரு சடங்காகவே சிலர் செய்வார்கள்.  வைணவர்களில் ஒரு சாரார் கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்னர் ஒரு நல்ல நாள் பார்த்து அக்கம்பக்கம் சுமங்கலிகளை அழைத்துப் பெண்ணைப் புத்தாடை அணிந்து அமர வைத்து, சந்தனம், குங்குமம் பூசி வளையல்களை அணிவிக்கச் செய்வார்கள்.  பெண்ணின் தோழிகளும் இதில் பங்கு பெறுவர். சுமங்கலிகளுக்கும், பெண்ணின் தோழிகளுக்கும் வெற்றிலை, பாக்கு, இனிப்புக் கொடுப்பது உண்டு.  மற்ற பிராமணரில் குறிப்பிட்ட சில ஊர்களில் இதைத் தோழிப்பொங்கல் எனச் செய்வார்கள்.  அன்று தான் கல்யாணப் பெண்ணிற்கு மாமன் சீரும் கொடுப்பார்கள்.  பெண்ணை அவள் தோழிகளோடு  நல்ல நாள் பார்த்து மாமன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விதவிதமான உணவுகள் செய்து, பெண்ணிற்குப்புத்தாடை மற்றும் மாமனால் இயன்ற பல சீர்களையும் கொடுத்து முதல் மாலையை மாமன் கைகளால் போடச் செய்துப் பெண் வீட்டில் கொண்டு விடுவார்கள். 

வசதி படைத்தவர்கள் மேள, தாளத்தோடு செய்வார்கள்.  இதெல்லாம் இப்போது இல்லை.  முன்பெல்லாம் சின்ன கிராமங்கள் அல்லது சின்ன ஊர்களில் நடந்து வந்ததால் அன்று காலையே பெண்ணை நதிக்கரைக்கு அல்லது குளக்கரைக்கு அழைத்துச் சென்று ஸ்நானம் செய்யச் சொல்லிப் புத்தாடை அணிவித்து ஊர்வலமாகத் தோழிகள் சூழ அழைத்து வருவார்கள்.  அப்போது வீட்டுக்கு வீடு பெண்ணிற்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பது உண்டு.  மேலும் அப்போதெல்லாம் பெண்கள் மிகச் சிறு வயது.  இப்போதெல்லாம் குறைந்த பக்ஷம் 25 என்றிருந்தது இப்போது 27, 30 என ஆகிவிட்டதால் வளர்ந்த விபரம் தெரிந்த பெண்களுக்கு இதற்கெல்லாம் இயல்பான கூச்சம் வந்துவிடுகிறது.  எனவே காலப்போக்கில் இவை சுத்தமாய் மறைந்தொழிந்து போய் விட்டது.. இதைக் கல்யாணத்திற்கு நாலைந்து நாட்கள் முன்னரே செய்வார்கள். வட ஆற்காடு மாவட்டத்தில் சில குடும்பங்களில் பெண்ணின் அத்தை இம்மாதிரி கல்யாணப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து விருந்து படைத்து உபசரிக்கும் வழக்கம் இருக்கிறது.  அம்பத்தூரில் இருக்கையில் எதிர்வீட்டில் நடந்து பார்த்திருக்கேன்.  இதன் பின்னரே பெண் சத்திரம்/மண்டபம் அல்லது கல்யாணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவாள்.  

கல்யாண அமர்க்களத்தில் சீப்பை மறந்த கதையாகத் திரட்டுப்பால் காய்ச்ச மறந்துட்டோம்.  ஆனால் பெண்ணின் மாமி மறக்காமல் காய்ச்சி எடுத்துட்டு வந்துட்டாங்க.  .  திரட்டுப் பால் காய்ச்சும்போது பொங்கி வழியாமல் இருக்க அதனுள் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டுவிட்டுக் காய்ச்சினால் பொங்கி வழியாது. பால் நன்கு திரண்டு வந்த பிறகே சர்க்கரை சேர்க்கணும்.  திருநெல்வேலிப் பக்கம் தேங்காய்த் திரட்டுப் பால் மிகவும் பிரபலம். அவங்க இரண்டு வகையும் செய்வாங்க.  நம்ம கல்யாணத்திலும் ரெண்டு வகையும் வைச்சுப்போமே! :))))

