சென்னையில் வெள்ளம்னா எல்லோருமே உதவியது போல் இப்போது டெல்டா மாவட்டங்களில் உதவவில்லை என்று ஒரு பொதுவான எண்ணம்/கருத்துப் பரவி உள்ளது. சென்னை தலைநகரம். எல்லா வசதிகளும் பொருந்திய ஓர் இடம். அதோடு ஆளுநர் முதல் முதல்வரில் இருந்து அனைத்துஅமைச்சர்கள் அதிகாரிகள் இருக்கின்றனர். ஆகவே ஒருவரைக் கலந்தாலோசிப்பது எளிது. உடனுக்குடன் முடிவுகள் எடுக்கலாம். ஆனால் இங்கே பாதிப்புக்கு உள்ளானது சுமார் ஐந்து முதல் ஏழு மாவட்டங்கள். இதில் டெல்டாப் பகுதியில் மட்டும் ஐந்து மாவட்டங்கள். ஏகப்பட்ட மரங்கள் விழுந்திருக்கின்றன. மின் கம்பங்கள் சரிந்திருக்கின்றன. புயலின் வேகம் வானிலை ஆய்வு மையம் சொன்னதை விட அதிகமாக இருந்திருக்கிறது. ஆனாலும் மெதுவாக வந்தாலும் புயல் தரையைத் தாக்கும்போது வேகம் அதிகரிக்கும் என்று சொல்லி இருந்தனர்.
இப்போது மீட்புப் பணிகளில் தொய்வு என்கிறார்கள். முதலில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்திச் சாலையைச் சீரமைத்தால் தான் மீட்புப் பணியாளர்கள் ஒரு நகருக்குள்ளேயோ கிராமங்களுக்கு உள்ளேயோ போகவே முடியும். அதற்கே இரண்டு நாட்கள் ஆகி இருக்கிறது. உள்ளே உள்ள சீர்கேடுகளையும் சரி செய்யணும். முக்கியமாய் மின் கம்பங்கள்! எத்தனை மறுபடி பயன்படும், எத்தனை பயன்படாது என்பதை எல்லாம் பார்க்க வேண்டும்.குற்றம் சொல்வது எளிது. ஆனால் சென்னை ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே பகுதியாக இருந்ததால் மீட்புப் பணிகள் எளிதானது. அதோடு தேவையான சாதனங்கள் ஆள்க் கட்டு அனைத்தும் கிடைத்தன. ஆனால் இங்கே எத்தனை மாவட்டங்கள்!
அதோடு அவற்றுக்கான நிவாரணங்களை அனுப்புவதற்கே வழி சரியாக இல்லாமல் போய்ச் சேர முடியவில்லை. மேலும் ஆட்கள் எல்லோருமே வெளியில் இருந்து வரணும். உபகரணங்கள் அனைத்தும் வெளியே இருந்து வரணும். இத்தகையதொரு அழிவைப் புயல் வருவதற்கு முன்னால் தான் கொஞ்சமானும் புரிஞ்சுக்கவே முடியும். அப்போதும் கூட மரங்கள் விழுவதை நம்மால் தடுக்க முடியுமா? இயற்கையை எதிர்கொள்ள முடியுமா? பல தென்னந்தோப்புகள், வாழைத்தோப்புகள் அழிந்திருக்கின்றன. வாழையாவது ஐந்து வருடங்களுக்குள்ளாகச் சரி செய்து விடலாம். ஆனால் தென்னை மரங்கள்? இதிலிருந்து மீண்டு வர வேண்டியதற்கு ஆவன செய்ய முயலவேண்டும். ஆகவே தேவையான உபகரணங்கள் ஆள்க் கட்டுப்பாடு போன்றவற்றைப் பின்னரே பெற முடியும். தற்காப்பு நடவடிக்கைகள் தான் உடனே செய்யக் கூடியது! மற்றபடி மரங்கள் விழுந்ததுக்கு எல்லாம் அரசு பொறுப்பாகுமா? நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. அது ஒழுங்கா போய்ச் சேருபவர்களுக்குப் போய்ச் சேரவேண்டிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இரண்டு நாட்கள் முன்னர் பட்டுக்கோட்டைப்பகுதிக்குப் போனவர்கள் மூலம் அந்தப் பகுதி கிராமங்கள் மோசமான நிலையில் இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. தென்னை மரங்கள் வேரோடிப் போயிருப்பதால் அந்தத் தோப்புகளில் முதலில் மணலுக்குள் வேரோடி இருக்கும் வேர்களை அகற்றி