எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 26, 2013

நான் காற்று வாங்கவில்லை, கணினி கற்கச் சென்றேன்!

இப்போல்லாம் நிறையப் பேர் கணினி கத்துக் கொடுக்கறாங்க.  போதாததுக்கு எல்லாப் பத்திரிகைகளும் கணினி அறிவு பற்றிய செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.  நமக்கெல்லாம் அப்படி யாரும் கிடைக்கலை.  சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா, ஒரு மெயில் கொடுக்கக் கத்துக்கலாம்னு போனது தான். லோட்டஸ் னா எனக்குத் தாமரைனு தான் அர்த்தம் புரியும்.  ஜாவானா, பைக் நினைப்பிலே வரும். இப்படி இருக்கிறவ கிட்டேப் போய் ஜாவாவும், லோட்டஸும் படின்னா, யார் படிப்பாங்க!  அதானால் நான் ஸ்ட்ரிக்டா ஹிஹிஹி, கவனிக்கவும், ஸ்ட்ரிக்டா என்னோட கணினி ஆசிரியர் கிட்டே என்னோட தேவை என்னனு விளக்கிட்டேன். பையர் பரோடாவிலும், பொண்ணு அமெரிக்காவிலும் இருக்கிறதாலே அவங்களுக்கு ஆத்திர, அவசரத்துக்கு மெயில் கொடுக்கத் தெரிஞ்சாப் போதும்னு சொல்லிட்டேன். நமக்குத் தான் கூச்சமே கிடையாதே!  ஆசிரியர் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்திருப்பார்.  ஆனாலும் காட்டிக்கலை.



தலை எழுத்தை நொந்து கொண்டு அடிப்படை எப்படியும் தெரிஞ்சிருக்கணும்னு சொல்லி, இதான் சிபியுனு சொன்னார். அப்படின்னா? இதாங்க கம்ப்யூட்டரே.  ஓஹோ, அப்படியா? பொட்டி உள்ளே என்னெல்லாம் இருக்கும்?? அவர் மனசுக்குள்ளே இது என்ன துணிமணி வைக்கிற சூட்கேஸா, இல்லை மேக்கப் பொட்டியா, இவங்க கேட்கிறதைப் பார்த்தால் அப்படித் தான் நினைக்கறாங்க போலனு நினைப்பது பளிச்சென எனக்குத் தெரிய, ஹிஹி, இல்லை, அதுக்குள்ளே உள்ள மெகானிசம்னு ஆரம்பிக்க, அதெல்லாம் உங்களுக்கு எதுக்குங்க?  இதோ, இந்த ஸ்விட்சை ஆன் பண்ணினா இங்கே ஹோம் பேஜ் வரும்னு சொன்னார்.  நமக்குத் தான் கூச்ச சுபாவமே கிடையாதுனு உங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியும்,  ஆகவே,  ஹோம் பேஜ் இப்படித் தான் இருக்கணுமா?  அந்தக் கம்ப்யூட்டரில் வேறே மாதிரி இருக்கே! னு நான் கேட்க, அது எல்லாம் எப்படி வேணா வைச்சுக்கலாம்ங்க.  அவங்க அவங்க விருப்பத்துக்கு ஏத்தாப்போல் மாத்தி அமைச்சுக்கலாம்னு ஆரம்பிச்சார்.  துளிக்கூடக் கூச்ச சுபாவம் இல்லாமல் நான் அப்போ இதை மாத்திக்காட்டுங்களேன்னு நான் சொல்ல, அவரும் தலை எழுத்தை நொந்து கொண்டு டெஸ்க் டாப்பில் தெரிஞ்ச படத்தை மாத்தி வேறே படத்தைக் கொண்டு வந்தார்.  அந்த விளையாட்டு எனக்குப் பிடிச்சுப் போக நானும் விளையாடறேனேனு கேட்க, சரினு சொல்லிக் கணினி பாடு; உன்பாடுனு என்னையும் அதையும் தன்னந்தனியே விட்டுட்டுப் போயிட்டார்.

