எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 16, 2018

"கஜ, கஜ, கஜேந்திரா!" கஜா வந்துட்டான்!

கஜா புயல் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி. தமிழ் "தி இந்து" கூகிளார் வாயிலாக!

இந்தப் புயலுக்கு "கஜா"னு பெயர் வைச்சதாலேயோ என்னமோ தெரியலை தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் விடாமல் எட்டிப் பார்த்திருக்கான். முன்னால் வந்த "வார்தா"வோ அதுக்கு முன்னர் வந்த "தானே" மற்றும் மற்ற புயல்களோ அப்படி ஊரெல்லாம் சுத்தலை! இவனுக்குக் கால் நீளமா முளைச்சிருந்திருக்குப் போல! நாலு நாளா வரேன், வரேன்னு சொல்லிட்டுப் போக்குக் காட்டிக் கொண்டு இருந்தவன் நேற்றிரவு பனிரண்டு மணிக்கு உள்ளே நுழைஞ்சுட்டான். இரவெல்லாம் மழை பெய்திருக்கு. இப்போ வெயில் தலை காட்டுகிறது. ஆனால் "கஜா" புயலின் காரணமாக மழை  புல்லுக்கும் ஆங்கே பொசிந்து கொண்டிருந்திருக்கிறது. மழையே காணாத திருச்சி, ஸ்ரீரங்கத்திலும் மழை வருது, வந்திருக்குன்னால்!  நல்ல வேகமா இங்கேயே காற்றடிக்குது. எங்க வீட்டு ஸ்வாமி அலமாரியைப் பார்த்தவங்க அது எவ்வளவு உள்ளே தள்ளி இருக்குனு புரியும். அங்கேயே விளக்கு ஏற்றி வைத்தால் அணைந்து போகிறது. சமையலறையிலும் ஜன்னல் வழி வேகமான காற்று! இரவெல்லாம் மழை! காலை ஐந்து மணியிலிருந்து வேகமான காற்று! அவ்வப்போது தூறல்களும். இன்னிக்கு ஆண்டாள் வரலை! இன்னைக்குத் துலாமாசக் கடைசி நாள்   கடைமுகம் ஆண்டாளை எப்படியேனும்  இன்னிக்குப் பார்க்கலாம்னு நினைச்சேன். ஆனால் கீழேயே போகலை!  அப்போது தூற்றல் பலமாக இருந்ததால் நம்பெருமாளின் திருமஞ்சனத்துக்காகத் தங்கக் குடத்தில் காவிரி நீர் எடுக்க   ஆண்டாளும் வரவில்லை! 

கிட்டத்தட்ட ஒரு பதிவு எழுதியும் மின்சாரம் போனதால் சேமிக்க முடியாமல் பதிவு காணாமல் போய்விட்டது! :))) காலை ஐந்தரைக்கே போன மின்சாரம் இப்போத் தான் வந்திருக்கு! பயங்கர வேகத்தோடு காற்று அடித்தது.  காற்று வேகத்தோடும் சப்தத்தோடும் "உய்ங்க்" எனக் கோபமாக வீசிக் கொண்டிருந்தது. மரங்கள் அனைத்தும் காற்றின் வேகத்துக்குக் கட்டுப்பட்டு சாய்ந்தாடம்மா விளையாடிக்கொண்டிருந்தன. அப்படி விளையாடாத மரங்கள் கீழே விழுந்தன.இங்கேயே இப்படி எனில் கடலோர மாவட்டங்களில் கேட்கவே வேண்டாம். சற்று முன் தொலைக்காட்சிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைக் காட்டினார்கள். அவற்றில் திருச்சியும் இடம் பெற்றிருக்கிறது.