மண்ணுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து அதன் பின்னரே மறு பயிராக்குதல் பற்றி நினைக்கலாம். வாழைத் தோட்டங்களும் அவ்வாறே என்றாலும் அவற்றைக் குறைந்த பட்சமாக 3 மாதங்களுக்குள் சரி செய்துவிடலாம். வாழைத் தோட்டம் விரைவில் பலனும் அளித்துவிடும். அதற்கான ஆவன செய்யவேண்டியவற்றைப் பற்றி மட்டுமே இப்போது சிந்திக்கவேண்டும். ஒரேயடியாக அனைவரும் எல்லா ஊர்களுக்கும் ஒரே நேரத்தில் செல்ல முடியாது. முதல்வராகவே இருந்தாலும் ஒரு நேரத்தில் ஒரு பகுதிக்குத் தான் செல்ல முடியும். எதை முதலில் எடுத்துக்கொள்வது! எதை விடுவது! எல்லோருக்குமே பாதிப்பு! ஆகவே முடிந்தவரை அரசாங்கம் அனுப்பி வைக்கும் நிவாரணத் தொகை மற்றும் மக்களால் அனுப்பி வைக்கப்படும் நிவாரணப் பொருட்கள் சரியான முறையில் பங்கீடு செய்யப்படுகிறதா என்பதைத் தான் நாம் கண்காணிக்கலாம்.
தேங்காய் விலை ஏறும்போது புரியும்; வாழைப்பழம், காய் கிடைக்கலைனா தெரியும் என்றெல்லாம் மீட்புப் பணிகளுக்காகவும் விவசாயிகள் சார்பிலும் சொல்கிறவர்கள் ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும். இங்கே யாரும் வேண்டுமென்று தென்னை மரங்களையோ, வாழை மரங்களையோ வெட்டிச் சாய்க்கவில்லை. பலரும் கடன் வாங்கியே பயிர்த்தொழில் செய்திருப்பார்கள் தான். அவங்களுக்கான நிவாரணத் தொகையை எல்லாம் முறைப்படி தான் கேட்டுப் பெறும்படி இருக்கும். உடனடி நிவாரணமாகச் சாப்பாட்டுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், துணி வகைகள் போன்றவை ஆங்காங்கே திரட்டப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றது. எல்லாம் உடனே நடக்கவேண்டும். பிரதமர் முதல் அனைவரும் உடனே வந்து பார்க்கணும் என்றால் அது இயலாத ஒன்று. மத்திய அரசு ஏற்கெனவே தேவையான உதவிகள் செய்வதாக அறிவித்தாயிற்று. நேற்று முதல்வரும் போய்ப் பிரதமரைச் சந்தித்துப் பேசியாகி விட்டது. இயற்கையின் கோர தாண்டவம்! அதிலிருந்து மீண்டு வரும் வழியைத் தான் பார்க்கணும். எல்லாம் சரியாகக் குறைந்தது ஒரு வருஷம் ஆகலாம். மின்சாரம் முழுவதும் கொடுக்கப்படவும் ஆறு மாசம் ஆகும் என்கின்றனர். இதற்கு நாம் ஒருவரை ஒருவர் பழி சொல்லிக்கொண்டிருக்காமல் அரசோடு சேர்ந்து உதவிக்கரங்கள் மூலம் எப்படியேனும் இந்தச் சோகத்தில் இருந்து மீண்டு வந்தால் போதும்.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் கிடைத்து நிலைமை சீராகப்பிரார்த்தனைகள் செய்வோம்.
சீக்கிரம் சரியாக பிரார்த்தனைகள் செய்வோம். சாலைகளை சீரமைத்து உள்ளே சென்றதும்தான் நிறைய இடங்களில் என்ன பாதிப்பு என்றே அறிய முடிகிறது என்பதும் உண்மை. இன்றைய தமிழ் இந்துவில் மிவா போன்றவை அரசு யந்திரமாக இருப்பது எவ்வளவு நல்லது என்று சிலாகித்து அவர்களின் தொடர் உழைப்பைப் பாராட்டி இருக்கிறார்கள்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், மின் வாரிய ஊழியர்களாகட்டும், மற்ற அரசு ஊழியர்களாக இருக்கட்டும். எல்லோருக்கும் குடும்பம்னு ஒண்ணு இருக்கே! அந்தக் குடும்பத்தைக் கூட மறந்துட்டு நமக்காக வேலை செய்யறாங்களே! அதை நினைச்சுப் பார்க்க வேண்டாமா!
