மஹிஷியின் தவத்தால் மகிழ்ந்தான்,பிரம்மா. அவள் கேட்ட வரமோ கிறுகிறுக்க வைத்தது. அவள் அப்படி என்ன கேட்டாள்? "ஹரியும், ஹரனும் இணைந்து உருவாக்கிய குழந்தையால் மட்டுமே எனக்கு அழிவு வரவேண்டும். அதுவும் அந்தக் குழந்தை பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும். பூமியில் 12 ஆண்டுகளாவது வாழ்ந்திருக்க வேண்டும். நான் இறந்த பிறகு என் உடல் மீது சூரிய வெளிச்சம் பட்டால் என் உடல் வளர வேண்டும்." இவையே அவள் கேட்டது. அவள் நினைத்தது என்னவென்றால் எப்படி ஒரு ஆணும், ஆணும் இணைந்து குழந்தை பெற முடியும்? அப்படியே பிறந்தாலும் அந்தக் குழந்தை பூவுலகுக்கு எவ்வாறு வரும்? வந்தாலும் 12 வயதுப் பாலகனால் இத்தனை பலம் வாய்ந்த நம்மை என்ன செய்ய முடியும்?" என்பதே!ஆட்டுக்குக் கூட வாலை அளந்தே வைக்கும் அந்த சர்வேசன் மஹிஷிக்கு மட்டும் முடிவை வைக்காமலா இருப்பான்? என்றாலும் அவள் எத்தனை காலம் இருக்க வேண்டுமோ அத்தனை காலம் இருந்தே ஆகவேண்டும் அல்லவா?
"உன் எண்ணப்படியே ஆகட்டும்!" என்ற வரம் மஹிஷிக்குக் கிடைத்தது. அவள் ஆற்றல் அதிகரித்தது. அனைவருக்கும் தொல்லை கொடுப்பதே அவள் சந்தோஷம் ஆயிற்று. இங்கே ஹரியும், ஹரனும் இணைய வேண்டுமே? பாற்கடல் கடைந்த போது அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டி வந்த மோகினியாகத் திருமால் உருமாறினார். சிவனும் ஹரியும் இணைந்தனர். சாஸ்தா பிறந்தார். தர்மத்தை நிலைநாட்டுவான் இவன் எனப் பெற்றவர்களால் அருளப் பெற்றார் சாஸ்தா. பூதகணங்களுக்கெல்லாம் நாதன் என்பதால் "பூத நாதன்" எனப் பெயர் பெற்றவன். இந்திராணியைக் காத்தவன். எப்படித் தெரியுமா? "கந்த புராணம், நம் சொந்த புராணம்" எனக் கூறி வந்த வாரியார் ஸ்வாமிகள் கூறிய தகவல் இது:
"சூரபத்மனால் விரட்டப் பட்ட இந்திரன், சிவனைப் பூஜிக்கக் கைலாயம் செல்ல விரும்பியபோது இந்திராணியைத் தனியே விட்டுச் செல்ல நேர்ந்தது. அப்போது இந்திராணி தனியே இருக்கப் பயந்தாள். அரக்கர்கள் வந்து என்னைத் தூக்கிச் சென்றால்? எனப் பயப்பட்டாள். இந்திரன் சாஸ்தாவின் துணையை நாட, சாஸ்தா அங்கே பிரத்யட்சம் ஆகி இந்திராணியைத் தான் காவல் காப்பதாய்ச் சொன்னார். அதன்படி அவரின் கணநாதன் ஆன "மஹாகாளன்" காவல் இருக்கிறான் இந்திராணிக்கு. சூரனின் தங்கையான அஜமுகி இந்திராணியை வந்து துன்புறுத்த இந்திராணி, சாஸ்தாவைக் கூப்பிட்டு ஓலம் இடுகிறாள்.
"பூரணைக்கு இறைவா ஓலம்!
புஷ்கலை கணவா ஓலம்!
வாரணத்து இறை மேல் கொண்டு
வரும் பிரான் ஓலம்!"