புதுக்கோட்டை, திண்டுக்கல் வரை இம்முறை கஜா போய் எட்டிப் பார்த்திருக்கு. மழை இங்கே இரவு பெய்தது தான். காலை சிறிது தூற்றல்! அப்புறமா அதுவும் நின்று காற்று மட்டுமே அடித்துக் கொண்டு இப்போக் காற்றும் நின்று வானம் வெளி வாங்கி இருக்கு! இங்கே எங்க குடியிருப்பு வளாகத்தில் இருந்து அம்மாமண்டபம் செல்லும் வழியில் நடைமேடையில் உள்ள மரங்கள் கிளைகள் முறிந்து போக்குவரத்துக்குக் கொஞ்சம் இடையூறு! மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர்கள் வேறே பிரச்னைகள்! இப்போத் தான் ஒரு வழியா மின்சாரம் வந்திருக்கு!  இனி தான் ஒவ்வொன்றாக மற்ற வேலைகளைப் பார்க்கணும். இன்னிக்கு வழக்கமான பால்காரர் வரவில்லை. ஆனால் "ஆவின்" பால் கிடைச்சது! :)

50 comments:

  1. கஜா புயல் இலங்கையிலும் நெடுந்தீவை எட்டிப் பார்த்த பின்னே தமிழகத்திற்கு வந்திருக்காம்.
    பொது மக்கள் இழப்பின்றித் தப்பினால் போதும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க காசிராஜலிங்கம். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகை தந்தமைக்கும் புதிய தகவலுக்கும் நன்றி.

      Delete
  2. மதுரையிலும் காற்றுடன் மழை பெய்து கொண்டு இருக்கிறது.
    நேற்று இரவு முதல் மழை.
    இன்னும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.
    இங்கு கரண்ட் போனாலும், ஜெனரேட்டர் போட்டு விடுவார்கள், அதனால் கஷ்டம் இல்லை.
    இன்னும் இரண்டு மழை மதுரையில் நல்ல மழை இருக்கும் என்று சொல்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு! இங்கேயும் குடியிருப்பு வளாகத்தில் மோட்டார் பம்ப் போட்டு நீர் ஏற்றவும் கூட ஜெனரேட்டர் வசதி உண்டு. நான் பொதுவாகச் சொன்னேன். அதோடு மின்சாரம் இல்லைனா வைஃபை கிடைக்காது. செல்லில் மொபைல் டாட்டா இருந்தாலும் செல் மூலம் இணையத்தில் சுற்றுவது இல்லை. ஆகவே மின்சாரம் இல்லைனா இணையத்தில் இருக்க மாட்டேன். எப்போதேனும் முகநூல் பார்ப்பேன். வாட்சப் பதிவுகள் பார்ப்பேன். அவ்வளவு தான்.

      Delete
  3. ஸ்ரீரங்கத்தில் நேரில் பார்க்காத குறையை உங்கள் பதிவு தீர்த்தது!
    புயலுக்கு பின்னே அமைதி கிடைத்ததா?!!:))

    ReplyDelete
    Replies
    1. வாங்க மிகிமா, ரொம்ப நாளாக் காணோமே உங்களை! இங்கே இப்போ நல்லா வெயில் வந்தாச்சு!

      Delete
  4. கஜா சென்னையிலும் கொஞ்சம் கால் பதிச்சுருக்கான் அங்கு மழை பெய்தது போல...

    இங்கு பங்களூரில் ஏது புயல் ஆனால் நேற்று இரவு கொஞ்சமே கொஞ்சம் மழை....நேற்று பகல் எல்லாம் வானம் கருமேகக் கூட்டம். அதனால் ஒரே சிலு சிலுப்பு...பகலிலும். ஆமாம் கடலோர மாவட்டங்களில் வார்னிங்க் கொடுத்துக் கொண்டேதான் இருந்தார்கள்....ஒரு வழியாகக் கடந்துவிட்டான் வேதாரண்யத்தில். நிறைய வீடுகள் இடிந்திருப்பதாகத் தெரிகிறது. ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது போல...

    புயல் கடந்துவிட்டது இனி உள்மாவட்டங்களில் பலத்த மழைனு சொல்லிருக்கே செய்தி...