Deleteமிக அருமையான பதிவு! நீங்கள் கூறியிருப்பது போல பட்டுக்கோட்டை பக்கம் தான் நிறைய கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இங்குள்ளவர்கள் சொன்னார்கள். சிலர் தன் வயல்காட்டு பாதிப்புகளை சரி செய்வதற்காகவே ஊருக்குக்கிளம்பிச் சென்றிருக்கிறார்கள்! ஆனால் இந்த தடவை பொதுமக்கள், இளைஞர்கள் நிறைய பேர் களத்தில் இறங்கி நிவாரணப்பணிகள் செய்ததாகக் கேள்வியுற்றேன்.
ReplyDeleteவாங்க மனோ! நீங்கள் சொல்வது போல் சிலர் மௌனமாகச் சீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து செய்வதாகச் சொல்கின்றனர். எங்கள் குடியிருப்பு வளாகத்தில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் நாளை செல்கிறது.
Deleteதங்களது பதிவுக்கு நெஞ்சார்ந்த நன்றி...
ReplyDeleteபாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் கிடைக்க வேண்டும்..
நிலைமை சீராக வேண்டும்... பிரார்த்தனை செய்வோம்...
அது ஒன்று தான் ஆறுதலும் தேறுதலும்!..
வாங்க துரை! பாதிப்பு அதிகம் தான்! என் தம்பிக்கு (பெரியம்மா பையர்) குன்னியூரில் இரண்டு தோப்புகளே நாசமாகி விட்டன! என்ன செய்ய முடியும்! எங்கும் பேதம் பார்க்காமல் எல்லோரையும் ஒரே விதமாக நடத்துவது சூரிய, சந்திரரும், இந்தப் புயல், மழையும் தான்!
Deleteஇயற்கை சீரழிவுகள் வரும்போது அரசை குறை சொல்வது தவறான செயல்.
ReplyDeleteஅதேநேரம் அரசு இயந்திரங்கள் உடனடியாக முடக்கி விடப்பட்டு சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சர்களும் இறங்கி வேலை செய்யவேண்டும்.
அமைச்சர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் இவர்கள் தேவதூதர்கள் அல்ல!
அதை செய்யாமல் முதல்வர் ஹெலிகாப்டரில் பார்வை இடுவது, அமைச்சர்கள் ஊடகங்களுக்கு உதவிகள் செய்து விட்டதாக பேட்டி கொடுப்பது இவைகளே மக்கள் கோபப்பட காரணமாகிறது.
வாங்க கில்லர்ஜி, சேதம் பற்றி ஒவ்வொரு கிராமமாகச் செல்வது முதலமைச்சருக்கு மட்டுமல்ல எந்த அமைச்சருக்குமே இயலாத காரியம்! ஆகவே தான் ஹெலிகாப்டர்களில் சென்று பார்க்கிறார்கள். நேர விரயம் இல்லாமல் குத்துமதிப்பாகப் புரிந்து கொள்வார்கள் அல்லவா? அதோடு அந்த அந்த மாவட்டத்து எம்.எல்.ஏக்கள், மந்திரிகள் எனக் களப்பணிகளில் இறங்கி இருப்பதாய்ச் சொல்கின்றனர். எனக்குத் தெரிந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரே நேரில் இருந்து நிவாரணப்பணிகளைச் செய்வதாகவும் சொன்னார்கள்.
Deleteநம்ம ஊரில் எதிலுமே அரசியல்தான். தேவையில்லாத குற்றச்சாட்டுகள்தான். இதேபோன்ற சம்பவங்களின்போது யார் யார், எந்த எந்தக் கட்சிகள் என்ன செய்தன கடந்தகாலத்தில் என்று பார்த்தால் அவர்களோட வண்டவாளம் தெரிந்துவிடும்.
ReplyDeleteமுதலமைச்சர் அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் பார்வையிட்டது, மத்திய அரசுக்கு நிதி பற்றிய கோரிக்கைக்கு வலு சேர்ப்பதற்காகத்தான். அவரது வேலை, நிதி ஒதுக்கீடு செய்வதும், பணிகளை முடுக்கிவிடுவதும், மத்திய அரசின் உதவியைக் கோருவதும்தான்.
சரி.. ஆளும் கட்சி உதவி செய்யவில்லை என்று பேட்டி கொடுப்பதைவிட்டுவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர், எம்பிக்கள் எம்.எல்.ஏக்கள் எல்லாரும் தென் மாவட்டங்களுக்கு நிவாரணப் பணிகளுக்குச் சென்றுவிடலாமே. அதை ஏன் செய்யாமல் பேட்டி மட்டும் கொடுக்கிறார்கள்?
பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீளவேண்டும், அது சாத்தியக் குறைவு என்றாலும்.
வாங்க நெல்லைத் தமிழரே, நேற்று எதிர்க்கட்சியான திமுக கழகம் ஒரு கோடி ரூபாய் முதல் அமைச்சரிடம் கொடுத்திருக்கிறது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் மாநில அரசை அதிகம் குற்றம் சுமத்தாவிட்டாலும் மத்திய அரசைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. வழக்கம் போல் மத்திய அரசின் ஓரவஞ்சனை தான்! இவங்க போய் மத்தியக் குழுவை வந்து பார்த்து மதிப்புப் போட்டுச் சொல்லும்படி கேட்க வேண்டாமா? அதுக்குத் தான் நேற்று முதல் அமைச்சர் மோதியைப் போய்ப் பார்த்திருக்கார். எல்லாம் உடனே நடக்கணும்னா எப்படி?
Deleteபொதுவா சென்னை என்பது வேறு. இது மாநிலத்தின் தலைநகர். இங்க பெரும்பாலும் மின்வெட்டு இல்லை. ஆனா உங்க பகுதிகள்ல சர்வ சாதாரணமா 5+ மணி நேரங்களுக்கு மின்வெட்டு இருக்கிறது. இதுபோல்தான் எல்லா தென் மாவட்டங்களும்.
ReplyDeleteகஷ்டப்படுபவர்களுக்காக நாம் ப்ரார்த்திப்போம்.
மக்கள் குழுக்கள் அமைத்து, நிவாரணப் பணிகள், உதவிகள் உரியவர்களுக்குப் போய்ச் சேருகிறதா என்று கண்காணிப்பதில் அர்த்தம் உண்டு.
நெல்லைத்தமிழரே, உங்க அடையாறு பகுதியில் மின்வெட்டு இல்லாமல் இருக்கலாம். ஆனால் புறநகர்ப்பகுதிகள், தி.நகர் மற்றும் நந்தம்பாக்கம் பகுதியில் வசிப்பவர்கள் மின்வெட்டு இருப்பதாகச் சொல்கின்றனர். பலருக்கும் இணையம் சரியாக வேலை செய்வதில்லை.
Deleteஓ... அப்படியும் இருக்கலாம். ஆஸ்பத்திரிகள், நீதிபதிகள், பெரிய ஆட்கள் (எங்களைத் தவிர ஹாஹா) இருக்கும் இடமல்லவா? நாளை என் அம்மாவைக் கேட்டுப்பார்க்கிறேன். அங்கு எப்படி இருக்குன்னு.
Deleteமனம் நொந்து போகிறது. சிலர் பேச்சிக்கேட்டு. இவர்கள் மற்றாவர்களைக் குறை சொல்லும் நேரம் தாங்களே அங்கு செல்லலாமே.
Deleteஇந்தப் பேரிடமிருந்து மக்கள் மீண்டு வர பிரார்த்தனைகள் தான் வழி.
இளைஞர்கள் வலு உள்ளவர்கள் கை கொடுத்துக் காக்க வேண்டும். இதுவரைத் தொண்டு செய்தவர்களுக்கும், இனிமேலும் செய்யப் போகிறவர்களுக்கும் நன்றி.அருமையான உளமார்ந்த பதிவு.
இன்னிக்கு மக்கள் குறை கேட்கச் சென்ற அமைச்சரை விரட்டி அடித்தனர் மக்கள். இது ஒரு பக்கம் எனில் இன்னொரு பக்கம் வைகோ ஆளும் கட்சிக்கும், அமைச்சர்களுக்கும் பாராட்டு! :)))))
Deleteநெல்லை நாங்க சென்னைல இருந்த ஏரியாவிலும் மின் வெட்டு இருந்தது. சென்னை மாநகராட்சிக்குள்ள இருந்தாலும்....ஆனா சென்னைக்கு கொஞ்சம் அப்பால போனா அது சென்னை நகராட்சிக்குள்ள வராதே அந்த புறநகர் பகுதியிலெல்லாம் மின் வெட்டு...உண்டு...
Deleteஇப்ப பங்களூரிலும் இங்கு புறநகர்ப்பகுதி என்பதால் மின்வெட்டு இருக்கு...அப்பப்ப போயிடும்....எப்ப போகும் எப்ப வருன்னு தெரியறதில்ல....
