எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 11, 2017

கலி முத்தி விட்டதா?

சமீபத்திய இரண்டு,மூன்று செய்திகள் மனதைக்  கலங்க அடித்து விட்டது. அதில் ஒன்று அமெரிக்காவில் வசிக்கும் மகன், மும்பையில் ஒரு குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த பெற்றோர். மகன் தொலைபேசியில் அவ்வப்போது பேசுவதோடு சரி!  தந்தை வயது மூப்பு, நோய் காரணமாக இறந்து விட்டார். மகன் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் தாய் தனியே அதே வீட்டில் வசித்து வந்திருக்கிறார். சென்ற வருடம் மகன் தாயுடன் தொலைபேசியில் பேசி இருக்கிறார். அதன் பின்னர் ஒரு வருஷம் தாயுடன் பேசவே இல்லை. இப்போது இம்முறை விடுமுறைக்கு வந்தவர் தாயைப் பார்க்க வேண்டி வீட்டுக்கு வந்திருக்கிறார். கதவைத் தட்டத் தட்டத் திறக்கவே இல்லை.  பின்னர் அக்கம்பக்கம், போலீஸ் (ஏனெனில் யாரும் மகனைப் பார்த்ததே இல்லை! வீட்டை உடைத்துத் திறக்க வேண்டி இருந்தது.) உதவியோடு வீட்டுப் பூட்டை உடைத்துத் திறந்தால் உள்ளே தாய் படுக்கையில் எலும்புக் கூடாக!

அதைச் சோதனை செய்த மருத்துவர்கள் இறந்து பல மாதங்கள் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். மகனுக்கு இப்போதாவது தாய், தந்தை அருமை புரிந்ததா எனத் தெரியவில்லை. இவர்களெல்லாம் என்ன மனிதர்கள் என்றே தெரியவில்லை. அந்தக் குடியிருப்பு வாசிகளும் ஒரு வீடு பல மாதங்களாகப் பூட்டிக் கிடக்கிறதே என்னவென்று பார்க்கவில்லை. பிண வாடை அடித்தது கூடவா தெரிந்திருக்காது? வர வர மனித நேயம் கற்றுக் கொடுக்கவே ஒரு பள்ளி ஆரம்பித்தால் பரவாயில்லை போல் இருக்கிறது. அதிலும் பெற்ற தாய், தந்தையரைக் கைவிடாத குழந்தைகள் இருந்தால் அது ஓர் ஆச்சரியமான செய்தியாக இருக்கும் போல் ஆகி விட்டது நிலைமை! ஏன், தந்தை இறந்ததுமே அந்த மகன் நேரில் வந்து தாயை ஒரு நல்ல முதியோர் இல்லத்தில் பலருடைய பாதுகாப்பின் கீழ்ச் சேர்த்திருக்கலாமே என்னும் எண்ணம் வந்ததை மறைக்க முடியவில்லை. குறைந்த பட்சம் கடைசிக் காரியங்களாவது மரியாதையுடன் நடந்திருக்கும்.

அடுத்து இன்னொன்று தமிழ்நாட்டில் என நினைக்கிறேன். இரண்டு மகன், ஒரு மகள் இருக்கும் பெற்றோர் தனியாக வசித்து வந்திருக்கின்றனர். பெற்றோர் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்துத் திருமணம் செய்து கொடுத்து மூவரும் வசதியாக வாழ்கின்றனர். இப்போது வயதான தந்தைக்குத் திடீர் என   உடல் நலமில்லாமல் போக யாரும் வந்து கவனிக்கவே இல்லை. மனம் வெறுத்த பெற்றோர் இருவரும் விஷம் குடித்து இறந்து விட்டனர்.