    கீதா

    கேரளத்திலும் சில மாவட்டங்களில் மஞ்சள் ஆரஞ்சு இப்ப ரெட் நிற எச்சரிக்கை கொடுத்து மக்களை முக்கியமான சாமான்களை சர்டிஃபிக்கேட்டுகளை பத்திரமாக ப்ளாஸ்டிக் கவருள் போட்டு வைத்து, மருந்துகள், பணம், நகைகள், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி என்று ஒரு லிஸ்ட் கொடுத்து எல்லாம் பத்திரமாக பேக் செய்து ரெடியாக இருக்கச் சொல்லி அரசு வெளியிட்டிருந்தது.

    தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு வந்தாச்சு. கொச்சியைக் கடந்து அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத்துடன் தொடரும் என்றும் அங்கெல்லாம் , கோட்டயம், எர்ணாகுளம், பத்தனந்திட்டா திருவல்லா போன்ற இடங்கலில் அதிக மழை பெய்யும் என்றும் செய்தி.

    எங்கள் பகுதி மலையோரப்பகுதி ஊட்டி அருகில். பாதிப்பு இல்லை.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. @ Thulasidaran, Geetha, " கஜா" இப்போக் கொடைக்கானலில் மையம் கொண்டவன் கொச்சி வழியா அரபிக்கடலுக்குப் போறான். அவன் மறையவில்லை. மங்கவில்லை. கொடைக்கானல் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை! டேனீ, பெரியகுளம், மேல்மங்கலம் பக்கம் நல்ல மழை! வராக நதி மஞ்சளாற்றில் வெள்ளப்பெருக்கு! :))))

      Delete
    2. கஜா புயலால் நாகை மாவட்டம் முக்கியமாய் வேதாரண்யம் அதிகம் பாதிப்பு! ஆனால் இம்முறை தமிழக அரசு மிகுந்த விழிப்புணர்வோடு செயல்பட்டுப் பெரும்பான்மையானவர்களிடம் பாராட்டுகள் வாங்கியிருக்கிறது. ஆங்காங்கே ஒன்றிரண்டு குறைகள் இருக்கலாம். பெரும்பான்மையான மக்களிடம் இருந்து புகார்கள் இல்லை. குறை சொல்லவில்லை. இங்கேயும் திருச்சியில் சில இடங்களில் மரங்கள் வீழ்ந்ததாகச் சொல்கின்றனர். என் பெரியம்மா பையருக்குத் திருவாரூர் மாவட்டம் குன்னியூரில் தென்னந்தோப்பே அழிந்து விட்டது. சுமார் 150 தென்னை மரங்கள்!

      Delete
    3. அரசு இந்த முறை எச்சரிக்கை ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளதகவே தெரிகிறது. நான் பெங்களூரில் இன்னும் குளிர் ஆரம்பிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தேன், இன்று சிலுசிலுவென்று காற்று, அதனால் குளிர்.

      Delete
    4. குன்னியூர் பண்ணை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

      Delete
    5. வாங்க பானுமதி, குன்னியூர்ப் பண்ணை சாம்பசிவ ஐயர் இவங்களுக்கு நெருங்கிய உறவு. :))))

      Delete
  5. கஜா பறவாயில்லை பெரிய தாக்கம் எதுவும் ஏற்படுத்தாதவரை நன்றி சொல்லோணும்.. எப்பவும் பெரிதாக எதிர்பார்த்தால், சின்னதாகி விடும், சே..சே.. இது என்ன பண்ணிவிடப் போகிறது என எண்ணும்போதுதான், பெரியதாக தாக்கம் கொடுத்து விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஞானி, அதிரடி, கடலோர மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகம். பெரும்பாலும் பாதிக்கப்பட்டை தென்னை, வாழைத் தோப்புகள்! இங்கேயும் வாழைத்தோப்புகளில் மரங்கள் விழுந்துவிட்டதாய்ச் சொல்கின்றனர். நல்லவேளையாக உயிர்ப்பலி குறித்துச் செய்தி ஏதும் இல்லை.

      Delete
  6. ஏன் கீசாக்கா நீங்கள் மில்க் பவுடர் பாவிப்பதில்லையோ? இலங்கையில் நாம் எல்லோரும் மில்க் பவுடர்தான், அதனால எந்நேரமும் பால் பற்றிய கவலை இல்லை. குடிப்பதற்கு மட்டுமே பால் வாங்குவோம். ரீ, கொஃப்ஃபி எல்லாம் பவுடரில்தான்.

