எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 14, 2017

நம்பெருமாளைப் பார்த்தேனா இல்லையா?

அதுக்குள்ளே கூட்டம் ஜாஸ்தி ஆகிப் பின்னால் இருந்து சாரி சாரியாக மக்கள் வந்து கொண்டே இருக்க எங்களால் முன்னாலும் செல்ல முடியாமல், பின்னாலும் செல்ல முடியாமல் நடுவில் மாட்டிக் கொண்டோம். இப்போப் பார்த்து அந்த வீல் சேர்காரர் பெண்ணை அழைத்துக் கொண்டு வெளியேற முயல என் புடைவை வீல் சேரில் மாட்டிக் கொள்ள திடீரென ஏற்பட்ட இறுக்கத்தினால் நான் உடனே என்னவென்று பார்க்க, புடைவையை விடுவித்துக் கொண்டேன்! கூட்டத்தின் நடுவில் இப்போ நான் இருக்க முன்னாலும், பின்னாலும் நெரித்துத் தள்ள வேர்த்து விறுவிறுத்துக் கிட்டத்தட்ட மயக்கம் வரும் நிலைக்குத் தள்ளப்பட முன்னொரு சமயம் மீனாக்ஷியை தரிசிக்கையில் (அப்போப் பையர் கூட இருந்தார், வெளியேற்றி விட்டார்.) ஏற்பட்ட நிலைமை இப்போதும் ஏற்படும் போல் இருந்தது.

அதைப் பார்த்துவிட்ட ரங்க்ஸ் உடனே தள்ளுமுள்ளு செய்து என்னருகே வர, நான் வெளியேறிவிடலாம் என்று சொன்னேன். சரினு வெளியேற முயற்சித்தால் வெளியே செல்லும் வழியிலும் ஆட்கள் உள்ளே வருகின்றனர்! என்னத்தைச் செய்யறது! ரொம்பக் கஷ்டப்பட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினோம். கொஞ்சம் இடைவெளி கிடைத்தது! அப்பாடா! மூச்சு விட்டுக் கொண்டேன். இருக்கலாமா, போகலாமானு ரங்க்ஸ் கேட்க அரை மனதாகப் போயிடலாம்னு சொன்னேன். மறுபடி சுத்தித் தான் போகணும். இம்முறைப் படிகள் ஏறணும்! ஒவ்வொரு படியும் சுமார் ஒரு அடி உயரத்தில் போட்டிருக்காங்க! இறங்கும்போதே சிரமம். ஏறும்போது காலைத் தூக்கி வைக்கணுமே! ஆனால் முக்கிய வாயில் வழி செல்ல முடியாமல் கூட்டம் இன்னமும் அடைத்துக் கொண்டு நிற்கிறதே! ஆகவே சுத்திக் கொண்டு காவிரிக்கரைக்கு வந்தோம். கொஞ்சம் காற்றும் வந்தது. செருப்பைப் போட்டுக் கொண்டு படிகளில் ஏறலாமானு யோசிச்சோம். அதுக்குள்ளே காவிரியைப் படம் எடுக்கலாம்னு கொஞ்சம் கிட்டேப் போய் எடுத்தேன். இன்னும் கிட்டேப் போய் எடுக்கணும்னா மறுபடி 20 படிகள்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்



அப்போப் பார்த்து நம்ம ஆண்டாளம்மா ரங்கநாதர் கொடுக்கும் சீர் வரிசைகளை வாங்க வேண்டி மண்டபத்துக்குள்ளே நுழைஞ்சாங்க!  அது வரை எங்கே இருந்தாங்கன்னே தெரியலை. முதல்லேயே  கவனிச்சிருந்தா கிட்டே இருந்து எடுத்திருக்கலாம். தெரியலை! ஆகவே அவசரம் அவசரமா ஒரு க்ளிக்!


அம்மாமண்டபத்தைச் சுற்றியுள்ள ஓர் பகுதி!


