399.
நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே.
முன்பெல்லாம் தாலி அல்லது திருமாங்கல்யம் என்பது இல்லை என்றே கூறுகின்றனர். இது எப்போது ஆரம்பித்தது என்று கூறமுடியவில்லை என்றாலும் ஆரம்பித்த காலத்தில் தால பத்ரம் என்னப்படும் பனை ஓலையையே ஒரு அடையாளமாகக் கட்ட ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. தாலம் என்ற பனை ஓலையினால் செய்ததையே கட்டி வந்தவர்கள் அது அடிக்கடி பழுது ஆனதால் நிரந்தரமாக இருக்க உலோகங்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததாகவும், பின்னர் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கியதாகவும் தெரியவருகிறது. ஆனால் தாலியின் அடையாளம் பொன்னோ, வெள்ளியோ அல்ல. வெறும் ஒரு மஞ்சள்கிழங்கை எடுத்துக் கயிற்றால் முடிச்சுப் போட்டுவிட்டுக் கழுத்தில் கட்டினாலே அதுவும் தாலி தான். மஞ்சளைக் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சளை ஏற்றி இருப்பார்கள். தாலியின் உண்மையான அர்த்தமே மஞ்சளைக் கயிற்றில் முடிந்து கட்டுவதில் தான் உள்ளதே தவிர, எத்தனை பவுன் தங்கம் அல்லது செலவு ஆனது என்பதில் இல்லை. சங்க காலத்தில் மகளிர் அணிந்த தாலியை வேப்பம்பழம் போல் இருந்ததால் இதைப் புதுநாண் என்று சொன்னதாகக் குறுந்தொகை 67 ஆம் பாடல் குறிப்பிடுகிறது.
உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல ஒருகா சேய்க்கும்
நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே.
தாலி அணிந்த பெண்டிர் "வாலிழை மகளிர்" என வெள்ளி வீதியார் என்னும் புலவரால் குறிப்பிடப் படுகிறார். குறுந்தொகை 386
வெண்மணல் விரிந்த வீததை கானல்
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே
வாலிழை மகளிர் விழவணிக் கூட்டும்
மாலையோ அறிவேன் மன்னே மாலை
நிலம்பரந் தன்ன புன்கணொடு
புலம்புடைத் தாகுதல் அறியேன் யானே.
சிலப்பதிகாரத்திலும் கோவலன் கண்ணகிக்குத் தாலி கட்டியதாயும் தெரிய வருகிறது.
நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர்
மறுவின் மங்கல அணியே அன்றியும்
பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்
ஆகவே தாலி கட்டும் வழக்கம் இருந்திருந்திருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. ஆனாலும் இதற்கு முக்கியத்துவம் அவ்வளவாய் இல்லை என்றே சொல்லலாம். அது குறித்துப் பின்னர் பார்க்கலாம். முற்காலத்துத் திருமணங்களிலும் கூட தாலி கட்டுவதை ஒரு அடையாளமாகவே கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அந்தத் தாலியைச் செய்யும் போது நல்ல நாள் பார்த்தே செய்திருக்கின்றனர். தாலி எனப்படும் திருமங்கல்யம் பெண் வீட்டிலும் ஒன்று, பிள்ளை வீட்டிலும் ஒன்று எனப் போடுவார்கள். சிலருக்கு ஒரே திருமங்கல்யம் தான் என எண்ணுகிறேன். என்றாலும் இதற்குப் பொன் உருக்குவதற்கு நல்ல நாள் பார்த்தே வீட்டுக்கு ஆசாரியை வரவழைத்துப் புத்தம் புதிய பொற்காசைக் கொடுத்து வீட்டில் வைத்து உருக்குவார்கள். அநேகமாகப் பிள்ளை வீட்டிலேயே நடக்கும் இந்தச் சடங்கு இப்போதெல்லாம் பெண் வீட்டில் கூட நடப்பதில்லை. நகைக்கடையில் நல்ல நாள் பார்த்து ஆர்டர் கொடுப்பதோடு முடிகிறது. ஆனாலும் பொன்னுருக்குவது என்பது என் கல்யாணத்தில் எங்கள் வீட்டில் வைத்து நடந்தது.
மணமகன் வீட்டில் நடத்துவது என்றால் ஆசாரிகள் தங்கத்தை உருக்கும் அடுப்புடன் வருவார். அதில் உமியோடு சிரட்டைக்கரியும் போடப் பட்டிருக்கும். கல்யாணப் பெண் அன்று மணமகன் வீட்டிற்குச் செல்ல மாட்டாள். ஆனால் பெண்ணின் உறவினர்களில் முக்கியமானவர்கள் கலந்து கொள்வார்கள். இதற்கும் பெண் வீட்டிலிருந்து சீர் கொடுப்பதுண்டு. ஏதேனும் இனிப்பு வகை கொண்டு போவார்கள். மணமகன் வீட்டு வாசலில் அல்லது பொன்னுருக்குதல் நடைபெறும் இடத்தில் நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்ச் செம்பு, குங்குமம், சந்தனம், தேங்காய், மாவிலைக் கொத்து, வெற்றிலை, பாக்கு, பழ வகைகள், மஞ்சள் கிழங்கு, தேசிக்காய் அறுகம்புல், புஷ்பவகைகள், ஒரு சட்டியில் நீர், விபூதி, குங்குமம், மஞ்சள் பொடி பிள்ளையார் பிடிக்க, சாம்பிராணி, கற்பூரம், மணி போன்றவை முக்கியம் ஆகும்.
