சிந்தாமணி கிருஹத்தில் வீற்றிருக்கும் அம்பிகையின் ஸ்ரீபுர வர்ணனை தொடர்கிறது.
“மாணிக்க மண்டபத்தில் விஷ்ணுவும் இருக்கின்றார்
மண்டபத்தினிடையில் சிவலோகம்
பிரம்ம தேவருடைய சத்தியலோகமும்
பிரபலமான விஷ்ணுவின் உலகம்
மாயக்கோட்டை அனந்தம் வர்ணமுள்ள கோட்டை
அதற்கிடையில் சூரியனின் விமானம்
பகவான் மார்த்தாண்ட பைரவர் இருப்பு
பக்தரே கேளின்னுஞ் –சோபனம், சோபனம்.
சந்திரபிம்பத்தில் சிங்காரமாகவே
சரியாக இருபத்தஞ்சு கோட்டையும்
சுந்தரமான கோபுரங்களும் தானுண்டு
தொகையொரு கோட்டைக்கு நான்கு வீதம்
அப்புரத் தாமரைப் புஷ்பங்களின் வனம்
ஆறு யோஜனைக்கு நிறைந்திருக்கும்
விப்ரனே அதற்குக் கிழக்காகவே யெங்கும்
சுற்றிக் கதம்பவனம் –சோபனம் சோபனம்
அதற்குக்கிழக்கிலே மும்மூர்த்திகளுக்கும்
அகங்கள் மூன்று பத்ம அடவியிலே
இதற்கு நடுவில் சிந்தாமணி ரத்தினத்தால்
ஈச்வரி லலிதா தேவியின் கிருஹம்
நாலுபுறம் வாசல் உண்டதற்குச்சியில்
ஞானரத்னத்தாலே மகுடம்
வலப்புறத்திலே மந்திரிணியின் கிருஹம்
வாராஹிக்கிடப்புறம் –சோபனம் சோபனம்
அக்கினி முடுக்கிலே அக்கினிக்குண்டம்
அதற்கு மேலே நிற்கும் ஸ்ரீசக்கரத்தேர்
நிர்கின்றது வாயுமுடுக்கில் மந்திரிணிதேர்
நேரே ஈசான்யத்தில் வாராஹிதேர்
இந்த நடுவிலே சக்திகளின் கிருஹம்
சிந்தாமணி கிருஹத்தைச் சுற்றிலும்
சிந்தாமணிக்கிருஹம் சிந்தாமணிச்சுவர்
சுற்றிலும் தீபங்கள் –சோபனம் சோபனம்
சிந்தாமணிக்கிருஹத்தின் நடுமத்தியிலே
சிந்தாமணியாலே ஸ்ரீபீடம்
அஷ்டகோண வடிவாகி விளங்கிய
சக்ரராஜா வென்ற பீடத்தின்மேல்
ஐம்மூன்று தட்டத்த ஸ்ரீபீடத்திற்கு
ஆயிரத்தறுநூறு முழம் வீதி
கைமுழத்திற்கிருபது முழ உயரம் தட்டு
கடலைக்குடித்தவகஸ்தியர் –சோபனம் சோபனம்
தட்டு தோறும் இதுபோல் உயரம் வீதி
தட்டுதோறும் சக்திகள் இருக்காள்
திட்டமாய் ஸ்ரீபீடத்திற்கப்புறத்திலே
சிங்காரப்படி முப்பத்தாறு ஸ்தம்பம்
வட்டமான இந்தபீடத்தில் ஈசர் பிரம்மா
மாலவர் ருத்திரர் கட்டிலின் கால்
கட்டிற்பலகை சிவன் ஸதாசிவன் பாய்
ஈசானன் தலையணை –சோபனம் சோபனம்.
“ஸர்வாருணா நவத்யாங்கீ ஸர்வாபரண-பூஷிதா
சிவ-காமேஸ்வராங்கஸ்தா சிவா ஸ்வாதீன-வல்லபா
ஸுமேரு-மத்ய – ஸ்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர-நாயிகா
சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச –ப்ரஹ்மாஸன –ஸ்திதா!”