கீதா
சரியாக சொல்லியிருக்கிறீர்கள். சபாஷ்!
ReplyDeleteநன்றி பானுமதி!
Deleteபாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் கிடைத்து நிலைமை சீராகப்பிரார்த்தனைகள் செய்வோம். //
ReplyDeleteஇயற்கையை நாம் ஒன்றும் சொல்லமுடியாது.
பாதிக்கபட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைத்து நிலைமை சீராகப் பிரார்த்தனை செய்வோம்.
தீபத்திருநாளில் அவர்களின் துன்ப இருள் அகன்று நம்பிக்கை ஒளி பரவ பிரார்த்திப்போம்.
பாதிக்க பட்ட மனிதர்கள் மீண்டு வர காலம் ஆகலாம் அதற்கு அவர்களுக்கு மனபலம், உடல்பலத்தை இறைவன் அருள வேண்டும். எல்லா பக்கங்களிலும் உதவிகள் பெறபடுகிறது அது அவர்களை சென்றடைய வேண்டும்.
நீங்க வேறே கோமதி! இந்தப் புயல் ஆத்திகப் புயலா, நாத்திகப் புயலானு ஒரு பட்டி மன்றமே மின் தமிழ்க் குழுமத்தில் நடந்துட்டு இருக்கு! :))))) உண்மையில் இப்போது தேவை பொறுமையும் மனோ பலமும் தான்! தென்னை, வாழை விவசாயிகள் தவிர்த்து இன்று திராக்ஷை பயிரிட்டிருந்தவர்களும் தங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி உள்ளனர்.
Deleteகுறை சொல்பவர்களுக்கு அது ஒன்றே வேலை... வீணர்கள்...
ReplyDeleteசில இடங்களில் தண்ணீர் கூட தட்டுப்பாடு என்பது தான் மிகப்பெரிய வேதனை...
விரைவில் அனைத்தும் சீராக வேண்டுகிறேன்...
வாங்க டிடி, எங்கும் குடிநீர்ப் பற்றாக்குறை! ஏனெனில் மழைநீரோடு கழிவு நீர் கலந்திருக்கலாம்! விரைவில் சீராக வேண்டும்.
Deleteதஞ்சைக்கு சற்று தூரத்திலிருக்கும் மதுக்கூரில் எங்கள் நண்பருக்கு
ReplyDeleteவிவசாய நிலம் உள்ளது. அவருக்கு தொடர்பே கிடைக்காமல் இன்று தான் தொடர்பு கிடைத்தது. அவருக்கு இதுவரையில் 15 லட்சம் நஷ்டமாகி இருப்பதாக சொன்னார். மின்சாரக்கம்பங்கள் பழுது செய்யப்படுவதற்கும் மின் தொடர்பு கிடைப்பதற்கும் நிச்சயம் வெகு நாட்களாகும் என்று சொன்னார். இதையெல்லாம் மட்டுமல்ல, இதைப்போன்ற பல இடங்களில் மழையாலும் புயலாலும் ஏற்பட்ட சேதங்கள் தொலைக்காட்சியில் கூட இருட்டடிப்பு செய்யப்பட்டதாலும் அந்தப்பகுதியைச் சார்ந்த அமைச்சர் அந்த பகுதியிலெல்லாம் சேதமில்லை என்று சொன்னதை ஒளி பரப்பியதாலும் அதன் பிறகு சென்ற் தொலைக்காட்சி ஊழியர்களை ஊரில் நுழைய விடவில்லையாம்.
ஒருவர் ஜெனரேட்டர் கொண்டு வந்து ஒரு மொபைலுக்கு 30 ரூபாய் வாங்கிக்கொன்டு சார்ஜ் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறாராம்.
பாதிப்பு வெகு அதிகம். விரைவில் நிலைமை சரியாக வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நல்லது கிடைக்கட்டும்.
ReplyDeleteபாதிப்பு அடைந்த பகுதிகள் மற்றும் மக்கள் மீண்டும் சீராகி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்திப்போம். எப்போதுமே நல்லது நடந்தாலும் குறை சொல்வதுதான் முதலில் வரும்.
ReplyDeleteதுளசிதரன், கீதா
கீதா: அக்கா பதிவு நல்ல பாயின்ட்ஸ். எல்லாம் சொடக்கு போடும் நேரத்தில் நடக்கனும்னா நடக்குமா....எப்படியோ நிவாரனங்கள் எல்லா மக்களையும் நியாயமாக ப் போய் சேர்ந்து மக்கள் மீண்டும் நலம் பெற்று வரனும்...