அடுத்து இன்னொரு செய்தி உலகப் புகழ் பெற்ற "ரேமண்ட்" குடும்பம் பற்றியது. அந்த "ரேமண்ட்"  தனி இடம் பெற்றுப் புகழ் பெற உழைத்த திரு விஜய்பட் சிங்கானியா 78 வயது நிரம்பிய முதியவர் தன் மகன் தன்னைச் சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டில் கொண்டு விட்டு விட்டதாக வருந்துகிறார்.  இத்தனைக்கும் ரேமண்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை இவர் ஏற்றதுமே அது பல்வேறு சிறப்புக்களுக்கு உள்ளாகி இருந்திருக்கிறது. லண்டனிலிருந்து மும்பை வரை தனியாக விமானம் ஓட்டிச் சாதனை படைத்திருக்கிறார். பத்ம விபூஷண் விருது பெற்றவர்.

தந்தை விஜய்பட்டிடம் இருந்த 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்ட மகன் தந்தையை அதன் பின்னர் வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டார். செலவுக்குக் கூடப் பணம் கொடுப்பதில்லையாம்! இத்தனைக்கும் தந்தை பல நகரங்களில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். இப்போது மும்பையின் வீட்டு வசதி வாரிய வீட்டில் வாடகைக்குக் குடி இருந்து கொண்டு தன் மகன் மேல் தன்னைக் கவனிக்காமல் விட்டதற்கு வழக்குப் போட்டிருக்கிறார்.

என்ன ஆயிற்று நம் நாட்டு இளைஞர்கள், நடுத்தர வயதுக்காரர்களுக்கு? உங்களை உங்கள் பெற்றோர் வளர்க்காமல், கவனிக்காமல் விட்டு விட்டார்களா என்ன? நன்றாக வளர்த்துப் படிக்க வைத்து வசதியாக வாழத் தேவையானவற்றைச் செய்து கொடுத்திருக்கிறார்கள் தானே! குறைந்த பட்சம் அந்த நன்றிக்காகவாவது பெற்றோரைக் கவனிக்க வேண்டாமா? மனசாட்சியே இல்லாமல் இப்படியா நடந்து கொள்வது? ஒரு மூன்றாவது மனிதன் கஷ்டப்பட்டால் கூடப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோமே! தன்னைப் பெற்றவர்களை இப்படியா நிராதரவாக விடுவது? கலிகாலம் என்பது சரியாகத் தான் இருக்கிறது!

38 comments:

  1. இன்னும் நிறைய வரும் அம்மா...

    வேதனை...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி. இதுவே தாங்கலை! :(

      Delete
  2. பெற்ற அன்னையின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று பல மாதங்களாக ஒரு ஃபோன் கால் கூட செய்யாத ஒரு செல்ல மகளை எனக்குத் தெரியும்! இதற்கும் மேல் சோகக் கதையைச் சொல்ல முடியும், வேண்டாம் என்று விட்டு விடுகிறேன்...
    ஆனாலும் இந்த எலும்புக்கூடான கதை மனதை ரொம்ப பாதிக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. பொதுவாப் பெண்கள் அம்மாவைத் தங்களுக்கு வீட்டு வேலைகள் செய்து தரும் ஆளாகவே பார்ப்பதாக எனக்குத் தோன்றும். அம்மாவுக்கு உடல் தெம்பு இருக்கும் வரை செய்யலாம்! முடியலைனா? எனக்கு அந்தப் பெண் இறக்கும்போது எவ்வளவு தனிமையாக உணர்ந்திருப்பார் என்பதை நினைத்து நினைத்து மனம் வருந்துகிறது! :(

      Delete
  3. வேதனை தரும் விஷயங்கள். இன்னும் நிலைமை அதிகமாகுமோ?!!

