எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 12, 2015

திருப்பாவைக் கோலங்கள்!

பாடல் 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

காட்டைக் குறிக்கும் விதமான செடிகொடிகள், பூக்கள், பறவைகள் நிறைந்த கோலம் போடலாம்.


   

கண்ணனை இங்கே குறைவொன்றும் இல்லாத கோவிந்தா என அழைக்கிறாள் ஆண்டாள்.  அதோடு உன்னை நான் சிறுபேர் சொல்லி அழைத்ததால் கோபம் கொள்ளாதே என்றும் கூறுகிறாள்.  நாம் அனைவருமே ஆண்டவனைப் பெயர் சொல்லி அழைப்பதோடு , "என்னடா, வாடா, போடா," என்றும் அழைக்கிறோம்.  சில சமயம் உரிமையாகச் சண்டையும் போடுவோம்.  அப்படித் தான் இங்கே ஆண்டாளும் சொல்கிறாள்.

கண்ணன் அனைத்திற்கும் சாக்ஷி பூதமாக நிற்கிறான்.  அப்படி இருந்தும் நாம் பாவங்கள் செய்கிறோமே என்றால், அவன் இருப்பை நாம் நினைப்பதில்லை.  சூதாட்டத்தின் போது துரியோதனன் மிக சாமர்த்தியமாக நான் பணயம் வைக்கிறேன். ஆனால் என் இடத்தில் என் மாமா ஷகுனி ஆடுவார் எனச் சொல்கிறான்.

யுதிஷ்டிரனோ எனில் கண்ணனுக்கு நாம் சூதாடுவது தெரியக் கூடாது என்றே எண்ணினான்.  அவன் மட்டும் நாமும் பணயம் மட்டும் வைக்கலாம், நம்மிடத்தில் கண்ணன் ஆடட்டும் என நினைத்து அவனை அழைத்திருந்தான் எனில்! மஹாபாரத யுத்தமே நடந்திருக்காது அல்லவா?  கண்ணனை மீறி ஷகுனியால் வென்றிருக்க இயலுமா?  அவன் தான் அப்படி என்றால் அவன் சகோதரர்களும் தங்கள் வீரத்தையும், தங்கள் சாமர்த்தியத்தையுமே நினைத்தனர்.  திரௌபதியும் கூட கண்ணனின் இருப்பை உணராமல் முதலில் அனைவருடனும் வாதம் புரிந்தாள்.  அவளைத் துகிலுரியச் செய்த துஷ்சாசனன் செயல் அத்து மீறிப் போகும்போது தான் கண்ணன் நினைப்பே அவளுக்கு வந்தது.  கண்ணா, நீயே சரணம் எனச் சரணாகதி அடைந்தாள்.  அவனும் வந்தான்.

நாமும் இப்படித் தான் நடந்து கொள்கிறோம்.  நம் அருகிலே நின்றுகொண்டு நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் பெருமானை மறந்துவிட்டு நாம் செய்ததாக நினைக்கிறோம்.  அந்த ஆணவம் மறைய வேண்டும்.  அனைத்தும் அவன் செயலே என்பதை உணர வேண்டும். அவனே கதி எனச் சரணடைய வேண்டும்.   நம் உடல், மனம் போன்றவை நன்றாக இருக்கையிலேயே அவனைச் சரணடைந்தால் வேண்டிய சமயத்துக்கு அவன் வருவான்.

கீதையில் கண்ணன் அர்ஜுனனிடம் கூறியதே இந்தப் பாடலின் உட்பொருள்.  அனைத்து சாதனங்களையும் விட்டுவிட்டு கண்ணனைச் சரணடைந்தால் அவன் உரிய சமயங்களில் வந்து அவற்றின் பலனை நமக்குக் கொடுப்பான். அவன் இருக்கையில் நமக்குக் கவலை ஏன்?

