எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 12, 2015

ஒத்தக்கல் மண்டபத்தில் நமஸ்கரிக்கான் பாடில்லா!

அந்தப் பகுதியே மாளிகை இருக்கும் பகுதி என்றும் ஒரு சில அக்ரஹாரங்கள் சின்னச் சின்னச் சந்துகளில் இருப்பதாகவும் பின்னர் தெரிந்து கொண்டோம். மாளிகையைச் சேர்ந்த கல்யாண மண்டபத்தில் தான் சஷ்டிஅப்த பூர்த்தி நடந்து கொண்டிருந்தது. வித்தியாசமான அமைப்போடு கூடிய மண்டபம். நட்ட நடுவில் சில படிகள் மேலே ஏறிச் சென்றால் நடு மண்டபத்தில் தம்பதிகள், வைதிகர்கள் என அமர்ந்திருந்தனர். சுற்றிக் கீழே உள்ள தாழ்வாரத்தில் நாற்காலிகள் போட்டு விருந்தினர்கள் அமர வசதி. யாரும், யாரையும் மறைக்க மாட்டார்கள். நன்றாய்ப் பார்க்கலாம் என்பதோடு சுற்றி வர வெட்டவெளியாகவும் தோட்டமாகவும் இருந்ததால் ஹோமப் புகையும் மூச்சை அடைக்கவில்லை. போனதும் என் தம்பி தான் எங்களைப் பார்த்தார். வரவேற்று அமர வைத்துக் காஃபி கொடுத்தார். பின்னர் உடனே கோயிலுக்குச் செல்லுமாறும், பின்னர் மகாராஜா வரும் நேரம் என்பதால் கோவில் நடை சார்த்திவிட்டால் ஒன்றரை மணி நேரம் பார்க்க முடியாது என்றும் சொல்லி அவசரப் படுத்தினார்.

கோயிலுக்குள் கைப்பை அனுமதி என்றாலும் அதில் உலோகப் பொருட்களே இருக்கக் கூடாதாம். என் கைப்பையில் வீட்டுச் சாவி உள்பட பல உலோகச் சாமான்கள். சேஃப்டி பின்கள்! அதோடு காமிரா, செல்ஃபோன் போன்றவையும்! தோல் பொருட்களும் அனுமதி இல்லை. கைப்பை தோலால் ஆனது.  காமிரா, செல்ஃபோனும் அனுமதி இல்லை. ஆகவே எல்லாவற்றையும் அங்கேயே கொடுத்துவிட்டுக் கையில் ஒரு சின்னப் பர்சில் கொஞ்சம் போல் பணத்தோடு கிளம்பினோம். நடந்தே செல்லும் தூரம் தான். கோயிலின் வெளிவாயில் முகப்புக் கேரள பாணியிலே காணப்பட்டது. ராஜ கோபுரம் என நாம் சொல்லும் அமைப்பில் இல்லை. ஆனால் கிட்டத்தட்ட அந்தப் பாணி கோபுரம் கிழக்கு வாயிலில் இருப்பதாகச் சொன்னார்கள். உள்ளே நுழைகையிலேயே செருப்பை வெளியே அப்படியே பலரும் விட்டுச் சென்றிருக்கக் கேரள மக்களின் நாணயம், நேர்மையை மெச்சிய வண்ணம் நாங்களும் அங்கேயே செருப்புக்களை விட்டோம்.

ஆண்களுக்கு ஒருத்தர், பெண்களுக்கு ஒருத்தர் எனத் தனித்தனியாகப் பாதுகாப்புச் சோதனை. முதலில் ஸ்கானர் மூலம் சோதனை எல்லோருக்கும் பொது! பின்னர் தனித்தனியாகச் சோதனை! மதுரையிலும் இப்படி நடந்தது. அங்கே இவரின் பர்சில் இருந்த ஒரு பழைய டப்பா காவலர்கள் கண்களில் பட்டு அதை எடுத்து வைத்துக் கொண்டு திரும்பிச் செல்லும்போது வாங்கிப் போகும்படி கூறினார்கள். அதே போல் மதுரா(வடக்கே) கிருஷ்ண ஜன்மபூமியிலும் பழம் நறுக்கும் கத்தியுடன் மாட்டிக் கொண்டார். நல்லவேளையாக பாதுகாப்புக் கணக்குத் துறையின் அடையாள அட்டை இருந்ததால் பிழைத்தோம். கத்தியை வாங்கிக் கொண்டு திரும்பிப் போகும்போது கொடுத்தார்கள். ஆகவே இங்கே கொஞ்சம் யோசனையோடு இருந்தேன். நல்லவேளையாக எதுவும் இல்லை. எனக்கும் சோதனை முடித்துக் கொண்டு கோயிலைச் சுற்றிக் கொண்டு வரலாம் எனப் பிரகாரம் இடப்பக்கம் திரும்பினால் நடை சார்த்தப் போவதாகவும் சீக்கிரமாப் போகும்படியும் சொல்லி அவசரப் படுத்தினார்கள்.