    கீதா: கீதாக்கா இப்படி நடக்கும் குடும்பங்களில் ஒன்று நான் கவனித்த வரை...என் அருகாமையில் நான் கவனித்த வரை, பெற்றோர் மீதும் குறை இருப்பதைக் கண்டுள்ளேன். ஆனால் அதை மட்டும் நான் காரணமாகச் சொல்ல மாட்டேன் பிள்ளைகள் அப்படி நடந்து கொள்வதற்கு. என்றாலும் பெற்றோற் பிள்ளைகளை வளர்ப்பதில் எங்கேயோ தவறு நடக்கிறது, பெற்றோரும் பணம் ஈட்டுவதில் இருந்திருக்கும் போது பிள்ளைகளுக்கு அதுதானே பிரதானமாகப் படுகிறது அதுதானே உதாரணமாகத் தெரிகிறது?! பல பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கிறார்களா? அல்லது நல்ல நடத்தைகள் கதைகள் எல்லாம் உட்கார்த்தி வைத்துச் சொல்லித் தருகிறார்களா? என் பெற்றோர் கூட எனக்குச் சொன்னதே இல்லை. ஆனால் என் அப்பா வழிப் பாட்டியும் தாத்தாவும் எனக்கு நிறையச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நான் வளர்ந்தது அம்மா வீட்டில். அங்கு எனக்கு நிகழ்ந்தவை என்றால்...வேண்டாம் அது இங்கு. ஆனால் என் பள்ளி எனக்கு நல்லது பல கற்றுக் கொடுத்தது. உங்கள் பெற்றோரையும், பாட்டிகளையும்நினைத்துக் கொள்ளுங்கள்...நீங்கள் இப்படி எழுதுவது எதனால் என்றால் உங்கள் பெற்றோர், தாத்தா பாட்டிகள் உங்களுக்கு நிச்சயமாக ஏதேனும் ஒரு வகையில் உதாரணமாக இருந்திருப்பார்கள். அதே போன்று நீங்கள் இப்போது உங்கள் அடுத்த தலைமுறைக்கு...இல்லையா?!

    பெற்றோர் எவ்வழி அவ்வழி பிள்ளைகள்....இதில் சில எக்ஸெப்ஷன்ஸ் இருக்கலாம்.....அதாவது பெற்றோர் எப்படி இருந்தாலும் குழந்தைகள் அவர்க்ளைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பது. என்னைப் பொருத்தவரை இந்தக் கருத்தைத்தான் முன் வைப்பேன். பெற்றோர் எப்படி இருந்தாலும், நாம் அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைத்தான் முன் வைப்பேன். பெற்றோர் என்றில்லை என்றாலும் மனிதர்கள் என்று மனித நேயத்துடன் என்ற கருத்தே...

    ...நீங்கள் சொல்லியிருப்பது போல் பள்ளிகள் மாரஸ் க்ளாஸஸ் நடத்த வேண்டும். எங்கள் பள்ளிகளில் எல்லாம் உண்டு. இப்போது பல பள்ளிகளில் இருப்பதாகத் தெரியவில்லை.

    நல்ல பதிவு ஆனால் வேதனை மிக்க பதிவு

    ReplyDelete
    Replies
    1. தில்லையகத்து/கீதா,நீங்க சொல்வது சமீப காலங்களில் நடப்பதாக இருக்குமோ? ஏனெனில் சுமார் இருபது வருடங்கள் முன் வரை கூடப்பெற்றோர் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்கள் இப்போதும் பல குடும்பங்களில் கவனிக்கவே செய்கிறார்கள். எல்லாம் செய்து கொடுத்தும் குழந்தைகள் பெற்றோரைக் கவனிக்காமல் விடுவதும் நடக்கத் தான் செய்கிறது. என் சின்ன வயசை எடுத்துக் கொண்டால் அது இன்னமும் மோசம்! கண்டிப்பான அப்பா! நான் படித்ததே பல போராட்டங்களுக்கு இடையில் தான்! சிலவற்றைச் சொல்ல முடியாது! ஆனால் என் அம்மாவின் அப்பா தான் எனக்குப் புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தார். பள்ளியும் நல்ல பள்ளியாக இருந்தது. நீதி போதனை வகுப்புகள், குடிமைப் பயிற்சி வகுப்பு என வாரம் இரண்டு நாட்கள் இருந்தது. குடிமைப் பயிற்சி வகுப்பு இப்போது கட்டாயமான தேவை!