பாடல் 29

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

கண்ணனோடு ஐக்கியம் அடைவதை இங்கே சொல்வதால் இருதய கமலம் கோலம் போடலாம்.  எனினும் வாசலில் அனைவரும் மிதிக்கும் இடத்தில் பலரும் போடத் தயங்குவார்கள் என்பதால் வீட்டில் பூஜையறையில் போடலாம்.
  

வாசலில் மேலே ஏழு புள்ளி, ஏழு வரிசையில் கொடுத்திருக்கும் கோலம் போடலாம்.


தாமரைப்பூக்கள் கொடியோடு வரைந்து வண்ணம் தீட்டலாம்.

இந்தப் பாடலின் பொருளாவது:  கண்ணனின் பொற்பாதங்களை வணங்க வந்திருக்கும் காரணம் என்னவெனில் மாடுகளை மேய்க்கும் குலத்தில் வளர்ந்த நீ, நாங்கள் செய்யும் சிறு விரதத்தை ஏற்றுக் கொள்வாய்!  உன்னை ஆராதித்து நாங்கள் செய்து வந்த இந்தச் சின்ன விரதத்தைக் கண்டு கொள்ளாமல் போய்விடாதே! உன்னுடைய பரிசுகளான பாடகம், சூடகம் போன்ற பொருட்களுக்காக மட்டும் நாங்கள் விரதம் மேற்கொள்ளவில்லை.  இந்தப் பிறவி மட்டுமின்றி இனி வரப் போகும் பிறவிகளிலும் நாங்கள் உன்னை மறக்காமல் உனக்கு உறவினர்களாகவே பிறக்க வேண்டும்.  உனக்கே நாங்கள் எங்கள் தொண்டுகளைச் செய்து வருவோம். கண்ணா!  எங்களை உன் உறவினர்களாக ஏற்றுக் கொண்டு உன்னோடு எங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு எங்களிடம் இருக்கும் மற்ற உலக ஆசைகளை அடியோடு அழித்து ஒழித்துவிடுவாய்!

பெருமானின் திருவடிகளையே அடைக்கலம் எனச் சரணாகதி அடைந்தோர்க்கு முக்தி நிச்சயம் என்பதே இந்தப் பாடலின் உட்பொருள்!

14 comments:

  1. விளக்கம் அருமை அம்மா...

    ஆணவம் என்பதே இருக்கக் கூடாது....

    ReplyDelete
    Replies
    1. ஆம் டிடி, "நான்" மறைய வேண்டும். ஆனால் அதான் முதலில் தலை தூக்குகிறது! :)

      Delete
  2. இம்மாதிரி எல்லாம் எழுதும்போது நான் என்ன கருத்திட முடியும்.?பாடலுடன் கோல அழகையும் ரசிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மனதில் தோன்றுவதைத் தாராளமாய் எழுதலாம் ஐயா. ரசனைக்கு நன்றி.

      Delete
  3. கண்ணனின் இருப்பை உணராமல் அல்லது மதிக்காமல் சூதாடினார்கள் என்றாலும் விதிப்படிதானே நடக்கும்?

    மஹாபாரத யுத்தம் நடக்கவேண்டும் என்று விதித்திருப்பதை எப்படி மாற்ற முடியும்? ஆடியவனும் அவனே... ஆட வைத்தவனும் அவனே..பகடியும் அவனே...

    :)))))))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதையும் கண்ணனே சொல்லி விட்டான் ஶ்ரீராம். :)

      Delete
  4. அருமையான விளக்கம்! பாடலுக்கேற்ற கோலங்களை பகிர்வது மிகவும் சிறப்பு!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சுரேஷ்.

      Delete
  5. நல்ல விளக்கம். கூடவே கோலங்களும் அழகு!

    ReplyDelete
  6. விளக்கங்கள் பரவசமூட்டுகின்றன. கோலங்கள் தேர்வும் அருமை!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க பார்வதி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  7. கோலங்களும் பாடல் விளக்கமும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு!

      Delete