எனக் கூவி அழைக்க, சாஸ்தாவின் கட்டளையின் பேரில் மஹாகாளன் அஜமுகியின் கைகளைத் துண்டித்துத் தண்டிக்கிறார். இந்த மஹாகாள மூர்த்திக்குக் காவிரிப்பூம்பட்டினத்தில் கோயில் இருப்பதாய்க் கூறுகின்றார்கள். (நான் இன்னும் பார்த்தது இல்லை! ) சாஸ்தா இந்திராணியைக் காத்த இடமானது "கைவிடாஞ்சேரி" என்ற பெயரால் அழைக்கப் பட்டு, தற்சமயம் "கைவிளாஞ்சேரி'" என்று மருவியதாகவும், சீர்காழியில் தென்பாதித் தெருவில் சாஸ்தாவிற்கு என ஒரு கோயில் இருப்பதாகவும், கூறுகின்றனர். மேற்கண்ட நிகழ்ச்சி நடந்த இடம் சீர்காழி என்று கந்தபுராணக் குறிப்பு சொல்லுகிறது.
சாஸ்தா பிறந்துவிட்டார். பூதநாதனாகிக் காவல் தெய்வம் ஆகி, தர்மத்தை நிலைநாட்டவும் தொடங்கி விட்டார். அப்போது நேபாள நாட்டு மன்னனான பலிஞன் என்பவன், தனக்கு ஏற்பட்ட முதுமையைப் போக்கிக் கொள்ள வழிதேடிக் கொண்டிருந்தான். காளி உபாசகன் ஆன மன்னன் பலிஞன், மந்திர, தந்திரங்களில் தேர்ச்சி பெற்றவனும் ஆவான். ஆகவே மந்திர, தந்திரங்களைச் செய்யும் சிலர் மன்னனிடம் வந்து , கன்னிகை ஒருத்தியைக் காளிக்கு நரபலி ஆகக் கொடுத்தால் நீ நினைத்தது நடக்கும் என அவன் ஆவலைத் தூண்டினார்கள். கன்னிகை ஒருத்தியைத் தேடிக் கண்டு பிடித்தான் மன்னன் பலிஞன். அவளோ சிவனைச் சிந்தையில் நிறுத்தி, எந்நேரமும் அவனையே ஒருமுகமாய்த் தியானிப்பவள். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், சிவமந்திரத்தை மறக்காமல் கட்டுண்டு கிடந்து, நரபலியை எதிர்நோக்கிக் கொண்டிருந்த நிலையிலும், "நமசிவாய" மந்திரத்தைச் சிந்தையில் நிறுத்தி, தியானித்தவண்ணம் இருந்தாள்.
தன் அடியாளைக் கஷ்டப் படுத்தும் எண்ணம் அந்த ஆதிசிவனுக்கு ஏது? மன்னனுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும், கன்னிகையையும் காக்க வேண்டும் என எண்ணிய ஆதிசிவன், கன்னியைக் காக்குமாறு காவல்தெய்வம் ஆன சாஸ்தாவிடம் பொறுப்பை ஒப்புவிக்க சாஸ்தாவும் விரைந்து வந்து கன்னியைக் கட்டுக்களில் இருந்து விடுவித்து அவளைக் காத்தார். மன்னன் பார்த்தான், கன்னியைக் கட்டி இருந்த கட்டுக்கள் தாமாகவே திடீரென விலகியது மட்டுமே அவனுக்குத் தெரிந்தது, சாஸ்தா கண்ணுக்குத் தெரியவில்லை. என்ன மாயம்? எனப் பிரமித்த மன்னன், தன்னுடைய மந்திர, தந்திர அஸ்திரங்களைப் பிரயோகம் செய்தான். பூதநாதன், இந்தப் பூதங்களுக்குப் பயப்படுபவனா? ஒன்றும் பலிக்கவில்லை, மன்னன் மிரண்டான், என்ன செய்வது எனப் புரியவில்லை!!!!!!!
