எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 05, 2013

க்ஷேமங்கள் கோரி விநாயகனைத் துதித்து, சங்கரனையும் கெளரியையும் வர்ணித்து!

அடுத்து நாம் பார்க்கப் போவது சுமங்கலிப் பிரார்த்தனை அல்லது சுமங்கலி பூஜை.  ஒரு சில குடும்பங்களில் இது செய்வதில்லை.  அவரவர் வீட்டு வழக்கமாகவே இது இருந்து வருகிறது.  பெரும்பாலான பாலக்காட்டுத் தமிழர்கள் இதைக் கடைப்பிடிப்பதில்லை என்றாலும் அவர்களிலும் ஒரு சில குடும்பங்களில் வழக்கத்தில் இருந்து வருகிறது. இது அந்த அந்தக் குடும்பத்தில் இறந்து போன சுமங்கலிகளை நினைவு கூர்ந்து செய்யப்படும். இன்னும் சில குடும்பங்களில் வருடா வருடம் அந்த சுமங்கலி இறந்த திதியன்று செய்யப்படும் சிராத்தத்தின் மறுநாள் யாரேனும் ஒரு சுமங்கலியையோ அல்லது வீட்டில் கல்யாணம் ஆன பெண் இருந்தாலோ அழைத்துச் சாப்பாடு போட்டுப் புடைவை வைத்துக் கொடுப்பார்கள். இது ஒவ்வொரு வருடமும் நடைபெறும்.  இந்த சுமங்கலிப் பிரார்த்தனையில் சாப்பிட்டவர்கள் அன்றிரவு விரதமாக இருக்க வேண்டும் என்பார்கள்.  பெரும்பாலானவர்கள் இதை இப்போது கடைப்பிடிப்பதில்லை.   கல்யாணப் பெண்டுகளில் அப்படி ஒன்று இல்லை. ஆனால் திருமணங்கள் நடப்பதற்கு முன்னால் செய்யும் சுமங்கலிப் பிரார்த்தனையின் போது குறிப்பிட்ட வம்சத்தில் உள்ள முன்னோர்களில் சுமங்கலியாக இறந்த பெண்கள் மட்டுமில்லாமல், திருமணமே நடைபெறாமல் இறந்த கன்னிப் பெண்கள், சிறு பெண் குழந்தைகள் என அனைவரின் பெயர்களையும் தலைமுறை வாரியாக எழுதி வைத்துக் கொண்டு அன்று அவர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து வழிபாடுகள் செய்வது வழக்கம்.

இந்த சுமங்கலிப் பிரார்த்தனையும் பிராமணர்களில் மூன்று விதமாக நடைபெறும். அதில் எல்லாரும் பின்பற்றும் வழக்கமான முறையில் சுமங்கலி இலையின் படையலைச் சேர்த்து ஐந்து பேர், அல்லது ஒன்பது பேரை அழைத்துச் சாப்பாடு போடுவார்கள்.  இந்த இலை போடுவதும் சில வீடுகளில் இரட்டை இலை போடுவார்கள்.  இரண்டு புடைவைகள் வைப்பார்கள்.  சில வீடுகளில் ஒரே இலை தான்.  ஒரே புடைவைதான். இதெல்லாம் அவரவர் குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது. ஆனால் பொதுவாக ஒற்றைப்படையிலேயே சுமங்கலிகளின் எண்ணிக்கை அமையும். இன்னொன்று பூவாடைப் பொண்டுகள் என்பது.  இந்தப் பூவாடைப் பொண்டுகள் என்பது இந்தக்காலத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.  என்றாலும் எங்கள் நண்பர் ஒருவர் வீட்டில் நடந்து வந்தது. எண்பதுகள் வரையிலும் நடந்ததை அறிவேன்.  இது எப்படி எனில் ஒரு வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்மணியைச் சிதையில் வைத்து எரிக்கையில் கட்டி இருந்த புடைவை இடுப்புக்கீழ் பாகம் முழங்கால் வரை எரியாது இருக்குமாம். இது எல்லா சுமங்கலியாக இறந்த பெண்களுக்கும் நடப்பது இல்லை.  மிகச் சிலருக்கு மட்டுமே இப்படிப் புடைவை எரியாமல் இருக்குமாம். அதை அந்தச் சமயம் அவர்கள் மடிசாராகக் கட்டி இருந்தால் அந்த பாகம் எரியாமல் இருக்குமாம். அப்படி எரியாமல் இருக்கும் புடைவையின் பாகத்தை மறுநாள் பால் ஊற்றச் செல்கையில் பார்த்து எடுத்து ஒரு பானையில் போட்டுக் கொண்டு வருவார்களாம்.