பெண் வீட்டினர் போய்ச் சேர்ந்ததுமே சீர் வகைகளை அலங்கரித்து வைக்க வேண்டும். முன்னெல்லாம் அப்படியே பெட்டியோடு, பக்ஷணங்கள் கூடைகளில் வைக்கப்பட்டு கூடையோடு கொடுப்பார்கள்.  யாரும் அதிகமாய் அலட்டிக் கொண்டதில்லை. பெரும்பாலும் வெயில் காலத்திலேயே கல்யாணம் நடக்கும் என்பதால் பக்ஷணங்கள் நமுத்தும் போகாது.  ஆனால் இப்போதெல்லாம் காடரிங்காரர்கள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட பெட்டிகளில் கொடுத்துவிடுகிறார்கள் என்பதோடு ஒவ்வொன்றையும் தனித்தனி பாக்கிங்காகவும் வைக்கின்றனர்.  ஆகவே விநியோகம் செய்ய வசதி. பிள்ளை வீட்டினர் தங்கும் இடத்தில் அவர்களுக்கு ஏற்ற வசதிகள் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.  முன்னெல்லாம் பல்பொடி, சோப்பு, தேங்காய் எண்ணெய், பவுடர் டப்பா, குங்குமம், சாந்து, சீப்பு போன்ற பொருட்கள் அங்கே அவர்கள் வரும் முன்னர் வைக்க வேண்டும்.  அதோடு பெண்ணிற்குக் கொடுக்க வேண்டிய பாத்திரங்கள், டப்பாக்கள், சம்புடங்கள் ஆகியவற்றில் மளிகை சாமான்களை நிரப்பி அங்கே அடுக்கி வைப்பார்கள். இதற்கு அங்கமணிச் சீர் என்று பெயர். அரிசி, பருப்பில் இருந்து ஆரம்பித்து சர்க்கரை, காப்பிப் பொடி, தேயிலைப்பொடி, ஏலக்காய், முந்திரிப்பருப்பு, கிராம்பு வரை எல்லாமும் இருக்கும்.  இதோடு சேர்த்து ஏற்கெனவே செய்த அப்பளம், வடாம், வற்றல் போன்றவற்றையும் வைப்பார்கள். பக்ஷணங்களும் இடம் பெறும். 

பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.  எவர்சில்வர் புழக்கத்திற்கு வந்த பின்னர் அவை அதிகமாகக் காணப்படுகின்றன.  அதற்கு முன்னர் பித்தளை, செம்பு, வெண்கலம், வெள்ளி, ஈயத்தில் ரசச் சொம்பு போன்றவையே.  இந்த ஈயச் சொம்பில் தான் தீபாவளி மருந்தும் கிளறி வைத்திருப்பார்கள்.  வகை வகையாகக் கல்யாணச் சாப்பாடு சாப்பிடுவதால் ஜீரணத்துக்குனு நினைக்கிறேன். எல்லா ஏற்பாடுகளும் பிள்ளை வீட்டினர் வரும் முன்னரே செய்திருக்க வேண்டும்.  பிள்ளை வீட்டினர் வராங்களா, தகவல் கிடைத்ததும், ஆரத்தியை எடுத்துக் கொண்டு வாசலில் தயாராக நிற்க வேண்டும்.  காடரிங்காரர்கள் எனில் அவரக்ள் காடரிங்கில் ஃபோட்டோவும் அடக்கம்.  இல்லை எனில் பெண் வீட்டினர் ஏற்பாடு செய்ய வேண்டும். 