மண்டபத்துக்குள்ளே ஆண்டாளம்மா போறாங்களேனு படம் எடுத்தால் உள்ளே இருந்த இருட்டில் ஆண்டாளம்மா தெரியலை! :( கிட்டே போக முடியலை. அதுக்குள்ளே உள்ளே போயிட்டாங்க! உள்ளே நெரிசல்!  அப்புறமாப் படிகளில் ஏறி இறங்கி தெருவுக்கு முக்கிய வாயில் அருகே வந்துட்டோம். அதை இப்போத் திறந்திருந்தாங்க. மக்கள் அதன் வழியாகவும் உள்ளே போய் வந்து கொண்டிருந்தனர். என் முகத்தைப் பார்த்துச் சகிக்காமலோ என்னமோ ரங்க்ஸ் என்னைப் பார்த்து, "நான் பார்த்துட்டேன். நீ இந்த வழியாப் போய்ப் பார்த்துட்டு வா! நான் இங்கேயே நிற்கிறேன். என்றார். கொஞ்சம் யோசிச்ச நான், அப்புறமா வரலாமானும் ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் இப்போவே போயிடலாம்னு சரினு சொல்லிட்டு அந்த வழியே செல்ல முயன்றேன். செல்லைக் கொடு, இப்போ இந்தக் கூட்டத்தில் படம் எடுக்க முயன்றால் கீழே தள்ளிடுவாங்க! அல்லது செல்லே போயிடும்னு சொல்லிட்டு வாங்கி வைச்சுண்டார். அதுவும் சரிதான்னு செல்லைக் கொடுத்துட்டு முக்கிய வாயில் வழியே சென்றேன்.

கொஞ்ச தூரத்திலேயே வீல் சேர் காரர் தன் பெண்ணை உள்ளே சுவாமிக்கு அருகே கொண்டு காட்டும்படி பட்டாசாரியாரிடம் சொல்லி உள்ளே அனுப்பி இருந்தார். கோவில் சேவகர்கள் அந்தப் பெண்ணுக்கு தரிசனம் செய்து வைத்துக் கொண்டு இருந்தனர். நானும் போனேன். முதல்லே பக்கவாட்டில் இருந்து தான் பார்க்க முடிந்தது. நடுவில் போய் நின்று பார்க்கலாம் என மெல்ல மெல்ல சுவாமிக்கு எதிரே போனேன். கொஞ்சம் கூட்டம் தான் என்றாலும் நிற்க இடம் கிடைத்தது. சரினு ரொம்ப நாள் காத்திருந்து கிடைத்த அருமையான தரிசனத்தைக் கண்ணாரக் கண்டு விட்டு இன்னிக்கு நம்பெருமாள் பாண்டியன் கொண்டையில் வரலை; புதுசாக் கிரீடம், அதோடு எப்போதும் இருக்கும் நீலக்கல் மாலையும் இல்லை! பெரிய பதக்கம் வைத்த சங்கிலி என்பதும் மனதில் பதிந்தது. 

எந்த அலங்காரமும் எந்த நகையும் அவருக்கு நன்றாகவே இருக்கும்; இருக்கிறது. இப்படி எல்லாம் கஷ்டப்பட வைக்கிறியே ரங்குனு மனசுக்குள்ளே கேட்டுட்டுத் திரும்ப வெளியே வந்து வீடு வந்து சேர்ந்தோம்.  காவிரியில் கொஞ்சமாகத் தண்ணீர் திறந்திருக்காங்க! அதுவும் நேற்று ரங்கநாதர் காவிரிக்கரைக்கு வரப் போவது நிச்சயம் ஆனப்புறம் தான் அம்மாமண்டபம் படித்துறைக்கே வந்து சேர்ந்தது. இன்னிக்குக் காலம்பர மொட்டை மாடிக்குப் போய்க் காவிரி ஆற்றைச் சில படங்கள் எடுத்தேன். கொஞ்சம் மோடமாக இருந்தது. சரியாக விடியவில்லை! ஆகவே படம் வந்தவரைக்கும் தான்! தொ.நு.நி. நோ குற்றம், குறை! ஓகேயா?