      Delete
    2. அதோடு இல்லாமல் பள்ளிகளில் இருந்து ஏசிசி, என்சிசி, சாரணர் படை போன்றவற்றை எடுத்து விட்டார்கள். காரணம் மிகவும் அற்பக் காரணம். அவற்றில் புழங்கும் கட்டளைச் சொற்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் இருந்தது தான்! இவை இருந்தவரை ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் ஒருவிதக் கட்டுப்பாடுடன் இருந்ததாகத் தோன்றுகிறது. மேலும் இந்தப் பயிற்சியின் போது மாணவர்கள், மாணவிகளுக்குப் பல்வேறு விதமான சூழ்நிலைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பயிற்சிகள் அளிக்கப்படும். மலை ஏறும் பயிற்சி, கயிறு கட்டி ஏறுதல் என்றெல்லாம் இருந்தது. இப்போதெல்லாம் பள்ளிகளில் விளையாட்டு என ஒரு வகுப்பு நடக்கிறதா என்பதே தெரியவில்லை! :(

      Delete
  4. ஏழை, பணக்காரர் வித்தியாசமில்லாமல் சுயநலம் தலை விரித்தாடுகிறது.

    கூடி வாழ்ந்து கோடி நன்மை பெற்ற மனித குலம் தனித்தனி யூனிட்டுகளாகப் பிரிந்து தங்கள் நலன்களில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பதே காலத்தின் கோலத்திற்கு அனுசரணையாகப் போய்விட்டது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார், எங்கும் சுயநலம், எதிலும் சுயநலம்!

      Delete
  5. நானும் இந்த நியூஸ் படித்தேன் எனக்கும் புரியவில்லை எப்படி ஒரு கெட்டு போன வாடையை கூட உணரமுடியாத அளவுக்கா வேலை பிசியில் இருக்கிறார்கள் மனிதர்கள் புரியவில்லை பயமாகத்தான் இருக்கிறது கேள்விப்படும் விஷ்யங்களிலே ஒருநாள் இருதயம் தாக்கப்பட்டு விடுமோ என்று

    ReplyDelete
    Replies
    1. வாங்க பூவிழி, எனக்கும் அதான் புரியலை! அக்கம்பக்கம் எப்படி குடியிருந்தார்கள் என நினைக்க நினைக்க ஆச்சரியமாத் தான் இருக்கு! ஆனால் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளும் அவ்வளவாகக் கலந்து பழகுவதில்லை என்றே சொல்லணும்! :(

      Delete
  6. எனக்குத் தெரிந்த நண்பர் தன் இரு மகன்களை வெளிநாட்டில் படிக்க வைத்திருக்கிறார் ஏதோ ஒருமுறை அவர்கள் இந்தியா வந்தபோது சந்தித்தேன் வயதான பெற்றோர்கள் தனியாக இங்கே இருக்கிறர்களே உடல் நலம்குறைந்தால் என்ன செய்வீர்களென்று கேட்டேன் நாங்கள் என்ன செய்வது அவர்கள் மருத்துவரைஅல்லவா நாடவேண்டும் என்றார்கள் திடீரென்று அவர்களிறக்க நேரிட்டால் என்று கேட்ட போது நாங்கள் கிரியை செய்ய வரமுயற்சிப்போம் என்றார்கள் ஆனாலும் எனக்குத் தோன்றுவது தனிமரம் தோப்பாகாது ஏதோ ஒரு சிலர் இப்படி என்று நினைத்துக் கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, இன்று பல பெற்றோரின் நிலை அது தான்! நாங்கள் உள்பட! :)

      Delete
  7. முதல் இரண்டு செய்திகளும் நானும் படித்தேன். முதல் செய்தி எனக்கு மூடுபனி கிளைமேக்ஸை நினைவு படுத்தியது. என்ன மகன்களோ... என்ன பாசமோ...

    ரேமண்ட் குடும்பச் செய்தி நிச்சயம் அநியாயம். அவ்வளவு பணத்தையும் பிடுங்கி கொண்டு மகன் செய்திருக்கும் அநியாயம்... எப்படி அந்தத் தந்தை வசரப்பட்டு எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்தார்?