சரினு வலப்பக்கமாய்ச் சென்றோம். அங்கே ஒரு வாசலில் 150 ரூ 180 ரூ என சீட்டு வாங்கியவர் செல்லும் வழி எனப் போட்டிருக்க, அங்கே இருந்தவர் இப்போது சீட்டு இல்லை என்றும், ஆனாலும் இந்த வழியில் போகக் கூடாது என்றும் சுற்றிக் கொண்டு கிழக்கு வாயில் வழியே வரும்படியும் சொல்ல மறுபடியும் திரும்பி மீண்டும் வலப்பக்கமாகவே நடந்தோம். சிறிது தூரம் செல்வதற்குள்ளாகவே அவங்களுக்குள் மலையாளத்தில் பறைந்து கொண்டு எங்களை அழைத்து அதே வாயிலின் வழியாகச் சீக்கிரம் சென்று உள்ளே சந்நிதிக்கு முதலில் போகும்படி கூறினார்கள். சந்நிதிக்குச் செல்ல நல்லவேளையாக வாயிலை இடப்பக்கம் பிரகாரம்  சுற்றிவரும்படி இருந்தது. அப்படியே சென்றோம். ஓர் இடத்தில் மேலே ஐந்தாறு படிகள் மேலே ஏறி ஒரு மண்டபத்துக்குப் போகச் சொன்னார்கள். எல்லாம் ஒரே அவசரம்! சீக்கிரம், சீக்கிரம் என. அனந்து எங்களுக்காகவே காத்துட்டு இருந்திருக்கார் போல.

நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாகப்பெரிய ரங்குவை விட நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாகப் பதினெட்டு அடி நீளத்துக்கு ஜாலியாகப் படுத்துக் கிடந்தார் அனந்து. வலக்கை கீழே தொங்கிக் கொண்டு கீழே காணப்பட்ட சிவலிங்கத்தின் தலை மேல் படிந்திருந்தது. சிவனுக்கு ஆசி வழங்குவதாக வைணவர்களும், சிவபூஜை பண்ணுவதாக சைவர்களும் சொல்ல, அனந்துவை முழுசாப் பார்க்க முடியாதபடிக்கு மூன்று வாயில்களாகத் தடுத்திருக்காங்களே என நான் திருமுகம், மார்பு, திருவடி எனப் போயிட்டுப் போயிட்டுப்போயிட்டுப்போயிட்டுப் போயிட்டுப் பார்த்தேன். அது சிவன், விஷ்ணு, பிரம்மா மூன்று சக்திகளும் சேர்ந்திருப்பதாக ஐதிகமாம். அடுத்த பதிவில் அந்தக் கதை! இங்கே ஒரு ஒத்தைக்கல் மண்டபம் இருக்குன்னும், அதில் யாரும் நமஸ்காரம் செய்யக் கூடாதுன்னும், அங்கே நமஸ்காரம் செய்யும் உரிமை மகாராஜாவுக்கு மட்டுமே உண்டு என்றும் பொதுமக்களில் யார் அங்கே கீழே விழுந்து வணங்கினாலும் அவங்க அனந்துவுக்குச் சொந்தம் என்றும் கேள்விப் பட்டிருந்தேன்.

மேலும் அங்கே ஒரு கோயில் ஊழியர் நின்று கொண்டு, "ஒத்தக்கல் மண்டபத்தில் நமஸ்கரிக்கான் பாடில்லா!" என்று அவ்வப்போது கூவுவார் என்றும் கேள்விப் பட்டிருக்கேன். அந்த ஒத்தக்கல் மண்டபம் எங்கே? காணோமே? ஒரு வேளை வெளியே இருக்குமோ? இப்படி எண்ணங்கள் ஓட அனந்துவை நன்றாகப் பத்து நிமிஷம் போல் பார்த்துக் கொண்டோம். மெதுவாகக் கோயில் ஊழியர்கள், "போட்டே" போட்டே! நடை சார்த்தணும்!" என்றனர். மனசில்லாமல் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே மண்டபத்தை விட்டுக் கீழே இறங்கினோம். அனந்துவுக்குப் பின்னால் கிருஷ்ணர் இருப்பதாகவும் அங்கே செல்லும்படியும் அங்கிருந்த பட்டர்/குருக்கள்/போத்தி/நம்பூதிரி கூறினார். ரொம்ப அவசரப்படுத்தி எங்களைப் போகச் சொல்லவில்லை. அந்த நேரம் அப்படி. ஆனாலும் பத்து நிமிடம் சந்நிதியில் அனந்துவுக்குப் பத்தடி தூரத்தில் நின்று கொண்டு நன்றாகவே பார்த்தோம்.  கோயில் பற்றிய தல புராணம் சொல்வது அடுத்த பதிவில்!