    ஆனா இங்கு வந்த பின் பால்தான், பட் அது 3 லீட்டர் அப்படி வாங்கி ஃபிரிஜில் வைக்கும்போது அப்படியே இருக்கும். இருப்பினும் எனக்கு மட்டும் பவுடர் போட்டு ரீ குடிப்பதுதான் பிடிக்கும், அல்லது கொண்டென்ஸ்ட் மில்க் வச்சிருப்பேன்.. நான் கொஞ்சம் வித்தியாசம், கிட்டத்தட்ட எங்கள் மாமியைப்போல:)[கணவரின் அம்மா].. என் கணவரும் அடிக்கடி சொல்வார், நான் தன் அம்மாமாதிரியேதான் என ஹா ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, நான் இந்தப் பாக்கெட் பாலே "ஆவின்" "நந்தினி" "திருமலா" "ஆரோக்கியா" போன்றவை வாங்கிச் சாப்பிட்டதே இல்லை. சென்னையில் இருந்தவரை எங்க குடும்ப பால்கார அம்மாவுக்கு நாங்க முதல்லே எல்லாம் வங்கிக் கடன் எங்களோட சொந்த செக்யூரிடியில் வாங்கிக் கொடுத்து மாடுகள் வாங்கச் செய்தோம். அந்தப் பால் கறந்ததும் முதல்லே எங்களுக்குத் தான்! அதன் பின்னர் இருந்ததும் பெரும்பாலும் ராஜஸ்தான், குஜராத், சிகந்திராபாத், ஊட்டி போன்ற இடங்கள்! எல்லா ஊர்களிலும் நல்ல சுத்தமான கறந்த பால் கிடைத்து வந்தது. ஊட்டியில் முழுக்க முழுக்கப் பசும்பால் தான்! அதெல்லாம் சாப்பிட்டுவிட்டுப் பால் பவுடரோ, கேனில் விற்கும் பாலோ! வாய்ப்பே இல்லை! இப்போ எங்க குட்டிக் குஞ்சுலு வந்தப்போக் கூடப் பால்காரரிடம் குஞ்சுலுவுக்குனு தனியாப் பால் கொடுக்கச் சொல்லி வாங்கிக் குடிக்கக் கொடுத்தோம். அதுவும் அனுபவிக்க வேண்டாமா? அங்கே கேனில் வரும் பால் தானே! :)))) அப்புறமும் அந்த அம்மா மாட்டு வளர்ப்பை நிறுத்திய பின்னரும் அவங்க சொந்தக்காரங்க பால் கொண்டு வந்து கொடுப்பாங்க! நன்றாகவே இருக்கும். வெண்ணெய் எடுக்கலாம். இப்போவும் நான் வீட்டில் வெண்ணெய் எடுப்பேன். வாரம் ஒரு முறை!

      Delete
    2. இன்னிக்குக் காலையிலே மழை பெய்ததால் பால்காரர் வரலை. ஆவின் பால் தான். காஃபியோ, டீயோ குடிக்கவே பிடிக்கலை! பவுடர் வாங்கினால் பெரும்பாலும் அமுல் தான்! அதுவும் குலாப்ஜாமூனோ, ஐஸ்க்ரீமோ, குல்ஃபியோ, ஃபலூடாவோ பண்ணத் தான் பயன்படுத்திட்டு இருந்தேன். இப்போ எதுவும் பண்ணறதே இல்லை! அதுவும் மாமாவுக்குச் சர்க்கரை வந்ததும் இதெல்லாம் நிறுத்தியாச்சு!