நானும் இரண்டையும் கொஞ்ச நேரம் மாத்தி, மாத்திப் போட்டுப் பார்த்துட்டு, அலுத்துப் போய், என் ஆசிரியரைக் கூப்பிட்டு, எனக்கு மெயில் கொடுக்கக் கத்துக் கொடுக்கறதாச் சொல்லிட்டுப் போயிட்டீங்களேனு கேட்டேன்.  ஹிஹிஹி, நமக்குத் தான் கூச்ச சுபாவமே கிடையாதே!  திருதிருவென விழித்த அவர், இன்னும் பேசிக்கே நீங்க கத்துக்கலையேனு ஆரம்பிச்சார்.  என்னங்க, நீங்க தானே சொல்லிக் கொடுக்கணும்!  என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களேனு நான் அவரைத் திருப்ப, பதில் சொல்ல முடியாமல் திணறின மனிதர், இன்னிக்கு ஒரு மணி நேரம் ஆயிடுச்சுங்க, நாளைக்கு வாங்க, பார்க்கலாம்னு சொல்ல, ஒண்ணுமே சொல்லிக் கொடுக்கலை, அதுக்குள்ளே ஒரு மணி நேரம் ஆயிடுச்சா? சரியாப் போச்சு போங்க, இப்படிச் சொல்லிக் கொடுத்தால் நான் எப்படிக் கத்துக்கறதுனு சொல்லிட்டு நாளைக்கு வரேன்னு அவரைப் பயமுறுத்திட்டு நடையைக் கட்டினேன்.  ஹிஹிஹி,இதுவும் கூச்ச சுபாவம் இல்லாமல் தான் சொன்னதாக்கும்.


 அன்னிக்குப் பூராப் பார்க்கிறவங்க கிட்டே எல்லாம் டிவி பெட்டியைக் காட்டிக் கம்ப்யூடரில் ஸ்க்ரீன் ஒண்ணு  இப்படித் தெரியறது பாருங்க அது ஒண்ணும் கம்ப்யூட்டர் இல்லையாக்கும்.  கீழே செவ்வக வடிவில் ஒரு பெட்டி இருக்குப் பாருங்க அதான் கம்ப்யூட்டர்.  அதை சிபியூனு சொல்லணும்.  அப்படினு சொல்லிட்டு இருந்தேன்.  ரங்க்ஸ் கிட்டேயும் அதே பாடம்.  அவர் சும்மா இருக்காம, சிபியுனா ஃபுல் ஃபார்ம் என்னனு கேட்டு வைக்க, அதைக் கேட்டுக்கலையேனு திகைச்ச நான்,  அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?  நான் தானே கம்ப்யூட்டரைக் கத்துக்கப் போறேன்.  நான் தெரிஞ்சுண்டாப் போதும்னு சொல்லிட்டுக் காஃபியையும், டிஃபனையும் கொடுத்து அவர் வாயைத் தாற்காலிகமா அடைச்சு வைச்சேன்.

மனசுக்குள்ளே நாளைக்கு சிபியூனா என்னனு கேட்டு வைச்சுக்கணும்னு குறிச்சுண்டேன்.  மறுநாளைக்குக் கரெக்டாப் பத்து மணிக்குப் போயிட்டோமுல்ல!  அங்கே போனால் முதல் நாள் இருந்தவர் இல்லை.  அவருக்கு அன்னிக்கு லீவாம். வேறொருத்தர் இருந்தார்.  நானும் கடவுளே, அவர் இல்லையேனு இன்னிக்குப் போயிடலாமானு யோசிக்கிறதுக்குள்ளே புதுசா இருக்கிறவர் என்ன மேடம், எனி ஹெல்ப்னு கேட்க, நானும் நான் காற்று வாங்க வரலை, ஒரு கணினி கற்க வந்தேன்னு சொல்ல, அவர் தன்னைப் பிரகாஷ்னு அறிமுகம் செய்து கொண்டு வாங்க, நேத்து எதிலே பண்ணினீங்க?  சிபியூ, மானிடர், எல்லாம் காட்டியாச்சா? அப்புறமா, எப்படி ஸ்டார்ட் பண்ணணும்னு சொல்லி இருப்பாங்களே, எங்கே ஸ்டார்ட் பண்ணிக் காட்டுங்கனு ஏற்கெனவே ஸ்டார்ட் செய்து வைச்சிருந்த கணினியை ஷட் டவுன் பண்ணிட்டு ஸ்டார்ட் பண்ணச் சொல்லிட்டார்.  இவர் நம்மைவிடக் கூச்ச சுபாவம் இல்லாதவரா இருப்பார் போலிருக்கே! போச்சு, போச்சு, நேத்து விளையாடின விளையாட்டை இன்னிக்கு விளையாட முடியாது போலிருக்கேனு மனசை நொந்து கொண்டு கம்ப்யூட்டரின் ஸ்விட்சை அழுத்தினேன்.  மானிடரில் வெளிச்சம் வர அதிலே ஸ்டார்ட் பட்டனைத் தேடணுமோனு நினைக்கிறதுக்குள்ளே கண்ணெதிரே ஸ்டார்ட் பட்டன் தெரிய ஆஹானு அது கிட்டே மெளசைக் கொண்டு போறதுக்குள்ளே அது என்னமோ நான் பிடிச்சுக் கூண்டில் அடைக்கப் போறேன்னு நினைச்சுட்டுச் சரியா வராமல் ஆரோ மார்க் எங்கெல்லாமோ நடனம் ஆடினது.   என்றாலும் கூச்ச சுபாவம் இல்லைங்கறதையும் நீங்க புரிஞ்சுக்கணும்.