 ஆச்சு, அதோ வந்தாச்சு பிள்ளை வீட்டினர்.  பெண்ணின் அம்மா, அப்பா, மற்றும் சித்தப்பா, சித்தி முறை உறவுகள், பெண்ணின் பாட்டி, பெண்ணின் மாமா, மாமி, அத்தை, அத்தை கணவர் போன்ற முக்கிய உறவினர் முன்னே நின்று வரவேற்பார்கள். முன்னெல்லாம் ஆரத்தி சுற்றி பெண்வீட்டு முக்கியஸ்தரான மாமாவோ தாத்தாவோ மாலை போட்டுக்  கைலாகு கொடுத்து மாப்பிள்ளையை அழைப்பார்கள்.  இப்போது காடரிங் காரர்கள் பிள்ளையின் அம்மா, அப்பா, பிள்ளை, பிள்ளையின் சகோதரி, சகோதரி கணவர் ஆகியோருக்கு ஸ்பெஷல் மாலை போட்டு, பிள்ளை, பிள்ளையின் அம்மா, அப்பா, சகோதரி ஆகியோரைத் தனியாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்து, மேலிருந்து பலூன்கள் தானாக/அல்லது வெடிக்க வைத்துப் பூக்கள் கொட்டுவது போல் ஏற்பாடு செய்து வரவேற்கின்றனர்.  அன்று பிள்ளை வீட்டினரோடு வரும் அனைவருக்கும் சிறு குழந்தை உட்பட அனைவர் கழுத்திலும் ஒரு சின்ன மாலையைப் போட்டுடறாங்க.  சம்பங்கிப் பூக்கள்னு நினைக்கிறேன்.  வாசனையிலிருந்து அப்படித் தான் தெரிஞ்சது. :)))) நல்லவேளையாப் பெண்ணின் மாமி காய்ச்சிக் கொண்டு வந்த திரட்டுப்பாலை ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் போட்டு வைத்திருந்து  பின்னர் பெண்ணின் அம்மா பிள்ளையின் அம்மா கையில் திரட்டுப் பால் அடங்கிய பாத்திரத்தைக் கொடுப்பாங்க.  


Monday, July 15, 2013

பொண்ணு வந்தா, பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!

பொதுவாகச் சத்திரம்/மண்டபம் பெண் வீட்டுக்கு அருகே தான் பார்ப்பாங்க. பிள்ளை வீட்டுக்காரங்க வெளியூர் எனில் அவர்களே கல்யாணத்துக்கு முதல் நாள் காலையில் சத்திரம் வந்து சேரும்படியான ஏற்பாடுகளைச் செய்து கொள்வார்கள்.  இதைச் சிலர் பெண் வீட்டினரின் தலையிலும் கட்டுவதுண்டு.  பிள்ளை வீட்டினர் எத்தனை பேரோ அத்தனை பேருக்கும் கல்யாணத்திற்கு வந்து, திரும்பிப் போக ஆகும் செலவைப் பெண் வீட்டினர் ஏற்பது உண்டு.  இந்தச் செலவெல்லாம் இப்போது இல்லை என்றாலும் மிக அரிதாகப் பார்க்கவும் முடிகிறது.   எங்கள் நண்பர் ஒருத்தரின் பெண்ணிற்கு ஒரு பிள்ளையைப் பார்த்தார்கள்.  ஜாதகம் பொருந்தி, பிள்ளை, பெண்ணுக்கும் பிடித்துப் போய்விட்டது.  பிள்ளை வீட்டார் போட்ட கண்டிஷன் என்னவென்றால் பிள்ளை இப்போது அமெரிக்கா திரும்பிவிடுவான்.  பின்னால் கல்யாணத்திற்குத் தான் வருவான்.  ஆகவே இப்போது திரும்பும் செலவு, மீண்டும் கல்யாணத்திற்கு வந்துவிட்டுப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு திரும்பும் செலவு ஆகியவற்றோடு பெண்ணிற்கு விசா எடுக்கும் செலவு எல்லாவற்றையும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கண்டிஷன்.  மூன்று பெண்களைப் பெற்ற அந்தத் தந்தை வேறு வழி இல்லாமல் அந்தக் கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டார்.  பிள்ளைக்கு மூன்று வழி பயணச் செலவு, பெண்ணிற்குப் பிள்ளையோடு செல்லும்போது ஏற்படும் செலவு, விசாச் செலவு, கல்யாணச் செலவு என எக்க்கச்சக்கமாகச் செலவு ஆனது. வேண்டாம்னு வேறே வரன் பார்த்திருக்கலாமேனு கேட்டதுக்கு இப்போவே பெண்ணின் வயது 27 ஆகிவிட்டது. இன்னும் தாமதிக்கக் கூடாதுனு ஒத்துண்டோம்னு சொன்னார்.  இது சில வருடங்கள் முன்னர் நடந்தது.