      Delete
    3. கீசா மேடம்... உங்க தகவலுக்காக. நான் இன்னமும் கு.ஜா, ஐ, கு, ஃப சாப்பிடுவதை நிறுத்தவில்லை. மிக ஆர்வமாகச் சாப்பிடுவேன். சும்மா உங்களுக்குத் தெரிவதற்காகச் சொன்னேன். :-)

      Delete
    4. நீங்க முதல்லே இங்கே தங்கறாப்போல் வாங்க! கு.ஜா., ஐ.க்., கு., ஃப., எல்லாம் பண்ணித் தரேன். குல்ஃபிக்கு பாதாம், பிஸ்தா, முந்திரியை ஊற வைச்சு அரைச்சுப் பாலில் கலந்து கிளறி ஆற வைச்சுனு பண்ணுவேன். :)))) குல்ஃபி மோட் கூட இருக்கு! தேடணும். அதை வைச்சுண்டுப் பையரும், பெண்ணும் ஓடிப் பிடிச்சு விளையாடுவாங்க! :) பெண்ணுக்கு நிதானமா அதை எடுக்கத் தெரியும். பையர் அவசரம்! உடைச்சுடுவார்!

      Delete
  7. // இன்னிக்கு ஆண்டாள் வரலை! //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்கள் போஸ்ட் போடும்போதெல்லாம் ஆண்டாள் வராமல் விட்டிடுறாவே:).. அப்போ எப்போதான் செல்பி எடுத்து எங்களுக்குக் காட்டப்போறிங்க..

    அதுசரி கீசாக்கா, நெல்லைத்தமிழனும் அண்ணியும் வந்தபோது கூட்டிப்போய்க் காவிரி.. ஆண்டால்.. அம்மா மண்டபம் எதுவும் காட்டலியோ??.

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, இங்கே அரங்கனுக்குத் திருமஞ்சனம் செய்வதே ரொம்ப யோசிச்சுத் தான். வெந்நீர் தான்! அதுவும் சூடாக இருக்கக் கூடாது. சூடு சரிபார்க்கவெனத் தனி பட்டாசாரியார் உண்டு. அதோடு கொஞ்சம் வெயில் அடித்தால் அரங்கன் வெளியே வர மாட்டார். மழை பெய்தால் கேட்கவே வேண்டாம். குளிக்கவே மாட்டார். ஆகவே இன்னிக்கு மழை பெய்ததால் அரங்கன் குளிக்கவில்லை! நெல்லைத் தமிழரும் அவரோட ஹஸ்பண்டும் கோயிலிலேயே ஆண்டாளைப் பார்த்துட்டாங்க! அம்மாமண்டபம் அழைத்துப் போகலை! நேரம் இல்லை!

      Delete
    2. கீசா மேடம் - நீங்க எழுதுவதைப் படிக்கும்போது, நம்பெருமாளை உயிராக நினைத்துப் பார்த்துக்கொள்கிறார்கள் என்று நினைத்துப்பார்க்கவே சிலிர்ப்பாக இருக்கு.

      Delete
    3. @அதிரா - ஆண்டால் - அட ராமா... எங்கதான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடறதுன்னு இல்லையா?

      கீசா மேடத்து வீட்டுல நேரம் இருந்திருந்தாலும் அவங்க அம்மா மண்டபத்துக்கெல்லாம் அழைச்சுட்டுப் போயிருக்கமாட்டாங்க. மதிய உணவும் அங்கேயே சாப்பிடச் சொல்லி அதற்குத் தயார் செய்வதில் முனைந்திருப்பாங்க. எனக்குப் பேச, தெரிந்துகொள்ள ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன. நேரம்தான் மிகக் குறைவு.

      Delete
    4. நெ.த. அரங்கன் அனைவருக்குமே உயிர் தானே! அவன் இல்லையெனில் நாமெல்லாம் இயங்குவது எங்கே?

      Delete
    5. உண்மை ஆனா உண்மையில்லை. விக்ரஹம் என்பது அவன்தான் என்பது வைணவம் சொல்வது. அதை அப்படியே உயிராக மனதில் நினைப்பது அதீத பக்தர்களுக்குத்தான் சாத்தியம். அத்தகைய பக்தி சிலருக்குத்தான் வரும்.