மெளசைப் பிடிக்க வரலையானு பிரகாஷ் கேட்க, மெளசா எங்கேனு நான் துள்ள, அவர் இப்போ ஹிஹிஹிஹி.  நீங்க கையிலே பிடிச்சிருக்கீங்களே அதான் மேடம் மெளஸ்னு சொல்ல, ஒரு நிமிஷம் பயத்திலே கையை உதறப் போன நான் சுதாரிச்சுட்டு அசடு வழிந்தேன்.  ஹிஹி, இதுக்கு மெளஸ்னு பேரா? பொண்ணு இதெல்லாம் சொல்லவே இல்லையே! மெளஸ் இருக்கும்னு!  முன்னாடியே தெரிஞ்சா பயப்படாம இருந்திருக்கலாமேனு பல்லைக் கடிச்சுட்டு, மெளசைக் கெட்டியாப் பிடிக்கலைனா ஓடிடாதோனு கேட்டு வைச்சேன்.  நல்லா ஹாஸ்யம் பண்ணறீங்க மேடம்னு சொல்லிட்டு, (ஹாஸ்யமா அது?  நான் நிஜம்மாத்தான் கேட்டேன்னு தெரியலை அவருக்கு, பாவம்) மெளசை எப்படிப் பிடிக்கணும்னு சொல்லிக் கொடுத்து ஸ்டார்ட் பண்ணச் சொன்னார்.  அப்போத் தான் சிபியூன்னா என்னனு கேட்கவில்லையேனு தோண, அவரிடம் அதைக் கேட்க, என்ன, நேத்திக்கு அப்போ என்ன சொல்லிக் கொடுத்தார் உங்களுக்குனு கேட்க, ஹிஹிஹி, நேத்திக்கு விளையாடிட்டு இருந்தேன்னு சொல்லவா முடியும்.  நான் திருதிரு.  சிபியூன்னா சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் அப்படினு அழுத்தம் திருத்தமாச் சொல்ல மனதுக்குள்ளே நயாகரா.  ஆகா, கம்ப்யூட்டர் பாஷையிலே ஒண்ணு தெரிஞ்சுடுச்சே!  ஹையா, ஜாலி!  அப்புறமா மானிடரைக் காட்டி, இது மானிடர், எல்லாரும் நினைக்கறாப்போல் இது கம்ப்யூட்டர் இல்லைனு சொல்ல, அதான் எனக்குத் தெரியுமேனு சொல்ல வாயைத் திறந்துட்டு அப்புறமா அடக்கிட்டேன்.  இது ஒண்ணும் கூச்ச சுபாவத்தினாலே இல்லையாக்கும்.  ஆசிரியர் எதிரே எதிர்த்துப் பேசக் கூடாதுனு மரியாதை! அவர் கேட்காமலேயே இது மெளஸ்னு சொல்லிட்டு, தட்டச்சற கீ போர்டைத் தான் ஏற்கெனவே டைப்பிங் கத்துண்டப்போ பார்த்திருக்கோமே, இது கீ போர்ட் அப்படினு அவர் கேட்காம நானாச் சொல்லிட்டு இல்லாத காலரைத் தூக்கி விட்டுண்டேன்.