பெண் வீட்டினர் செல்வதற்கு முன்னர் சமையல்காரர்கள் அங்கே சென்றுவிடுவார்கள். பெண் வீட்டில் இருந்து விஷயம் தெரிந்த யாரேனும் அங்கே சென்று சமையல்காரர்களுக்கு மறுநாள் என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். சமையல்காரர்களும் அவர்கள் எந்த அளவிற்குத் தயார் நிலையில் இருக்கிறோம் என்று சொல்லுவார்கள்.  காடரிங் கல்யாணம் இல்லை எனில் சாமான்கள், காய்கறிகள், பழங்கள், மற்றப் பொருட்கள் வாங்கிச் சேமித்து வைத்திருக்கும் அறையை முக்கியமான நம்பகமான ஆள் ஒருத்தரை முன்னாலேயே போய் சாமான்களை எல்லாம் லிஸ்ட் படி வாங்கிச் சரிபார்த்து வைக்கச் சொல்லி அனுப்பி வைப்பார்கள்.  அந்த அறையின் சாவி அவரையும் இன்னொரு நம்பகமானவரையும் தவிர மறந்தும் கல்யாணப்பெண்ணின் தாய், தந்தையிடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.  அவர்கள் இருக்கும் வேலை முசுவில் சாவியை எங்காவது வைத்துவிட்டுத் தேடுவார்கள்.  ஒரு கல்யாணத்தில் சாவி கிடைக்காமல் உடைக்க வேண்டி ஆச்சு.

கல்யாணத்திற்கு முதல்நாள் காலையில் தான் சத்திரம்/மண்டபம் செல்ல நல்ல நேரம் பார்த்திருப்பார்கள். சத்திரம் செல்லும் முன்னர் இரு வீட்டினரும் அரிசியை ஊற வைத்து அரைத்து மாக்கோலம் போட்டு வைப்பார்கள். பிள்ளை வீட்டினர் உள்ளூராக இருந்தால் அவர்கள் சத்திரம் வரும் முன்னர் பெண் வீட்டினர் அங்கே சென்றுவிட வேண்டும்.  பிள்ளை வீட்டினர் வெளியூராக இருந்தால் அதிகாலையில் வருகிறாப்போல் ஏற்பாடுகள் பண்ணி இருப்பாங்க.  ஆகவே பெண் வீட்டினர் முதல்நாள் இரவே போய்விடலாம். எங்க பொண்ணுக்கு வெள்ளிக்கிழமை கல்யாணம்.  வியாழக்கிழமை அதிகாலை 5-15 மணிக்கு நல்ல நேரம் பார்த்திருந்தோம்.  பிள்ளை வீட்டினர் மும்பையாக இருந்தாலும் இரண்டு நாட்கள் முன்னரே வந்து மாம்பலத்தில் தங்கி இருந்தனர்.  அவர்களை ஏழரைக்கு எமகண்டத்துக்குப் பின்னர் போய் அழைத்து வந்தோம். எங்க பையருக்கு ஞாயிறன்று கல்யாணம். ஆனால் அந்த வருடம் எக்கச்சக்கமாக அடித்த புயலினாலும், மறுநாள் சனிக்கிழமை அன்று புதியதொரு புயல் நாமகரணம் செய்யப்பட்டிருந்ததாலும் வெள்ளி இரவே வந்திருந்த உறவினரோடு சத்திரத்துக்குப் போய்விட்டோம்.  பெண் வீட்டினரிடமும் தெரிவித்துவிட்டோம்.  அவர்களும் ஒத்துக்கொண்டனர்.  மறுநாள் தான் தெரிந்தது அது எத்தனை நல்லது என்று.  மறுநாள் ஏதோ திடீர் பந்த் நடக்க கல்யாணத்துக்கு வரவேண்டிய மற்ற உறவினர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல.  அதோடு மழை வேறு.