என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுவதற்கேற்ப, இங்கே அம்பிகை வீற்றிருக்கும் திருக்கோலத்தைக் காணலாம்.
மஞ்சத்தின் மேல் ஹம்ஸதூளிகா மெத்தையும்
வட்ட இருபுறத்தலையணையும்
மஞ்சத்தின் மேலே கிழக்கைப் பார்த்திருக்கின்றார்
மன்மத கோடி போல் காமேசரும்
நாதர் காமேசர் மடிமேல் கிழக்கைப் பார்த்து
தாய் லலிதா தேவியும் இருக்காள்
பாலா லலிதா தேவிக்கு நித்தியம்
பதினாறு வயதென்றும் –சோபனம், சோபனம்
சர்வ சக்தி வாய்ந்த அம்பிகை கிழக்கில் இந்திராணி சக்தியாகவும், அக்னி மூலையில் அக்னி தேவதையாகவும் தெற்கில் வாராஹியாகவும், நிருருதி மூலையில் கட்கதாரிணியாகவும் காக்கிறாள். மேற்கில் வாருணீயாகவும், வாயுமூலையில் மிருகவாஹினியாக வாயுசக்தியும், வடக்கில் கெளமாரியும், ஈசான்யமூலையில் சூலதாரிணியாகவும் காத்து வருகிறாள். பிரஹ்மாணி மேலேயும், விஷ்ணு சக்தி கீழேயும் ஆக மொத்தம் பத்துத் திசைகளையும் தன் சக்தியால் சாமுண்டா தேவி காத்தருள்கிறாள். தேவியைப் பிரார்த்திக்கையில், ஜய சக்தி நம் முன்னால் இருக்கவேண்டும் என்றும், விஜய சக்தி பின்னாலும், அஜிதா இடப்பக்கமும், அபராஜிதா வலப்பக்கத்தில் இருக்கவேண்டும் எனவும் பிரார்த்திக்கவேண்டும். மேலும் நம் சிகையை உத்யோதினீ தேவியும், சிரசில் உறையும் உமா சிரசையும், லலாடத்தை மாலாதாரிணியான சக்தியும், புருவத்தை யஷஸ்வினியும் காக்கவேண்டும். புருவ மத்தியை த்ரிநேத்ரதாரியான அம்பிகையும், நாசியை யமகண்டாதேவியும், கண்களின் நடுவே சங்கினீ சக்தியும், காதுகளில் துவாரவாஸினீ சக்தியும் ரக்ஷிக்கவேண்டும்.
கன்னத்தில் காளிகா தேவியும், கர்ணமூலத்தில் சங்கரியும், நாசிகைகளில் ஸுகந்தா தேவியும், மேலுதட்டில் சர்ச்சிகா தேவியும், கீழுதட்டில் அம்ருதகலாதேவியும், நாக்கில் ஸரஸ்வதியும் இருந்து காக்கவேண்டும். பற்களில் கெளமாரியும், கழுத்தின் நடுவில் சண்டிகையும் காக்கவேண்டும். உள்நாக்கைச் சித்ரகண்டா தேவியும், தாடையை மஹாமாயையும், மோவாய்க்கட்டையைக் காமாக்ஷியும், வாக்கை ஸர்வமங்களா தேவியும் காக்கவேண்டும். கழுத்தில் பத்ரகாளியும், முதுகெலும்பில் தருத்தரீ தேவியும் கழுத்தின் வெளியில் நீலக்ரீவாதேவியும், கழுத்தெலும்பை நளகூபரீ தேவியும் காக்கவேண்டும்.