    ReplyDelete
    Replies
    1. "மூடுபனி?" திரைப்படம்! பார்த்ததில்லை. இன்றைய தினசரிகளிலும் ரேமண்ட் குடும்பச் செய்தி அடிபட்டது! தந்தை ஒரு மகனுக்கே பங்குகளைக் கொடுத்திருப்பதாகவும் இன்னொரு மகனுக்குக் கொடுக்கவில்லை என்றும் ஒரு சாரார் கருத்து! பங்குகளைக் கொடுத்த தந்தைக்குப் பணமே கொடுக்கவில்லை என்பது இன்னொரு சாரார் கருத்து! சிலர் மாசம் ஏழாயிரம் கொடுப்பதாகச் சொல்கின்றனர். :( உண்மை வெளிவரவில்லை.

      Delete
  8. சகோ எங்கோ நடந்ததை கண்டு இப்படி வேதனைப்படுகின்றீர்களே... நம்மைச்சுற்றியே நடக்கிறது இனி இன்னும் மோசமான வாழ்க்கையை பெற்றோர் காண வேண்டியது வரும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, ஆமாம், நம்மைச் சுற்றியே பலதும் நடக்கத் தான் செய்கிறது. இன்னும் மோசம்னா அதையும் எதிர்கொள்ளும் மனோபலத்தை ஆண்டவன் கொடுக்க வேண்டும்.

      Delete
  9. ​அண்ணன் தாலிகட்டப்போகும் பெண்ணை, மணமேடையில் அண்ணனைத் தள்ளி விட்டு விட்டு தம்பி தாலி கட்டிய செய்தி உட்பட வேறு சில செய்திகளும் கூட இந்தவகை அதிர்ச்சியைத் தந்தன.

    ReplyDelete
    Replies
    1. மீள்வரவுக்கு நன்றி ஶ்ரீராம்! இந்தச் செய்தி கேள்விப் பட்டதில்லை. தம்பி காதலித்த பெண்ணாக இருக்கலாமோ?

      Delete
  10. இவைகளைப் படித்தேன். இதற்கு முன்னால் தில்லியில் அம்மாவை அம்போ என்று ஏர்போர்ட்டில் விட்டுவிட்டு, வீட்டை வித்து பணத்தை தன் அக்கௌன்டில் போட்டுக்கொண்டு ஓடிவிட்ட மகனைப் பற்றியும் படித்திருக்கிறேன்.

    வாழ்க்கைல எல்லாமே கிடைக்காது. பணத்தைத் தேடுவது சுயனலத்தை மட்டும்தான் வளர்க்கும். இதுதான் நான் பார்த்தது. சாதாரண வாழ்க்கை போதும் என்பவர்களுக்கு மட்டும்தான் இதுபோல் உறவு முறை போன்றவை சாத்தியம்.

    அதிலும் குறிப்பா, வெளினாட்டு வேலையை நோக்கிச் சென்றவர்கள், பெற்றோர்களைப் பார்த்துக்கொள்வது சுலபமல்ல. பார்த்துக்கொள்பவர்கள் சிலர் மட்டும்தான். பெற்றோர்கள் அனுசரித்துச் செல்லவும் வேண்டியிருக்கும்.

    சிறுவயதில் பார்த்த கிராம, சாதாரண நகர (நெல்லை ஜங்க்ஷன் போன்று) வாழ்க்கையைப் பார்க்கிறேன். என்னுடைய அனுமானம், தொலைக்காட்சி வந்தபின்புதான் இந்தச் சுயனலம் மிகவும் அதிகமாகிவிட்டது. குடும்பம் குடும்பமாக சுயனலமாக இருந்தது, இப்போது குடும்பத்துக்குள்ளேயே சுயனலம் மிகுந்துவிட்டது. இது, ஸ்மார்ட் போன் வந்தபிறகான நிலைமை. இது எந்த அளவு இருக்கு என்றால், குடும்பம் என்ற அமைப்பே சிதைவுறும் நிலையில் இருக்கிறது. என் அனுமானத்தில் சொல்கிறேன். எல்லோரும் தங்கள் குடும்பத்தைவிட, கண் காணாத இணையக் குடும்பத்தில் நேரம் செலவழிக்கிறார்கள், அதன்மூலம் தங்கள் குடும்பத்தைச் சிதைவுறச் செய்கிறார்கள்.