சாஸ்தா தன் உருவைக் காட்டி அருளினார். "மன்னா! மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள நீ, இவ்வாறு கன்னியைக் காவு கொடுக்கலாமா? அதுவும் அன்பே வடிவான, அன்பு ஒன்றுக்கு மட்டும் கட்டுப் படக்கூடிய அன்னையைத் திருப்தி செய்வதாய் நினைத்துக் கொண்டு, அன்னைக்குப் பிடித்தமில்லாத ஒரு விஷயத்தில் இறங்கலாமா?" எனக் கேட்டு பலிஞனுக்கு உண்மையை உணர்த்தவே பலிஞன் மனம் மாறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு இல்லாமல், தன் மகள் ஆன புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு வாழ்வு தர வேண்டும் எனவும் சாஸ்தாவைக் கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாறே புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டார். யார் இந்தப் புஷ்கலை? ஏன் சாஸ்தாவைத் திருமணம் செய்து கொண்டாள்? சாஸ்தாவிற்குக் கல்யாணம் ஆகி விட்டதா? அப்படி என்றால் ஐயப்பன் யார்? எல்லாம் வரும் நாட்களில்!!!!!!!!!
சத்ய பூர்ணர் என்ற ஒரு மஹரிஷி இருந்தார். அவருக்கு இரு பெண்கள், இந்த இருவரும் தங்கள் திருமணம் ஆவதற்காகவும், ஹரியின் புதல்வனை மணக்கவேண்டும் என்பதற்காகவும் "கல்யாணம்" என்ற விரதம் இருந்தார்கள். இறைவன் அவர்களுக்கு அடுத்த பிறவியில் அவர்களின் ஆவல் பூர்த்தி அடையும் என வரம் அளிக்க ஒருத்தி நேபாள மன்னனின் மகள் ஆன புஷ்கலையாகப் பிறந்து, சாஸ்தாவை மணக்கிறாள். மற்றொருத்தியான பூரணையானவள், வஞ்சி மாநகரை ஆண்டு வந்த பிஞ்சகன் என்னும் மன்னனுக்கு மகளாய்ப் பிறந்து வளர்ந்து மணப்பருவம் எய்தி இருந்தாள். அப்போது ஒருமுறை வேட்டைக்குச் சென்ற மன்னன் தன்னிலை மறந்து, நேரம் மறந்து வேட்டையாடுதலில் மெய்ம்மறந்து தன்னுடன் வந்தவர்களைப் பிரிந்து தனித்து விடப்பட்டார். இரவாகிற்று. தான் தனித்து இருப்பதை அப்போதே உணர்ந்த மன்னர் தன்னந்தனியாகக் காட்டில் மாட்டிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். திடீரென அவரைச் சுற்றிலும் கூச்சல், குழப்பம், வெடிச்சிரிப்புக்கள், அழுகை ஓலம்!!!! திகைத்துப் போன மன்னர் சுற்றும், முற்றும் பார்த்தால், அங்கே அவர் கண்களுக்குத் தெரிந்தது ஒரு மயானம், அங்கே பேய்களும், பூதங்களும் இரவில் ஆட்டம் போட்டு, பாட்டுப் பாடிக் கொண்டு பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. கதிகலங்கிய மன்னனுக்கு உடனேயே நினைவு வந்தது பூதநாதனாகிய சாஸ்தாதான். உடனேயே அவரை நினைத்துக் கூவினான் மன்னன். "பூதநாதனே சரணம்! செண்டாயுதத்தை ஏந்தியவனே சரணம்! மோகினி மைந்தனே சரணம்!" எனப் பலவாறு வேண்டித் துதித்தான். ஐயன் அங்கே வந்து தன் அருள் கண்களால் நோக்க பூதகணங்கள் தங்கள் தலைவனைக் கண்டதும் அடிபணிந்து விலகிச் சென்றன. "பயம் வேண்டாம்" என மன்னனுக்கு அபயம் அளித்த சாஸ்தா, தன் குதிரையில் அவரைப் பத்திரமாக ஏற்றி அரண்மனையில் கொண்டு சேர்க்கிறார்.