15 comments:

  1. ஆஹா... ஒருவழியாக நம்பெருமாளைத் தரிசனம் செய்துவிட்டீர்களா. நல்லது. இருந்தாலும் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்குச் செல்லாமல் இருப்பது உத்தமம்.

    ReplyDelete
    Replies
    1. கூட்டத்தில் எல்லாம் போய் எத்தனையோ வருடங்கள் ஆகின்றன நெ.த. முன்னெல்லாம் மதுரையிலே மீனாக்ஷி கல்யாணம், சாயந்திரம் பூப்பல்லக்கு, தேர், எதிர்சேவை, அழகர் ஆற்றில் இறங்குதல்னு எல்லாத்துக்கும் ஒரே ஓட்டம் தான்! போயிட்டுப் போயிட்டு வந்து பார்ப்போம். இப்போ திருவிழா பார்க்க ஆசை இருந்தாலும் முடியாது என்பதால் போகிறதில்லை!

      Delete
  2. அட, எப்படியோ தரிசனம் ஆச்சு. கூட்டம் கண்டால் எனக்கும் அலர்ஜி. 1970 களில் தஞ்சைப் பெரிய கோவில் கும்பாபிஷேகம் சமயத்தில் கூட்டத்தின் நட்ட நடுவில் மாட்டிக்கொண்டு வெளியே வருவோமா எண்டு ஆனது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் இந்த மாதிரிக் கும்பாபிஷேஹம் எல்லாம் போனால் அவ்வளவு தான்! :)

      Delete
  3. காவிரியில் இன்னும் அதிகம் தண்ணீர் வந்ததும், இன்னும் அதிகம் படங்களை எடுத்து போடவும்.

    ReplyDelete
    Replies
    1. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பொழியப் பிரார்த்தனைகள் செய்வோம் ஐயா!

      Delete
  4. பெருமாளை கண்டதுவரை மகிழ்ச்சி அப்படியே காவிரியை நிறைக்க சொல்லிடுங்க...

    ReplyDelete
    Replies
    1. அவருக்குத் தெரியாதா? காவிரி இங்கே இல்லைனு! :(

      Delete
  5. காவிரியும் நீரும், நம் பெருமாள் தரிசனமும் அருமை. இனி கூட்டத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள். நான் கூட்டத்துக்குப் பயந்து திருமலை செல்வதைக் கைவிட்டு 6 வருடங்கள் ஆகிறது.
    விழுந்துடுவோமே என்கிற பயம் தான். மனசார திவ்ய தேசங்களை இணையத்தில் தரிசித்தாகிறது. உங்கள் ஆரோக்கியம் நல்லதாக இருக்கட்டும். ரங்கன் பார்த்துக் கொள்வான்.

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் திருப்பதிக்கு 2009 ஆம் வருடமோ அதற்கு முன்னோ போனது தான்! சந்நிதியில் என்னைப் பிடித்துத் தள்ளியதில் கீழேயே விழுந்துட்டேன்! அதனால் பயம்! :(

      Delete
  6. ஒழுங்கான கூட்டமென்றால் சமாளிக்கலாம் வாழ்க நலம்

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் ஒரே சமயம் முண்டி அடித்துக் கொண்டு சுவாமியைப் பார்க்க ஆசை! நாங்க ஓரமா நின்னாலும் பிடிச்சுத் தள்ளியதில் நடுவுக்கு வந்துட்டோம்! :(

      Delete
  7. இப்பவாவது பெருமாளை பார்த்தீங்க தானே...!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க முதல் வருகை? நன்றி.

      Delete
  8. ரங்கநாதர் வருகைக்காக காவிரியில் நீர் திறந்து விட்டது மகிழ்ச்சி.

    இதேபோல காவேரி நிறைந்தால். ...

    ReplyDelete