எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 20, 2013

மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ!

அடுத்துப் பெண்ணிற்குச் செய்ய வேண்டியவற்றைப் பார்க்கலாம்.  பெண்ணிற்கு ஏற்கெனவே ஜாதக கர்மா முதலியன நடந்திருந்தாலும் கல்யாணத்திற்கு முதல்நாள் திரும்பவும் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.  எனக்கெல்லாம் நடக்கவில்லை. ஆகையால் செய்யாததற்குப் பிராயச் சித்தம் செய்வார்கள். அதன் பின்னர் புண்யாஹவசனம் செய்வார் பெண்ணின் தந்தை. புண்யாஹவசனம் செய்த ஜலத்தினால் பெண்ணிற்கு ப்ரோக்ஷணம் செய்து அவளை நேருக்கு நேர் பார்த்து உச்சி முகர்ந்து, (சின்ன வயசில் செய்யலையோ?) வலது காதில் அவளுடைய பெயரைச் சொல்லச் சொல்லுவார்கள்.  பெண்ணிற்குத் தொட்டில் போடுகையில் என்ன பெயர் வைத்தார்களோ அந்தப் பெயரைத் தான் சொல்ல வேண்டும்.  ஒரு சிலர் தொட்டிலின் போது வைத்த பெயரால் கூப்பிடுவதில்லை.  கூப்பிடத் தனிப் பெயர் இருக்கும்.  இப்போது என் தொட்டில் பெயர் சீதாலக்ஷ்மி.  கூப்பிடுவது தான் கீதா. ஆகையால் திருமணப் பத்திரிகையிலும், கல்யாணத்தின்போது ஜாதககர்மா செய்யும் போதும் சீதாலக்ஷ்மி என்ற பெயரே சொல்லுவார்கள். அப்புறமா அன்னப்ராசனம்.  ஹிஹிஹி, எட்டு மாசத்தில் செய்ய வேண்டியது. அந்தக் காலத்திலே எல்லாம் பெண்கள் குழந்தைகளா இருக்கிறச்சே கல்யாணம் நடந்திருக்கு.  இப்போ வயது வந்த பின்னர் நடக்கும் கல்யாணங்களிலும் இதைப் பார்க்கையில் கொஞ்சம் வேடிக்கையாத் தான் இருக்கும்.  தயிரும், நெய்யும் கலந்து அன்ன ப்ராசனம் செய்வித்துப் பின்னர் நெல்லில் பெயரை எழுத வேண்டும். இது அத்தனையும் பெண்ணின் அப்பா செய்வார்.

அடுத்தது பெண்ணிற்கு முக்கியமானது கங்கணதாரணம். பிள்ளைக்கும் உண்டு என்றாலும் பெண்ணின் கங்கண தாரணத்தை முக்கியமாகச் சொல்லுவார்கள்.  திருமணம் நிச்சயம் ஆனதுமே சங்கல்பம் செய்து கொண்டு கங்கணம் என்னும் ரக்ஷை கட்டிக் கொள்வார்கள்.  இது கட்டிக் கொண்டுவிட்டால் பின்னர் ஆறு தாண்டி, கடல்தாண்டி, வெளியே செல்லக் கூடாது.  அதனாலோ என்னமோ தெரியலை கல்யாணத்திற்கு முதல்நாள் தான் இப்போல்லாம் கங்கணதாரணம் நடைபெறுகிறது.  பிராமணருக்குக் கல்யாணத்திற்கு முதல்நாள் எனில் மற்ற சமூகத்தினருக்குக் கல்யாணத்தன்றே நடக்கிறது.  இது கல்யாணப் பெண், பிள்ளை இருவருக்கும் உண்டு.  துர்தேவதைகள் அண்டாத வண்ணமும், ஆஸெஸம் எனப்படும் தீட்டு முதலியவை அவர்களைப் பாதிக்காது என்றும் இந்த ரக்ஷை பாதுகாப்பதாகச் சொல்லுவார்கள்.  ரக்ஷை கட்டிக் கொண்டதும் வீட்டை விட்டே வெளியே செல்லத் தடையும் விதிப்பார்கள்.  ஆனால் இந்தக் காலங்களில் அன்று மாலை தான் ரிசப்ஷனுக்காகப் பெண் ப்யூட்டி பார்லர் போகும்படி ஆகிறது.  மிகச் சிலரே கல்யாணச் சத்திரத்துக்கு ப்யூட்டி பார்லரில் இருந்து ஆட்களை வரவழைக்கின்றனர்.  பெண்ணுக்கு இடக்கையிலும், ஆணுக்கு வலக்கையிலும் இந்த ரக்ஷை தரிக்க வேண்டும்,  கல்யாணம் முடிந்தப்புறமும் இது கையில் இருக்கும்வரை இருக்கலாம்.  தப்பில்லை.  பெண் வீட்டிலும் நாந்தி சிராத்தம் செய்வது உண்டு.  அது குறித்து போன பதிவிலேயே குறிப்பிட்டு விட்டேன்.