      இந்த பிரயாணத்தில் சந்தித்தவர், மனைவி பி.எச்.டி, வெளிநாட்டு வேலை கிடைத்தது, ஆனாலும் நான் அரங்கனுக்கு சேவை செய்வதால் அவள் இங்கேயே இருந்துட்டாள் என்றார்.

      இந்த மாதிரி பக்தி..... சிலிர்ப்படையச் செய்கிறது...

      Delete
    6. இங்கே அரங்கன் கோயில் மடப்பள்ளியில் வேலை செய்பவர்களும் வெளிநாட்டில் படித்து வேலை பார்த்தவர்களே! அவங்க படம் கூட முகநூலில் வந்திருந்ததாய்ச் சொன்னார்கள். ஒருகால் அவர்களில் ஒருவரைத் தான் சந்தித்திருப்பீர்கள்!

      Delete
  8. இப்பதான் தர்மபுரில கடும் மழைன்னு பாத்துட்டு ஆச்சரியப்பட்டு வந்தேன்......

    ReplyDelete
    Replies
    1. இஃகி, இஃகி, @Vasudevan Tirumurti, தம்பி! கொஞ்சநாளா நீங்களும் வருவது குறித்து சந்தோஷம். இப்போ "கஜா" இழுத்து வந்துட்டான்!

      Delete
  9. //நம்பெருமாளின் திருமஞ்சனத்துக்காகத் தங்கக் குடத்தில் காவிரி நீர் எடுக்க ஆண்டாளும் வரவில்லை! // - பாருங்க எங்க அதிருஷ்டத்தை. ஒரு வில்லங்கமும் இல்லாமல் விசுவரூப தரிசனம் கிடைத்தது. யானை-எவ்வளவு ஆகிருதியான யானை.

    ReplyDelete
    Replies
    1. விஸ்வரூப தரிசனம் கிடைத்த விதத்தில் உங்களிடம் எனக்கு/எங்களுக்கு ரொம்பவே பொறாமை தான் நெல்லைத் தமிழரே! பார்க்கலாம், அரங்கன் எப்போ அழைச்சுக் காட்டுவான் என! பிரச்னை என்னவெனில் அங்கே கீழே உட்கார என்னால் நிச்சயம் முடியாது! :(

      Delete
    2. குறைந்தது அரை மணி நேரத்துக்கு மேல உட்கார்ந்திருந்தோம். விசுவரூப சேவைக்கு அப்புறம், பெருமாளை தரிசனம் செய்ய ஒழுங்குபடுத்தும்போது கொஞ்சம் நெரிசல். இது உங்களிருவருக்கும் கஷ்டமாயிருக்கும். எங்களுக்கும் இன்னும் மூன்று தடவையாவது அன்று பெரிய பெருமாளைத் தரிசனம் செய்திருந்தால் ஒருவேளை கொஞ்சம் திருப்தி வந்திருக்கலாம்.

      நாங்கள் சந்தித்தவர், நாங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்தால், பெருமாள் பிரசாதம் எல்லாம் கிடைக்கச் செய்யலாம் என்று சொன்னார். என் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு எனக்கு தாயார் பிரசாதம் தேன்குழல்(முறுக்கு) தந்தார். எல்லாம் ப்ராப்தம்...

      Delete
    3. நெ.த. நீங்க தங்கி இருந்திருந்தா எங்களுக்கும் சேர்த்துப் பிரசாத வகைகள் கிடைத்திருக்கும்! :)))))

      Delete
  10. எதற்கும் அசராத எங்களுக்கே சிறிது தண்ணீர் காண்பித்து சென்று விட்டது...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், செய்திகளில் பார்த்தேன் டிடி!

      Delete
  11. தேவகோட்டையிலும் இதே நிலைப்பாடுதான்.

    ReplyDelete
    Replies
    1. சிவகங்கை மாவட்டத்தில் அதிக மழைனு படிச்சேன் கில்லர்ஜி!

      Delete
  12. சென்னையில் தூறல் கூடக் கிடையாது. நேற்றே அதை வாட்ஸாப்பிலும் பகிர்ந்திருந்தேன்! பார்த்தீர்கள். எண்ணூர் துறைமுகத்தில் சற்றே கடல் கொந்தளிப்புடன் இருந்ததுடன் சரி...