    நிச்சயமாக இன்னும் 20-30 வருடங்களில், மேல்தட்டு, நடுத்தர தட்டு வர்க்கத்திடையே, குழந்தைகளைத் திருமணம் செய்துகொடுத்துவிடுவது என்பது நமக்கான தட்டிக்கழிக்கும், இனிமேல் நாம வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்ற நிலைமைக்குக் கொண்டுவரும். 50 வருடங்களில் நிச்சயமாக, மேல் நாட்டு வாழ்க்கை பல தட்டு மக்களிடையே வந்துவிடும் (20-24 வயசில், அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை நோக்கிச் செல்லவேண்டும். பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்ளவேண்டும். தாத்தா/பாட்டி பிஸினெஸ் அபூர்வம்.

    ReplyDelete
    Replies
    1. திரைப்படங்கள், தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், அலைபேசி, வாட்ஸப், முகநூல் என மனிதர்கள் மூழ்கிப் போய் மனிதர்களை மறந்துவிட்டார்கள். நீங்க சொல்லும் 20,30 வருடம் கழித்து என்பது இப்போதே கிட்டத்தட்ட வந்தாச்சு!

      Delete
  11. 45+ல் இருப்பவர்கள், பிராக்டிகலாகச் சிந்திக்கவேண்டும். இப்போது 75+ல் இருப்பவர்கள் பெரும்பாலும் பிராக்டிகலாக சிந்திப்பவர்கள் இல்லை. மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கும்போது, தாங்கள், அந்தப் பணத்தை உபயோகப்படுத்தி நர்ஸ் அல்லது வயதானோர் இல்லத்தில் தங்குவதற்கான மனத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். இப்படி பெரும்பாலான வயதானவர்கள் நிலைமைய ஏற்றுக்கொள்வதில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர், நர்ஸ் வைத்துக்கொள்ள ஏற்றுக்கொள்ளவில்லை. விளைவு, மகன் மிகவும் கஷ்டப்படுகிறார்.

    எங்க அப்பா சொன்னது நினைவுக்கு வருகிறது. வாழ்க்கை என்பதே நோக்கம் இல்லாமல் இருக்கு. வேஸ்ட் என்று அவர் அபிப்ராயப்பட்டார். பாலகன், இளைஞன், குடும்பஸ்தனாகும்போது குழந்தைகள் மனைவி என்று குடும்பத்துக்கு உழைத்தல் (ஏன்னா, தன்னைவிட மக்கள் நல்லா இருக்கணும் என்று). அதற்கப்புறம் வெறுமை, ஏன் இப்படி ஓடினோம் என்ற எண்ணம், எதைச் சாதித்தோம் என்ற எண்ணம், எதற்காக? தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. முதியோர் இல்லத்தில் சேரப் பிள்ளைகள் அனுமதி கொடுக்க வேண்டும் இல்லையா? அந்த அனுமதி கிடைத்தால் நாங்க கூடப் போகத் தயார் தான்! :) முன்னாலே ஓடினதை இப்போ நினைச்சால் ஏன் ஓடினோம்னு எல்லாம் தோணறதில்லை. இப்போவும் அப்படி முடியலையே என்னும் ஆற்றாமை தான் நிறைய!

      Delete
    2. அனுமதி தரணுமா? எதற்கு? (இது உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளும் சாக்கு இல்லையா?)

      Delete
    3. நிச்சயமா இல்லை! எங்க பொண்ணு ஓரளவுக்கு மனசைச் சமாதானம் பண்ணிண்டாலும் பிள்ளைக்குக் கோபம் வருது! "நான் உங்களைக் கைவிட்டுடுவேன்! அப்படினு நினைக்கிறீங்களா?" என்று கேட்டுச் சண்டை போடுகிறார். :( நாங்களும் எத்தனையோ முதியோர் இல்லத்தைத் தேடிக் கண்டு பிடித்து விபரங்களைப் பிள்ளைக்கு அனுப்பிப் பார்த்தாச்சு! அங்கே போய் ஒரு மாசம் தங்கி இருந்து பார்க்கக் கூடப் போகக் கூடாதுனு ஒரே நிபந்தனை! இத்தனைக்கும் நாங்க பொருளாதார ரீதியாகப் பிள்ளையைச் சார்ந்திருக்கவில்லை! என்றாலும் இந்தப் பேச்சு வந்தால் அவருக்குக் கோபம் ஜாஸ்தி ஆகிறது! :) குற்ற உணர்ச்சியோ என்னமோ!