அதை வீட்டில் தனியாக ஒரு இடத்தில் வைத்து வழிபட்டு வருவார்கள் என்றும் சில குடும்பங்களில் வழிவழியாக இது தொடர்ந்து வரும் என்றும் சொல்கின்றனர். இவர்கள் இறந்த திதியன்று சிராத்தம் முடிந்ததும் மறுநாள் மிகவும் ஆசாரமாக சமையல், மற்ற ஏற்பாடுகள் செய்து, அதே போல் ஆசாரத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவருக்குப் புடைவை வைத்துக் கொடுப்பார்களாம். அதை வாங்கிக் கொள்கிறவர்கள் ஆசாரம் கடைப்பிடிக்கிறவர்களாகத் தான் இருக்க வேண்டுமாம். வீட்டில் உள்ளவர்களும் மிகவும் கவனமாகவே ஆசாரம் குறையாமல் எல்லாம் செய்வார்களாம். இது என் சிநேகிதி சொல்லிக் கேட்டது.  அவரின் மாமியார் கர்ப்பப் பை கான்சரில் இறந்தவரின் மடிசார் எரியவில்லையாம்.  இது அறுபதுகளின் கடைசியில் நடந்திருக்கிறது.  தோழி எனக்குச் சொன்னது எண்பதுகளில். ஆனால் அவர்கள் அண்ணன், தம்பி மூவர் சேர்ந்து இருக்கையில் தான் நடத்த வேண்டும் என்பதால் எப்படி நடத்துவார்கள் என்பதை நேரில் பார்த்ததில்லை.  வேறொரு குடும்பம், இவங்க அம்பத்தூரிலேயே இருந்தார்கள்.  இவங்க குடும்பத்தில் சுமங்கலிப் பிரார்த்தனையில் ஒன்பது பேர் கட்டாயம் இருக்கணும்.  அதில் ஏழு சுமங்கலிகள், ஒரு விதவை, ஒரு பிரமசாரிப் பையர்.  இதை அதிசயப் பொண்டுகள் என்று சொல்கின்றனர்.  ஆனால் சாப்பாடு விஷயத்தில் சமரசம் செய்து கொள்கின்றனர்.