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் ஸ்ரீராம், சென்னை அன்பர்கள்/நண்பர்களும் பகிர்ந்திருந்தார்கள். எப்படியோ இங்கே மழை பெய்ததே!

      Delete
  13. கறந்த பால் வாங்கிச் சாப்பிட்ட நாட்கள் போயே போச்!​ நீண்ட நெடும் காலமாகவே ஆவின் பால்தான். அவ்வப்போது ஆரோக்கியா போன்ற மற்ற பால்கள் வாங்குவது உண்டு. முதல் மகன் பிறந்த கொஞ்ச நாட்களும் அந்த எல்லாம் கொஞ்ச நாட்களும் கறந்த பால் வாங்கியது உண்டு - அவ்வப்போது. ஏனென்றால் திருமணமானவுடன் குடியிருந்த இடத்தில ஆவின் பால் வாங்க சாத்தியமில்லாததால் கறந்த பால் வாங்கி கொண்டிருந்தோம்.

    ReplyDelete
    Replies
    1. எங்க குழந்தைகள் இரண்டு பேருக்கும் பசும்பால் தான்! அதுவும் அவங்களுக்கு மட்டும் ஒரே மாட்டுப் பாலை வாங்கிக் கொடுத்திருக்கோம். பயணங்களின் போது தான் பிரச்னை! பெரும்பாலும் வடமாநிலங்களில் குழந்தைக்குனு கேட்டால் காசு வாங்காமலேயே பால் கொடுத்துடுவாங்க.

      Delete
  14. முந்தாநாள் காலையில இருந்து இங்கே மேக மூட்டம்.. மழையும் சாரலும் தான்...

    பதினைந்து நாட்களுக்கு முன்பு சிக்கலில் சிக்கிக் கொண்ட பின் இவர்களும் உஜாராகி (!) விட்டனர்..

    அரசு அலுவலகங்களுக்கு புதன் வியாழன் சிறப்பு விடுமுறை.. தொடர்ந்து வெள்ளி , சனி வாராந்திரம்!..

    ஆக, ஒரே - ஜாலி!..

    இதைப் பார்த்து தனியார் நிறுவனங்களும் ஏகதேசத்துக்கு விடுமுறை விட்டுட்டாங்க..
    நமக்கெதுக்கு வம்பு..ன்னு!....

    எங்க Catering Co., க்கெல்லாம் விடுமுறை கிடையாது..

    ஆனாலும். பெருமாள் எனக்கு மட்டும் நாலு நாள் விடுமுறை வாங்கிக் கொடுத்துட்டார்!...

    இருந்தாலும் மழையும் தூறலும் பொழுதுக்கும் கும்மியடித்ததால்
    இணையம் இழுவையோ இழுவையாகி விட்டது...

    எப்படியோ - விடுவோமா!..
    இன்னைக்கும் ஒரு பதிவு போட்டாச்சு!...

    நேரம் இருக்கறப்போ - வந்து பாருங்க..
    அப்புறம் அந்த தெய்வானையம்மா கல்யாணம் பார்க்கலையா நீங்க!...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, காணோமேனு நினைச்சேன். இங்கே நேத்து முழுசும் கிட்டத்தட்ட (மதியம் 2-- 30) வரை மின்சாரம் இல்லை. ஆகவே தொலைக்காட்சிகளில் தெய்வானைத் திருமணக் காட்சி காட்டியதைப் பார்க்க முடியலை! :( அப்புறம் எப்போவானும் தொகுப்புகளில் போட்டால் பார்க்கலாம். அதுவும் பொதிகையில் தான் பார்க்க முடியும். அங்கேயும் மழைனு பத்திரிகைச் செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன்.

      Delete
    2. நான்கு நாட்கள் எதிர்பாராமல் கிடைத்த விடுமுறையில் நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். இணையப் பிரச்னை அங்கேயும் இருப்பது ஆச்சரியமாக இருக்கு துரை!