மனம் மகிழ்ந்த மன்னன், பூதநாதனைப் பார்த்து, "ஐயனே! அடியேனின் மகள் பூர்ணை திருமணப்பருவம் எய்தி இன்னும் திருமணம் ஆகவில்லை. தாங்கள் அவளை ஏற்று ரட்சிக்கவேண்டும்." என்று கேட்டுக் கொள்ள சாஸ்தாவும் அவளின் பிறப்பையும், தன்னை மணக்கவே அவள் பிறந்து காத்திருப்பதையும் உணர்ந்து அவளை ஏற்றுக் கொள்கிறார். பூர்ணையை ஐயன் ஏற்றுத் திருமணம் புரிந்து கொண்டதைக் கேள்விப் படுகிறான் பலிஞன். தன் மகளுக்கு சாஸ்தா துரோகம் செய்து விட்டதாய் நினைக்கிறான். மனம் வெதும்புகிறது. ஆத்திரத்தில் உள்ளம் கொதிக்கிறது. புஷ்கலையிடம் சென்று, நடந்ததைக் கூறுகிறார். அனைத்தும் இறை அருளே, தன் முற்பிறப்பின் தவமே என்பதை உணர்ந்த புஷ்கலையோ மெளனம் சாதிக்க பலிஞன் ஆத்திரம் அதிகம் ஆகிறது. சாஸ்தாவிடமே சென்று நீதி கேட்கிறார்.
"ஐயனே! என் மகள் இருக்க நீ பூர்ணாவையும் மணந்து அவளுக்கும் வாழ்வளித்தது நியாயமா? இப்படி ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்து மற்றொரு பெண்ணை மணந்த நீ அடுத்த பிறவியில் பூவுலகில் திருமணம் ஆகாத பிரம்மச்சாரியாக வாழ்வாய்! நீ 12 வயது பாலகனாய், திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்துவிட்டு, 12-ம் வயதிலேயே மறைவாய்! உனக்கென உரிமையான ராஜ்யமும் உனக்குக் கிடைக்காது!" எனச் சாபம் கொடுக்கிறான். ஐயன் இதழ்களில் புன்முறுவல். "பலிஞனே! ஏற்கெனவே நான் பூவுலகில் மானிடனாக வாழவேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது. அதற்காக நான் பூவுலகிற்குச் செல்ல வேண்டும். அங்கே நான் எடுத்த காரியத்தை முடிக்க பிரம்மசாரியாகவும் இருக்க வேண்டும். இப்போது உன் சாபம் அதை மிக எளிதாக்கி விட்டது. ஆனால் என்னுடைய பூவுலகின் வாசத்தின் போது நீயே எனக்குத் தந்தையாக வந்து என் மேல் பாசம் காட்டி வளர்ப்பாய்!! உனக்கு மகனாக நான் வந்து என்னுடைய அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவேன். நீ பூவுலகில் பந்தள நாட்டுக்கு அரசனாக ஆட்சி செய்யும் காலத்தில் நான் உன்னிடம் வந்து சேருவேன்!" எனக் கூறுகிறார். இப்போது பந்தளத்துக்குச் செல்லும் முன்னர், புஷ்கலையை ஐயன் திருமணம் செய்தது பற்றிய செவிவழிச் செய்தி ஒன்று.
மதுரையைச் சேர்ந்த செளராஷ்டிர குலத்தவர்கள் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவர்கள். அவர்களால் நெய்யப்படும் பட்டுக்களைச் சேர மன்னன் விரும்பி வாங்குவது உண்டு,. அவ்விதம் வாங்கி வந்த போது ஒரு முறை செளராஷ்டிர நெசவு வணிகர் ஒருவர் மன்னனுக்குப் பட்டாடை தயாரித்து எடுத்துச் சென்ற சமயம் தன்னுடன் தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கின்றார். செல்லும் வழியில் "ஆரியங்காவு" என்னும் ஊர் வரும்போது இருட்டி விடுகிறது. அதனால் அந்தக் கால வழக்கப் படிக் கோயிலில் தங்குகின்றனர், தந்தையும், மகளும். அங்கே கோயிலில் ஐயப்பனின் உருவத் திருமேனியைக் கண்ட புஷ்கலை ஐயன் மேல் அளவற்ற காதலும், பக்தியும் கொள்கிறாள். மறுநாள் சேரமன்னனைக் காணத் தந்தை கிளம்பும் சமயம், தந்தையுடன் செல்ல மறுக்கிறாள். கோயிலிலேயே தான் தங்கப் போவதாய்ப் பிடிவாதமாய்ச் சொல்லுகிறாள். வணிகர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை மகள். நீங்கள் திரும்பும்போது உங்களுடன் வருகிறேன் என்றே திரும்பத் திரும்பச் சொல்லுகிறாள். என்ன செய்வதென்று புரியாத வணிகர், அந்தக் கோயிலின் மேல்சாந்தியின் வேண்டுகோளின்படி, மகளைக் கோயிலிலேயே மேல்சாந்தியின் பொறுப்பில் விட்டுவிட்டு அரை மனதாய்ச் செல்லுகிறார்.