இதுக்குள்ளே கணினி ஸ்டார்ட் ஆகி, இணைய இணைப்புக்குப் பாஸ்வேர்ட் கேட்டது.  அப்போல்லாம் ப்ரவுசிங் சென்டரில் கூட டயல் அப் தான்.  உடனே நம்பர் போடச் சொல்லி ஏதோ வர, இருங்க நான் கனெக்ட் பண்ணித் தரேன்னு சொல்லி அவர் கனெக்ட் பண்ணினார்.  இணையம் விரிந்தது.  கூடவே என் கனவுகளும்.

24 comments:

  1. //என்னங்க, நீங்க தானே சொல்லிக் கொடுக்கணும்! என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களேனு நான் அவரைத் திருப்ப, பதில் சொல்ல முடியாமல் திணறின மனிதர், இன்னிக்கு ஒரு மணி நேரம் ஆயிடுச்சுங்க, நாளைக்கு வாங்க, பார்க்கலாம்னு சொல்ல, ஒண்ணுமே சொல்லிக் கொடுக்கலை, அதுக்குள்ளே ஒரு மணி நேரம் ஆயிடுச்சா? சரியாப் போச்சு போங்க, இப்படிச் சொல்லிக் கொடுத்தால் நான் எப்படிக் கத்துக்கறதுனு சொல்லிட்டு நாளைக்கு வரேன்னு அவரைப் பயமுறுத்திட்டு நடையைக் கட்டினேன். //

    ;)))))

    அருமையாக அனுபவங்களை எழுதி அசத்திட்டீங்கோ. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. ஹா... ஹா... சிரிச்சி மாளலை... அனுபவம் மிகவும் சுவாரஸ்யம்... தொடரும் இல்லையா...?

    ReplyDelete
  3. உம். அப்புறம்? பதிவுக்கு ஊடே உள்ள கார்ட்டூன்கள் நன்றாக உள்ளன. (கிர்ர்ர்ர் - வேண்டாம். பதிவும் நல்லா இருக்கு!)

    ReplyDelete
  4. வணக்கம் !
    தங்களுடைய தளத்தை இன்றய வலைச்சரத்தில் அறிமுகம் செய்து
    வைத்துள்ளேன் .இங்கு உங்களையும் வருக வருகவே வரவேற்கின்றேன் .
    http://blogintamil.blogspot.ch/2013/07/4.html

    ReplyDelete
  5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/4.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  6. //இணையம் விரிந்தது. கூடவே என் கனவுகளும்.//

    கனவுகளுக்கோ ஆதியும் அந்தமும் கிடையாது.
    -- யாரோ

    ReplyDelete
  7. கூச்சத்துக்கே கூச்சம் வருமளவு சொல்றீங்களே...! :)))

    ஸ்க்ரீன் மாத்தற விளையாட்டுல பொழுது போனது சிரிப்பு. நல்லவேளை... அப்போதே ஏதும் கேம் விளையாட கற்றுக் கொடுக்கவில்லை!

    ReplyDelete


  8. 'காற்று வாங்கவில்லை; கணணி கற்கச் சென்றேன்!'அட்டகாசமான ஆரம்பம்!

    பாவம், உங்கள சொல்லல, மொத நாள் வந்த ஆசிரியரை சொன்னேன்.

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - அடுத்தநாள் நீங்க மாட்டிகிட்டீங்களா?

    நகைச்சுவையுடன் கணணி கற்று வந்த அனுபவத்தை சொல்ல ஆரம்பித்திருக்கிறீர்கள்! ரொம்பவும் சிரித்து ரசித்து மகிழ்ந்தேன்.

    //I want to be the same what I am now.//உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாக சொல்பவர் நீங்கள் என்று புரிகிறது!

    உங்கள் கனவுகள் எல்லாம் நிறைவேறட்டும்! வாழ்த்துக்கள்.
    அடுத்த பகுதியைப் படிக்கக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. ஸ்ட்ரிக்டா என்னோட கணினி ஆசிரியர் கிட்டே என்னோட தேவை என்னனு விளக்கிட்டேன். பையர் பரோடாவிலும், பொண்ணு அமெரிக்காவிலும் இருக்கிறதாலே அவங்களுக்கு ஆத்திர, அவசரத்துக்கு மெயில் கொடுக்கத் தெரிஞ்சாப் போதும்னு சொல்லிட்டேன்.