அடுத்த முக்கியமான ஒன்று பாலிகை தெளித்தல்.(அங்குரார்ப்பணம்) எனச் சொல்லுவார்கள்.  இது முழுக்க முழுக்க இரு வீட்டுப் பெண்களாலும் செய்யப்படும்.  இது கல்யாணத்திலும், உபநயனம் எனப்படும் பூணூலிலும் உண்டு. பயிர்கள் நன்கு செழித்து வளர்வது போல் திருமணம் நன்கு நடந்து அந்தக் குடும்பமும் நன்கு செழித்து வளர்வதற்காகச் செய்யப்படும் ஒரு பிரார்த்தனை இது. திருமணம் நடைபெறும் தினத்திற்கு முன்னர் வரும் ஒற்றைப்படையான தினத்தில் மந்திரோக்தமாகச் செய்யப்படும் ஒன்று இது. உதாரணமாக வெள்ளிக்கிழமை கல்யாணம் எனில் அதற்கு முந்தைய புதன், திங்கள் ஆகியன ஒற்றைப்படை தினமாக வரும். பாலிகைகள் தெளித்தலின் போது பயன்படுத்தப்படும் மண் கலசத்திற்குப் பாலிகா என்று பெயர்.  மண் கலசத்திலேயே பாலிகைகளைத் தெளிப்பார்கள். கூரான இலைகளையுடைய பயிருக்கும் பாலிகா என்ற பெயர் வரும். மண் கலசங்களில் மந்திரோக்தமாகத் தெளிப்பார்கள்.  விதைகள் தெளிக்கையில் தனித்தனியாக மந்திரம் சொல்வார்கள்.  இந்த உறவு நன்கு பல்கிப் பெருகி வளரவேண்டி, ப்ரஹ்மா, இந்திரன், யமன், வருணன், ஸோமன் ஆகிய தேவதைகள், பரிவாரங்களை ஆவாஹனம் செய்து ஓஷதி என்னும் வேத மந்திரங்களையும், ஸூக்தமும் சொல்லி ஜபித்துப் பாலிகையைத் தெளிப்பார்கள். இதற்குத் தனியாக ஏதும் சாமான்கள் தேவையில்லை.  ஐந்து பாலிகைக் கிண்ணங்கள்/மண் கலசங்கள், முளைக்க வைத்த ஊறிய தானியங்கள், கொஞ்சம் பால் ஆகியவையே தேவை.

தெளித்த பின்னர் பஞ்சகவ்யத்தை ப்ரோக்ஷணம் செய்து மண்ணைப் போட்டு மூடுவார்கள்.  பின்னர் ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் சுமங்கலிகளைக் கொண்டு பாலிகை விதைகள் ஊற வைத்த ஜலத்தை அப்பாலிகைகளில் தெளிக்கச் சொல்லுவார்கள்.  ஆனால் பெரும்பாலோர் அதில் இருக்கும் விதைகளையும் சேர்த்தே தெளிக்கின்றனர்.  இது கூடாது என்பதையும் ஜலம் மட்டுமே தெளிக்க வேண்டும் என்பதையும் எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே அறிந்து  கொண்டேன். ஊற வைத்த தான்யங்களைத் தெளிப்பது கர்த்தாக்கள் மட்டுமே.  அதாவது பிள்ளையின் அப்பாவும், பெண்ணின் அப்பாவும் மட்டுமே.  பாலிகையைக் கரைக்கும்வரை அதற்கு யாரேனும் ஒரு சுமங்கலியை விட்டு நீர் வார்த்து விளக்கேற்றி, வழிபட்டு, நிவேதனம் செய்யச் சொல்வார்கள். இதைப் பெண் வீட்டில் தனியாகவும், பிள்ளை வீட்டில் தனியாகவும் செய்ய வேண்டும்.  இரு பாலிகைகளும் திருமணத்திற்குள் நன்கு வளர்ந்து விவாஹம் ஆன ஐந்தாம் நாள் நதியில் அல்லது குளக்கரையில் கரைப்பார்கள்.  அப்போதும் மந்திரங்களால் ஆவாஹனம் செய்த பிரம்மாதி தேவர்களை அதிலிருந்து எழுந்தருளப் பண்ணிப் பின்னரே நதியில் கரைக்க வேண்டும்.