      Delete
    4. உடல் தானம் செய்யறது பத்திக் கூடப் பிள்ளையிடம் பேசிப் பார்த்தேன். கடுமையான சண்டை, சச்சரவு! உடல் தானம் செய்வதற்குச் சட்டரீதியாக அவங்க அனுமதி தரணும்னு சொல்றாங்க!

      Delete
  12. செய்திகள் வருத்தமாகத்தான் இருக்கு. பிள்ளைகள் சிந்தனையில் மாற்றம் வரவேணும்

    ReplyDelete
    Replies
    1. ஒட்டுமொத்த மாற்றம் வந்தால் தான் இது சாத்தியம்! :(

      Delete
  13. இப்படி பல அதிர்ச்சி தரும் செய்திகள் வந்த வண்ணமெ இருக்கின்றன. எங்கே போகிறோம் என்று நினைத்தால் வலி....

    ReplyDelete
    Replies
    1. பல செய்திகளும் அதிர்ச்சியைத் தான் த்ருகின்றன! எங்கேயோ போயாச்சு! :)

      Delete
  14. டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே - உலகம் போற போக்க பாரு தங்கமே தில்லாலே

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா! புரியலை என்ன சொல்ல வரீங்கனு! இப்படிப் பாடிக் கழிக்க வேண்டியது தான் என்கிறீர்களா?

      Delete
  15. துக்கம்.
    தனிமரம் தோப்பாகாதிருந்தால் சரி.

    ReplyDelete
  16. இன்னொருவரை நம்பி - பிள்ளைகளாகவே இருந்தாலும் சரி - இருப்பது இனி ஒத்துவராது.
    பிள்ளைகளைக் கடிந்தும் பயனில்லை. பிள்ளைகளை வளர்க்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டே ஒழிய பெற்றோரை காப்பாற்ற வேண்டிய கடமை எந்தப் பிள்ளைக்கும் இல்லை. கடமை வேறு நேயம் வேறு.

    ReplyDelete
  17. படிக்கும், கேட்கும் செய்திகள் மனதை வேதனைபடுத்துகிறது.பணம் மட்டும்தான் பிரதானம் என்றால் உறவுகள்?

    கேள்விகுறி தான் வாழ்க்கை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, ஏற்கெனவே உறவு முறைகள் அழிந்து வருகின்றனவே! இனி என்ன மிச்சம்? அப்பா, அம்மா உறவு தான்! :)

      Delete
  18. தனிமரம் தோப்பகாதுன்னு நம்புவோம்.

    நேயம் வேறே கடமை வேறே இல்லையா? பிள்ளைகளை வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை - பெற்றோர்களைப் பேண வேண்டியது பிள்ளைகளின் கடமையில்லை, பெற்றோரின் எதிர்பார்ப்பு.
    யாராயிருந்தாலும் நேயத்தை மறக்கும் பொழுது ஒட்டுமொத்த மனிதத்தின் மீதே நம்பிக்கை குறைகிறது.

    இன்னொரு தடவை கமென்ட முயல்வோம்.. (முயல்வோம் விட முயற்சி செய்வோம் பிடிச்சிருக்கு...)



    ReplyDelete
    Replies
    1. முயலுங்கள், முயலுங்கள்! :)))) பெற்றோர் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்காது! அப்படித் தான் நான் நினைக்கிறேன். ஆனால் வயதான பெற்றோரைப் பார்த்துக் கொள்வது பிள்ளைகளின் கடமை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுவேன்! அதில் பிள்ளைகள் தவறினால் இந்தப் பதிவில் இருக்கிறாப்ப்போல் பிரச்னைகள் தான்! :(

      Delete