    வளவள என்று ஏட்டுசுரைக்காயாய் படிக்காமல் தேவையானதை மட்டும் கற்றுக்கொண்டது அருமை..!

    ReplyDelete
  10. வாங்க வைகோ சார், நன்றி. :))))))

    ReplyDelete
  11. வாங்க டிடி, அதான் முதல்லேயே பயமுறுத்திட்டேனே, எத்தனை பதிவு வருமோனு! எதுக்கும் தயாரா இருந்துக்கோங்க! :))))

    ReplyDelete
  12. வாங்க கெளதமன் சார், படங்கள் எல்லாம் கூகிளாண்டவர் தயவு. :))))

    ReplyDelete
  13. டிடி, வலைச்சரம் போய்ப் பார்த்துட்டேன்.

    ReplyDelete
  14. அம்பாள் அடியாள், அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  15. ஜீவி சார், உண்மை தான். ஆனால் இது முழிச்சுண்டே காணும் அல்நாஷர் கனவு. :)))))

    ReplyDelete
  16. ஸ்ரீராம் வாங்க, ஆமாம் ஸ்க்ரீன்னு சொல்லி இருக்கணும் இல்லையா? ஏதோ ஞாபகத்திலே ஹோம் பேஜ்னு சொல்லிட்டேன். :))) ஹிஹி, அப்படியே இருந்துட்டுப் போகட்டும்.

    கேம் விளையாடச் சொல்லலையா? சரியாப் போச்சு போங்க, அடுத்த பதிவிலே பாருங்க! :)))))

    ReplyDelete
  17. வாங்க ரஞ்சனி, இதுக்கு முந்திய பதிவையும் படிச்சுடுங்க, ஹிஹிஹி, சுய விளம்பரம், நானே கொடுக்கலைனால் எப்படி?? வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  18. வாங்க ராஜராஜேஸ்வரி, எங்கே நீங்க கல்யாணத்துக்கு வரலையேனு நினைச்சுட்டு இருந்தேன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க. :))))

    ReplyDelete
  19. கண்ணனின் லீலைகளைவிட கீதாவின் லீலைகள் இன்னும் நன்றாக இருக்கிறது. நாங்கள் செய்தபாக்கியம் நீங்கள் கணினி கற்றது. வெகு சுவாரஸ்யம் மா.

    ReplyDelete
  20. வாங்க வல்லி, பதிவெழுத ஆரம்பிச்சப்போ நடந்ததை விட இது ஒண்ணுமே இல்லை. அப்போ நடந்தவை எல்லாம் இன்னும் தமாஷ்! :))))))

    ReplyDelete
  21. இன்னிக்கு நினைத்தாலும் உங்களுக்கு சிரிப்பு வரலாம்! :) இனிய நினைவுகள் தான்....

    தொடரட்டும் கணினி அனுபவங்கள்.....

    கணினி பற்றிய கார்டூன்களை ஆங்காங்கே இணைத்திருப்பது நன்று.....

    ReplyDelete
  22. ஸ்ட்ரிக்டா என்னோட கணினி ஆசிரியர் கிட்டே என்னோட தேவை என்னனு விளக்கிட்டேன். பையர் பரோடாவிலும், பொண்ணு அமெரிக்காவிலும் இருக்கிறதாலே அவங்களுக்கு ஆத்திர, அவசரத்துக்கு மெயில் கொடுக்கத் தெரிஞ்சாப் போதும்னு சொல்லிட்டேன்.//
    நானும் இந்த அவசியத்திற்கு தான் கணினி கற்றுக் கொண்டது என்மகள், மகனிடம், தொலைபேசியிலும், பிறகு கணினி மூலமாகவும்.
    உங்கள் அனுவங்களை அழகாய் நகைச்சுவையாக சொல்லி சென்றவிதம் அருமை.

    ReplyDelete
  23. மிகுந்த சுவாரஸ்யம்.

    ReplyDelete
  24. கணினியுடன் விளையாடிய அனுபவம் அருமை...

    ReplyDelete