 நான் பார்த்த திருமணத்தில் திருமணத்தன்று தாலி கட்டி முடிந்ததும் இவர்கள் ஒன்பது பேரையும் முதலில் வரிசையாக உட்கார்த்தி வைத்து சமையல்காரர்கள் சமைத்த சாப்ப்பாடையே போட்டுச் சாப்பிடச் சொல்லிப் பின்னர் அனைவருக்கும் தாம்பூலம் கொடுத்தார்கள். இதே போல் குஜராத்தியர் ஒருத்தரின் சதாபிஷேஹத்திலும் நடந்தது.  இதற்கு அவர்கள் கூறிய கர்ணபரம்பரைக் கதை.  ஏழு பிள்ளைகளைப் பெற்ற தாய் ஒருத்தி தன் ஏழு மருமகள்களையும் வேலை வாங்கிக் கொண்டு சாப்பாடு போடாமல் கண்டிப்பாக இருந்தாளாம்.  அவள் ஒருநாள் வெளியே சென்றிருக்கையில் மருமகள் அனைவரும் கூடி மாமியாருக்குத் தெரியாமல் நல்ல சாப்பாடு சமைத்துச் சாப்பிடும் வேளையில் மாமியார் வந்துவிட என்ன செய்வது எனப் புரியாமல் மருமகள்கள் பூஜை அறையில் அம்பிகையைப் பிரார்த்திக்க மாமியார் கண்ணெதிரே ஏழு பேரும் அம்மனோடு ஐக்கியம் அடைந்ததார்கள் எனச் சொல்லப் படுகிறது.  ஆகவே இதற்கு ஆசாரம் பார்க்க வேண்டாம் என்றும் நல்ல சாப்பாடு சாப்பிட நினைத்த மருமகள்களை நினைத்துக் கல்யாணச் சாப்பாடைப் போடுகிறார்கள் என்றும் கூறினார்கள்.  மேலும் அவர்களில் எவரும் சாஸ்திரோக்தமாக அல்லது சம்பிரதாயமாக மடிசார் வைத்துக் கட்டிக் கொள்ளவில்லை. விதவையை அழைப்பது அந்த மாமியாரை நினைத்து என நினைக்கிறேன். பிரமசாரி எதற்கு என்பது அவர்களுக்கும் சொல்லத் தெரியவில்லை.

ஆனால் பொதுவாக சுமங்கலிப் பிரார்த்தனை என்றால் சாமான்கள் கூட வீட்டில் ஏற்கெனவே வாங்கி வைத்திருப்பதைப் பயன்படுத்த மாட்டார்கள்.  தனியாகத் தான் வாங்குவது வழக்கம். சிராத்தம் அன்று எவ்வளவு சிரத்தையுடன் செய்கின்றார்களோ அதற்குச் சற்றும் குறையாமல் நடக்கும்.  ஆனால் சமையல் மட்டும் சிராத்த சமையலாக இல்லாமல் தேங்காய், துவரம் பருப்பு, மிளகாய், தனியா சேர்த்துச் செய்வார்கள்.  ஆனால் பொடியெல்லாம் வீட்டில் இருக்கும் பொடிவகைகளைப் பயன்படுத்த மாட்டார்கள்.  சில வீடுகளில் காய்களைக் கூட முதல் நாளே நறுக்கி வைக்கக் கூடாது.  சுமங்கலிப் பிரார்த்தனை அன்றுதான் நறுக்க வேண்டும். அதோடு பாயசம் இனிப்புப் போன்றவற்றில் வெல்லமே சேர்ப்பார்கள்.  சர்க்கரை சேர்க்க மாட்டார்கள். காய்களும் முட்டைக்கோஸ், பீன்ஸ், காரட், முள்ளங்கி, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு போன்ற காய்களைத் தவிர்த்துவிடுவார்கள்.  கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், புடலங்காய், சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, வாழைத்தண்டு, கொத்தவரை, பறங்கி, பூஷணி போன்ற நாட்டுக்காய்களே சேர்க்கப்படும். பாகற்காய் கசப்புச் சுவை என்பதால் சுமங்கலிப் பிரார்த்தனையில் சேர்ப்பதில்லை. வாழை, மா, பலா போன்ற முக்கனிகளும் அந்த அந்தப் பருவத்தை ஒட்டிச் சேர்ப்பதுண்டு.