(ஆனால் இப்போதெல்லாம் கல்யாணத்துக்கு முதல்நாள் தான் பெரும்பாலான கல்யாணங்களில் பாலிகை தெளிக்கப்படுகிறது.  பெண்ணின் தந்தை, பிள்ளையின் அப்பா போன்றோருக்கு இது குறித்த தெளிவு இல்லாததால் இதைக் குறித்து அதிகம் பொருட்படுத்துவது இல்லை.  பாலிகைகளில் நீர் தெளிக்க அழைக்கும் பெண்களோ எனில் ஊற வைத்த விதைகளைத் தான் தாங்கள் தெளிக்க அழைப்பதாக நினைத்துக் கொண்டு அவ்வாறே செய்கின்றனர்.  ஒரு சில புரோகிதர்கள் மட்டுமே தண்ணீரை ஊற்றினால் போதும் என்கின்றனர்.  பொதுவாக இதைக் குறித்துப் புரோகிதர்களும் தெளிவு செய்வதில்லை.  நான் தற்செயலாக அறிந்து  கொண்டேன்.)

 இதன் பின்னர் ஆரத்தி எடுப்பார்கள்.  இந்த ஆரத்தி எடுப்பது பிள்ளை வீட்டினர் தனியாகவும், சில சமயம் அவங்களுக்கு முன்னாடியே முடிஞ்சுடும். பெண் வீட்டினர் தனியாகவும் ஆரத்தி எடுப்பார்கள்.  கல்யாணத்தன்று தான் பொதுவில் ஆரத்தி.

22 comments:

  1. அங்குரார்ப்பணம் விளக்கம் அருமை... தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. "நம்ம கல்யாணத்துல எப்போ பாலிகை கரைச்சோம்" னு மனைவியைக் கேட்டேன். "கரைச்சோம். எப்போன்னு கேட்காதீங்க"ன்னுட்டாங்க!

    திருமணம் முடிந்து வேண்டுதலை நிறைவேற்றியிருக்கவேண்டிய வேண்டிய திருமணஞ்சேரியே இன்னும் போகலை! ஹிஹிஹி...

    ReplyDelete
  3. முக்கியமான ஒன்றான பாலிகை தெளித்தல்(அங்குரார்ப்பணம்)பற்றி அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. எவ்வளவு ஈடுபாட்டோடு எழுதுகிறீர்கள்!
    அதுவும் எவ்வளவு வருஷங்களாக?.. எதை எடுத்துக் கொண்டாலும் இப்படி ஈடுபாட்டோடு எழுதுவது தான் உங்கள் வழக்கமாய் போயிருப்பது ஆச்சரியம் தருகிறது.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  5. பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.....

    தொடரட்டும்....

    ReplyDelete
  6. எங்க குடும்பங்களில் பாலிகையை யார் வீட்டு சார்பா திருமணம் நடக்கிறதோ அவங்க திருமணத்துக்கு முதல் நாள்ல ஊற வெச்சுருவாங்க. திருமணத்தன்று அதும் மணமேடையில் வெச்சு, தாய்மாமன் எடுத்துக்கொடுக்க, பெண், மாப்பிள்ளை கையால்தான் பாலிகையை மண் கலசங்களில் புரோகிதர் வேத மந்திரம் ஒலிக்க தெளிக்கச்செய்வோம். அதற்குப்பின் ஐந்து நாளிலோ ஏழு நாளிலோ நீர் நிலைகளில் கொண்டு போய்க்கரைச்சுட்டு சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம், வெற்றிலை பாக்கு கொடுத்துட்டு வருவோம்.

    ReplyDelete
  7. நமக்கு தெலுகு பத்ததி என்பதால் பாலிகை பற்றி தெரியாது. இப்போ தெரிந்து கொண்டேன்.

    உங்க பதிவை பாக்கும் பொழுது தெலுகு பத்ததிகளையும் எழுதலாம்னு தோணுது.

    ReplyDelete
  8. விவாஹம் ஆன ஐந்தாம் நாள் நதியில் அல்லது குளக்கரையில் கரைப்பார்கள்.//
    எங்கள் வீடுகளில் திருமணம் முடிந்த மறுநாள் கரைக்கும் வழக்கம் உண்டு.
    தலைப்பு பாடல் அருமை.