ஏற்கெனவே குழப்பத்தில் ஆழ்ந்த மனது. மகளைத் தனியாய் விட்டு விட்டு வந்தோமே என்ற கவலை! வழியில் அடர்ந்த காடு. அதில் இருக்கும் மிருகங்கள். குழப்பத்துடன் சென்ற வணிகர் தனியாய் வந்த ஒரு ஒற்றை யானையிடம் மாட்டிக் கொள்ளுகிறார். கலக்கமுற்ற அவர் தான் ஆரியங்காவில் பார்த்த ஐயப்பனின் திருவுருவை நினைத்துக் கொண்டு, ஐயனே காப்பாற்று என வேண்டிக் கொள்ள, அங்கே ஒரு வாலிப வயது வேடன் வருகிறான். என்னவென அவன் விசாரிக்க, யானையைக் காட்டுகிறார் வணிகர். தன் ஒரு சைகையாலேயே அந்த யானையை அடக்குகிறான், அந்த வேடன். அவனுக்குப் பரிசாகத் தன்னிடம் இருந்த பட்டாடைகளில் ஒன்றைத் தருகிறார் வணிகர். மனம் மகிழ்ந்த வேடன் உடனேயே அதை அணிந்து, " நான் எப்படி உள்ளேன், இந்த ஆடையில்?" என வணிகரைக் கேட்கிறான். இளைஞனின் செளந்தரியத்தைப் பார்த்து வியந்த வணிகர்,"மாப்பிள்ளை போல் இருக்கிறாய்? வேறே என்ன வேண்டும் உனக்கு?" எனக் கேட்கிறார்."நான் கேட்பதைக் கொடுப்பீர்களா?" என வேடன் கேட்க, "என் உயிரைக் காத்த உனக்கு என்ன வேண்டுமானாலும் தருவேன்!" என வணிகர் சொல்கின்றார். "உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள்" என வேடன் கேட்க, தனக்கு மகள் இருப்பது இவனுக்கு எவ்வாறு தெரியும் என வணிகர் வியப்பில் ஆழ்ந்தார். அவனிடம் சரி எனச் சம்மதிக்க, வேடன் அவரை நீங்கள் திரும்பும்போது என்னை ஆரியங்காவு கோயிலில் சந்தியுங்கள் எனச் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான்.
மன்னனைக் கண்டு திரும்பிய வணிகர் திரும்புங்கால், ஆரியங்காவுக் கோயிலை அடைகிறார். மகள அங்கே இல்லை. எங்கேயும் இல்லை. இரவு முழுதும் தேடுகிறார். மேல்சாந்தியும் தேடுகிறார். இரவாகிவிடுகிறது. மேல்சாந்திக்கு அசதி மேலிட்டுத் தூங்கிவிடுகிறார். தூக்கத்தில் கனவு. ஐயப்பன் தோன்றி, புஷ்கலை தன் மீது கொண்ட பக்தியினால் அவளைத் தன்னுடன் ஐக்கியப் படுத்திக் கொண்டதாய்ச் சொல்கின்றான் ஐயன். திடுக்கிட்டு எழுகிறார் மேல்சாந்தி. காலையில் கோயில் திறந்து ஐயன் சந்நிதியைக் கண்டால் காட்டில், வணிகர் கொடுத்த பட்டாடை ஐயன் இடுப்பில் உள்ளது. அதே மாப்பிள்ளைக் கோலம். வணிகர் தன் மகளின் தீராத பக்தியையும், அவளின் பக்திக்குக் கிடைத்த முக்தியையும் புரிந்து கொள்ளுகின்றார்.