தோள்களை கட்கதாரிணியும், புஜங்களை வஜ்ரதாரிணியும், கைகளை தண்டினியும், விரல்களை அம்பிகையும் காக்கவேண்டும். நகங்களை சூலேச்வரி ரக்ஷிக்க, கஷ்கங்களை அனலேஸ்வரி ரக்ஷிக்க, ஸ்தனங்களை மஹாதேவி ரக்ஷிக்க, மனதைச் சோகவிநாசினி ரக்ஷிக்கவேண்டும். இருதயத்தை ஸ்ரீலலிதையும், வயிற்றை சூலதாரிணியும், நாபியைக் காமினீ தேவியும், ரஹஸ்யஸ்தானத்தை குஹ்யேஸ்வரியும் காக்கவேண்டும். பூதநாதா லிங்கத்தையும் மஹிஷவாஹினி அபானத் துவாரத்தையும், இடுப்பில் பகவதியும், முழங்கால்களை விந்திய வாஸினியும் காக்கவேண்டும். தொடைகளை மஹாபலாதேவியும் முழங்கால் நடுவில் விநாயகீதேவியும், கணுக்கால்களில் நாரஸிம்ஹிதேவியும், பின்னங்கால்களில் மிதெளஜஸியும் ரக்ஷிக்கட்டும். கால்விரல்களை ஸ்ரீதரியும், பாதத்தின் கீழ் தலவாஸினியும், நகங்களை தம்ஷ்ட்ராகராலியும், கேசங்களை ஊர்த்வகேசினியும், மயிர்க்கால்களை கெளபேரியும், தோலை வாகீச்வரியும், இரத்தம், வீரியம், கொழுப்பு, மாம்ஸம், எலும்பு,மூளை இவற்றைப் பார்வதியும் காக்கவேண்டும். குடல்களைக் காலராத்திரியும், பித்ததாதுவை முகுடேஸ்வரியும், ஆதாரக் கமலங்களில் பத்மாவதியும், சுபதாதுவில் சூடாமணியும் ரக்ஷிக்கட்டும். நகங்களுக்குப் பிரகாசத்தை ஜ்வாலாமுகியும், எல்லா சந்திகளிலும் அபேத்யா தேவியும் பிரம்மாணி சுக்லத்தையும், நிழலை சத்ரேஸ்வரியும் ரக்ஷிக்கட்டும்.
தர்மசாரிணி நமது அஹங்காரத்தையும், மனதையும், புத்தியையும் காக்கவேண்டும், பிராணன், அபானன், வியானன், ஸமாநன், உதானன் போன்றவற்றையும் அவளே காப்பாள். புகழ், கீர்த்தி, அழகு இவற்றை சக்ரீணியும், இந்திராணி கோத்திரத்தையும், சண்டிகை பசுக்களையும் காக்கவேண்டும். மஹாலக்ஷ்மி தன் குழந்தைகளான நம்மை காக்கவேண்டும். பைரவி மனைவியையும், க்ஷேமங்கரீ வழியையும், விஜயா அனைத்துப் புறங்களிலும் காக்கவேண்டும். இங்ஙனம் தேவியின் ஸ்மரணமே நம்மைக் காக்கும் கவசமாக நினைத்து ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கவேண்டும் என்று தேவி மஹாத்மியம் கூறுகிறது.