    ReplyDelete
  9. வாங்க டிடி, எல்லார் கல்யாணங்களிலும் முளைப்பாலிகை உண்டு. :))) பலரும் நதிக்கரையில், குளக்கரையில் வந்து கரைப்பாங்க முன்னெல்லாம். இப்போல்லாம் கல்யாணத்துக்கு மறுநாளே ஒரு வாளியில் நீர் வைச்சுக் கரைக்கிறாங்க. :(

    ReplyDelete
  10. வாங்க ஶ்ரீராம், பாலிகையை மறுநாள் கரைச்சிருக்கலாம். இப்போல்லாம் அப்படித் தான் பண்ணறாங்க. எங்க கல்யாணப் பாலிகையை ஊர்க்குளத்தில் கரைச்ச நினைவு இருக்கு. :))))

    ஹிஹிஹி, அதனால் என்ன உங்க பெண்/பிள்ளை கல்யாணத்தப்போ சேர்த்துப் போயிட்டு வாங்க. சஷ்டி அப்த பூர்த்தி முடிஞ்சதும் கூடப் போயிட்டு வரலாம். நாங்க அப்படித் தான் போக நேர்ந்தது; அதுவும் தற்செயலாக! :))))

    ReplyDelete
  11. வாங்க வைகோ சார், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  12. வாங்க ஜீவி சார், பாராட்டுக்கு நன்றி. ஈடுபாடு வேணும்னு தான் இந்தக் கருத்தையே தேர்ந்தெடுத்தேன். ஒரு சிலராவது பயனடைவார்கள் இல்லையா! தொடர்ந்து வாருங்கள். நன்றி.

    ReplyDelete
  13. தொடர்வதற்கு நன்றி வெங்கட்.

    ReplyDelete
  14. வாங்க அமைதி, பாலிகை எல்லாருக்கும் உண்டுன்னாலும் யார் தெளிக்கிறதுங்கறது அவங்க அவங்க குடும்ப வழக்கம். அதான் உங்க வழக்கப்படி கல்யாணப் பெண்ணும், பிள்ளையும் தெளிக்கறாங்க போல. அதுவும் நல்லது தானே. நாங்களும் ஐந்தாம் நாள் தான் கரைச்சுட்டு இருந்தோம். இப்போல்லாம் அவசர யுகமா, கல்யாணம் ஆன மறுநாளே! :(((

    ReplyDelete
  15. வாங்க புதுகை, நிச்சயமா, எழுதுங்க, எனக்கு ஒன்றிரண்டு வழக்கம் தெரியும். நல்லாத் தெரியாது. ஆகையால் குறிப்பிடவில்லை. நீங்க எழுதிட்டு எனக்கு லிங்க் அனுப்புங்க. அவ்வப்போது உங்க பதிவைப் படிச்சாலும், இதைத் தொடர்ந்து மறக்காமல் படிக்க வசதியா இருக்கும்.:))))) நன்றிங்க.

    ReplyDelete
  16. வாங்க கோமதி அரசு, இந்தப் பாடல் இப்போதும் பல திருமணங்களில் ஒலிக்கிறதே. நன்றிங்க.

    ReplyDelete
  17. இப்ப எல்லாம் கல்யாணம் முடிஞ்சதும் ரெஸ்ட்ராரைத் தேடி ஓடுவதில் தான் நேரம் ஆகிறது. பாலிகை பக்கெட்டில் கரைக்கப் படுகிறது.
    தஞ்சாவூரில் நடந்த திருமணம் ஒன்றில் திருமணத்துக்கு மறுநாள் பாலிகையையை ஆற்றில் கரைக்கப் போனபோது வந்ததே வெள்ளம்!!அடுத்த கரையில் நின்றிருந்த பண்ணையாள் சொல்லி இருக்காவிட்டால் சிரமமாகி இருக்கும்:)

    ReplyDelete
  18. ரக்ஷை கட்டிக்கொள்வதும் சுமங்கலிகள் கும்பத்துக்கு தெளிப்பதுமட்டும் திருமணநாளில் செய்கிறார்கள்.

    ReplyDelete
  19. எங்கள் கல்யாணத்தில் முதல் நாள் தான் பாலிகை தெளித்தோம். எப்போ கரைச்சோம்னு தெரியலையே....

    நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். ஜலம் தான் தெளிக்க வேண்டும் என்பது முதல்...நன்றி மாமி.

    ReplyDelete
  20. வாங்க வல்லி, ஆமாம், இப்போல்லாம் கட்டாயமாய் ப்திவு பண்ண வேண்டி இருக்கே! :))))

    ReplyDelete
  21. வாங்க மாதேவி, பாலிகை தெளிப்பது முக்கியமாச்சே! :))))

    ReplyDelete
  22. வாங்க கோவை2தில்லி, மூணாம் நாள் கட்டுச்சாதம் வைக்கிற அன்னிக்குக் கரைச்சிருப்பீங்க. இப்போல்லாம் அப்படித் தான். வருகைக்கு நன்றிம்மா.

    ReplyDelete