மறந்தே போயிட்டேனே! சொல்லவே இல்லையே! அனைவருக்கும் சந்தனம், பூக்கள் வாழையிலையில் வைத்துக் கொடுத்ததோடு தீர்த்தமும் கொடுத்தனர். எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு கிருஷ்ணனைப் பார்க்கச் சென்றோம். ஒத்தக்கல் மண்டபம் பற்றி அடுத்த பதிவில் சொல்றேன். ஹிஹிஹி, அப்போத் தான் நான் ஒரு முட்டாளுங்க! என்பது புரிந்தது. ஊகித்தவர்கள் வெளியே சொல்லி என் மானத்தை வாங்காதீங்க!


18 comments:

  1. அப்பாடி. இங்கயாவது பின்னூட்டம் போட முடிகிறதே. அனந்தனின் நீள் கிடை பிரமிப்பா இருக்கு. முன்னாலே எழிதியதையும படிக்கிறேன் எப்படத்தான் ஓடி ஓடிப பாரத்தீர்களோ.

    ReplyDelete
    Replies
    1. ஏன் வல்லி? என் பதிவுகளில் பின்னூட்டம் போட ப்ளாகர் தடை செய்கிறதா? யாரும் எதுவும் சொல்லலையே? உங்களுக்கு வேலை மும்முரம் வரலைனு நினைச்சிருந்தேன்! :) மெதுவாப் படிச்சுட்டுச் சொல்லுங்க. ஒண்ணும் அவசரம் இல்லை. :)

      Delete
  2. நீங்கள் அனந்துவை தரிசித்த இடம் தான் ஒத்தக்கல் மண்டம் என்று என் ஊகம்! இதுவரை அனந்த புரம் சென்றதில்லை! செல்லாத குறையை தீர்த்து வைக்கிறது தங்களின் பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, சுரேஷ்! :)

      Delete
  3. கையில் அவர்கள் சந்தனத்தை உருட்டி எறிவார்கள்! மேலும் உள்ளே இருக்கும் பட்டர்கள் சில நாட்கள், அல்லது சில வாரங்கள் உள்ளேயே இருக்க வேண்டும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன், அடுத்த செட் பட்டாச்சார்யார்கள் வந்து ரிலீவ் செய்யும் வரை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உருட்டி எல்லாம் எறிவதில்லை! அழகாக வாழை இலையில் வைத்து மூடிக் கையில் கொடுக்கிறார்கள். :) ஆமாம், கோயிலில் தங்குவது உண்டாம். அதோடு ஆசாரமும் அதிகம் என்பதால் நம் ஸ்பரிசம் பட்டால் பின்னர் சேவை செய்ய முடியாது என்பதாலும் தொடாமல் தருவார்கள்.

      Delete
  4. எனக்கு ஒத்தைக்கல் மந்து என்னும் பெயரே ஊட்டகமண்ட் என்று மறுவியதாகத் தெரியும் பத்மநாபஸ்வாமி கோவிலில் கேள்விப்பட வில்லையே.

    ReplyDelete
    Replies
    1. இல்லைனு நினைக்கிறேன் ஜிஎம்பிசார். பத்மநாபஸ்வாமி கோயிலின் ஒத்தக்கல் மண்டபம் பற்றி அறிவிப்புப் பலகையிலும் போட்டிருக்காங்க. கையில் காமிரா, அலைபேசி எதுவும் இல்லாததால் படமே எடுக்க முடியலை! :(

      Delete
  5. அந்த பழைய டப்பாவில் என்ன இருந்தது?!?

    ReplyDelete
    Replies
    1. "இ" சார், கண்டு பிடிச்சுட்டீங்க போல! ஹா, ஹா, ஹிஹிஹிஹிஹி அதே தான்!

      Delete
  6. ஒத்தக்கல் மண்டபம். .... நான் சொல்ல மாட்டேன்..!!!!!!