      Delete
    3. >>> ஆகவே தொலைக்காட்சிகளில் தெய்வானைத் திருமணக் காட்சி காட்டியதைப் பார்க்க முடியலை! :( அப்புறம் எப்போவானும் தொகுப்புகளில் போட்டால் பார்க்கலாம்.... <<<

      நம்ம தளத்துல - கந்தன் கருணை 8 - ந்ற பதிவில
      தெய்வானைத் திருமணக் காட்சிகளைப் போட்டிருக்கேன்...

      அதைத் தான் பார்க்கலையா..ன்னு கேட்டேன்...

      Delete
    4. >>> இணையப் பிரச்னை அங்கேயும் இருப்பது ஆச்சரியமாக இருக்கு.. <<<

      எல்லாம் பணந்தின்னும் கூட்டம்...

      ஸ்மார்ட் போன் - இல்லாத வெளிநாட்டவர் யாரும் கிடையாது...
      ஆனாலும், இணைய வேகம் - மேம்படுத்தப்படவில்லை...

      காசுக்குத் தக்க தோசை என்பது மாதிரி - பலவிதமான இணைப்பு வகைகள்...

      எல்லாந்தான் படிச்சேன்.. என்ன பிரயோசனம்..ன்ன மாதிரி
      சம்பள தேதிகளில் ATM களுக்கு நாக்கு தள்ளி விடும் - Network பிரச்னையால்!...

      இன்னைக்கு வெளியான என் பதிவைப் பாருங்க..
      வரிக்கு வரி இடையில வாய்க்கால் மாதிரி....

      எல்லாம் இணையம் பண்ற அடாவடி...

      பதிவு வெளியானதில இருந்து நானும் சரி செஞ்சுகிட்டே இருக்கேன்..
      சரியாக மாட்டேங்குது!...

      இப்போ மணி 5:15..
      பொழுது விடிஞ்சதும் 6 மணிக்கு மேலே மாலை போட்டுக்கணும்..

      சாமியே சரணம் ஐயப்பா!...

      Delete
    5. இப்போத் தான் உங்க கருத்தைப் பார்த்ததும் நீங்க நேத்திக்குப் போட்ட பதிவைப் படித்துப் பார்த்து விட்டு வந்தேன். ரொம்ப நன்றி துரை! எங்க பையரும் மாலை போட்டுக் கொண்டதாகத் தொலைபேசியில் சொன்னார். அங்கே கேரளர்களால் நடத்தப்படும் குருவாயூர்க் கோயிலில் நமக்குக் காலை என்னும்போது அவங்களுக்கு முதல்நாள் மாலை! அப்போவே போட்டுக்கலாம்னு சொல்லி இருக்காங்க! ஆகவே சனிக்கிழமை வரை காத்திருக்காமல் பையர் அவரோட வெள்ளியன்று மாலையே போட்டுக்கொண்டு விட்டார். நல்லபடியா ஐயப்பன் அருளால் அனைத்தும் நடக்க வேண்டும். பிரார்த்தனைகள்.

      Delete
    6. இணையப் பிரச்னை அங்கே இவ்வளவு மோசம்னு தெரியாது. இந்தியாவில் தான் அதிகம்னு நினைச்சேன். ஆனால் அம்பேரிக்காவிலும் இருக்கத் தான் செய்யுது! எங்க பையர் இப்போத் தான் வேறே service provider க்கு மாறி இருக்கார்.

      Delete
    7. இணையம் ரொம்ப குறைந்த விலையில் நிறைந்த சேவை தருவது பஹ்ரைன் மட்டும்தான். விலையும் மிக்க் குறைவு. இணையம் ரொம்ப விலை குவைத்ல. எனக்கு கல்ஃப் எல்லா தேசங்களிலும் என் டீம் வேலைபார்த்து மற்ற அனுபவம் இருப்பதால் சொல்றேன்.

      Delete
  15. கஜா விட்ட இடத்தில் வெறு ஒரு புயல் சென்னையைத் தாக்கப் போகிறதாமே 20ம் தேதிப் பக்கம் என்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா, பொறுத்திருந்து பார்க்கணும்.

      Delete