பொதுவாகக் கல்யாணம் உத்தராயணத்திலேயே வைப்பார்கள்.  தை மாதத்தில் ஆரம்பித்து, ஆனி மாதத்தோடு கல்யாணங்கள் முடிந்துவிடும்.  பின்னர் ஆவணி பரவாயில்லை என ஆரம்பித்து இப்போதுக் கடந்த பத்து வருடங்களாக ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலும் திருமணங்கள் நடக்கின்றன.  இந்த மாதத் திருமணங்களின் நாயகன், நாயகியர் பெரும்பாலும் வெளிநாட்டு வாசிகளாகவே இருப்பார்கள்.  என்றாலும் இப்போது உள்நாட்டினரும் செய்கின்றனர்.  வட மாநிலங்களிலும் இந்தக்கலாசாரம் பரவி உள்ளது.  ஆச்சு, நம்ம விஷயத்துக்கு வருவோம். சத்திரத்துக்குப் போய்ச் சேருவோம்,  பெண் வீட்டினரோ, பிள்ளை வீட்டினரோ சத்திரம் கிளம்பும் முன்னர் யாத்ரா தானம் என்ற ஒன்றைப் பண்ண வேண்டும். பொதுவாகக் கல்யாணப் பிள்ளை மட்டுமே செய்யும் இது இரு வீட்டினரும் செய்யலாம்.  பெண்ணின் சார்பில் பெண்ணின் தந்தை செய்யலாம். கல்யாணம் பண்ணி வைக்கக் கூடவே வரும் சாஸ்திரிகளே இதைப் பண்ணி வைப்பார். சாஸ்திரிகள் இப்போதெல்லாம் கூட வருவது என்பது பிள்ளை வீட்டினர் வெளியூரிலிருந்து வந்தால் மட்டுமே கூடவே அழைத்துவருவதோடு இருக்கிறது.  உள்ளூராக இருந்தால் அவர்கள் ஒவ்வொரு சடங்குக்கும் அந்த நேரத்துக்குத் தான் வருகின்றனர்.

யாத்ராதானம் உள்ளூராகவே இருந்தாலும் சுப காரியங்கள் தொடங்கும் முன்னர் வேதம் படித்தவர்களுக்கு தானங்கள் செய்துவிட்டு ஆரம்பிப்பது மிக நல்லது. பெண் வீட்டுக்காரங்க முன்னால் போய் வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேன்.  இது பெண் வீட்டுக்காரங்க எடுத்து நடத்தும் கல்யாணங்களில் பொதுவாகக் காணப்படுவது.  சில சமூகங்களில் பிள்ளை வீட்டினர் கல்யாணச் செலவை ஏற்பார்கள்.  அப்போது பெண் மேள, தாளத்தோடு, சீர் வரிசைகளை உறவினர்கள் ஏந்திவரக் குதிரைகள் பூட்டிய சாரட்டிலோ, காரிலோ அழைத்து வரப்படுவாள். அதற்கு முன்னர் பெண்ணிற்குப் பெண் வீட்டிலும், பிள்ளைக்குப் பிள்ளை வீட்டிலும் முக்கிய உறவின்முறையினர் அலங்கரித்து அமர வைத்து நலுங்கு வைப்பார்கள். பின்னர் பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினரில் மூன்று சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். ஆரத்திக்குப் பணம் போடுவது உண்டு.  பணம் இத்தனை வேண்டும் என ஆரத்தி எடுக்கும் முக்கிய உறவின் முறைப் பெண்கள் கேட்டு வாங்கிக் கொள்வதும் உண்டு. ஆயிற்று.  இப்போது நம்ம கல்யாணத்தில் பெண் வீட்டினர் முன்னாடி வந்தாச்சு.  எல்லாரும் சாமானைத் தூக்கிண்டு உள்ளே போகிறாப்போல் கல்யாணப் பெண் போக முடியாது.  அவளை ஆரத்தி எடுத்து சுற்றிக் கொட்டி வலக்காலை முன் வைத்து வரச் சொல்லுவார்கள்.  இப்போதெல்லாம் இந்த ஆரத்தி வேலையையும் காடரிங்காரர்கள் பொறுப்பில் இருந்தாலும் ஆரத்தி எடுக்கப் பெண்ணின் அத்தை, மாமி, பாட்டி சுமங்கலியாக இருந்தால் பாட்டி என அழைக்கப்படுவார்கள். இது எல்லாம் கல்யாணத்திற்கு முதல்நாள் ஆரத்திக்கு.  மறு நாள் ஆரத்திக்கு பிள்ளை வீட்டினர் ஒருத்தர், பெண் வீட்டினர் ஒருத்தர் என எடுக்க வேண்டும் என்பது எழுதப் படாத சட்டம்.