சமையலில் அரிசியோடு தேங்காய் சேர்த்த  பாயசம், அல்லது பருப்புப் பாயசம், தயிர்ப்பச்சடி, மாங்காய்ப் பச்சடி, வாழைக்காய்க் கறி அல்லது பொடிமாஸ், ஒரு பருப்பு உசிலி, ஒரு கூட்டு, கலந்த சாதம், சேனை வறுவல், வடை, அதிரசம் அல்லது போளி அல்லது சுய்யம்/சுகியம்/சுய்யன் அல்லது சொஜ்ஜி அப்பம், அன்று புதிதாகப் போடப்பட்ட ஊறுகாய் அல்லது தேங்காய்த் துவையல், கொத்துமல்லித் துவையல், கலந்த சாதம் ஒன்று, பருப்பு, நெய், பிட்லை, மோர்க்குழம்பு, ரசம், மோர் ஆகியன இடம் பெறும்.  எங்கள் புகுந்த வீட்டில் அன்றைய தினம் கறி வகைகளே செய்யக் கூடாது. எல்லாக் காய்களிலும் கூட்டு வகைகள் தான் செய்ய வேண்டும். தனிக்கூட்டு என்றதொரு புளிக்கலவையைச் செய்து வைத்துக் கொண்டு, காய்களை வேக வைத்து அதில் தனித்தனியாகப் போட்டுக் கலக்க வேண்டும்.  ஆகவே பிட்லை இருக்காது.  மோர்க்குழம்பு மட்டுமே.  இந்தத் தனிக்கூட்டு செய்முறையை என்னுடைய சாப்பிடலாம் வாங்க வலைப்பக்கத்தில் காணலாம்.  சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நல்ல நாள் மற்றும் கிழமைகள் பார்க்க வேண்டும். ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஏற்றதாக இருந்தாலும் அன்றைய தினம் யோகம், திதி போன்றவையும் நல்லதாக இருக்க வேண்டும்.  மாசாமாசம் வரும் கரிநாளாக இருக்கக் கூடாது.

21 comments:

  1. //ஆனால் பொதுவாக சுமங்கலிப் பிரார்த்தனை என்றால் சாமான்கள் கூட வீட்டில் ஏற்கெனவே வாங்கி வைத்திருப்பதைப் பயன்படுத்த மாட்டார்கள். தனியாகத் தான் வாங்குவது வழக்கம். சிராத்தம் அன்று எவ்வளவு சிரத்தையுடன் செய்கின்றார்களோ அதற்குச் சற்றும் குறையாமல் நடக்கும். ஆனால் சமையல் மட்டும் சிராத்த சமையலாக இல்லாமல் தேங்காய், துவரம் பருப்பு, மிளகாய், தனியா சேர்த்துச் செய்வார்கள். ஆனால் பொடியெல்லாம் வீட்டில் இருக்கும் பொடிவகைகளைப் பயன்படுத்த மாட்டார்கள். சில வீடுகளில் காய்களைக் கூட முதல் நாளே நறுக்கி வைக்கக் கூடாது. சுமங்கலிப் பிரார்த்தனை அன்றுதான் நறுக்க வேண்டும். அதோடு பாயசம் இனிப்புப் போன்றவற்றில் வெல்லமே சேர்ப்பார்கள். சர்க்கரை சேர்க்க மாட்டார்கள். காய்களும் முட்டைக்கோஸ், பீன்ஸ், காரட், முள்ளங்கி, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு போன்ற காய்களைத் தவிர்த்துவிடுவார்கள். //

    சுமங்கலிப்பிரார்த்தனை போளி, வடை திரட்டுப்பால், பானகம், நீர்மோர் இள்நீர் சுக்குப்பொடி நலங்கு மஞ்சள் போன்றவற்றுடன் அமர்க்கலமாக அல்லவா இருக்கும் ;)))))

    நினைத்தாலே இனிக்கிறதே !

    ReplyDelete

  2. இந்த விவரங்கள் நீங்களே பார்த்து அறிந்ததிலிருந்து மட்டும் சொல்கிறீர்களா, கேட்டும், படித்தும் சொல்கிறீர்களா? ஏகப்பட்ட விவரங்கள். வெல்லத்தில் என்ன மடி? சர்க்கரையில் என்ன அமடி?! மாட்டெலும்பு சமாச்சாரமா? என் மனைவி சென்ற ஒரு வீட்டுச் சுங்களிப் பிரார்த்தனையில் இரட்டை இல்லை போட்டு ஒரு புடைவை கொடுத்தார்கள்! (குறையாகச் சொல்லவில்லை. முறையைச் சொன்னேன்!)