இதைத் தவிரவும் தேவியின் இருப்பிடங்களாகவும், அவற்றில் குடிகொண்டிருக்கும் நாமாவளிகளும் விவரிக்கப் பட்டிருக்கிறது. அவையாவன:
லக்ஷ்மி தேவிக்குக் கோலாபுரம் மஹாஸ்தானமாகவும்,
ரேணுகாதேவிக்கு மாத்ருபுரமும்,
துர்க்கைக்கு சப்தஸ்ருங்கம், துளஜாபுரம், இங்குலை, ஆகிய இடங்களும்,
ஜ்வாலாமுகி, சாகம்பரி, பிராமரி, ஸ்ரீரக்த தந்த்ரிகா, அன்னபூரணி ஆகியோரின் இருப்பிடமாக சர்வ சக்தி வாய்ந்ததும், மூலாதார க்ஷேத்திரங்களின் முதன்மையானதும் ஆன காஞ்சிபுரமும்,
அங்கேயே பராசக்தியே மணலால் சிவலிங்கம் பிடித்து வழிபட்ட ஏகாம்பரமும்,
யோகேஸ்வரி பிரதிஷ்டை செய்த தேஜோஸ்தானம்,
பீமாதேவி விந்த்யாசலத்திலும்,
விமலாதேவி, நீலாம்பிகை போன்றோர் திருவானைக்காவல், ஸ்ரீநகரம்
நேபாளத்தில் குஹ்யகாளியாகவும்,
எல்லாவற்றுக்கும் மேல் தஹராகாச க்ஷேத்திரமான சிதம்பரத்தில் சிவகாமியாகவும்,
வேதாரண்யத்திலும் சீனத்திலும் நீல சரஸ்வதியாகவும்,
வைத்தியநாதத்தில் வகலாவாகவும்,
மணித்வீபத்தில் புவனேஸ்வரியாகவும்
காமாக்யாவில் திரிபுர பைரவியாகவும்
புஷ்கரில் காயத்ரி தேவியாகவும்,
அமரேசத்தில் சண்டிகையாகவும்,
பிரபாச க்ஷேத்திரத்தில் புஷ்கரேக்ஷணியாகவும்,
நைமிசாரண்யத்தில் லிங்கதாரிணியாகவும்,
புருஹூதையில் புஷ்கராக்ஷியாகவும்,
ஆஷாடத்தில் ரதி தேவியாகவும்,
மைசூரில் சண்டமுண்டிகாவாகவும்,
பராபூதி, பூதியில் பரமேஸ்வரியின் தண்டினியாகவும்,
நகுலத்தில் நகுலேஸ்வரியாகவும்,
அரிச்சந்திராவில் சந்திரிகாவாகவும்,
ஸ்ரீபர்வதத்தில் சங்கரியாகவும்
திருவையாறில் திரிசூலியாகவும்,
ஆம்தாத்கேச்வரத்தில் குக்ஷுமாவாகவும்,
மகாகாளேச்வரத்தில் சங்கரியாகவும்
மத்திமத்தில் சர்வாணியாகவும்,
கேதாரத்தில் மார்க்கதாயினியாகவும்,
பைரவத்தில் பைரவியாகவும்,
கயையில் மங்களாவாகவும்,
குருக்ஷேத்திரத்தில் ஸ்தாணுப்ரியாவாகவும்,
நகுலத்தில் ஸ்வாயம்பவியாகவும்
கனகலத்தில் உக்ராதேவியாகவும்,
விமலேஸ்வரத்தில் விஸ்வேஸ்வரியாகவும்,
மஹாநந்தாவில் மஹாந்தகையாகவும்,
பீமக்ஷேத்திரத்தில் பீமேஸ்வரியாகவும்,
பவானியில் சங்கரியாகவும்.
அர்த்தகோடியில் ருத்ராணியாகவும்
காசியில் தன் விசால நயனங்களால் அருளாட்சி புரியும் விசாலாக்ஷியாகவும்,
மகாலயத்தில் மஹாபாகாவாயும்,
கோகர்ணத்தில் பத்ரகாளியாகவும்,
பத்ரகர்ணிகையில் பத்ரியாகவும்
உத்பலாக்ஷியில் ஸ்வர்ணாக்ஷியாகவும்,
ஸ்தாண்வீயில் ஸ்தாணுவாகவும்,
திருவாரூர் என்னும் மற்றொரு மூலாதார க்ஷேத்திரத்தில் கமலாம்பிகையாகவும்
சகலண்டகத்தில் பிரசண்டையாகவும்
குருண்டலையில் த்ரிசந்தியாதேவிகளாகவும்
மாகோடத்தில் மகுடேஸ்வரியாகவும்
மண்டலேசத்தில் கண்டகியாகவும்,
காலஞ்சரத்தில் காளிகாவாயும்,
சங்குகர்ணத்தில் த்வனீஸ்வரியாகவும்
ஸ்தூலகேஸ்வரத்தில் ஸ்தூலகேஸ்வரீயாகவும்,
அனைத்துக்கும் மேல் பக்தர்களின் இதயத்திலும், ஞாநிகளின் இதயத்திலும் நித்யவாசம் செய்யும் ஹ்ருல்லேகா என்னும் மந்திர தேவியாகவும் இருக்கின்றாள்.