அடுத்து மாப்பிள்ளை வரப் போகிறார் தயாராக இருக்கவும்.  மாப்பிள்ளை வந்ததும் விரதம் ஆரம்பிக்கும்.  நாந்தியெல்லாம் உண்டு. ஆகவே ரொம்பப் பசிச்சால் டிபன் சாப்பிட்டுடுங்க.  பெண், பெண்ணின் அப்பா, அம்மா, அவங்க கோத்திர தாயாதிகள், பையர், பையரின் அப்பா, அம்மா, கோத்திர தாயாதிகள் சாப்பிட முடியாது.   எல்லாம் முடிஞ்சதும் மத்தியானமாத் தான் சாப்பாடு! :))))மத்தவங்க டிபன் சாப்பிட்டுக்கலாம்.

படத்துக்கு நன்றி: ஹுசைனம்மா! :))))))

Saturday, July 13, 2013

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழணும்


பெரும்பாலும் திருமணங்கள் பெண் வீட்டிலேயே நடந்திருப்பதாகவே தெரிய வருகிறது.  இது குறித்துச் சங்க காலத்திலேயே திருமணம் நிகழுமிடம் பெண் வீடாகக் காட்டுகின்றனர். நல்ல நாளிலும் அதிகாலைப் பொழுதிலும் மணங்கள் நடைபெற்று வந்துள்ளன.  ஐங்குறுநூறு 399 ஆம் பாடலில் தலைவி உடன்போக்கு என்று சொல்லும் தலைவனோடு திருமணத்துக்கு முன்னரே வீட்டை விட்டுச் சென்றுவிடும் நிகழ்வு நடந்த பின்னரும் தலைவியின் தாய் தலைவனின் தாயிடம், உங்கள் வீட்டில் சிலம்பு கழித்தல் சடங்கு நடைபெற்று முடிந்துவிட்டது  ஆகையால் வதுவைச் சடங்கை எங்கள் வீட்டில் நடத்தவேண்டும் என்று கேட்பதாகக் கூறுகிறது.
399.
நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப் 
பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே.

முன்பெல்லாம் தாலி அல்லது திருமாங்கல்யம் என்பது இல்லை என்றே கூறுகின்றனர்.  இது எப்போது ஆரம்பித்தது என்று கூறமுடியவில்லை என்றாலும் ஆரம்பித்த காலத்தில் தால பத்ரம் என்னப்படும் பனை ஓலையையே ஒரு அடையாளமாகக் கட்ட ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. தாலம் என்ற பனை ஓலையினால் செய்ததையே கட்டி வந்தவர்கள் அது அடிக்கடி பழுது ஆனதால் நிரந்தரமாக இருக்க உலோகங்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததாகவும், பின்னர் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கியதாகவும் தெரியவருகிறது.  ஆனால் தாலியின் அடையாளம் பொன்னோ, வெள்ளியோ அல்ல.  வெறும் ஒரு மஞ்சள்கிழங்கை எடுத்துக் கயிற்றால் முடிச்சுப் போட்டுவிட்டுக் கழுத்தில் கட்டினாலே அதுவும் தாலி தான். மஞ்சளைக் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சளை ஏற்றி இருப்பார்கள். தாலியின் உண்மையான அர்த்தமே மஞ்சளைக் கயிற்றில் முடிந்து கட்டுவதில் தான் உள்ளதே தவிர, எத்தனை பவுன் தங்கம் அல்லது செலவு ஆனது என்பதில் இல்லை.  சங்க காலத்தில் மகளிர் அணிந்த தாலியை வேப்பம்பழம் போல் இருந்ததால் இதைப் புதுநாண் என்று சொன்னதாகக் குறுந்தொகை 67 ஆம் பாடல் குறிப்பிடுகிறது.