    ReplyDelete
  3. வாங்க வைகோ சார், திரட்டுப்பால் எல்லா வீட்டிலேயும் இருக்கிறதில்லை. அதே போல் இளநீரும்! :))))

    ReplyDelete
  4. ஸ்ரீராம், பதிவிலேயே நான் பார்த்து அறிந்தவை என்று சொல்லி இருக்கேன். இந்தப் பூவாடைப் பொண்டுகள் மட்டும் பார்க்கக் கொடுத்து வைக்கலை! :)))

    வெல்லம் தான் நம் நாட்டில் பரம்பரையாகப் பயன்படுத்தி வந்த ஒன்று. சர்க்கரை பின்னால் வந்தது. ஆகவே இம்மாதிரி முக்கியமான விசேஷங்களில் வெல்லம் தான் சேர்ப்பார்கள். இப்போது கூடப்பிரசவம் ஆனவர்களுக்குச் செய்யும் மருந்தில் வெல்லம் அல்லது கருப்பட்டி தான் சேர்க்கப் படும். சர்க்கரைக்குத் தடா! :)))

    ReplyDelete
  5. அவங்க வீட்டில் ஒரு புடைவை தான் வழக்கமாக இருந்திருக்கும். இது குறித்து இன்னும் விரிவாக அடுத்த பதிவில் வரும். :))))

    ReplyDelete
  6. விவரங்கள் மலைக்க வைக்கின்றன...!

    ReplyDelete
  7. கீதாமா,
    எவ்வளவு விவரங்கள். அப்படியே நேரே ஒரு சுமங்கலிப் பிரார்த்தனை பார்ப்பது போல இருந்தது. பாட்டி வீடில் மங்கலிப் பொண்டுகள் என்பார்கள். இது திருமணம் பூர்த்தியான பிறகு செய்வது.
    புடவை உண்டு. இரட்டை இலை உண்டு.
    கண்ணாடி வைத்து அதற்கு நகைகள் பூட்டி , ஆத்து சுமங்கலிகளின் திருமாங்கல்யத்தையும் கழட்டி வைத்து
    ஐந்து இலைகளில் எல்லா அன்னங்களையும் பரிமாறி, பேர் சொல்லி அழைத்துக் கதவைச் சாத்திக் கொண்டு வந்துவிடுவார்கள்.
    பிறகு கைகளைத் தட்டி உள்ளே வரலாமான்னு கேட்டுக் கொண்டு எல்லோரும் நமஸ்காரம் செய்து

    பிறகு சாப்பிடுவார்கள்.
    மருதாணி மஞ்சள் என்று தாம்பூல வகையறாக்களும் ரவிக்கைத் துணிகளும் வழக்கம்.

    ReplyDelete
  8. அசர/திடுக்கிட வைத்த விவரங்கள்! படிக்கப் படிக்க அசூயை என்றாலும் எப்படித் தேடியெடுத்து எழுதினீர்கள் என்று வியந்து போகிறேன்.

    ReplyDelete
  9. சுமங்கலி பிரார்த்தனை பற்றி ஏகப்பட்ட தகவல்கள்....

    சுமங்கலிகளின் பெயர் சொல்லி அழைப்பார்கள்.... எங்க பொறந்தாத்து வழக்கப்படி ஒன்பது கஜப் புடவையை கொசுவி வைத்து அத்தைக்கு தான் கொடுப்பார்கள்...

    ReplyDelete
  10. வாங்க டிடி, இன்னும் பல விபரங்கள் இருக்கின்றன. :))))

    ReplyDelete
  11. வாங்க வல்லி, சுமங்கலிப் பிரார்த்தனை என்னும் மங்கலிப் பொண்டுகள் அவரவர் வீட்டு வழக்கப்படி திருமணத்துக்கு முன்னேயோ, பின்னேயோ செய்வார்கள். இது குறித்து அடுத்த பதிவில் வரும். :)))) இரட்டை இலை எல்லா வீடுகளிலும் கிடையாது.:)))