தேவியின் இந்த நாமாவளிகளை முடிந்தவர்கள் தினமும் காலை, மாலை இருவேளைகளுமோ அல்லது ஒருவேளையோ சொல்லலாம். இவை தேவியின் சக்திபீடங்கள் எனச் சொல்லப் படுகின்றன. இவற்றில் சில இருக்குமிடம் தெரியவில்லை. சிலவற்றின் இன்றைய பெயர்கள் மாறியுள்ளன. விரைவில் ஒரு சின்ன அட்டவணையுடன் தர முயல்கிறேன்.
"இடது துடைமேல் சுவாமி வைத்துக்கொண்டம்மனை
வலது கன்னத்தை முத்தமிட்டுக்கொண்டு
விடைமேல் அழகரும் வளமுடன் தேவிக்கு
விபூதியிட்டு திருஷ்டி கழித்து
அஞ்சாதீர் எனப் பக்தர்க்கபயப் பிரதானஞ்செய்து
அம்பிகையுடன் தாம்பூலந்தரித்து
இந்தபடி ஈசன் சிந்தாமணிக்கிருஹத்தில்
இருந்தார் தேவியுடன் -சோபனம் சோபனம்
தேவிக்கு உயர நாற்பது முழத்திற்கு மேல்
தேசத்தில் ஒப்பில்லா மேல்கட்டிலில்
யமுனாகைஹாரமாகச் சுற்றியிருக்கின்றாள்
இச் ஜகத்தை மோஹிப்பிக்கும் மாயை!
தேவியுடைய ஸெளபாக்கியத்திற் கொப்பில்லை
தேவிதானறிய வேணுமகஸ்தியா
நாவாலும் மனதாலும் எண்ண முடியாது
ராஜேச்வரி மஹிமை-சோபனம், சோபனம்
யமுனாகைஹாரம் என்பது மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி. குண்டலினி சக்தியை தேவி என்றும் உடலைப் பாம்புபோல் மூன்றரைச் சுற்றாய் வளைத்துக்கொண்டு அங்கே வீற்றிருப்பதாயும் கூறுவார்கள். இந்தச் சக்கர விபரங்களையும், ஸ்ரீவித்யா ஜபத்தின் மஹிமை பற்றியும் வரும் நாட்களில் காணலாம்.
அரிய தகவல்களுடன் ஆனந்தமயம்....
ReplyDeleteஅம்பிகையின் அருட்தென்றலில் அகிலமெலாம் மகிழட்டும்..
வாழ்க நலம்..
நன்றி துரை. அம்பிகையின் பெருமை அளவிட முடியாதது!
Deleteதியானத்தில் 7 ஸ்டேஜ் இருப்பதாகவும் அதில் முதல் மூன்று நம் கவனத்தை ஒன்றச்செய்யும் பயிற்சியாகவும் அதற்கு மேல் நிலை ஜபத்தோடு கூடியது என்றும் அதன் நோக்கம் ஸ்ரீவித்யா மந்திரப் ப்ரயோகம் (அல்லது அதனைத் தியானித்தல்) என்றும் என் யோகா மாஸ்டர் சொல்லியிருக்கிறார்.
ReplyDeleteஎங்கிருந்துதான் இத்தனை விவரங்களைப் பிடிக்கிறீர்களோ... மிகுந்த உழைப்பு தேவைப்படும் பதிவு. வாழ்த்துகள்.
வாங்க நெல்லைத் தமிழரே, புத்தகங்கள் படிப்பதில் இருந்து தான்! இதற்காக தேவி மகாத்மியம், சௌந்தரிய லகரி, லலிதா சகஸ்ரநாமாவளி, தெய்வத்தின் குரல் எனப் பலவற்றையும் படித்துக் குறிப்புகள் எடுத்துக்கொண்டேன். சக்தி பீடங்கள் பற்றியும் தேடித் தகவல் சேகரித்துக் கொண்டேன்.