டிஸ்கி: இது மதுரைப் பக்கத்தில் செளராஷ்டிர குலத்தவரிடம் வழங்கும் கதை. இதற்கான ஆதாரம் ஏதும் என்னிடம் இல்லை. ஆனால் ஒவ்வொரு வருஷமும் செளராஷ்டிர குலத்தைச் சேர்ந்த, ஆரியங்காவு தேவஸ்தானத்தைச் சேர்ந்த மகாஜனங்கள், மார்கழி மாதம் 9-ம் தேதிக்கு மேல், 15-ம் தேதிக்குள்,இந்த வைபவத்தை ஐயனின் திருமண உற்சவமாய்க் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு வருஷமும் பெண்வீட்டாராக செளராஷ்டிர மகா ஜனங்கள் ஆரியங்காவு சென்று வரிசைகள் செய்து, "பாண்டியன் முடிப்பு" என்ற தாம்பூலத் தட்டுக் கொடுத்துத் திருமணம் நிச்சயித்து, சாஸ்திர, சம்பிரதாயங்களின் படி ஐயனுக்கும், அம்மைக்கும் திருமணம் செய்விக்கின்றனர். இதற்கான திருமணச் சடங்குகளைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் நடத்தி வைப்பதாகவும் சொல்லுகின்றனர்.
கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா!
ஆரியங்காவு நிகழ்வு உண்மை அம்மா...
ReplyDeleteவாங்க டிடி, அப்படித் தான் நானும் கேள்விப் பட்டேன்.
Deleteகதைக்குள் கதை கதைகுள் கதை என்று நம் புராணம் போய் கொண்டே இருக்கும்.
ReplyDeleteகாரண காரியங்களுடன் தான் அத்தனையும் நடக்கும்.
கன்னிமூல் கண்பதியே சரணம் ஐயப்பா.
வாங்க கோமதி! ஆமாம், காரணகாரியங்கள் இல்லாமல் எதுவும் இல்லை. உங்கள் தங்கை பெண் சௌகரியமாக இருப்பார் என நம்புகிறேன். ஆனாலும் மறுபடியும் புதுக்கோட்டை உட்பட ஐந்து நகரங்களுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கின்றனர். எங்கள் பிரார்த்தனைகள்.
Deleteஎழுத ஆரம்பித்தால் கட கட என எழுதித் தள்ளி விடுகிறீர்கள். உங்கள் இடுகையின் மூலம் புதுச் செய்திகளைத் தெரிந்து கொள்கிறேன்.
ReplyDeleteவாங்க நெல்லை, ரொம்பப் புகழாதீங்க! இது நான் ஏற்கெனவே பத்து வருஷங்கள் முன்னர் எழுதினதுனு நேத்தே போட்டிருந்தேன். ஒழுங்காப் படிக்கணும்! :))))))
Deleteஅப்படி இல்லை கீசா மேடம்... உங்கள் பரந்துபட்ட அறிவு, எழுத்து ஆச்சர்யமானதுதான். தகுதியான பாராட்டுகள்தான் உங்களுக்கு.
Deleteசிறப்பு அக்கா.
ReplyDeleteஎங்கிருந்துதான் திரட்டுவீர்களோ இத்தனை விவரங்களையும்... எல்லாவற்றுக்குமொரு முன்கதை இருக்கிறது, நடப்பவை எல்லாம் காரணமாகவே என்பதையும் சொல்லவே இது மாதிரி கதைகள் சொல்லப் படுகின்றன போலும்..
வாங்க ஸ்ரீராம், தகவல்கள் திரட்டுவதுதான் கொஞ்சம் கடினம். மற்றபடி அப்போத் திரட்டியவை சரியா இருக்கானு சரி பார்த்துக் கொண்டே அதன் பின்னர் பதிவை வெளியிட்டேன்.
Deleteநிறைய புதிய விடயங்கள் தந்தீர்கள் தொடர்கிறேன்.
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, நன்றி.
Deleteபடிக்கப் படிக்கப் பரவசம்...
ReplyDeleteசாமியே சரணம் ஐயப்பா!...
நன்றி துரை!
Deleteஉங்கள் ஐயப்ப தொடரில் ஏகப்பட்ட விஷயங்கள்.