    ReplyDelete
  12. அப்பாதுரை, தேடி எல்லாம் எடுக்கலை. எல்லாம் மனதில் பதிந்த விஷயங்கள். ஆங்காங்கே கண்டவை, கேட்டவை, நண்பர்கள் பகிர்ந்து கொண்டவை என மனதில் இருந்த எண்ணங்களின் பகிர்வு. :)))))

    ReplyDelete
  13. வாங்க கோவை2தில்லி, இந்த அத்தைக்குக் கொடுப்பது குறித்தும் அடுத்த பதிவில் வரும். :))))

    ReplyDelete
  14. மனதில் பதிந்த விஷயங்களா! குட்னஸ்! எத்தனை விவரங்கள்!

    ReplyDelete
  15. ஏகப்பட்ட விவரங்கள்....

    தலையைச் சுற்றுகிறது!

    பார்த்த விஷயங்களை நினைவில் வைத்திருந்து எழுத உங்களிடமிருந்தும் துளசி டீச்சரிடமிருந்தும் தான் கற்றுக் கொள்ள வேண்டும்......

    ReplyDelete
  16. நம்ஊரில் இவ்வழக்கங்கள் இல்லை.

    எனக்கு இவை எல்லாம் புதிதாக இருக்கின்றது.

    ReplyDelete
  17. அப்பாதுரை, மனதில் எத்தனையோ பதிவுகள்!:))) அந்த அந்த நேரம் வரும்போது வெளிப்படும்.:)

    ReplyDelete
  18. வாங்க வெங்கட், கோயில்கள் செல்லும்போதும் கூட நான் தகவல்கள் சேகரித்தால் எழுதி வைச்சுக்கிறதில்லை. கேட்டு மனதில் பதியும் செய்திகளை மட்டுமே பகிர்ந்து கொள்வேன். சந்தேகமாய் இருந்தால் விட்டுடுவேன். :))))

    ReplyDelete
  19. வாங்க மாதேவி, இங்கே தமிழ்நாட்டில் பிராமணரல்லாத பல சமூகங்களில் சுமங்கலி பூஜை என்று செய்வார்கள். பார்த்திருக்கேன். முறை எப்படினு தெரியாது. சொல்லுவாங்க இன்னிக்குச் செய்தோம்னு.

    ReplyDelete
  20. நான் ஒரு முறை என் தோழி ஒருவரின் வீட்டுக் கல்யாணத்திற்கு முன் சுமங்கலிப் பிரார்த்தனைக்கு சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்கள் என்று போயிருந்தேன். சுமங்கலிகளுக்கு சிரார்த்த சாப்பாடு - பாகற்காய் குழம்பு, பயத்தம் பருப்பு பாயசம், வாழைக்காய் கறி - நாங்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் வீட்டிலிருந்த மற்றவர்களுக்கு அக்கார வடிசலுடன் சாப்பாடு!

    ReplyDelete
  21. வாங்க ரஞ்சனி, ரொம்ப தாமதமா வந்திருக்கீங்க! சத்திரத்திலே இடம் வசதியா இருக்கா? :)))

    நீங்க போனது பூவாடைப் பொண்டுகளா இருக்கும். அதுக்குத் தான் பொண்டுகளுக்குத் தனி சமையல், மத்தவங்களுக்குத் தனி சமையல். இதிலே சாப்பிடப்போகக் கூட ரொம்பவே ஆசாரமா இருக்கணும்னு சொல்லுவாங்க. சட்டுனு எல்லாரையும் சாப்பிடக் கூப்பிட்டுட மாட்டாங்க. சாதாரணமா சுமங்கலிகளாய் இறந்தவங்களோட சிராத்தம் முடிஞ்சு மறுநாள் வரும் பொண்டுகளுக்கே கொஞ்சம் பார்த்துத் தான் கூப்பிடுவாங்க. இதுக்கு இன்னமும் யோசிச்சுக் கூப்பிடுவாங்க. அன்னிக்கு அங்கே சாப்பிட்ட பின்னர் நாமும் விரதம் தான் இருக்கணும். :))))

    ReplyDelete