67. பாலை - தலைவி கூற்று

உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல ஒருகா சேய்க்கும்
நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே. 
-அள்ளூர் நன்முல்லையார்.

 தாலி அணிந்த பெண்டிர் "வாலிழை மகளிர்" என வெள்ளி வீதியார் என்னும் புலவரால் குறிப்பிடப் படுகிறார்.  குறுந்தொகை 386

386. நெய்தல் - தலைவி கூற்று

வெண்மணல் விரிந்த வீததை கானல்
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே
வாலிழை மகளிர் விழவணிக் கூட்டும்
மாலையோ அறிவேன் மன்னே மாலை
நிலம்பரந் தன்ன புன்கணொடு
புலம்புடைத் தாகுதல் அறியேன் யானே. 
-வெள்ளிவீதியார்.

 சிலப்பதிகாரத்திலும் கோவலன் கண்ணகிக்குத் தாலி கட்டியதாயும் தெரிய வருகிறது.

நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர்
மறுவின் மங்கல அணியே அன்றியும்
பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்

ஆகவே தாலி கட்டும் வழக்கம் இருந்திருந்திருக்கிறது என்பதும் தெரிய வருகிறது.  ஆனாலும் இதற்கு முக்கியத்துவம் அவ்வளவாய் இல்லை என்றே சொல்லலாம். அது குறித்துப் பின்னர் பார்க்கலாம். முற்காலத்துத் திருமணங்களிலும் கூட தாலி கட்டுவதை ஒரு அடையாளமாகவே கொண்டிருக்கின்றனர்.  ஆனாலும் அந்தத் தாலியைச் செய்யும் போது நல்ல நாள் பார்த்தே செய்திருக்கின்றனர். தாலி எனப்படும் திருமங்கல்யம் பெண் வீட்டிலும் ஒன்று, பிள்ளை வீட்டிலும் ஒன்று எனப் போடுவார்கள்.  சிலருக்கு ஒரே திருமங்கல்யம் தான் என எண்ணுகிறேன். என்றாலும் இதற்குப் பொன் உருக்குவதற்கு நல்ல நாள் பார்த்தே வீட்டுக்கு ஆசாரியை வரவழைத்துப் புத்தம் புதிய பொற்காசைக் கொடுத்து வீட்டில் வைத்து உருக்குவார்கள்.  அநேகமாகப் பிள்ளை வீட்டிலேயே நடக்கும் இந்தச் சடங்கு இப்போதெல்லாம் பெண் வீட்டில் கூட நடப்பதில்லை.  நகைக்கடையில் நல்ல நாள் பார்த்து ஆர்டர் கொடுப்பதோடு முடிகிறது.  ஆனாலும் பொன்னுருக்குவது என்பது என் கல்யாணத்தில் எங்கள் வீட்டில் வைத்து நடந்தது.

மணமகன் வீட்டில் நடத்துவது என்றால் ஆசாரிகள் தங்கத்தை உருக்கும் அடுப்புடன் வருவார்.  அதில் உமியோடு சிரட்டைக்கரியும் போடப் பட்டிருக்கும். கல்யாணப் பெண் அன்று மணமகன் வீட்டிற்குச் செல்ல மாட்டாள்.  ஆனால் பெண்ணின் உறவினர்களில் முக்கியமானவர்கள் கலந்து கொள்வார்கள்.  இதற்கும் பெண் வீட்டிலிருந்து சீர் கொடுப்பதுண்டு.  ஏதேனும் இனிப்பு வகை கொண்டு போவார்கள். மணமகன் வீட்டு வாசலில் அல்லது பொன்னுருக்குதல் நடைபெறும் இடத்தில் நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்ச் செம்பு, குங்குமம், சந்தனம், தேங்காய், மாவிலைக் கொத்து, வெற்றிலை, பாக்கு, பழ வகைகள், மஞ்சள் கிழங்கு, தேசிக்காய் அறுகம்புல், புஷ்பவகைகள், ஒரு சட்டியில் நீர், விபூதி, குங்குமம், மஞ்சள் பொடி பிள்ளையார் பிடிக்க, சாம்பிராணி, கற்பூரம், மணி போன்றவை முக்கியம் ஆகும்.