    ReplyDelete
    Replies
    1. வேணாம் தம்பி, பேசாமல் இருங்க, ஆமா, சொல்லிப்புட்டேன்! :)

      Delete
  7. ரசிக்க பிறகு வருகிறேன் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. மெதுவா வாங்க டிடி. ஒண்ணும் அவசரம் ஏதும் இல்லை. :)

      Delete
  8. நீங்கள் பத்மனாபரை அந்த இத்தக்கால் மண்டபத்தில் ஏறித்தான் தரிசனம் செய்திருப்பீர்கள், சில சமயம் மண்டபத்தில் ஏறி வழிபட அனுமதி இல்லாமல் கீழ இருந்து, (நமஸ்கரிக்கும் இடத்திலிருந்து) தரிசனம் செய்திருப்பீர்கள். அந்த மண்டபம் தான் ஒத்தக்கால் மண்டபம்....(ஒரு கால் மண்டபமா இருக்கும்னு நினைச்சுட்டீங்களோ ஹஹஹ...)

    முன்னாடி எல்லாம் இத்தனை கெடுபிடிகள் இல்லை. ராஜா வரும் சமயம் மட்டும் நடை சார்த்தி பிறகு விடுவார்கள் ஆனால் இந்த ஸ்பெஷல் தரிசனம் எல்லாம் கிடையாது....இப்ப ரொம்ப கொள்ளை. முன்னாடி எல்லாருக்குமே ஃப்ரீ தான்...கூட்டமும் இருக்காது. இப்போதும் கூட அப்படி ஒன்றும் கூட்டம் இல்லை...காலையில் நிர்மாலய தரிசனம் அப்புறம் தீபாராதனை சமயம் கொஞ்சம் கூட்டம் இருக்கும்....பெரியகோவில் இல்லையா அதனால எல்லோரும் நகர்ந்து கொண்டே தான் இருப்பார்கள்...முண்டி அடிக்கும் அளவு கூட்டம் இருந்ததில்லை....

    உள்ளே எதுவுமே கொண்டு செல்லக் கூடாது இது முன்பிருந்தே ....ஆனால் தோல் பை என்பதெல்லாம் இப்போது புதிது போல் உள்ளது...தெரியவில்லை...இப்ப கோயில் ரொம்ப ஃபேமஸ் ஆகிடுத்து இல்லையா அதனால இருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன்/கீதா, நீங்க சொல்வது சரியே! நாங்க போனப்போவும் ராஜா வரும் நேரம் என்பதாலேயே நடை சார்த்தினார்கள். ஏழரையிலிருந்து எட்டரை வரைக்கும் ராஜா தரிசிக்கும் நேரம் என்றாலும் ஏழு மணியிலிருந்தே பொதுமக்களை வெளியேற்றுகிறார்கள். கூட்டம் அவ்வளவாக இல்லை. சிறப்பு தரிசனம் என அங்கே தமிழ், மலையாளத்தில் அறிவிப்புப் போட்டிருந்தது. என்றாலும் நாங்கள் செய்தது இலவச தரிசனம் தான். காசெல்லாம் வாங்கிக்கலை. பத்து நிமிஷங்கள் போல் மண்டபத்தில் கிட்டே இருந்து பார்த்தோம்.

      Delete
  9. நண்பர் ஸ்ரீ ராம் சொல்வது சரியே...சந்தனம் கையில் உருட்டி எறிவதுண்டு. நாங்கள் லோக்கலாக 8 வருடம் இருந்ததால் தெரியும்....நம்பூதிரகள் உள்ளேயே தங்குவதும் உண்டு அடுத்தவர் வந்து ரிலீவ் செய்வது வரை. இந்த எறியும் வழக்கம் பெரும்பான்மையான கேரளத்துக் கோயில்களில் உண்டு. எனது ஊராகிய திருப்பதிசாரத்திலும்/திருவண்பரிசாரத்திலும் உண்டு. எங்க ஊர் மலைநாட்டுத் திருப்பதி/குட்டைநாட்டுத் திருப்பதியில் அடக்கம் (108லும்) கேரளத்து வழக்கம். எங்கள் ஊரிலும் சந்தனம் அப்படித்தான் வழங்கப்படும். சில சமயம் வாழை இலையில் அதையும் மேலிருந்துத் தூக்கித்தான் கையில் போடுவார்கள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆசாரம் பார்ப்பதால் அப்படித் தூக்கிப் போடுகின்றனர். ஆனால் அங்குள்ள மக்கள் அதற்கு எதுவும் சொல்வதில்லை. தமிழ்நாடென்றால் அது ஒரு அமர்க்களமாகப் போய் இருந்திருக்கும். :)

      Delete