பொன்னுருக்குவதற்காகப் புத்தம்புதிய தங்க நாணயம் வாங்கி வைத்திருப்பார்கள். அவரவர் குல வழக்கப்படி குலதெய்வத்தின் காலடியில் வைத்து எடுத்து வருவதும் உண்டு. அதைப் பொன்னுருக்கும் நாள் வரை பூஜை அறையில் வைத்திருப்போரும் உண்டு. பொன்னுருக்கும் நாளன்று நல்ல சுமங்கலியை அழைத்து, உபசாரங்கள் செய்து அந்தப் பொன்னை எடுத்து மணமகனிடம் கொடுப்பார்கள். மணமகன் அதை ஆசாரியிடம் கொடுப்பார். ஆசாரி பிள்ளையார் பிடித்து விளக்கு ஏற்றி வைத்து, தூபதீபம் காட்டி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் உடைத்து நிவேதனம் செய்து கற்பூரம் காட்டுவார். பின்னர் கடவுளை வேண்டிக் கொண்டு பொன்னை உருக்குவார். அது உருண்டையாக வரும். அதன் பின்னர் பிள்ளைக்கு மாமா இருந்தால் அவர் மீண்டும் தேங்காய் உடைத்து வழிபட்ட பின்னர் அந்தத் தேங்காய்த் தண்ணீரை விட்டு பொன்னுருக்கிய தணலை அணைப்பார். ஆசாரியார் அந்த உருண்டைப்பொன்னை எடுத்து வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள், தேசிக்காய் வைத்துப் பிள்ளையிடம் கொடுக்க அதை சபையினருக்குக் காட்டி விட்டு மணமகன் மீண்டும் ஆசாரியிடம் கொடுப்பார். ஆசாரியும் அதை வாங்கிக் கொண்டு சின்ன உளியால் ஒரு அடி அடித்து அதன் மேல் சந்தனம், குங்குமம் வைத்துப் பெற்றுக் கொள்வார். பின்னர் ஆசாரிக்குத் தக்க மரியாதைகள் செய்யப்படும். வந்திருப்போர் அனைவருக்கும் விருந்துபசாரம் நடைபெறும். இந்த விருந்துச் சாப்பாடு உள்ளூரில் இருந்தால் மணமகளுக்கும் கொடுத்து அனுப்பும் வழக்கம் உண்டு.
என் கல்யாணத்தில் இவை எதுவும் நடைபெறவில்லை எனினும் நல்ல நாள் பார்த்துத் தங்க நாணயம் வாங்கிக் கொடுத்துப் பொன்னுருக்குதல் நடந்தது. ஆசாரியை வீட்டுக்கு வரவழைத்துப் பொன்னைக் கொடுத்துத் தாலி செய்யச் சொல்லிக் கொடுத்தார்கள். அன்று வீட்டில் வடை, பாயசத்துடன் விருந்தும் இருந்தது. முன்பெல்லாம் இந்தப் பொன்னுருக்கும் நாளன்றே முஹூர்த்தக்காலும் நட்டதாகத் தெரிய வருகிறது. இவை இரண்டும் நடந்த பின்னரே திருமணத்திற்கான பலகாரங்களைச் செய்ததாகவும் தெரியவருகிறது. இதன் பின்னர் மணமகனும், மணமகளும் திருமணம் நாள் வரை ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்பது சம்பிரதாயம்.
குறுந்தொகை பாடல்களுடன் சுருக்கமான விளக்கம்... பொன்னுருக்குவது - மறந்து போன ஒன்று... முடிவில் சொன்ன சம்பிரதாயமும்...!
ReplyDeleteவிளக்கங்களுக்கு நன்றி...
//வந்திருப்போர் அனைவருக்கும் விருந்துபசாரம் நடைபெறும். இந்த விருந்துச் சாப்பாடு உள்ளூரில் இருந்தால் மணமகளுக்கும் கொடுத்து அனுப்பும் வழக்கம் உண்டு.
ReplyDeleteஎன் கல்யாணத்தில் இவை எதுவும் நடைபெறவில்லை எனினும் நல்ல நாள் பார்த்துத் தங்க நாணயம் வாங்கிக் கொடுத்துப் பொன்னுருக்குதல் நடந்தது. ஆசாரியை வீட்டுக்கு வரவழைத்துப் பொன்னைக் கொடுத்துத் தாலி செய்யச் சொல்லிக் கொடுத்தார்கள். அன்று வீட்டில் வடை, பாயசத்துடன் விருந்தும் இருந்தது. //
அருமையான மலரும் நினைவுகள். நல்லதொரு [பொன்] உருக்கமான பதிவுக்கு நன்றிகள்.