பொன்னுருக்குவதற்காகப் புத்தம்புதிய தங்க நாணயம் வாங்கி வைத்திருப்பார்கள்.  அவரவர் குல வழக்கப்படி குலதெய்வத்தின் காலடியில் வைத்து எடுத்து வருவதும் உண்டு. அதைப் பொன்னுருக்கும் நாள் வரை பூஜை அறையில் வைத்திருப்போரும் உண்டு. பொன்னுருக்கும் நாளன்று நல்ல சுமங்கலியை அழைத்து, உபசாரங்கள் செய்து அந்தப் பொன்னை எடுத்து  மணமகனிடம் கொடுப்பார்கள்.  மணமகன் அதை ஆசாரியிடம் கொடுப்பார். ஆசாரி பிள்ளையார் பிடித்து விளக்கு ஏற்றி வைத்து, தூபதீபம் காட்டி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் உடைத்து நிவேதனம் செய்து கற்பூரம் காட்டுவார். பின்னர் கடவுளை வேண்டிக் கொண்டு பொன்னை உருக்குவார். அது உருண்டையாக வரும்.  அதன் பின்னர் பிள்ளைக்கு மாமா இருந்தால் அவர் மீண்டும் தேங்காய் உடைத்து வழிபட்ட பின்னர் அந்தத் தேங்காய்த் தண்ணீரை விட்டு பொன்னுருக்கிய தணலை அணைப்பார். ஆசாரியார் அந்த உருண்டைப்பொன்னை எடுத்து வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள், தேசிக்காய் வைத்துப் பிள்ளையிடம் கொடுக்க அதை சபையினருக்குக் காட்டி விட்டு மணமகன் மீண்டும் ஆசாரியிடம் கொடுப்பார்.  ஆசாரியும் அதை வாங்கிக் கொண்டு சின்ன உளியால் ஒரு அடி அடித்து அதன் மேல் சந்தனம், குங்குமம் வைத்துப் பெற்றுக் கொள்வார். பின்னர் ஆசாரிக்குத் தக்க மரியாதைகள் செய்யப்படும்.  வந்திருப்போர் அனைவருக்கும் விருந்துபசாரம் நடைபெறும். இந்த விருந்துச் சாப்பாடு உள்ளூரில் இருந்தால் மணமகளுக்கும் கொடுத்து அனுப்பும் வழக்கம் உண்டு.

என் கல்யாணத்தில் இவை எதுவும் நடைபெறவில்லை எனினும் நல்ல நாள் பார்த்துத் தங்க நாணயம் வாங்கிக் கொடுத்துப் பொன்னுருக்குதல் நடந்தது.   ஆசாரியை வீட்டுக்கு வரவழைத்துப் பொன்னைக் கொடுத்துத் தாலி செய்யச் சொல்லிக் கொடுத்தார்கள்.  அன்று வீட்டில் வடை, பாயசத்துடன் விருந்தும் இருந்தது. முன்பெல்லாம் இந்தப் பொன்னுருக்கும் நாளன்றே முஹூர்த்தக்காலும் நட்டதாகத் தெரிய வருகிறது. இவை இரண்டும் நடந்த பின்னரே திருமணத்திற்கான பலகாரங்களைச் செய்ததாகவும் தெரியவருகிறது.  இதன் பின்னர் மணமகனும், மணமகளும் திருமணம் நாள் வரை ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்பது சம்பிரதாயம்.