ReplyDeleteஅதிசயங்கள் தொடர்கின்றன போலும். சற்றுமுன் விகடன் ஆன்லைனில் படித்த விஷயம் பரவசம் தருகிறது:
வேலூருக்கு அருகிலுள்ள கிராமமான ஒடுகத்தூர் கொட்டாவூர். கிராமமக்கள் ஐயப்பனுக்குக் கோவில்கட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கான ஐயப்பன் சிலை சம்பந்தமாக ஊர்ப் பெரியவரிடம் ’அருள்வாக்கு’ கேட்டிருக்கின்றனர். அவரும் உடனே சொல்லியிருக்கிறார். ’கிராமத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் வனப்பகுதியில் ஒரு பெரிய பாறை உள்ளது . அதற்கருகில் தோண்டினால் உங்களுக்கு வேண்டிய ஐயப்பன் சிலை கிடைக்கும்!’ ஊர்மக்கள் மகிழ, இளைஞர்களில் சிலர் (அறிவுசீவிகளோ, வெறும் அறியாதவர்களோ?) சிரித்து பெரியவரைக் கேலி செய்திருக்கின்றனர். ஆனால், நம்புபவர்களுக்கு நம்பிதானே முக்கியம்? அவர்கள் வனப்பகுதிக்குப் பறந்தார்கள். பாறையைப் பார்த்தார்கள். அருகில் தோண்ட ஆரம்பித்தார்கள். ஏமாற்றவில்லை அந்த ஹரிஹர சுதன்.. கிடைத்தான், அழகிய சிலை ரூபமாக. நம்பிய அப்பாவிகள் நெஞ்சு நிமிர்த்தி சொல்லியிருப்பார்கள் சரணம் ஐயப்பா!
குறுக்கே யாரோ ஓடி வனத்துறையிடம் சொல்ல, அவர்கள் வந்து விஜாரித்திருக்கிறார்கள் ‘என்ன, இங்கே கலட்டா என்பதுபோல. கிராமத்துமக்கள் விபரம் சொல்லி, தாங்கள் கட்டப்போகும் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே ஐயப்பனை குங்குமம், மஞ்சள், மாலையெல்லாம் அலங்கரித்துவிட்டன! வனத்துறை அதிகாரிகள் ’நாங்கள் மேலிடத்தில் அனுமதி பெற்று உங்களுக்கு சொல்வோம். அதுவரை இருக்கட்டும் ஐயப்பன் இங்கேயே’ என்றிருக்கிறார்களாம். ஏழைகள் என்ன செய்வார்கள்? காத்திருக்கிறார்கள்-கண் திறப்பான் இறைவன் என..
வாங்க ஏகாந்தன், விரைவில் ஐயன் கண் திறந்து விக்ரஹம் பிரதிஷ்டை ஆகப் பிரார்த்திக்கிறேன். அவன் நினைத்தால் ஆகாதது இல்லை.
Deleteசில தினங்களுக்கு முன்பு..
ReplyDeleteஎனில் - வெள்ளிக்கிழமை பின்னிரவு கழிந்து விடியும் வேளையில் கண்ட கனவு...
சொல்லலாமா.. கூடாதா.. தெரியவில்லை..
ஏனெனில் தெய்வ வாக்குகளைக் கேட்டால்
அதை வெளியே சொல்லக் கூடாது என்ற தாத்பர்யம்...
இருந்தாலும் அந்தக் கனவின் உட்பொருள்!.. அதுதான் ஆச்சர்யம்..
எனவே
கனவை சொல்லலாமா ... கூடாதா.. என்பதில் - கீதாக்கா அவர்கள் என்ன சொல்கிறார்களோ
அதையே மூத்தோர் வாக்காக ஏற்றுக் கொள்கிறேன்....
அன்புடன் கீதாக்கா அவர்கள் விடையளிக்கவும்!..
ம்ம்ம்ம்ம்? எனக்கும் என்ன சொல்வதுனு புரியலை துரை! ஆனால் கனவின் உட்பொருள் நல்ல விஷயமாக இருப்பதால் பகிர்ந்து கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. ஐயப்பன் அருளட்டும்.
Delete