Delete//தியானத்தில் 7 ஸ்டேஜ் இருப்பதாகவும் அதில் முதல் மூன்று நம் கவனத்தை ஒன்றச்செய்யும் பயிற்சி//
Deleteஅதிகக் கவனத்துடன் செய்ய வேண்டிய பயிற்சி. மூலாதாரத்தைத் தாண்டியதுமே பாலையும் சிரிப்புக்குரலையும், சலங்கை ஒலியையும் கேட்டோம் என்று சொல்லிச் சிலர் அதோடு புத்தி மாறாட்டத்தில் மூழ்கி விடுகின்றனர். எங்க வீட்டிலேயே இதற்கு உதாரணம் உண்டு. ஆகவே தான் நம் போன்ற லௌகிக வாழ்க்கையில் இருப்பவர்கள் குரு மூலமே மந்திர ஜபம் செய்வதற்கு ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு படியிலும் ஏற்படும் மனமாற்றங்கள் குடும்ப வாழ்க்கையைப் பாதிக்காமல் இருக்கவும் வேண்டும். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஸ்ரீவித்யா மந்திர ஜபம் எடுத்துக் கொண்டு ஷோடஸி நிலைக்கு வந்திருந்தார். பின்னர் அவருடன் தொடர்பு இல்லாமல் போயிற்று.
பாலையின் (பாலாம்பிகா) சிரிப்புக்குரல்" என்று வந்திருக்கணும். "பாலையும்" என வந்திருக்கு! சில சமயம் சுரதாவில் தட்டச்சும்போது அதாகவே வார்த்தைகளை, எழுத்துக்களை மாத்திக்கொள்கிறது.
Deleteபடித்தேன், தொடர்கிறேன்.
ReplyDeleteவாங்க நன்றி. தீபாவளி பக்ஷணக்கடமைகள் காத்திருக்கின்றன என நினைக்கிறேன்.
Deleteகணுக்கால்களில் நாரஸிம்ஹிதேவியும், //
ReplyDeleteஎனக்கும் இப்போது இருக்கும் கணுக்கால் வலிக்கு நாரஸிம்தேவியை வணங்கி கொள்கிறேன் . கணுக்கால்களுக்கு பலம் தர.
அம்பிகையை சரண் அடைந்து நலங்களை வேண்டுகிறேன்.
அருமையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
வாங்க கோமதி, உங்கள் கணுக்கால் வலி குணம் அடையப் பிரார்த்திக்கிறேன். அம்பிகை அருள் புரிவாள்.
Deleteகோமதிக்கா எனது பிரார்த்தனைகளும்...விரைவில் குணமாகிடும் அக்கா
Deleteகீதா
பக்திரசம் தொடர்கிறேன்...
ReplyDeleteவிடாமல் தொடர்ந்து வருகை தருவதற்கு நன்றி கில்லர்ஜி!
ReplyDeleteபடித்தேன் கீதாக்கா...நிறைய தெரிந்து கொண்டேன்.
ReplyDelete//அனைத்துக்கும் மேல் பக்தர்களின் இதயத்திலும், ஞாநிகளின் இதயத்திலும் நித்யவாசம் செய்யும் ஹ்ருல்லேகா என்னும் மந்திர தேவியாகவும் இருக்கின்றாள்.//
மிகவும் ரசித்த பிடித்த வரிகள்.
கீதா
Thank You, Thi/Geetha! :D
Deleteசிறப்பான பதிவு. உழைப்பை வணங்குகிறேன்.
ReplyDeleteநன்றி பானுமதி!
DeleteNamaskaram Amma. Feeling blessed to have stumbled on your blog. Read your highly researched articles on ambal. Thank you
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி. ஆராய்ச்சி எல்லாம் முறைப்படி செய்திருந்தால் நான் எங்கேயோ போயிருப்பேனே! இவ்வுலக வாழ்க்கையில் தாஏ இன்னமும் உழல்கிறேன். :))))
Delete