அர்த்தமுள்ள சடங்குகள்..!
ReplyDeleteசில குடும்பங்களில் மாப்பிள்ளை வீட்டில் திருமணம் நடக்கும் வழக்கம் இருக்கிறது. என் நண்பர் வீட்டில் இது போல நடந்து, நான் கேட்டபோது 'எங்கள் வழக்கம்' என்றார்.
ReplyDeleteமணமகனும் மணமகளும் திருமணநாள் வரை ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்பது பல 'பின்விளைவுகளை'த் தடுக்கும்!
அருமை! இலக்கிய எடுத்துக்காட்டுகளை எடுத்துக்காட்டி அசத்திய அசத்தல் வேறையா?.. மனசில் மழை பெய்தது.
ReplyDeleteஆனால் இந்த தொகுப்பின் இறுதிப் பகுதியை நோக்கி விரைகிற வேகம் தெரிந்தது. ஆம் ஐ கரெக்ட்?..
ReplyDeleteஇந்தப் பதிவுகளின் தொகுப்பின் மூலம் பல்வேறு வழக்கொழிந்துபோன சடங்குகள் பற்றித் தெரிய வருகிறது.சடங்குகள் இடத்துக்கு இடம்
ஜாதிக்கு ஜாதி மாறுபடுகின்றன. ஆந்திராவில் திருமணச் சடங்குகள் இரவில் நடைபெறக் கண்டிருக்கிறேன்.தமிழ்க் குடும்பங்களிலும் தாலியின் அமைப்பு ஒவ்வொரு வழக்கப்படி செய்யப் ப்டுகிறது.
பொன்னுறுக்குதல் - என தாலி செய்யவே தனியாக ஒரு சடங்கு....
ReplyDeleteஇலக்கியத்திலிருந்து பாடல்கள் எடுத்துக்காட்டி அழகான விளக்கம் சொன்னது நன்று.
தொடர்கிறேன்.
வாங்க டிடி, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க வைகோ சார், மறந்து போன கலாசாரத்தை நினைவு கூரவே இந்தப் பதிவுகள். :))))
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, பதிவுகளின் நோக்கமே அதானே, திருமணச் சடங்குகள் அர்த்தமுள்ளவை என்று சுட்டிக் காட்டுவதே இதன் முக்கிய நோக்கம். :))))
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், ஆமாம், மாப்பிள்ளை வீட்டிலேயும் திருமணங்கள் நடக்கும் தான். அதுவும் தெரியும். தொலைக்காட்சித் தொடர்களில் நடக்கும் திருமணங்களிலேயே பிள்ளை வீடுகளில் திருமணம் நடப்பதாகத் தான் காட்டுகின்றனர். மதுரைப் பக்கம் வைசியச் செட்டிமார்களிலும் பிள்ளை வீட்டில் திருமணம் நடப்பது உண்டு. பெண் அழைப்பு என்று பிரமாதமாக அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டி/அல்லது திறந்த காரில் பெண்ணைத் தோழிகளோடு ஊர்வலமாக அழைத்து வருவார்கள். :))))
ReplyDeleteவாங்க ஜீவி சார், அதுக்குள்ளே இறுதிப் பகுதியா? ம்ஹூம், இது இன்னும் எத்தனை பதிவுகள் வரும்னு என்னாலே சொல்ல முடியலை. போகப் போகப் பார்க்கலாம். :)))))
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், தமிழ்நாட்டிலும் இரவுகளில் திருமணம் நடந்திருக்கின்றன. பின்னர் தான் காலை வேளையில் மாறி இருக்கிறது. இது குறித்தும் எழுதணும்.:)))) வட மாநிலங்களில் இப்போதும் இரவு நேரங்களில் தான் திருமணமே நடைபெறும்.
ReplyDelete//பொன்னுறுக்குதல் - //
ReplyDeleteவாங்க வெங்கட், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பொன்னுருக்குதல்/ இம்பொசிஷன் எழுதுங்க லக்ஷத்திப் பத்தாயிரம் தரம். ...
:)))))))
பொன் உருக்குவதற்கு நல்ல நாள் பார்த்தே வீட்டுக்கு ஆசாரியை வரவழைத்துப் புத்தம் புதிய பொற்காசைக் கொடுத்து வீட்டில் வைத்து உருக்குவார்கள். //
ReplyDeleteஎங்கள் வீடுகளில் இன்றும் இந்த பழக்கம் உண்டு. என் மகன் திருமணத்திற்கு எங்கள் வீட்டில் பொன் உருக்கும் விழா நடை பெற்றது.
மாப்பிள்ளை வீட்டிலும் திருமணமா! பொன் உருக்கும் விழா பற்றியும் தாலி பற்றி பாடல்களிலிருந்து குறிப்பு கொடுத்ததற்கும் நன்றி மாமி.
ReplyDeleteநீங்கள் கூறியவழக்கம் போல்தான் முன்பு இங்கும் மாப்பிள்ளை வீட்டில் பொன்உருக்கி செய்வார்கள்.
ReplyDelete